மாறவர்மன்... அத்தியாயம் பதிமூன்று


12ம் அத்தியாயம் வரை படிக்க இங்கே சொடுக்கவும்

இதுவரை : மருத நாட்டின் மன்னர் ராஜாவீரவிக்ரம குலசேகர தொண்டைமானையும் இளவரசன் மாறவர்மனையும் அந்நாட்டின் தளபதி வீரவிக்ரமன் துரோகம் செய்து சிறைபிடித்துவிடுகிறான்.. தப்பி வந்த மாறவர்மன் தன் காதலி சொர்ணவள்ளியின் தந்தையும் வணிகருமான வேலவரின் உதவியுடன் நாட்டை மீட்க இன்னும் சில நண்பர்களுடன் திட்டம் தீட்டுகிறான்.. தளபதி மாறவர்மனை பிடிக்க முயற்சித்து வருகிறான்..தளபதி,மாறவர்மன் இருப்பிடமான வழுவூரை நோக்கிச் செல்கிறான். மன்னர் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்..


இனி..

மன்னரும் கருணாமூர்த்தியும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மின்னலென வெளியே பாய்ந்து மறைந்து கொண்டார்கள்.. திகைத்து திரும்பிய வீரர்கள் இப்பொழுதுவாயிலைநெருங்கிக்கொண்டிருந்தார்கள்..

கருணாகரமூர்த்தி தன் குறுவாளை பிடித்தவிதத்தை பார்த்த மன்னருக்கு நம்பிக்கை துளிர்விட்டது.. மன்னர் ஒரு கல்லை எடுத்து பாதளச் சுரங்கத்திற்குள் எறிந்தார்.. கல் உருண்ட சத்தம் கேட்டு இருவரில் ஒருவன் உள்ளே எட்டிப்பார்க்கவும் கருணாகரமூர்த்தி அவன் கழுத்தில் வாளை இறக்கினான்.இறந்தான்.ஆவேசம் கொண்டவனாய் அடுத்தவன் மேல் பாய்ந்த கருணாகரன் அவனது விலாவில் தன் குறுவாளை பாய்ச்சினான்.

மடிந்த இருவீரர்களையும் அந்த வாயிலினுள் இழுத்துப் போட்டபின், மன்னரை மிகவும் ஜாக்கிரதையாக கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.அகழிகையின் பக்கவாட்டில் கம்பீரமாய் நிமிர்ந்திருந்த மதில் சுவரின் அடியில் அந்த இரண்டு உருவங்கள் அடிமேல் அடிவைத்து முன்னேறின. நீண்டு தொடர்ந்த நிழல்கள் சுவரின் மேல் படிந்து தொடர்ந்தது..

வழுவூர் செல்லும் வழியில் தளபதியின் கூடாரம்:

நிமிர்ந்த வேம்பின் அருகில் மிகவும் கவனுத்துடன் வேயப்பட்ட கூடாரம்.நடுவில் மூங்கில் நடப்பட்டு,அதன் உச்சியில் இருந்து பிரிந்த கூரை வட்ட வடிவில் இறங்கி இருந்தது.ஆங்காங்கே முட்டுக்கொடுத்து,கட்டி இழுக்கப்பட்ட லாவகத்தில் ஒரு கட்டிடக் கலையின் நுணுக்கம் புலப்பட்டது. சுற்றிலும் ஈட்டி ஏந்திய வீரர்கள்.. புரவிகள் மர நிழலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தன.. அருகருகே வேயப்பட்ட வைக்கோல் படைப்புகள் அம்பாரமாய் உயர்ந்து, அந்த பிரதேசத்தின் வளமைக்கு கட்டியம் கூறியது.

இரவின் ஆரம்பத்தில் இருந்த அவ்விடத்தில் நிலவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக் கொண்டிருந்தது.

நிலவுதான் எத்தனை அழகு.. கயவர்க்கும்,கள்வர்க்கும்,காதலர்க்கும் பொதுவாய் காய்ந்து மெதுவாய் நகரும் சுந்தரச் சந்திரன்..

சந்திர வெளிச்சமும் தீப்பந்த ஒளியும் மீறி அடந்து கிடந்த இருட்டின் நடுவில் படர்ந்து இருந்த கூடாரத்திற்குள் கூடி இருந்தது வீரவிக்ரமனும் அவன் தளபதிகளும்.

தளபதி வீரவிக்ரமனும் இளஞ்செழியனும் இன்னபிற தளபதிகளும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர்..

ஒரு ஆழ்ந்த நித்திரைக்குப் பின் எழுந்த வீரவிக்ரமன் ஒரு யவ்வணமான நிலையில் அமர்ந்திருந்தபடி கேட்டான்..

"என்ன இளஞ்செழியா.. மாறவர்மனின் மரணம் நெருங்குகிறதே என்று வருத்தமாய் இருக்கிறாய் போலத் தோன்றுகிறதே..உன் வாடிய முகத்தைப் பார்த்தால்.."

"மரணம் நெருங்குவது என்னமோ சரிதான் மன்னா..ஆனால்.."

"ஆனால் ?"

"ஒன்றும் இல்லை அரசே.. பயணக்களைப்பு.. அதனால்தான்.. "

" அவனைப் பிடித்துவிட்டால் போதும்.. என் ராஜ்ஜியம் தான்.."

அதை ஆமோதிப்பதாய் ஒரு தளபதி.."இப்பொழுதே தங்கள் ராஜ்ஜியம் தானே மன்னா..இன்னும் சில தினங்களில் மாறவர்மனின் முடிவு உறுதி.."

"ஆம் அரசே.. வழுவூரை நெருங்க நெருங்க அவனின் முடிவு ஆரம்பமாகிறது"

" நன்றாகச் சொன்னீர்கள் வீரர்களே.. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. உதயத்திற்குள் புறப்பட்டாக வேண்டும்"

நிலா இப்பொழுது நடுவானையும் கடந்து மேகத்தில் மறைந்து,மிதந்து தவழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிக்கொண்டிருந்தது.. மாறவர்மனை நினைத்துக் கவலை கொண்டதனால் ஆங்காங்கே கவலை ரேகைகள் நிலவிலும் தெரிந்தன...

இரவும், வேப்ப மரமும் பேசிக்கொண்டதில் எழுந்த சப்தம் அந்த நிலவு வரை கேட்டது..

தொடரும்...

..

ஒழுகும் வானம்...


ஒழுகும் வானம்

உடைந்து ஒழுகும்
வானத்தை சிறு
பாத்திரத்தில் பிடித்து
பல்தேய்த்துத் துப்புவனிடத்தில்
பிரபஞ்சத்தின் அழகியல்குறித்த
ஆலாபனை எதற்கு?

நீட்சேவுக்கும் கோட்சேவுக்கும்
வேறுபாடறியாதவனிடத்தில்
இலக்கிய விசாரம்
என்ன வேண்டிக் கிடக்கிறது?

அதரத்தின் துடிப்பில்
காமத்தைக் காணத்தெரியாதவனுக்கு
என்ன எழவிற்கு
அறுபத்தி நான்கு?



நாவில்லா மொழி

எதிர்ப்பின் ஆக்ரோஷத்தைவிடவும்- உன்
ஆமோதிப்பின் அடர்த்தியே
எதிர்வினையின் ஏகபோகம்!

சுகமான அமைதியின்
சுருதிபேத மாற்றமே- என்
மெளனங்களின் அதிர்வு!

மரணத்தின் விளிம்பிலும்
ஒருமுறைக்கு இருமுறை
உன் குரல் உடைத்த
மெளன மொழி
மர்ம தேசத்தின்
செம்மொழி


வ(வெ)றுமை விடியல்கள்

மரம் நடுங்கள்..
மழைக்காக அல்லாமல்
போனாலும் ஒரு
விறகு வெட்டியின் நாளைய‌
விடியலுக்காவது!!

..

நாங்களும் "பெருவெளி"..ன்னுலாம் எழுதுவம்ம்ல..

"நீர்"த்துப்போனவைகள்!

பெருவெளியின் அடைமழையோ
ஒரு இலையின் சிறு துளியோ
கரைவழியும் பெருங்கடலோ
திரைபொழியும் புல்பனியோ
நுரைபொங்கும் கள்ளோ
தரை பொசுக்கும்
திராவகமோ...
அவனன்றி எவனோடோ
முடிந்து போன முதலிரவின்
பின்பொழுதில் இவள்
சிந்திய கண்ணீர்த்துளி!

________________________

ஏக்கம்..

காலை மதிய‌
மாலை உணவுகளுக்கான‌
மருத்துவக் கட்டளைகள்
மருந்து பொட்டலங்கள்
சுமந்து பச்சைவிளக்கிற்காய்
காத்திருக்கும் காரின் வெளியே
வேர்த்த தேகத்தோடு
வண்டி இழுத்தவனை
பார்த்த கண்கள்!_
_____________________
சம்பளப் பிழை(ப்பு)
(1)
மழை இரவு
மதிய வெயில்
மாலை வானம்
காலை உதயம்
அத்தனையும் அடுத்தடுத்து
அலுவலக யூ டியூபில்‍ ...
வெளியே
இரவா பகலா?
___________________________________
(2)
ஊர்குளத்தில் எறிந்த‌ தவளைக்கல்
தேரோட்டத்தில் எட்டிபார்த்த தாவணி
ரோட்டோர டீக்கடை பாக்கி
வீட்டோர புளியமர நிழல்
மாட்டுத் தொழுவ வாசம்
சாணம் எறிந்த சுவரொட்டி
நாணம் மறவா மடந்தை
பொதி சுமந்த கழுதை...
பஞ்சுமெத்தையில் மனைவி
உறங்க மறுக்கும் கண்கள்..
அமெரிக்கஇரவு!
___________________________
எந்தை..

தொப்பை குறைக்க‌
வேர்வை சுரக்க‌
ஆறு சுற்று நடை!
பிசுபிசுத்த தேகம் காய‌
பெஞ்சில் அமர்ந்தால்
அருகேஅழுகை
முதியவர்-அன்பாய்
பேசிஆறுதல் சொல்லி
அனுப்பிவைத்த திருப்தியில்
அருகம்புல் சாறு
அருந்தும் உதடுகளில்
முணுமுணுப்பு..
என் தந்தை
எப் பூங்காவில்
எவனிடம் அழுகிறாரோ??!
_________________

"ஆசிரிய"ப்பா இலக்கணம்

விஜயதசமி அன்று
விரல்பிடித்து செ(சொ)ல்பவனுக்கு
தெரியாது..பின்னாளில்
எந்த விரல்
பச்சைமையொப்பம் இடும்
எந்த விரல்
பரோல் கையொப்பம் இடும் என்று..!


..

100வது பதிவு... எடுக்கவோ..கோர்க்கவோ.. நட்"பூ"

"நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தானா.. இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா..."

என்று போகிற போக்கில் கண்ணதாசன் சொன்னதின் அர்த்தம் எவ்வளவு ஆழமானது. தாய், தந்தை,சகோதர,சகோதரி சொந்தங்கள் நம்மையும் மீறி அமையப்பெற்றவை..

ஆனால்.. நண்பர்கள்.. நாமாக தேர்வு செய்யும் ஒரு பந்தம்.. நட்பைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் ஏராளமான எழுத்துக்கள் பதிந்து கிடக்கின்றன..

முதல் வில்லன் கதாபாத்திரங்களாக புனைந்து புகட்டப்பட்ட இருவரில் ஒருவர் துரியோதனன்.. அவனைப் பற்றி பேச்சு எழுந்தால், துரெளப‌தியின் துயில் உறித்ததை விட, .. நண்பன் கர்ணனுக்காக கேட்ட "எடுக்கவோ கோர்க்கவோ தான்" அதிகம் பேசப்பட்டவையாக இருக்கிறது.. காரணம் நட்பின் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை.

எத்தனை நண்பர்கள் வாழ்வில் வந்து போகிறார்கள்.. எத்தனை வித குணங்கள்.. தியாகங்கள்.. சில துரோகங்கள்.. மன்னிப்புகள்..

