நம்மில் பெரும்பாலானோர் அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாமல் தான் இருக்கிறோம்.லேட்டாக எழுந்து, அவசர அவசரமாக குளித்து அலுவலகம் சென்றால் குறைந்த பட்சம் 9 மணிநேரம்(பெரும்பாலும் 12 மணிநேரம்)அங்கேயே பொழுதைக் கழிக்கிறோம்.இரவு வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட்டு,டிவி, அல்லது சாப்பிட்டுக்கொண்டே டிவி.. பின் தூக்கம்..
ஆக, வீட்டில் உள்ள (கவனிக்க,வீட்டில் உள்ள) மனைவிக்காக நாம் செலவிடும் நேரம் மிகக்குறைவு.. இதை பற்றி பேச்சு எழுந்தால், நாம் வேலைக்கு போவதே அவர்களுக்காகத்தானே என்று சொல்லும் நம்மில் எத்தனை பேர் எதையோ இழந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறோம்?
நாம் அலுவலகம் செல்ல வில்லை என்றால் அனைத்து வேலைகளும் ஸ்தம்பித்து விடும் என்று நாமாக நினைத்துக் கொண்டு, மனைவியின் அருகில் கட்டாயம் இருக்க வேண்டிய தருணங்களைக் கூட அலுவலுக்காக தியாகம் செய்கிறோம். நான்கு நாட்கள் போகாமல் இருந்து பாருங்கள்.. எல்லா வேலையும் தானாக நடந்திருக்கும்.. என்ன,இந்த தெளிவு பிறக்க கொஞ்சம் தாமதமாகி விடுகிறது..ரிட்டயர்டான மறுநாள் வரைக்கும் தாமதம்..
இந்த சூழலைத்தான்..
செய்யும் தொழில் தான் ஆண்களுக்கு உயிர் போன்றது என்று முன்னோர்கள் சொன்னதனால் உன் தலைவன் இப்படி பணிநிமித்தம் பயணித்து கொண்டிருக்கிறான்..அதே முன்னோர்கள் தான் "வீட்டில் வாழும் மகளிர்க்கு தங்கள் ஆண்கள் உயிர் போன்றவர்கள்" என்பதையும் கூறியிருக்கிறார்கள்.. அதை உணர்ந்து அவர் உனக்காக இந்த பயணங்களை ஒருநாள் விட்டு விடுவார் தோழி.. அழாதே!
என்று ஆறுதல் கூறுவதாக பாலைத்திணையில் அமைந்த இப்பாடல்..
'வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல் தோழி! அழுங்குவார் செலவே.
புலவர் பெருங்கடுங்கோ.
(செலவு என்ற சொல் பயணத்தைக் குறிக்கும்.. இப்பொழுதும் பயணம் என்றாலே செலவுதானே!..)
..
குறுந்தொகை -அவசரமாய்...
Labels: குறுந்தொகை
இப்படியெல்லாம்...
10 வயது வரை : அப்பாவை ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தொ(அ)னத்தி எடுத்து, கடைக்குப்போய்.. போலீஸ் ட்ரெஸ்,டுப்பாக்கி,அதை வைக்கும் உறை,தொப்பி.. மிக முக்கியமாய் விசில்.. என்று வாங்கி, தெரு முழுதும் விசிலை ஊதித்திரிந்த தீபாவளிகள்...
10-16: வீட்டின் இன்ஃபிலேஷன் நிலை தெரியாமல் பக்கத்துவீட்டு பாபு வாங்கிய 3 சட்டைகளை விட அதிகம் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக்கொண்டு.. கூடை நிறைய வெடி வாங்கி அதை அக்கா, தம்பி என்று மூன்று பங்காக பிரித்து, மொட்டை மாடியில் காய வைத்து விட்டு.. யாருக்கும் தெரியாமல் மாடிக்குச் சென்று மற்ற பங்குகளில் இருந்து நமது பங்கில் இரண்டு வெடிகளை எடுத்துப் போட்டு வெடித்து மகிழ்ந்த தீபாவளிகள்..
16 - 21 : ஒரே ஒரு ட்ரஸ்.. ஆனால் நல்ல சட்டை,பேக்கி பேண்ட்.. புது செருப்பு மிக முக்கியம்.. விடிந்தும் விடியாமல் தயாராகி, ஃபிகர் இருக்கும் தெருவிற்கு சென்று வெங்காய வெடியை அவர்கள் வீட்டுச் சுவரில் வெடித்து,புது டிரஸ்ஸை அவளுக்கு காட்டிய உடன் முடித்துக் கொண்ட தீபாவளிகள்..
21- 25 : நண்பர்களுடன் முதல்நாள் இரவு முழுதும் டவுன்ஹால் ரோடுகளில் சுற்றி விட்டு அடித்த சரக்கு அடுத்த ஊர்வரை நாற்றம் எடுக்க வாந்தி எடுத்து, படுத்து,ஊரே கொண்டாடும் அன்று, மூலையில் முடங்கிப்போய் தூங்கி எழுந்த தீபாவளிகள்..
26-30 :சம்பளத்தில் ஆசையாய் வீட்டில் உள்ள எல்லாருக்கும் பார்த்து பார்த்து துணி வாங்கி கொடுத்து அதை அவர்கள் உடுத்தும் போது பெருமிதத்தோடு பார்த்து மகிழ்ந்து,பின் தொலைக்காட்சியில் தொலைந்து போகும் தீபாவளிகள்..
இனி வரும் வயதுகளில் எப்படி இருக்குமோ..?!
..
Labels: பத்தி
முடியும்.. விடியும்...
"கண்களை மூடினால் எதையும் பார்க்க முடியாது"... என்பதையே.. "கண்களை மூடினால் இருட்டைப் பார்க்கலாம்" என்ற அனுகுமுறையே "பாஸிட்டிவ் அப்ரோச்.."
ஒரு ஆப்பிள் மரத்தில் எத்தனை ஆப்பிள்கள் இருக்கிறது என்பதையும் தாண்டி, ஒரு ஆப்பிளில் எத்தனை ஆப்பிள் மரத்திற்கான விதைகள் இருக்கிறது என்ற பார்வைதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
ஒரு சைக்கிள்.. தெருவின் நடுவில் நிற்கிறது.ஸ்டாண்டு போடாமல் நிற்க வைத்தால் நிற்குமா? .. அதில் நாம் ஏறி அமர்ந்து,ஆனால் ஒன்றும் செய்யாமல் காலை தரையில் ஊண்டாமல் இருந்தால்.. இப்பொழுது சைக்கிளோடு சேர்ந்து நாமும் கீழே விழுந்து விடும் நிலை..
ஆனால் அதில் அமர்ந்தவுடன் நம் கால்கள் அனிச்சையாக பிடலை மிதிக்க துவங்குகிறது.. சைக்கிள் விழாமல் முன்னேறுகிறது..
வாழ்வின் சூட்சமமும் இதுதான்.. அங்கே கால்களின் இயக்கம் இங்கே மூளையும், செயல்திறனும் ஒருங்கிணைந்தால் முன்னேற்றம் தான்..
எந்த ஒரு செயல் அல்லது சாதனை துவங்கும் போது "முடியாதோ" என்றுதான் தோன்றும்..
முதல் பதிவு எழுதும் பொழுது.. நான்கு வரிகளை எழுதி அதை பதிவில் ஒட்டி, பதிவேற்றம் செய்வதற்குள் வேர்த்து வெறுத்து போன நமக்கு இன்று பல்தேய்ப்பதை விட பதிவெழுதுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது.. காரணம்..ஒரு சொல்.. ஒற்றைச் சொல்.. "ஈடுபாடு"..
ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த ஒரு செயலும் படும்பாடு பெரும்பாடுதான்..
ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள்.. அது தினசரியாக இருக்கட்டும் அல்லது A4 சைஸ் பேப்பராக இருக்கட்டும்.. அதை சம விகிதத்தில் மடித்தால்.. 7 வது மடிப்பு தான் பெரும்பாலும் கடைசி மடிப்பாக இருக்கும்..
இப்படி எந்த ஒரு செயலிலும் நமக்குத்தெரியாத ஏதோ ஒரு ஒழுங்கோ,கட்டமைப்போ இருக்கத்தான் செய்கிறது..அதைப் புரிந்து செயல்பட்டால் எந்த பிரச்சனைகளையும் உடைப்பதும் சாதனைகளை படைப்பதும் உறுதி..
ஒரு பழைய எலி கதை: வயலில் குட்டியோடு கும்மாளம் அடிக்கும் எலி.. வயல்காரன் வேலைக்காரனிடம் அதற்கு மருந்து அடிக்கச்சொல்லுவான்.. மறுநாள் அடிப்பதாக வேலைக்காரன் சொல்லுவான்.இதைக்கேட்ட குட்டி, தன் தாயிடம் தான் கேட்டதைச் சொல்லும்.. அதற்கு தாய் பரவாயில்லை.. ஒன்றும் ஆகாது நாளைக்கு..விளையாடு என்று சொல்லும்.. சொன்னது போல் மறுநாள் ஒன்றும் நடக்காது.. இப்பொழுது வயல்காரன் தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்.. நாளைக்கு நம்மளே அடிச்சிட வேண்டியதுதான்.. இதைக்கேட்ட குட்டி தாயிடம் இப்படிச் சொன்னான்.. ஆனால் ஒன்றும் ஆகாதல்லவா என்று கேட்கும்.. அதற்கு.. முட்டாள் குட்டியே.. என்று ஒருவன் தன் உழைப்பை நம்பி, தானே ஆரம்பிக்கிறானோ அந்த வேலை உடனே நடந்து விடும்..ஓடிவிடவேண்டும்.. என்று குட்டியை அழைத்துக்கொண்டு ஓடி விடும்..
சற்று அருவையாக இருந்தாலும் இந்த கதையின் உள்ளடக்கம் மிக முக்கியமானது.. மற்றவர்களை சார்ந்திருக்காமல் நாம் செய்யும் அல்லது செய்ய எத்தனிக்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி இருக்கிறது.. அந்த வெற்றி வெளியில் தெரிவதற்கு வேண்டுமானால் கால தாமதம் ஏற்படலாம்..
சரியான நேரத்தில் முடிவெடுப்பது ஒன்று, சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பது என்பது முக்கியமான அடுத்த கட்டம்..
முடிவெடுத்து முனைந்தால்..
நம்மாலும் எதுவும் முடியும்.. நாளைக்கும் கிழக்கு நமக்காக விடியும்!
..
Labels: பத்தி
குறுந்தொகை... மென் முலையழகி
காதலிக்கும் ஆண்களுக்கு நண்பர்களாக இருந்திருக்கிறீர்களா?...
"ஒரு பார்வ பார்த்தா பாரு மச்சான்".. என்று ஆரம்பித்து.. அவள் சாதாரணமாக தெருவை கடந்ததை ஏதோ சந்திர மண்டலத்தையே கடந்த ரேஞ்சில் பேசுவார்கள்..
அதைவிட கொடுமை .. கன்னத்து மச்சம்,கண்களில் அச்சம்..காதலே மிச்சம் கண்ணே! என்று ஒரு "ச்"சன்னாவையோ அல்லது "ங்"ன்னாவையோ பிடித்து தொங்கி இருபது வரிகளில் கவிதை என்ற பேரில் எழுதி அதை அறுபது முறை படித்துக்காட்டுவார்கள்.. அறுபது முறையும் நாம் புருவம் உயர்த்தி, உதடு சுழித்து, "சூப்பர்டா மாப்ள" என்று சிலாகித்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து வேறு தொலைப்பார்கள்..
நண்பர்காள்.. இந்த கொலைகுத்து சங்க காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.. ஆனால் அந்த வார்த்தைகளும் அதன் அர்த்தமும் புரிந்து அந்த சூழலுக்குள் புகுந்து பார்த்தால்.. சுவாரஸ்யமாய் இருக்கும்.. இதோ இந்த சூழலுக்குள் புகுந்து பாருங்களேன்..
