வாழத்தான்
வேண்டி இருக்கிறது
அப்பாவிற்காகவோ
அப்பா
ஆனதிற்காகவோ
அங்கிங்கெனாதபடி
எங்கும் ஏங்கும்
பணத்திற்காகவோ
பாறை இடுக்கின்
பறவை இட்டுப்போன
காய்ந்த எச்சம்
போல
உயர் கட்டிட
மொட்டைமாடியின்
மணல் மூலையில்
துளிர்த்த
மழைக் காலச்
செடியைப் போல
வாழத்தான்
வேண்டி இருக்கிறது
நாளை எனும்
நாளை நோக்கி.
நாளை எனும் நாளை எனும் நாளை...
Labels: கவிதை
என்’ணங்கள் 26/11/09
இதுவரை பொடி நடையாக யாத்திரையில் இருந்த யாத்ரா நாளை முதல் வாழ்க்கைப் பயணத்தை விறுவிறு என தொடங்க இருக்கிறார். நாளைக்கு நிச்சயதார்த்தம் (லாக்..வெட் லாக்..லாக்கே தான்). வாழ்த்துக்கள் கவிஞர் யாத்ரா. இனி தான் பயணமே.
*******
‘எல்லா சாலைகளும் ரோமை நோக்கி’ என்ற வாசகம் போல அடுத்த மாதம் (டிசம்பர்) 30ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம் நோக்கியே சென்னை வாசி(ப்பாளி)களின் கால்கள்/சக்கரங்கள் போகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த முறை சில அல்லது பல சுவாரஸ்யங்கள் இருக்கப் போவது போலத்தான் பட்ஷிகள் சொல்கின்றன.
கிழக்கு பதிப்பகம் 100 புத்தகங்களுக்கு மேல் வெளியிட இருக்கிறது என்பது ஒரு செய்தி என்றால்,
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இதுவரை சொல்லப்படாத, இந்திய பியூரோக்சியின் இன்னொரு முகத்தை, இன்னும் பல திடுக் தகவல்களுடன், முதன்மை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமன் எழுதியிருக்கும் புத்தகம் ஹைலைட்டாக அமையும் என்கிறது பட்ஷி.
சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்களின் திரைக்கதையையும் புத்தகமாக வெளியிடுகிறது கிழக்கு..வெளுக்கும்.
உயிர்மையும் 100 புத்தகங்கள் வெளியிடுகிறது. சாரு, எஸ்ரா,ஜெமோ என வியூகம் பலமாக இருக்கிறது.
பறக்கும் முன் பட்ஷி சொன்ன இன்னொரு தகவல்.. பதிவர்களின் சிலரின் தொகுப்புகளும் வருகிறதாம்..ரைட்ட்ட்டு.
**********
ரமேஷ் வைத்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நூல் விமர்சனம், இலக்கிய விசாரங்கள்(அப்படித்தான் சொல்லனுமாம்) என நடந்த பேச்சில், அவர் சொன்ன ஒரு தகவல் இன்னமும் என்னில் இருந்து அகலவில்லை.
அசோகமித்ரன் ஏதோ ஒரு எழுத்தாளரின் தொகுப்பைப் பற்றிய விமர்சனம் ஒன்றில், அந்த தொகுப்பின் இலக்கிய சிலாகிப்புகளைச் சொல்லிக்கொண்டே வரும் பொழுது,
விகடனில் இவருடைய கதைகள் வெளிவந்திருக்கின்றன!
என்ற வரிகளையும் எழுதி இருந்தாராம். அந்த மொத்த மதிப்புரையிலும் இந்த ஒரு வாக்கியத்தில் மட்டுமே ஆச்சர்யக் குறி பயன்படுத்தி இருந்தது தான் மேட்டரே. அந்த ஒற்றைக் குறியில் விகடனின் தேர்ந்தெடுப்பு, அல்லது வெகுஜன இதழில் இதுபோன்ற விசயங்கள் வருவது போன்ற என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கிறதோ அத்தனையும் ஒற்றைக் குறியில் சொல்லிவிட்டுப் போவது என்பது எவ்வளவு பெரிய !.
இது எப்பொழுது சாத்தியமாகும் என்று யோசித்துப் பார்த்தால், அது போன்ற குறிகளை சகட்டுமேனிக்கு பயன்படுத்தாமல் எங்கு தேவையோ அங்கே மட்டும் பயன்படுத்தத் தொடங்கினால் மட்டுமே இப்படியான குறிப்பால் உணர்த்தமுடியும் என்ற முடிவுக்கு வரவைத்துவிட்டது. !மாக இருக்கிறதா?
********
இன்று வெளியான விகடன் இதழின் 20ம்பக்கத்தில் நம் புதுகைப்புயல் அப்துல்லாவின் பரண் கவிதை வந்திருக்கிறது.அன்னாருக்கு, ஸாரி,அண்ணாருக்கு வாழ்த்துக்கள்.
போலவே, ஜெனோவா என்ற பதிவரின் கவிதையும் படத்துடன் வந்திருக்கிறது. வாழ்த்துகள் ஜெனோவா.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
**********
பூஜ்ஜியங்களின் மதிப்பு, மைல்கல்களைத் தொடும்பொழுது தான் தெரிகிறது. ஆயிரம் பதிவுகள் என்று சொல்லும் பொழுதே கண்ணைக் கட்டுகிறது.. கண்ணனைக் கட்டவில்லை..ஆம் கோவி கண்ணன்... நான் பதிவெழுத ஆரம்பித்த புதிதில் இந்தப் பெயர் எப்படி பதிவுலகில் புயலாக இருந்ததோ இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. 1000 பதிவுகள் என்பது சாதாரண உழைப்பு அல்ல. வாழ்த்துக்கள் கோவிகண்ணன். சக பதிவராக 1000 பதிவுகள் என்பது எவ்வளவு கடினமான எண்ணிக்கை என்பதன் அர்த்தம் அறிந்து வாழ்த்துகிறேன்.. வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்கள் பாஸ்.
************
உரையாடல் அமைப்பு ஆரம்பித்து விட்டது மீண்டும் தன் வேலையை. ஆம்.
உரையாடல் அமைப்பு நடத்தப் போகும் இந்த கவிதைப் போட்டி நிச்சயம் பதிவுலகின் இன்னுமொரு மிக முக்கிய நிகழ்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஜ்யோவ்.சுந்தர்ஜியும் சிவராமனும் தங்களின் பதிவுலக வாழ்வில் செய்யும் மகத்தான பணியாகத் தான் இதைப் பார்க்கிறேன். சிறுகதைப் பட்டறை மூலம் மிக நல்ல பயன் பெற்ற பதிவுலகம் இப்பொழுது கவிதை குறித்தான போட்டியும் அதன் பிறகு,வரும் கவிதைகளைப் பார்த்து “இப்பிடி எல்லாம் எழுதக்கூடாது(டா)ப்பா” என்ற அர்த்தத்தில் பட்டறையும் நடத்தப் போவதும் நிச்சயம்.
கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களுமே பேனா சகிதம் வானம் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அனைவருக்குமே வாழ்த்துக்கள்.
நன்றி ஜ்யோவ்ஜி & சிவராமன்.
*********
வானம்பாடிகள் என்ற இவரின் பதிவுகள் அதி சுவாரஸ்யம்.வயது 52 என்று போட்டிருக்கிறார். ம்ஹூம்..கவிதைகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எனக்கு மிகப் பிடித்திருந்தது இவரின் தளம்..ஏற்கனவே பதிவுலகில் இவர் மிகப் பிரபலம் என்றாலும் இவரை சரியாக வாசிக்காமல் விட்டது தவறாகப் பட்டது எனக்கு. சிங்கையில் இருந்து பதிவர் பிராபகர் ஒருமுறை இவர் குறித்து பேசியபொழுது படித்துப் பார்த்தேன். பிடித்துப் போனது.
**********
நன்றி.
Labels: என்’ணங்கள்
ததா, தாதா..வங்கப் புலி..கங்குலி.
“ தண்ணீர் கொண்டு போவது, டவல் கொண்டு போவது.. இதெல்லாம் என் வேலை இல்லை. என்னை மஹ்ராஜ் என்று செல்லமாக அழைப்பார்கள் வீட்டில். நான் இங்கு விளையாடத்தான் வந்திருக்கிறேன். வேலை செய்ய அல்ல”
எடுத்த எடுப்பிலேயே இந்த டமால் டுமீல் துவக்கம். மேற்சொன்ன வார்த்தைகளைச் சொன்னார் என்ற குற்றச்சாட்டுடன் நான்கு வருடங்கள் ஒதுக்கி வைத்தது இந்திய கிரிக்கெட் அந்த இளம்புலியை.
92ம் வருடம் அஸாரின் தலமையிலான அணியில் இடம்பெற்ற கங்குலி இப்படிச் சொன்னதாக செவிவழிச் செய்திகள். உண்மையோ பொய்யோ ஆரம்பமே அதிரடி பஞ்சாயத்து தான். கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே ஏதாவது ஒரு விதத்தில் அதிரடி தான்.
கொஞ்சம் பெரிய சைஸ் மண்புழுக்களைப் பார்ப்பது போலத்தான் உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் பார்க்கப் பட்டுக் கொண்டிருந்தது. என்ன தான் 83ம் வருட உலக கோப்பை வாங்கி இருந்தாலும், அணியினர் ஒரு வித ‘பேங்க் மாமாக்கள்’ மனோபாவத்துடன் தான் பெரும்பாலும் நடப்பார்கள் மைதானத்தில். டீசண்ட்டாக.
"Ask Steve to shut his mouth" என்ற வார்த்தைகள் கங்குலியின் வாயில் இருந்த வரும் வரை இந்திய அணி கொஞ்சம் பெரிய சைஸ் மண்புழுவாத்தான் இருந்தது.ஏனெனில் அவருக்கு முன்னர் வாய்த்த கேப்டன்களும் மியாவ் வகைகளே. கபில் கொஞ்சம் கம்பீரம் என்றாலும் கவாஸ்கர் மிகச் சிறந்த செஸ் ப்ளேயராகவும் இருந்தது சாதகமாக இருக்கவில்லை கபிலுக்கு. கிரிக்கெட் மைதானத்தில் செஸ் என்றால் சும்மாவா?
அஸார். சிறந்த கேப்டன். வெற்றிகள் நிறைய குவித்தவர் என்றாலும் ஆளுமை, அதிரடி வியூகம் என்பதெல்லாம் இல்லாத, தினமணி பேப்பர் நியூஸ் போல படு டீசண்ட்டாக டீமை நடத்திக் கொண்டிருந்தார். (முடிவுகள் தான் அவருக்கு தெரிந்திருக்குமே அப்புறம் எதற்கு அலட்ட வேண்டும் என்கிறீர்களா?!)
எதிரணியின் மிக முக்கிய விக்கெட்டை நம் பவுலர்கள் வீழ்த்தி இருந்தாலும் லேசாக தோளைச் சாய்த்து மெதுவாக வந்து பவுலரின் கையில் ஒரு தட்டு. அவ்வளவுதான் அவரின் அதிகபட்ச கொண்டாட்டம்.
96ல் இந்த டீசண்ட்டான அணியில் ஒரு ஓரத்தில் நின்று 131 ரன்களை தன் முதல் டெஸ்ட்டில் அடித்து கவனம் ஈர்த்தது வங்கப் பூனை. ஆம். அப்பொழுதெல்லாம் இந்தப் பூனையும் ரேஞ்சில் தான் கங்குலி இருப்பார்.
டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களுக்கும் மேலாக சராசரி 42 அதிகபட்சமாக 239 என புள்ளிகள் குறிப்பாக 57 சிக்ஸர்கள் 900 நான்குகள் என பதித்து விட்டுப் போனவர். அல்லது போக வைக்கப்பட்டவர்.
அஸாருடன் சேர்த்து ஜடேஜாவும் சூதாட்டப் புயலில் சிக்கவில்லை என்றால் கங்குலிக்கு இந்த இடம் கிடைத்திருக்குமா என்ற ஐயமும் எழுகிறது. ஏனெனில் ஆக்டிங் கேப்டனாக ஜடேஜா பங்கெடுத்த எல்லா விளையாட்டுகளிலுமே தன் ஆளுமையக் காட்டியவர் ஜடேஜா. விதி.
கங்குலி...யை நம்பி அந்த மோசமான ஒரு சூழலில் இந்திய வாரியம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது 2000த்தில்.
கங்குலி, புலி வேடம் கட்டியது அங்கிருந்து தான். பிறப்பில் லியோ, வாழ்வில் மஹ்ராஜ், நடையில் சிங்கம் என சுற்றி இருந்தவர்களின் கூற்றுகள் கங்குலியை கம்பீரம் மிக்க தலைவனாக காட்டியது. கம்பீரமாகவும் இருந்தார் கங்குலி.
"Either push from back..or Lead from the Front "
கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மன்சூர் அலிகான் நவாப் ஆஃப் பட்டோடி, முன்னாள் இந்தியக் கேப்டன், கூறிய வார்த்தைகள் தான் மேலே இருப்பது.
கங்குலி இரண்டையும் செய்தார். விவிஎஸ் லெக்ஸ்மண் ஒரு முறை இப்படிச் சொன்னார் கங்குலி குறித்து “ வீரர்களுக்கு அவர் கொடுக்கும் பாதுகாப்பும் நம்பிக்கையும் மிக வியப்பானது, அதுதான் ஒரு தலைவரிடம் இருந்து எதிர்பார்க்கப் படுவதும்”( The kind of security he gives is amazing, that's exactly what you want from your captain)
ஒரு நாள் போட்டிகளின் வெற்றிகள் ஓப்பனர்களால் தீர்மானிக்கப் படுகிறது என்று ஜெயசூர்யா ஆரம்பித்து வைத்தவுடன், டெண்டுல்கருக்கு பக்க பலமாக தானே துவக்க ஆட்டக் காரராக களம் இறங்கி, உலகின் தலைசிறந்த துவக்க ஆட்ட ஜோடி என்ற பெருமையை நிலை நாட்ட உதவியர் கங்குலி. டெண்டுல்கரே தனக்கு மிகப் பிடித்த ஜோடி என கங்குலியைத்தான் குறிப்பிட்டார்.
ஒரு நாள் போட்டிகளில் 11ஆயிரம் ரன்களுக்கும் மேலாக 183 ரன்களை அதிகபட்சமாக 41 சராசரியுடன் கடந்தவர். மிக முக்கியமாய் 190 சிக்ஸர்கள்.
சிக்ஸர்களில் கங்குலி ஒரு அற்புதம். அதுவும் சுழற்பந்து வீச்சில், பவுலரின் தலைக்கு மேலே நூல்பிடித்தது போல நேர்க்கோட்டில் இரண்டடி நடனமாக இறங்கி வந்து சர்ர்ரென தூக்கி அடிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
ஜிம்பாப்வேயுடனான ஒரு ஆட்டத்தில், க்ரேண்ட் ஃப்ளவரின் பந்தை டெண்டுல்கர் இரண்டு முறை சிக்ஸராக மாற்றினார். ரன்னர் எண்டில் கங்குலி. இரண்டு சிக்ஸர்களுமே மூன்றாவது அம்ப்பயர்தான் முடிவு செய்து கூறினார். ஏனெனில் நான்கா,ஆறா என்று சந்தேகப்படும் படி எல்லைக்கோட்டின் மிக அருகில் விழுந்து போனதுதான் காரணம்.
இரண்டு ஓவர்கள் கழித்து, கங்குலியின் முறை வந்தது. அதே க்ரேண்ட் ஃப்ளோர்தான். மூன்று சிக்ஸர்கள். மூன்றுமே மைதானத்திற்கு வெளியே போய் விழுந்து அந்த ஓவர் முடிய சில நிமிடங்கள் பிடித்தது. பந்தைத் தேடி கிடைக்காமல் வேறு பந்துகள் பயன்படுத்தப் பட்டன. ‘சிக்ஸர்னா அது’ என்று தோன்ற வைத்தவர்.
