பிறந்த நாள்-கவிஞர் வைரமுத்து...

வைரமுத்து... எனக்கு மிகப் பிடித்த கவிஞர்.அவரைப் பற்றிய விமர்சனங்கள் ஏராளம். திமிர்,கர்வம் என ஏதேதோ.அவை எனக்கெதற்கு?. வைரமுத்து என்ற பெயரைத் தாங்கி வரும் எழுத்துக்கள் எப்பொழுதுமே என்னை ஈர்த்துக் கொண்டு தான் இருக்கிறது.


“வானம் எனக்கொரு போதிமரம்” என்ற வார்த்தையில் சட்டென திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர்.அதுவரை வானத்தை யாரும் அப்படியொரு கோணத்தில் சொன்னதில்லை.

வார்த்தைகளின் விளையாட்டிலும் பொருளும் அறிவியலும் பாடல்களில் புகுத்திக் கொண்டே இருப்பவர்.

“வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனைய..முகிலெடுத்து முகம் துடைத்து..” என ஜாலம் காட்டிய பாடலில் “முகவரிகள் தவறியதால் முகிலினங்கள் அழுதிடுமோ அது மழையோ” என ஜாலத்தையும் மீறி கற்பனை லாஜிக்கில் அனைவரையும் கவர்ந்தவர்.

ஒரு பாடலாசிரியராய் சில அல்லது பல வேடங்கள் அல்லது தையல்காரராய் மாறிக் கொண்டே இருந்தாலும், வைகறை மேகங்களில் தொடங்கி இன்று வரை அவரின் புத்தகங்களில் தனி முத்திரை பதிந்த வண்ணம்தான் இருக்கின்றன.

‘காவி நிறத்தில் ஒரு காதல்’...வைரமுத்துவின் படைப்பில் பலவருடங்களுக்கு முன் வந்த இந்த கதையின் நாயகன்(இளங்கோ?) இன்னமும் கண்முன்னே ரத்தமும் சதையுமாய் நடமாடுகிறான் என்னுள்.இளங்கோவின் வழியே வைரமுத்துவின் வார்த்தைகள் மிக நுட்பமாய் பதியப்பட்ட கதையது.


‘இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.’


துப்பாக்கி எப்போது பூப் பூப்பது என்ற வரிகள் இன்னமும் மனதில்..எப்பொழுதோ,எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஈழத்தைப் பற்றிய கவிதை.இன்னமும் ஈரமாய்.வைரமுத்துவின் வரிகளின் அடர்த்தியது.


காதலியின் நினைவில் வாடும் காதலன் இயற்கைகளை வர்ணித்துக்கொண்டே அதன் ஒவ்வொரு நிகழ்விலும் அவளின் ஞாபகங்கள் வருவதாய் எழுதிவிட்டு,கடைசியில் அவனின் நினைப்பு எப்பொழுது வருமென்று கூறுகையில், ஏதாவது இறுதி ஊர்வலத்தைப் பார்க்கும் பொழுதா?” என்று முடித்தது இன்னும் நினைவில்.

ஒரு மத்திய தர பெண், அலுவலகத்திற்கு போகும் பொழுது எதிர்கொள்ளும் அத்தனை துன்பங்களையும் வரிகளில் செதுக்கி,

கன்னிமை உடைக்க உண்டியல் உடைத்தேனா..

திருமணம் தாமதம்..இந்தியாவிற்கு சுதந்திரம் தாமதம்,சுபிட்சம் தாமதம்,என தாமதத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இன்னுமொரு கவிதையில் கணவன் கலவியை ஒரு இயந்திரம் போல் நினைத்து செயல்படுத்துவதை,

கூந்தல் உலர்த்தும் முன்
குறட்டை விடுமென் காதற் கணவா இஃதில்லை யான்கேட்பது

என்று பளீரென சொல்லிப் போகும் வைர வரிகள்.


ஒன்று சுதந்திரத்தின் வானம்
இல்லை என்றால்
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குகளுக்கில்லை

என்று விலங்குகளின் பெருமை பேசும் வரிகள்..

ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்... என்ற வரிகளை ஹிந்தியில் மொழிபெயர்க்க விழி பிதுங்கியதாக ஜாவித் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத்தேவரையும் கதைமாந்தர்களையும் கண்முன் நடமாட விட்டவர்.

கருவாச்சி காவியத்தில், கருவாச்சி யாருமற்ற தனிமையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொள்ளும் வரிகளை விட சிறந்ததாய் இனி வைரமுத்துவே எழுதமுடியாது.

இன்று பிறந்த நாள் காணும் வைரமுத்து வாழ்க பல்லாண்டு...

பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இருந்து இருபதுகளின் புகையிறுதி வரை வைரமுத்துவை வெறித்தனமாக வாசித்தவன் நான்.இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,கொடிமரத்தின் வேர்கள் என பட்டியல் பெரிது..

“உன்னை நான் வணங்காமல் போனால்
என்னில் தமிழ் இணங்காமல் போகும்’

இதுவும் வைரமுத்துவின் வரிகள் தான்.


(கவிதைகள் நினைவில் இருந்து எழுதியது..சிறு தவறுகள் இருக்கலாம்.)


..

44 comments:

நையாண்டி நைனா July 13, 2009 4:41 PM  

Happy birthday to kavingar

முரளிகண்ணன் July 13, 2009 4:41 PM  

\\பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இருந்து இருபதுகளின் புகையிறுதி வரை வைரமுத்துவை வெறித்தனமாக வாசித்தவன் \\

nice

நையாண்டி நைனா July 13, 2009 4:42 PM  

/*ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்... என்ற வரிகளை ஹிந்தியில் மொழிபெயர்க்க விழி பிதுங்கியதாக ஜாவித் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.*/

Yes. I too have read this.

முரளிகண்ணன் July 13, 2009 4:46 PM  

கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் வலைப்பூ பூஞ்சோலையாக மலர்ந்திருக்கக் காரணம் நீங்கள் இளவயதில் நனைந்த இலக்கிய மழைதானோ?

பைத்தியக்காரன் July 13, 2009 4:55 PM  

நர்சிம்,

வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. என்னைப் போல் ஒரு சக மனிதன் என்ற அளவில் அதை ஏற்கிறேன்; பதிகிறேன்; விமர்சனமும் வைக்கிறேன்.

வைரமுத்துவின் முதல் கவிதைத் தொகுதி - பெயர் நினைவில் இல்லை - அது அப்பட்டமாக நா. காமராசனின் 'கண்ணீர்ப் பூக்க'ளை வரிக்கு வரி இமிடேட் செய்தது. இத்தனைக்கும் நா. காமராசனின் அந்த கவிதை நூல், பல பரிசுகள் பெற்று, பல பதிப்புகளை கண்ட தொகுதி. வைரமுத்துவின் இந்த 'திருட்டு' குறித்து அப்போது பெருமளவில் சர்சைகளும் நடந்தன, வெடித்தன :-) அடிதடி வரை சென்றதாகவும் கேள்வி :-(. பிறகு 'பெரியவர்கள்' (சாதி?) தலையிட்டு சமாதானம் செய்தார்கள்.

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்; இல்லையென்ற சொல்லைத் தாங்குவதென்றால் எனக்கு இன்னுமொரு ஜெனமம் வேண்டும்...' பாடல் வரிகளில் பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையின் சாயலை அப்பட்டமாக காணலாம். போலவே, 'மழை கவிதை கொண்டு வருது... கறுப்புக் கொடிகள் காட்டி யாரும் கதவடைக்க வேண்டாம்' என்பது ஒரு அரேபிய பாடலின் சாயல்.

இதுதவிர, வைரமுத்துவை குறித்து எழுதும்போதெல்லாம் கணவருக்காக தன் சுயத்தையும், திறமையையும் மூடி மறைத்த பொன்மணி அம்மாளையும் நினைவுகூர்வோமே :-) பொன்மணி இல்லாவிட்டால் வைரமும் இல்லை; முத்தும் இல்லை என்பது வெளியில் தெரியாத நிஜமல்லவா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ராஜா | KVR July 13, 2009 5:01 PM  

அவரது தனிப்பட்ட குணங்கள் மீது எனக்கும் சில மாற்றுக்கருத்துகள் உண்டு, ஆனால் குறையில்லாத மனிதர் யாரிங்கே?

பெரியார்தாசன் ரியாத் வந்திருந்தபோது தனது மாணவரான வைரமுத்து பற்றி வெகுவாக புகழ்ந்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவருக்கு இருந்த தமிழ்புலமை, கவித்திறன் என எல்லாவற்றையும் புகழ்ந்தார் - ஆசிரியர் மெச்சும் மாணவராக இருப்பது பெருமை.

கவிதை எழுதுவதில் வைரமுத்து கூறிய அறிவுரை - கவிதை எழுதத் தொடங்கும் முன் வெண்பா எழுதிப் பழகுங்கள் என்றார். வெண்பா எழுதும் முயற்சியிலேயே நிற்கிறேன் - கவிதை எழுதும் தைரியம் இல்லாமல்.

அண்ணாவை ”நாலடி இமயமே” என்று விளித்த கருப்பு வைரமே - உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

நர்சிம் July 13, 2009 5:08 PM  

பை.அண்ணே..