"பார்த்தவுடன் படக்கென்று அனைத்துக்கொள்ள தோன்றும் வனப்பான தேகமும்,குவித்து வைக்கப்பட்ட மிருதுவான மார்பு முலைகளும், நன்கு வளந்த கொடி படர்ந்து தொங்குவது போன்ற கூந்தல் அழகும் கொண்ட அவளை என்னால் மறக்கவே முடியவில்லை.. அவளும் அதுபோலத்தான்.. எப்படி காலையில் மேச்சலுக்கு சென்ற தாய்ப்பசு வீடு திரும்பும் வரை அந்த திசையையே தலையை சாய்த்து பார்த்து இருக்குமே அதன் கன்று குட்டி.. அது போல என் வரவை எதிர்பார்த்து காத்திருப்பாள் பேரழகி..."
தலைவனின் கூற்றாக இந்த வரிகள் குறிஞ்சி திணையில் .. பாடல்..
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடிக் கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ, யானே ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விரும்பின் அன்ன,
சாஅய் நோக்கினள் மா அயோளே.
புலவர் ஆந்தையார்.
இரண்டு முறை பாடலை மேலே சொன்ன விளக்கத்தோடு படித்து பாருங்கள்.. புரியும்.. சுவாரஸ்யமாய் இருக்கும் என்று நம்புகிறேன்..
..
Labels: குறுந்தொகை
ஞாபகமாய்.. ஒரு மறதி
ஹலோ..
"ஹலோ அஷ்வினா?"
"ஆமாங்க.. நீங்க.."
"டேய்.. யாருன்னு தெரியலயா?"
"ஹலோ.. சொல்லுங்க.."
"குமரன் பேசறேன்டா.. BP.. பேக் பைப்பர் குமரன்.."
"டேய் BP.."
என்ற அஷ்வினின் ஆச்சர்ய துள்ளல் குரல் கண்ணாடி அறையையும் மீறி வெளியில் கேட்டிருக்க வேண்டும்.. அலுவலக மொத்தமும் அரை முறை தலை உயர்த்தி புருவம் உயர்த்தலில் அதை உணர்ந்து கொண்ட அஷ்வின், குரலை சற்று தாழ்த்தி...
"எப்படி மச்சான் இருக்க.. எவ்வளவு வருஷம் ஆச்சு.. நல்லா இருக்கியா?"
"இருக்கேன்டா.. நீதான் மறந்துட்ட.. உன் நம்பர வாங்குறதுக்கே அவ்வளவு கஷ்டமா போச்சு..உங்க வீட்டு நம்பர் விஜயன் கிட்ட இருந்துச்சாம்..இந்த நம்பர் தங்கச்சி குடுத்துச்சு.."
"ஸாரிடா.. வேலை அப்டி.. டூர் அது இதுனு பிஸில.. சரி அத விடு.. அம்மா எப்படி இருக்காங்க.."
"இருக்காங்க.. மச்சான் ஏதாவது வேலை கரக்ட் பண்ண முடியுமா.. ரொம்ப கஷ்டமா இருக்குடா இங்க..."
"என்னடா சொல்ற.. நான் பாத்துக்கிறேன்.. இது ஒரு மேட்டரே இல்ல.. நாளைக்கி கூப்புடுறேன் சரியா. ஃப்ரீயா இரு மச்சான்.. ரொம்ப சந்தோஷமா இருக்குடா பேசினதுல.. 5 6 வருஷம் இருக்கும்ல பேசி.."
"மேலயே.. நீதான் மறந்துட்டயே.. நாளைக்கி கூப்புட்றா.. நம்பித்தான் இருக்கேன்.."
ஸிம்பிள் மேட்டர் டா மச்சான்.. சொல்லிட்ட இல்ல.. நான் பார்த்துக்குறேன்."
என்று போனை வைத்த அஷ்வின் கழுத்து டையை தளர்த்திக் கொண்டு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தான்.. மனது லேசாகவோ கனமாகவோ ஆனால் ஏதோ செய்தது..
பிபி..
பேக் பைப்பர் என்ற பிபி என்ற குமரன்.. 8வதில் இருந்து யூஜி வரை கூட படித்தவன்.. கூட படித்தவன் என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும்.. ஓருயிர்,ஈருடல் என்பார்களே.. அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தவன்.
கல்லூரி வாசல் வரை வந்து, இருவரில் யாரவது ஒருவர் அன்று வரவில்லை என்று தெரிந்தாலோ தாமதமானாலோ வகுப்புக்குச் செல்லாமல் மரத்தடிக்கு சென்று காத்திருப்பர்..
பேக்பைப்பர் பிரான்ட் சரக்கு மட்டும் தான் அடிப்பான்.. அதனால் தான் பிபி..
அவனை உயரமா குட்டையா என்று சொல்பவர்கள் கெட்டிக்காரர்கள்.. மிக நேர்தியாக உடை உடுத்துவான்.பேச மாட்டான்.. ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான்..
அப்பாவியாகவும் சற்று கோவமாகவும் அவன் கேட்கும் கேள்விகள் சிரிக்க வைக்கும்..
குற்றாலம் போயிருந்த பொழுது.. சரக்கடித்து விட்டு.. பாலா பலான மேட்டரை எப்படியாவது அனுபவித்துவிட வேண்டும் என்றான்..
"பிபி.. சொல்றா இவன்கிட்ட.. வேணாம்னு"
"ஆமாடா பாலா.. இங்க எல்லாம் டேஞ்சர் மச்சான்.."
"இல்லடா.. சிவா சொன்னான்டா.. எய்ட்ஸ்லாம் வராதாம்.."
"ஆமா.. அவரு பெரிய எய்ட்ஸ் கட்டுபாட்டுத்துறை அமைச்சரு.. அவரு சொல்லிட்டாரு.. எல்லா பேப்பரும் அரியர்ஸ் வச்ச வெண்ண அவன்.. அவரு சொல்றாராம்.. வராதாம்.. போடா.."
இப்படி எதை எதையோ அசைபோட்ட அஷ்வினின் கவனத்தை கனைப்பின் மூலம் கலைத்தாள் பூஜா..
"ஸார்.. யுவர் டிக்கெட்ஸ்.. மார்னிங் 6ஓ கிளாக் ஃபிளைட்.."
"தட்ஸ் ஓகே.. தேங்க்ஸ்.."
"ஸார்.. பாதிதான் ப்ரிப்பேர் பண்ணியிருக்கீங்க.. இன்னும் நிறைய ஸ்லைட்ஸ் இருக்கு.. "
என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அஷ்வினுக்கு அதன் அபாயமும் நாளை பிசினஸ் ஹெட் முன் குடுக்க வேண்டிய பிரசன்டேஷனும்
மூளையை வேகப்படுத்தியது..
வழக்கம் போல் விரல்களை கீ போர்டிலும்,கண்களை மானிட்டரிலும் மனதை மறுநாள் நடக்கவிருக்கும் மீட்டிங்கிலும் ஓடவிட்டான்..
காது ஜிவ்வுடன் விமானம் வானம் ஏறியது.. இரண்டு மணி நேர தூக்கதின் முடிவில் வயிறு கவ்வலுடன் தரைஇறங்கியது.
"தட் வாஸ் எக்ஸலன்ட் அஷ்வின்".. என்ற வார்த்தைகள் தேன்வார்க்கும் போதே.. யூ நீட் டு பி தேர் ஃபார் ஸம் டைம் இன் USA.. என்ற வார்த்தைகள் புளியை கரைத்தது.. வார்த்தாலும் கரைத்தாலும் கம்பெனிக்கு வாக்கப்ட்டால் செய்துதானே ஆகவேண்டும்..
அதுவும் மிக குறைந்த கெடு என்பதால்.. அவசர அவசரமாக தயார் ஆகி.. இதோ பறந்து விட்டான்..
ஒன்றரை வருடங்கள் கழித்து.. கன்னம் உப்பி லேசாக மேடிட்ட வயிரோடு வந்திறங்கிய அஷ்வினை அழைத்துச்செல்ல அவன் செல்ல மனைவியும் குழந்தையும் வந்திருந்தார்கள்..
நான்கு நாட்களில் மனைவி அலுத்த பிறகு.. அலுவலகம் ..
"ஹாய் ஸார்.. "
"ஹே..ஹாய்.. ஹை இஸ் யூ.."
"ஃபைன் பாஸ்.."
"எனிதிங் இன்ரஸ்ட்டிங் ஆர் இப்பார்ட்டன் தீஸ் டேஸ்.."
"நத்திங் மச் பாஸ்.. நம்ம சுந்தர் தான் வேலை விட்டுட்டாரு.. ஸம் பெர்சனல் ப்ராப்ளம்.."
"தட்ஸ் பேட்.. வென் வாஸ் திஸ்??"
"போன வாரம் ஸார்.. வி நீட் இம்மிடியட் ரீப்ளேஸ்மென்ட்.. யூ ஹவ் எனி ஒன் இன் மைன்ட்.."
பிபி என்று மனதில் சொல்லிக்கொண்ட அஷ்வின்..
"யா.. மை ப்ரண்ட் இஸ் தேர்.. இன்ஃபேக்ட் இட்ஸ் டூ லேட்.. ஒரு லெட்டர் டைப் பண்ணுங்க.. கேன்டிடேட் நேம் பிபி.. ஸாரி.. குமரன்.. எஸ்.குமரன்.. நான் இன்னைக்கு ஊருக்குப் போறேன்.. வில் கெட் ஹிம் அலாங் வித் மீ.. லெட்டர அடிச்சு குடுங்க.."
"டன் பாஸ்.."
மறுநாள்..விடிய விடிய... மதுரை நெருங்கியது..
வீட்டிற்கு போய்விட்டு பிறகு பிபியை பார்க்க போவோம் என்று நினைத்திருந்த அஷ்வினுக்கு பஸ் பிபியின் வீடு இருக்கும் முனிச்சாலை ரோட்டின் முன்னாள் வந்த பொழுது.. அந்த காலை வேலையிலும் பிபியின் முகத்தில் பார்க்கப்போகும் சந்தோஷத்தைப் பார்க்கும் அவசரத்திலும் அங்கேயே இறங்கி விட்டான்..
அந்த காலையிலும் பேப்பர் போடுபவர்கள் ஏரியா வாரியாக பிரித்துக்கொண்டிருந்தார்கள்.. ஐயப்ப பாட்டு அலற நாயர் டீக்கடையில் முதல் போணிகள் டீயை உறிஞ்சி கொண்டிருந்தார்கள்..
இந்த சந்துதானா என்று ஒரு கணம் தயங்கி..பின் அந்த முட்டுச்சந்து பிள்ளையாரை பார்த்தவுடன் உறுதி படுத்தி.. அதே கம்பி போட்ட கதவை தட்டினான்..
பிபியின் அண்ணன்..கொஞ்சம் குண்டடித்திருந்தார்.. மீசை மிஸ்ஸிங்..
"யாருங்க.."
"அஷ்வின்ணே.. குமாரு ஃப்ரண்டு.. ரெட்டச்சுழி அஷ்வின்.."
"யே.. எப்பிடிப்பா இருக்க.. அடையாளமே தெரியல.. வா வா.."
பிபியின் தம்பி உள்ளிருந்து வந்தான்.. கீச்சுக்சீச்சு என்று பேசிக்கொண்டிருந்தவனின் குரல் கரகரவென ஆம்பளைக் குரலாக மாறி இருந்தது..
"கரெட்டா ஞாபம் வச்சு இன்னிக்கு வந்திருக்கீங்களேண்ணே..நல்ல ஃபிரண்டுனா நீங்க தான்ணே.. "
இன்னமும் இவன் கேலியை விடவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே.. மொபைல்..
"ஹலோ.."
"கேட்கலங்க.. போய்ட்டீங்களா.. ஹலோ.".
"சிக்னல் வீக்கா இருக்கும்ணே".. என்றவுடன்
வெய்ப் பேசுறாங்க ஒரு நிமிஷம் என்று சந்தை விட்டு வந்து பேசினான்..
மூன்று பேர் பிளக்ஸ் பேனரை கட்டிக்கொண்டிருந்தார்கள்.. பார்த்த முகம்..
பிபியுடன் கேரம் விளையாடும் தெரு நண்பர்கள் என்று ஞாபகம் வந்தது..
போனை கட் செய்து விட்டு நிமிர்ந்த அஷ்வினின் கண்களில் அந்த பேனர் பட்டது.. நல்ல டிசைனில், பெரிய எழுத்துக்களில்..