(டெண்டுல்கரை குறைத்து மதிப்பிடவில்லை..அமைதி அமைதி..அவரின் பெருமைகள் பற்றி அடுத்த பதிவில் வரும்ப்பா)
போலவே ‘ஆஃப் சைடின் கடவுள்’ என்று ராகுல் திராவிடால் போற்றப்பட்டவர் கங்குலி. மிச்சமுள்ள 9 வீரர்களையும் அந்தப் பக்கம் நிறுத்தினாலும் சந்தில் நான்கு அடிப்பதில் கங்குலிக்கு நிகர் அவரே.
மும்பையில் ஏதோ ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஃபிளிண்ட்டாஃப் கால்பந்து வீரர்கள் போல டீ சர்ட்டைக் கழட்டி ஆர்ப்பரித்த ஆத்திரத்தை கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் அதைவிட மிக வெறித்தனமாக கழட்டி, சுழற்றி தீர்த்துக் கொண்டார். அந் நிகழ்வு குறித்து பின்னர் வருத்தம் தெரிவித்த கங்குலி 'I think I was wrong there' என்று முடித்துக் கொண்டார்.
நீயா நானா என்ற டெண்டுல்கருடனான உள் அரசியலில், மிகச் சாதுர்யமாக சேவாக்கை களமிறக்கி வெற்றி கண்டவர். மிகத் தவறான செயல் என்றாலும், சேவாக்கை தெரிவு செய்தது ஆளுமை. தோனியையும் மூன்றாவது வீரராக களமிறக்கி கனியாக்கிவர்.
குறிப்பாக 2003 உலக கோப்பையில் இறுதி ஆட்டம் வரை கொண்டு போனது ஒரு மைல்கல். அதிலும் பெரிய இலக்கை துரத்த வேண்டிய இறுதி ஆட்டத்தில், எந்தத் தயக்கமும் இல்லாமல் அடித்து ஆடி முன் உதாரணமாக நம்பிக்கை ஏற்படுத்தியவர் கங்குலி. சேவாக் மட்டும் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், கங்குலி சேவாக் கூட்டணி ஆட்டி இருக்கும் எதிரணியை. ஆல் இன் த கேம்.
ஆனால், டாஸ் போட வேண்டுமென்றே லேட்டாக வருவது, 2003 உலககோப்பை ஆரம்ப விழாவிற்கு அவரை அழைத்தபொழுது, ‘தூக்கம் வருகிறது’ என்று கலந்து கொள்ள மறுத்தது, பயிற்சிக்கு வராமல் அலம்பல் பண்ணுவது போன்ற விசயங்களால் உரசல்கள் ஆரம்பித்தது.
இருபக்கம் கூரான கத்திமுனை பழமொழிதான் கங்குலி விசயத்திலும் நடந்தது. அரசியல்மூலம் தன்னை மற்ற சீனியர் வீரர்களிடம் இருந்து தனித்து வைத்துக்கொண்டார், ஜூனியர்களுக்கும் சிம்மசொப்பனமாகவே இருந்தார். ஆனால் கிரேக் சேப்பலுடனான உரசலில் அரசியல் அவருக்கு எதிராக திரும்பியது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கங்குலி தன் கம்பீரத்தையும் களத்தையும் இழந்தார்.
என்றாலும், ததா,மஹ்ராஜ்,பிரின்ஸ் ஆஃப் கல்கத்தா என ரசிகர்கள் மனதில் இருக்கும் இடத்தை ஒருநாளும் இழக்க மாட்டார்.
ஏனெனில், இந்திய வீரர்களும் ஆக்ரோஷமானவர்கள், ரோஷம் மிக்கவர்கள் என உலக அணிகளுக்கு உணர்த்தியவர் கம்பீர கங்குலிதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.
..
Labels: கிரிக்கெட் , பத்தி
பதிவர் சந்திப்பு..நன்றாகவே நடந்தது.
ஆம். ஒருவழியாக பதிவர் சந்திப்பு நடந்தது... நன்றாகவே.
பதிவர்கள் யுவகிருஷ்ணா, அதிஷா, முரளிகண்ணன், ஜெட்லி, மோகன், மருத்துவர் புருனோ, அதியமான், கணேஷ், மக்கள் சட்டம் சுந்தர்ராஜன், காவேரி கணேஷ், நரன், மஞ்சள் டீ சர்ட்(ஜெட்லீயின் சகா, பெயர் ப்ளீஸ்) ஆதி, நர்சிம்,கனகு,அப்துல்லா,மிக முக்கியமாக வாசகர் மோகன், (பதிவுகளை படிப்பவர் மட்டுமே என்று பின்னால் அமர்ந்தவரை முரளிகண்ணன் வலுக்கட்டாயமாக நடுவில் அமர வைத்து மரியாதை செய்தார்.)
மற்றும் லேகா.
முடியும் தருவாயில் கேபிள் சங்கரும் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சி.
புகைப்படங்களைப் பார்க்க ஆதியின் இந்தப் பதிவு
விருந்தினர்கள் : அனுஜன்யா, வா.மணிகண்டன்.
இந்தப் பதிவைப் பார்த்து, இது குசும்பனின் பதிவோ என்று நினைக்க வேண்டாம். ஆம். கிட்டத்தட்ட அந்த ரேஞ்சில் தான் எல்லோருமே பேசினோம். என் நினைவுகளில் இருந்து எழுதி இருக்கிறேன். பேசிய கருத்துகளை சொல்ல முற்பட்டிருக்கிறேன்.
(வா.மணிகண்டன், சிவராமன் போன்றவர்களிடம் பேசியபிறகு ‘நினைவுகளில் இருந்து என்ற வார்த்தைக்குப் பிறகு, ’நீட்சியாக சில எண்ண உணர்வுகளின் ஆழ் மன ஆளுமை’ போன்ற வார்த்தைகள் என்னையும் அறியாமல் வருகின்றன..என்றாலும் பொதுமக்கள் நலன் கருதி தவிர்க்கிறேன்@**@)
வா. மணிகண்டன். மிகவும் கவனத்திற்குரிய கவிஞர். இனி பேசியதில் இருந்து...
சிவராமன்(பைத்தியக்காரன்) : “கவிதை குறித்த, இலக்கியம் குறித்த உங்கள் பார்வையைச் சொல்லுங்கள் “
வா.மணிகண்டன் : இலக்கியம் என்பதை எப்படிச் சொல்வது? மனதின் மேல் அடுக்குகளை மட்டுமே சொல்வது ஒரு வகை. இதற்கு உதாரணமாக தபு சங்கரின் வரிகளைச் சொல்லலாம். அதையும் தாண்டிய ஒன்றைப் பதிவது இலக்கியமாகப் படுகிறது.
நர்சிம் : அப்போ தபு சங்கரின் கவிதைகள் இலக்கியம் இல்லையா?
வா. மணிகண்டன்: அப்படி அல்ல, என்னளவில் ஒன்றைப் பற்றிய தீவிர தேடல் அல்லது பயணம் இலக்கியமாகப் படுகிறது.
சிவராமன் : புரியவில்லை, கல் பயணப்படாது. அது இலக்கியம் இல்லையா.
வா.மணி : ஸ்துதி பற்றி பேசுகிறீர்கள். கல் என்பது ஸ்துதி. ஒரு தேடல் நோக்கி, நாம் செல்வதில் இலக்கியம் அடங்கி இருக்கிறது...
சிவராமன்: நாம் ஏன் தேடிப் போகவேண்டும்?
நரன் & வா.மணிகண்டன் : நீங்கள் எல்லாவற்றையும் ஒரு தத்துவத்திற்குள் அடக்கப் பார்கிறீர்கள். அது சாத்தியமில்லை.
ஜ்யோவ் சுந்தர் இடைமறித்து : “விட்டா ஏன் சாப்பிடணும் நாமன்னு கேட்பீங்களே?”
நரன் : இலக்கியம் என்பதும் கவிதை என்பதும் உணர்வு சார்ந்தது. உங்கள் அளவில் ஒரு சினிமாப் பாடல் கவிதை போன்று இருந்தால் அது கவிதை, ஆனால் அது கவிதை என்று பிறரையும் சொல்ல வைப்பது திணிப்பு, அது தவறு.
வா.மணி : ‘நடிகர் விவேக் மடக்கி மடக்கி எழுதினா கவிதை’ என்ற வார்த்தையை பிரபலபடுத்தி விட்டார். மிகத் தவறு.. மடக்குவதில் நிறைய அர்த்தங்கள் உள்ளன.
நர்சிம் : ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?
வா.மணி : மலர்கள் விழுந்த
சாலை
என்பதற்கும்,
மலர்கள்
விழுந்த சாலை
என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
(புரிந்தது போலவே தலை ஆட்டினேன், விரிவாக பின்னூட்டத்தில் விளக்குபவர்கள் வாழ்க)
சிவராமன் : எது கட்டுரை எது கவிதை ?
வா.மணி & நரன் : அவரவரின் வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்தது அது. கவிதை போலத் தோன்றினால் அது கவிதைதான்.
நர்சிம் : அப்போ லேபிள் தேவையில்லையா?
மோகன்குமார் : (வா.மணிகண்டனிடம்) பாஸ், கவிதைன்னாலே ஏன் புரியாத மாதிரியே எழுதுறீங்க? அப்படி ஏதாவது ரூல் இருக்கா?
அனுஜன்யா, இந்தக் கேள்வியைக் கேட்டதும் கோபமாக ஏதோ சொல்ல முற்பட்டு கேள்வி கேட்டவரை எட்டிப் பார்த்தார். மோகன்குமார் XXL சைஸ் டி சர்ட் என்பதால் முறைப்போடு நிறுத்துக் கொண்டார்.இவர் முறைத்தது அந்தப் பக்கம் தெரியாது என்பது தனி.
வா.மணிகண்டன் : அப்படி இல்லை, புரிதல் என்பது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, ஆனால், நிச்சயமாய் தினத்தந்தி,மலர் போன்ற இதழ்களின் கவிதைகளோடு கவிதைகளை ஒப்பிடுவதில் ஆரம்பிக்கிறது புரிதலின் பிரச்சனை
ஜ்யோவ் : வாசிப்பு பயிற்சி மட்டுமே இதற்கு வழி. தொடர் பயிற்சியின் மூலம் புரிய துவங்கி விடும். மையம் என்று சொல்வதற்கும் மய்யம் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. போலவே, தந்தை, அப்பா.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சிவராமன் : சுரா.வின் மிகப் பெரிய வாசகராக உங்களைப் பார்கிறேன். உங்களின் பல எழுத்துக்களில் உங்களையும் அறியாமலோ அறிந்தோ சுரா ஒரு ‘ஹாய்’ சொல்லி விட்டுப் போவதைப் பார்த்திருக்கிறேன்.
வா. மணி : “ஆம், அவரின் எழுத்துகளை ஆழ்ந்து படித்ததாலும் வந்ததாக இருக்கலாம்’
சிவராமன் : “சுராவின் படைப்புகளை எப்படி கையாள்கிறீர்கள் அல்லது உங்கள் பார்வையில்..”
வா.மணி : என்னை அவரின் எழுத்துச் சூழலில் பொருத்திப் பார்த்துகொள்கிறேன். உதாரணமாக, நாய்கள் குலைப்பதைப் பற்றி அவர் எழுதிய வரிகளில், நான் ஒரு ஆஸ்பெட்டாஸ் சீட்டின் கீழ் குண்டு பல்பு சகிதம் இரவில் இருப்பது போல பொருத்திப் பார்த்துக் கொள்வேன். சூழலுக்குள் புகுந்துவிடலாம்.
ஜ்யோவ் : ஆனால் நாய்கள் குலைப்பது குறித்தான அந்த வரிகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ..
வா.மணி : இல்லை. ஆரம்ப காலத்தில் அந்த அரசியல் தெரியாது. போகப் போகத்தான் புரிந்தது. என்றாலும் அரசியல் ஏதும் தெரியாமல் அந்தச் சூழலுக்குள் புகுந்து படித்ததே நல்ல அனுபவம்.
சிவராமன் : அருமை. உங்களைப் பொருத்திப் பார்த்தது மிகப் பிடித்திருந்தது. கவிதை குறித்து பேசும் பொழுது, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டதாகவே எனக்குப் படுகிறது. உதாரணமாக நகுலன் கவிதைகளைப் பற்றி ஜ்யோவ் சொல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் வெவ்வேறான பாவனைகளில் ஒரே கவிதை மாறுவதை கவனித்திருக்கிறேன்.
வா.மணி : ஆம்.
நர்சிம் : படிமம் என்பதற்கும் வார்த்தை என்பதற்கும் உள்ள வேறுபாடு ?
சிவராமன் & மணிகண்டன் : படிமம் என்பது காட்சிகளைக் கொண்ட வரி.
நரன் : பதிவுலகம் பற்றி என் பார்வையில் சில வார்த்தைகள். இங்கே டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் நிறைய வருகின்றன. அது பதிவின் நோக்கத்தை பாதிக்கிறது அல்லது விவாதங்கள் நடப்பதாகவே தெரியவில்லை.
நர்சிம் : அப்படிச் சொல்லிவிட முடியாது ..என்றாலும்
நரன் : சதவீத அடிப்படையில் பார்த்தால் நான் சொல்வது தான் பெரும்பான்மை.
ஜ்யோவ் : ஆம். உண்மைதான். மீ த 27 என்றெல்லாம் வருவது சற்று வருத்தம்தான்.
யுவகிருஷ்ணா : ஆரம்பக் காலக் கட்டத்தில் விவாதங்கள் பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்பொழுதுதான் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடப்பதில்லை.
கவிதை குறிதான விவாதங்கள் நடைபெறும் பொழுதெல்லாம் ஏதேதோ சொல்ல நினைத்து, உதடுகள் குவித்து, பின் தன் கையை தாடையில் குத்திக் கொண்டே ‘பொழச்சுப் போங்கடா’ என்று விட்டுவிட்டார் கவிஞர் அனுஜன்யா.
‘நீங்கள் எழுதும் பற்றியும் பற்றாமலும் மிக நன்றாக இருக்கிறது’ என முரளிக்கண்ணன் சொன்னது வேறு அனுஜன்யாவுக்கு வருத்தம்.
“நல்லா இருக்குன்னு தானேண்ணா சொல்றாரு”
“அடப் போடா.. மாங்கு மாங்குன்னு கவிதை எழுதறேன்.. பற்றியுமாம் பற்றியும்..பத்தி எரியுது..”
“யே..எந்திருச்சுப் போங்கப்பா” என்று காந்தி தடியை ஆட்டுவது போல ஒரு எண்ணம் வந்ததால் டீ கடைக்குப் புறப்பட்டோம்.
வழக்கமாக நாங்கள் போகும் டீக்கடைப் பையன் எங்களைப் பார்த்ததும் சிரித்தான். எவ்வளவு அர்த்தம் வைத்துச் சிரித்துத் தொலைத்தானோ?!.
Labels: பதிவர் வட்டம்
பதிவர் & பதிவுகளை படிப்பவர்கள் அனைவரும் வருக...21/11/09.
சென்னையில் பதிவர் சந்திப்பு
தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
சந்திப்பு நாள் : 21.11.2009
இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்
சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு :
யெஸ்.பாலபாரதி - 9940203132
நர்சிம் - 9841888663
கேபிள் சங்கர் - 9840332666
யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824
Labels: பதிவர் வட்டம்
ராகுல் திராவிட்: நிராகரிப்பை நிராகரித்தவன்..

1996ம் ஆண்டு. கொஞ்சம் ஒல்லியான தேகம், ஒட்டிப் போன கன்னம் என இரு இளைஞர்கள். ஒருவர் ராகுல் திராவிட், மற்றவர் விக்ரம் ரத்தோர். ரத்தோர் தாடி வைத்திருப்பார் என்பதைத் தவிர இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல் வாகு.