முதல் புத்தகம் நான் அறிந்த வரையில் வைகறை மேகங்கள்.அதில் இருந்த பல கவிதைகள் அமர்க்கள்ம் படத்தில் கூட உபயோகப்படுத்தப் பட்டது(மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு..etc..)

நீங்கள் கூறியது பற்றி தெரியாது.அது உண்மை என்றால், நா.காமராசரின் வைகறை மேகங்கள் நன்றாக இருந்தது என்றே நான் நினைத்துக் கொள்கிறேன்.


அதற்காக மற்ற வரிகளை அதன் நீட்சி,இதன் தழுவல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

எல்லாவரிகளுமே,எல்லா கருத்துக்களுமே எங்காவது யாராலாவது சொல்லப்பட்டது தான்.சொல்லும் விதமும் மொழியும் வார்த்தைகளுமே அவரவர் சிறப்பு.


தோள் கண்டார் தோளே கண்டார் என்ற கம்பரின் வரிகளின் தழுவல் தான் தோள் கண்டேன் தோளே கண்டேன் என கண்ணதாசன் எழுதியது.அதற்காக கம்பனை கண்ணதாசன் காப்பி அடித்ததாக அர்த்தமில்லை.


பொன்மனி ஒரு கல்லூரி விரிவுரையாளர். அவரின் விருப்பம் எதுவோ அதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.அவரது உரையாடலில் தலையிடும் அதிகாரம் நமக்கில்லை என்றே எனக்குப் படுகிறது..

என்றாலும் பொன்மனி அப்படி ஒன்றும் வைரமுத்துவிற்காக விட்டுக் கொடுத்ததாக தெரியவில்லை.அவரின் தளத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்.

கே.ரவிஷங்கர் July 13, 2009 5:39 PM  

நாங்கள் கல்லூரிப் படிக்கும் போது படுத்தி எடுத்தவர்.கவிதையில் ஒரு துள்ளல் சுஜாதா.


விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உறவில் கலந்த உறவே
இரவும் பகலும்
உரசிக்கொள்ளும் வேளையில்
வந்துவிடு!
..........
அலைகள் உரசும் கரையில்
இருப்பேன் அந்திப் பொழுதில்
வந்துவிடு

உன் வெள்ளிக் கொலுசொலி
வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும்.........

தகதோம்...தகதோம்...தகதோம்
வைரமுத்துக்கு சவலாக The Maestro
Raja புல்லாங்குழல் மற்றும் vocalலில்
பின்னியெடுப்பார்.இந்த பாட்டு முட்டம் கடல் காட்சி பின்னணியில்.

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் நல்லா இருக்கும்.

நன்றி தல.

கார்க்கி July 13, 2009 5:48 PM  

ஜீன்ஸ் படத்தில் வரும், பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி கூட ஒரு உருது கவிதைதான்.. அதுவல்ல மேட்டர்..

அதையும்க் தாண்டி வைரமுத்து ஒரு மாபெறும் கலைஞன். சில வரிகள் எடுத்தாள்வது சினிமாவில் வழக்கமான ஒன்று..

80க்ளில் ஒரு பாடல்..

மெல்லினங்கள் பாடு பெண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்..

அதன் பின் வருபவை எல்லாம் மெல்லினங்கள் மட்டுமே..

வைரமுத்து.. வைரம்தான்..

நர்சிம் July 13, 2009 5:52 PM  

கலக்கல் சகா. ஆனா..கடைசி பாயிண்ட் தப்புன்னு நினைக்கிறேன். அதாவது வல்லினங்கள் வாய் வலிக்கும்னு கதாநாயகன் சொன்னதும் நீ என்னடா சொல்றது நான் என்னடா கேட்கிறதுன்ற மனோபாவத்துல..

சந்தமே இன்று வந்தது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல்
என்றும் வாழ்கவே

ந்னு ஒரே வல்லினமா பாடுவாங்க..

முரண்ல.

குடந்தை அன்புமணி July 13, 2009 6:03 PM  

கவிஞருக்கு பிறந்தநாள்...அவரைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உண்டென்றாலும், அவரால் பல கவிஞர்கள் உருவானார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. வாழ்த்துகள்...

ரமேஷ் வைத்யா July 13, 2009 6:33 PM  

கண்ணீர்ப் பூக்கள் மு.மேத்தாவின் கவிதைத் தொகுப்பு. எல்லாமே அழுகாச்சி கவுஜகள். 1985‍ல் நான் வாங்கியது 18 வது பதிப்பு. வைகறை மேகங்கள் வந்த சமயத்தில் நா.காமராஜன், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டுகளும் போன்ற பிரபலமான புத்தகங்களை எழுதியிருந்தார். வைகறை மேகங்கள் மரபுக் கவிதைத் தொகுப்பு.

mvalarpirai July 13, 2009 6:33 PM  

நர்சிம் பதிவுக்கு நன்றி !

