"ஊரில் உள்ளவர்கள் கண்டபடி பேசும் அவதூறுக்கு பயந்தால் காதலும் காமமும் வெளிக்காட்ட முடியாமல் குறைந்து பின் மறைந்துவிடும். அதற்காக எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கர்மமே(காமமே) கண்ணாக இருந்தால் அனைவர் முன்னிலையில் வெட்கித்தலைகுனியும் நிலையும் ஏற்பட்டுவிடும்.. எப்படி பெரிய யானை தன் தும்பிக்கை கொண்டு முரித்த மரக்கிளை நிலத்திலும் விழுந்து தொலையாது, மரத்திலும் ஒட்டாது ஊசலாடுமோ.. அப்படித்தான் அவர் நினைவால் வாடும் என் உடம்பும் உள்ளது தோழி..!
காதலையும் காமத்தையும் மறக்கவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போன தன் நிலையை தோழிக்கு கூறுவதாக அமைந்த இந்த வரிகள்...
ஆலந்தூர் கிழார் என்ற புலவரால் எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடல்...
கெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே.
(டிஸ்கி 1: இந்த பதிவிற்கு வரும் வரவேற்பைப்(?)பொறுத்து.., இன்னும் மனதின் ஓரத்தில் மனப்பாடத்தில் உள்ள குறுந்தொகை, புற,அக நானூற்றுப்பாடல்கள் பதியப்படும்..)
டிஸ்கி 2 : தமிழாய்ந்த பெரியோர்களே.. பாடலுக்கான எனதுவிளக்கத்தில் ஏதாவது தவறு இருந்தால் "பொருத்தருளாமல்" உடனே பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள்.. ஏனெனில் மக்கள் இதை படிக்காமல் கூட இருக்கலாம்.. ஆனால் தவறாக படிக்கக்கூடாது..
குறுந்தொகை... பேரின்பம்..
Labels: குறுந்தொகை
மாறவர்மன்-அத்தியாயம் இரண்டு
மாறவர்மன் -முதல் அத்தியாயம்
அத்தியாயம் இரண்டு
இளம் காலைச் சூரியனின் இதமான சூட்டில் சாலையின் இருமருங்கிலும் இருந்த பூக்களிள் பனித்துளிகள் முத்துக்கள் போல் தெரிந்தது.. பச்சைப்பசேலென இருந்த வயல்வெளிகளினின்று வந்த வாசம் மாறவர்மனின் மூக்கைத்துளைத்தது. கையில் கலப்பையுடனும் வாய் ஓயாத பேச்சுடனும் குடியானவர்கள் சிறு சிறு குழுக்களாக சென்றுகொண்டிருந்தார்கள்.
மாறவர்மனின் புரவிக்கு சற்று முன்னால்... நல்ல பலாமர கட்டையில் நன்கு பதப்படுத்திய பரங்கிக்காயை கொண்டு செய்த வீணையையொத்த பின்னழகில், கரு நாகமும் சாரையும் பின்னிக்கொண்டு கலவியில் ஆடுவதைப்போன்ற பின்னல்சடை சரசரக்க கையில் குவளையுடன் சென்றுகொண்டிருந்தாள்.
"மாறா பேசு" என்ற அவனின் உள்மன உந்துதலில் தன்னிச்சையாக அவன் வாய் "சற்று நில்லுங்கள்" என அரற்றியது.குரல் கேட்ட திசை நோக்கி திரும்பினாள் அந்த அணங்கு... நிற்க.. இங்கே அவளின் அழகை வர்ணிக்கவில்லை என்றால் ஜென்மசாபல்யம் கிடைக்காது..
மூன்றாம் பிறையை திருப்பி வைத்தது போன்ற நுதல். அதனின்று காதுமடல் வரை புள்ளியென இருந்த ரோமம். சிறிய தேங்காயை உடைத்து அதன் இருபகுதியிலும் பனிபடர்ந்த கருந்திராட்சைகள் இரண்டை வைத்தால் எப்படி அந்த இளவெண் நிற தேங்காயில் திராட்சைகள் இருந்த இடத்திலேயே உருண்டு நிற்குமோ அப்படி இருந்தது அவளின் விழிகள். சீரான சாலையின் எதிர்பாரத இறக்கத்துடன் இருந்தது போன்ற செதுக்கிய நாசி, அதன் கீழ், அதரம்.. அது இதர பெண்களின் அதரம் போன்றல்லாமல் மதுரமான அதரமாக இருந்தது.அதில் தொக்கி நிற்கும் புன்னகை அதரத்தின் இதழ்களில் கசிந்தது.
சங்கு கழுத்திற்கு கீழ் கச்சையில் கட்டி சந்தனத்தை கடத்துகிறாளோ என்று ஐயப்பட வைக்கும் தனங்கள்..அதன் பாரம் தாங்குமோ பாவம் என்ற வினவ வைக்கும் இடை.. அதிலிருந்த மேகலை அவள் வனப்பைக் கூட்டியது.
"எதற்கு அழைத்தீர்கள்?"
"மிகுந்த தாகமாக இருக்கிறது.. சற்று தாகசாந்தி செய்துகொள்ள உதவுங்கள்"
"ஏன், அருகில் ஓடும் ஆற்றின் சலசலப்பு கேட்டவில்லையா?"
"உன் கால்கொலுசொலியின் ஜல் ஜல் தவிர வேறொன்றும் செவிக்கெட்டவில்லை பெண்ணே.."
"ஏதேது.. உடைவாளையும் முறுக்கு மீசையையும் பார்த்தால் வீரர் போலத்தெரிகிறது.. ஆனால் கவிஞர் போன்று பேசுகிறீர்களே.. வாய்ச்சொல்லில் வீரரா?"
"அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். என் தாகத்திற்கு இன்னும் வழி சொல்ல வில்லையே?"
"ம். இப்படி வாருங்கள்.. "
அந்த கொடியிடையில் இருக்கும் குவளை சற்று சாய்ந்தது... மாறவர்மனின் கிரீடம் சூட்டப்பட வேண்டிய சிரம் அவள் அசைவிற்கொப்ப தாழ்ந்தது... சாம்ராஜ்யம்...?
தொடரும்...
Labels: மாறவர்மன்
ஐம்பது... அதனால் மிக நல்ல பதிவு..
ஐம்பது...... ஏனோ 50 மற்றும் 100 எண்களுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது... முன்பெல்லாம் தமிழ்படங்களின் போஸ்டர்களில் 50வது நாள் என்பதை பார்த்து பழகிய நமக்கு.. இப்பொழுதெல்லாம் வெற்றிகரமான 3வது நாள், அதிரடியான 7வது நாள், விண்ணதிரும் 10வது நாள் என்ற ரீதியில் வரும் இந்நாளில்... 50 என்பது என்றும் சிறப்பே.. அந்த சிறப்பான எண்ணிற்குண்டான மரியாதையை காக்க வேண்டும் என்றால்.. இந்த 50வது பதிவை மிக நல்ல பதிவாக எழுத வேண்டும்.. அது என்னால் இயலாத காரியம்.. ஆகவே.. திரு.ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களிடம் மேலே சொன்ன கருத்தைக்கூறி நீங்கள் எழுதித்தாருங்கள் என்றேன்.. "றேன்" என்று முடிப்பதற்குள் மடல் வந்துவிட்டது..
மிக்க நன்றி திரு.ஜ்யோவ்ராம் சுந்தர்...
சொரூப நிலை..
மழையில் நனைந்த
தார்ச்சாலையை
சொட்டச் சொட்ட
நடக்கும் இளம்பெண்ணை
அவளின் கால்தடத்தை
கன்னத்தின் ஈரத்தைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையை
மரத்திலிருந்து சொட்டும் நீரின் சத்தத்தை
ரசிக்க எனக்கும் விருப்பம்தான்
இந்தப் பாழாய்ப்போன
மழை நிற்கட்டும்.