விக்ரம் ரத்தோர், அவுட் சைடு ஆஃப் ஸ்டெப் என்றால் தொட முற்பட்டு, தொட்டும் விடுவார், இரண்டோ நான்கோ,அல்லது இரண்டாவது ஸ்லிப்பில் கேட்சோ என்று ஏதாவது ஒன்று நடக்கும்.
ராகுல் அப்படி அல்ல. கணக்கு, அறிவியல் ஃபார்முலாவைக் கூட ஆங்காங்கே மாற்றிவிடலாம், இவரின் ஸ்டைலும், வெல் லெஃப்ட் என்று சொல்லப்படும் தொடாமல் விடுவதும், என முதல் மேட்சில் இருந்து இன்று வரை ஆட்டத்தை ஒரு கை தேர்ந்த ஓவியரின் தூரிகை எப்படி தேவையற்ற இடங்களைத் தொடாதோ அப்படி ஆடிக்கொண்டிருப்பவர்.
ரத்தோரா திராவிட்டா என்ற கேள்விக்கு இவரின் இந்த நுணுக்கமான அணுகுமுறையே, குண்டப்பா விஸ்வநாத்தை தர்மசங்கடப்படுத்தாமல் தேர்வு செய்ய உதவியது.
லார்ட்ஸ் மைதானத்தில் 1996ம் ஆண்டு ஜுன் 20ல் ஆரம்பித்த டெஸ்ட் விளையாட்டு இன்று வரை தொடர்கிறது. 95 ரன்கள் முதல் மேட்சிலேயே என்றாலும் அன்று முதல் இன்று வரை இவரின் ராசி, இவர் அதிகம் ரன் எடுக்கும் எல்லா மேட்சுகளிலும் இன்னொருவரும் டமால் டூமீல் என அதிரடியாட்டம் ஆடி, கவனத்தைத் தன்பக்கம் திருப்பிக் கொள்வார்கள். கங்குலிக்கும் அதுதான் முதல் ஆட்டம். கங்குலி எடுத்த ரன்கள் 131.
ஆனாலும் அன்று வர்ணனையாளர்கள் சொன்னது “ராகுலின் ஆட்டம் முதல்முறை போலத் தெரியவில்லை. குறிப்பாக ஸ்கொயர் கட்களின் போதும் லேட் கட்களின் போதும் மிக அனுபவம் மிக்கவர் போல ஆடுகிறார்.”
உண்மைதான். அலட்டாத ஆட்டம் ராகுல் திராவிட்டின் ஆட்டம்.27 நூறுகள் 57 அம்பதுகள் என 11000 ரன்களைக் கடந்த பாதையில் இவராக தவறு செய்து அவுட் ஆனது மிகச் சொற்ப தடவைகளே. கிரவுண்டட் ஸாட்கள் தான் பெரும்பாலும். அதுவும் குழி தோண்டிப் புதைத்து அனுப்புவார் நான்குக்கு. கிட்டத்தட்ட 1390 நான்குகள் அடித்தவர் 20க்கும் குறைவான சிக்ஸர்கள்(16?) தான் அடித்திருக்கிறார். சராசரி 53 என்பது வியப்பு.
திராவிட். நிராகரிப்பை நிராகரித்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
6வது நபராக, பின்பு 4வது, என மாற்றி மாற்றி பரிசோதனைகள் என்றாலும் சளைக்காமல் ஆடி இன்று உலகில் மிக முக்கிய 3வது நபராக களம் இறங்கும் வீரராக இந்தியாவின் சுவராக இருக்கிறார்.
ஃபீல்டிங்கிலும் மிட் ஆன், மிட் விக்கெட் என பல திசைகளில் திரிந்திருந்தாலும் நம்பகத்தன்மை மிக்க ஸ்லிப் ஃபீல்டர் இவர் மட்டுமே என்ற பெயர் பெற்றவர். உடனே விக்கெட் கீப்பிங் என அடுத்த பரிசோதனை. சளைக்காமல் அதையும் செய்தவர்.
பொலிட்டிகலி கரெக்ட் என்ற வார்த்தையைப் போல, திராவிட், டெக்னிக்கலி கரெக்ட் ஆட்டக்காரர், எந்தச் சூழலிலும், அதுதான் பலம், பலவீனமும் கூட.
மிக முக்கியமாக, 75க்கும் மேற்பட்ட 100 ரன்கள் பார்ட்னர்சிப்புக்கு சொந்தக்காரர் திராவிட். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விவிஎஸ் லெட்சுமணனின் 281க் ஆதரவாக அவர் அடித்த 180 மிக முக்கிய ஒன்று.
நெருக்கடி சமயத்தில் ட்ரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் தேடுவது திராவிட்டாகத்தான் இருக்குமாம். திங்க்டேங்க் பார்ட்டி. இவர் தான் முதன் முதலில் “இன்னும் இரண்டு நாள் இருக்கிறது” என்ற வார்த்தையை இன்றைய லஞ்ச் செஷன், டீ செஷன் என பிரித்து சமாளித்தாலே ட்ரா செய்துவிடலாம் என்று நம்பிக்கையூட்டியவர். ’ட்ரா’விட்.
ஒரு நாள் போட்டிகளில் 1996 ஏப்ரல் மாதம் ஸ்ரீலங்காவுடன் 3 ரன்களில் தொடங்கியவர் இன்று பத்தாயிரம் ரன்களைக் கடந்திருந்தாலும், அவ்வப்பொழுது, ஏதாவது ஒரு காரணம், கங்குலியின் அரசியல் என நிராகரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது,இருக்கிறது திராவிட்டிற்கு.
2005ம் ஆண்டில் கங்குலி சர்ச்சை அலையின் போது, இக்கட்டான ஒரு சூழலில் கேப்டனாக பொறுப்பேற்று பாகிஸ்தான்,இங்கிலாந்து என நல்ல அணிகளுக்கெதிராக வெற்றிகள் பெற்றாலும் 2007ல் வங்க தேசத்திற்கு எதிரான தோல்வி இவரின் கேப்டன்ஷிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீண்டும் நிராகரிப்பு. வலி.
ஆனால் ரஞ்சிட்ராஃபியில் அடி பின்னினார். ஒரு இரட்டை சதம் உட்பட சில நல்ல ஆட்டங்கள் மூலம் மட்டையில் பேசினார்.
இதோ.. இந்த இலங்கை-இந்தியத் தொடரில் திராவிட் அடித்த 175 நிராகரிப்பை நிராகரித்ததன் வெற்றியே.
சார்ப்பாக திரும்பும் ஆஃப்ஸ்பின் பந்தை, ஸ்டெம்ப் வரை வரவிட்டு லேசாகப் பின்னால் போய், பாயிண்ட் திசையில் திராவிட் அடிக்கும் லேட்கட் ஒரு அற்புதம்.
..
Labels: கிரிக்கெட் , பத்தி
என்’ணங்கள் 19/11/09
இன்றைய ஆனந்த விகடனில் 28ம் பக்கம் கவிதை வந்திருக்கிறது. ’ஊட்டில இருக்குடா,உனக்கு இருக்கா’ என கவுண்டமணி கேட்பது போல், கவிதை வந்திருக்கு சரி,உன் கவிதை வந்திருக்கா என்று கேட்கத் தோன்றுபவர்களுக்கு, ஆம். ‘மாடு பிடிப்பவனின்’ என்ற வார்த்தை வந்ததாலோ என்னவோ 29ம் பக்கம் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு படம் ஒன்றும் வந்துள்ளது. அந்த காட்சியைப் பார்க்கும் பொழுது ஏதேதோ நினைவுகள் வந்துபோனதை தவிர்க்க முடியவில்லை.(அதுக்காக இன்னோரு கவிதை எழுதிராதப்பான்னு சொல்றீங்களா..ரைட்டு)
நன்றி விகடன்.
****
சில பதிவர்களின் சில பின்னூட்டங்கள் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கிறது. அதிக நகைச்சுவையுணர்வும், வார்த்தை விளையாட்டும் இருக்கும் பின்னூட்டங்கள் மனதை விட்டு அகல சில நாட்களாகின்றன.
சமீபத்தில் கேபிள் சங்கருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்த பின்னூட்டங்களில் பதிவர் ‘கையேடு’ என்பவர் இட்ட இந்த பின்னூட்டம் மிகக் கவர்ந்தது.
keep mov(ie)ing..
வளர்மதின் ஜூனியர் குறித்தான விளக்கம்(பைத்தியக்காரன் பதிவில்) டமால் ரகம்.
ராதாமணாளன் என்பவரும் எங்கோ “என்னா மேன் சர்க்கஸ் பண்றே” என்று குறிப்பிட்டிருந்தார். இது போன்ற பின்னூட்டங்களில் அந்த தொனியும் கூடவே வந்துவிடுவதால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் துக்ளக் மகேஷ் ஒரு ஆங்கிலப்படத்தை வரிந்து கட்டி ஏழு பாராவில் விமர்சனம் எழுதி இருந்தார்.
உச்சமாக, பதிவர் அப்துல்லா அங்கே போய் “துரை இங்கிலிபீஸ் படமெல்லாம் பார்க்குது”
சுவாரஸ்யங்களில் சிலதான் மேற்சொன்னவை.
போலவே, ஆதியின் இன்றைய இந்தப் பதிவு.. அதி சுவாரஸ்யம். ஆயுதம்.
*********
சூர்ய கதிர்... புதிய இதழ். வெகுஜன இதழ். வெகுவாகக் கவர்ந்தது முதல் இதழ். விகடன் தன் ஃபார்மேட்டை மாற்றிய பிறகு, குமுதம் மாற்றாமலே இருந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு வெற்றிட நிரப்பியாக வரக் கூடிய இதழாக முதல் இதழ் இருந்தது, என்னளவில்.
சினிமாச் செய்திகள், ஆன்மீகம், அரசியல், மதன் தொடர் என கலந்துகட்டி வந்திருக்கிறது. இரண்டாவது எப்படி இருக்கிறது என்பதில் தெரியும் ‘முதல்’ தேறுமா என்று. பார்ப்போம்.
******
தாய்மை என்ற உணர்வு புனிதமானது போன்ற வார்த்தைகள் எல்லாம் தாண்டி அதன் வலியும் கொடுமையும் பக்க, பின் விளைவுகளும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் மிகக் கடினமான ஒன்றுதான். அம்மா என்ற ஒற்றைச் சொல் அவர்களை வலியில் இருந்து மீட்டுவிடுகிறது என்பதெல்லாம் இலக்கிய உணர்வுகளோ என்றும் தோன்றுகிறது. வலி வலிதானே.
மருத்துவர் புருனோவின் சிசேரியன் குறித்தான இந்த இடுகை மிக மிக பயனுள்ள இடுகை.
நன்றி மருத்துவரே.
*********
‘காய்ச்ச மரம் தான் கல்லடி படும்’, இந்த வார்த்தையை எதற்கெடுத்தாலும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாம் காய்ச்சமரம் என்று குறிப்பால் உணர்த்துவது, அல்லது,பிறருக்கு ஆறுதலாக சொல்வெதென்றால், நீ வெறும் மரம்டா என்று அதே குறிப்பால் உணர்த்தி அல்ப்ப சந்தோஷம் கொள்வது.
இந்த காய்,மரம்,கல் மேட்டர் எங்கிருந்து யார் எறிந்தது என்றும், இது போன்ற வாக்கியங்களின் மூலம் பற்றியும் யோசிப்பது டேஞ்சர், அதனால் தான் பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள் போல.
இந்த சித்தர் பாடலைப் பாருங்கள்.
காய்த்த மரம் அதுமிக்க கல்லடிபடும்
கன்மவினை கொண்ட காயம் தண்டனைபெறும்
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வத்துத் திருவடி தொழுது ஆடுபாம்பே!
பாம்பாட்டிச் சித்தரின் இந்தப் பாடல் தான் காய்,கல் மேட்டரின் மூலமா? என் போன்ற நுனிப்புல் மேய்ச்சலுக்கு அப்படித் தோன்றினாலும் யாராவது விசயம் தெரிந்த ‘டெப்த் பார்ட்டிகள்’ உறுதிப்படுத்தலாம்.
***
“யூத் அனுஜன்யா அழைத்து, என்னடா லைனே கிடைக்க மாட்டேங்குது? பிஸியா” என்றார்.
“ஆமாண்ணா, பயங்கர பிஸி. கிண்டில இருந்து டி.நகர் போய்ட்டு வந்தேன். வடபழனி வேற போகவேண்டி இருக்கு, ஒரே வேலை.. ப்ச்..சரி சரி சொல்லுங்க, நீங்க எங்க இருக்கீங்க?”
“நான் சிங்கப்பூர்ல இருந்து ஜெனிவா போய்ட்டு இப்ப ரிட்டன் ஆகிட்டு இருக்கேன்”
டிஸ்கனெக்ட் செய்து விட்டேன்.ஆரிருள்.
********
நன்றி.
Labels: என்’ணங்கள்
சங்கம் தங்கம் தானா?...உகிர் நுதி ஓசை.
“என்ன,புதுசா ஏதோ பார்சல் வந்த மாதிரி இருக்கு...கொடுத்த வச்ச மகராசிடி நீ,வெளிநாட்டு வேலைன்னா சும்மாவா?”
“ம்”
“என்னாடி சலிச்சுக்குற?”
“இல்லம்மா, அவர் அங்க எப்பிடி இருக்காருன்னு?”
“அதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும் அங்க, நம்ம ஊரு மாதிரியா? போன் பண்ணியா?”
“பேசிட்டேன். இல்லம்மா, இன்னிக்கு காலைல காய்கறி வாங்கும் போது,அவருக்குப் பிடிச்ச காய்களப் பார்த்ததும் ரொம்ப கஷ்டமா போச்சும்மா, அதான் சமைக்கவே பிடிக்காம உக்காந்துட்டேன்”
“அப்பிடிதாம்மா இருக்கும், உங்களுக்காகத்தானே அவர் அங்க இருக்காரு, அடுத்த வருஷம் வந்துரப் போறாரு..அப்புறம் என்ன?”
சமாதான வார்த்தைகள் எல்லாமே வெறும் வார்த்தைகள் தான்,கண்ணோரக் கசிவுகள் மறைக்கப்பட்டாலும் நினைவுகள் எப்படி மறக்கப்படும்.
எத்தனை லட்சங்கள் கொட்டிக் கொடுத்தாலும்,எவ்வளவு ஆடம்பரங்கள் வீட்டை நிறைத்தாலும், மனதின் ஓரத்தில் இருக்கும் பிரிவுக்கான இடத்தை எதைக்கொண்டும் நிரப்பிவிட முடியாததாகவே இருக்கிறது. வெற்றிடம் வெற்றிடம் தான்.
குறிப்பாக அன்றாடம் உபயோக்கிக்கும் பொருட்களில் எல்லாமே, விட்டுச் சென்ற தடங்கள் நினைவுகளைக் கிளறிக்கொண்டே தான் இருக்கும்.காய்கறிகளில் தொடங்கி,இரவில், வாங்கிக்கொடுத்த கடிகார நொடிமுள்ளின் சத்தம் வரை, அத்தனையிலும் உணர்வுகளின் நினைவுகள் தான் மிச்சமிருக்கும்.
போலவே, ‘அங்கிருப்பவர் இந் நேரம் எதையெல்லாம்,எந்தப் பொருளை எல்லாம் பார்த்தால்,எந்தப் பாட்டைக் கேட்டால் என் நினைவுகள் வரும்?’ என்ற கேள்வியும் எழுந்துகொண்டே தான் இருக்கும்.
பொருட் செல்வம் தேடிப் போன தலைவனை நினைத்துப் பார்க்கும் தலைவியின் இத்தகைய நிலையை,நினைவுகளைச் சொல்லும் அற்புதப் பாடல் ஒன்று..