கவிஞர் வைரமுத்து அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்.
விமர்சித்த பைத்தியக்காரன் அண்ணே நீங்க சொல்றது உண்மையா கூட இருக்கலாம்..தவறா செய்யாத மனிதன் இல்லை.
.நீங்கள் அவரின் நிறைகளையும் சொல்லி இருப்பீர்கள் ஆனால் அதில் இரு நியாயம் இருந்திருக்கும்..அதை விட்டு இப்படி உள் நோக்கோடு எழுதுவது முறை அல்ல !

அத எப்படினே கூச்சமே இல்லாம சாதி, காப்பி, பொன்மனி எழுதி கொடுத்தாங்கனு பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்றீங்கனு எனக்கு புரியல!
ஒருத்தர் நல்லாயிருந்த போதுமே விமர்சிக்க வந்துவாங்க ! அவர் எழுதிய எத்தனோ நல்ல கவிதைகள், வாங்கிய விருதுகள் இவர்கள் கண்ணுக்கு தெரியாது..ஒரு குறை இருந்தால் போதும் அத பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பர்.உங்களை சொல்லி குற்றம் இல்லைங்க ! நம்மோட மன நிலை ஒருத்தனையும் ஒழுங்கானவனு ஒத்துக்க மாட்டோம்..எல்லாத்திலயும் அவ நம்பிக்கை ..
நம் மோட எண்ணம் தான் நமக்கு எதிரி ! 5 முறை தேசிய விருது வாங்கிய கவிஞனை பார்த்து அசால்டா காப்பி அடிச்சு தான் பெரியால ஆனான் போற போக்கில சொல்லிட்டு போறீங்க !
கவிஞர் கல்லூரியில் கண்ணகி பற்ற எழுதிய கவிதை சிலப்பதிகாரத்தை காப்பி அடிச்சது ..அப்புறம் காதல்,தத்துவம் எல்லாம் காசு கொடுத்து வாங்கினதுனு சொல்லிட்டு போங்க !

உங்கள் காப்பி குற்றசாட்டுக்கு நர்சிம் பொருத்தமான் பதிலை சொல்லி இருக்கிறார்.

உங்களுக்காக்வே கவிஞர் இன்னொரு தேசிய கீதத்தில் முதல் கவிதையே "புதைத்தாலும் முளைப்பேன் " தலைப்பில் என் பிரிய எதிர்களே என்று தொடங்கும் கவிதை எழுதியிருக்கிறார் வாங்கி படிங்க !
உங்கள் முகவரி கொடுங்கள் வைரமுத்துவின் புத்தங்கள் சிலவற்றை அனுப்பி வைக்கிறேன். படித்து விட்டு அப்புறம் எழுதுங்க உங்க கற்பனை குதிரை தட்டிவிட்டு ...

அவரின் வரிகளிலே உங்களுக்கு பதில் சொல்லவேண்டுன் என்றால்

பொய்கள் -நிஜத்தை தீண்டலாம்
திருடி விட முடியாது
எழுதிக்கொள்ளுங்கள் எதிரிகளே !

பாராட்ட வேண்டாம் ..தூற்றாமல் இருங்க !

வாழ்க கவிஞர் ! வளர்க மேலும் !

அனுஜன்யா July 13, 2009 6:37 PM  

பல அபாரமான வரிகள் எழுதிய சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து. அதைத் தாண்டி சில புத்தகங்கள் படித்திருந்தாலும், இப்போது உடனே வரிகள் நினைவில் இல்லை.

ஆனால், எப்போதும் ரசிக்கும் அவரின் சில வரிகள்:

நாம் மிகவும் பொல்லாதவர்கள்
மல்லிகைப் பூவில் கூட
ஜாதி பிரித்துவிடுகிறோம்

நதிக்கரையில் பிறந்ததாம்
நாகரீகம்
நதிக்கரையில் பிறந்துமா
இத்துணை அழுக்கு!

அனுஜன்யா

தீப்பெட்டி July 13, 2009 6:44 PM  

//“உன்னை நான் வணங்காமல் போனால்
என்னில் தமிழ் இணங்காமல் போகும்’//

உண்மை தான்..

கவிஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..

Marathamizhan July 13, 2009 6:45 PM  

நர்சிம்,

வைரக்கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

அவரின் கவிதை தாக்கம் இன்றி நீங்கல் கூறிய பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இருந்து இறுபதுகளின் புகையிறுதி(!!!)வரை யாரும் கடந்திருக்க முடியாது.ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி ந‌ர்சிம்.