**********************
பொலிடிக்கலி கரெக்ட்யாய் ஒரு கவிதை
தேவடியாள் என்றால்
வெகுஜனத்திற்குக் கரெக்ட்
பாலியல் தொழிலாளி என்றால்
அறிவுஜீவிகளுக்குப் பொலிட்டிகலி கரெக்ட்
யாராவது விளக்குங்கள்
எது எல்லோர்க்குமான பொலிட்டிகலி கரெக்ட்டென்று
இல்லையா குறைந்தபட்சம்
விளக்காவது பிடியுங்கள்
கஞ்சா பிடிப்பதும் காய் அடிப்பதும்
பலருக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
ஹூக்கா பிடிப்பதும் முலைதிருகுவதும்
கதை எழுதுபவர்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
குண்டு போடுவது எதிர்வினை என்றால்
ஸ்ரீனிவாஸ்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
அறம் அழிவென்றால் எல்லாமே கரெக்ட்
கரெக்ட் இன்கரெக்ட் கரெக்ட் இன்கரெக்ட்
கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட்
பொலிடிக்கலி கரெக்ட்டாகக் கவிதைஎழுத ஆசைப்படுகிறான் அரசியல் கலப்பை (முண்டக் கலப்பை அல்ல) விரும்பாத பொலிடிக்கலி கரெக்ட் பர்ஸன்.
*******************************
உற்சாகம் அளித்துவரும் சக பதிவர்களுக்கு நன்றி..நன்றி..!
நர்சிம்
Labels: 50வது பதிவு
புரிதல்...
நண்பனின் மரண
யாத்திரையின் போதுதான்
அவன் நட்பில் கடந்த
தூரம் தெரிகிறது
கால்களுக்கு..!
மூழ்கப்போகும் நகையை
சேட்டிடம் இருந்து
மீட்கும் போதுதான் அதன்
ஜொலிப்பு தெரிகிறது
கண்களுக்கு..!
வெறிச்சோடிக் கிடக்கும்
மதிய நேரத்
தெருக்களின் நிசப்தம்தான்
சத்தமாய் சொல்கிறது
வேலை கிடைக்காத வலியை
மனதுக்கு..!
"மரங்களை வெட்டாதீர்கள்"
தகவலை சுமந்து
நின்ற மரப்பலகையை
பார்க்கும் போதுதான்
முரண்பாடுகளின் முகங்கள்
தெரிகிறது அறிவுக்கு..!
அப்பாவை...
அமரர் ஊர்தியில்
பார்க்கும்பொழுதுதான்
கறுப்பு நிறத்தின்
துக்கம் புரிகிறது
இதயத்திற்கு...!
Labels: கவிதை(??)
காமத்தின் கதவுகள்...
நித்தம் நித்தம்
ரத்தம் வெந்து
வெடிக்குதென்
இதயம் -சிறு
துக்கமின்றி ஒரு
பக்கம் நின்று
சிரிக்குதுன் கண்கள்!
காதலெனும் கனலை
மூட்டிவிட்டாய் மருகி -அனல்
வெள்ளமென
உருகுதென் குருதி- இன்றுன்
உள்ளம் மட்டும் மாறியதோ
இரும்பினினும் உறுதி!
தென்றலென இருந்தநம்
காதல் -அதை
கொன்றுவிட்டு போவதென்ன
நியாயம்?
வந்த வழி,
சொந்த மொழி
மறந்து நின்ற கொடுமை- நீ
ஒருத்தி மட்டும்
உலகம் என்று
இருந்ததெந்தன் மடமை!
காமத்தின் கதவுகள்
காதல்
காதலின் கதவுகள்
கண்கள்
கண்களின் கதவுகள்
இதயம்
இதயத்தின் கதவுகள்..?
அதுசரி..
உனக்கேது இதயம்??
Labels: கவிதை(??)
மாறவர்மன்...
காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது மாறவர்மனின் புரவி.அதன் குளம்படி எழுப்பிய சத்தத்தைக் கேட்டு சாலையோர சிற்றுயிரிகள் புதருக்குள் பதுங்கிக்கொண்டன..மாறவர்மனின் கரிய சுருண்ட கேசம் பின்னோக்கி பரந்த தோள்களைத்தழுவி பறந்த விதம் புரவியின் வேகத்திற்கு கட்டியம் கூறியது. இருள்சூழ்ந்த அந்த பாதையில் சீறிக்கொண்டிருக்கும் புரவியின் மீது அமர்ந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருக்கும் மாறவர்மனின் நினைவுகளில் ஒருகணம் தன் தந்தையின் முகம் மின்னலென வந்து மறைந்தது..
மாறவர்மன்.. மருத நாட்டின் இளவரசன்.. தினவெடுத்த தோள்கள்.அதில் அலையலையாய் சுருண்டகேசம்.வேல்களை ஒத்த விழிகள்.. ராஜவம்சத்து நிறம்.. புறமுதுகிட்டதில்லை என்பதற்கான வீரத்தழும்புகள் தாங்கிய விரிந்த மார்பு. அவன் வீதிஉலா சென்றால் மண் நோக்கும் பெண்டிர் எல்லாம் அவன் கண் நோக்கியே செல்வர்.
நிலவொளியின் மங்கலான வெளிச்சத்தில் சென்று கொண்டிருந்த குதிரையின் வேகத்தை சற்று குறைத்து சுற்றும் முற்றும் பார்த்தான்.. கிர்ர்ர் என்ற இரவுபூச்சிகளின் சத்தமும் கீச் கீச் என்று பறவைகளின் அகவலும் தாண்டி அங்கே நிசப்தம் நிலவியது.. குதிரையை ஒரு மரத்தின் அருகே நிறுத்திவிட்டு ஒரே தாவலில் அந்த மரத்தின் பின்பக்கம் சென்றான்.. முனையில் கூராகவளைந்த தங்க பூன் வைத்த உடைவாளை இடது கையால் தொட்டுக்கொண்டே மண்டியிருந்த புதரின் ஒருபக்கத்தை தள்ளினான்.. அங்கே... அந்த மந்தமான நிலவொளியிலும் பட்டுத்துணியினாலான மூட்டை இருப்பதை பார்க்க முடிந்தது.. அதை வெளியே எடுத்து அதிலிருந்த ஓலைச்சுவடியின் வரிகளில் கண்களைப் பதியவிட்டான்..
"இளவரசே.. திட்டப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.. இன்னும் இரண்டு அமாவாசைகளில் திட்டம் முழுமைபெறும்.. அதுவரை பொறுமை காக்க. வாழ்க நின்கொடை.. வாழ்க மருத நாடு"
மறுபடியும் ஒருமுறை படித்துவிட்டு பின் அதை உடைவாளுக்கு அருகில் சொருகிக்கொண்டான்.. தன்னை நோக்கி தலையை ஆட்டிக்கொண்டிருந்த குதிரையின் முகத்தை பாசமாய் தடவிக்கொண்டே நினைவுகளை பின் நோக்கி படர விட்டான்..
அரண்மனை.. மன்னரின் ஆலோசனைக் கூடம்.. கவலையான முகத்தில் மந்திரியுடன் தளபதியும் அமர்ந்திருந்தார். மன்னர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். பக்கத்தில் மாறவர்மன். மெளனத்தை தளபதி உடைத்தார்.
"அரசே.. இன்னும் ஏன் யோசனை.. ஆணை இடுங்கள். வீரர்களின் வாள்கள் விருந்திற்கு காத்திருக்கின்றன.இத்தனை நாள் நட்பு பாரட்டிய அண்டை நாட்டரசன் வீரசேனன் மதிகெட்டு போர்முரசு கொட்டியிருக்கிறான். சாவை வா வா என்றழைக்கும் அவனுக்கு அதை வழங்கவிடுங்கள் அரசே"..
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?"
"அரசே.. இத்தனை நாட்கள் நட்புபாரட்டியவன், நம் பலம் நன்கறிந்தவன், இருந்தும் நம்மை சீண்டுகிறான் என்றால் இதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறதரசே"..
"நானும் அப்படித்தான் மந்திரியாரே நினைக்கிறேன்.திடீரென்று இப்படி ஒரு ஓலை.இதை இப்படியே விடவும் முடியாது."
"அப்பா.. இந்த ஓலை அவனுக்கு உலை.. நான் தலைமையேற்று செல்கிறேன்.. ஆணையிடுங்கள்.. களத்தில் விளையாடி வெகு நாட்களாகின்றன.."
"இளவரசே.. சரியாகச் சொன்னீர்கள் "
என்று தளபதி கூறிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு ஈட்டி தாங்கிய சேவகன் வாயிலின் உத்தரவிற்கு காத்திருந்துவிட்டு கண்ணசைவு கிடைத்ததும் உள்ளே வந்தான்.