விளக்கம்:
“தோழி, காட்டில் வழிப்பறி செய்யும் திருடர்கள் வைத்திருக்கும் அம்பின் இரும்பாலான முனையை மேலும் கூராக்கும் பொருட்டு,
தம் நக நுனியில் லேசாக தீட்டும்பொழுது ஏற்படும் ஓசை போல, சிவந்த கால்களையுடைய ஆண் பல்லி ஆசையோடு தம் துணையை ஓசை எழுப்பி அழைத்து ஓடி ஆடும் கட்டைகள் நிறைந்த காட்டின் வழிச் சொல்லும் பொழுது,இந்த ஓசைகளைக் கேட்டதும் என்னை நினைக்க மாட்டாரா?”
பாடலின் சிறப்பு :
1.நுட்பமான ஒலியைப் பதிவு செய்த பாடல்.நகத்தின் மூலம் தீட்டப்படும் ஓசையும் பல்லி எழுப்பும் ஓசையும் ஒப்பிடப்பட்டதும் சிறப்பே.
2.‘செங்காற்பல்லி’, இந்தச் சொல்லை உச்சரிக்கும் பொழுதே, மென்செந்நிற கால்களையுடைய பல்லி கண்முன் வருவது. அதனடுத்து ஏற்படுத்திய கூடலுக்கான சூழல்.
3.இப்படி பல்லி போன்ற சிற்றுயிர்களின் காதலைக் கருப்பொருளாக கூறி மனிதர்களின் உணர்களோடு ஒப்பிடப்படும் குறிப்பிற்கு ‘இறைச்சி’ என்று பெயர்.
பாடல் :
உள்ளார் கொல்லோ தோழி? கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடு இறந் தோரே.
பாலைத் திணையின் தானைத் தலைவன் பாலைபாடிய இளங்கோ பாடிய பாடல்.
..
Labels: குறுந்தொகை
பதிவுலகம்.
பதிவுலகம்.
மொக்கை,திமிர்,அனானி தொல்லைகள்,ஆக்கப்பூர்வமான விவாதங்கள்,விதண்டாவாதங்கள்,சந்திப்பில் மொக்கை,முடிந்த உடன் தண்ணி அடிப்பது...
இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.மேலோட்டமாகப் பார்த்தால் மேற்சொன்ன அத்தனையும் நடந்துகொண்டுதானே இருக்கிறது என்பதும் உண்மை.
கேபிள் சங்கர்...யார் எவர் என்று தெரியாது.கலக்கல் ‘பதிவு தலைவரே’யோ, ‘இந்த பதிவு பிடிக்கவில்லை’யோ, தான் உறவுமுறைச் சொற்கள்.அதைத் தாண்டியெந்தவொரு பந்தமும் இல்லை.
தந்தை இறந்து விட்டார் என்பதை உணர்ந்தவுடன் அவர் அழைத்தது பதிவுலகத்தைத் தான்.
அவரின் நம்பிக்கையை ஒரு சதவீதம் கூட வீணடிக்கவில்லை பதிவுலகம்.ஆம்,
யாருக்குமே கேபிளின் வீடு தெரியாது சனிக்கிழமை வரை.மழை.எதையும் பொருட்படுத்தவில்லை மக்கள்.
வந்தவுடன் சும்மா உச் கொட்டிக்கொண்டிருக்கவுமில்லை.ஒரு கூட்டம் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.
தந்தைக்கு வலிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த வீட்டினர்,சட்டையைக் கூட கழட்டும் பிரக்ஞையற்று, செய்வதறியாது நின்றிருக்கும்பொழுது நண்பர்களும் உறவினர்களும் தான் அடுத்தடுத்து நடக்கவேண்டியதைச் செய்வார்கள்.இங்கேயும் அதுதான் நடந்தது.பதிவர்கள் முடிந்தவரை அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.
ஒரு பெருமூச்சு கூட ஆறுதலைத் தரும் இது போன்ற தருணங்களில்.
பெருமூச்சையும் தாண்டி தோள் கொடுத்தார்கள் கிட்டத்தட்ட அத்தனை பதிவர்களும்.
ஆம்.இறுதிவரை உடன் இருந்து,போன் செய்து,குறுஞ்செய்தி அனுப்பி என தங்களால் முடிந்த மார்க்கத்தில் இந் நிகழ்வின் தாக்கத்தை சற்றே எளிதாக்க முயன்று கொண்டே தான் இருந்தார்கள். உலகின் எந்தெந்த மூலையில் இருந்தோ அலையில் அழைத்துத் துயரம் சொன்னவர்கள் நிறைய பேர்.
கேபிள்...அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பீர்கள், நீங்கள் இயக்குனர் ஆக வேண்டும் என்று உங்கள் தந்தை நினைக்கிறார் என்று. இனி அவர் நினைக்கப் போவதில்லை, ஆனால் கட்டளை இட்டுச் சென்றிருக்கிறார் என்று கொள்ளுங்கள்.
மீண்டு வாருங்கள்.மீண்டும் வாருங்கள்.நாங்களிருக்கிறோம்.
முதல் வரிகளில் சொன்ன அத்தனையும் இருந்தாலும் இங்கே ‘மனிதமும்’ இருக்கிறது.
பதிவுலகில் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
இது குறித்து, பதிவர் ஜாக்கி சேகரின் விரிவான பதிவு
Labels: பதிவர் வட்டம்
பதிவர் கேபிள் சங்கரின் தந்தை மரணம்.அஞ்சலி.
மிக வருத்தமாக இருக்கிறது.
சற்று நேரத்திற்கு முன்னர் நம் பதிவர் கேபிள் சங்கரின் தந்தை மரணம் அடைந்து விட்டார்.
ஆழ்ந்த அஞ்சலிகள்.
வருத்தமாக இருக்கிறது.
Labels: பதிவர் வட்டம்
பதிவர்கள்/அதைப் படிப்பவர்கள்..சந்திப்பு.
ஹுக்கும்...
இந்த வார்த்தை, சந்திப்பு என்றவுடன் நினைவுக்கு வருகிறது.மழை.மேகங்கள் அருகருகில் சென்றால் இந்த கற்பனை டயலாக்கும் தோன்றத்தான் செய்கிறது.
மேகம் 1 :“இந்த வாரமும் வச்சுருக்காய்ய்ங்களாமே”
மேகம் 2 :“விட மாட்டாய்ங்களா? ஒரு பிடி பிடிப்போம் இந்த தடவையும்”
இப்படித்தான் தோன்றுகிறது.
போலவே..சந்திப்பு நடக்கும் இடமும் கடல்,பாண்டிச்சேரி ஹவுஸ் என தண்ணீர் சார்ந்த இடமாகவே இருப்பதுவும் ஒரு காரணமோ?
அடாது மழை பெய்தாலும்..என்று எழுத முடியாது. மழை இல்லை என்றால் வந்துவிடுங்கள்.
பதிவர்கள் மட்டும்தான் வரவேண்டுமா என சிலர் தொடர்பு கொண்டு கேட்டார்கள். இல்லை. பதிவர்களை விட, வாசிப்பவர்கள்/வாசிக்க மட்டும் செய்பவர்களால் தான் மிகச் சிறந்த விமர்சனத்தை முன் வைக்க முடியும்.தவறாது பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் வருக.
புதிய, பழைய என்றில்லாமல் பதிவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..
விருந்தினர் :பேராண்மை புகழ் திரு. சதீஷ்குமார் அவர்கள் தங்களுடய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார்.
சந்திப்பு நாள் : 14/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
மேலும் விபரங்களுக்கு
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964
***
Labels: பதிவர் வட்டம்
மறக்கப்பட்ட மன்னர் மன்னன் - பரதன்
எங்கோ எவரோ எதற்கோ செய்த ஒரு செயலுக்காக,அங்கிங்கு சுற்றி,கடைசியாக நம்மிடம் வந்து, ‘என்ன பாஸ்..சாதிச்சுட்டீங்க போல..நல்லா இருங்க’,எனும் போது,ஏன் எதற்கு என்று தெரியாமலே உயிர் வலி எடுக்கும் அனுபவங்கள் நம்மில் பலருக்கும் ஏற்பட்டே இருக்கிறது.பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஒருமுறை,நண்பனை அவனது பெரியப்பா திடீரென்று அவரின் ஊருக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார்.நானும் அவனும் சென்றிருந்தோம்.கதவைத் திறந்த அவன் பெரியம்மா தன் தாடையைக் கொண்டு தோளில் தட்டி,முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டார்.
விசயம் என்னவென்றால்,அவன் பெரியப்பாவிற்கு தெரிந்த நண்பர் ஒருவரின் கம்பெனியில் ஏதோ வேலை காலியாக இருந்திருக்கிறது.அவருக்கு இவன் நினைவு வந்து உடனே சேர்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.
பிரச்சனை என்னவென்றால்,அவருக்கும் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு ஏன் அதை சொல்லவில்லை என்று அந்த அம்மாவிற்கு கோபம்.நியாயமானதும் கூட.
யாரை,எங்கு பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பெரியப்பா கிளம்பியவுடன்,நண்பனைப் பார்த்து அவர் மிகக் கடுகடுவென பேச ஆரம்பித்தார்.
“இந்தாப்பா,புது சட்டை வேற எடுத்து வச்சிருக்காரு உங்க பெரிய்ய்ய அப்பா.போட்டுட்டு போ”
“இல்ல பெரியம்மா..வந்து”
“ஆமாப்பா.நீங்களே எல்லாம் பண்ணிக்கோங்க,நாங்க எல்லாம் உங்க வாயப் பார்க்கத்தானே இங்க இருக்கோம்,வேலைன்ன உடனே தாவிக்கிட்டு வரத்தெரியுதே..”
“இல்ல பெரியம்மா,எதுக்குன்னு அவர் சொல்லவே இல்ல.தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன்.ரமேஷ் இருக்கும் போது எனக்கு என்னா அவசரம் பெரியம்மா?,அப்புறம் நான் அங்க ஊர்லயே ஒரு இடத்துல ரெடி பண்ணி வச்சிருக்கேன்.ரமேஷ் பார்த்தா என்ன நான் பார்த்தா என்ன,பெரிப்பா கிட்ட சொல்லிடுங்க,அவனுக்கு இஷ்டம் இல்லியாம்னு”
என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் என்னை அழைத்துக் கொண்டு விடுவிடுவென நடக்கத் தொடங்கி விட்டான்.
அவன் சொன்னபடி,வேலைக்குத் தான் என்று சொல்லி இருந்தால் இவன் நிச்சயம் ரமேஷ் குறித்துக் கேட்டுவிட்டுத்தான் கிளம்பி இருப்பான்.அது தெரியாமல் புலம்பி விட்டதை எண்ணி பெரியம்மா தொலைபேசியில் அழைத்து இப்படிச் சொன்னாராம் பின்னர்.
“குணத்துல நீ எல்லாரையும் விட உசத்திடா கண்ணா.தெரியாம சொல்லிட்டேன்”
இப்படித்தான் பரதனை ராமனின் தாய் கெளசல்யா தவறாக நினைத்து பேசியவுடன்,பொருமையாக பரதன் தனக்கு கைகேயின் சூழ்ச்சி தெரியாது என்றும்,ராமன் நிலை குறித்து எதுவும் தெரியாத நிலையில் ஆட்சி அமைக்கத் தான் வரச்சொன்னார்கள் என்று கூட தெரியாது என்பதையும் விளக்கிய பின்,
கெளசல்யாவின் பார்வையில் கம்பரின் இந்த வரிகள்,மிகச் சிறந்த வரிகளாக பரதன் குறித்து எழுதப்பட்டவை.மன்னர்மன்னா என்று பரதனை கம்பர் அழைக்கக் காரணம் இருக்கிறது.குணத்தில் பரதன் மன்னர்மன்னன் தான்.
ஆம்,ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கப் பெறாமல் இருக்கும் போது ஒழுக்கமாகவும்,எளிமையாகவும்,நேர்மையாகவும் இருப்பது ஒன்றும் பெரிதல்ல.எல்லா வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்து,எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பது என்பது கடினமான,போற்றுதலுக்குரிய ஒரு அரிய குணம் என்பதால் தான் அந்த ‘ஸ்பெஷல் மன்னர்மன்னா’வார்த்தை.
‘முன்னை நும்குல முதலுளோர் கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கு நீர்மையார்?
மன்னர் மன்னவா’,என்று வாழ்த்தினாள்
உன்ன உன்னநைந் துருகி விம்முவாள்’
“உனக்கு முன்னோர்கள் அரசர்களாக பெரும்புகழ் பெற்றிருப்பினும்,உனக்கு ஈடாக எவரும் இல்லை,(ஆட்சியே வேண்டாம் என்று சொன்னது யாரும் இல்லை என்ற பொருளில்)மன்னர்மன்னா”என்று வாழ்த்தியுருகி அழுதாள் கோசலை.
மன்னர்மன்னா என்ற சொல்லே இதில் சிறப்பு.ராமனைக் கூட எங்கும் கம்பர் அப்படி விளித்ததாக தெரியவில்லை.
பரதனின் குணங்கள் பற்றிய பாடல்கள் போற்றுதலுக்குரியவை.
இன்னுமோர் இரக்கப்பட வேண்டிய,மறக்கப்பட்ட கதாபாத்திரம் லெட்சுமணனின் மனைவி.அடுத்துப் பார்ப்போம் அவரைப் பற்றி.
..
Labels: கம்பர்
மீண்டும் ஒரு தொடர் பதிவு.டெரர்...ர்ர்ர்.
பதிவர் விதூஷ் இந்தப் பதிவின் மூலம் அழைத்திருந்தார்.
கொஞ்சம் நைஸாகப் பம்மி இருந்தேன்.மறந்திருப்பார் என்று நம்பியும் இருந்தேன்.பரிசல் தொடரைப் போட்டதும்..அப்ப நாங்க எல்லாம் என்ன இதுவா?என ஒரு டெரர்ர்ர் மெயில் அனுப்பி இருந்தார்.‘எழுதி வச்சு இருக்கேன்ங்க’என்ற பொய்யைச் சொல்லிவிட்டு அதை உண்மையாக்கினேன்.
‘பொய்யை உண்மையாக்குவது’ என்ற வாக்கியத்தில் இருக்கும் வியப்பை உணர்கிறீர்களா??(அதுவா வருது!)
தோழி/தங்கை ஸ்ரீமதியின் தொடர் பதிவு இன்னும் சிட்டையில் பாக்கி இருக்கிறது..அதுவும் இந்த வாரத்திற்குள் வரும்...
******
1. A – Available/Single? : Available..அங்க மட்டும்.(வீட்லயும் படிக்கிறாங்கப்பா..மொதக் கேள்வியே..ஹுக்கும்)
2. B – Best friend? : நிறைய்ய்ய்ய்ய.
3. C – Cake or Pie?: இரண்டும் இல்லை.மோர்.அது சியில் ஆரம்பிக்கவில்லை.இரண்டாவது கேள்வியின் பதிலில் இருப்பவர்கள் பக்கத்தில் இருந்தால் அதன் முதல் எழுத்தும், ர்’ம்.
4. D – Drink of choice? : 3ல சொல்லியாச்சு சொல்லியாச்சு.
5. E – Essential item you use every day? : இதயம்
6. F – Favorite color? : கருப்பு.(று?)
7. G – Gummy Bears Or Worms?: ?வாழ்க்கைதான்.
8. H – Hometown? -யாவரும் கேளிர்னா அப்போ யாதும் ஊரே..தானே!
9. I – Indulgence? - ஹிஹி
10. J – January or February? இரண்டாவது.23ம் தேதி அதுல ரொம்ப பிடிக்கும்.
11. K – Kids & their names? :ம்.
12. L – Life is incomplete without? - மரணம் தான் ..ஏன்?
13. M – Marriage date? கேட்டுத்தான் சொல்லணும்.
14. N – Number of siblings? என் இந்திய தேசமிது.யாவரும்.
15. O – Oranges or Apples? இரண்டும் அல்ல.O இந்த வடிவில் இருக்கும் நெல்லிக்காய்.கரகரன்னு பல்லுல வச்சு வட்டமா மாத்துறது ஒரு கலை.உப்போட..நாக்குல எச்சி ஊறி இருக்குமே.