பை.அண்னே,

நீங்க‌ல் சொல்வ‌தைப்ப‌ர்த்தால் அவ‌ர‌து அனைத்து ப‌டைப்புகளையும் (க‌விதை/பாட‌ல்க‌ள்)எழுதிய‌து அவ‌ர‌து ம‌னைவியா ?

ந‌ல்ல‌ காமெடினே உங்க‌ளோட‌ !

உங்க‌ வாசிப்ப‌னுப‌வ‌ம் பிர‌சித்தி பெற்ற‌துதான்...அதுக்காக பொன்மனி இல்லையென்றால் வைர‌மும் இல்லை..முத்தும் இல்லை என்ப‌தெல்லாம் கொஞ்ச‌ம‌ல்ல‌ ரொம்ப‌வே ஒவ‌ர்...

கார்க்கி,

அவ‌ர‌து ஒரு ம‌க‌னின் பெய‌ரும் (மதன்)கார்க்கி தான்....

ந‌ட்புட‌ன்,
ம‌ற‌த்த‌மிழ‌ன்...

அ.மு.செய்யது July 13, 2009 6:48 PM  

எனக்கு வைரமுத்துவின் வரிகளில் பிடித்தது.

பெண்கள் மீது மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்தப்பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்

நீதானே மழை மேகமெனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு..

வெறும் ஓசைநயத்தை ம‌ட்டுமே பாடல் எழுதிய தமிழ்த்திரையுலக வரலாற்றில்
பொருளுக்கு கர்ம சிரத்தை தந்து பாடலெழுதிய டிரெண்ட் செட்டர் வைரமுத்து.

ஹேட்ஸ் ஆஃப் வைரமுத்து.

அனைத்தையும் தொகுத்து அழகாக தந்த நர்சிம்முக்கும் சேர்த்து..

Karthikeyan G July 13, 2009 6:54 PM  

கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

அவரது உபதேச கவிதைகளில் இன்னமும் நினைவில் இருக்கும் வரி
"அறிவாளியாய் இரு
முட்டாளாய் நடி"

கவிஞர் இந்த வரிகளை பின்பற்றுபவர் அல்ல. He is vise versa :)

ஸ்ரீ.... July 13, 2009 7:18 PM  

நல்ல இடுகை நர்சிம். நானும் முயற்சித்திருக்கிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

ஸ்ரீ....

கார்க்கி July 13, 2009 7:22 PM  

மறத்தமிழன்,

தெரியும். ஒரு காலத்தில் மதன் கார்க்கியும் நானும் ஆர்குட் நண்பரக்ள். இப்போதும் என் க்தைகளில் நாயகனின் பெயர் மதனாகத்தான் இருக்கும்.. (புட்டிக்கதையில் இல்லப்பா)

வைரமுத்துவின் வார்த்தைகள் மெட்டுக்குள் கச்சிதமாக அடங்கும். இலக்கியத்தில் வைரமுத்துவின் பங்கைப் பற்றி என்னால் சொல்ல இய்லாது. ஆனால் ஒரு பாடாலசிரியராக அவர் ஜாம்பவான்..

குழந்தையின் சினுங்கல்
குமரியின் வளங்கள்
முரண்பாட்டு மூட்டை நீ..

ஆசைப்பட்ட வெள்ளாடே
மீசைப் புல்லை மேயாதே
மேலும் மேலும் பசியா
என் மீசை என்ன ருசியா?

உன் விழியால்
பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம்...

கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்

உயிரை வேறோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி..



போயிட்டே இருக்கும்..

அக்பர் July 13, 2009 7:36 PM  

நல்ல கவிஞர். அவரைப்பற்றி நீங்கள் எழுதியது அருமை.

நாடோடி இலக்கியன் July 13, 2009 7:48 PM  

காவி நிறத்தி ஒரு காதல் எப்போதோ படித்தது.அதில் வரும் கதாநாயகியிடம் போலிஸார் நடந்து கொள்ளும் அத்து மீறல்கள் குறித்து நாயகி பேசும் வசனங்களாக வரும் அந்த 'லத்தி' உரையாடல் நினைவிருக்கிறதா நர்சிம். படித்தபோது உயிரை உலுக்கியெடுத்த வரிகள்.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத் தேவருக்கும்,அவரது பதின்ம வயது காதலிக்கும்(முருகாயி என்று நினைவு) இருக்கும் உறவை அழகாகச் சொல்லியிருப்பார்.

திரைப் பாடல்களில் "தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது", "பாசத்தை பங்கு போட பட்டா இல்லையே" இப்படி எத்தனையோ வரிகள் சொல்லிட்டே போகலாம்.