பம்பரத்தின் ஆக்கர் குத்திலும் கோலிக்குண்டு விளையாட்டின் முட்டி தேக்கலிலும்,கரண்ட் போனால் ஓ என்று கத்துவதிலும், திளைத்துத் திகட்டிய தெரு நண்பர்கள்..

கட் அடித்து சினிமா பார்த்து, பிட் அடித்து,அடிக்க உதவி,,இரவு குரூப் ஸ்டடியில் படித்ததை பகிர்ந்து,தேர்வு வரை உடனிருந்த‌ பள்ளிக் கூட நண்பர்கள்..

ஹீரோயிஸம்,ரவுடியிஸம்,காமெடி என்று அத்துனை வகை கூத்துகளும் அரங்கேறும் கல்லூரி நட்புகள்.. சிரித்து சிரித்து செத்துவிடுவோமோ என்று திரிந்த கல்லூரி நண்பர்களின் விடலைத்தனத்தின் ஒவ்வொரு நிமிடங்களும் சொர்கத்தின் திறப்பு விழாக்களாக கொண்டாடப் பட்ட நட்பு வட்டங்கள்..உலகமே இனி இவர்களுடன் தான் என்று எண்ணி இருந்த கல்லூரி நண்பர்கள்..

கால ஓட்டம் என்ற நாசாமாய்ப் போன வார்த்தையினால் இந்த அத்தனை நட்புகளும் தொடர்பற்று.. சிலர் தொலைத் தொடர்பாக.. இப்படி மாறிப் போகும்..

ஆனால் அடுத்த கட்டமாக..

அலுவலகத்தில் ஏற்படும் நட்பு வட்டம்.. பலரிடம் அந்நியமாகவும் சிலரிடம் மட்டும் சற்று அந்யோன்யமாகவும் பழக வைக்கும் பொறுப்பான‌ நட்பு..

துறை சார்ந்த,தொழில் சார்ந்த,இப்பொழுது பதிவுலகம் சார்ந்த.. என..மின்னல் பொழுதில் நட்பாகி..வாழ்நாள் முழுதும் மழையென தினம் பொழியும் நட்புகள்..
இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் நட்பின் நீளம் தொடந்து கொண்டுதான் இருக்கிறது..இருக்கும்..

நீங்கள் சிறு வயதில் நீச்சல் அடிக்க தெரிந்தவராக இருந்து, ஆனால் இப்பொழுது அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ உள்ள இரண்டுக்கு இரண்டடி பாத்ரூமில் பம்மி குளித்துக் கொண்டிருப்பராக மாறி எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும்.. குளத்தில் திடீரென குதிக்க நேர்ந்தால் எந்த பயிற்சியும் தேவைப் படாமல் நீங்கள் நீந்த முடியும்..மறக்கவே மறக்காத கலை நீச்சல் கலை.

அது போலத்தான் மேலே சொன்ன அத்தனை நட்பும்.. ஒரே ஒரு மாலைப் பொழுதின் சந்திப்பு, பல வருட பிரிவையும் மொத்தமாய் நிறைத்து விடும்.. கண்கள் வலிக்கச் சிரிக்கச் செய்யும்..உலகின் மொத்த வார்த்தைகளும் தீர்ந்துவிடும் அளவு பேச வைத்து விடும்..

நட்பின் புனிதம், துரோகம் போன்ற வார்த்தைகளையும் மீறி தனிமனித வடிகாலாக இருப்பது நட்பும் நண்பர்களும் தான்.

100 பதிவுகள் எழுதும் அளவிற்கு என் எழுத்திற்கு உரமிட்ட பதிவுலக நண்பர்களுக்கும்,

மதுரை,திருப்பறங்குன்ற சரவணப் பொய்கை மயில் மண்டபத்தில் இருந்து கரைக்கு முதலில் யார் நீந்துவது என்ற போட்டியில் என்னை முந்திச் சென்று.. தாமரைத்தண்டில் சிக்கி.. என் கண் முன், என்னை மரணத்தில் முந்திச் சென்ற என் நண்பன் கருணாகரனுக்கு ..

சமர்ப்பணம் என்ன‌ வேண்டி கிடக்கிறது.. இதை தட்டச்சு செய்யும் பொழுது உதிரும் இந்த ரெண்டு சொட்டு கண்ணீர் தான் அதை செய்து விட்டதே!


..

மாவாப் பொரி(ழி)யும் பேனா..கம்பர்

நேற்று தம்பி ஊரில் இருந்து வந்திருந்தான்.. காலையில் காபியை குடித்துக் கொண்டே ஊர் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்..திடீரென ஞாபகம் வந்தவனாய்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நேத்து வீட்ட சுத்தம் பண்ணும் போது, நீ பல வருஷமா தேடிக்கிட்டு இருந்த ஒரு மேட்டர் கிடைச்சுச்சு.. அத நீ பார்த்தேன்னா அவ்வளவுதான்..என்று சொல்லிக் கொண்டே அந்த பொருளை எடுத்தான்..

பிரவுன் கலராக இருந்திருக்க வேண்டிய மரக்கட்டை பேனா..பழுப்பு ஏறி கலர் மங்கி இருந்தது.. குண்டு,மை பேனா.. பத்திரம் எழுதுபவர்கள் வைத்திருப்பார்களே.. உருட்டி உருட்டி எழுதுவார்களே.. அந்த பேனா..
எழுதினால் "மாவாப் பொரி(ழி)யும்" பேனா..

வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி.. அதில் அந்த பேனாவை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து, நிப்பு, நாக்கட்டை என தனித்தனியாக அந்த தண்ணீரில் ஊறப் போட்டு.. அரைமணிநேரம் கழித்து.. நீரை மாற்றி இன்னும் ஒரு அரை மணிநேரம் ஊறவைத்து.. காய்ந்த துணியில் பளிச்சென துடைத்து.. இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே..அனிச்சை செயலாக மூடியை விசில் போல ஊதுவதும் நடக்கும்..

இப்படி போற்றிப் பாதுகாத்த பேனா அது.. ஏனெனில் தமிழ் மனப்பாடச் செய்யுள் போட்டியில்(எனது "சு"வாசிப்பு" பதிவில் கூட குறிப்பிட்டிருந்தேன்)முதன்முதலாய் (முதலும் கடைசியுமாய்:மனசாட்சி) வாங்கிய பரிசுப் பேனா அது.. எட்டாம் வகுப்பு ஆ பிரிவில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது..

இப்படிப் பட்ட வரலாற்று பெருமை வாய்ந்த அந்த பேனாவை ஏதோ ஒரு தருணத்தில்(காதலிக்க ஆரம்பித்தவுடன் மற்ற பொருள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ..?) தொலைத்து விட்டேன்.. இன்று வரை தேடித் தீர்ந்து போனேன்..

எப்படி.."ச்சே சுஜாதா அநியாயமா செத்துப்போய்ட்டாரே" என்று அடிக்கடி கூறுகிறேனோ.. அதுபோலத்தான் அந்த பேனா தொலைந்ததையும் சொல்லி வந்தேன்..

அந்த பேனாவைத்தான் கொடுத்தான்..

அதை வாங்கிய நான் எதுவும் சொல்லவில்லை.. அமைதியாக கையில் வைத்திருந்தேன்..

எழுந்து அவனை கட்டிப் பிடித்து தேங்ஸ் சொல்லுவேன், ஆர்ப்பரிப்பேன்.. என்று என்ன என்னமோ எதிர் பார்த்திருந்த அவன்.. என்னுடைய இந்த ரியாக்ஸனை பார்த்து.. என் மனைவியிடம்

"ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா" என்று சமயலறையில் கேட்டுக் கொண்டிருந்தான்..
பாவம் அவன் கம்பரை படித்ததில்லை..

கணையாழியை அனுமனிடம் இருந்து வாங்கிய சீதை ஏதேதோ பேச முயன்று ..உதடு குவித்து,விம்மி.. ஆனால் ஏதும் பேசாமல் அதை தன் மார்பில் வைத்துக் கொண்டாளாம்..

அந்த பாடல்..

மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள்

(மோதிரத்தை முகர்ந்தாள்.. மார்பில் வைத்து அணைத்துக் கொண்டாள்..கண்ணில் வந்த நீர் திரையை நீக்கி அதை நெடுநேரம் பார்த்தாள்.. ஏதும் பேசவில்லை.. ஆனால் உதடுகள் விம்மி எச்சில் விழுங்கி நின்றாள்..)

மீண்டும்.. கம்பர்.. வாழ்க..!

..

யாருக்கு..ஏன்..??

TMT Pvt Ltd.. சென்னையின் மிகப் பிரபலமான நிறுவனம்.. பிரபலத்தினால் அந்த பிரம்மாண்ட கட்டிடமா.. அல்லது பிரம்மாண்டமான அந்த கட்டிடத்தால் பிரபலமான நிறுவனமா என்ற சந்தேகம் எல்லாம் படாமல்.. வரவேற்பரறைக்கு வந்தீர்கள் என்றால்.. நீங்கள் ஆணாக இருந்தால் இன்றைய தூக்கம் போச்சு.. அப்படிப் பட்ட வரவேற்பு மடந்தை.."மானாட மயிலாட" நிகழ்ச்சியில் ஆடினால் முதல் பரிசு வாங்கிவிடுவாள் என்பதற்கான அறிகுறிகள் அவள் முக வெட்டில் தெரிந்தது..அதற்கு கீழ்..ச்சே..எவன்டா இந்த டேபிள‌ இவ்வளவு உயரமா பண்ணது..??

விளையாட்டுத் தனத்தை மூட்டைகட்டி, அதோ தெரிகிறதே.. மிக நவீனமான குப்பைத் தொட்டி..அதை அப்படி அழைப்பது அதற்கு தெரிந்தால் நம்மை சும்மா விடாது என்பது போன்ற தூய்மையான தொட்டி..அதில் அந்த மூட்டையை போட்டு விட்டு.. அங்கு நடப்பதை பாருங்கள்..

இன்று ஒரு முக்கியமான வேலைக்கான இன்டர்வியூ நடக்கிறது..அதனால்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அறையில் இவ்வளவு பேர்..

குளிரூட்டப்பட்ட அறையில் மல்லிகை ஸ்ப்ரே வேறு அடித்திருக்கிறார்கள்.. "கும்" என்ற வாசமும் ஏசியின் கின்ன்னும், அது சத்தியமாய் சென்னை என்று நம்ப முடியாத சூழலை ஏற்படுத்தி இருந்தது..

மொத்தம் 8 பேர்.. மூன்று பெண்கள்.. 5 ஆண்கள்.. மேனேஜர் போஸ்டிங் என்பதால் 28 வயதுக்கு மேலானவர்கள் தான் வந்திருந்தார்கள்..

இன்டர்வியூக்களுக்காகவே என்று சிலர் சில சட்டைகளை பதுக்கி வைத்திருந்து அந்த நாளில் அதை போட்டுக் கொள்வார்கள்.. அந்த 5 ல் 2 பேர் அப்படி நீலக்கலரிலும் வெள்ளைக்கலரிலும் வந்திருந்தார்கள்.. முக்கியமாய் கையிலும் காலரிலும் வேறு கலர்.

மீதம் இருந்த இருவரும் நேர்த்தியான ட்ரெஸ்.. அந்த பெண்கள் ?.. எப்படி இருந்தாலும் நன்றாகத்தானே இருப்பார்கள்.. விடுங்கள்..

அரைமணி நேர இடைவெளியில்.. மேனேஜர் ஒரு Open Talk கொடுத்தார்..

என்ன பேசினார் என்பதை விட இருவர் மட்டும் ஃபைனல் ரவுண்டிற்கு முன்னேறி உள்ளார்கள் என்று அறிவித்தார் எனக் கூறியதை மட்டும் இங்கு குறிப்பிட்டால் போதுமானது..

ஃபைனல் ரவுண்டையும் திறமையாக முடித்து வெளியில் காக்க வைக்கப் பட்ட அந்த இருவர்..

மனோஜ்..
விஜயன்..