16. P – Phobias/Fears? :தற்போதைக்கு பதிவோ ஃபோபியாதான்.பயமும் இங்கேதான்.
17. Q – Quote for today? : சிம்ப்பிளான வேலையை சிம்ப்பிளாகவே செய்யுங்கள்.
18. R – Reason to smile? :காரணம் இல்லாம சிரிச்சதுக்கு மறுபடியும் சிரிப்பது.
19. S – Season? எல்லா நாட்களிலும் அந்தி நேரங்கள்.
20. T – Tag 4 People? ம்ஹூம்.
21. U – Unknown fact about me? அதான் unknown ஆச்சே.
22. V – Vegetable you don't like? இந்தியச் சுதந்திரம் பறிபோய்விடுமா இதை சொல்லவில்லை என்றால்?
23. W – Worst habit? எந்த ஹேபிட்டுமே ஹேபிட் என்ற அளவிற்கு தொடர்வதே ஒர்ஸ்ட் தானோ?.
24. X – X-rays you've had? : ஏன்..ஏன்..ஏன்ய்ய்யா இப்பூடி
25. Y – Your favorite food? :) பசி நேரத்தில் கிடைக்கும் உணவு.
26. Z – Zodiac sign? சிங்கம் தான்.
ஆசைக்குரியவர்: அப்பா.என்னை அப்படி அழைப்பவரும்,அதற்கு உதவியவரும்.
இலவசமாய் கிடைப்பது: இலவசம் தான்.
ஈதலில் சிறந்தது: ஈதலே மிகச் சிறந்தது தான்.
உலகத்தில் பயப்படுவது: நாமார்க்கும் குடியல்லோம்.
ஊமை கண்ட கனவு: ராஜபக்ஷே
எப்போதும் உடனிருப்பது: உயிர்
ஏன் இந்த பதிவு: வேற வழி???விதூஷின் மிரட்டல்.
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: அபிசேக்கிடம்தான் கேட்கவேண்டும்!
ஒரு ரகசியம்: இந்த டிசம்பரில்..சரி வேண்டாம்..ரகசியமாக இருக்கட்டும்.
ஓசையில் பிடித்தது: குழந்தை தூங்கும் பொழுது அதனிலிருந்து வரும் மென்..மிகமென் சத்தம்.
ஔவை மொழி ஒன்று: தமிழ் மொழி தானே அவங்களும்.
(அ)ஃறிணையில் பிடித்தது:அனைத்துமே. மனிதர்கள்.மனிதமற்ற,நேர்மையற்ற மனிதர்களுக்கு முன்னர்.
..
(இதை அழைத்த பதிவர் விதூஷ், ‘நர்சிம்மை ஏன் தொடர யாருமே அழைப்பதில்லை’ என்று கேட்டிருந்தார்...இப்போது தெரிந்திருக்கும் பதில் ’ஹுக்கும் அழைச்சிட்டாலும்’ என்று)
Labels: சங்கிலிப் பதிவுகள் , மொக்கையிலும் மொக்கை
கொலை...முடிவு.
இந்தக் கதையின் தொடர்ச்சி
விசாரணை அறையின் மேஜையின் விளிம்பில் இரண்டு கைகளையும் வைத்து தலைகவிழ்ந்திருந்தான் வாசு.
ஒரே ஒரு முட்டை பல்பு,மற்ற இடம் எல்லாம் இருட்டு போன்ற எதுவும் இல்லாமல் சாதாரண,நல்ல வெளிச்சமான அறை அது.
சந்திரன், “சார் கேட்குறார் இல்ல வாயத் தெறக்கிறயா..இன்னும் வேணுமா”
“சந்திரன்,அவன் பேசமாட்டான்.வாயத் தெறந்தா மாட்டிப்போம்னு அவனுக்குத் தெரியும்.”
டேபிளைச் சுற்றிக் கொண்டே வந்த மனோ,வாசுவின் அருகில் வந்ததும் தோளில் கை வைத்து,
“வாசு,நேத்து நைட்டே,உன் ஃப்ரெண்ட பின்னுன பின்னுல எல்லாத்தையும் சொல்லிட்டான்..பக்காவா ப்ளான் பண்ணி இருந்திருக்கீங்க.
எதிர் ப்ளாட்ல இருந்த உங்க ஃப்ரெண்டோட மனைவிய கொல்றதுதான் உங்க ப்ளான்.சொத்து அவ பேர்ல இருக்குறது ஒரு காரணம்னா அவங்க நடத்தையுலும் சந்தேகம்.அத நீ பயன்படுத்தப் பார்த்து அது நடக்கலைன்னதும்,உன் ஃப்ரெண்ட வெறி ஏத்தி விட்டுட்டே இருந்திருக்க.
உன்னோட கையாள் புருஷோத்தமன்,ஏற்கனவே பல இடத்துல நடந்த சட்டவிரோதத்துல அக்கியுஸ்ட்.அவன சாமர்த்தியமா யூஸ் பண்றதா நினைச்ச.எல்லாமே க்ளீன்.
ஆனா உனக்கு இருக்குற ஸ்பூனரிசத்த மறந்துட்டியே பாசு..ஸாரி,வாசு.நீ முதல்ல மாத்தி மாத்தி பேசுனது ஏதோ பயத்துல உளறுனன்னு நினைச்சேன்..ஆனா தொடர்ந்து யோசிச்சுப் பார்த்ததுல மாட்டின.நீ எழுதி கொடுத்த அட்ரஸ்ல,புருஷோத்தமனுக்கு கொடுத்த அஸைன்மெண்ட்ல எப்பவும் போல வி பிளாக்குக்கு பதிலா பி பிளாக்குன்னு மாத்தி எழுதிட்ட..அவனும் க்ளியரா பண்ணிட்டுப் போய்ட்டான்.சொல்லிட்டான் நேத்து,ரெண்டு பல்லு ஒரு கண்ணு போனதும்..பாவம்”
“ஸா....ர்”
“ஆமா...புருஷோத்தமன ஏண்டா உன் வீட்டுக்குத் தான் வந்தான்னு நீயே வாயக் கொடுத்த சந்திரன்கிட்ட”
சந்திரன்,“நான் சொல்றேன் ஸார் அத,அந்த பேர்ல சந்தேகம் வந்தா மாட்டிப்போம்னு இவனா நினைச்சுட்டு அந்த சந்தேகத்த தீர்த்து வைக்கிறதா நினைச்சு அப்பிடி சமாளிச்சு இருக்கான்,ஆம் ஐ ரைட்?”
“ம்”
“ஒரு கொலை பண்றதுல தப்பு பண்ணுவாங்க..பிடிப்போம். கொலையையே தப்பா பண்ணி இருக்கீங்களேடா, ...சந்திரன்”
“ஸார்”
“லாக் அப்ல இருக்குற மத்த ரெண்டு பேரையும் சேர்த்து கேஸ் ஃபைல் பண்ணி ஃபார்மாலிட்டீஸ் முடிங்க”
என்ற மனோ வெளியில் விட்ட சிகரெட் புகை ஒரு பெருமூச்சோடு காற்றில் கலந்தது.
*********
கார்ல்ஸ்பெர்க் & முகிலன்..மிக மகிழ்வாக உணர்ந்தேன் பாஸ்.மற்றவர்களும் மிக அருமையாக முடிவை நெருங்கியதற்கும்.
*****
Labels: க்ரைம்-புனைவு
கொலை.கண்டுபிடியுங்கள்...
சென்னையின் மத்தியில் இருந்தது அந்த அப்பார்ட்மெண்ட்.மிகப் பிரம்மாண்ட கட்டிடத்திற்குள் சின்னச் சின்ன பிரம்மாண்டங்களைக் கொண்டிருந்த அப்பார்ட்மெண்ட்கள். மழையின் கைங்கர்யத்தால் பளிச்சென துடைத்து விடப்பட்டது போல் இருந்தது வெளிப்புறம்.
நச நசப்புகளுக்கிடையில் ஆங்காங்கே சிறு கூட்டமாக நின்று பயம் ஆச்சர்யம் பரிதாபம் கோபம் என கலவையான உணர்ச்சிகளை புருவத்தின் இடுக்குகளில் காட்டிக்கொண்டிருந்தார்கள் அங்கே வசிக்கும் வாசிகள்.
மனோ.இன்ஸ்பெக்டர்.இந்தக் கதையின் நாயகன்.எனவே நேர்மையானவன் என்பது அடிப்படை தகுதி.
எதுவும் கேட்காமலே அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் மனோவிற்கு வழிகாட்டிக் கொண்டு முன்னே நடக்கத் துவங்கினான்.மனோவின் மிடுக்கு அப்படி.
B பிளாக்கை அடைந்து,லிஃப்ட் நோக்கி நடந்து, அதன் வழியே 4 வது மாடியை அடைந்தனர்.அழுகைச் சத்தம்.
V 4 என்று சாக்லேட் நிறத்தில் எழுதப்பட்டிருந்த கதவு லேசாக ஆடிக்கொண்டிருந்த வீட்டின் முன்னும் கொத்துக் கொத்தாக மனிதர்கள்.
பெண்கள் புடவைத் தலைப்பை சின்னப் பந்தாக உருட்டி வாயில் வைத்து துக்கம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
மனோவைப் பார்த்ததும் அங்கே இருந்த கான்ஸ்டபிள் லாவகமாகி, சகஜமானார்.
“என்ன சந்திரன்? எதாவது தட்டுப்பட்டதா?”
கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த மனோவின் பார்வையில் மனோதான் தெரிந்தான்.ஆளுயரக் கண்ணாடி.அதன் அருகில் கோகுல் சாண்டில் கிருஷ்ணர் இலையில் அமர்ந்திருந்தார்.அதற்கு கொஞ்சம் தள்ளி,வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுத்திருந்தாள்.செத்துப் போயிருந்தாள்.
கைக்கு அடக்கமான பிஸ்டலை இடது கை இறுக்கமாகப் பிடித்திருந்தது.வலது கை கோணலாக அலைந்திருந்தது.
இடுப்பு ஆரம்பிக்கும் இடத்திலேயே முடிந்திருந்த ஸார்ட் சைஸ் டாப்ஸும், தொள தொளப்பான பாட்டமும் கனுக்காலில் டைட்டும் என அப்டேட்டட் ஃபேசனில் மரணித்திருந்தாள்.
ஒருக்களித்து இருந்தவளின் முகத்தை கையுறை அணிந்த டிப்பார்ட்மெண்ட் ஆள் திருப்பிய உடன்,இடது நெற்றிப் பொட்டில் இருந்து இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்தியது.
“க்ளியர் சூயிசைடு சார்.பேஸிக்ஸ் ப்ரூவ் பண்ணுது”
சொன்ன சந்திரனை பார்க்காமல் வீட்டைப் பார்த்துக் கொண்டே கேட்டான் மனோ.
“என்ன பேஸிக்ஸ் சந்திரன்?”
“டோர் வாஸ் லாக்ட் இன்சைட் சார். எந்த வழியும் இருக்குற மாதிரி தெரியல.அப்புறம் ரீசன் ஸ்ட்ராங்கா இருக்கு சார்.”
எதுவும் பதில் சொல்லாமல் கிச்சன் பக்கம் வந்திருந்தான் மனோ.பளபள தான் எல்லாமே.கிச்சனின் மரவேலைப்பாடுகள் எல்லாம் ‘கிச்’சென்று இருந்தது.அதை ஒட்டி பால்கனி.அந்தப் பக்கம் வீடு.அங்கேயும் கிச்சன்.கொத்தாக நான்கு பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.‘தம்’ பிடித்துத் தாவிவிடலாமோ, என்று யோசித்தவாறே ஒரு சிகரெட்டை உருவினான் அனிச்சையாக.
“கேட்டுட்டுத்தான் இருக்கேன் சந்திரன் சொல்லுங்க..என்ன ரீசன்?அவ்ளோ ஸ்ட்ராங்கா?”
“சார்..”
“ம்”
“பொண்ணு பெரு பூர்ணா.”
அதுக்காகவா சுட்டுக்கிட்டாங்க? அதுவும் இத்தன வருஷம் கழிச்சு?”
“அதில்லை சார்.அவங்களுக்கும் புருஷனுக்கும் ரொம்ப நாளா சண்டை நடந்திட்டு இருக்கு சார்.டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்காங்க.இவங்க நடத்தைப் பத்தி அந்தாளு கேவலமா பேசிட்டாராம் கோர்ட்ல?”
“ம்”
கேட்டுக்கொண்டே அந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டை சுத்தமாக கண்களுக்குள் போட்டிருந்தான் மனோ.அப்பர் மிடிள் கிளாஸ் வீட்டிற்குண்டான பொருட்கள் அத்தனையும்.மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களுமே.
தற்போதைய தமிழ் படத்தில் இருந்து பழைய ஆர்மர் ஆஃப் காட்,போலிஸ் ஸ்டோரி போன்ற ஆங்கிலப் படங்கள் வரையிலான சிடிக்கள் மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
டிவியின் மேல் இருந்த டிவிடி கவரில் உன்னைப் போல் ஒருவன் கையில் துப்பாக்கியோடு கமலும், லால் அங்ங்கிளும்.
“ஹும்ம்..சொல்லுங்க சந்திரன்..எப்போ கோர்ட்ல இவங்கள அசிங்கமா பேசினாராம்?”
“முந்தாநாள் சார்”
”ஓ.குட்.அப்போ ரெண்டு நாளா யோசிச்சுத் தான் செத்திருக்காங்க.ம்.போஸ்ட் மார்ட்டம் சொல்லிடுங்க.யார் மொதல்ல இன்ஃபார்ம் பண்ணது?”
சந்திரன் அழைத்து வந்த நபர் நடுத்தர வயதில் ஸ்லிம்மாக இருந்தார்.காதில் லேசாக கருப்பு அப்பி இருந்தது.சாயம்.
”சொல்லுங்க..மிஸ்ட்டர்“
”என் பேரு ரவி சார். எதிர் பிளாக்ல இருக்கேன்.அங்கே இருந்து பார்த்தா இந்த பால்கனி,ஜன்னல் எல்லாமே நல்லாத் தெரியும் சார்.”
”ம்ம்”
“அழுதிட்டே நின்னுட்டு இருந்தாங்க பால்கனில,திடீர்னு உள்ளப் போனாங்க, கொஞ்ச நேரத்துல ட்டமால்னு சத்தம்.எனக்கு ஒரு மாதிரி இருந்தது.கொஞ்ச நேரம் நின்னுப் பார்த்துட்டே இருந்தேன்.அப்புறம் தான் அவங்க கோர்ட் மேட்டர் ஞாபகம் வந்து ஓடிப்போய்ப் பார்த்தேன்.கதவு பூட்டி இருந்தது.நான் நினைச்ச மாதிரியே ஆகிடுச்சு சார்.”
இவர்கிட்ட ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிக்கோங்க.
இவங்கல்லாம் யாரு?
“அக்கம் பக்கம் இருக்குறவங்க சார்.என்கொயரிக்கு..”
முதலில் நின்றிந்த பெண் நன்றாக அழுதிருந்தாள்.
“பக்..கத்து வீடு சார்.ரொம்ப நல்லப் பொண்ணு சார்.அந்தப் படுபாவி அபாண்டமா பழிப் போட்டுட்டான் சார்.”அழத் தொடங்கினாள்
“சரி..உங்களுக்கு சத்தம் கேட்டுதா?”
“இல்ல சார் நான் அப்போ மார்க்கெட் போய்ட்டேன்.வந்துப் பார்த்தா ஒரே கூட்டம் சார்”
“யாராவது அடிக்கடி வருவாங்களா?”
“இல்ல சார்.எனக்குத் தெரிஞ்சு யாருமே வரமாட்டாங்க சார்?”
எழுதி வாங்கிக்கோங்க சந்திரன்.
”ம்..நீங்க சார்?”