கவிஞர் வைரமுத்துவை வணங்கி மகிழ்கிறேன்.

சாலிசம்பர் July 13, 2009 7:51 PM  

"அவர் ஒரு இ'லக்கி'யவாதி,பல விருதுகள் 'வாங்கி'யவர்."

மேற்படி கருத்து ஆவி அறிவுசீவி மதனுடையது.

***
அவருடைய கள்ளிக்காட்டு இதிகாசத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.கனமான கரு ஒரு காரணம் என்றால் மதுரை வட்டார வழக்கு முக்கிய காரணம்.அந்த அளவிற்கு மதுரை வட்டார மொழியில் பட்டையைக் கிளப்பும் இன்னொரு நூலை அறியவில்லை. அதே போன்றதொரு உணர்வு தான் உங்களுடைய 'செம்பட்டைக்கிழவி'யிலும் இருந்தது.

'உன் மீது அடித்த புயல்
இமயத்தின் மீது அடித்திருந்தால்
இமயமே
இடம் பெயர்ந்திருக்கும்'
கலைஞர் மீது பாடிய பாட்டு,இருபது ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது,இன்னும் மறக்க முடியவில்லை.

'வைகறை மேகங்கள்' அவருடைய பதினேழு வயதில் வெளிவந்ததாம்.பிறவி மேதை என்பதை பறைசாற்றும் நூல்.

வைரமுத்து வாழ்க.

(சூப்பர்ஸ்டார் என்பதைப்போன்று பெருஞ்சூப்பர்ஸ்டார் என்று யாராவது அழைக்கப்பட்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கிறது கவிப்பேரரசு என்று அழைக்கப்படுவதும்.)

அபுஅஃப்ஸர் July 13, 2009 11:47 PM  

வைரமுத்துவை எனக்கும் நன்கு பிடிக்கும்

நீடுழி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

சுல்தான் July 14, 2009 1:00 AM  

"இது வெண்மணிகளை விட மீனாட்சிபுரத்துக்காக கவலைப்படும் காலகட்டம். தேசத்தின் தெருக்களில் சுவாசிக்கும் பிணங்களின் தொகை அதிகம் இப்போது. மானத்தை விமானத்திலேற்றி வெளியேற்றி விட்டார்கள். இப்படியே போனால் இன்னொரு தொல்காப்பியம் மனிதனை உயர்திணையில் செர்ப்பது பற்றி யோசிக்கும்"
என்ற சிந்திக்க தூண்டும் சிறந்த வரிகளுக்கு சொந்தக்காரர்.

தமிழ் வாழ, நீடு வாழட்டும்.

உயிரோடை July 14, 2009 8:33 AM  

வைரமுத்து கவிதையில் பாட்டில் பல ரசிக்கும் படி இருக்கும் உதாரணத்துக்கு

"உள்ளங்கை கடந்து ஒழுகிய நிமிடங்களை"

"கவிதை வரியின் சுவை கற்று தெளியும் வரை"

"அவரைக்கு பூ அழகு"

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லாவற்றிலும் சிறந்தது யசோதரை புத்தரை நீயா துறவி யாமே துறவி என்பது போல கவிதை வரும். க்ளாகிக்.

ஆதிமூலகிருஷ்ணன் July 14, 2009 11:56 AM  

நிச்சயம் வைரமுத்து போற்றுதலுக்குரியவர்.. 90களில் காதலித்தவர்கள் இவரின் வரிகளின் மீதே காதலை வளர்த்தனர் என்றும் சொல்வேன்.. வாழ்த்துகள்.!

செல்வேந்திரன் July 14, 2009 2:45 PM  

சிவராமன் அண்ணாவிற்கு,

வைரமுத்து அங்கே திருடினார், இங்கே திருடினார் என்று அவரது ஒவ்வொரு கவிதைக்கும் அல்லது பாடலுக்கும் உலகின் ஏதோவொரு மூலையிலிருந்து மூலம் கொண்டு சேர்ப்பித்து விட முடியும். ஏனேனில் உலகம் முழுக்க தெருவுக்கு நூறு கவிஞர்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வது உண்மை என்று ஒருவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், நான்கு பேருக்குத் தெரிந்ததை நான்கு கோடி பேர்களுக்குத் தெரியவைப்பதை இலக்கியக் கடத்தல் என்று கருதுதுவதில் ஏதேனும் பிழையிருக்கிறதா?

வைரமுத்து எனும் கவிஞனின் பேய் உழைப்பை நண்பர்கள் பலரது வாயிலாக கேட்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் நாஞ்சில் நாடனுடான சந்திப்பொன்றில் 'வைரமுத்துவைக் காட்டிலும் கடுமையா உழைக்கிறேன்பா' என்று ஓப்புமைக்கு வைரமுத்துவை எடுத்துக்கொண்டார்.