மனோஜ்.. நல்ல பர்ஸ்னாலிடி..மேலாண்மைத்துறை படிப்பு.. தீர்க்கமான அணுகுமுறை.. தேவையான‌ அனுபவம்.. அடுத்த வருடம் காதலிக்கும் பெண்னை திருமணம் செய்து கொள்ளப்போகும் இளைஞன்..

விஜயன்.. ஈக்வல் பர்ஸ்னாலிடி..அதே படிப்பு.. மனோஜை விட ஒரு வருடம் அனுபவம் அதிகம்.. ஆனால் திருமணம் ஆனவன்..

ஒருவருக்கொருவர் புன்முறுவல் பூத்துக் கொண்டு.. அதை வார்த்தைகளாக மாற்றும் முயற்சியில் இருவரும் இறங்காமல் அமர்ந்திருந்தனர்..

உள்ளே..

MD யிடம் HR மேனேஜர்..

"ஸார்.. வாட் இஸ் யுவர் ஒப்பீனியன்? ஐ திங்க் யூ ஆர் ஆல் ஸோ ஆன் ஃபார் மனோஜ்.."

"Good.. முதலில் நீங்கள் ஏன் மனோஜை செலக்ட் செய்திருக்கிறீர்கள்..என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"ஆப்வியஸ்லி.. ஹி இஸ் அன்மேரிட்.. அதனால டிராவலிங் பண்றதுல எந்த பிரச்சனையும் இருக்காது..எனி டைம் எனி ப்ளேஸ் ஹி வில் பி மொபைல்.."

லேசாக சிரித்த எம்டி.. "அப்பாயின்மெண்ட் லெட்டர விஜயன் பேருக்கு கொடுங்க.."

குழப்பமாக பார்த்தவுடன்.. எம்டி தொடர்ந்தார்..

"காதலில் இருக்குற பசங்க பிஸினஸ் டிராவல் பண்றதுக்கும் காதலியோட பர்மிஸன் வேணும்.. கிடைக்கலன்னா ஏகப்பட்ட காரணங்கள் சொல்லி தள்ளிபோடுவாங்க.. பட்..
கல்யாணம் ஆனவங்க.. கிடைக்கிற சான்ஸ யூஸ் பண்ணி ட்ராவல என்ஜாய் பண்ணுவாங்க..கம்பெனிக்காக ஆபிஸ்ல நிறைய நேரம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க.."

இதே காரணத்தை விஜயனிடம் சொல்லி.. ஆர்டரை கொடுக்கும் பொழுது.. விஜயன்..

"ஸார் எம் டிக்கு தேங்க் பண்ணனும்.. பை தி வே.. அவரோட முழுப்பேரு என்ன..?"

"தாமிரா.. தங்கமணி தாமிரா.. "

..

மாறவர்மன்...அத்தியாயம் 12

முந்தைய அத்தியாயங்களுக்கு இங்கே சொடுக்கவும்..

இதுவரை : மருத நாட்டின் மன்னர் ராஜாவீரவிக்ரம குலசேகர தொண்டைமானையும் இளவரசன் மாறவர்மனையும் அந்நாட்டின் தளபதி வீரவிக்ரமன் துரோகம் செய்து சிறைபிடித்துவிடுகிறான்.. தப்பி வந்த மாறவர்மன் தன் காதலி சொர்ணவள்ளியின் தந்தையும் வணிகருமான வேலவரின் உதவியுடன் நாட்டை மீட்க இன்னும் சில நண்பர்களுடன் திட்டம் தீட்டுகிறான்.. தளபதி மாறவர்மனை பிடிக்க முயற்சித்து வருகிறான்..தளபதி,மாறவர்மன் இருப்பிடமான வழுவூரை நோக்கிச் செல்கிறான். மன்னர் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்..திட்டப்படி மாறவர்மன் தன் காதலியின் தந்தையான வேலவரின் வீட்டில் காத்திருக்கிறான்

இனி..


"என்ன இது மாறவர்மரே.. விடுங்கள்.. என்னை காணவில்லை என்று தந்தை வந்துவிடுவார்..இப்படி இடையை பற்றி இருக்கிறீர்களே"


"உன் மீதான பற்றின் பற்றில் பற்றிய பற்றடி இது பெண்ணே..!"


"பற்றற்ற வாழ்வா?.. இந்த பற்றினால் என் இடைமேகலை அற்றுப் போகும் இரவா?..விடுங்கள்..பயமாக இருக்கிறது"


"அவ்வளவு எளிதில் தப்ப முடியாது பெண்ணே.. தமிழர்களின் விருந்தோம்பல் தெரியாத பெண்ணாக இருக்கிறாயே.."


"உங்களுக்குகாண சேவைகளை செய்துவிட்டு சென்ற என் தந்தையை அழைக்கிறேன்.. அவரிடமே தங்கள் குறையை கூறுங்கள்.."


" அதோ மஞ்சம்.. என்னை வா வா என்றழைக்கிறது.. துஞ்சுவதற்கா.. கொஞ்சுவதற்கா..மஞ்சம்..ஐயத்தை அரு அழகே"


"ம்.. கெஞ்சுவதற்கு.. ஆளை விடுங்கள்.. எதிரிகள் சூழ்ந்த வாழ்வில் இத்தனை காதல் எங்கிருந்து வருகிறது உங்கள் இதயத்திற்கு?"


"எனக்கு எதிரிகள் இல்லாத வாழ்க்கையும் பிடிக்காது.. எதிரில் நீ இல்லாத வாழ்க்கையும் பிடிக்காது.."


"ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் வார்த்தை விளையாட்டை..வாய் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே நான் சென்று விடவேண்டும்.."


"செல்.. ஒற்றை காதல் சொல் உதிர்த்து செல்.."


"என்னவாயிற்று என் தலைவனுக்கு இன்று.. அமைதியான உறக்கம் தழுவட்டும்..உங்கள் இமைகளுக்குள் நான் இருப்பேன்.. "


கீழே ஏதோ சிறு சத்தம் கேட்டவுடன் சொர்ணவள்ளியை விலகினான்.. விலகினாள்..எரிமலை போன்றவன் இளகினான்.. இரவின் அடர்த்தியில் காதலின் அடர்த் தீ யில் மஞ்சம் அடைந்தான்.. உறக்கம் கண்களின் தஞ்சம் அடைந்தது..


அரண்மனை: அகழிகை வாயில்:


சத்தம் வந்த திசை நோக்கி சென்ற வீரர்கள்.. சற்று கலவரத்துடன் இங்கும் அங்கும் தேடிப்பார்த்தார்கள்.. காற்றின் ஜிவ்விப்பு தவிர வேறு எதுவும் தென்படவில்லை.. என்றாலும் பாதாளச் சுரங்கப் பாதையின் வாயில் முன் மிகவும் ஜாக்கிரதையாக நின்று கொண்டார்கள்..


சுரங்கப்பாதையின் உள்ளே..


என்ன கருணாகரா.. இப்படி அவசரப்படல் வீரனுக்கு அழகல்ல.. வாயிலில் நிச்சயம் யாரேனும் காவலுக்கு இருப்பார்கள்..சற்று பொருத்து.. இருந்து.. சத்தம் வராமல் அந்த கல்லை நகட்ட வேண்டும்.."


"மன்னிக்க வேண்டும் அரசே.. சற்று கடினமாக இருக்கிறது..அதனால்தான்.. "


"வெகு நாட்களாக உபயோகப்படாமல் இருக்கிறதல்லவா.. அதனால்தானோ என்னவோ".. தப்பியயுடன் செப்பனிட வேண்டும்."


"அரசே.. தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்..சற்று இதை பிடியுங்கள்.. நான் இந்த உடை கல்லை வத்து நெம்பி திறக்க முயற்சிக்கிறேன்.."


"ம்ம்.. " என்ற ஓசை எழுப்பிய மன்னர் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை செய்து கொண்டிருந்தார்.


தன் புஜபலம் அனைத்தயும் பிரயோகித்த கருணாமூர்த்தி மூச்சை இழுத்துப் பிடித்து நெம்பினான்..கல் நெகிழ்ந்தது..இன்னும் நெம்பினான்.. அசைந்து கொடுத்தது..


மன்னர் அவனைக் கை அமர்த்தினார்..


"என்ன அரசே.. ஆகிவிட்டது.. இன்னும் சற்று நாழிகையில் திறந்துவிடும்.."
"தெரியும்.. அதனால் தான் நிறுத்தச் சொன்னேன்.. திறக்கும் பொழுது யாரேனும் வாயிலில் இருந்தால் மாட்டிக் கொள்வோம்.. ஆதலால்.."


"ஆத..லா..ல்.."


"கற்கதவை திறப்பதை விட அதை அப்படியே தள்ளி உருட்டி விடுவோம்.. மின்னலென வெளியேற வேண்டும்.. மனித மனம் எப்பொழுதும் ஒரு பொருள் உருண்டோடினால் முதலில் அதன்பின்னே தான் செல்லும்..ஆனால் அதன்பின் சுதாரிப்பதற்குள் நாம் குறுவாளை இயக்க வேண்டும்.. இப்பொழுது தெரிகிறதா.. எதற்கு அந்த வாட்கள் மண்கூட்டில் மறைத்து வைக்கப்படிருக்கிறது என்று.."


"தெளிவாக புரிந்தது அரசே.. இந்த சூழலிலும் உங்கள் மதிநுட்பம் வியக்க வைக்கிறது அரசே.."


"மதியை சரியான சூழலில் நுட்பமாக பயன்படுத்தாவிட்டால்.. அது மதிநுட்பமாகாது கருணாகாரா.."


"சரியாகச்சொன்னீர்கள் அரசே.. சரி.. தயாராகுங்கள்.. செயல்படுத்துவோம்.."


கிழச்சிங்கம் என்றழைக்கப்பட்ட ராஜா தன் கிழபலத்தை முடிந்த மட்டும் பிரயோகித்தார்..கண்களுக்கு ஏது வயது.. என்பது போல வெறித்தனமாக பார்வையாலேயே அக் கண்களும் தள்ளியது..


கருணாகர மூர்த்தியின் புஜம் "ஜம்" என்று இருந்ததால் அந்த அளவு கடினம் ஏதும் இல்லாமல் நினைத்தபடி.. தள்ளினார்கள்..அந்த கல்லும் பெருத்த சத்தத்துடன் உருண்டு ஓடியது..


இரண்டு வீரர்கள் கற்கதவு உருண்ட இடத்தை நோக்கினார்கள்.. வாளோடு..


மன்னரும் கருணாகர மூர்த்தியும்..??


தொடரும்..


..

பெண்..காமம்..அளவு??..குறுந்தொகை..

செக்ஸில் அதீதமான (இதனால்தானோ ஜ்யோவ்ராம் சுந்தரின் கதைநாயகன் பெயர் அதீதன்??)ஈடுபாடு உள்ள ஆண்களை.. செக்ஸில் வீக்கானவர் என்றோ.. கில்லாடி என்றோ.. அவர் க(ந)டந்து செல்லும் பொழுது ஒரு நமட்டு கண்சிமிட்டலின் மூலமோ பகிர்கிறோம்.. சம்பதப்பட்ட ஆண்களும் இதற்காக பெருமைபட்டுத்தான் கொள்கிறார்கள்..( நெருங்கிய நண்பர்களிடமாவது..)

ஆனால் ஆண்டாண்டு காலமாய்.. இந்த மேட்டரில் பெண்களின் நிலைப்பாடு பற்றி பொதுவில் கருத்து கூறுவது இல்லை.. இல்லை என்பதை விட கடினம் என்பதால்தான் "இல்லை" என்றே தோன்றுகிறது..அல்லது ஒற்றை வார்த்தையில் வேசி பட்டம் கட்டி விடுகிறது..

பெண்ணின் மனது கடலை விட ஆழம்.. வானை விட உயரம் என்று உயர்வுநவிர்ச்சி அணியில் ஏதாவது சொல்லிவிட்டு, விட்டு விடுகிறோம்..