"அரசே.. தங்களைக் காண அண்டை நாட்டு வீரர்கள் இருவர் வந்துள்ளார்கள்"
"வரச்சொல்..உடைவாட்களை பறிமுதல் செய்துவிட்டு அனுப்பு"
"உத்தரவு அரசே!"
அவன் பின் நோக்கியே சற்று தூரம் சென்று பின் இருவரோடு வந்தான்.
முறுக்கிய மீசையில் தெரிந்தது அவர்களின் முரட்டு வீரம். தினவெடுத்த தோள்களில் எதற்கும் தயார் என்ற எண்ணம் தெறித்தது.
அவர்கள் வந்து கொண்டிருக்கும் பொழுதே தளபதி இளவரசிடம் இருந்த உடைவாளை உருவி அவர்களை நோக்கி சுழட்டிக் காட்டினான்.. "சாபாஷ் தளபதியாரே".. என்ற மாறவர்மனையும் அவன் அருகில் இருந்த மன்னரையும் பார்த்து தளபதி சிரித்தான்.. வந்த வீரர்கள் சிரித்தார்கள்.. மந்திரி சிரித்தார்.. மறுபடியும் தளபதி சத்தமாக சிரித்தான்..
"ஹா ஹா..மன்னா.. இவர்கள் என் ஆணைக்கு இணங்கும் வீரர்கள்.. இன்று முதல் இது என் நாடு.. மந்திரிதான் ராஜ குரு.. எப்படி மந்திரியாரே.." என்றவாரே கைகளைத்தட்டினான்.. அவன் உத்தரவிற்கு காத்திருந்த வீரர்களிடம்"இழுத்துச் செல்லுங்கள்" நான் சொல்லும் வரை பாதாளச்சிறையில் அடையுங்கள் இவர்களை.. என்று முழங்கி விட்டு.. "மந்திரியாரே வாருங்கள் நிறைய வேலை இருக்கிறது.". என்று சிம்மாசனம் நோக்கி நடந்தான்..
தன் நினைவிகளினின்றும், நித்திரையினின்றும் கலைந்தான் மாறவர்மன். பொழுது பொலபொலவென விடிந்துகொண்டிருந்தது..
கீழ்வானம் சூரியனை பிரசவித்துக்கொண்டிருந்தால் சிதறிய ரத்தம் போல் செவ்வானமாய் சிவந்திருந்தது..
"மாறா.. விழி, எழு.. துரோகிகளை தூக்கிலிடும்வரை உணர்வுகளுக்கில்லை உறக்கம்".. என்ற உள்மன உந்துதலில்.. எழுந்தான்.. புரவி எழுந்தது..அமர்ந்தான்..பறந்தது... குளம்படி சத்தம் காற்றைக்கிழிக்கத் தொடங்கியது..
தொடரும்...
Labels: மாறவர்மன்
இந்திய இரவுகள்...
இந்திய இரவுகள்...
இன்று உள்ள கல்வித்தரமும் கலாச்சார மாற்றமும் இளைய தலைமுறையை அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இன்னும் "அந்த காலத்தில் நாங்கள்ளாம்" என்ற பல்லவியை விடுத்து இத்தலைமுறை மேம்பட தலைப்பட வேண்டும்.
இரண்டு தவறுகளை மூத்த தலைமுறை செய்கிறது.
1. வழி நடத்த தவறுகிறது.
2. தவறான வழியில் நடத்துகிறது.
முதல் தவறு செய்பவர்கள் வருத்தப்பட வேண்டும். இரண்டாவதோ திருத்தப்பட வேண்டும்.இன்றைய இளைஞர்களின் அறிவு முதிர்ச்சியும் அணுகுமுறையும் அதனால் ஈட்டும் பொருளாதார நிலையும் நிச்சயமாக சென்ற தலைமுறையுடன் ஒப்பிட முடியாத அளவு உள்ளது. புள்ளியல் விவரப்படி இன்றய வீட்டுக்கடன் வாங்குவோர் சராசரி வயது 23-32. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 45-56 ஆக இருந்தது.இவர்களுக்குத் தேவை நல்ல வழிகாட்டுதலே. இன்று இவர்களில் எத்தனை பேர் சமூகம் பற்றியும் அரசியல் பற்றியும் கவலைப் படுகிறார்கள்?
இரு தலைமுறைகளுக்கு முன்பிருந்தவர்கள் தான் இன்றும் அரசியலில் இளைஞர் அணியில் இருக்கிறார்கள்.
அறிவும் திறமையும் வெறியும் நிரம்பிய இளைஞர் கூட்டம் ஜெமினி பாலத்தின் கீழ் விசாவிற்கு நிற்கிறது.அல்லது இந்திய இரவுகளை அமெரிக்கப் பகல்கலுடன் கணிப்பொறி கைகுலுக்குகிறது.
"அக்கினி குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு.தழல்
வீரத்தில்குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?..
தத்தரிகிட தத்தரிகிட தித்தித்தோம்"
என்றான் பாரதி. ஆனால் இன்றய அக்கினிக் குஞ்சுகளெள்லாம் பொந்துகளுக்குள் வெதுவெதுப்பான சுக வாழ்ககையை வாழ்ந்து கொண்டிருக்கிறது.இவர்களுக்குத் தேவை தன் நலமற்ற வழிகாட்டுதல்.
சீனாவின் பலம் தொழில் வளர்ச்சி என்றால் அதன் பலவீனம் அதன் மக்கள் தொகையின் சராசரி வயது.(40-45). இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் சராசரி வயது(25-30). இதை வைத்து என்ன என்னவே சாதிக்கலாம்.ஊடகங்களும் ஏடகங்களும்முனைப்பட வேண்டும்.வழிநடத்த முனைவோர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் சென்றடய வழி செய்ய வேண்டும். இல்லை என்றால் 2020ம் ஆண்டில் நாம் 2040ல் இந்தியா வல்லரசாகும் என்று சொல்லிக் கொண்டிருப்போம்! சொல்லிக்கொண்டே இருப்போம்..
Labels: பத்தி
உனக்காகவே...
உனக்காகவே...
பள்ளிக்குப் போனநாட்கள்
தட்டச்சு முன்
தவம் கிடந்த நாட்கள்
நீவிட்டுச்சென்ற இடத்தில்
எட்டி அமர்ந்த நாட்கள்
உன்னைச்சுமந்து
வரும்பேருந்திற்காக
என்னைச்சுமந்த நட்பை
ஏமாற்றிய நாட்கள்..
இப்படி ..
எத்தனையோ
உனக்காகவேயான
நாட்கள்இருந்தாலும்... அந்த
இறுதி நாள்தான்..
இன்னமுமென்இதயத்தில்
இறங்கியமுள்ளாய் ......
Labels: கவிதை(??)
வார்த்தைகள்!
"நம் உரிமைகளை போராடிப் பெற வேண்டும்.. ஆடுகளைத்தான் பலியிட முடியுமே தவிர சிங்கங்களை அல்ல"
- அம்பேத்க்கர்.
நீங்கள் எந்த மன நிலையில் இருப்பினும்,உங்கள் சுபாவம் எப்படிப்பட்டதாக இருப்பினும் மேலே உள்ள இந்த வரிகளைப் படிக்கும் பொழுது உங்களுக்குள் ஒரு சிறு பொறியோ, அல்லது "ஆம் சிங்கங்களை அல்ல" என்ற எண்ணமோ தோன்றும். அதுதான் வார்த்தைகளின் வலிமை. அதனால்தான் இதுபோன்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்களை நாடே போற்றுகிறது,பின்பற்றுகிறது.
வார்த்தைகள் வலிமை மிக்கது.. சரித்திரம் படைக்கவல்லது..ஆனால் அதை சரியான சூழலில் சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும். "சகோதர சகோதரிகளே" இந்த இரு வார்த்தைகள் விவேகானந்தரை குறிப்பிடும்பொழுதொல்லாம் குறிப்பிடப்படும் வார்த்தைகளாக மாற காரணம் அதை அவர் பிரயோகித்த இடமும் சூழலும்.