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...
நண்பா.. மறந்தால் தானே நினைப்பதற்கு..
சைடில் இருந்த போட்டோவில் பிபி என்ற குமரன் சிரித்துக்கொண்டிருந்தான்..
..
Labels: புனைவு
ஈழம்.. மரண ஓலம்.. இந்திய அரசுக்கு..
இந்திய அரசுக்கு...
ஈழத்தில் இருந்து...
இன்னும் தலையில் குண்டு இறங்காத/இறங்கப்போகும் இளைஞன் எழுதிக்கொள்வது...
செய்தித்தாள்கள் எல்லாம் எம் மக்களின் குருதி படிந்த செந்நிறத்தில் அச்சிடப்படுகிறதே.. ஈழ தேசத்து மரண ஓலம் வையம் எல்லாம் கேட்கிறதே.. ஒரு இனம் வேரோடு பிடுங்கப்படுகிறதே..இவை எல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே... எரியும் பிணங்களின் வாடைதான் அங்கு வரை வந்திருக்குமே..!
கரன்ட்டாக இருந்தாலும் சரி, காஷ்மீராக இருந்தாலும் சரி, காவேரியாக இருந்தாலும் சரி இப்படி எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணத் துப்பில்லாத உங்களை உதவி செய்யச் சொல்லி ஒன்றும் நாங்கள் அழைக்க வில்லை..
அவர்களுக்கு மறைமுக உதவி செய்யாதீர்கள் என்றே இம்மடல்..
பிறந்த குழந்தையா.. சுடு.. பிறக்கப் போகும் குழந்தை வயிற்றிலா.. உதைத்துக் கலை. கன்னியா? பிறப்புறுப்பையே அழி..
எதற்காக இந்த வெறி என்று சிங்கள அரசிடம் கேட்டுப்ப்பாருங்கள். அந்த குழந்தைகளில் இன்னும் எத்தனை போராளிகளோ என்ற அச்சம்தான் என்பதே பதிலாய் இருக்கும்..
இந்திய வரைபடத்தின் கீழ் முற்றுப்புள்ளியென இருக்கும் ஒரு சிறு நாட்டின் சர்வாதிகார போக்கை தட்டி கேட்க இந்திய அரசு நினைத்தாலே போதும்.. நிறுத்தி விடலாம் போரை.. ஆனால் அதை நினைப்பதை எது நிறுத்துகிறது.
எல்லா பிரச்சனைக்கும் காலம்தான் தீர்வு என்ற போக்கை கடைபிடிக்கும் இந்திய அரசே.. இந்த பிரச்சனையில் காலத்தின் முன் காலன் தீர்த்துவிடுவானே என்ற எண்ணம் எப்போது ஏற்படும் உங்களுக்கு?
இரத்தம், வெடிகுண்டு, இறப்பு எல்லாம் பார்த்து பழகிவிட்டது.. இன்று துரோகம் பழகும் துணிவும் வந்துவிட்டது உங்களால். நன்றி..
முடிக்கும் முன்...
இன்னொரு கார்கிலோ இல்லை வேறு ஏதாவது யுத்தமோ வந்தால் சொல்லி அனுப்புங்கள்.. உயிரோடு இருந்தால் வந்து போரிடுகிறோம்..
உங்களுக்காக அல்ல..
உங்களை நம்பி அங்கிருக்கும் எம் சகோதரர்களுக்காக..
இன்னும் உயிருடன் இருக்கும் ஓர்
ஈழத்தமிழன்..
..
Labels: ஈழம்
மனம் ஒரு வனம்...
பின் வரும் காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் முன் ஒரு பெரிய மைதானம் உள்ளது.அதில் ஒரு 20 நபர்கள் மனம் போன போக்கில் ஒரு பந்தை உதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. எந்த திசையிலும் உதைக்கலாம்.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உதைக்கலாம் என்று இருந்தால் அதை நீங்கள் எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள்?? அல்லது மறுபடியும் அங்கு போக மனம் வருமா??
இதையே..
மைதானத்தின் இரண்டு பக்கமும் 4 அடிக்கு ஒரு போஸ்ட், அதற்குள் தான் பந்தை செலுத்த வேண்டும் என்ற நியதி ஏற்படுத்தி, அந்த நியதியையும் 45 நிமிடங்கள் தான் என்ற நிர்பந்தத்திற்கு உட்படுத்தினால்.. ஆம்.. விறுவிறுப்பான கால்பந்தாட்ட போட்டி எவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது...
ஆக.. நியதிகளும் நிர்பந்தங்களும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொண்டது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?..
குறிக்கோள் என்ற நியதியும் அதை இதற்குள் அடைய வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லாத வாழ்க்கை முதலில் சொன்ன மைதானத்தைப் போன்றது.. விளையாடுபவர்க்கும் அதை பார்ப்பவர்க்கும் எந்த சுவாரஸ்யமும் தராதது..
குறிக்கோளை அடையும் முயற்சியில் தோல்வி கண்டால் பரவாயில்லை.. மீண்டும் முயற்சிக்கலாம்.. ஆனால் முயற்சிக்க எந்த குறிக்கோளும் இல்லை என்ற நிலைமையில் இருந்தால்..??
என் தந்தை சைக்கிளில் சென்று பயின்றார்.. அதனால் என்னை இருசக்கர வாகனத்தில் அனுப்புவதற்காக உழைத்தார்.. என் சந்ததி நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று நான் முனைகிறேன்.
இப்படி ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியில் தான் சமூகத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது..
எப்படி?
நீங்கள் குறிக்கோள் வைத்து வளர வளர உங்கள் தேவைகள் வளர்கிறது.. தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் பலரின் பங்களிப்பு இருக்கிறது.. அந்த பங்களிப்பால் அவர்களுக்கு பலன் கிடைக்கிறது.. அந்த "அவர்கள்" தான் "சமூகம்"..
ஆக, சமூகத்திற்கு என்று தனியாக நீங்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்க வேண்டாம்.. உங்கள் தனிமனித வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்.வளருங்கள்.. ஒவ்வொரு தனிமனித வளர்ச்சியும் சமூக வளர்ச்சியே..
நம்மில் பொரும்பாலானோர் பணம் எடுக்க ATM சென்றால் என்ன செய்கிறோம்?
உள்ளே சற்று தாமதமானால், நமக்கு பின்னே நீண்ட வரிசையில் நிற்பவர்கள் நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக மெஷின் தாமதிக்கும் நிமிடங்களில் இரண்டு கைகளையும் காற்றில் பறக்க விட்டு.. "நான் தாமதிக்க வில்லை.. மிஷின் தான் நேரம் எடுத்துக் கொள்கிறது" என்று முதுகு குலுக்கலின் மூலம் முகம் தெரியா அந்த நபர்களுக்கு செய்தி சொல்ல முற்படிகிறதே நம் மனம்..
அப்படிப்பட்ட மனதிற்கு.. "இதுதான் குறிக்கோள்.. அடைந்திட வை" என்று கட்டளையிட்டால் போதும்.. இலக்கை அடையும் வரை விடாது..
ஆம்.. ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறதா?
ஆம் என்றால்..
வாழ்விற்கான BIG 5 என்ன என்பதை தீர்மானியுங்கள்..இது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.. சிலருக்கு வெளிநாடு செல்ல வேண்டும், சிலருக்கு கிராமத்தில் இருந்து அருகில் உள்ள நகரத்தில் குடியேறினால் போதும் என்பது போன்ற குறிக்கோள்..
இவ்வாறாக 5 பெரிய குறிக்கோளை பட்டியல் இட்டுக்கொள்வோம்.. இது நியதி.. இதை எதற்குள் அடைய வேண்டும் என்ற நிர்பந்தத்தை முடிவு செய்யுங்கள்.. அதன் பின் தானாக உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான எண்ணம் ஏற்பட்டு விடும்.. தெளிவான எண்ணமே வெற்றியின் முதல் படி..
குறிக்கோளை மனதில் குறியுங்கள்.. ஏனெனில்..
மனம் ஒரு வனம்..
அதில் புதர் மண்ட விடுவதும்.. பூக்கள் குலுங்கச்செய்வதும்.. உங்கள் இஷ்டம்...
..
Labels: பத்தி
குறுந்தொகை...அடுப்படி மனைவி..அடிப்படை அன்பு..
குறுந்தொகை...அடுப்படி மனைவி..அடிப்படை அன்பு..
இன்றைய அல்ட்ரா மாடர்ன் உலகில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது என்பது இன்றியமையாததாகிவிட்டது. நேற்றைய இட்லிகளும் நாளைக்கான ரசங்களும் ஃபிரிட்ஜ்ஜில் பதப்படுத்தப்படுகின்றன..யார் முதலில் வீட்டிற்கு வரப்போவது என்பதை SMS உறுதிபடுத்திய உடன்.. மனைவி முதலில் என்றால் ஃபிரிஜ் பதார்த்தங்களை சூடாக்கி விடுவதும் கணவன் முதலில் என்றால்(வேறு போக்கிடம் அன்று கிடைக்காத பட்சத்தில்) கடையில் பார்சல் வாங்கிக்கொண்டும், இப்படியான ஏதாவது ஒன்றில் அந்த இரவு உணவு கடமை என சாப்பிட்டு முடிக்கப்படும்..
கணவன் சாப்பிடும் பொழுது மனைவி மறுநாளைக்கான வேலையிலோ அல்லது ஜோடி நம்பர் ஒன்றிலோ,சூப்பர் சிங்கரிலோ..கோலங்களிலோ தன் அலுவலக டென்ஷனை தொலைக்க வேண்டிய நிர்பந்த்தத்தில் இருக்கிறார்..
இப்படிப்பட்ட சூழலில் ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமையில், உறவினர் வராத அந்த பொன்நாளில், நண்பர்கள் இன்சூரன்ஸ் படிவத்துடன் படியேறாத அந்த நன்நாளில், மனைவி போனால் போகிறது என்ற எண்ணத்தில் மிகுந்த சிரத்தையோடு கமகம வென சமைத்து அதைச் சுடச்சுட தட்டில் பரிமாறியவுடன், உண்டு முடிக்கும் தருவாயில் அந்த ருசியின் போதையில் விரல்களின் இடுக்குகளில் உள்ள உணவையும் நாம் ருசித்து உண்பதை பார்க்கையில் மனைவிக்கு ஏற்படுமே ஒரு ஆனந்தம்... அதை..
"நல்ல கட்டி தயிரை பிசைந்த, மலரைவிட மெல்லிய விரல்களைத் தான் அணிந்திருக்கும் உடையிலேயே துடைத்துக்கொண்டும், அழகான கண்களில் அடுப்பு புகை எல்லாம் புகுந்தும் கண்களை கசக்கிக் கொண்டே தான் கிண்டிய புளிக்குழம்பை, ரசித்து சாப்பிடும் கணவன் நன்றாக இருக்கிறது என்றவுடன் அடுப்படியில் தான் பட்ட சிரமம் எல்லாம் மறந்து, மலர்ந்து மகிழ்ச்சியடைகிறது அவள் முகம்.."
எனும் பொருளில்..
முல்லைத்திணையில் வரும் பாடல்...
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
கூடலூர் கிழார் என்ற புலவர் பாடியுள்ளார்..
..
Labels: குறுந்தொகை
மாறவர்மன் -அத்தியாயம் ஐந்து
மாறவர்மன் 1
மாறவர்மன் 2
மாறவர்மன் 3
மாறவர்மன் 4
மைய மண்டபத்தின் வாயிலில் எழுந்த சத்தத்தைக் கேட்ட மாறவர்மன் மற்றவர்களை கை அமர்த்தி நிதானிக்கச்சொன்னான்.. கவனமாக சத்தம் வந்த திசை நோக்கி காதுகளை தீட்டிக்கேட்டதில் அங்கிருந்த ஏதோ ஒரு விலங்கின் சத்தம் அது என்பதை உறுதிபடித்திக்கொண்டு மண்டபத்தினின்றும் வெளி வந்தார்கள்...