எவ்வளவு பெரிய மாவீரனையும்.. ஒரு பெண்ணின் "அவ்வளவுதானா" என்ற ஒற்றை வார்த்தை சாய்க்கவல்லது..(புரியாதவர்கள் "மொழிவிளையாட்டை" அணுகவும்)

80 சதவீத பெண்களின் காம வாழ்க்கை எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்தபடி அமைவதில்லை என்று பல ஆய்வுகள் உறுதிபடுத்துகிறது.. காரணம் கணவனுக்கு தேவை என்றால் தேவை.. வேண்டாம் என்றால் எதிர்பாலினம் வலுக்கட்டாயப்படுத்துவதில்லை.. படுத்தினால், கணவன் சந்தேகத்தில் படுத்திவிடுவான் என்ற அச்சமும் மடமும் நாணமும் காரணமாய் இருக்குமோ??

பெண்களின் இயல்பான தோற்றம் மென்மையானதால் அவர்களின் இந்த நிலைப்பாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையோ என்ற எனக்கு ஏற்பட்ட ஐயம்.. இந்த குறுந்தொகை பாடலைப் பார்த்த பொழுது இன்னும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்..

விளக்கம்:

பெரிய பெரிய பலா மரங்களுக்கு நேர்த்தியாக மூங்கிலால் வேலியிட்ட தலைவா.. அந்த பலா பழங்கள் எப்படி இருக்கிறது என்று பார்.. எவ்வளவு சிறிய காம்பு போன்ற கிளையில் அவ்வளவு பெரிய ப(ழ‌)லத்தை தாங்கி கொண்டிருக்கிறது .. அது போலத்தான் இந்த சின்ன உயிரைத் தாங்கிய இவள் உடலின் காமம் மிகப் பெரியது.. யார் அறிவார் இதை??

பாடல்:

வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே

குறிஞ்சி திணையில் தோழி கூற்றாக அமைந்த இந்த அருமையான பாடலை எழுதியவர் தானைத் தலைவர் கபிலர்..

..

க்ரைம்.. ஆ???

கடற்கரை... மணலை விட மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்த ஒரு வார இறுதி மாலை..சூரியன் தொலைதூர நீருக்குள் மூழ்கலாமா வேண்டாமா என்ற ரெட்டை மனச்சவாரியில் சரிந்து கொண்டிருந்த நேரம்..கடல் பார்க்க வந்த கிராமத்து மக்களின் ஆராவாரம் அலை வந்து போனபொழுதெல்லாம் எழுந்தது..வடிந்தது.. மீண்டும் எழுந்தது..

அங்கேயும் அலைபேசியில் எவளு/னு/டனோ பேசிக்கொண்டு இருந்த ஜீவன்கள்.. அவனோ/ளோ/டு வந்த துணை ஜீவன் மணலில் கால் புதைத்து காதை போனில் நுழைத்து, நம்பிக்கை வைக்காத துணைகள்.. பலூன் பின்னே ஓடும் குழந்தைகளின் பின்னே ஓடும் பெற்றோர்கள். இவர்கள் அனைவரின் பின்னாலயே சுற்றும் தேங்காய் மாங்காய் சுண்டல் இளைஞர்கள்/சிறுவர்கள்.. இவை எல்லாவற்றையும் ஒருவித எகத்தாளத்தோடு பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் மரைகழண்ட கேசுகள்..தூரத்தில் நிலா வரும் போல கோடு.. ஒரு ஓரத்தில் மகேசும் மூர்த்தியும்.. கைநிறைய மரவள்ளி சிப்ஸ்.. வாய் நிறைய வார்த்தைகள்..

திடுமென வந்த போலிஸ் படையால் மேலே இருக்கும் பாராவில் வந்த அனைத்து மாந்தரும் ஒரு கணம் ஸ்தம்பித்தனர்.. அலையை தவிர..

மோப்ப நாய் சகிதம் வந்த போலிஸ் படை அங்கு இருந்த ஒரு ஆசாமியை வளைத்துப் பிடித்தனர்.. அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டவன் போல் நடக்கத் துவங்கினான்..

"போலீஸ்னா சும்மாவா.. கொலைய பண்ணிட்டு சுத்துனா விட்ருவாங்களா.."
"ஒரு சின்ன க்ளூ கிடைச்சாலும் மடக்கிருவாங்கப்பா.."
"சொத்துக்காக‌ மாமாவை கொன்னுட்டானாம்"

போன்ற வார்த்தைகள் வாக்கியங்களாக மாறி மிதந்தன..

"சான்ஸே இல்ல மகேஸ்.. க்ளீனா பிடிச்சுர்ராங்க இல்ல.. என்னா கொஞ்சம் லேட் வேணா ஆகலாம்.. ஆனா தப்ப முடியாது.. ராஜீவ் மேட்டர்லயே ஒரு போட்டோவ வச்சு பிடிச்சாங்களே.. க்ரேட் தான் என்ன..?"

"அப்படி இல்ல மூர்த்தி.. கொலை எதுக்காக பண்றாங்கனு ஒரு மோட்டிவ் இருக்கும்.. அத மோப்பம் பிடிச்சா ஆள ஈஸியா தூக்கிருவாங்க.. இதே சம்பந்தம் இல்லாம பண்ணா ஒரு மயிரையும் புடுங்க முடியாது"

"ஆரம்புச்சுட்டயா உன் புத்திசாலித்தனத்த.. "

"இல்ல சகா.. இப்ப அதோ அங்க வந்து கிட்டு இருக்காரே ஒரு வெள்ள சட்ட.. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. அவர கொல பண்ணா நாந்தான் கொன்னேன்னு கண்டே பிடிக்க முடியாது.."

"இந்த புத்திசாலிப் போர்வைல இருக்குற முட்டாள்கள் ரொம்ப டேஞ்சர்டா.. கேனத்தனமா பேசிட்டு புத்திசாலிமாதிரி பார்க்குற.. லூசுப்பயலே"

"சரி.. இப்ப நம்ப வேணாம்.. ஒரு அஞ்சு கொலை.. மோட்டிவ் இல்லாம பண்ணவா..? கண்டு பிடிக்க முடியாது.. என்ன சொல்ற..?

"வேணாம்பா ஆள விடு.. இருட்டிருச்சு வா போலாம்.."

கிளம்பினார்கள்.. ஆனால் மகேஸின் மனது மட்டும் தான் பேசியதையே சுற்றி சுற்றி வந்தது..

தினகரன்: இரண்டு கொலைகள்.. கொலையாளியை கண்டுபிடிக்க தனிப்படை..

செய்தியை பார்த்து சிரித்தான் மகேஸ்..

"மூர்த்தி.. அந்த கொலைகாரன அவங்களால பிடிக்கவே முடியாது.. ஒரு தடயம் கூட இல்லாம க்ளோஸ் பண்ணிட்டேன்.. பை த வே.. அவங்க யாரு என்னா பேரு எல்லாம் இந்த செய்தியை படிச்சுத்தான் தெரிஞ்சு கிட்டேன்.."

திகைத்துப் போனான் மூர்த்தி.. அதற்கு ஏற்றபடி டிவி செய்தியில் ஆய்வாளர் பேசியதும் மூர்த்தியை மூர்ச்சையாக்கியது..

"கொலைக்கான காரணம் தெரியவில்லை.. பணம் போன்ற எந்த பிற காரணமும் இல்லாததால் என்ன மோட்டிவ் என்று தெரியவில்லை.. விரைவில் பிடித்து விடுவோம்.."

"சரிடா மகேஸ்.. ஒத்துக்குறேன்.. விட்டுருடா.."

நீ ஏண்டா பயப்படுர.. மோட்டிவே இல்லாம பண்ணா ஒண்ணும் பண்ண முடியாது.. ஹஹா.."

ஒரு வாரம் மூர்த்தி பயத்தில் வெளியிலேயே வரவில்லை.. லேசாக காய்ச்சல் அடித்தது.. யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தான்.. தொலைக்காட்சி செய்தி அவன் காய்ச்சலை 102ல் இருந்து 105டிகிரிக்கு ஏற்றியது.. கைகள் நடுங்க தொடங்கி விட்டன.. ஏனெனில் மேலும் இரண்டு கொலைகள் எனவும் கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் பேசிக்கொண்டே போன செய்தியை அணைத்து விட்டு மகேஸை பார்க்க ஓடினான்..

"டேய்.. லூசுப் பயலே.. வேணாம்டா.. ஒத்துக்கிறேன்டா.. நீ அதிபுத்திசாலினு..போதும்டா சாமி"

உதறி பதறியவனை சிரித்துக்கொண்டே பார்த்தான்..

"மச்சான் அஞ்சாவதும் பண்ணி ஃப்ரூப் பண்ணிட்டுத்தான் வேற வேலயே.."
"வேணாண்டா.. இதுக்கும் மேலயும் நீ கேட்கலனா.. நானே போலிஸ்ல சொல்லிறுவேன்.."

"ம்ம்.. அஞ்சாவது ஆள் கிடைக்கலயேன்னு நினைச்சேன்.. அதுவும் போக நீ போலிஸ் அது இதுன்னு பேச ஆரம்பிச்சுட்ட.. அதனால.".

ட்ட்டூமில்.. என்ற சத்தமே வராமல் தன் சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கியால் சுட்டு விட்டு.. தடயங்களை வழக்கம் போல் அழித்து விட்டு.. வழக்கம் போல் ஸ்காட்ச் உதவியுடன் சிரிக்கத் தொடங்கினான்.. ஸ்காட்ச்சிற்கு முன்னால் நன்றாக குளித்திருப்பான் போல.. நறுமணம் கமழ்ந்தது..

மூன்று நாட்கள் கழித்து.. செய்திகளில் கமிஷனர்..

"ஆம்.. பிடித்து விட்டோம்.. மகேஸ் என்ற வாலிபர் ஐந்து கொலைகள் செய்ய வேண்டும் என்ற "மோட்டிவோடு" செயல்பட்டதால்.. தன் நண்பனையே கொன்று விட்டார்.. மேற்கொண்டு விசாரனை நடந்து வருகிறது..."

..

மனம்..மாற்றம்..கம்ப ராமாயணம்

அலுவலகத்தில் ஒரு பிரச்சனை.. அந்த பணியாளரை நீக்க வேண்டிய சூழல்.. "முடியவே முடியாது சார்.. அந்த தப்ப நான் பண்ணல..ரிசைன் பண்ண மாட்டேன்"..

இது முதல் அரை மணி நேரம் அவர் திரும்ப திரும்ப சொன்ன வார்த்தைகள்..

"நீங்க என்ன ஆக்சன் வேணா எடுங்க.. ஆனா வேலைய விட முடியாது.."

இது அடுத்த அரை மணி நேரம் அவர் சொன்ன வார்த்தைகள்..
பிறகு.. "வேலைய விட முடியாது சார்.. மாசா மாசம் காசுக்கு எங்க போவேன்..?? என்றவர் செட்டில்மன்ட் குடுத்தாலும் வேலையை விட முடியாது.." என்றார்..

எனக்கு ஏனோ கம்பர் தான் நினைவிற்கு வந்தார்..

கம்பரின் வார்த்தைகளை கூர்ந்து பார்த்தால் சில உளவியல் மேட்டர்களை ஆழமாக ஆனால் போகிற போக்கில் சொல்பவர் என்ற உண்மை புலப்படும்..

ராமனுக்கு முடி சூட்டு விழா என்றவுடன் கடுப்பான கூனி, கைகேயிடம் வந்து பேசியது நாம் அனைவரும் அறிந்த ஒன்று..

கூனி அவ்வாறு சொன்னதும் கைகேயி மிகுந்த ஆவேசம் கொண்டு கூனியிடம் சொல்கிறாள்.. "ராமன் நான் பெற்ற மகனை விட உயர்ந்தவன்.. இதைப்பற்றி நீ பேசாதே இனி".. சிறிது நேரம் மீண்டும் கூனி பரதன் தான் உன் மகன் என்ற ரீதியில் எடுத்துச் சொல்கிறாள்..

இன்னும் மிகுந்த கோவம் கொண்ட கைகேயி..

"எனக்கு நல்லை அல்லையும் நீ..
என்மகன் பரதன் தனக்கு நல்லை அல்லையும் நீ..!"