ஆசியக்கண்டத்திலேயே அதிரடி ஆட்டக்காரனாக ஜெயசூர்யா உருவாகிக்கொண்டிருந்த காலம் அது. எந்த பவுலரும் அவரது பெயரைக் கேட்டாலே ஒண்ணுக்குப் போவார்கள். அப்போது இந்தியா முழுதும் ஒரு வேடிக்கையான வதந்தி நிலவியது "அவரு பேட்டுக்குள்ள ஸ்பிரிங் இருக்குப்பா... அதாங் அடிக்கிறதெல்லாம் சிக்ஸாகுது..." நீங்கள் சொன்ன பொன்மணி சமாச்சாரம் அந்த வதந்தியையும் மிஞ்சுகிறது. வைரமுத்து பல இளம் கவிஞர்களுக்கு சம்பளம் கொடுத்து எழுதி வாங்குகிறார். புத்தகம் போட முடியாத கவிஞர்களின் கவிதை நோட்டுக்களை 'நனைஞ்ச கோழி' விலைக்கு வாங்கிப் பிழைக்கிறார் என்று எத்தனையோ ஹேஸ்யங்கள். சபையில் நிரூபணம் செய்ய முடியாத ஊகங்களை வைத்துக்கொண்டு ஆளுமைகள் மீது புழுதியடிக்க வேண்டுமா?!

டிஸ்கி:

இது எனக்கும் சிவராமன் அண்ணாவிற்குமான தனிப்பட்ட உரையாடல் என்று கருதுக. 'தமிழிலக்கிய அத்தாரிட்டிகள்' சொம்பு தூக்கிக் கொண்டு வரவேண்டாம் என அவர்களது பாதங்களைப் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

பட்டாம்பூச்சி July 15, 2009 1:49 PM  

Happy Birthday to Kavignar Vairamuthu.
Nice write-up on him Narsim anne.

manasu July 15, 2009 4:08 PM  

வைரமுத்துவின் பல சினிமா பாடல்களை ஜாவேத் அக்தர் இந்திக்கு இமாற்றியிருக்கிறார். அதனால் ஜாவேத் அக்தர் சிறந்த கவிஞர் அல்லாதாகிவிடுவாரா?

இந்தகுளத்தில் கல் எறிந்தவர்களில் சொல்லியிருக்கிறார் ஷோபா இறந்ததற்கு "நீ என்னை பாத்திதாய் சகோதரி புல் தரையில் பூ விழுந்தது போல்" மென்மையாய்.

அழகான வரிகள்.

புருனோ Bruno July 19, 2009 11:22 PM  

//“வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனைய..முகிலெடுத்து முகம் துடைத்து..” என ஜாலம் காட்டிய பாடலில் “முகவரிகள் தவறியதால் முகிலினங்கள் அழுதிடுமோ அது மழையோ” என ஜாலத்தையும் மீறி கற்பனை லாஜிக்கில் அனைவரையும் கவர்ந்தவர்.//

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட என்பதற்கு பதில் இந்த வரிகளை வைத்து கூட தற்குறிப்பேற்றணியை விளக்கலாம்

http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/12/blog-post.html

புருனோ Bruno July 19, 2009 11:25 PM  

//ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்... என்ற வரிகளை ஹிந்தியில் மொழிபெயர்க்க விழி பிதுங்கியதாக ஜாவித் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.//

இது போல் வெள்ளி மலரே பாட்டிலும் ஒரு உவமை உண்டே

புருனோ Bruno July 19, 2009 11:28 PM  

//கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்; இல்லையென்ற சொல்லைத் தாங்குவதென்றால் எனக்கு இன்னுமொரு ஜெனமம் வேண்டும்...' பாடல் வரிகளில் பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையின் சாயலை அப்பட்டமாக காணலாம். போலவே, 'மழை கவிதை கொண்டு வருது... கறுப்புக் கொடிகள் காட்டி யாரும் கதவடைக்க வேண்டாம்' என்பது ஒரு அரேபிய பாடலின் சாயல்.//

சார்

ஈட்டி ஆட்டு துரையின் ஒத்தேல்லொ கூட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் சாயல் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள் (சிலம்பிற்கு பதில் கைக்கூட்டை)
!!!