”சணக்கம் வார்., ஸாரி,என் பேரு வாசு ஸார் . நான் போனவாரம் தான் எதிர் பிளாக்ல இருந்து இங்க மாறினேன்.அங்க ஹவுஸ் ஓனரே வந்துட்டாங்க.இதனால அங்க வந்தேன்.ச்சே,இங்க வந்தேன்.இந்த வீட்ட சொன்னதே பூர்ணா மேடம் தான் ஸார்.ஒரு ’ஹாய்’ அவ்வளவுதான் சொல்லுவாங்க.அதுக்கு மேல ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டாங்க”
“ம்..”
கிட்டத்தட்ட எல்லோருடைய பதில்களும் பூர்ணா நல்லவள் பாவம் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்றே இருந்தது.
மனோ,ஸ்டேட்மெண்டுகளை ஒரு பார்வை பார்த்தான்.
முதலில் பார்த்தவன் கே.ரவியில் ஆரம்பித்து எஸ்.சாந்தி,ஆர்.கோதண்டம்,வி.பாசு,என அனைவரும் சொன்னதைச் சரியாக எழுதிக் கொடுத்திருந்தார்கள்.
முதலில் பார்த்ததாகச் சொன்ன ரவியிடம் ஏதோ பொய் இருப்பதாக மனோவுக்குத் தோன்றியதும் அவரோடு அந்த எதிர் பிளாக்கான ’V’ஐ அடைந்து அவன் காட்டிய இடத்தில் இருந்து பார்த்தான்.
உண்மை தான். நன்றாகத் தெரிந்தது.சத்தமும் கேட்கும். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“உங்கள்ல யாருக்காவது அவங்களோட பழக்கமா?”
மொத்தமாக இல்லை என்ற திசையில் தலை ஆட்டினார்கள்.ஒரு பெண் தவிர.
“என்னோட பேசுவாங்க சார். நானும் டிவோர்ஸ் ஆனவள்ன்றதால அதைப் பத்தின டீட்டெய்ல்ஸ்,கேஸ் எப்பிடி மூவ் பண்றதுன்னு கேட்க ஆரம்பிச்சு ஓரளவு நல்லா பேச ஆரம்பிச்சாங்க.எங்க பக்கத்து வீட்ல இருந்த வாசுவுக்கு வீடு வேணும்னு சொன்னதும் உடனே அந்த பிளாக் காலியா இருக்குன்னு முடிச்சுக் கொடுத்தாங்க. ரொம்ப நல்ல டைப் சார்.”
“அவங்க ஹஸ்பெண்ட் பத்தி ஏதாவது சொல்லி இருக்காங்களா?”
“ரொம்ப சொல்ல மாட்டாங்க..ஆனா அந்தாளு வேற ஒரு பொண்ணோட இருக்கிறதுனால மீச்சுவல் அண்டர்ஸ்டேங்கிங்ல பிரியறதா முடிவு பண்ணி இருந்தாங்க.கோர்ட்ல அவர் தப்பா சொன்னதெல்லாம் ஒரு காரணம்தான்னு ஈஸியாத் தான் சொன்னாங்க,ப்ச்”
”அந்த வீடு யார் பேர்ல இருக்கு?”
“வாடகை வீடு தான் ஸார்,”
“ஹும்..அவங்க சாவுல யாருக்கும் லாபம் இல்லைன்னு சொல்றீங்க?”
“ப்ச்”
“என்னை மாதிரி போல்ட் ஆன ஆளா அவங்க இல்லாதது தான் ஸார் தப்பாப் போச்சு.என்கிட்ட யாராவது வால் ஆட்டினா அவ்வளவுதான்.ஓரளவு நான் தான் அவங்களுக்கு தைரியம் சொல்லி வச்சிருந்தேன்.இது ரொம்ப கஷ்டமா இருக்கு ஸார்”
“ஆமா..மிஸ்டர் ரவி எப்பிடி?” கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் கேட்டான் மனோ.
தோள்கைளைக் குலுக்கிச் சொன்னால்.சிம்ப்பிள் அண்ட் குட்.தட்ஸ் இட் ஸார்.ஏன்?”
”கேட்டேன். இங்கே இருந்து போனாரே..மிஸ்டர் ”
“வாசுவா?”
“ம்ம்..வாசு..அவர் எப்பிடி?எத்தன நாளாத் தெரியும்?”
”அவர் என் எக்ஸ் ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட்.லிமிட்ல இருப்பாரு.நான் க்ளியரா இருப்பேன் சார்.எனக்கும் ஹஸ்பெண்ட்டுக்கும் ஒத்து வரலைன்னு தெரிஞ்சதுமே கட் பண்ணிக்கிட்டேன்.அவ்ளோ பிரச்சனை பண்ண என் ஹஸ்பண்டையே நான் சமாளிச்சேன்.இவ ஏன் இப்பிடி பண்ணிக்கிட்டானுதான் ஸார் வருத்தமா இருக்கு.
லிஃப்டில் இறங்கும் பொழுது மனோவிற்கு ரவி சொன்னதில் ஏதோ இன்னமும் பொய் இருப்பதாகவேப் பட்டது.காதுச் சாயம் அவனோடதா அல்லது அவளோடதா?.
வாசு பேசும்போதே உளறுகிறான்.ஆனால் விசாரித்தவரையில் அவனுக்கும் பூர்ணாவிற்கும் எள்ளவும் எள்ளுத் தண்ணியளவும் எந்த விதத்திலும் தொடர்பில்லை.
எதிர் பிளாக் பெண் உதவி தான் செய்திருக்கிறாள்.
பூர்ணா பெயரில் சொத்தும் இல்லை.
கணவன் தான் கொன்றிருக்க வேண்டும்.அல்லது தற்கொலைதான்.
பல யோசனைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது மனோவிற்கு.
மதியம் தன் அலுவகலத்தில், ரிப்போர்ட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் மனோ.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மிக அருகாமையில் சுடப்பட்டதையும் நேரத்தையும் உறுதிப் படுத்தியது.குண்டு மிக அதிநவீன பிஸ்டலினுடையது.சைலன்ஸர் இல்லாமலா இருக்கும்? என்ற முதல் கேள்வி அதைப் படிக்கும் போதே தொக்கி நின்றது மனோவிற்கு.
ரவியின் கண்களும் மூளைக்குள் ஃப்ளாஸ் அடித்துப் போனது.
“ஸார் ஒன் மோர் பேட் நியூஸ்”
“சொல்லுங்க”
“அந்தப் பொண்ணோட ஹஸ்பெண்ட்..அங்க வந்துப் பார்த்துட்டு அழுதுட்டே எல்லார் முன்னாடி அந்த மாடில இருந்து குதிச்சு ஸ்பாட் அவுட் சார்”
“ஷிட்..”
“ஆமா சார்.புலம்பி இருந்திருக்காரு.தப்பு என் மேல தான்.நான் என்ன சொன்னாலும் கேட்டா.”அப்பிடின்னு சொல்லிட்டே செத்து இருக்கான்.
”சந்திரன்”
“ஸார்”
“சொல்லிட்டே வர்றேன்..கேளுங்க”
”எஸ் ஸார்”
“புருஷன் பொண்டாட்டி சண்டை.ஆனா மீச்சுவல் அண்டர்ஸ்டேங்.ஆனாலும் கோர்ட்ல தப்பா சொன்னத நினைச்சு வருத்தப்பட்டு இருக்காங்க பூர்ணா”
“எஸ் ஸார்”
“அழுதுட்டு இருந்திருக்காங்க..அத ரவி எதிர் ப்ளாக்ல இருந்து பார்த்திருக்காரு.உள்ள போயி கதவ சாத்திட்டு சுட்டுகிட்டு செத்திருக்காங்க.சத்தம் கேட்டு இவரு போய் பார்திருக்காரு”
“ஆமா ஸார்.ஆனா ஸ்டேட்மெண்ட்ல கதவ மூடின மாதிரி சொல்லல ஸார்”
“யோவ் அதெல்லாம் அண்டர்ஸ்டுட் பண்ணிக்கனும்யா”
“எஸ் ஸார்”
அப்புறம் பக்கத்துவீட்டு லேடி மார்கெட் போய்ட்டு வந்து பார்த்திருக்காங்க.அவங்களும் இவங்கள நல்லவங்கன்னு சொல்றாங்க.
அப்புறம் கோதண்ட ராமனா என்ன பேரு?”
“இந்தாங்க ஸார் ஸ்டேட்மெண்ட்”
“ம்,அப்புறம் பாசு”
“வாசு ஸார்”
“ம்ம்..இதுல பாசுன்னு இருக்கு..சரி..இவங்க எல்லாருமே பூர்ணா ரொம்ப நல்லப் பொண்ணுந்தான் சொல்றாங்க.ஸோ அந்த வார்த்தைகள் தாங்காம தற்கொலைப் பண்ணிக்கிட்டாங்க”
“ஆமா சார்”
“பிஸ்டல் டீடெய்ல்ஸ்?”
“அது இன்னும் தெரியல ஸார்,அப்புறம் யார் யார் அன்னிக்கு எண்ட்ரி ஆகி இருக்காங்கன்னு லிஸ்ட் கேட்டீங்களே ஸார்”
“குட், வந்துடுச்சா?”
“புதுசா யாரும் இல்லை ஸார்.இவங்க இருக்குற பிளாக்குக்கு ’புருஷோத்தமன்’அப்பிடின்றவர் மட்டும் முதல் தடவையா வந்திருக்காரு.ஆனா அவர் வாசுவுக்கு தெரிஞ்சவராம்.அவர பார்த்திட்டுப் போனதா வாசுவே கன்ஃபார்ம் பண்ணிட்டாரு.”
“அப்போ யாரும் சந்தேகப்படும்படி புதுசா அன்னிக்குப் போகலை”
“ஆமா ஸார்.”
“ஒரு குடும்பம் தற்கொலை பண்ணிக்கொண்டதுன்னு கேஸத் தூக்கிப் போடுங்க.”
“டன் சார்”
மனோ ஒரு காஃபியை அடிவரை சுவைத்துக் குடித்தான்.எழுந்தான்.காஃபியின் காரணமாக சுரந்த அமிலங்கள் அவசரப்படுத்தியது அவனை.
“சந்திரன்”
“சொல்லுங்க ஸார்”
“வாசுவை தூக்கிட்டு வாங்க.ஹி இஸ் த மேன் வி ஆர் லுக்கிங் ஃபார்.”
“சார்..அவனுக்கு பூர்ணாவுக்கும் எந்தவிதத்துலயும் தொடர்பே இல்லை சார்,நல்லாத் துளாவிப் பார்த்துட்டேன் ஸார்”
“அது எனக்கும் தெரியும்..அவனுக்கு ஒரு வியாதி இருக்கு.,தெளியவைப்போம்,”
“புரியல சார்”
“கூட்டிட்டு வாங்க சந்திரன்.ஸ்பூன் ஃபீடிங்கா பண்ணச் சொல்றீங்க என்னை”
என்ற மனோ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை விசிலில் பாடிக்கொண்டே சிரித்தான்.
********
கொலையை யார் பண்ணினார்கள் என்பதையும் கூடவே காரணம் யூகிக்க முடிகிறதா என்பதும்,கூடவே இதில் வேறு என்ன காரணங்கள் அல்லது கோணங்கள் இருக்கலாம் என்பதும் தான் கேள்வி.
இது ஒரு புது முயற்சி.சாதாரணமான க்ளூ கொடுக்காதீர்கள் என்று எல்லோருமே சொன்னதால் இந்தக் கதை.
ஒரு வேளை நிறைய பேர் சொல்லிவிடலாம்.அல்லது சுத்தமாக லாஜிக்கே இல்லை இதெல்லாம் க்ளூவா,கதையா,காரணமா என்றும் கேள்விகள் எழலாம்.
என்றாலும்..மழை நேரத்தில் மூளைக்கு வேலை.
நீங்கள் சரியாக விடையைச் சொல்ல வில்லை என்றால் தோற்றது நான் தான்.ஆம் சரியாக சொல்லத் தெரியாதது கூட முக்கிய காரணமாக இருக்கலாம்.
சரியான விடைகள் கடைசியில் ரிலீஸ் செய்யப்படும்.
******
Labels: க்ரைம்-புனைவு
பதிவர் சந்திப்பு இன்று இல்லை-7/11/09
மீண்டும் மழை.பதிவர் சந்திப்பு நடைபெறாததன் காரணம் மழை.
கேபிள் சங்கர் அழைத்து இன்று என்ன செய்யலாம் என்று கேட்டார்.
இன்று பதிவர் சந்திப்பு நடத்தி அதில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்பினால்...
இனி வீட்டில் எந்த வேலை சொன்னாலும் மழையைக் காரணம் காட்ட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு முடிவெடுங்கள் என்றும் சொன்னவுடன்..பதிலையே காணோம்..
ரெண்டு மூணு ஹலோவிற்குப் பிறகு லைனில் வந்தவர்..கேன்சல்னு பதிவு போட்டுட்டேன் ஜி என்றார்.
ரைட்டு.
‘குளுகுளு’ மழை...
..
Labels: பதிவர் வட்டம்
என்’ணங்கள்
பேராண்மை.ஜனநாதனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
படத்தில்,ஒரு மாணவியின் சவுடால் கேள்வி : “எங்க அப்பா மாதிரி பிஸினஸ் ஆளுங்க இன்வெஸ்ட் பண்ணலேன்னா எப்பிடி இந்த கட்டிடங்கள் வரும்?”
பதில்.
“உழைப்பைக் கழித்து விட்டுப் பார்த்தால் இந்த மேஜை நாற்காலி கட்டிடம் எல்லாம் வெறும் மரம்,செங்கல் தான்” என்று ஜெயம் ரவி கூறும் பொழுது தியேட்டரின் மெளனம் வசனத்திற்கான சம்மதம்.
ஆம்.உலகின் உழைக்கும் வர்க்கம், எத்தனை கோடி கொடுத்தாலும் மேஜை செய்யமுடியாது என்று மறுத்து விட்டால் மேஜை கிடையாது.(மேஜை மட்டுமல்ல.அதன் பக்க வாட்டில் அமரும் நாற்காலியும் அதில் அமர்ந்திருப்பவரின் மதிப்பும் என்று இன்னும் கூராக வசனம் சேர்த்திருக்கலாம்)
பொதுவுடமை குறித்தும்,மார்க்ஸ் குறித்தும்,ஆடம் ஸ்மித்(இவரை இதற்கு முன் எத்தனை பேருக்குத் தெரியும்?) அடிப்படைகளை மக்களிடம்/இளைஞர்களிடம்/மாணவர்களிடம் கடத்தும் பணியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.(வெண்ணிற இரவுகளும் தான்)
“உலகப் பொருளாதாரம் படியுங்கள்,இந்தியச் சந்தை எப்படி உபயோகிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்”
“எதிரிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்”- ஒரு மாணவி
“இவர்களுக்கு ஏது தாய்நாடு-பற்று? இவர்கள் சர்வதேச கூலிப் படையினர்”
மிகக் கூர்மை.
ஆனால் ஆர்வக் கோளாறில்
“தாய்நாட்டை மலடாக்க நினைப்பது தாயையே மலடாக்க நினைப்பதற்கு சமம்”..என்ன கொடுமை பாஸ்.தாய் ஆனப்புறம் என்ன மலடு?
அப்புறம் மலடு என்ற வார்த்தையை எல்லாம் உங்கள் போன்ற புரட்சிக்காரர்களால் உபயோகிக்கப்படுவதும் தவறு என்றே நினைக்கிறேன்.
காட்டுக்குள் நடக்கும் காட்சிகளும் வசனங்களும் தமிழுக்குப் புதுசு.வாழ்க.
பழங்குடியினைரை ஏற்றிப் பேசுவதாக நினைத்து ஆனால் கிடைக்கும் கேப்பில் தாழ்த்தியே இருக்கிறார்கள்,யதார்த்தம் என்ற போர்வையில்..என்பதில் என் கருத்தும் பதிவர் வே மதிமாறனின் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.