என்று கூறுவாள்.. இந்த சுடு சொல்லைக் கேட்ட கூனி லேசாக சிரிக்கிறாள்..

அவள் சிரிப்பிற்கு கம்பர் சொல்லும் காரணம்.. இத்தனை நேரம் ராமன்,ராமன் என்று கூறியவள் இப்பொழுது "என்மகன் பரதன்" என்ற சொல்லை கூறிவிட்டாள்.. இனி நம் காரியம் சுலபம் என்று நினைத்தாளாம்..
மன மாற்றத்தின் ஆரம்பத்தை இதைவிட துல்லியமாக‌ எடுத்துக்காட்ட முடியுமா??

அந்த பாடல்...

எனக்கு நல்லையும் அல்லை நீ; என் மகன் பரதன் -தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்,உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட,மனக்கு நல்லன சொல்லினை - மதி இலா மனத்தோய்!

(எவ்வளவு மோசமாக கூனியை பேசும்படியான‌ இப்பாடல்.. இதைக் கேட்டும் கூனி மகிழ்கிறாள்.. ஏனெனில் அந்த வார்த்தை.."என்மகன் பரதன்" என்ற அந்த வார்த்தை.. அவளின் மன மாற்றத்தின் ஆரம்பம் என்பதால் மகிழ்கிறாள்..)

கம்பா.. வாழ்க நின் தமிழ்..

..

அப்டீன்னா..

1.சிக்கல் இல்லாமல்,பதட்டப்படாமல் உபயோகிக்கும் படி எளிதாக எப்பொழுதாவது மொபைல் ஹேண்ட்ஸ் ப்ரீ வயர் இருக்கிறதா??

2. டி.வியை உடனே மியூட் செய்தாக வேண்டிய நிலமை.. ஆனால் ரிமோட்டை தட்டோ தட்டு என்று தட்டாமல் மியூட் ஆகிறதா?

3. நாம் வண்டியை நிறுத்தும் போது ஆள் அரவமே இல்லாமல் இருக்கும் இடத்தில் கூட, திரும்பி எடுக்கப்போகும் பொழுது வண்டியை எடுக்க முடியாதவாறு யாராவது தமது வண்டியை நிறுத்திவிட்டு போகிறார்களா?

4. சினிமா தியேட்டரில், உங்கள் சீட்டிற்கு பக்கத்தில் மட்டும், எல்லா வசனங்களையும் அச்சரம் பிசகாமல் சொல்லக்கூடிய திறமை வாய்ந்த ரசிகர் அமர்ந்து அக்கப்போரு பண்ணுகிறாரா?

5. ரயில் பயணங்களின் போது மொத்த ரயிலும் கலர்ஃபுல்லாக குலுங்க, உங்கள் கம்ப்பார்ட்மண்ட் மட்டும் M-30M- 60 ஆக இருக்கிறதா?

6. திடீரென ஏதாவது ஒரு பாட்டின் முதல் வரி என்ன என்று மண்டைக் குடைச்சல் வரும்வரை யோசிக்க வைக்கிறதா..?

7. சலூனில் நமக்கு முன் முடி வெட்டுபவருக்கு ஏகப்பட்ட சேவைகள், நகாசு வேலைகள் செய்யும் சலூன்காரர் உங்களுக்கு மட்டும் உடனே முடித்து விடுகிறாரா??

8. "எலக்ட்ரானிக் ஐட்டம் மட்டும் லக் இருந்தாத்தான் ஸார் நல்லதா கிடைகும்.." என்ற வார்த்தைகள் நமக்கு மட்டுமோ என்ற எண்ணம் இருக்கிறதா?

9. "அடடா ஒரு அரை மணிநேரத்திற்கு முன்னால கேட்டு இருக்கக்கூடாதா?"க்களை அதிகம் கேட்டிருக்கிறீர்களா?

10. வண்டியில் போகும்பொழுதோ,மீட்டிங்கின் பொழுதோ மனதில் அருவியாக வந்து விழும் வார்த்தைகள் எழுத உட்கார்ந்தால்.. எழுந்து ஓடிவிடுகிறதா??

அப்டீன்னா..ஸேம் பிளட்???

..

மாறவர்மன்: அத்தியாயம் பதினொன்று..

முந்தைய அத்தியாயங்களுக்கு இந்த சுட்டி..

இதுவரை : மருத நாட்டின் மன்னர் ராஜாவீரவிக்ரம குலசேகர தொண்டைமானையும் இளவரசன் மாறவர்மனையும் அந்நாட்டின் தளபதி வீரவிக்ரமன் துரோகம் செய்து சிறைபிடித்துவிடுகிறான்.. தப்பி வந்த மாறவர்மன் தன் காதலி சொர்ணவள்ளியின் தந்தையும் வணிகருமான வேலவரின் உதவியுடன் நாட்டை மீட்க இன்னும் சில நண்பர்களுடன் திட்டம் தீட்டுகிறான்.. தளபதி மாறவர்மனை பிடிக்க முயற்சித்து வருகிறான்..தளபதி,மாறவர்மன் இருப்பிடமான வழுவூரை நோக்கிச் செல்கிறான். மன்னர் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்..

இனி..

சுரங்கப்பாதையின் இருட்டு அந்த தீப்பந்தத்தையும் தாண்டி பயம் கவ்வச் செய்தது.. கருணாமூர்த்தி மிக ஜாக்கிரதையாக மன்னரை அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.. பக்கவாட்டுச் சுவர்களின் குழிகளில் இருந்து வெளவால்கள் ஒலி எழுப்பி பறந்த வண்ணம் இருந்தன..ஒரு விதமான் நெடி நாசியைத் தாக்கியது. தீப்பந்த ஜுவாலை நாக்குகள் வளைந்து அலைந்து இருட்டைத் தொலைந்து போகச் செய்த வண்ணம் இருந்தது. நடுநடுவில் தென்பட்ட எழுகங்கள் கால்களில் இடராதவாறு தொடர்ந்தார்கள்.. நெளிந்து சென்றதால் பாம்பாக இருக்குமோ என்ற அச்சமும் ஆங்காங்கு தோன்றி மறைந்தது. மேற்கூரை வளைந்து தலை தட்டுமோ தட்டாதோ என்ற உயரத்தில் இருந்ததால் சற்று குனிந்தே செல்ல வேண்டுமோ என்பது போல் இருந்தது..
மன்னரின் கண்களும் கால்களும் முன்னோக்கி, கருணாமூர்த்தியின் பின் நடந்தன.. கருணாமூர்த்தியின் உதடுகள் பிரிந்ததால் வார்த்தைகள் வெளியே விழுந்தன..

"மன்னா.. பார்த்து வாருங்கள்.."

"நன்றி கருணாகரா.. கவனமாக போ.. அதோ அந்த இடத்தில் ஒரு திட்டு போல் இருக்கிறதே..அதனருகில் இருக்கும் மணல் கூட்டை உடை.. உள்ளே குறுவாள்கள் இருக்கும்.. உபயோகப்படும் அளவிற்கு இருக்கிறதா என்று பார்.."
" நன்று மன்னா.. ஒரு ஐயம்.. சிறை இருக்கும் இடத்தில் இந்த சுரங்கப்பாதை எதற்கு வைத்தீர்கள் மன்னா.. நீங்கள் சிறை வைக்கும் கைதிளும் இது போல தப்பி விடுவார்களே.."

"ஹஹா.. நல்ல கேள்வி கேட்டாய் கருணாகரா.. இது மிகச்சிலருக்குத்தான் தெரியும். எதிரிகளிடம் நாம் தோல்வியடையும் தருவாய் ஏற்பட்டால் மகாராணியுடன் அரண்மனைப் பெண்டிரும் இவ்வழியே பாதாளச்சிறையை அடைந்து விடுவார்கள்.. நாம் அவர்களைப் பற்றி கவலையின்றி தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தலாம் அல்லவா.. அதற்காகத்தான்."

"புரிந்தது மன்னா.. இந்த பாதை அகழிகையின் வாயிலில் முடியும் என்றீர்களே.?

" வழியில் ஒரு பெண் நடனமாடும் சிலை இருக்கும்..அந்த சிலைக்கு பின்புறம் ஒரு வழி பிரிந்து சொல்லும்.. அது நம் அரண்மனையின் சபையில் இருக்கும் நான்காவது தூணில் சென்று முடியும்.. அதை குறிக்கும் விதமாக மற்ற தூணில் பொறிக்கப்பட்ட சிலைக்கும் அந்த தூணில் பாய்வது போல வடிக்கப்பட்டிருக்கும் கருணாகரா.."

"அற்புதம் மன்னா.. "

"இருக்கட்டும்.. மாறவர்மனை சந்தித்து விட்டால் போதும்.. மீண்டும் அரியனை உறுதி.. பிறகு இருக்கிறது இந்த கயவர்களுக்கு.. உலகின் ஒட்டுமொத்த தண்டனைகளும் மொத்தமாய் வழங்கப்படும் அந்த தளபதிக்கு.."

"ஆம் மன்னா..சற்று ஜாக்கிரதையாக வாருங்கள்..கீழே ஏதேதோ தட்டுப்படுகின்றன.."

அதே வேளையில் அகழிகை வாயிலில் இரண்டு வீரர்கள்..

"என்ன குருபரா.. நம் தளபதி மாறவர்மனை சிறைபிட்டிக்க சென்றுள்ளாரே.. என்ன நடக்கும் ?"

" நம் கூட்டத்திற்கு நல்ல காலம்தான் இனி.. ராஜகுரு வகுத்த திட்டப்படி வீரவிக்ரமன் செயல்படுகிறார்.. அது சரி.. நம்மை இங்கு ஏன் நிறுத்தி வைத்திருக்கிறார் ராஜ குரு என்று தெரியுமா..உனக்கு?"

" மிக முக்கிய மான இடம் என்பதால் நம்பிக்கையான நீங்கள் அங்கே அசையாமல் இருங்கள் என்று கூறினார்.. எதற்கு என்று தெரியவில்லையே"

"அடே மூடா.. இதோ.. இந்த கற்சிலை இருக்கிறதே.. இதற்கு பின்னால் இருக்கும் அந்த வளைந்த சிலை தெரிகிறது பார்.. அது சிலை இல்லை.. கதவு.."

"கதவா.ஆ??"

"ஆம், பாதாளச்சிறை வரை செல்லும் மிக ரகசிய பாதை அது.. இப்பொழுது புரிகிறதா..?"

"ம்ம்..புரிகிறது புரிகிறது"

"டங்ங்" என்று எழுந்த சத்தம் அவர்கள் பேச்சை நிறுத்தச் செய்தது...

வழுவூர்..

"மாறரே.. திட்டம் செயல்படுத்தும் நேரம் நெருங்கி விட்டது.. நம் திட்டப்படி நீங்கள் வேலவர் வீட்டில் பதுங்கிக் கொள்ளுங்கள்.. நானும் கருப்பும் நம் திட்டப்படி செயலாற்றுகிறோம்.."

"வீரணா.. எந்த தருணத்திலும் பயந்து விடாதே..முதலில் பயத்தை கொன்று விடு..எதிரியின் சாவு எளிதாகிவிடும்.. யோசிக்காமல் செயலில் இறங்காதே.. இறங்கியபின் யோசிக்காதே"

"ஆகட்டும் மாறரே..வருகிறேன்"

வீரணன் போன திசையைப் பார்த்துக் கொண்டிருந்த மாறவர்மன்.. சில நொடிகள் கழிந்தவுடன்.. சொர்ணவள்ளியின் வசிப்பிடம் நோக்கி விரைந்தான்..வீடடைந்ததும் வேலவர் அணைத்து அரவணைத்தார்..பின் அறையில் அமர வைத்தார்..

புலியின் கண்கள் மானைத் தேடின..

வேலவர் விடைபெற்று சென்ற பின் அறையை நோட்டமிட்டான் மாறவர்மன்.. எங்கு பதுங்கினால் பாய்வது சுலபம் என்று பார்த்துக் கொண்டிருந்தான்..

"மன்னர் மன்னர் எங்கள் குடிலுக்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம்"

சொர்ணவள்ளியின் குரல் காதுகளில் புகுந்து இதயம் நிறைத்தது..

"உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் பேதையே.."

"குருதி பார்க்கும் வாள் எதற்கு மல்லிகையைத் தேடப்போகிறதாம்?? "

"மல்லிகையைச் சிவக்கச் செய்யத்தான்.." என்றவாரே அவளின் இடையை பற்றி இழுத்தான்..

வெட்கத்தில் அந்த மல்லிகை சிவக்கத்தான் செய்தது...


தொடரும்...

..

மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா..

மனசுக்கு ரீசார்ஜ்... குளிச்சா...

நண்பனுக்கு நெல்லையில் கல்யாணம்..(வேண்டாம்டானு எவ்வளவோ சொல்லியும் கேட்கலயே..!) நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாலும், நெருங்கிய நண்பன் என்பதாலும் இவை எல்லாம் மீறி, திருமணம் குற்றாலத்திற்கு மிக அருகில் என்பதாலும்.. போய்விட்டு வரலாம் என்று முடிவெடுத்து.. எடுத்த முடிவின் ஆரம்பமாக பயணத்தை ஆ"ரம்"பித்தோம்..

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் .. "சாரல்" என்ற வார்த்தையை கேட்ட உடனே நினைவுக்கு வருவது குற்றாலம்".. என்று குறிப்பிட்டதைப் போல.. குற்றாலம் என்ற இடத்தைப் பற்றி நினைக்கும் பொழுதே மனதில் சாரல் அடிக்க துவங்கியது..





ஆனந்தத்தின் நுழைவாயில்




அருவிகள் வைரத்தொங்கல்
அடர்கொடி பச்சைப்பட்டு
குருவிகள் தங்கக் கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை!

என்று இயற்கையை ரசித்து ருசித்த பாரதிதாசனின் வரிகள் நினைக்கு வந்த வண்ணம் இருந்தன அங்கிருக்கும் இயற்கை காட்சிகளைப் பார்க்கும் பொழுது..

"ஹோ" என்ற சத்தத்தின் சந்தத்தில்.. அருவியின் அருகாமையை செவி உணரும்.. அதற்கு முன் தெறிக்கும் சாரலில் உடல் சிலிர்க்கும்..

மாலை அணிந்த சாமிகள் ஏக்கத்தோடு பார்க்கும் இடம்..டாஸ்மாக்.(அதெல்லாம் "தனி கிளாஸ்" இருக்கப்பா..).அருவியை விட இங்கு தான் கூட்டம் அதிகம்..

மிளகாய் பஜ்ஜி.. அது எப்படி இந்த ஊரில் மட்டும் இந்த வார்த்தையை நினைத்தாலே நாக்கில் ஊரவைக்கிறதோ??

தெருக்கள்.. சுத்தமாக அசுத்தமான தெருக்கள்.. இரண்டு பக்கமும் வீடுகளையே ஓட்டல்களாகவும்,துணிக்கடைகளாகவும் மாற்றி திண்ணை வியாவரத்தில் கலக்குகிறார்கள்.. 6 மாதம் ஓடும் வியாபாரம் ஒரு வருடத்திற்கு தாங்குமாம்.. உடனே நீங்கள் 'தென் கோடியில் சின்னத் தெருவில் இருந்து என்ன வாழ்க்கை' என்று நினைத்து விடாதீர்கள்.. இட்லி சாப்பிட்டு விட்டு தோசைக்கு ஆர்டம் செய்யும் இடைவெளியில் கல்லா கட்டுபவர் லேப்டாப்பில் ப்ரவுஸ் செய்து கொண்டிருக்கிறார்..

மெயின் ஃபால்ஸ்.. உள்ளே நுழைந்தவுடன் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் அற்புத தளம்..




அனைத்து மூலிகைகளும் அடங்கிய‌ தைலம்..15 ரூபாய்க்கு இங்கு கிடைக்கிறது..இங்க் பாட்டில் சைஸில் இத்துணூன்டு பாட்டில் 15 ரூபாயா என்று நினைப்பவர்கள் வாங்க வேண்டாம்.. வேறு யாராவது வாங்கி வந்து கீழே வைத்து விட்டு சட்டையை கழட்டுவதற்குள் எடுத்து தேய்த்துக் கொள்ளலாம்.. எல்லா பாட்டிலும் ஒரே மாதிரி.. எல்லோர் கையிலும் ஒரே பாட்டில் மயம்..

இந்த தண்ணீர் தளத்தின் முக்கிய விசயம்.. எவ்வளவு "தண்ணி" அடித்தாலும் ஒன்றும் கு"ழள"ருவதில்லை".. தலையில் விழும் தண்ணீர் அடிக்கும் அடியில் நாம் அடித்த தண்ணி எல்லாம் வெறும் தண்ணி போல் அடித்துக் கொண்டு போய் விடுகிறது..

குளித்து முடித்தவுடன் துண்டைக்கூட தேடுவதில்லை மனம்.. சூடாக எது கிடைத்தாலும் சாப்பிடத்தோன்றும் அளவு பசி.. "கப கப" வென அகோர பசி எடுக்கிறது.. இங்கு மட்டும் ஏனோ ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பசிக்கிறது..உள்ளே அடித்த தண்ணியாலா.. தலையில் அடித்த தண்ணியாலா??



வானரங்கள் கனிகொடுத்து
மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு
வான்கவிகள் கெஞ்சும்!

என்ற வரிகள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நடக்கும் நிகழ்வு இந்த குற்றாலத்தில்தான் போலும்..






ஐந்தருவி போகும் வழியே ரம்மியமாய் இருக்கிறது.. காடுகள் "மலைகள் தேவன் கலைகள்" என்று ஜேசுதாஸ் குரல் இல்லாவிட்டாலும் கத்த(பாட?) தோன்றும் இயற்கை காட்சிகள் மிக்க வழிப்பாதை.. வழியில் தேங்காய் குருத்து 10 ரூபாய்க்கு 8 வில்லைகள் கிடைக்கிறது.. சாப்பிட்டால் மீண்டும் பத்து ரூபாய்க்கு வாங்க தோன்றும்..!

"சார் மஸாஜ்" என்று கேட்பவர்கள் மிகுந்த அப்பாவியாக,ஒல்லியான தேகத்தோடு கையில் பளபள எண்ணைய் பாட்டிலோடு நம்மை ஈர்ப்பார்கள்.. நம்ம்ம்ம்பி போய்விடக்கூடாது.. ஏனெனில் அவர் ஏஜென்ட் மட்டுமே.. அங்கே போனால் குற்றால மலையில் பாதி உடம்பாக ஒருவர் இருக்கிறார்.. மசாஜ் என்ற பேரில் விட்டு வெளுத்து விடுகிறார்கள்.. இதில் கொடுமை என்னவென்றால் வலி தாளாமல் நாம் கத்துவதை "சிலாகிக்கிறோம்" என்று நினைத்து அடியின் அடர்த்தியை கூட்டி விடுகிறார்கள்.. யம்ம்ம்ம்மாமாமா!

ந்தருவியின் விசாலமான முகப்பில் நின்று பார்க்கும் பொழுது ஏற்படும் பரவசம் அனுபவித்தால் தான் தெரியும்.. மூன்று அருவிகளிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம்..அந்த அளவு வேகம் இருக்காது என்றாலும் அதே அளவு குதூகளம் இருக்கும்.. மீதம் உள்ள இரண்டு அருவிகள் பெண்களுக்காக.. நாம் அந்த இரண்டு "அருவிகளை"பார்க்க மட்டுமே முடியும்.. கவனிக்க.. அருவிகளை!



தினப்படி தொல்லைகளை மறந்து தண்ணி அலுக்கும் வரை (கையில் இருக்கும் தண்ணி தீரும் வரை)உல்லாசமாய் இருந்து.. கண்கள் சொருகிய நிலையில் தென்காசிக்கு வந்தால், எங்கு இருந்து பார்த்தாலும் இந்த கோபுரம் தெரிகிறது..






இந்த வருட எந்திர வாழ்க்கை அலுவலகம் வந்தவுடன் ஆரம்பம் ஆகிவிட்டது.. பரவாயில்லை.. அடுத்த வருட குற்றால சீசன் இருக்கிறதே ..மனதை ரீசார்ஜ் செய்ய..

..

மாறவர்மன் பத்தாவது அத்தியாயம்

முந்தைய அத்தியாயங்களுக்கு இங்கே செல்லவும்

இதுவரை : மருத நாட்டின் மன்னர் ராஜாவீரவிக்ரம குலசேகர தொண்டைமானையும் இளவரசன் மாறவர்மனையும் அந்நாட்டின் தளபதி வீரவிக்ரமன் துரோகம் செய்து சிறைபிடித்துவிடுகிறான்.. தப்பி வந்த மாறவர்மன் தன் காதலி சொர்ணவள்ளியின் தந்தையும் வணிகருமான வேலவரின் உதவியுடன் நாட்டை மீட்க இன்னும் சில நண்பர்களுடன் திட்டம் தீட்டுகிறான்.. தளபதி மாறவர்மனை பிடிக்க முயற்சித்து வருகிறான்..


இனி:

அந்த அந்திப் பொழுதின் ஆரம்பத்தில், பறவைகளின் குரலைவிட இனிமையான ஒரு குரல் மாறவர்மனை நோக்கி வந்தது.

"வீரணா.. சற்று பொறு.. அவளிடம் பேசி விட்டு வருகிறேன்.."

பத்தடி இடைவெளியில் இருந்த மா மரத்தின் பின் மறைந்தும் மறையாமல் நின்றிருந்த சொர்ணவள்ளி மாறவர்மனின் கால்கள் அருகில் வந்ததும் தலையை தாழ்த்தி நிலத்தைப் பார்த்தாள்..

"சொர்ணவள்ளி.. இந்தப் பொழுதில் இங்கே ஏன் வந்தாய்.. அப்படி என்ன அவசரம்?"
"மன்னியுங்கள்.. ஆனாலும் இந்த அபலைப் பெண்ணின் நிலையை ஒருமுறையாவது எண்ணிப் பார்த்தீர்களா? உங்களின் வார்த்தைகளைக் கேட்காமல் இருக்க என் காதுகள் என்ன பாவம் செய்தன? இந்த திருவுருவை காணமல் என் கண்கள் இருந்தும் என்ன பயன்?"

"புரிந்து தான் பேசுகிறாயா வள்ளி? நான் ஒவ்வொரு நொடியிலும் நெருப்பில் இருப்பது போன்று இருக்கிறேன்.. அங்கு என் தந்தை என்ன பாடு படுகிறாரோ என்று நினைக்கும் தருணங்கள் என் வாழ்வின் திராவக‌ நிமிடங்கள்.."

"புரிகிறது.. அதற்காகத்தான் சொல்கிறேன்.. என்னிடம் சற்று பேசி உங்கள் மனக்குமுறலை இறக்கி வையுங்கள் என்று தான் சொல்கிறேன்"

மாறவர்மன் அவள் தாடையை பிடித்து முகத்தை திருப்பினான்..அவளின் கண்களில் வழிந்த நீரை தன் கை விரல்களால் ஒத்தி எடுத்தான்.. அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.. சற்று தள்ளி இருந்த திட்டில் அவளை அமரச்செய்து அருகில் அமர்ந்த மாறவர்மன்..

"என் நிலையைச் சொன்னேன்.. உன் ஆதங்கம் புரிகிறது பொற்கொடியே.. சொல்..என்ன விசயம்?"
"விசேஷம் ஒன்றும் இல்லை இளவரசரே.. "

"யாழ் இசையின் யவ்வணத்தை ரசித்த பொழுது ஏற்படும் இன்பத்திற்கு ஒத்த உன் குரலே விசேஷம் தானே சொர்ணவள்ளி.."

"ஆகா.. அதனால்தான் அதைக் கேட்க பிடிக்காதவர் போல் இருக்கிறீர்களா? என்னை இந்த அந்தியில் இங்கு வர வைத்து விட்டீர்களே..?"