"இளவரசே.. ஜெயம் நமதே".. என்ற வீரணனின் தோளை அணைத்து விடைபெற்ற மாறவர்மன் புரவியேறி புழுதி கிளப்பி அதில் மறைந்து போனான்.
மருத நாடு... தென் இந்தியாவின் நடுவில் மகுடம் சூட்டியது போன்ற மாதம் மும்மாரி பெய்யும் செழிந்த தேசம். எறும்புகள் எல்லாம் எருதுகள் போலவும் எருதுகள் எல்லாம் யானைகள் போலவும் வலம்வரும் வளம்மிக்க நாடு.குடிமக்களின் மனம் அதைவிட பெரிதாய் திகழும் திவ்ய தேசம்.. காரணம்..அரசன் வீரவர்ம குலசேகர தொண்டைமான்.மாறவர்மனின் தந்தை.. வீரத்திருமகன்..கிரீடம் தரித்தவன்.. கர்வம் தவிர்த்தவன்.தான் பெற்ற சிங்க குட்டி விளையாட சிறுத்தை குட்டி வளர்த்தவன்.
அப்படிப்பட்ட அரசனைத்தான் அண்டைநாட்டு கூட்டுச்சதியுடன் சிறைபிடித்தான் தளபதி வீரவிக்ரமசேனன்.மன்னரின் வலதுகரமாக செயல்பட்டவன்.. சிறந்த போர்வீரன்.மதிநுட்பம் வாய்க்கப்பெற்றவன்.அந்த மதிநுட்பமே அவனை தவறான வழியில் இட்டுச்சென்றது என்பவர்களும் உண்டு. அவனின் இத்திட்டத்திற்கு உதவிய செங்கோடவடுவூரான் என்ற அமைச்சர் அரசரின் நெருக்கமான அமைச்சர்களில் ஒருவன்.
இவர்களின் துரோகத்தால் சிறைபிடிக்கபடும் பொழுது தப்பி வந்த இளவரசன் தான் மாறவர்மன்,இப்பொழுது புழுதி பறக்க புரவியேறி பறந்தவன்.
அரண்மனை..
முதலைகள் மிதக்கும் அகழிகையைத்தாண்டி ஓங்கி எழுந்த மதில் சுவரின் உயரம் உக்கிரமாய் தோற்றமளிக்கும். கதவுகளின் சிற்பங்கள் உயிர்த்து பேசும்.அதனடுத்து இருக்கும் மணிமண்டபத்தின் கூரையில் பதித்து இருந்த வைரங்களின் மினுமினுப்பு கண்களைப் பறிக்கும். தூண்களின் வழவழப்பு யானைத்தந்தங்களை ஒத்து இருக்கும்.மூவர் சேர்ந்து அணைத்தால் மட்டுமே கரம் தொடவல்ல தூண்களின் நடுவில், வைரகூரையின் கீழ் ஆசனம்.. அதில் பதித்திருந்த முத்துக்களும் பவளங்களும் மாணிக்க கற்களும் "நான் அரசமரும் ஆசனம்.. சிம்மாசனம்" என்று கட்டியம் கூறுவது போலிருக்கும்.
நான்காவது தூணின் நடுவில் இருக்கும் புலியின் சின்னம் பாயும் வண்ணம் பொறிக்கப்பட்டிருக்கும்.. மற்ற தூண்களில் அந்த புலி அமர்திருக்கும்.. பாயும் புலி பொறித்த தூணின் அடித்தளம்தான் அவசர காலத்தில் அரசர் பயன்படுத்தும் சுரங்க வழிப்பாதை அமைக்கபெற்ற தூண்.. இது அரசர் மற்றும் வெகு சில அரண்மனை சிப்பந்திகளுக்கு மட்டுமே தெரிந்த வழி..
இந்த அரண்மனைதான் இன்று தளபதி வீர விக்ரமனின் கைகளில்.
"யாரங்கே.. அழைத்து வாருங்கள் இளஞ்செழியனை.." என்ற விக்ரமனின் உத்தரவு முடியும் முன்னரே இளனஞ்செழியன் அழைத்து வரப்பட்டான்..
"செழியா.. நன்றாக யோசித்துச் சொல்.. மாறவர்மன் எங்கு இருப்பான்.. உன்வார்த்தைகளை நம்பி உன்னை நான் இன்னும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறேன்.. சொல்.."
"மன்னா.. நம் நாட்டில் வழுவூர் என்ற கிராமம் உள்ளது.. தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. அங்குதான் நாங்கள் சந்திப்போம்.."
"அப்படியா.. மதிவாணரே.. அப்படி ஒரு கிராமம் உள்ளதா?? எங்கிருக்கிறது??"
ஒற்றர் தலைவன் மதிவாணன் சற்று யோசித்து.."ஆம் மன்னா.. தென்கிழக்கு திசையில் முப்பது கல் தொலைவில் உள்ளது மன்னா.."
"மன்னா.. ஒரு யோசனை.. தவறாக நினைக்கவில்லை என்றால் சொல்கிறேன்.."
"சொல் இளஞ்செழியா.."
"வீரர்களை அங்கு அனுப்புதை விட தாங்களும் அங்கு செல்வது ஒன்றே மாறவர்மனை பிடிக்க தகுந்த வழி.. மாறவர்மனின் வீரமும் விவேகமும் தாங்கள் அறிந்ததே..அதை முறியடிக்கும் வீரம் உங்களைத்தவிர வேறு ஒருவருக்கு இருப்பதாய் எண்ணுவதே சிறுபிள்ளைத்தனம்.."
"ம்ம்.. அப்படியா சொல்கிறாய்.. அதுவும் சரியான வாதம்தான்..எப்பொழுது புறப்பாடு என்று சொல்கிறேன்.. தயாராய் இருங்கள்..செழியா நீயும் தான்.."
"நானன்றியா.. உத்தரவு மன்னா.." என்று கூறிய செழியனின் மனம் திட்டத்தின் முதல் படி வெற்றியில் முடிந்த மகிழ்ச்சியில் துள்ளியது..
முற்றத்தின் ஊடே தெரிந்த நிலாவும் சிரித்தது..
கூடவே விதியும்...
தொடரும்...
...
Labels: மாறவர்மன்
கிராமத்து அப்பாவும் ஏரோப்ளேனும்...

"டேய்.. ஓரமா கையபிடிச்சுட்டு கூட வரணும்டா.."
"இப்படி வாங்கப்பா.. இந்த சைடுதான் என்ட்ரி.."
"நம்ம ஊரு பஸ் எங்க நிக்குதுனு பார்த்து அங்க போய் நிக்கணும்டா.."
"நம்ம போறது ஜெட் ஏர்லப்பா.. இங்க லைன்ல நில்லுங்க.."
"எங்க இருந்து எந்த ஊருக்கு போறம்னு சொல்லி கண்டக்டர்கிட்ட டிக்கட் எடுக்கணும்டா.."
"இந்த கவுன்டர்ல நம்ம வந்துட்டம்னு செக் இன் பண்ணனும்பா.."
"இதாண்டா டிக்கட்.. இறங்க வரைக்கும் பத்தரமா வச்சுக்கணும்.."
"இதான்ப்பா போர்டிங் பாஸ்.. பத்தரம்.."
"பஸ் நம்பர பாத்து ஏறனும்டா மாத்தி ஏறுனா நம்ம ஊருக்கு போகமுடியாது சரியா.."
"ஃபிளைட் நம்பர் போர்டிங் பாஸ்ல இருக்கு பாருங்கப்பா.. அந்த நம்பர் எந்த கேட்டுனு பார்த்து அது வழியா நம்ம ஃபிளைட்டுக்கு போகனும்.."
"டேய்.. கைய வெளில நீட்டக்கூடாது.. இப்பிடி உக்காரு.. சாய்ஞ்சுக்க.."
"அப்பா.. இந்த பெல்ட்ட போட்டுக்கோங்க.. ஸீட்ட பின்னால சாய்ச்சுக்கலாம்.."
"வேகமா பஸ் போகுதுல்ல அதனால மரம் எல்லாம் பின்னால போற மாதிரி இருக்கும்.. பார்த்துட்டே வா.."
"கீழ பாருங்கப்பா.. எல்லாம் சின்னதா தெரியும்.. அப்புறம் மேகம் பஞ்சு மூட்ட மாதிரி சூப்பரா இருக்கும்.."
"இந்தா சாப்ட வெள்ளரிக்காயும் மிக்சரும் வாங்கி இருக்கேன்..மெதுவா சிந்தாம சாப்பிடனும் சரியா.."
"இந்த ட்ரேய இழுத்து அதுல வச்சு சாப்பிடுங்கப்பா.. இந்த பேப்பர் கிளாத்த மடில போட்டுக்கங்க.. "
"இர்ரா.. தவ்வாத.. எல்லாரும் எறங்குனப்புறம் மெதுவா படில பார்த்து எறங்கனும்.. சரியா.."
"இருங்கப்பா.. பெல்ட் சைன் ஆஃப் பண்ணதுக்கு பின்னாடி பெல்ட்ட கலட்டிட்டு மெதுவா இறங்கனும்.."
"நம்ம ஊரு வந்துருச்சுடா.. எப்படி பஸ் ஸ்பீடா வந்துச்சா.."
"வந்தாச்சுப்பா.."
டிஸ்கி.. சிறுவயதில் அப்பா விரல் பிடித்து பழகி கொடுத்த அடிப்படைகள் தான் நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றன...எத்தனை உயரம் சென்றாலும் தளத்தை மறக்காதீர்கள்.. இறங்கிய பின் தளம்தான் தேவை.. இறக்கைகள் அல்ல..
..
Labels: உறவுகள்
குறுந்தொகை... வெளிநாட்டு வேலை..
இன்று நம்மில் குறிப்பிடத்தகுந்த சதவீதத்தினர், தங்கள் குடும்ப நலனுக்காகவும், இதுவரை மிடில்கிளாஸாக இருக்கும் தங்கள் குடும்ப அங்கீகாரத்தை உயர்தர நிலைக்கு மேம்படுத்தும் பொருட்டும் தம் மனைவி மக்களை பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்..
இவர்கள் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னர் வேண்டுமானால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களையும்,ஆசைகளையும் மனதில் கொண்டிருக்கலாம்.. தனியாக ஜாலியாக இருக்கலாம், நினைத்தை செய்யலாம் போன்ற எண்ணங்களைச் சொல்கிறேன்..
ஆனால் விமான நிலையத்தில்,இடுப்பில் குழந்தையுடன், கண்ணீரின் ஊடே மனைவி அசைத்த கை விரலகளின் நீளம் எவ்வளவு தூரதேசமானாலும் அதுவரை நீண்டு நினைவுகளை வருடிக் கொண்டே இருக்கும்..
குழந்தைகளின் வளர்ச்சியையும்,குறும்புகளையும் குறுந்தகட்டில் பார்த்து ஆனந்தகண்ணீர் விடுவதை விட ஆற்றாமை கண்ணீர்தான் அதிகமாக சுரக்கும்..
இந்த பிரிவின் துயரத்தை விட வீட்டில் கணவனின் வருகைக்காக காத்திருக்கும் மனைவியின் துயரம் வார்த்தைகளால் வடிக்கவல்லா கொடுமையானது...
இந்த சூழல் சங்க காலத்தில் இருந்தே இருக்கிறது.. வெய்யில் காலத்தில் பொருள் தேடச் செல்லும் கணவன் வசந்த காலத்தில் வந்துவிடுவது வழக்கம்..ஒரு மனைவி மனதுக்குள் நினைப்பது போன்ற இந்த பாடலைப் பாருங்கள்...
விளக்கம்..
இளம் காலை வேலையில் பால் கொடுத்துவிட்டு நெல்லை(காசுக்கு பதிலாக நெல் பண்டமாற்றம்) வாங்கிச்செல்லும் பால்காரனின் தலையில் உதிர்ந்த முல்லைப்பூக்கள் தென்படுகின்றன்.. வசந்த காலம் வந்துவிட்டதற்கான அறிகுறி தென்படத்துவங்கி விட்டது.. ஆனால் வந்து விடுவேன் என்று சொன்ன கணவைன் மட்டும் இன்னும் வரவில்லையே...
பாடல்..
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே
பாடலாசிரியர் பெயர் நினைவில் இல்லை..