வார்த்தைகள் ஆயுதங்களை விட கூர்மையானவை. சரியாகப்பயன்படுத்தப்பட்டால் வெல்வதும் உறுதி.. தவறானால் வீழ்வதும் நிச்சயம்.
இந்திய வெய்யிலினாலும் தொடர் போர்களினாலும் சோர்ந்துபோய் தாய் நாட்டிற்கே திரும்ப வேண்டும் என்று கோஷமிட்ட படைவீரர்களை நோக்கி பாபர் வீசிய அனல் வார்த்தைகளும் ஒருமுகப்படுத்திய பேச்சும் அவர்களை போர்க்களம் நோக்கி புறப்பட வைத்தது வரலாற்றுச்செய்தி.
"நீயுமா"? என்ற வார்த்தையை கேட்ட உடன் புரூட்டசும் துரோகம் செய்த நணபனைக் குறிக்கும் சொல்லாகவும் நம் நினைவிற்கு வருகிறதே.. எவ்வளவு ஆழாமான வார்த்தை.. அந்த ஒற்றை வார்த்தையில் எத்தனை அர்த்தங்கள்.. எவ்வளவு நம்பிக்கைகள்..
இப்படி வரலாறுகளிலும் இலக்கியங்களிலிலும் மட்டுமா வார்த்தைகள் முக்கிய இடம் பெறுகிறது??
ஒவ்வொரு நிமிடமும் வார்த்தைகளின் துணையோடுதானே வாழ்கிறோம். ஆனால் யோசித்து பேசும் வார்த்தைகளை விட பேசிவிட்டு யோசிக்கும் வார்த்தைகளைத்தானே அதிகம் பயன்படுத்துகிறோம் நாம். எத்தனை முறை வார்த்தைகளால் எதிராளியை காயப்படுத்துகிறோம்?
நம்மில் எத்தனை பேர் அம்மாவின் சமையல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறோம்? ஆனால் சரியில்லை என்றால் கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்திவிடுகிறோம். பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லையா அல்லது அம்மாவிடம் எப்படி தெரிவிப்பது என்று தெரியவில்லையா??
"ஆம்! இந்த தவறை நான் செய்தேன்".. இந்த வார்த்தைகளை தவறு செய்தவர்கள் உச்சரிப்பதற்கு வீரம் வேண்டும்.. நம்மில் எத்தனை பேர் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறோம்?
"யார் முதலில் பேசுவது?" இந்த மூன்று வார்த்தைகளினால் எத்தனை நட்புகளை இழந்திருப்போம்.. அதைவிடுத்து "மன்னித்துவிடு" அல்லது "பரவாயில்லை" என்ற ஒற்றை வார்த்தை நட்பை வழுப்படுத்தியிருக்கும் என்று எண்ணியிருக்கிறோமா?
"இல்லை இது எனக்கு தெரியாது,சொல்லிக்கொடுங்கள்", இந்த வார்த்தைகளை தயக்கமின்றி உச்சரித்தால் உடனே அதைப்பற்றி தெரிந்துகொண்டுவிடலாம். ஆனால் நாம் கவுரவ குறைச்சல் காரணமாக மழுப்பலாகத்தானே பதிலலிக்கிறோம். விளைவு? அதைப்பற்றி தெரியாமலே சாமாளித்துக்கொண்டிருப்போம் கடைசிவரை.
காதலியிடம் காதலைச் சொல்ல வார்த்தைகளைத் தேடித்தேடி காதலையே தொலைத்துவிட்டவர்கள் நம்மில் எத்தனை பேர்?
"கிட்டாதாயின் வெட்டென மற" இந்த வார்த்தைகளை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? எத்தனை எளிதான வாழ்க்கைத்தத்துவம்,வார்த்தைத்துவம்.
சரியான வார்த்தைகளை சரியான சூழலில் உச்சரிக்கப் பழகிவிட்டால் வாழ்வில் வெற்றி பெறுவது எளிது.
என்ன, நான் சொல்வது சரியான வார்த்தைகள் தானே??
Labels: பத்தி
தீவிரவாதிகளே...
பால்குடித்த முலையையும்
காமத்தோடு சுகித்திருப்பீரோ? -இல்லை
பால்கொடுத்த காம்புகளும்
நஞ்சாய்த்தான் சொரிந்ததோ?
வன்முறை எல்லாம்
புரட்சியாகாது பதர்களே..
ரத்தமயமாய் சிதறிக்கிடக்கும்
சவ மலைகள்தான்
உங்கள் இலக்கெனில்...
எங்குவேண்டுமானலும் வருகிறோம்
முடிந்தால் நேரே
மோதிப்பாருங்கள்..
நாங்கள் உமிழும்
எச்சில் நீரிலேயே
மரணித்து விடுவீர்கள்
கோழைகளே..நீங்களா
எம்நேரில் வருவீர்கள்?
உங்களைச் சொல்லியும்
குற்றமில்லை...
மசூதியை இடிப்பதும் -பதிலுக்கு
மனிதனைச் சாய்ப்பதும்
மாந்தர்குலத்தொழிலாய் திரி(றி)யும்
மந்தையாடுகாளிகிவிட்ட
குழுக்களை
குரூரத்திற்கு பயன்படுத்தும்
குள்ள நரிக்கூட்டம் தானே
நீங்கள்... த்தூ...
Labels: கவிதை(??)
இன்னும் ஓர் திருமணவாழ்த்து.. பிரபல பதிவர்.. ஆனால் ரகசியமாய்.. மிக ரகசியமாய்..
இன்னும் ஓர் திருமணவாழ்த்து.. பிரபல பதிவர்.. ஆனால் ரகசியமாய்.. மிக ரகசியமாய்..
கடந்த ஒரு வாரமாகவே இவரின் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்க இயலாது.. ஏன் ஒரு பின்னூட்டம் கூட வந்திருக்காது.. என்ன ஆனதோ என்று நேற்று தொலைபேசியில் அழைத்தேன்.. இங்கு இதனையும் குறிப்பிட வேண்டும், சமீப காலமாக அவரை எப்பொழுது தொலைபேசியில் அழைத்தாலும் அது சிங்கிள் ரிங் ஆகவே சென்றது.. அப்பவே மைல்ட்டா ஒரு டவுட் ஆச்சு.. அப்புறம் நம்ம தல பாலபாரதி புத்தக வெளியீட்டு விழாவிலும் பம்மரமாய் சுத்தி சுத்தி வேலை பாத்தாரு.. நமக்கு ஒன்னுனா பதிவர்கள் தானே நாளைக்கினும் சொன்னாரு..
நடுவுல அவர் பதிவுல பிழிய பிழிய உணர்சிக்குவியல் கதைகளை எழுதி.. "சக்கர டப்பா எங்கடா" என்று சேரன் ஆட்டோகிராபில் கொஞ்சுவாரே அந்த ரேஞ்சு என தன்னவருக்கு தன் பாசத்தை நிலை நாட்டினார்.
நேத்து அழைப்பின் போது க் ஞ் ப் ட் ,னு ஏதேதோ பேசினாரு.. ஆகா.. ஏதோ மேட்டர் போலயேனு நினைத்தால் ..
நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி.. அதிஷா கோவையில் தஞ்சம்... இன்னும் கொஞ்ச நாளில் சென்னையில் தேநீர் விருந்து.. நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
முக்கியத்செய்தி: பரிசலாரின் ஆசி இதில் உண்டு என உளவுத்துறை செய்தி ஒன்றும் உலவுகிறது... முரளிகண்ணனும், லக்கியும் அரசியல் ரீதியான பின்புலமாக இருப்பதால் சந்தோஷமாக சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது..
இன்னுமொரு முக்கிய செய்தி: இதற்காகவே.. செந்தழல் கோவை பயணம் என செய்தி கசிந்துள்ளது.. ஏனெனில் கோவையை பொருத்த வரை செந்தழல் இரும்பு மனிதர்.. அவரை மீறி யாரும் எதுவும் செய்ய இயலாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா..
வாழ்த்துக்கள் அதிஷா..
Labels: பதிவர் வட்டம்
மாநரகம்...
"என்ன கிட்டுனா! ரொம்ப நாளா ஆளையே காணோம்!"
"டெல்லி போயிருந்தேன் சங்கரு.."
"அட்ரா சக்கை! டெல்லியா?? என்னா திடீர்னு?"