"இந்த பெண்களின் கோவம் பொல்லாதது என்பது சரியாகத் தான் இருக்கிறது"

"அப்படி எத்தனை பெண்களின் கோவத்தை பார்த்திருக்கிறீர்கள் அழகரே?"

"ஏதேது.. இன்று உன் நாக்கின் நடனத்திற்கு நான் தான் ஜதியா?"

" நடனம் தானே.. தாண்டவம் இல்லையே.."

அந்த வனம் அவர்களின் காதல் பேச்சுக்களை ரசித்துக் கேட்டு கொண்டிருந்ததை மரங்களின் இலைகள்,மலர்களின் இதழ்கள்,படர்ந்த கொடிகள்,அடர்ந்த புதர்கள் என அனைத்து இடங்களும் லேசாக அசைந்து தாலட்டி தெரிவித்துக் கொண்டது..

சொர்ணவள்ளி.. எப்பொழுதையும் விட இப்பொழுது சுந்தரமாய் தெரிந்தாள்..
பூவை,பாவை பருவங்கள் கடந்த மங்கை அவள்.. ஏழு பருவங்களில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வித அழகை வெளிப்படுத்தும் பெண்களின் வாழ்வில் மங்கைப் பருவம் தங்கப் பருவம்..அழகு தங்கும் பருவம்..அதை ஊர்ஜிதப் படுத்தினாள் சொர்ணவள்ளி..அதுவும் காதல் வயப்பட்ட பின் அவளின் கன்னக் கதுப்புகளின் வெட்கம் அழகைக் கூட்டிக் காட்டியது.. கண்களின் வெகுளிப் பார்வை கடந்து அடிக்கடி துடிக்கும் இமைகளில் ரம்மியம் கூடியது..ரகசியம் கூறியது..அவள் கைகளின் மென்மை பெண்மையின் வரமா..இல்லை மென்மையின் தன்மையே அன்றுதான் உணர்ந்தானா என்று வியந்தான்..காதலிக்கும் முன் இருந்த முகத்தினினும் இப்பொழுது இருக்கும் பொழிவு ஒழிவின்றி ஒளிரியது.. மாறவர்மனின் கண்களில் பட்டு மிளிரியது..

அவளை சர்வ ஜாக்கிரதையாக வழியனுப்பி துணைக்கு வான் நிலவையும் வீரணனையும் அனுப்பி விட்டு, அவன் திரும்பி வரும் வரை காத்திருந்தான்..மனம் மலர்ந்து பூத்திருந்தான்..லேசாக வேர்த்திருந்தான்..
...
ரண்மனையில் தளபதிகளில் இருவரும் இளஞ்செழியனும் முன்னால் செல்ல‌வீர விக்ரமன் தன் பராக்ரம படையுடன் கம்பீரமாய் வழுவூரை நோக்கி கிளம்பிவிட்டான்.. கிளம்பிய புரவிகள் கிளப்பிய புழுதியில் அரண்மனை மங்கலாக தெரிந்தது.. ஆக்ரோஷம் அதிலும் தெரிந்தது..அந்த சாலையின் இருமருங்கிலும் இருந்த மரங்கள் உதிர்த்த சருகுகள் எழுப்பிய சத்தம் குடிமக்களை அச்சம்கொள்ளச் செய்தது.. நடக்கப் போவது விபரீதமா விதியா விளையாட்டா என்று தெரியாமல் வீரவிக்ரமன் வெற்றிப் பார்வை பார்த்தவாரே புரவி செலுத்தினான்.. அதை வெற்றுப் பார்வை பார்த்த மக்கள் சற்று விலகி நின்றார்கள்..
...

பாதாளச்சிறை: மன்னர் தனக்கு உதவப் போகும் கருணாமூர்த்தியின் வரவிற்காக காத்திருந்தார்.. அவன் வரும் வரை அங்கு பணியில் இருந்த காவளன் கவலை கொள்ளச்செய்தான்.சில் வண்டுகள் ரீங்காரம் அன்று ஏனோ அபத்தமாக இருந்தது..கைகள் பிசைந்த மன்னர் கண்கள் பிசகாமல் வாயில் நோக்கி காத்திருந்தார்.

கருணாகர மூர்த்தி.. மிகவும் அமைதியான தோற்றம்.. வீரமான புஜங்கள்.. தீரமான கண்கள்.. மேடேறிய நெற்றி.. ஐந்தரைஅடிக்கும் சற்று அதிக உயரம்..இன்று மன்னருக்கு அவன் செய்யப் போகும் உதவியால் அவன் உள்ளத்தின் உயரம் பல மடங்கு உயரும்..

பணி அமர்ந்தான்.. ஈட்டி ஏந்தினான். அவனுக்கு முன் நின்ற காவலாளி சென்றவுடன் ஈட்டியை சாய்த்து வைத்துவிட்டு,மன்னரின் சிறைக்கதவை திறந்து விட்டான்.. ஈட்டி ஏந்திய கைகளில் இப்பொழுது தீப்பந்தம்.

"மன்னா.. இன்று நம் இளவரசைத் தேடி வீரவர்மன் அரண்மனையை விட்டு படையுடன் வெளியேறிவிட்டார்.. நல்ல சந்தர்ப்பம்"

" என் பிள்ளையை கொள்ள ஒருவன் சென்றது எனக்கு நல்ல சந்தர்ப்பமா.. கடவுளே.. எனக்கா இந்நிலை..மாறனை காப்பாற்று"

"மன்னியுங்கள் மன்னா.. இளவரரின் வீரத்திற்கு முன் யாரும் நிற்க முடியாது, கவலைப்படாதீர்கள்"

"ம்ம்.. அதோ.. அந்த கல்தான்.. உன் ஈட்டியின் கூர் முனையைக் கொண்டு சுற்றி கீரிவிடு.. எளிதாக திறக்கலாம்.."

"உத்தரவு மன்னா".. என்று ரகசிய குரலில் சொன்ன கருணாகர மூர்த்தி அதைவிட ரகசியமாய் செயல்பட்டான்..


தொடரும்..


..

சிறுகதை எழுதுவது இப்படி.. யா???

பரிசலாரின் இந்த பதிவினால் உங்களுக்கு வந்த வினை இந்த கதை

9/10/1998 மாலை 6 மணி

சைக்கிள் ஸ்டாண்ட் நிரம்பி வழிந்தது. ஒரு சைக்கிளை தட்டினால் "சல்ல்ல்ல்" என்று எல்லா சைக்கிள்களும் விழுந்துவிடும் நெருக்கத்தில் இருந்தன.. குமார் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, பின் காலை ஒரு துரித விசை கொடுத்து கைலியை மேலே எழுப்பி டப்பா கட்டுக் கட்டிக் கொண்டா.."ன்" என்று சொல்வதா.."ர்" என்று சொல்வதா.. வயது எப்படியும் முப்பதுகளின் முடிவிலோ அல்லது நாற்பதுகளின் ஆரம்பத்திலோ இருக்கும்படியான தோற்றம்.. கிரிதாவை காதுக்கு கீழே கட்டை அடிக்கும் வரை இறக்கி மழித்த முகம்.. எழுமிச்சையை சொருகலாம் போல கூரான முறுக்கு மீசை என்பதால் "ர்" என்றே அழைப்போம்.கைலையை டப்பா கட்டு கட்டிக் கொண்டார் குமார்.. கேரியரில் இருந்த இரண்டு புத்தகங்களை கக்கத்தில் இடுக்கிக் கொண்டே வலது கையால் இடது பக்கம் இருந்த சட்டைப் பையில் துழாவி சில்லரையை எடுத்து கொடுத்தார்..சீட்டை வாங்கி அதே பையில் திணித்துக் கொண்டே டிக்கட் கிழிக்கும் கவுண்டரை அடைந்த குமார் பேக் பெஞ்சு டிக்கட் எடுத்துக் கொண்டு.. உலக மக்கள் அனைவரும் அங்கு சிறு நீர் கழித்திருப்பார்களோ என்று நினைக்கும் அளவிற்கு எழும் வாடையை சுவாசித்துக் கொண்டே தியேட்டரின் கழிப்பறையில் கழித்தார்.. அக்குள் புத்தகங்கள் பத்திரமாக அங்கேயே இருந்தது..

திரையரங்கம் கலகலத்தது.. ரஜினி படம் என்றால் எப்பொழுதும் இப்படித்தான்.. அதுவும் வார இறுதி நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.. ஜிகினா பேப்பர் சகிதம் இளவட்டங்கள் கைகளிலும் முகத்திலும் மினுமினு என ஜிகினாவின் எச்சங்களுடன் ட்ரவுசர் பை புடைக்கும் அளவிற்கு ஜிகினா கட்டுகள் வைத்திருப்பார்கள்.. சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போடும் போது ஆரம்பிக்கும் "ஜிகினா சூரை" பின் சண்டைக்காட்சிகள் பஞ்ச் டயலாக்குகள் என்று முடியும் வரை தொடரும் அந்த சூரை..

இளவட்டங்கள் இப்படி என்றால் நடுத்தர வயது மக்கள் வார சம்பளம் வாங்கிய மிதப்பில் ஜம் என்று தலைவர் படத்தை பார்க்க வந்து விடுவார்கள்.. இவர்களாவது பரவாயில்லை.. பெண்கள்?..அக்கம் பக்க வீட்டுக் கூட்டத்தோடு சோளக்கருது அவித்தும் பொறித்தும் என சகலவித திண்பண்டங்களுடன் அழும் குழந்தைகளோடு சிரித்துக் கொண்டே வருவார்கள்..

கிர்ர்ர்ர்ர்ர் என்று மணி அடித்த சத்தம் கேட்டவுடன் இளவட்டங்கள் அடித்த விசில் சத்தம் அடங்கிய உடன் குமார் உள்ளே சென்று.. மேலே பார்த்தவாறே மின் விசிறி வேகமாக சுற்றும் இடத்திற்கு கீழே அமர்ந்து கொண்டார்.. இரண்டு புத்தகங்களையும் கைகளில் வைத்து தட்டிக் கொண்டார்.. ஞாபகமாய் அதில் இருந்த காகிதக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு மீண்டும் மடியில் போட்டு கிங்ஸை பற்ற வைத்து அடிவயிறு வரை இழுத்து "புகை பிடிக்காதீர்" என்ற போர்டில் ஊதினார்..

நல் வரவு என்று கோணலாக காட்டப்பட்ட அட்டையை ஆப்பரேட்டர் திரையில் அரங்கேற்றியதும் கைத்தட்டல்.. "இதுதான் இந்தியாவின் வடக்கில் உள்ள கிராமம்"..என்ற ஒருவித வினோதமான குரலின் ஊடே ஒரு கிராமும் முண்டாசு பெரியவர் ஒருவர் குத்தவைத்து அமர்ந்து கொண்டு.."ஹம் யஹாங் ஷே பகுத்" என்று ஏதோ பாஷையில் பேசியதை "இவர் கூறுகிறார்" என்ற அதே வினோதா குரல் தமிழில் மொழி பெயர்த்து முடிக்கும் முன்.. படம் ஆரம்பித்தது.. ரஜினி வரும் சீன்களில் எல்லாம் கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.. "சந்தைக்கு வந்த கிளி" என்று கெளதமியை ரஜினி தழுவிக்கொண்டிருக்கும் பொழுது.. இந்த எழவ மறக்கத்தான இங்க வந்தேன்.. ச்சே..என்று முணுமுணுத்த குமார் வெடுக் கென்று எழுந்து நடையை கட்டினார்..

ஹலோ என்று பக்கத்து சீட்டுகாரர் கூப்பிட்டது குமாரின் காதில் விழாததால் கீழே விழுந்தபுத்தகைத்தை அவரின் இருக்கையில் வைத்து விட்டு "ஜாட சொல்லி பேசுதடியில்" லயித்தார் பக்கது சீட்டு..

சைக்கிளின் ஸ்டாண்டை விடுவித்து,ஸ்டாண்டிற்கான சீட்டை வாயில் வைத்துக் கொண்டு இரண்டாவது "டக்"கில் சீட்டில் அமர்ந்தார். ஸ்டாண்டு பையன் சீட்டை வாங்கிக் கொண்டே "என்னங்கண்ணா படம் பார்கலீங்களா" என்று கேட்டதை கேட்காதது போல் மையமாக தலையாட்டி விட்டு ஏறி அழுத்தினார்..