..
Labels: குறுந்தொகை
மாடர்ன் பெண்கள்
"தீபா.. ஏன் டல்லா இருக்க.."
"நாட் ஃபீலிங் வெல்.. அதான்.."
"நாட் ஃபீலிங் வெல்லா இல்ல ஃபீலிங்ஸ் ஆர் நாட் வெல்லா??"
இந்த திடுக் கேள்வியில் நிமிர்ந்த தீபா பின் சுதாரித்து "ச்சே சே.. லைட்டா தல வலி.. நத்திங் மோர் தன் தட்.. வேற என்ன விசயம் முகுந்த்.."
"நெஜமாவே வேற விசயம் இல்லயா தீபா.. நான் உங்கிட்ட 2 நாளைக்கு முன்னால கேட்டதுக்கு பதில் இன்னும் வரல.."
"முகுந்த் ப்ளீஸ்.. டோன்ட் ஃபோர்ஸ் மீ.. "
"ஓகே.. ஓகே.. ரிலாக்ஸ்..
என்ற முகுந்த் ஆரம்ப கால அஜித் போல இருந்தான்.. அணியும் உடையில் அதிக கவனம் செலுத்துபவன் என்பதை அம்புக்குறி போட்ட ஆரோ சட்டை சொல்லியது.
அவன் முதுகை பார்த்துக்கொண்டிருக்கும் தீபா மட்டும் என்ன சளைத்தவளா என்பது அவளின் லோ வெஸ்ட் ஜீன்ஸில் தெரிந்தது.. அரக்கு கலர் டாப்ஸில் லேசாக மாதவியின் சாயலில் இருந்தாள்.. காதலின் தீபம் ஒன்று என்று ரஜினி பைக்குள் கையை விட்டு முடியை சிலுப்புவாரே அந்த மாதவிதான்.
இருவரும் ஒருவருடமாக அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.. கம்ப்யூட்டர் வல்லுநர்கள்..பிறகு வேறு என்ன செய்வார்கள்..? வார இறுதியில் ஏதாவது ஒரு சினிமா.. பாப்கார்ன்.. என்று கலகலப்பான குழுவில் ராஜியும், வேதமூர்த்தியும், கல்பனாவும் அடக்கம்.
ரோம் பற்றி எரியும் பொழுது ஃபிடில் வாசித்தானாமே நீரோ என்ற மன்னன் அவனெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்..அந்த அளவிற்கு இவர்கள் வாழ்வை எளிதாக எடுத்துக்கொண்டவர்கள்..
"என்னப்பா ராஜி கல்யாணப்பேச்சு எடுத்துட்டாங்க போல உங்க வீட்ல.."
"Yaa, கல்பனா.. இந்த week end ஒரு பையன் பார்க்க வரானாம்.. lets see.. எப்படி இருக்கான்னு.."
"நம்ம சென்னையா இல்ல வெளிலயா?"
"who knows? and who cares??"
"என்ன ராஜி அப்போ உன்ன இனி சைட் அடிக்க முடியாதா??"
"ஹே வேதா.. டோன்ட் பி ஸில்லி.."
"ஸாரிப்பா.."
"No No டேமிட்!.. சைட் அடிக்கிறத நிறுத்தாதனு சொன்னேன்டா இடியட்.."
"நான் கூட திருந்திட்டியோனு பார்த்தேன்.."
இந்த ரீதியில் தான் அவர்களின் தினப்படி உரையாடல்.. மற்றபடி தற்போதைய சூழ்நிலையால் ஆற்காடு வீராச்சாமி தான் மின்சாரத்துறை அமைச்சர் என்பது தெரியும்..அதற்கு மேல் ஆர்வம் காட்டுவதில்லை.. தேவையும் இல்லை..
இரண்டு நாட்களுக்கு முன்னர் முகுந்த் தன் காதலை தீபாவிடம் சொன்னவுடன் குழப்பமடைந்த தீபா முகுந்த்திடம் பேசுவதை தவிர்த்தாள்..
"தீபா.. என்னாச்சுயா? வாட்ஸ் ராங் வித் முகுந்த்? உனக்கு ஏத்த ஆள்தானே.. வாட் இஸ் மேக்கிங் யூ டு திங் ஆன் ஹிம்.."
"இல்ல கல்பனா.. ஹி இஸ் குட்.. பட்.."
"பட் .. வாட்??"
"இப்பவே அவங்க அம்மா, தங்கச்சி பத்தி குறை சொல்றான்.. ரொம்ப செலவு செய்றாங்கனு பேசறான்."
"ஸோ வாட் .. வாட் இஸ் இட் டு யூ.. உனக்கு நல்லது தானே.."
"நோ கல்பனா.. உனக்கு புரியாது.." என்று எழுந்தவளின் அலைபேசி வைப்ரட்டரின் உத்தரவினால் கிர்ர்ர்ர்ரடித்தது.. அம்மா..
"சொல்லும்மா.. என்னது இன்னியோட ஒருவருஷமாச்சா.. கொண்டாடச்சொல்றியா.. அம்போனு விட்டுட்டு போனதுல இருந்து அவன அண்ணனா நான் பார்க்குறதில்லம்மா.. லீவிட்.. வரும்போது காய் வாங்கிட்டு வந்துர்றேன்.."
மழை தூறத்தொடங்கியது...
மனதிற்குள் எப்போதோ படித்த நர்சிம்மின் கவிதை வரிகள் ஓடியது..
ஜீன்ஸ்,லிப்ஸ்டிக்கில்
மாடர்னாய் பெண்கள்..
வலியும் ரணமும் மட்டும்
முள் கிழித்த
உள்மன புண்கள்!
Labels: புனைவு
லக்கியால் மலர்ந்த நினைவுகள்..
லக்கிலுக் தனது இந்த மலரும் நினைவுகள் பதிவின் தொடர் ஓட்டத்தில் என்னை அழைத்ததற்கு நன்றிகள்.. அனேகமாக நான் தான் அந்த லிஸ்ட்டில் கடைசியாக எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்..
நினைவுகளை மலரவிட்டதற்கு நன்றி லக்கி..
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சிறுவயதில் சினிமாவிற்கு அம்மாவுடன் போவதே இடைவேளையில் வாங்கித்தரும் கோன் ஐஸை சாப்பிடத்தான் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.. ஓரளவு நினைவு தெரிந்து பார்த்த படம்..சத்யா.. படம் பார்த்துவிட்டு தியேட்டர் படிகளை தவ்வி தாண்டி, கையில் இருந்த காப்பை ஏத்திவிட்டுக்கொண்டே சென்ற கமல் ரசிகர்கள் இன்னும் நினைவில் இருக்கிறார்கள்
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
பொய் சொல்லப்போறோம்.. நல்ல பொழுது போக்கு அம்சம் கொண்ட படம்.. என்றாலும் ஹிந்தியில் பார்த்து தொலைத்துவிட்டதால் அனுபம் கெர் நடிப்பும் ராஜேஷின் டப்பிங் குரலும் கவனச்சிதறலை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.. மெளலி கலக்கல்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?புதுப்பேட்டை.. செல்வ ராகவனின் மேக்கிங் உத்திக்கு ஒரு சிறந்த உதாரணம்.. சாதாரண ஒல்லிபிச்சான் தனுஷை அந்த பாத்திரத்தில் நம்மை பார்க்கவைப்பதற்கு ஒரு நேர்த்தியான இயக்கம் வேண்டும். அதிலும் எல்லோரும் அடித்தவுடன் சிங்கத்தின் கர்ஜனை சத்தத்தின் பின்னயில் தனுஷின் முகத்தில் கண்களை மட்டும் நாம் பார்க்கும் விதமாக எடுத்திருக்கும் காட்சி..
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சுப்ரமணியபுரம்...
எதார்த்தமான சினிமா என்பதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகச்சிறப்பாக நடித்த படம் என்பதால்.
சேது.. படம் முடிந்தும் ரொம்ப நேரம் மனதை ஏதோ செய்த படம் என்பதால்.
வாழ்வே மாயம்.. டிவியில் காலையில் இந்த படத்தை போட்டால் அன்று லீவுதான்..
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பாட்ஷா வெற்றி விழாவில் ரஜினி பேசியதை ஜெயலலிதா தவறாக கையாண்ட விதம்.. தமிழ் சினிமா-அரசியல் என்பதன் முதல் பெரிய நிகழ்வு இதுவோ??
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
அபூர்வ சகோதரர்கள்.. கமலிடம் இதன் ரகசியத்தை கேட்டு அதை அவர் அடுத்த வாரம் வெளியிடுவதாக டி வி நிகழ்ச்சியில் சொன்னவுடன் ஒரு வாரம் வாயை பிளந்து கொண்டு காத்திருந்தால் .. அவர் வழக்கம் போல் தமிழின் புராதன வார்த்தைகளின் ஊடே, ஞ, யவனம் என்று நாக்கை சுழற்றி விட்டு மேசைமேல் இரண்டு விரல்கள் நடப்பது போல் பாவனை செய்து பின் மடக்கி காட்டி சிரித்தார்..
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
மியாவ், லைட்ஸ் ஆன், மேலும் பரபர கிசு கிசு என்றால் அதில் உள்ள குறிப்புகளை கொண்டு யார் அந்த நடிகை என்பதை கண்டுபிடிக்கும் அளவிற்கு தீவிரமான வாசிப்பு இன்னமும் தொடர்கிறது..
7.தமிழ்ச்சினிமா இசை?
எம் எஸ் விஸ்வநாதனின் பாடல்கள் ஒருவேளை கண்ணதாசனின் வரிகளாலும் இருக்கலாம்.. இளையராஜாவின் இசையை கேட்காமல் தூங்குவதில்லை.. செந்தாழம் பூவில், இது ஒரு பொன்மாலை பொழுது.. ஏ பாடல் ஒன்று.. போன்ற பாடல்களை இவர்களே நினைத்தாலும் மறுபடியும் கொடுக்க முடியுமா என்பது ஐயமே..வேண்டுமானால் ரீமிக்ஸில் கெடுக்கலாம்..
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
வங்கப்படங்களை விரும்பி பார்ப்பது உண்டு.. சார்லி சாப்ளினின் அனைத்து படங்களும்(அடிக்கடி பார்ப்பதும் சார்லியே)..அவற்றைப்பற்றி எழுதும் அளவு எனக்கு யோக்கிதை இல்லை..
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சில உதவி இயக்குனர்கள் நண்பர்கள்.. அவ்வளவே.. அவர்கள் துறையப்பற்றி அவர்களிடம் பேசுவதில்லை என்பதால் தான் அவர்கள் இன்னும் நண்பர்களாக இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்..
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
கேள்விக்காக கூட இப்படி ஒரு கேள்வி வேண்டாம் என்றே நினைக்கிறேன்... சினிமா என்பது பார்ப்பவர்களுக்கும் விமர்சிப்பவர்களுக்கும் பொழுது போக்கு.. அதன் பின் எத்தனை உழைப்பாளிகள்.. எத்தனை கனவுகள்.. எத்தனை வயிறுகள்.. எத்தனை நாளைகள்..
இதைத்தவிர்த்து..
டாக்டர் ராமதாஸின் வெற்றி அறிக்கை வெளிவரும்.
ஒருவருட சுதந்திர தினமாவது நமிதா,திரிஷாக்களின் நுனிநாக்கு குழற்றல் இல்லாமல் கொண்டாடப்படும்.
புத்தகங்கள் விற்பனை ஒரு சதவீதமாவது அதிகரிக்கும்
இதுகூட நன்றாக இருக்கிறதே என்ற எண்ணம் மட்டும் ஏற்படவே ஏற்படாமல் 366 வது நாளில் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் நடைபெறும்..
இவர்கள் இதை தொடர வேண்டுமாய் வேண்டுகிறேன்..
வெண்பூ..
புதுகை அப்துல்லா..
கார்க்கி,
சுரேகா
யோசிப்பவர்
துக்ளக் மகேஸ்( தாமதமாக இணைத்ததை பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினக்கிறேன்.. உங்களின் தற்போதைய பதிவை படித்தவுடன் உங்களின் நினைவுகளின் நல்ல மலர்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் பெயர் மகேஸ்..)