"தம்பிக்கு சர்க்கார்ல வேலை கிடைச்சுருக்குல்லா.. அதான் போயி இருந்து ஆகவச்சுட்டு வந்தேன் சங்கரு.."
"ஆமா.. டெல்லில ரோடுலாம் எப்பிடி.. தாரு தானா??"
"ஆமா.. தார்லதான்.. நல்லா பளபளனு இருக்கப்பா.."
"தண்ணிலாம் எப்பிடி குழாய்லதான் வருதா??"
"அட ஆமாம்ப்பா.. நீயும் போயிருக்கியா??"
"எத்தன நாள் இருந்தப்பா அங்க.. ரொம்ப நாளா காணலயே.."
"1 மாத்த ஆகிப்போச்சப்பா.. அங்கன இருந்து லெட்டர் கூட போட்டேன்.. ஆனா வீட்ல கடுதாசி வரலன்னுட்டாங்கப்பா!"
"நீ கரெக்ட்டா அட்ரஸ் எழுதினியா??"
"நம்ம வீட்டு அட்ரஸ்கூடவா தப்பா எழுதுவாங்க.. நீ என்னமோத்தான்.."
"சரி.. போஸ்ட் டப்பால நேரா போட்டியா, தலைகீழாப் போட்டியா??"
"ம்ம்ம்.. அட ஆமாப்பா.. போடம்போது தலைகீழா விழுந்துருச்சு.."
"பார்த்தியா.. என்னா ஆம்பள நீய்யி... பிறவு போஸ்ட்மேன் எப்படி அட்ரஸ பார்க்க முடியும்..??"
"அட ஆமால்ல.."
என்ற யோசித்தவாரே கிட்டுனன் நின்றதை ஓரக்கண்ணால் நமுட்டுச் சிரிப்போடு ரசித்துக்கொண்டே நடக்கத்தொடங்கினான் சங்கர்.
அதுதான் சங்கர். எப்பொழுதும் ஒரு மெல்லிய நகைச்சுவை எதிலும் அவனுக்கு. 38 வயது. திருமணம் வேண்டாம் என்றிருப்பவன். ஒரே வாரிசு. சொந்த வீடு, ஒரு ஏக்கரா விவசாய நிலம். காலை 10 மணி வாக்கில் எழுந்து பேப்பர் படித்து, குளிக்காமல் இருப்பது தெரியக்கூடாது என அப்பிய பவுடரோடு தெருவில் இறங்கினால் மதிய சாப்பாடு வரை இப்படி யாரிடமாவது பொழுதைக் கழிப்பதே தலையாய வேலை.. 12 மணியிலிருந்து 1:30 வரை பஸ்ட்டாண்டு பக்கம் உள்ள சுந்தரா மொடிக்கல்ஸில் ஜமா கூடும்.. அங்கே மருந்து வாங்க வருபவர்களை விட அவன் பேச்சை கேட்க ஒரு கோஸ்டி எப்பொழுதும் இருக்கும். ஓனர் பழனிச்சாமி அவனுடன் படித்தவன். பேச்சு அன்றைய நியூஸ்பேப்பரில் தொடங்கி அரசியல்,சினிமா என்ற சகலத்திலும் ஊடாடி வைரமுத்தா கண்ணதாசனாவில் முடியும்.. ஏனெனில் பழனிச்சாமியின் பூர்வீகம் வேகுப்பட்டி,காரைக்குடிக்கு அருகில்.. கண்ணதாசனை தெய்வமாய் கொண்டாடுபவன்.. அதனாலேயே சங்கர் அவனை சீண்டுவான்..
"ரிதம் படத்துல தண்ணியையும் பெண்ணையும் வச்சு எழுதுன மாதிரி உங்காளு எழுதியிருக்காறாயா? தாய் அருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகே தாயாகும் பெண்.. என்னாமா எழுதியிருக்காரு.."
"நீ என்ன இப்பிடி சொல்ற.. வாராயத்தோழி கேட்டுப்பாருயா.. எவனாலயும் எழுத முடியாது.. மலராத பெண்மை மலரும்.." என்று தன் கொடுரமான குரலில் பாடிவேறு காட்டுவான். சிரித்துக்கொண்டே அதை கேட்டுக்கொண்டிருப்பான் சங்கர்.இன்னும் கால் மணி நேரம் பொழுது போக வேண்டுமே அவனுக்கு.
நல்ல மெயினான இடத்தில் இருந்தது சுந்தரா மெடிக்கல்ஸ். மதுரை டவுனில் இருந்து அருப்புக்கோட்டைக்கு போகும் மெயின் ரோட்டில் ரோடு மேல். கடையும் நல்ல பெரிய கடை.. அப்பச்சி காலத்தில் இருந்தே இருப்பதால் வவுத்த வலியில் ஆரம்பித்து ஹார்ட் அட்டாக் வரை அனைவரும் முதலில் வருவது அங்கேதான்.பழனியும் சளைக்காமல் எந்த வியாதியாக இருந்தாலும் நவ்வாலு( நான்கு நான்கு)மாத்திரைகளை கொடுத்துவிடுவான். ரொம்ப பெரிய காய்ச்சலாக இருந்தால் பெரிய மனது பண்ணி டாக்டரிடம் போக சிபாரிசு செய்வான்.
1:30 மணியானவுடன் இருவரும் பேசிக்கொண்டே கடையை அடைத்துவிட்டு சாப்பிட தத்தம் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள்.பழனி தனது பெரிய கேரியர் வைத்த சைக்கிளை ஓட்டியதே கிடையாது.. லாவகமாக சைடாக உருட்டிக்கொண்டே நடப்பான்.. தொடை உரசும் படியான உடம்பு வாகானதால் அவ்வப்பொழுது டெண்டுல்கர் பேட்டிங் பிடிக்கும்போது செய்வாரே அதுபோல செய்துகொள்வான்.
சங்கர் சாப்பிட்டு வெத்தலை பாக்குப்போட்டு திண்ணையில் அமர்ந்தான் என்றால் பக்கத்துவீட்டு பையன்கள் வீட்டுக்குள் ஒடிவிடுவார்கள்.. இல்லை என்றால் அவர்களை பந்து போடச் சொல்லி பேட்டிங் பிடிப்பான்.. அலுக்கும் வரை.. அதனால் ஓடி விடுவார்கள்.." டேய்.." என்று அவர்களை அழைத்தாலும் சிரித்துக்கொள்வான்..
செம்பட்டையும் ராமுவும் அங்கே அமர்ந்து அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. அவர்களால் பேசிக்கொள்ள மட்டுமே முடியும்.. ஏனென்றால் இருவருக்கும் காது சுத்தமாக கேட்காது..
ராமு :" என்னா செம்பட்ட.. போஸ்ட்டாபிசா போற?"
செம்பட்டை :"சே,சே, இல்லைப்பா, நான் போஸ்ட்டாபிஸ் போறேன்,
ராமு : ஓஹோ.. நான்கூட நீ போஸ்ட்டாபிஸ் போறயாக்கும்னு நினச்சேன்.."
செம்பட்டை :" இல்லை இல்லை.. சரி நீ போஸ்ட்டாபிஸ் வர்ரியா??"
ராமு : "அம்மாடி.. நான் போஸ்ட்டாபிஸ் போகனும்ப்பா.. வரல.."
இப்படியே போகும்.. இதை சங்கர் சுந்தரா மெடிக்கல்ஸில் சொன்னதும் சிரிக்காத ஆட்களே இல்லை..
அன்று சரியான மழை.. மதியம் கடை அடைக்கும் நேரம்.. ஆனால் மழை அடித்த அடியில் வெளியே போக முடியாது.. சங்கருக்கோ டயத்திற்கு சாப்பிடவில்லை என்றால் உயிரே போய்விடும்.பக்கத்து டீ கடையில் இருந்து பஜ்ஜியும் டீயும் வரவழைத்து சாப்பிட்டவுடன் தான் சற்று உயிர் வந்தது.அன்றிலிருந்து கையில் குடையோடுதான் வெளியே வருவதை வழக்கமாகிக்கொண்டான்.
ஒரு நாள் சென்னையில் சரவணபவனில் சாப்பிட்டிக்கொண்டிருக்கும்பொழுது பக்கத்தில் அமர்ந்திருந்தவரை எதேச்சையாய் திரும்பிப்பார்த்தால் .. சங்கர்..