**********
அலுவல் விசயமாக ஒரு இடத்திற்கு,சொன்ன நேரத்தில் போயிருந்தேன்.அங்கே போனதும் என்னை வரவேற்றவர்,எனக்குத் தேவையான விவரங்களை கொடுக்க வேண்டியவரை தொலைபேசியில் அழைத்தார்.அவர் வருவதற்கு 30 நிமிடங்கள் ஆகும் என்றார்.வந்தார்.எனக்கான விவரங்களை 5 நிமிடங்களில் தந்தார்.அதன் பிறகு எனக்கு அதில் ஒரு மணி நேர வேலை இருந்தது.அந்த ஒரு மணிநேரமும் அவர் சும்மாவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
என்னுடை முதல் 30 நிமிடங்கள்,அவரின் 60 நிமிடங்கள் என்பது மிக முக்கிய நேரங்கள்.விரயம்.
அவர் முதலில் செய்த 30 நிமிட வேலையை எனக்கு விவரங்கள் கொடுத்து விட்டு செய்யச் சென்றிந்தால் அது தான் டைம் மேனேஜ்மெண்ட்.ஒரு விளக்கம் இருக்கு.(தலைநகரத்தில் வடிவேலு கதை சொல்ல ஆரம்பித்ததும் காணமல் போகும் கூட்டம் போல அடுத்த பாராவை ஸ்கிப் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.)
ஓரளவு தெரிந்த பாடம் தான்.
உங்களுக்கு முன்,கொஞ்சம் மண்,பெரிய கற்கள்,நீர்,சிறிய கற்கள் என இருக்கிறது.இதை எந்த வரிசையில் பக்கெட்டில் இட்டு நிரப்புவீர்கள்?
இதை வைத்து உங்களின் நேர மேனேஜ்மெண்ட் அதைவிட முக்கியமாய் எதற்கு முதலில் முக்கியத் துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறியலாம்.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
***********
சச்சின் டெண்டுல்கர்.இவர் ஒரு அற்புதம்.நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் மெச்சூரிட்டி இன்மை புரிந்தது.(என் கருத்து மட்டுமே..டீம் தான் முக்கியம்,இந்திய வெற்றிதான் முக்கியம் என்பதை அறிவேன்).
அதாவது டெண்டுல்கர் மிக நல்ல ஃபார்மில் ஒரு அற்புதமான சாதனை நோக்கிய(200ரன்கள்)பயணத்தில்,கூடவே வெற்றியையும் எளிதில் வசமாக்கும் ஒரு கட்டத்தில், ஜடேஜா ‘காஜு’பார்த்துக் கொண்டே இருந்தார்.கடுப்பாக இருந்தது.அவர் அடித்த இரண்டு 4களை டெண்டுல்கரும் அடித்திருப்பார்.அதுவும் நீண்ட நாட்கள் கழித்து ஆஃப் ஸ்பின்னரை இரண்டு அடிகள் ரிதத்தில் தாவி,பந்து விழுந்தவுடன் அள்ளி சைட் ஸ்கீரின் நோக்கி சிக்ஸர் தூக்கிய காட்சிகள் கண்களுக்கு விருந்து.
எதிரில் இருப்பவரின் ஒத்துழைப்புதான் சாதனைகளுக்கும் வெற்றிக்கும் முக்கியம் என்பதை நேற்று உணர்ந்தேன்.அல்லது நேற்றும் உணர்ந்தேன்.
ஸாரி சச்சின்.
*********
நாளை (7/11/09) பதிவர் சந்திப்பு.
சென்ற முறை என்ணங்களில் விழாக்குழுவினரை நல்ல இடத்தில் நடாத்திக் கொடுக்க கோரிக்கை வைத்தது வீண் போகவில்லை(ஜூவி ஃபாளோஅப் ரேஞ்சு).
நாளை மறுநாள்(8/11/09)உலகப் படம்.
சிவராமன் அண்ணா பதிவில்...
'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் பதிவர்களுக்காக பதிவர்களே இலவசமாக மாதம்தோறும் திரையிடும் உலக சினிமா வரிசையில், வரும் ஞாயிறு ஈரான் / பிரெஞ்சு மொழிப் படம் திரையிடப்படுகிறது.
பெயர்: At Five in the Afternoon
நாடு : ஈரான் / பிரெஞ்சு
இயக்குநர் : Samira Makhmalbaf
வெளி வந்த வருடம் : 2003
பட நேரம் : 105 நிமிடங்கள்
நாள் : 08.11.09, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.
உலக சினிமா வரிசையில் முதல் முறையாக பெண் இயக்குநரின் திரைப்படம் திரையிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்று இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.பார்த்து இருந்துவிடாதீர்கள்,வந்துவிடுங்கள்.
இது போன்ற நிகழ்வுகளுக்கு வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது யாரையாவது தொலைபேசியில் சரியாக 30-40 நிமிடங்களுக்கு முன்னர் அழைத்துப் பாருங்கள்.கிளம்பியாச்சா என்று கேட்க..ம்ஹூம்..ஒருத்தரும் போனை எடுக்க மாட்டார்கள்.(நானும்தான்).
காரணம்..பொய்ய்யி தான்.
வீட்டில் ஏதாவது ஒரு அதிமுக்கிய வேலையச் சொல்லி வைத்திருப்போம்.போன் எடுத்தால் ’கிளம்பிட்டேன் தலைவரே’ என்ற நமது பதிலில் இருந்து ஒரு நூறு கேள்விகள் எழத் தொடங்கிவிடும்.அதனால் தான் சைலைண்ட்டாக, சைலண்ட் ஆக்கிவிட்டு..தெரு தாண்டியதும் சுற்றும் முற்றும் பார்த்து,அழைத்தவரை அழைத்து..ஹேஹயேய்..கிளம்பிட்டேன்..நீங்க’வை சொல்ல முடிகிறது..(அங்கும் முதலில் சைலண்ட்டாக்கித் தான் எடுக்கப்படும்!
ஹுக்கும்.
***********
மாறவர்மன் ரெடியாகிக் கொண்டிருக்கிறான்.
********
பதிவர் பின்னோக்கியின் இந்த மூன்று வரிகள் மனதிற்கு மிக நெருக்கமாக உணர்த்தியது.
டோரா புஜ்ஜியை நிறுத்தலாம்
மின்னஞ்சல் படிக்கலாம
தூங்கிவிட்டான் மகன்
******
Labels: என்’ணங்கள்
பதிவர் சந்திப்பில் வாலி,வைரமுத்து,கமல்,ரஜினி...
கேபிள் சங்கள் மிகுந்த முனைப்புடன் வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பை களை கட்ட வைக்க வேண்டும் என்று நினைத்து,தன் துறையைச் சேர்ந்த சிலரைப் பிடித்து தலைப்பில் இருக்கும் ஆட்களை அழைத்துவந்து விட்டால்?..கற்பனைக்கு காசா பணமா?
வாலி :
கலை உலகம் அலற வந்ததோ
வலை உலகம்
(கை தட்டல்)
அனானி என்ற மருத்துவம்
யுனானியை விட மகத்துவம்
அதர் ஆப்ஷனில்
பிடுங்குவது பல்லை என்றாலும்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
சொல்லை
பின்னூட்ட டுபுரி
பதிவுலகின் ஜாங்கிரி
கலை உலகம் அலற
வந்ததே வலை உலகம்
வாழ்க இது வையம்
உள்ள மட்டும்
என வாழ்த்தி அமைகிறேன்
இந்த
ரங்கராஜனுக்கே
ராஜன்
கை தட்டல் பின்னுவதை கேபிள் பெருமிதம் பொங்க அருகில் இருப்பரைப் பார்த்து ‘எப்பிடி’என்கிறார்.அவர் திரும்பிக் கொள்கிறார்.(சிவராமன்).
வைரமுத்து : அடிவயிற்றில் இருந்து தடித்த குரலில் விழுகிறது வார்த்தை.சுவரும் விழுந்து விடுமோ என்று ஒட்டி அமர்ந்திருப்பவர்கள் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொள்கிறார்கள்.
‘ஒரு அனானி
ஒரு அதராப்சன்
ஒரு தொடர் பதிவு
ஒரு எதிர் பதிவு
இந்த நான்கும் இணைந்திருப்பது தான் நல்லதமிழ்ச் சமூக வலையுலகம்.தமிழ்.உலகின் மூத்த மொழி.தமிழ் உலகம் ஏற்றுக் கொண்ட மொழி.தமிழ்,மக்களின் வாழ்வியிலை பிரதிபலிக்கும் மொழி.தமிழ் இன்று வலையுலகில் ஒட்டுமொத்த உலகை கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் உன்னத மொழி.
(சாதாரண குரலில்) நினைச்சுப் பார்க்குறேன்..முன்ன எல்லாம்..
(மீண்டும் சுவர்விழும் குரலில்)வடுகப்பட்டியின் கரட்டு மேடுகளில் சுள்ளிகளுக்கிடையில் கால்தடம் பதித்துக் கொண்டிருந்த ஈர் பணிரெண்டாண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து முண்டாசுக் கட்டிய பேயத்தேவரின் சுட்டு விரல் பிடித்து நடந்து கொண்டிருந்தபொழுது மாடு விரட்ட எழுப்பிய ஓசைகளையெல்லாம் இன்று பின்னூட்டங்களில் பார்க்கையில் உள்ள படியே உவகை கொள்கிறேன்.மனம் சில சமயம் கனத்துப் போவதுண்டு.அப்பொழுதெல்லாம் இது போன்ற பின்னூட்டங்களில் கட்டுண்டு காலம் கடத்துவது பிடித்தமான ஒன்று.
இங்கே என்ன இல்லை..என்ன இல்லை இங்கே..அனுஜன்யா என்ற மகானுபாவன் எழுதும் கவிதைகள் என் உயிர்வரைச் சென்று குருதித் திசுக்களையெல்லாம் நலமா வைரமுத்து என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறது தெரியுமா தமிழ்பெருமக்களே..
வாழ்க தமிழ்.வளர்க தமிழ்வலையுலகம்.தமிழ் வணக்கம்.நன்றி.
எப்பூடி என்று கேபிள் வாய்விட்டே கேட்கிறார்..ஆனால் கேட்கப்பட்டவர் ஜ்யோவ்ராம் சுந்தர்.. “அய்யயே..என்ன எழவுங்க இது.”என்று தலையில் அடித்துக் கொண்டதை கேபிள் கவனிக்காமல் அடுத்த ஆளைப் பார்க்கிறார்.
கமல் :
வெல்..(செருமுகிறார்) வலையுலகம்.என் மகள்,தோழி என்று சொல்வது சாலச் சிறந்த வார்த்தை.அப்படியும் சொல்லலாம்.
(ஜாக்கி சேகர் கை தட்டுகிறார்.வந்தியத் தேவனுக்கு அலைபேசியில் ட்ரை பண்ணிக்கொண்டே இருக்கிறார்..)
அடிக்கடி வலையில் நடப்பவற்றைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். நதிக்கரையில் பிறந்த நாகரீகம் இன்று இங்கே ..இங்கேன்ன இந்த கூட்டத்துல இல்லை..இங்கே வந்து நிறுத்தி இருக்கிறது நம்மை.
இங்கே பெரியாரின் மடியிலும் தவழ்ந்துகொள்ளலாம்.டிவிஆரின் பதிவுகள் மூலம் சிவாஜியின் தோள்களில் நின்று கொண்டு தொலைதூரம் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என்று சொல்கிறேனே என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.
பரமக்குடியில் சீனிவாசன் ஆரம்பித்து வைத்து ஒரு நான்குவரிகள் தான் என்னைப் பொறுத்தவரை முதல் வலை.இன் ஃபேக்ட் அவர் பின்னிய வலைதானே நானும்(மூக்கின் நுனியை நீவியவாறே தீர்க்கமாகப் பார்க்கிறார்)ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பதுகள் என்று நினைக்கிறேன் நாயகன் (முரளிகண்ணன் சைஸாக எழுந்து வருடம் சொல்ல வருகிறார்..)
நாட் எக்ஸாட்லி..பட்..ஆம்..இது தான் அடுத்த கட்டம் நோக்கி தமிழை உலகில் அறிமுகப்படுத்தும் ஒரு ஆயுதம்னு சொல்லமுடியாது அதே சமயம் அதை ஆயுதமாக மாற்ற முடியும்னு சொல்லிட்டா சொல்லப்படுறது என்னன்னு யோசிக்க வைக்கிறது..
வெல்..வாழ்க.
ரஜினி...
வலையுலகம்..ஹஹா..ஹஹ்ஹா.. பிளாக்க்க்க் ஸ்ஸ்ஸ்ப்ப்பாட்..சங்கர்ஜின்னு சொன்னாங்க.என்னடா எந்திரன் சொன்ன படி முடிச்சு ரெஸ்ட் தானே இன்னிக்கு எதுக்கு சங்கர்ஜி வந்திருக்காரு..ஆப்ப்ப்ப்டிடின்ன்னு சொல்லி யோசிச்சு மேலே இருந்து கீ..ழே வந்ந்து பார்த்தா..கேபிள்ஜி..ஹஹ்ஹா..நல்ல நண்பர்.துடிப்பான அஸிஸ்ஸ்டெண்ட் ஆப்பிடிங்கறதாலே..சரி..போவமே..யாதா யதோ..ன்னு சொல்லி..வந்தேன்.
நல்லா..நல்லா..நல்லா இருக்கு இது.வந்துட்டு, யார் என்ன சொல்றாங்க,யார் என்ன கருத்து எல்லாம் ஓக்கே..ஆனா கண்ணுங்களா..எப்டி எழுதறே..ஆங்..எப்டி எழுதறே ஆப்டிங்கறதுலே மைண்ட் செட் பண்ணிட்டா ச்சும்மா த்தூள் த்தூள் பண்ணிடலாம்..ஆல் த பெஸ்ட்..
திடீரென சலசலப்பு..காரில் இருந்து விஜய டி ராஜேந்தர் குதித்து உருண்டு வருகிறார்.
கூட்டம் மொத்தமும் கேபிளைப் பார்க்க
“எங்க அம்மா சத்தியமா அவர கூப்புடல்லய்யா”என்று சத்தியம் பண்ணிக்கொண்டிருந்தார்..
டி ஆர்.
நேத்து கேபிள் (கேபிளைப் பார்த்து..என்னா சங்கர் நான் உன்னச் சொல்லல..கேபிள் டிவியச் சொன்னேன்.முடி சிலுப்பப் படுகிறது)
நேத்து கேபிள்
அப்புறம் சன்
வந்தாண்டா என் சன்
இன்னிக்கு பிளாக் ஸ்பாட்
இனி இது என் ஸ்பாட்
தாடிதங்கச்சி.டண்டணக்கா.பிளாக்ஸ்பாட்.காம்
கையைச் சொடுக்கிக்கொண்டே
எம்ஜியார்..எம்ஜியாரே எதிர்த்தவன்..சுண்டக்கா பிளாக்..
ஏ மோதிப்பாரு
நான் டி ஆரு..
வாங்கி வைத்திருந்த டீயைக் கூட குடிக்காமல் கூட்டம் அபீட்.
**********
புதிய, பழைய என்றில்லாமல் பதிவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..
சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
மேலும் விபரங்களுக்கு
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964
*******
Labels: பதிவர் வட்டம்
பிடித்த பதிவர்..பிடிக்காத பதிவர்.
பரிசல் இதைத் தொடரச் சொல்லி அழைத்தார்.முடியாது என்று பின்னூட்டம் இட்டேன்.துண்டைப் போட்டு தாண்டி விட்டதாகவும் மிக நல்ல குளியல் போட்டதாகவும் சொன்னார்.சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டு குளித்ததை எல்லாம் ஏன் சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்.அய்யயோ முழுக்கு என்ற அர்த்தமோ என்று அழைத்துக் கேட்டால் ஆமோதித்தார்.
ரைட்டு...
காதலுக்கு நண்பனை
தூது விட்ட நாட்கள்..