Labels: பத்தி
மாறவர்மன் நான்காவது அத்தியாயம்.
மாறவர்மன் 1
மாறவர்மன் 2
மாறவர்மன் 3
இதுவரை : மருதநாட்டு இளவரசன் மாறவர்மன். நாட்டை தூரோகி தளபதி கைப்பற்றி மன்னரையும் மாறவர்மனையும் சிறைபிடிக்கிறான். தப்பிவந்த மாறவர்மன் வழியில் ஒரு பெண்ணிடம் மையல் கொள்கிறான். தன் தோழர்களின் உதவியுடன் தந்தையையும் நாட்டையும் மீட்பது குறித்து மையமண்டபத்தில் ஆலோசனை செய்கிறான். துரோகி தளபதி மாறவர்மனை பிடிக்க பெரும்முயற்சி செய்துவருகிறான்.. இந்நிலையில் ஒற்றர் தலைவன் நற்செய்தியுடன் அரண்மனைக்குள் நுழைகிறான்...
இனி :
"வாருங்கள் மதிவதணரே.. முதலில் செய்தியை கூறுங்கள்.. அது நற்செய்திதானா என்பதை நான் கூறுகிறேன்.."
"மன்னா,.. நம் அரண்மனைக்கு அருகில் ஒரு இளைஞன் ஐயப்படும்படியான தோற்றத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். அவனை விசாரிக்கும் பொழுது கவனித்ததில் அவன் கையிலும் மாறவர்மனின் கையில் இருப்பது போன்றே புலியின் சின்னம் பதித்துள்ளான் மன்னா.."
"நற்செய்திதான் மதிவதணரே.. இழுத்துவாருங்கள் அவனை.."
"கைகள் பின்னுக்கு கட்டப்பட்ட நிலையில் திமிரிய மார்புடன் ஒரு இளைஞன் அங்கு அழைத்து வரப்பட்டான்."
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த,மன்னராகிவிட்ட தளபதியின் இருபக்கமும் அமைச்சர்களும்,தளபதிகளும் அமர்ந்திருந்தனர்.. நடுவில் அந்த இளைஞன்..
"சொல், எங்கிருக்கிறான் மாறவர்மன்.. உன் பெயர் என்ன?"
"இளஞ்செழியன் எனது பெயர். மாறவர்மனைத்தேடியே இங்கு வந்தேன்"
"பொய்யுரைத்தால் பொல்லாதவனாகிவிடுவேன் இளஞ்செழியா.. எங்கிருக்கிறான் அந்த துரோகி.. சொல்.."
"ஹா ஹா ஹா.. துரோகி.. மாறவர்மன் துரோகி.. நன்றாக இருக்கிறது.. துரோகத்தின் உறைவிடம் துரோகத்தைப்பற்றி பேசுகிறது.. மாறவர்மன் துரோகி.. ஹா ஹா.."
சிம்மாசனத்தில் இருந்து எழுந்து வந்து...
"ம்ம்..உன் வார்த்தைகளைப்பார்த்தால் நீ மாறவர்மனின் வலதுகரமாக செயல்படுகிறாய் என்பது தெரிகிறது.. இன்று என் சிறுத்தைக்குட்டி கொஞ்சி விளையாட உன் தலைதான் என்று நினைக்கிறேன்.."
பேச்சினூடே இளஞ்செழியனின் இடப்பக்கம் அமர்திருந்த ஒரு முதிய அமைச்சரை கவனித்தான் தளபதிக்கு ஐயமேற்படாதவாறு..
அந்த அமைச்சர்.. விரல்களை மடக்குவதுபோல் பாவனை செய்து பின் தன் சிரத்தை தாழ்த்திக்காட்டினார்..
அந்த சங்கேத மொழியை புரிந்துகொண்டு ஆமோதிப்பவனாய் சமிக்ஞை செய்த இளஞ்செழியன்..
"மன்னா.. நம்புங்கள்.. நான் மாறவர்மனைத்தேடித்தான் வந்தேன்.. நீங்கள் செய்த துரோகத்தை கேள்விப்பட்டு அப்படி பேசிவிட்டேன்.. மன்னித்தருள வேண்டும்..மாறவர்மன் இங்கில்லை என்றால் எங்கிருப்பான் என்று என்னால் யூகிக்க முடியும்.. ஆனால் உறுதியாக கூறமுடியாது மன்னர்மன்னா.."
என்ன இளஞ்செழியா.. என் வாளின் நெருக்கத்தில் பயந்துவிட்டாயா..ஹா ஹா.. எப்படியோ.. மாறவர்மன் எங்கு இருப்பான் என்று தெரிந்தால் போதும்.. பிறகு யோசிக்கிறேன் உன்னை மன்னிப்பதா இல்லை மரணிப்பதா என்று.. யாரங்கே.."
கட்டளைக்கு காத்திருந்த ஈட்டியேந்திய இரு வீரர்கள் அருகில் வந்தார்கள்..
"மதிவாணரே.. இவனை அழைத்துச்செல்லுங்கள்.. இவன் கூறும் தகவல்படி வீரர்களை அவ்விடத்திற்கு அனுப்பி மாறவர்மனை சிறைபிடியுங்கள்.."
"உத்தரவு மன்னா.."
அதேவேளையில்...
மையமண்டபம் ...
என்ன இளவரசே.. திட்டம் குறித்த உங்கள் கருத்து..
"வேலவா.. நல்ல திட்டம்தான்.. செயலாற்றும்பொழுதுதான் மிகுந்த கவனம் தேவை.. நீண்ட நேரம் இங்கிருப்பது ஆபத்து.. வரும் பெளர்ணமி அந்தியில் இங்கே வந்துவிடுங்கள்.. "
"அப்படியே ஆகட்டும் இளவரசே.. "
அவர்கள் வெளியே வந்துகொண்டிருக்கும் பொழுது.. மையமண்டபத்தின் வாயிலில்...
தொடரும்...
Labels: மாறவர்மன்
ஒட்டு மீசை.. ஒட்டாத வார்த்தைகள்...
எப்படி நடிகர் அப்பாஸ் மீசை ஒட்டி வந்தால் நம் மனதில் ஒட்ட மறுக்கிறதோ அதுபோல சில பிரபலங்கள் சில வரிகளை உச்சரித்தால் மனதில் என்ன படிக்கும் கண்களிலேயே ஒட்டாது...
ஜாலிக்காக எழுதியது.. சக பதிவர்கள் என்ற உரிமையில் எழுதியது.. முதல் 5 பேர் இதைப்படித்தவுடன்(?) கோபித்துக்கொண்டால் பரவாயில்லை.. அதற்கு பிறகு உள்ளவர்கள்... கோபம் வேண்டாம் ப்ளீஸ்..
அதாவது...
சாருநிவேதிதா : ஜெயமோகன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் எழுதுவதால்தான் இலக்கியம் இந்த அளவு வளர்ந்திருக்கிறது.
ஜெயலலிதா : சசிகலாவின் சொல்படி கேட்டது தவறு என்பதை உணர்ந்துவிட்டேன்.
கலைஞர் : எனது குடும்ப நபர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கிவிடுவது பற்றி சிந்தித்து வருகிறேன்..
ரஜினி : தேர்தலில் நிற்க டெபாஸிட் கட்டிவிட்டேன்.
கமல் : தெளிவாக சொல்கிறேன் கேட்டுக்கோங்க..
ஜ்யோவ்ராம் சுந்தர் : தம் அடிப்பது தவறு.. நிறுத்தப்போகிறேன்.
வெண்பூ : திருமண வாழ்க்கை என்பது மிக சுதந்திரமானது..
தாமிரா..(அலை பேசியில் மனைவியிடம்) : நீ எப்பவுமே எனக்கு போன் பண்ணி எங்க இருக்குறீங்க எத்தன மணிக்கு வருவீங்கனு கேட்க மாட்டியே, இன்னக்கி என்ன புதுசா??
அப்துல்லா : நாம் ஏன் பிறர்க்கு உதவ வேண்டும்?
கோவி கண்ணன் & பரிசலார் : ஒரு 6 மணி நேரத்துக்கு பதிவு போடப்போறதில்லை..
முரளி கண்ணன் : திரைத்துறையால் தான் தமிழ்நாடு சீரழிந்துவருகிறது
புருனோ : இந்த நெட், கூகுள் ஓடை, கம்ப்யூட்டர் இதல்லாம் என்ன??
லக்கிலுக் : பளிச்சுனு க்ளீன் பண்றதுக்கு எங்க வீட்ல ப்ளீச்சிங்பவுடர் தான் யூஸ் பண்ணுவோம்..
குசும்பன் : ஐயம் ஸீரியஸ் அபெளட் இட்..
ராப் : மீ த லாஸ்ட்..
பின்னூட்டத்துல குத்துங்க எஜமான் குத்துங்க..
Labels: பத்தி
குறுந்தொகை.. காதலனின் தோள்.. அறுக்கும் வாள்...
விடிகாலை உறக்கம் என்பதே இனிமை.. அதிலும் தனக்கு பிடித்தவரின் அருகாமையின் வெதுவெதுப்பில் தூங்கிக்கொன்டிருக்கும் பொழுது மனதின் ஓரத்தில் இந்த இரவு இப்படியே நீண்டுபோகாதா.. என ஏங்கும்.. இதை...இந்த சூழலை மிக அழகாக இப்படி...
காதலனின் பரந்த தோளை அணைத்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது கூரிய வாள் கொண்டு அறுப்பது போல் எங்கள் நெருக்கத்தை பிரிக்கப்போகும் காலை நேரம் வந்து தொலைத்துவிட்டது என்பதை கோழியின் கூவலில் திடுக்கென விழித்த நெஞ்சம் உணர்த்தியது...
என்று தலைவி நினைப்பது போல் எழுதியவ்ர் நன்முல்லை..
பாடல்..
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூய நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
Labels: குறுந்தொகை
இந்திரா காந்தி, நேரு, எம்ஜியார்,கலைஞர், ஜெயலலிதா..
ஆண்டு விழா..
அதற்கு சில தினங்கள் முன்னர் தான் மயிலப்பன் சார் வந்து மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்களான எங்களை எச்சரிக்கை கொடுத்து விட்டு போனார்.. அதாவது நாங்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு போட்டியிலோ அல்லது நிகழ்ச்சியிலோ கலந்துகொள்ளவேண்டும் என்றும் தவறினால் தண்டனை கடுமையாக உண்டு என்பதுமே அந்த எச்சரிக்கை.. அவரின் தண்டனை... மைதானத்தை 12 ரவுண்டு அடிக்கச்சொல்வார்.. மைதானம் என்றால் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.. கூட்டணியில் இருந்த போது கம்யூனிஸ்டுகள் என்றால் மன்மோகன் சிங்கிற்கு எந்த அளவு பயம் வந்ததோ அந்த அளவு பெரிய மைதானம்..
எதுக்கு வம்பு என்று ஏதாவது ஈஸியான போட்டியில் பெயர் குடுப்பது என்று முடிவெடுத்தோம்..
பேச்சுப்போட்டி.. "ம்ஹூம்.. க்,ஞ்,ட் என்று மேடையில் நாக்கு தந்தி அடிக்கும் என்பதால் வேண்டாம்".. இது ரஞ்சித்
கட்டுரைப்போட்டி : "க்கும்.. நெக்ஸ்ட்.. நெக்ஸ்டு".. இது பாபு
நாடகம் : "ஏண்டா எத்தன பேர நம்ம நக்கல் செய்வோம்.. நம்மள நடமாடவிடமாட்டாங்கடா.. வேணாம்".. இது ஐயப்பன்
சிட்டிபாபு ஒரு சூப்பர் ஐடியா சொன்னான்.. "மாப்ள டம் ஷெராட்.. சினிமா பேர சைகைலயே செஞ்சுகாட்டணும்.. நடிக்கிறத வச்சு கரெட்டா சொன்னா மார்க்.. ஈஸிடா.."
மெஜாரிட்டி ஓட்டில் சிட்டிபாபுவின் ஐடியா வெற்றி பெற்று, மற்ற பிரிவு மாணவர்களுடன், மூன்று மூன்று பேராக நடைபெறும் அந்த போட்டியில்
நான்,ஐயப்பன்,சிட்டிபாபு மூவரும் எங்கள் வகுப்பு சார்பாக ஆஜர் ஆனோம்.