"என்னா சங்கரண்ணே.. இங்க" என்றவுடன்.. சற்று கூர்ந்து பார்த்துவிட்டு.. தான் இங்குதான் 4 வருடமாக ஒரு கம்பெனியில் இருப்பதாகவும் விவசாயம் சுத்தமாய் படுத்துவிட்டதால் சித்தப்பா மகனுடன் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒருவன் சற்று தள்ளி நிற்கச்சொன்னதும் அவனோடு சண்டைக்குப்போய்விட்டார்.என்னிடம் "வர்றேன்".. என்று வெடுக்கென போய்விட்டார்..
நகரம் ஒரு ஜாலியான மனிதனை எப்படி மாற்றிவிட்டது என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது..
"ங்கோ..த்.. தள்ளி நில்லுய்யா.. வழிய அடச்சிக்கினு.." என்ற சத்தம் கேட்டு.. அந்த மாநகர அன்பருக்கு வழியை விட்டு நின்றேன்..
Labels: புனைவு
இருட்டு ரூம்...சுருட்டு பாய்...
ஸ்டாலின்
அழகிரி
முதல்வர் நாற்காலி!
ஜெயலலிதா
பணிவு
எளிமை!
ரஜினி
தமிழ்
கர்நாடகம்
அரசியல்!
கமல்
மனைவி
தெளிவான பேச்சு!
அரசியல்
நேர்மை
மக்கள்!
டி ராஜேந்தர்
பேட்டி
சிரிக்காத நிருபர்!
ஆற்காட்டார்
வெளிச்சம்
தயாநிதி!
இந்தியா
இளமை
பாரளுமன்றம்!
இவையெல்லாம்...
இருட்டு ரூம்
சுருட்டு பாய்
முரட்டு பொம்பள!..
போன்றது..
ஒத்தே (குறில் ஒ)வராது!!!
Labels: கவிதை(??)
இந்த கதையை படிக்கிறவங்க கொலையாளியைக் கண்டுபிடியுங்களேன்!
"விஷ்க்" என பாய்ந்த தோட்டா ப்ரவீனின் நெற்றிப் பொட்டில் இருந்து கொஞ்சம் சதையையும் அதோடு அவன் உயிரையும் எடுத்துக் கொண்டது. பிஸ்டலில் இருந்து வரும் புகையை எல்லாம் ஊதிக்கொண்டிருக்காமல் அதை இடுப்பின் பக்கவாட்டிற்கு அனுப்பி விட்டு.. நிதானமாக மிக நிதானமாக வலதுபுறம் இருந்த காரிடாரில் நடந்து...ஹோண்டா சிட்டியை உயிர்ப்பித்த உடன் அது வெண்ணையாய் வழுக்கி, நொடிப் பொழுதில் புள்ளியாக மறைந்து போனது...
"இது தானே மிஸ்டர் ப்ரவீனின் வீடு?"
"ஆமா, அவரு மார்னிங் வாக் போனவரு இன்னும் வரலை.. நீங்க" ?
"வரமாட்டார் மேடம்.. அவர கொலைபண்ணீட்டாங்க...பாடி இஸ் ஆன் த வே"..
"ஏன்? ஏன்? எதற்காக என் ப்ரவீனுக்கு இப்படி" என அழுகையின் ஊடாக கேட்டுக் கொண்டிருந்தவளை சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் நந்தன்.. செதுக்கிய மீசை..தினப்படி சவரத்தால் பச்சையடித்த கன்னங்கள்.182 செமீ உயரத்திற்கு வாகான எடை,மொத்தத்தில் சிபாரிசு இல்லாமல் போலீஸில் சேர்ந்திருப்பார் போன்ற தோற்றம்.
"மேடம்! ரிலாக்ஸ்! ட்ரை டு பிட் ரிலாக்ஸ்!.". என்ற வார்த்தைகள் எந்த பலனையும் அளிக்காததால் அழட்டும் என காத்திருந்தார். அதற்குள் நாம் வீட்டை ஒரு சுற்று வருவோம்.
சுத்தமான மார்பிள் ஹால்.இடதுபுறம் டி.வி.. அதை யார் சின்னத்திரை என்று சொன்னது? என்று கேட்கும் அளவிற்கு பெரிய திரை அது.சுவரில் மாடர்ன் ஆர்ட் படங்கள். நடுவே மாடிக்குச்செல்ல படிகள். வலதுபக்கம் தோட்டத்திற்கு செல்ல கதவு,அருகே "வவ்".(கடித்தால் 1கிலோ எடுத்துவிடும் ஜாதி).இவ்வளவு பெரிய வீட்டில் தனியாகவா இருக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு இடமளிக்காமல் ப்ரவீனின் தாய்,தம்பி,இரண்டு வேலைக்காரர்கள் வசிக்கும் வீடு அது.
தாய் ராஜம்மா,இரட்டை நாடி சரீரத்தில் பம் என்று பழைய கேஆர்விஜயா மாதிரி இருந்தார். அழுததில் கண்கள் சிவந்திருந்தது.முக்கியமான விசயம்.. ப்ரவீனின் மனைவி அழுது அழுது சோர்திருந்தாலும் வசீகரமாய் இருந்தாள்.. அநியாயமாய் அனுபவிக்காமல் போய்விட்டான் என்று தோன்றும் தோற்றத்தில் இருந்தாள்.அழுதாள்.
தம்பி,கிஷோர், ஆள் அம்மாவைக் கொண்டிருந்தான்.தீர்க்கமான கண்கள்.லேசான முன் வழுக்கை,மாநிறம்,குட்டை என்று சொல்ல முடியாத குட்டை.
"மிஸஸ் ப்ரவீன் கேன் யூ கோ ஆப்ரேட் எ பிட் ப்ளீஸ்.. சாரி, எங்க வேலை அப்பிடி.."
"என்ன சார் சொல்ல.. அடுத்த வாரம் அமெரிக்கா போலாம் ரெடியா இருன்னு சென்னாரு.. எவ்வளவு கனவுகள் வச்சிருந்தாரு.. எல்லாம் போச்சு..இப்பிடி நடக்கும்னு தெரிஞ்சிதான் 1 வாரத்திற்கு முன்னாள என்னை நாமினியா போட்டு 1கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்தாரோ?? யாருக்கு வேணும் அந்த பணம்..?"
மீண்டும் அழத் தொடங்கினாள். இவளிடம் ஒன்றும் தேறாது என்று தம்பியிடம் திரும்பினார்.
"மிஸ்டர் கிஷோர்.. கேன் யு டெல் அபவுட் யுவர் பிரதர்.. யாராவது எதிரிகள் அவருக்கு?"
"சே, சே! அவனுக்கு(2 வயதுதான் வித்தியாசம் என்பதை "னு" உணர்தியது) எல்லாரும் ஃபிரண்ட்ஸ் தான். ரொம்ப காம் டைப். நல்லவன் சார்.அதிர்ந்து கூட பேச மாட்டான்."
"ok.. வேற ஏதாவது ஃபேமிலி எனிமிஸ்? யார்மேலயாவது சந்தேகப்படுறீங்களா?"
"சொந்தத்துல பகை இருந்தாலும் இப்பிடி சுட்டுக் கொல்ற அளவுக்கு எங்களுக்கு யாரும் எதிரி இல்லை சார்.."
"ஓ.கே.. மிஸ்டர் கிஷோர்.." என்று எழுந்த நந்தனின் பார்வையில் பட்ட தோட்டக்காரன் பதட்டமாக ஒரு சலாம் இட்டான்.. ஒரு மகன் இறந்ததற்காக இவ்வளவு தான் அழுவார்களா என்ற சந்தேகம் எழும்படி ராஜம்மா அழுகையை நிறுத்தியிருந்தது உறுத்தியது.. கண்ணீர் வற்றிப்போனதோ?..
அவன் மனைவி அழுகிறாளே தவிர.. ம்ஹூம்.. எப்படி? எங்கே தவறு??
இந்த கதையை படிக்கிறவங்க கண்டுபிடியுங்களேன்!
Labels: க்ரைம்-புனைவு
"Excuse me, நீங்க ஜாயின்ட் ஃபேமிலியா?"