10/10/1998 மதியம்

ரங்கா ராவ் நகர்..புதிய குடியிருப்பு ஏரியா..அதன் மையத்தில் இருந்தது வீடு.. வாசல் கேட்டில் இருந்த நாய் ஜாக்கிரதை போர்டு பயமுறுத்தும் கதவு.. திண்ணை..அதைத் தாண்டினால் ஹால்..வலது பக்கம் ஒரு ரூம்..இடதுபக்கம் கிச்சன்..பின்பக்கம் பாத்திரம் தேய்க்க,துணி துவைக்க.. இடம்.. ஹாலில் இருந்த டி வி யில் பக்கத்தில் சுதா.. எதிரில் குமார்.. நடுவில் அம்மா..

"டேய் ரகு நீ திண்ணையில போய் உட்கார்ந்து படி".. குமாரின் உறுமலில் சிதறிய சிறுவன் கையில் கிடைத்த புவியல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போனான்..

"ஹால் கதவ சாத்துடி".. டி என்பதற்குள் "த்தப்பட்டது" கதவு..

"சொல்லு.. எத்தன நாள நடக்குது இந்த கூத்து??"

"அப்பா.. சொல்றத கேளுங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்"..

"லை" சொல்வதற்குள் "சப்" என்ற சத்தம் அவள் கன்னத்தில் இருந்தோ இவர் கையில் இருந்தோ எழுந்தது..

"ஏங்க அடிக்கிறீங்க.. என்னனுதான் சொல்லுங்களேன்.. நீயாவது சொல்லித்தொலையேண்டி"..

"எப்படி சொல்லுவா உன்னோட மக?? இந்தா இருக்கு பாரு.. லவ்வு லெட்டர்.. லவ்வு.. கண்டாரோளி லவ்வு..கிரகம்..என்னடா நம்ம புள்ள இப்பிடி தினமும் லைப்ரரிக்கு போயி புக் எடுத்து படிக்கிறாலேனு நெனச்சேண்டி.. நெனச்ச மாதிரியே அந்த லைப்பரியனோட பேசுறதுக்கு புத்தகத்த எடுக்குறது.. குடுக்குறதுனு கூத்தடிச்சிறுக்கா உம்மக.."

கதவு தட்டப்படுகிறது.. "திறடி"..

"என்னடா??"

"உங்கள பாக்க ரெண்டு பேரு வந்திருக்காங்கப்பா.".

"என்னானு கேளுடா.."

இரண்டு நிமிடம் மவுனம்..மயான மவுனம்..

"என்னாவம்டா..?"

"நேத்து தியேட்டர்ல புத்தகத்த விட்டுட்டு வந்துட்டீங்களாம்.. லைப்ரரி கார்ட குடுக்கணுமாம்"..

"அந்த கிரகம் தானடா இங்க நடக்குது..சரி.. நீ போய் வாங்கிட்டு வா.."

கார்டு கை மாறுகிறது..

"ரொம்ம்ம்ம்ப தேங்ஸ்னு சொன்னாரு சொல்லிட்டு நீ போய் படி.."

முழித்து முழித்து பார்த்துக் கொண்டே சென்ற சிறுவன் கதவு சாத்தியவுடன் மறைந்தான்..

"பேசுடி.. எத்தன நாளா நடக்குது..??"

ம்ஹூம்.. அந்தப் பெண் வாயே திறக்கவில்லை.. புன்முறுவல் பூத்தது போல தோன்றி மறைந்தது..

11/10/1998 அதிகாலை

தினத்தந்தி.. 3ம் பக்கம்

மகள் காதலனுடன் ஓட்டம்.. தந்தை தற்கொலை..

உடுமலைப்பேட்டை:ரங்காராவ் நகரில் குமார் (வயது 39)என்பவர் வசித்து வந்தார்.. இவருக்கு மாலினி(வயது 34)என்ற மனைவியும்,சுதா(வயது 18) என்ற மகளும்,ரகு(வயது 11)என்ற மகனும் உள்ளனர். இவரது மகள் சுதாவிற்கும் அதே தெருவில் இருந்த லைப்ரரியில் வேலை பார்த்...

..

சட்டக்கல்லூரி வாசல் கேட் வே ஆஃப் இந்தியா வழியாக சென்று சென்னை அடைமழையில் நனைந்த குண்டுகள்...

சட்டக்கல்லூரி வாசல் கேட் வே ஆஃப் இந்தியா வழியாக சென்று சென்னை அடைமழையில் நனைந்த குண்டுகள்...

தலைப்பு புரியவில்லையா.. ஆம்.. புரியாது.. என் மனநிலையும் அப்படித்தான் உள்ளது.. இரண்டு நாட்களுக்கு முன் சகா கார்க்கி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.. அதில்.."என்ன தல இந்த வாரம் இரண்டு பதிவுகளுக்கு மேல் எழுதலயே..பிஸியா?" அதற்கு நானும் "ஆம்,அலுவலக வேலைச்சுமை" என்று பதில் அனுப்பி இருந்தேன்.. அதுவல்ல காரணம்.. ஏனெனில் அலுவலக வேலைச்சுமைதான் வாழ்க்கைமுழுதும் இருக்கிறதே.. "என்னத்த எழுத" என்ற எண்ணம் தான்..

1. சட்டக்கல்லூரி விவகாரம் நாம் எதிர்பார்த்தது போலவே பத்திரிகைகளின் கடைசி பக்கங்களுக்கு போய் என்ன வினை,எதிர்வினை எடுக்கப்பட்டது என்பது புள்ளியாக தேய்ந்து போனது. மாணவர்களின் எதிர்காலம் குறித்த எந்த ஒரு அக்கறை அறிக்கையும் வெளிவரவில்லை.. (சில அறிக்கைகள் வந்ததே என்று கேட்பவர்களுக்கு.. அதுவல்ல நாம் எதிர்பார்த்தது..உண்மையான வழிகாட்டுதல் இன்னும் அரசிடம் இருந்து வரவேயில்லை)

2. சென்னையின் மழை.. இயற்கையின் இன்றியமையாத கொடைதான் மழை..அது சில வருடங்களாக பொய்த்துப்போனதால் நாம் அனைத்து கம்மாய் நிலங்களையும் ஹவுசிங் போர்டு காலனிகளாக அரசு உத்தரவுடன் குடியேறிவிட்டோம்.. தண்ணீரின் இடத்தில் நாம் இருந்து கொண்டு தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விட்டது என்றி நீட்டிய மைக்குகளில் எல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..

எத்தனை குடும்பங்கள் இந்த மழையால் தன் குருவித்தனமான சேமிப்பை இழந்ததோ.. எத்தனை நம்பிக்கைகள் இந்த மழையால் நமத்துப் போனதோ..

மாடங்களிலேயே நீர் புகும் அளவிற்கு பெய்த மழை சிறு குடிசைகளின் நிலையை யோசிக்க வைத்தது..

இதோ.. மழை நின்று விட்டது.. இடுப்பளவு தண்ணீரில் நின்று மக்களைப் பார்வை இட்ட மந்திரிகளும் மேயர்களும் தத்தம் அன்றாடங்களுக்கு திரும்பி விட்டார்கள்..அன்றாடம் காய்ச்சியகள் தங்கள் அன்றாட வேலைகளில் "மூழ்கி"விட்டார்கள்..இனி ஒரு மழைவந்து "மூழ்கும்"வரை இதுதான் நடக்கும்..

எங்காவது வெய்யில் காலத்தில் எந்த மாநகராட்சியாவது முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா?? எடுக்கின்றதா? எடுக்குமா??

3. மும்பை சம்பவம்.. 100 கோடி மக்களுக்கு மேல் வாழும் ஒரு நாட்டில் சிலர் எங்கு செல்கிறார்கள்.. என்ன செய்கிறார்கள் என்று கண்காணிப்பது என்பது இயலாத காரியம்..

எவ்வளவு அலர்ட்டாக இருந்தாலும் ஒரு தனிமனிதன் தன் உயிரை துச்சமாக மதித்து.. உடம்பு முழுதும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு.. செயல்பட்டால் எப்படி முன்கூட்டியே தடுக்க முடியும்..

ஆனால் வருத்தம் அளிக்க கூடிய விசயங்கள் என்றால்..

அ) சம்பவம் நடக்க ஆரம்பித்தது புதன் மாலை.. ஆயுதமும் பயிற்சியும் தாங்கிய ஃபோர்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றது மறுநாள் காலை 6 மணிக்கு.. கிட்டத்தட்ட 10 மணிநேரம் என்பது சற்றும் ஏற்க முடியாத ஒரு கேவலமான நிலை..
அதுவும் இது போன்ற சூழல்களுக்கு சற்றும் தயாரில்லாத போலிஸ்த் துறை இருக்கும் நாட்டில்.. அல்லது போலீஸ்த் துறையின் பயிற்சிகளும் கடுமையாக இருக்க வேண்டும்.. மிலிட்டிரிக்கு ஈக்வலாக..

ஆ) மிகத்திறமை வாய்ந்த நமது ஜவான்கள் உயிரை விட நாடு முக்கியம் என்று செயல்பட்டு கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்பை எதிர்த்து.. போராடி வெற்றி கொடி நாட்டிய நிகழ்வை.. மறுநாள் ஒளிபரப்பி இருக்கலாம்.. எல்லா நிகழ்வுகளையும் வியாபரம் ஆக்கும் மீடியாக்களின் போக்கு மிகவும் பயப்பட வைக்கிறது..

இ) நடந்த நிகழ்ச்சிகளை சற்று தாமதமாக பார்த்து தெரிந்து கொள்ளாவிட்டால் சாமான்யன் என்ன செத்து விடப் போகிறானா?? ஆனால் லைவ் செய்து தங்கள் சேனல் தான் சூப்பர் என்று பெயர் வாங்கும் ஆர்வத்தில் இவர்கள் என்னமோ ஜவான்கள் மாதிரி முட்டி போட்டு, படுத்து, குனிந்து லைவ் ஷோ காட்டி.. என்ன சாதித்து விட்டார்கள்.??.

ஒரே ஒரு ஜவானின் உயிர் இவர்களின் லைவ் ஷோவின் இன்பர்மேஷனால் நிகழ்ந்திருந்தால் கூட அது ஈடுசெய்ய முடியா இழப்பே..

மிகக் கடுமையான தண்டிக்க/கண்டிக்கப் பட வேண்டிய விசயம் இது.. பர்கா தத் நன்றாகத்தான் பேசினார்.. அதை மறுநாள் செய்து தொலைக்க வேண்டியது தானே??

ஈ) இந்திய பாதுகாப்பு எல்லை... சிவ்ராஜ் பாட்டீல் ராஜினாம செய்து விட்டார்.. சிதம்பரம் வந்து முதல் வேலையாக கடலைச் சுற்றி சுவர் எழுப்புவார்..?? சிதம்பரத்தை நிதித்துறையில் இருந்து தூக்கிவிட மிகச் சரியான சந்தர்ப்பம்.. பயன்படுத்திக் கொண்டார்கள்.. அவ்வளவே.. அரசியல்..

இப்படி மேற்கூரிய மூன்று விசயத்தையும் சற்று உற்றுப் பார்த்தால்..

1.. நாம் எப்பொழுதும் ரிஆக்டிவ்வாகத்தான்(Reactive) இருந்து/இருக்கிறோமே தவிர ப்ரோ ஆக்டிவாக(Proactive) இல்லை..

2. எது நடந்தாலும் மரக்கட்டை மனம் ஏற்றுக் கொண்டு, சில நாட்களில் நடக்கவிருக்கும் அடுத்த அதிர்ச்சியில் பழையதை மறந்து விட்டு.. "உச்" கொட்டிக் கொண்டே.. இருக்கிறோம்..

சில நாட்கள் ஏதும் எழுதாதன் காரணமும் இதுதான்.. சில நாட்கள் எழுத போகாததன் காரணமும் இதுதான்..

..