"மாப்ள பழைய படம்னா கைய பின்னாடி காட்டிட்டு நடிக்க ஆரம்பி சரியா" என்று ஐயப்பன் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது மயிலப்பன் ஸார் வந்து..
"என்னடா.. ரெடியா.. தலைவர்களப் பத்தி நல்லா தெரிஞ்ச பசங்க கிட்ட கொஞ்சம் பேசி தெரிஞ்சுவச்சுகிட்டீங்களா?"
"தலைவர்களா?" என்று ஐயப்பன் மூஞ்சியை பார்த்தோம்.. அவன் காலில் அடிபட்டது போல பாவ்லா காட்டி கீழே குனிந்து கொண்டான்..
அதாவது தலைவர்கள் பெயர் எழுதியிருக்கும்.. நம் செய்கையின் மூலம் எந்த தலைவர் என்று மீதம் உள்ள இருவர் அணி சரியாக கூற வேண்டும்..
லேசாக வேர்த்தது..
"விட்ரா.. பார்த்துக்குவம்.. ஏதாவது செய்யி நான் சொல்றேன்" என்றான் சிட்டிபாபு.
நல்ல வேளை நாங்கள் 4 வது அணி..
முதல் அணி..
சுகுமார் தன் எத்துப்பல்லை மேல் உதட்டைக் கொண்டு மறைக்க முயன்று முயற்சியில் தோல்வியுற்று.. நடிக்க துவங்கினான்.. மீண்டும் ஒருமுறை மயிலப்பன் ஸாரிடம் அந்த துண்டுச்சீட்டை வாங்கி பார்த்துக்கொண்டான்..
முக்கில் விரல் வைத்து, பொட்டு வைப்பது போல் பாவனை செய்தான்..
அவன் அணி : "பெண் தலைவர்.."
சரி என்பதை ஆமோதித்து அடுத்து தலை முடியை பாப் போல வெட்டி காட்டினான்
அணி மவுனமாக இருந்தது
மூக்கை நீளமாக செய்து காட்டிக்கொண்டிருக்கும் பொழுதே "இந்திரா காந்தி" என்று அவன் அணி சொல்லிவிட்டார்கள்
மயிலப்பன் ஸார் கை தட்டியவுடன் எல்லோரும் தட்டினார்கள்.
அடுத்த அணி..
துண்டுச்சீட்டை பார்த்த செந்தில் சிரித்துக்கொண்டே.. இரு விரல்கைளைக் காட்டும் பொழுதே "எம்ஜியார்" என்று கூறி விட்டார்கள்.. கரவொலி கூரையை எட்டியது..
எங்களுக்கு முன்னால் உள்ள அணி செய்வதை கவனிக்காமல் சிட்டிபாபு என்னிடம்..
"டேய் ஈஸி தாண்டா.. கலைஞர்னா அஞ்சு விரல காட்டு, சிவாஜினா கட்டபொம்மன் மாதிரி மீசையைக்காட்டு.. நேருனா ரோஜாவ சட்டைல சொருகிக்கிற மாதிரி காட்டு. ஜெயலலிதான இரட்ட எலய காட்டி பொட்டு வக்கிறமாதிரி.ஓகேவா. ஈஸிடா மாப்ள.."
அதற்குள் கைத்தட்டல் வந்தது..
எங்கள் அணி சார்பாக நான் எழுந்து நடக்கும்பொழுது.. கலைஞர் இல்லேன்னா
நேரு வந்தா போதும் என்று மனதுக்குள் மருகிக்கொண்டே மயிலப்பன் ஸாரிடம் இருந்த துண்டுச்சீட்டை வாங்கினேன்..அதில் இருந்த பெயர்...
கான் அப்துல் கஃபார் கான்..
அதன் பிறகு நான் எந்த போட்டியிலும் கலந்துகொள்வதில்லை..
Labels: புனைவு
சென்னை பதிவர் சந்திப்பு:என்ன பேசினோம்..??.
மாலை 6:20.. குழுமியிருந்த பதிவர்களிடம் இருந்தும் லேசான சலசலப்பு.. "ஏ.. ஞாநி மாதிரி இருக்கு.. அட ஆமா அவர்தான்" என்ற முடிவுக்கு வரும்பொழுதே அவரும் பதிவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்து அமர்ந்து கொண்டார்..
எதிர்பாராத இந்த வரவால் சற்று அமைதி.. சில நொடிகளுக்குப்பின்..
நர்சிம்: சார்.. நீங்கள் மூத்த பத்திரிகையாளர் என்பதால் இந்த அமைதி.. சம் ஒன் ஹேஸ் டு பிரேக் தி ஐஸ்.. அதனால் இந்த கேள்வியை கேட்கிறேன்.. பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களை எப்பொழுதும் நீங்கள் ஏன் வேறு கோணத்தில் எழுதுகி..
ஞாநி(இடைமறித்து): இதைப்பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம்.. இப்பொழுது இந்த விவாதம் வேண்டாமே.. நான் ஒரு அப்சர்வராகவே வந்திருக்கிறேன்..
நர்சிம் : சரி ஸார்.. ஒரு அப்சர்வராக இப்பொழுது வலையுலகம் எப்படி, எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது ஸார்?
ஞாநி : முதலில் வலை, மற்ற ஊடகம் எல்லாம் ஒன்றுதான்.. பிரித்துப்பார்க்காதீர்கள்.. பொருளாதார, வியாபார வித்தியாசங்களையும் தவிர்த்து பார்த்தால் வித்தியாசங்கள் இருப்பதாக தெரியவில்லை..
பாலபாரதி : 152 நாடுகளில், 151 நாடுகள் விதிக்காத தடையை இந்தியா மீது மட்டும் ஏன் விதிக்க வேண்டும்.. நாம் மட்டும் அடிப்படை உரிமைகளை இழந்த சும்பர்களா?
இந்த கேள்வியை புரிந்து கொண்ட மருத்துவர் புருனோ..
மருத்துவர் புருனோ : அப்படி ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்f? சிகரெட் புகையால் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?
பாலபாரதி : ஏன் வாகனப்புகையினாலும் தான் கெடுதி..
புருனோ : ஆம்.. அட்லீஸ்ட் ஏதாவது ஒன்றை தவிர்க்கலாமே...
பாலபாரதி : அதற்காக தனிமனித சுதந்திரத்தில் ஏன் தலையிட வேண்டும்.. அனைவரையும் மாஸ்க் அணியச்சொல்லுங்களேன்..
ஜ்யோவ்ராம் சுந்தர் : சிகரெட்டை ஏன் தயாரிக்க அனுமதி கொடுக்குறீங்க..?
புருனோ : ஸார்.. காண்டம் கூடத்தான் கடையில கிடைக்குது.. ஆனால் அதை எங்கு பயன் படுத்த வேண்டுமோ அங்கே தான் பயன்படுத்த வேண்டும்..
(ஞாநி அழைப்பு வந்த காரணத்தை சுட்டி விடைபெறுகிறார்)
ரோசா வசந்த் : எங்காவது ஒரு புள்ளி விவரம் இருக்கிறதா? புகைபிடித்ததால் ஒரு புகைபிடிக்காதவர் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று? அப்படியே இருந்தாலும் அது லட்சத்தில் ஒருவர் என்ற ரீதியில் தான் இருக்கும்..
புருனோ : ஸார்.. ஒரு உயிரை காப்பற்ற முடிந்தாலும் இது நல்ல சட்டமே..
ஜ்யோவ்ராம் சுந்தர் : விமான நிலையங்களில் ஸ்மோக்கிங் ஏரியா கொடுக்கிறீர்கள்.. பஸ் நிலையங்களில் ஏன் கூடாது?
பால பாரதி : நடுத்தர மக்களுக்கு ஒரு நியாயம்.. பணக்கார வர்கத்திற்கு ஒரு நியாயமா?.. கடையில் சிகரெட் பிடிக்க கூடாதாம்.. ஆனால் ரோட்டில் பிடிக்கலாம்.. எது பொது இடம் என்பதில் தெளிவான வரையரையே இல்லை..
ஜ்யோவ்ராம் சுந்தர் : பொதுமக்களை குற்றவாளிகளாக்கவே இந்த சட்டம்..
புருனோ : இல்லை.. புகை பிடிக்கும்..
ஜ்யோவ்ராம் : ஓகே.. புகைபிடிக்கும் பொது மக்களை..
புருனோ : இல்லை இல்லை.. பொது இடத்தில் புகைபிடிக்கும் மக்களை குற்றவாளியாக்கும் சட்டம்..
நர்சிம் : விவாதத்துக்கு விளம்பர இடைவெளி குடுங்கப்பா..
புகைபிடிப்பவர்கள் எழுந்து அருகில் நின்றிருந்த போலீஸ்காரரிடம் தீப்பெட்டி வாங்கிக்கொண்டு சற்றுத்தள்ளிப்போய் புகைவிட்டுக்கொண்டிருந்தார்கள்...
திரைப்பட புள்ளியியல் புகழ் முரளிகண்ணன் தொடர்ந்தார்..
முரளிகண்ணன்: ஆரம்ப காலத்தில் பதிவெழுதுவதால் ஏகப்பட்ட பிரச்சனைகள்.. ஊருக்கெல்லாம் போன் செய்து சொல்லிவிட்டார்கள்.. அப்பா கிட்ட சொன்னாலும் பரவாயில்லை.. மாமனார் வரைக்கும் சொல்லிட்டாங்க..அதனால் தான் அரசியல் இல்லாமல் திரைத்துறைப்பற்றி எழுதுகிறேன்.. இதில் சுவாரஸ்யமான தகவல்கள் நினைவில் இருப்பதால் நல்ல வரவேற்பு இருக்கிறது..
மக்கள் சட்டம் : ஆம்.. பின்னூட்டம் அது இதுனு ஏகப்பட்ட பிரச்சனைகள்..
டோண்டு : ஆமா சார் .. என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு புதிய பதிவர்..(அக்னிப்பார்வை..) வந்து டோண்டு பக்கத்தில் நின்றார்..
உடனே டோண்டு சார் தன் டயரியில் அவர் பெயரை எழுதிக்கொண்டார்..
லக்கிலுக்.. நல்ல வேளை அவரும் வந்து இருந்தா.. ஏதோ பேசிவச்சு கூப்பிட்ட மாதிரி கொதறி இருப்பாரு மனுசன்..
அதிஷா : இந்தாங்க ஐஸ் சாப்பிடுங்க..
எல்லோருக்கும் உயர்ரக ஐஸ் வழங்கப்பட்டது..
பிறகு சிறு குழுக்களாக.. ஜெயமோகன், சாருநிவேதா.. சுபமங்களா.. விகடன் .. குமுதம்.. என்ற ரீதியில் தொடந்தது..
லக்கிலுக் : டீ சாப்பிடுகிறவங்க எல்லாம் இந்த சைடு.. மேட்டர் டீ சாப்டுறவங்கள்ளாம் எங்க கூட வாங்க..
என்ற அறிவிப்பை தொடர்ந்து.. இலக்கிய விவாத கூட்டம் ஜ்யோவ்ராம் சுந்தர்ஜி தலைமையில் லக்கிலுக் முன்னிலையில் தொடர்ந்திருக்கும் ..(எந்த பார் லக்கி?)
சாதா டீ குடிக்கும் குழுவில் நான், முரளி கண்ணன்,புருனோ,சம்பத்,மக்கள் சட்டம்.. மற்றும் சில புதிய பதிவர்கள் டீயை குடித்து விட்டு.. காந்தியை தனியாக விட்டுவிட்டு வீட்டிற்கு போய்விட்டோம்..
டிஸ்கி : யார் யார் வந்தார்கள்.. என்ன என்ன செயல்கள் நடந்தது என்பதை பற்றி பதிவுகள் வந்துவிட்டது என்பதால் என்ன பேசினோம் என்பதை பதிய முற்பட்டேன்..
விடுபட்ட டயலாக்குகள் தான் பின்னூட்டத்தில் வந்துவிடுமே..