(இந்த பதிவு நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் எழுதியது.. அப்பொழுது இதைப்படித்தவர்கள் இருவர் மட்டுமே..ஒருவர் நான், மற்றொருவர் நர்சிம்(அட நான் மட்டும் தாங்க படிச்சேன்!))
"Excuse me, நீங்க ஜாயின்ட் ஃபேமிலியா?""இல்லை-
நானும் Wifeம் .... தனியா இருக்கோம்."
"Hellow Sir..Nowadays அதாங்க ஜாயின்ட் ஃபேமிலி."
இது ஒரு ஜோக். ஆனால் இதன் நிதர்சனத்தை சற்று உற்று பார்த்தால், காரணங்களும் அவைகளால் ஏற்படும் ரணங்களும் இதயம் கிழிக்கிறது. கூடவே நாளைய சமூக அமைப்பை நினைத்து பார்க்க பயமாய் இருக்கிறது.
முதலில் சமூகக் காரணங்களைப் பார்ப்போம்..
திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு மட்டும் அல்லாது இரு பெரும் குடும்பங்களின் இணைப்பாகவே கருதப்பட்டு வந்தது.முன்பெல்லாம் யார் வீட்டிலாவது திருமணம் என்றால் அந்த தெருவே விழாகோலம் பூண்டுவிடும். ஊர் மொத்தமும் அவர்களின் நிச்சயதார்த்தை அங்கீகரிக்கும். இது எதற்கு என்றால், அந்த மாப்பிள்ளை பற்றி ஏதாவது தவறான செய்தி இருந்தால் யார்மூலமாவது தெரிவிக்கப்பட்டுவிடும்.(100 திருமணம் செய்த மாப்பிள்ளை நினைவிருக்கிறதா?) இப்பொழுது எல்லாம் கால்யாணத்தன்று தான் பக்கத்து வீட்டிற்கே சொல்கிறார்கள்.
தனிமனித மாற்றங்கள்..
மின்னல் வேக வாழ்வில் இப்பொழுது திருமணம் என்பது இருவருக்குமே 10 நாள் அலுவலக விடுமுறை,பார்ட்டி,மெஹந்தி,சஃபாரி சூட் என்றாகிவிட்டது.கண்ணொடு கண் நோக்கொக்கி,பின் வாய்ச் சொல் ஏதுமின்றி திருமணம் முடிந்து வந்த பரிசுகளை பிரித்து அடுக்கும் முன் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விடுகிறது.இருவருமே திரைகடல் ஓடி திரவியம் "தேடி" வாழ்க்கையை "தொலைத்து"விடுகிறார்கள். இப்பொழுது இருவரின் உலகமும் மிகப் பெரியது. வாய்ப்புகளும்,வசதிகளும்,பதவியும் சமமாகவே கிடைக்கின்றன. சார்ந்து வாழ்வது என்பது பொருளாரதார ரீதியாக தேவையில்லாமல் போனது.ஆதலினால், தங்களின் சுய மரியாதை இம்மியளவு குறைந்தாலும் ஏற்றுக்கொள்ள சம்மதிப்பில்லை.மறப்போம் மன்னிப்போம் என்பது போய் மன்னிப்பதையே மறந்து விட்டோம். தனிமை சுகமாய் இருக்கும். ஆனால் அதுவே மிகப் பொரும் சுமையாகப் போகும். ஆம்.கணவன்,மனைவி மற்றும் TV.. எத்தனை நாட்கள்? .. மூத்த தலைமுறையின் அருகாமை இல்லாததும் முக்கிய காரணமாய்த் தோன்றுகிறது.இப்பொழுதே இப்படி என்றால், நாளைய சமூகம்.? அதுவும் மிக மிக குறுகிய உறவுமுறை மட்டுமே இருக்கப்போகும் ஓர் சமூகம்.. ஆம்.. இன்று பெரும்பாலும் ஓரு குடும்பம் ஒரு குழந்தை என்ற சூழலில், அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,மாமா.. போன்ற உறவுகள் எப்படிச் சாத்தியம்? இப்படி உறவுகள் குறுகக்குறுக மன விலாசமும் குறுகித்தான் போகும்.. விவாகரத்தின் அளவுகள் கூடிக் கொண்டேத்தான் போகும்.
இறுதியாக....
வெளியில் நண்பர்களுக்காக உயிரையும் குடுக்க தயாரக இருபவர்கள், வீட்டில் வாழ்வில் பாதியையும்,உயிரில் மீதியையும் கொடுப்பவரிடம் நண்பனாகவோ/நண்பியாகவோ நடந்து கொள்வதே நீண்ட நாள் சேர்ந்து (ஜாயின்ட் ஃபேமிலி?)வாழ்வதற்கான குறைந்த பட்ச முயற்சி...
Labels: பத்தி
விந்து சிந்தும் பேருந்து..
நகரப்பேருந்தின் நெருக்குதலின்
நடுவே..
வியர்வையின் கசகசப்பிலும்
உச்ச நிலை அடையும் வரை
உரசிவிட்டு..
ஸ்கலிதமானதின் திருப்த்தியில்
இறங்கி நடக்கையில்...
பாழாய்ப்போன மனது
அலுவல் முடித்து
அடுத்த பஸ்ஸில் வரப்போகும்
அக்காவை நினைத்துத்
தொலைக்கிறது...!
Labels: கவிதை(??)
பரவச நிலை...("அந்த" பரவசம் இல்லங்க..)
1.சிறுவனாக இருக்கும் பொழுது, பேரூந்தில் அரைடிக்கட் செல்லாது, முழுடிக்கட் வாங்க வேண்டும் என்று நடத்துனர் சொன்னவுடன் அப்பாவின் முனுமுனுப்பையும் மீறி "பெரிய பையன்டா நான்"னு ஒரு பரவசம் ஏற்படுமே...
2. முகத்தில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முடிகள் தட்டுப்பட்டவுடன் "தாடி" வளர்ந்ததைப் போல் கையை அதிலேயே வைத்து நீவிக் கொண்டிருப்போமே...முதன் முதலாக சலூன்காரர் தம்பி "ஷேவிங்கா" என்றவுடன் ஏற்படும் பரவசம் இருக்கிறதே...
3.பெட் மேட்சில் "லெக்சைடு அடுச்ச ஃபோர் சூப்பர் சாட்ரா மச்சான்" என்ற வார்த்தையை கேட்கும் போது ஏற்படுமே..
4.பள்ளியில் சிம்ம சொப்பனமாய் இருக்கும் வாத்தியாரை எதேட்சயாக அவரின் வீட்டுப்பக்கம் அவரை "கை வைத்த உள்பனியன் -லுங்கி சகிதம் "தொஸ்க்" என்ற நிலையில் பார்க்க நேரிடுகையில் பயம் போய் நக்கல் கலந்த ஆனந்தம் ஏற்படுமே...
5.பெரியக்காவை பெண் பார்க்க வந்தவர்கள் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் வீட்டில் கல்யாணகலைகட்டியவுடன் ஒரு பரவசம் ஏற்படுமே...
6. தெருவில் புதிதாக வந்த ஃபிகரிடம் நமது இருப்பை நிலை நாட்ட படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது, அவளின் அம்மாவே.."தம்பி கால் கிலோ சுகர் வாங்கிட்டுவர முடியுமா" என்றவுடன் வாயெல்லாம் பல்லாக, முகமெல்லாம் வாயாக வங்கி கொடுக்கும் போது ஏற்படுமே...
7.முதன்முதலில் "சார்லஸ் பாபேட்ஜ் கம்ப்யூட்டரின் தந்தை" என்ற அருவைகளைத் தாண்டி, நம் பெயரை பெரிய பெரிய எழுத்தில் கலர் கலராக மானிட்டரில் அடித்து பார்க்கும் பொழுது ஏற்படுமே..
8. திருமணங்களில் அப்பாவின் நண்பர்கள் "உங்க அப்பா மாதிரியே இருக்கப்பா" என்று சொல்லும் பொழுது இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுமே...
9.முதன் முதலாக டூவீலர் கியர்வண்டி ஓட்டி.. அந்த முதல் கியர் போட்ட த்ரில் கலந்த சந்தோஷம் இருக்கிறதே..