புருனோ Bruno July 19, 2009 11:37 PM  

இரவு தனியாக் அமர்ந்து படித்திருக்கிறீர்களா

--

கடிகார சத்தம்,
காற்றில் இலை அசையும் சத்தம்,
தொலைவில் எங்கோ தொடர்வண்டி செல்லும் சத்தம் கேட்டிருக்கிறீர்களா

--

பூ பூக்கும் ஓசை பாடலை கேட்டுப்பாருங்கள்

புருனோ Bruno July 19, 2009 11:43 PM  

//ஆசியக்கண்டத்திலேயே அதிரடி ஆட்டக்காரனாக ஜெயசூர்யா உருவாகிக்கொண்டிருந்த காலம் அது. எந்த பவுலரும் அவரது பெயரைக் கேட்டாலே ஒண்ணுக்குப் போவார்கள். அப்போது இந்தியா முழுதும் ஒரு வேடிக்கையான வதந்தி நிலவியது "அவரு பேட்டுக்குள்ள ஸ்பிரிங் இருக்குப்பா... அதாங் அடிக்கிறதெல்லாம் சிக்ஸாகுது..." நீங்கள் சொன்ன பொன்மணி சமாச்சாரம் அந்த வதந்தியையும் மிஞ்சுகிறது.//

பெர்லின் ஒலிம்பிக்சில் இந்திய ஹாக்கி வீரர்களின் மட்டைகளை பறிமுதல் செய்து விட்டு புது மட்டைகள் வழங்கிய கதை ஞாபகத்திற்கு வருகிறது

அதன் பிறகும் நம் ஆட்கள் அரையிறுதியில் 10 கோல்களும் இறுதி ஆட்டத்தில் 8 கோல்களும் அடித்து வென்றனர்

புருனோ Bruno July 19, 2009 11:50 PM  

உன் பெயரும் என் பெயரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறுவது

--

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உறவில் கலந்த உறவே

--

எல்லாம் சரி

--

ஒரு விதை உயிர் கொண்டது
இரு நெஞ்சில் வேர் கொண்டது


என்று காதலை இதை விட அருமையாக கூற முடியுமா

--

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன், உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

--

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே வான்வெளியை தாலாட்டுதே கரைகின்ற பிறையந்து கைவீசியே சூரியனை தாலாட்டுதே.

முடியாத யாத்திரை முடிகின்ற வேலையில்
முத்தங்கள் தந்து முள்ளானாய் சேலையில்

மரணம் என்பது என் வாழ்வின் வரவா செலவா
முள் என்பது ரோஜாவின் உறவா பகையா

--

அந்த படத்தை பார்த்தால் இந்த பாடல் அந்த கதையுடன் எப்படி இணைந்து வருகின்றது என்று தெரியும்

புருனோ Bruno July 19, 2009 11:56 PM  

ஹீரோசிமா குறித்த அவரது கட்டுரையை வாசித்தவர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள்

புருனோ Bruno July 19, 2009 11:58 PM  

//ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்//

சிவராமன் சார்

இது கூட செம்புலப்பெயல் நீர் போல் பாடலின் காப்பி என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

புருனோ Bruno July 20, 2009 12:02 AM  

//வெள்ளி மலரே வெள்ளி மலரே
னேற்றுவரை நீ நெடுவானம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
//

//ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்..//

சிவராமன் சார்

பாருங்க வைரமுத்து அவரது பாடலிலிருந்தே காப்பி அடிக்கிறார்... :) :)

----

அதே பாடலின் இறுதி வரி

இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

wow !!!

புருனோ Bruno July 20, 2009 12:03 AM  

பௌர்ணமி என்பது மாதத்தின் புன்னகை !
உன் வருகையில் பூத்தது என் வாழ்க்கையின் புன்னகை !!

புருனோ Bruno July 20, 2009 12:05 AM  

வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும் - மழை பாடும் பாடல்களும்
ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் - கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

எங்கு சிறு குழந்தை - தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் - போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு
கூவாயோ வெள்ளை குயிலே.

புருனோ Bruno July 20, 2009 12:06 AM  

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு


யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்

மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்

தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும் (புத்தம் புது)

Susarithaa July 29, 2009 1:05 PM  

கவிஞரின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! பரீட்சைக்கு முதல் நாள் என்னை கட்டிப் விட்ட அனுபவம் அது கவிப்பேரரசுவினால் மட்டுமே முடியும். அவரை வாழ்த்த வயதில்லை விமர்சிக்க தகுதி இல்லை அதனால் இன்னும் இன்னும் கவிதைக்கு பெருமை சேர்க்க பிரார்த்திக்கிறேன். (இலங்கையிலிருந்து)

ப்ரியமுடன் வசந்த் July 13, 2010 1:17 AM  

அட்டகாசமான எழுத்து தல...

இன்னிக்கு பொறந்த நாள் காணும் கவிஞனின் பெருமைகளை அதுபோக்கில் சொல்லி செல்கிறது வரிகள்...