Labels: பதிவர் வட்டம்
மாறவர்மன் மூன்றாம் அத்தியாயம்
மாறவர்மன் 1 & 2
"தாகம் தீர்ந்ததா கவிஞரே..?"
"ம்ம்.. தாகம் தீர்ந்தது.. ஆனால் மோகம் முளைவிட்டதடி பெண்ணே.. நான் சற்று அவசர காரியமாக மைய மண்டபம் போய்க்கொண்டிருக்கிறேன்.."
அதுவரை மலர்ந்திருந்த அவள் முகம் "மைய மண்டபம்" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் இருண்டது..
"மைய மண்டபமா? அங்கு ஏன் செல்கிறீர்கள்? பாழடைந்த அந்த கோட்டைக்குள் உங்களுக்கு என்ன வேலை? நீங்கள் யார்?"
"நான் உன்னை மறுபடியும் சந்திக்கவேண்டும்.. அப்பொழுது அத்தனை வினாக்களுக்கும் விடையளிக்கிறேன்.இப்பொழுது விடைபெறுகிறேன்.."
அவள் கண்களில் ஏக்கமும் ஏமாற்றத்தையும் ஒரு கணம் தீர்க்கமாய் பார்த்த மாறவர்மன் "மீண்டும் வருகின்ற பெளர்ணமி அன்று காலை இங்கே உனக்காக வருவேன் காத்திரு பெண்ணே" என்றான்.
அவள் இரண்டடி வைப்பதற்குள் அவன் புரவி புயலாய் பறந்து மறைந்தது.
மைய மண்டபம்.. முட்புதர்களின் நடுவே இருந்தது. காய்ந்த கருவேல மரங்களும் மஞ்ச நெத்தி மரங்களின் அடர்த்தியும் அந்த பகல் பொழுதையும் மீறி இருள் கவ்வச் செய்திருந்தது. குதிரையை இருத்திவிட்டு சற்று வளைந்து இருந்த மரக்கிளையை பலமாக அசைத்தான். அந்த சமிக்ஞைக்காக காத்திருந்தது போலவே புதரினின்று மூன்று உருவம் வெளியே வந்தன. நல்ல வாளிப்பான அந்த மூன்று இளைஞர்களும் மாறவர்மனின் உற்ற தோழர்கள்.
"வாருங்கள் இளவரசே.. ஏன் தாமதம்?"
"அதை பிறகு சொல்கிறேன்.. உள்ளே சென்று ஆலோசிப்பது உத்தமம்."
"ஆம். வாருங்கள் "என்ற இமயன் தன் கால்களுக்கு கீழே வைத்திருந்த கருவேல மரக்கட்டை ஒன்றில் துணியைச்சுற்றி தீப்பந்தம் தயாரித்தான்.அதன் வெளிச்சம் இருளை அகற்றி அவர்களுக்கு வழி காட்டியது.குகை போன்ற குறுகலான பாதையின் ஊடே தீப்பந்த ஒளியில் சருகுகள் சரசரக்க அந்த எட்டு கால்களும் முன்னேறின.அவர்களின் கண்களின் வெறி தீப்பந்தத்தை விட அதிகமாய் கொழுந்து விட்டு கனன்றுகொண்டிருந்தது.
அதேவேளையில்..
அரண்மணை..
"தளபதியாரே.."
"என்ன மந்திரியாரே.. நான் இப்பொழுது மன்னன் என்பதை உங்கள் மதிக்குள் ஏற்றிக்கொள்ளுங்கள்.இன்னொருமுறை தளபதி என்று விளித்தால் தலை தப்பாது.."
"மன்னியுங்கள் மன்னா.. மாறவர்மனின் இருப்பிடம் பற்றி ஒரு தகவலும் நம் ஒற்றர்களுக்கு எட்டவில்லை.."
"இத்தனை வீரர்களிலிருந்தும் அவனைத்த தப்ப விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது தெரிகிறதா..அவனின் வீரம் நம் மொத்த திட்டத்தையும் தகர்த்துவிடும். ஒருமுறை அவனோடு வேட்டைக்கு சென்ற சமயத்தில் எங்கள் மீது பாய்ந்த வந்த காட்டு எருதை ஒரே வீச்சில் அதன் நெற்றியை பிளந்தவன்.. பயம் என்பதை சற்றும் அறியாத வீரன்.அவன் நம் கைகளுக்கு கிடைக்கும் வரை நெருப்புக் கோட்டைக்குள் அமர்ந்திருப்பது போன்றதுதான் நம் நிலை. "
"மன்னர் மன்னா.. ஒரு நற்செய்தி"... என்று கூறிக்கொண்டே ஒற்றர் தலைவன் உள்ளே நுழைந்தான்...
தொடரும்...
Labels: மாறவர்மன்
என் போன்ற ஆரம்ப நிலை பதிவர்களின் கவனத்திற்கு... சென்னை பதிவர் சந்திப்பு.. இன்று..மாலை 6 மணிக்கு...
வலைத்தளம் என்பது நல்ல எழுத்துக்களின் வழித்தடம் என்பதை உணர்ந்து இவ்வலையுலகில் வலம்வரும் பதிவர்களே.. இன்று (4- 10 -08 சனிக்கிழமை)மாலை 6 மணியளவில் சென்னை காந்தி சிலையருகே நடக்கவிருக்கும் சந்திப்பிற்கு தவறாது வருகை தாருங்கள்..
ஏனெனில்..
1. இவர் எழுத்துக்கு இப்படி பின்னூட்டம் போட்டால் தப்பாக நினைப்பாரோ?
2. அந்த பதிவர் எழுதுவதைப்பார்த்தால் பின்னூட்டம் இட தயக்கமாக இருக்கிறதே..
போன்ற தயக்கங்களோடே பதிவுகளை வாசித்து வரும் ஆரம்ப்ப நிலை பதிவர்களின் தயக்கங்கள் நீங்கவும் புதிய செய்திகளை அறிந்து கொள்ளவும் இதுபோன்ற சந்திப்புகள் துணை நிற்கும்.
மூத்த பதிவர்கள் எவ்வாறு இந்த வலையுலகில் நுழைந்தார்கள், அனுபவங்கள் என நிறைய தெரிந்து கொள்ளலாம்..
நான் தயங்கித் தயங்கி பங்குபெற்ற முதல் பதிவர் சந்திப்பில் மூத்த பதிவர்களின் வழிகாட்டலும் பழகிய விதமும் ஊக்கத்தை அளித்தது என்பது எனது அனுபவம்.
மொக்கை, நகைச்சுவை என்ற தேன் தடவி உள்ளே அரசியல் பார்வை, சமூக அக்கறை என்ற மருந்தையும் கலந்து பதிவிடும் அனைத்து முதல் தர பதிவர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள் என்பதால்...
மாலை 6 மணிக்கு .. பதிவோம் சந்திப்போம்...
மேலும் விபரங்களுக்கு...
Labels: பதிவர் வட்டம்
பள்ளியறை சுகங்கள்.
மொத்தம் எத்தனை துருவங்கள்?
சல சல என வகுப்பில் பேசிக்கொண்டிருந்தோம்.. கடைசி பெஞ்சிற்கு ஒரு பெஞ்ச் முன்னாடி தான் எங்கள் கோட்டை . பொதுவாக அதை எல்லா ஊரிலும் மாப்பிள்ளை பெஞ்ச் என்றே அழைப்பார்கள். தலை நிறைய எண்ணெய் போட்டு படிய வாரி, நெற்றியில் விபூதி, (அந்த விபூதியை எண்ணெய்த்தலையிலும் ஸ்ப்ரே போல் தெளித்து இருக்கும்)பவுடர், வாட்டர் பாட்டில், தபால் பை என பார்த்தவுடன் "படிக்கிற பையன்டா" என்று சொல்லும் கோஷ்டிகள் முதல் இரண்டு பெஞ்ச்சை ஆக்ரமித்து இருப்பார்கள். அடுத்த அடுத்த பெஞ்ச்சுகளிள் சற்று ரெண்டுகெட்டான் கோஷ்டி, அதாவது 55 மார்க் எடுப்பவர்கள்.. பின்னாள் அடிக்கப்படும் ஜோக்குகளையும் கேட்பார்கள்.. முகத்தை நல்ல பிள்ளை போல் வைத்துக்கொண்டு வாத்தியாரிடம் நல்ல பேர் வாங்கவும் ஆசைப்படுவார்கள்.. அதற்கு அடுத்து இருப்பதுதான் மாப்பிள்ளை பெஞ்ச்.. 2வருடமாக அதே வகுப்பில் இருப்பர்களுக்கு முன்னுரிமை.. அடுத்த கோட்டா ஓரளவு திடகாத்திரமான உடம்பு வாகு உள்ளவர்கள்.. வாத்தியார் இல்லாத நேரங்களில் சட்டையின் மேல் பட்டன் போடாதவர்கள் என்ற அடிப்படை தகுதிகள் கொண்டவர்கள் அமர்வதே மாப்பிள்ளை பெஞ்ச்.
திடிரென எம்ஏகே சார் ( அது ஏன் எல்லா வாத்தியார்களும் எம்ஜிஆர் மாதிரி மூன்று இனிசியல்களை வைத்துகொள்கிறார்கள்... அதிலும் அந்த எழுத்துக்களுக்கு அர்த்தம் தெரிந்த பையன் அதை அடுத்தவர்களுக்கு சொல்லும்பொழுது ஒரு கர்வம் வேறு வரும்.. ஏதோ வேதியல் ஃபார்முலாவை கண்டுபிடித்தது போல்)சற்று சத்தமான குரலில் இது கூட தெரியல.. எப்ப பார்த்தாலும் பேச்சு என்று சத்தம் போட ஆரம்பித்தார்.. என்றைக்கும் இல்லாததைவிட கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு சத்தம் போட்டவுடன், எங்கள் பேச்சின் சுவாரஸ்யத்தை குறைத்து முன்னால் அமர்ந்திருந்த சப்பை என்ற செந்திலிடம் "என்னாவம்டா அவருக்கு ? என்று கேட்டேன்.. எத்தனை துருவம்னு கேட்டார்டா என்றான்.. இதுக்கா இப்பிடி என்று நான் சத்தமாக "இரண்டு சார் "என்றேன்.. மிகுந்த கோபத்துடன் என்னைப்பார்த்து "get out"என்றார்.. அர்த்தம் புரியாமல் நார்த்போல், சவுத் போல், கரெக்ட் தானே என்று யோசித்தவாரே வெளியே நின்று கொண்டிருந்தேன்.. உனக்கு டி.சி தான் என்று இரண்டு மூன்று முறை சொன்னார்.
மதிய இடைவேளையில் முதல் பெஞ்ச் சிவக்குமார் சொன்னான்.. 'ஏண்டா ஏற்கனவே அந்தாளு " எத்தனை துருவம்னு கேட்டா ஒருத்தனுக்கும் ஒன்னும் தெரியல.. படிங்கடான்னா எப்ப பார்த்தாலும் டிவி, அரட்டை.. இதே பொண்ணுங்கள பத்தி, எந்த ட்ரெஸ், எத்தனை ஜட,சோலிக்கே பீச்சே பாட்டப்பத்தி கேட்டா, ஜாக்கட்டுக்குள்ள எத்தன இருக்குனு கேட்டா டாண் டாண்னு பதில் சொல்லுவீங்களேனு" புலம்பிக்கிட்டு இருக்குறப்ப கரெக்ட்டா நீ "ரெண்டு சார்"னு கத்துனா.. உனக்கு டி.சி தான்டி போய் பாரு.. என்றான்..
அவரிடம் போய் சார் நீங்க பேசின எதையும் கேட்கல சார்.. கேள்வி என்னனு கேட்டு பதில் சொன்னேன் சார்.. நடுவுல நீங்க பேசினது எதுவும் கேட்கல சார்னு சொன்னதும் மன்னித்து.. விட்டார்.. கன்னத்தில் ஒரு பளார்..
12ஆம் வகுப்பு, பள்ளி அறையை நினைத்தால் இதுபோன்ற சின்ன சின்ன சுகங்கள்தான்..
இதுவாது பரவாயில்லை.. அடுத்த பதிவுல சொல்றேன் அத..
Labels: புனைவு