10.முதன் முதலாக வந்த காதல் கடிதத்தில் வந்த 4 வார்த்தைகளை உயிர் நண்பனிடம் மறுபடிமறுபடி படித்துக்காட்டி அவனைக்கொன்று கிழிப்பதில் ஏற்படுமே ஒரு பரவசம்..
இப்படியான அத்தனை பரவசத்திற்கும் ஈடானது... நம் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுதும் ஏற்படுகிறது...
உங்களுக்கு...??
Labels: பத்தி
பார்வைகள்" ..
இரயில் புறப்பட இன்னும் 5 நிமிடங்கள் இருக்கிறது.அவரவர் இடத்தில் சாமன்களை வைப்பதும் வழியனுப்ப வந்தவர்களின் அறுவை அறிவுறைகளும்,கண்ணீர் துளிகளும்,சிரிப்பொலிகளும்.
ஜன்னல் அருகே அமர்ந்திருந்த என்னிடம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் தான் அமர ஆசைப்படுவதாகச் சென்னான். ஒரு கோப பார்வை பார்த்துவிட்டு முடியாது என்று திரும்பிக்கொண்டேன். இரயில் பயண ஜன்னல் என்பது ஒரு வரம் அல்லவா?. அவனுக்கு அடுத்து அவன் தந்தையாக இருக்கலாம்.சுமார் 60 வயது இருக்கும்.தண்ணீர் பாட்டிலை வைப்பதற்கு இடம் தேடி பின் மடியிலேயே வைத்துக்கொண்டார். ஒரு வார தாடியும் ஒருவித லேசான நெடியும் சற்று அவர்மேல் வெறுப்பை தந்தது. எதிரில் புதிதாக திருமணமான ஜோடி.கழுத்து நிறைய நகையும் மருதாணிக் கைகளும் அதை உறுதி செய்தது. அதைவிட அவள் கணவனின் கையில் இருந்த மோதிரமும் பிரேஸ்லட்டும் (மாம"நார்"?)புதுமண தம்பதிகள் என ஊர்ஜிதப்படுத்தியது.அருகே ஒரு நவயுக மங்கை SMS அனுப்பிக்கொண்டு(டே) இருந்தாள்.நான் எதிர்வரிசை யுவதியை கவரும் வகையில் ஒரு பெரிய ஆங்கில புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருந்தேன்(?). ஆரம்பித்தது வினை. பக்கத்து இளைஞன் தன் தந்தையிடம் "அப்பா மரம் இவ்வளவு பெருசா இருக்குப்பா? என்று செல்லிச் சிரித்தான்.அவரும். ..!நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.இரயில் வேகம் பிடித்தது. பார்ப்பதை எல்லாம் சுரேஸ்(அவனை அப்படித்தான் அவர் அழைத்தார்)தன் தந்தையிடம் அத பாருப்பா,இத பாருப்பா..என்று உயிரை எடுத்துக் கொண்டு வந்தான்.இடையிடையே அந்த யுவதி,நான் விண்ணை பார்க்கும் போது என்னைப் பார்த்துக் கொண்டுருப்பது போல ஒரு பிரமைவேறு எனக்கு. ஒரு ஆளில்லா லெவல் கிராஸிங்கில் வண்டி ஓசையுடன் மழையும் துளித் துளியாய்(சே, அநியாயமாய் மோனலும் குணாலும் செத்துட்டாங்களே!!)பெய்யத் தொடங்கியது.தொடங்கிவிட்டான் சுரேஸ்.. "அப்பா மழை ப்பா.. தண்ணிப்பா" 25 வயது எருமை இப்படியா இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.புது மனைவியின் புடவை நனையக்கூடாது என புதுமாப்பிள்ளை ஜன்னலை இறக்கிவிட்டான். அப்படியும் என் ஜன்னல் வழியே சாரல் தெறிக்க,அவள் கண்ணசைவிலேயே என் பக்க கதவடைத்தேன். இளைஞன் கதவை திறக்கச்சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தான்.புதுப் பெண் திட்ட ஆரம்பித்துவிட்டாள்.ஹீரோ ஆசையில் நான் அந்த பெரியவரிடம் சத்தமாக "போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பன்னுய்யா" என்றேன் யுவதியை பார்த்துக்கொண்டே.பெரியவர்(பெருசு?) சென்னார்."ஆஸ்பத்திரியில இருந்து இப்பதான் தம்பி வர்றோம்.பிறவியிலயே கண்ணு தெரியாது இவனுக்கு. இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சி மொத மொதோ உலகத்த பார்கிறான்.அதாங்க இப்பிடி"... ....
அப்பொழுது பிசைய ஆரம்பித்த மனசுதான்.. இன்னும்...
அதனால..அடுத்தவங்க பிரச்சனை என்னன்னு தெறிஞ்சு பேசுங்க..
(அந்த யுவதி என்னைப் பார்த்த காரணம், என் செல்போனில் இருந்து அவள் ஹீரோவுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க..ஹும்..)
(மெயிலில் வந்த இரண்டு வரி விளம்பரத்தை(Vision Advt) கதையாக மாற்றி எழுத முயற்சித்ததன் விளைவு...)
Labels: பத்தி
நீங்கள்...??
1. லிஃப்டிலோ அலுவலகத்திலோ ஆளூயர கண்ணாடி தட்டுப்பட்டால், பக்க வாட்டில் திரும்பி "தம்"பிடித்து வயிறை உள் இழுத்துப்பார்த்து பின் உதடைப் பிதுக்கிக் கொள்கிறீர்களா?
2. முன்பொல்லாம் தங்கமணி ஊருக்குப் போனால்.. நண்பர்கள் அனைவரையும் அழைத்து..சமையலறையை போர்க்களமாக்கி..கட்டிங்..ஃபுல் வரை செல்லும் நீங்கள்.. இப்பொழுதொல்லாம் தங்கமணி ஊருக்கு செல்லவதை யாரிடமும் சொல்லாமல், ஒரு பீர்,பிடித்த புத்தகம்,ஹால்,டிவி என்று ஐக்கியமாகிவிடுக்றீர்களா?..
3. உள்ளாடை துவைக்காமல் இருந்தாலோ.. தட்டுப்படவில்லை என்றாலோ.. ஒரு நாள் தானே என்று "அண்ணாத்த ஆடுறார்" என்று கிளம்பி விடுகிறீர்களா?..
4. கடையில் பார்த்தவுடன் பிடித்துப்போன T-சர்ட்டை வாங்கிவந்து போட்டதும் "குய்யோ முறியோ" என்று கத்தி, மனைவி வந்து கலட்டுவதற்கு உதவும் படி "டைட்டாக" உள்ளதா?..
5. நண்பர் வீட்டுக்குச் சென்றால் உங்கள் வாகனத்தை எரிச்சல் வரும்படி அவரின் மகன் நோண்டுகிறானா?..
6. ரோட்டில் பள்ளி மாணவனும் மாணவியும் நெருக்கமாக பேசிக்கொண்டு போனால்.."இவங்கள வீட்ல படிக்க அனுப்பிச்சா..ஹும்" என்று நினைக்கிறீர்களா..?
7. "அவன் கிடக்கான்".. என்று அப்பாவை நண்பர்களிடம் பேசி வந்த நீங்கள் இப்பொழுதொல்லாம் "எங்க அப்பா இதத்தான் அப்பவே சென்னாரு" என்று கூறத்தொடங்கிவிட்டீர்களா..?
8. அழகான பெண் கிராஸ் செய்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு முழுப்பார்வை பார்த்து பின் சிறுபெரு மூச்சை விடிகிறீர்களா?..
9. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தால் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்கிறீர்களா..?..
10. உங்கள் வயது என்ன என்ற கேள்விக்கு .. "ஆக்சுவலா.. சர்ட்டிபிகேட் படி பார்த்தீங்கன்னா".. என்று நீட்டி முழக்குகிறீர்களா?...
அப்படின்னா..அங்கிள் நீங்க 35 வயச கடந்து 40 பக்கத்துல போய்ட்டீங்க...
(அனுபவமானு கேட்கறவங்களுக்கு.. நம்ம எப்பவும் 10 வருஷம் முன்னோக்கித்தான் யோசிக்கிறது..ஹி ஹி..)
Labels: மொக்கையிலும் மொக்கை