பின்
நண்பனுக்காக அந்த
காதலையே
தூக்கி எறிந்த நாட்கள்
என்று கல்லூரி நாட்களில் எழுதிய கவிதை கண்முன் வந்தது.
பரிசல்..என்ற நண்பனுக்காக..இந்தத் தொடர் பதிவு...
இந்தப் பதிவோட விதிகள்:(பரிசல் குரலில்)
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
என் பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)
*****
இனி
1.அரசியல் தலைவர் :
பிடித்தவர் : ஜெயலலிதா(ஆளுமை.)
பிடிக்காதவர்: மு.க.அழகிரி(தோழர் லீலாவதி கொலையை பார்த்ததில் இருந்து)
2.எழுத்தாளர்
பிடித்தவர் : எப்பொழுதும் சுஜாதா..இப்பொழுது, எழுதும் அனைவரும்
பிடிக்காதவர் : எல்லோருடைய எழுத்திலும் ஏதாவது ஒன்று கற்றுக் கொள்ள இருக்கத்தான் செய்கிறது.அட்லீஸ்ட் எப்படி எழுதக் கூடாது என்று தெரிந்து கொள்ளவாவது.
3.கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து
பிடிக்காதவர் : விவேகா(உன் இடுப்பு ஒன்னு!)
4.இயக்குனர்
பிடித்தவர் : பாலா
பிடிக்காதவர் : கே.பாலச்சந்தர்
5.நடிகர்
பிடித்தவர் : சத்யராஜ்(ரெங்காராவைப் பிடிக்கும்.இவர் அவரின் மாற்று)
பிடிக்காதவர் : ஜெயம் ரவி(யின் குரல்)
6.நடிகை
பிடித்தவர் : த்ரிஷா(தோழி என்பதாலும்)
பிடிக்காதவர் : ஜெனிலியா(சந்தோஷ்சுப்ரமணியம் பார்த்ததில் இருந்து நிறையப் பெண்கள் ஏ..ன்ன்..அப்ப்ப்.டி பார்..க்க்க்.குறே..என்று பேசிக்கொண்டிருந்தது கூடுதல் எரிச்சல்)
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : எம்.எஸ் விஸ்வநாதன்
பிடிக்காதவர் : தேவிஸ்ரீ பிரசாத்
8. தொழிலதிபர்
பிடித்தவர் : சரத்பாபு(சாதாரண குடும்பத்தில் பிறந்து, படித்து,அந்த படிப்பிற்கான வரவேற்பு அதிகம் இருந்தும் தனக்கான தொழிலைத் தொடங்கி அதில் சாதித்துக் கொண்டிருக்கும் நபர்)
பிடிக்காதவர் :கலைஞர்(என்னைப் பொருத்தவரை அவர் தொழில் அதிபர் தான்)
9.பிடித்த பதிவர் :இதில் பிடித்த பதிவு என்று இருக்க வேண்டும்.சமீபத்தில் டாக்டர் தேவன்மயம் எழுதிய விரிவான கட்டுரை பிடித்திருந்தது.
பிடிக்காத பதிவர் :இதில் கள் விகுதி இருக்க வேண்டும்- நேர்மையற்றவர்கள்(அனானி/வேறுபெயர் என.).அரைவேக்காடுகள் என நிறைய.(ஒரு விசயம் குறித்தான அடிப்படை தேடலோ உழைப்போ இல்லாமல் ஹிட் அண்ட் ரன் மாதிரி எழுதிப் போவது சங்கடமாக இருக்கிறது)
நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன். எனவே எழுத்திற்கான அடிப்படை உழைப்பை செலுத்தி எழுதுவதென்பதே தற்பொழுதைய முடிவு.
விளையாட்டு
பிடித்தது : கிரிக்கெட்(ஒரு நொடியில் ஒருவர் ஒரு சிறு தவறு செய்தாலும் 10 பேரின் உழைப்பும் வீண்.)
பிடிக்காதது : கோல்ஃப். (இதை என்ன எழவிற்கு விளையாடுகிறார்கள் என்று இதுவரை தெரியாது.ஒரு பந்தை அடிப்பார்களாம்..பொதி மூட்டையை தூக்கிக்கொண்டு ஒருவர் கூடவே லொங்கட்டி லொங்கட்டி என்று நடந்து வருவாராம். பந்தை அடைந்ததும் மீண்டும் ஒரு தட்டு.. மீண்டும் லொங்கட்டி..ம்ஹூம்..புதிர்.)
..
தொடர அழைப்பது
ஜெனோவா
அன்புடன் மணிகண்டன்
முரளி கண்ணன்
பின்னோக்கி
அதிஷா(எங்கய்யா போனீரு?)
Labels: சங்கிலிப் பதிவுகள்
அன்பின்...
அன்பின்
நலம் நலமறிய ஆவல் என்று புல்லைப்பிடுங்கி பல்லிடுக்கில் வைத்துக் கடித்துக் கொண்டே இதை எழுதியிருக்க முடியும்.ஆனால் அதற்கு குறைந்த பட்சம் நீ உயிரோடு இருந்திருக்க வேண்டும்.’என்ன செய்வது பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை’என்று சொல்பவர்களிடத்தில் எப்படிச் சொல்வேன் நீ இறந்தது என் கைகளில் தான் என்று.மறக்கவியலா,மலரடி போற்றா அமங்களச் செவ்வாய் அது.
‘நினைவிருக்கிறதா’ என்று இப்பொழுது உன்னிடம் கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு சலித்துப் போன சுகம் இருக்கத்தான் செய்கிறது.இருக்கிறதா என்பது உன்னை நோக்கி என்ற போதும் என்னிடம் வருகின்ற கேள்வியாகத்தானே இருக்கிறது உன்னைப் போலவே. நீ, நான் என்றானதால் நீ என்ன, நான் என்ன?
சனிக்கிழமைகள் தோறும் உனதான நாட்களாகவே கழிந்தன-மீண்டும் மொழிப்பிரச்சனை-நமதான நாட்களாகவே கழிந்தன.வெள்ளி இரவுகள் விழிமூடியதில்லை.உன்னைப் பார்க்கப் போகும் நாள், அதன் நாளை என்பதனால்.சனி இரவுகள் விழிமுடியதில்லை உன்னைப் பார்த்துவந்த நிமிடங்களை எண்ணித்துய்த்திருந்ததனால்.எப்படி இருந்தோம்.எப்படி இறந்தாய்?
மரணம்.சட்டென வந்து பட்டெனப் பிரியும் ஒரு அபூர்வ வஸ்துவாய் அது இருப்பதால்தான் மானுடம் இன்னும் மருளுகிறது புலியைக் கண்ட மானினம் போல.மரணம் போன்ற யாதுகூறியும் விளங்கிக்கொள்ளவியலா தத்துவங்களின் மீது ஒருபோதும் எனக்கு விருப்பு வந்ததே இல்லை.ஆனால் எத்தனை நாட்கள் பேசிப்பேசி வார்த்தைகளைத் தொலைத்துத் தேய்த்து வளைத்து மடித்து மீட்டிய அத்தனையிலும் ’நீ’ எப்படியானவள் என்பதை அறிய இயலவேயில்லை என்றாலும் ஓர் நொடியும் வெறுப்பின் கால்தடம் கூட அண்டியதில்லை .நீ அல்லது அதுதான் நீ.
புதர் மண்டிய தோட்டத்தின் இரவுக்காவலன் சப்தங்களின் மிகச் சிறந்த ரசிகனாய்த் தன்னை மாற்றிக்கொண்டால் எப்படியவன் இரவுவாழ்வுகள் இனிமையாய் இருக்குமோ அப்படித்தான் நீ விட்டுச் சென்ற, புதிர்வார்த்தைகளையெல்லாம் என்மீதான ப்ரியத்தின் வெளிப்பாடாகவே மாற்றிக்கொண்டவன்.எப்படி இருந்தோம் எப்படி இறந்தாய்?
கண்களால் பார்த்துச் சிரிக்கலாம்.நீ கண்களால் சிரிப்பதைப் பார்த்திருக்கிறேன்.என் கண்கள் பிடிக்குமென்பாய் அடிக்கடி..அதனால்தான் உன்னோடென் கண்களையும் எடுத்துச் சென்றாய்.பார்ப்பதெல்லாம் சூன்யமாய் அல்லது சூன்யப் பார்வையே மிச்சமிருக்கிறது என்னிடம்.
சில ப்ரியங்கள் பேசுவதில்லை.சில பேச்சுகள் ப்ரியமாய் இருப்பதில்லை.இரண்டும் ஒற்றைப் புள்ளியில் சேர்ந்தவள் நீ என்றாலும் மரணக் கோடு பிரித்துப் போனது இடவலமாய் அல்லது கீழ் மேலாய்.நான் இன்னும் கீழே.
எப்பொழுதெல்லாம் கண்ணாடி அணிகிறேனோ அப்பொழுதெல்லாம் உன்னை நினைப்பதுண்டு.நான் எப்பொழுதுமே கண்ணாடி அணிந்திருப்பதுவும் அதனால்தானோ என்று எண்ணியதில்லை ஒரு போதும்.
என் இதயத்தில் ஓடுவது உன் ரத்தம் என்று ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும் எழுதி இரண்டு புள்ளிகள் ஒரு அம்பு என உன்னளவில் அழகு செய்து அடிக்கடி எழுதுவாய்.
போலவே உன் இறுதிக் குருதியை என் மார்பில் நனைத்து,அதுவரை நீ எழுதிய அத்தனை கடிதத்திற்கும் மொத்தமாய் முற்றுப் புள்ளியை ரத்தமாய் என் நெஞ்சில் வைத்துப் போனதை மறக்க இயலவில்லை.உறைந்தது உன் ரத்தம் மட்டும் அல்ல.
ஒரு நாள் நானும் இறப்பேன்.மரண நிமிடங்களின் வலி உணர்த்தப்படும்.ஆனல் ஒருபோதும் மரணம் விட்டுச் செல்லும் வலியை உன்னால் இனி உணர முடியாது.அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி,என்றாலும் மரணம் விட்டுச் செல்லும் வலியை ஒருவருக்கும் தரக்கூடாதென்பதில் உறுதியாய் இருக்கிறேன்.அல்லது கல்லாய் மாற்றிக் கொண்டேன் என்னை.
இதோ..நம்மைப் போலவே..இந்தக் கடிதமும் முற்றுப் பெறாமலே...
..
Labels: புனைவு
மனக்குரங்கு
‘தொப்’ என்று மிக உயரத்தில் இருந்து விழுந்தான்..எழுந்தான்.. படுக்கையில் இருந்தான். வழக்கமான கனவு.. அடிக்கடி இந்த உயர வீழ்ச்சிக் கனவு வருகிறது.. தூங்க பிடிக்கவில்லை.. ‘டிக்’ சத்தத்தின் முடிவின் ஆரம்பத்தில் படுக்கை விளக்குத் தன் கடமையைச் செய்தது.. கூசிய கண்ணை குறுக்கிக் கொண்டு வெளிச்சம் பழகியவுடன் புத்தகத்தை எடுத்தான்..கைகள் பக்கங்களை புரட்டியது..கண்கள் மூடிக்கொண்டு போனது..
மனம்?
"மனசாட்சி உறங்கும் பொழுது மனக்குரங்கு ஊர் சுற்றக்கிளம்பிவிடுகிறது" என்று கலைஞர் கருணாநிதியின் பட வசனம் அங்கே உண்மையானது.. அவன் அறை சன்னல் கம்பிகளை வழியே வானம் பார்த்த மனம், மரம் ஏறி முகில் தொட்டு பறந்து பின் அவன் ஊருக்குள் சென்று அமர்ந்தது..
பிள்ளையார்பாளையம்.. அவன் பிறந்த ஊர்.. இப்பொழுது அவன் மனம் சுற்றும் இடம்.. அதோ அந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தான் அஞ்சாப்பு வரை படித்தான்.. அஞ்சாப்பு "ஆ" பிரிவு.. அங்கு இருக்கும் அடிகுழாயில் சாப்பிட்டு முடித்து டிபன்பாக்ஸை கழுவும் பொழுது ஏற்படும் சண்டையில் பலமுறை டிபன்பாக்ஸ் விளிம்புகளால் வெட்டுப்பட்டிருக்கிறான்.. சில முறை வெட்டி இருக்கிறான்.. இதோ இந்த பஸ்ஸ்டாண்டு தான்.. அவன் பஸ்ஸில் போகிறானோ இல்லையோ காலையில் இங்கு ஒருமணிநேரம் நின்று எல்லா ஃபிகர்களையும் பத்திரமாக அனுப்பி விட்டு ஒரு தேவாம்ருத டீ பருகும் புண்ணியஸ்தளம்.. அந்த பஞ்சாயத்து போர்டு ஆபிஸ் திண்ணைப் பேப்பர்கள் தான் அவன் உலக அறிவை வளர்த்த இடம்.. இந்த தெரு முட்டுச் சந்தில் தான் சொக்கலால் பீடியை முதலில் பற்ற வைத்த இடம்.
அதோ தெரிகிறதே.. அந்த பச்சைக்கலர் வீடு,அங்கே பக்கத்தில் இருக்கும் காலி இடத்தில் தான் சோளக்கருது கட்டை பாலில் கிரிக்கெட்...
"ஸார்.. ஸார்.. " சத்தம் காதை பிளந்தது
"வேல் முருகன்றது?? கேட்டவனுக்கு வயது எப்படியும் 30க்கு மேல் இருக்கும்.. டைட்டான சட்டையா இல்லை கட்டுமஸ்தான உடம்பா..?
"சொல்லுங்க என்ன விசயம்?"
"நீங்கதானா வேல்முருகன்..?"
"ஆமாங்க.. நீங்க யாருன்னு தெரியலயே..?"
"உங்க ஊர் பிள்ளையார்பாளையம் தானே.. அங்க பத்மா டீச்சர்னு இருந்தாங்களே ஞாபகம் இருக்கா?"
ஞாபகம் இருக்காவா? என்று நினைத்துக்கொண்ட வேல்முருகனின் கை அனிச்சையாக தலையை தடவிக்கொண்டது.. அத்தனை கொட்டுகள்.. பத்மா மிஸ் கொட்டியது..
"ஓ நல்லா தெரியும்.. சொல்லுங்க.. உள்ள வாங்க.."
"இருக்கட்டும்.. அவங்க பொண்ணத் தான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.. ஊருக்கு போனப்ப உங்க அம்மா உங்க விலாசம் கொடுத்து இந்த கவர கொடுக்கச் சொன்னாங்க.. 2000 ரூபாய் இருக்காம்.. கொஞ்சம் வேலை இருக்கு.. வரேன்"..
"தாங்க்ஸ்ங்க.."
எவர்சில்வர் பானையில் ஈரத்துண்டை சுற்றி வைத்தால் தண்ணீர் ஜில்லென்று இருக்கும் என்று அம்மாவிடம் பழகிய யுத்தியை அந்த ரூமிலும் செயல்படுத்தி இருந்த வேல்முருகன் கடகடவென இரண்டு டம்ளர் குடித்தான்..
வரட்டும் அந்த ஹவுஸ் ஓனர்பய.. 1500 ரூபாய்க்கு என்னாப் பேச்சு பேசினான்.. மூஞ்சில விட்டெறிஞ்சுடுவம்..
வேல்முருகா.. இன்னைக்காச்சும் கிடைக்குமா? என்ற குரல் கேட்டு,
“குடுக்காம எங்க போயிரப்போறம்” என்ற சொல்லிக்கொண்டே மிதப்பில் நடந்து.. அந்த கவர் வைத்த இடத்தை பார்த்தான்..
அடச்சே.. அம்மா செத்து அஞ்சு வருஷம் ஆச்சே.. காலைல வந்ததும் மனக்குரங்கு தானா.. என்று மூளை உணர்ந்ததை கண்ணிகளின் ஓரம் உறுதி செய்தது.
சென்ற வருடம் எழுதியது.மீள்புனைவு.அந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் இங்கே படிக்கலாம்.
..
Labels: புனைவு