நான், முரளிகண்ணன்,லக்கிலுக், அதிஷா, கார்ட்டூன் பாலா ஆகியோர் கிட்டத்தட்ட 6 மணிநேரம் நடந்து சென்று முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்தியதில் ஆரம்பித்தது 2009ம் ஆண்டு. அது இறுதி ஊர்வலம் அல்ல..போராட்டத்தின் ஆரம்பம்.
வெயிலில் போகும்பொழுது கண் எரிகிறது என்று குளிர்கண்ணாடி அணியும் என் போன்ற அலம்பல்கள் இருக்கும் இதே ஊரில் தான் இனத்திற்காக தன்னை எரித்துக்கொண்டு, மிக ஆழமான வார்த்தைகளால் எழுதிய கடிததத்தையும் சுயத்தின் மீதான பொதுவான நலன்களின் மீதும் கோபத்தை எறிந்து விட்டுப் போனான்..எரிந்ததால் இன்னமும் அணையாமல் இருக்கிறான். இங்கே அணையாவிட்டாலும் அங்கே கருகியது என்பதனால் 2009 ஒரு சாபக்கேடு.
அதே ஜனவரியின் முற்பகுதியில் மிக லேசான மனதுடன் புத்தக கண்காட்சிக்குப் சக பதிவர்களுடன் தினமும் போவதும் வருவதும் வாங்குவதும் என்றிந்த தருணங்களும் மறக்க முடியாதவை.
சுஜாதா உயிருடன் இருந்திருந்தால் இப்படி எழுதி இருப்பார் என்ற போலி கற்றதும் பெற்றதும் எழுதி முடித்த ஜனவரி ஒன்று இன்றும் அன்று போலவே,அவரைப் போலவே நெஞ்சில்.
பிப்ரவரி 2009 மறக்கமுடியாத மாதம். சரவணபவனில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது,எதிரே அமர்ந்திருந்த ஒரு பெரிவரும் அவரது மகளும் கையில் ஜூனியர் விகடனை வைத்துக்கொண்டு “போலிஸ் வக்கீல் பிரச்சனைய கிண்டல் பண்ணியிருக்கான் பாரு எவனோ” என சிரித்துக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு வாய் கூட சாப்பிடமுடியாமல் ஏதோ ஒரு இனம்புரியா மகிழ்ச்சியோடு, அந்த எவனோ நான் தான் சார் என்று சொல்ல நினைத்து அடக்கிக்கொண்டு மகிழ்ந்த நிகழ்வு. ஜூனியர் விகடனில் முதன்முதலாக வந்த என்னுடைய அரசியல் பகடி, பின்னர் சில வாரங்கள் தொடர்ந்து வந்தது.
ஒலியால் தன் மீது ஒளிவெள்ளம் பாய்ச்சிக்கொண்ட ரசூல் பூக்குட்டி, ஒலியை அங்குவரை ஒலிக்கவைத்த ரஹ்மான் இருவரும் ஆஸ்கர் தட்டியது 2009ன் அற்புத தருணங்களில் முக்கிய ஒன்று. எல்லாப் புகழும் கலைக்கும் திறமைக்குமே.
மார்ச்.. பரிசல்காரர் என்ற நண்பர் பரிசல்காரன் என்ற நண்பனாக மாறிய மாதம். சென்னை வந்து, பரிசல் மற்றும் ஜ்யோவ்,சிவராமன்,வெண்பூ,அதிஷா,ஆதி,அப்துல்,முரளி,புருனோ,கேபிள் என பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன், என் நண்பருடைய(எத்தனை நட்புகள் எல்லா இடங்களிலும்!) ரிசார்ட்டில் தொலைத்த இரண்டு தினங்கள் திரும்பக் கிடைக்காது இனி..அதனால் தான் தொலைத்த தினங்கள் அவை. மகிழ்ச்சியில் திளைத்த தினங்கள். இந் நிகழ்வு மறவா உறவுகளைத் தந்தது.
ஏப்ரலில் மதுரை குலுங்கும் அழகர் ஆற்று வைபவத்தில் மீண்டும் ஒரு குழந்தையாக அந்தக் கூட்டத்தில் எதையோ தேடித் தொலைந்து மீண்டதும் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழாவில் கலந்த உற்சாகமும் அடுத்து வந்த மாதங்களை அள்ளிச் சென்றது.
பதிவர் லக்கி, எழுத்தாளராக புரோமசன் ஆகி இருந்தாலும் மே மாதத்தில் தந்தை ஸ்தானம் அடைந்தவுடன் அவரின் அலைபேசிப் பேச்சு இன்னமும் நினைவில் இருக்கிறது. பஞ்சுப் பிஞ்சைப் பார்த்த மகிழ்வையும் மீறிய அதுவரை இல்லாத ஒரு முதிர்ந்த,நெகிழ்ந்த குரலை ஐந்து நிமிடங்களில் கொண்டு வந்திருந்தாள் தமிழ். அதுதான் தமிழ்.
இந்த மே மாதத்தில் தான் பதிவர்கள் ஒன்று கூடி நடத்திய “குட் டச் பேட் டச்” நிகழ்வு வெகு அற்புதமாக நடந்தது. மிக பயனுள்ள ஒரு நிகழ்வு. மீண்டும் நன்றி டாக்டர் ருத்ரன் & டாக்டர் ஷாலினி.
என் வாழ்வின் மீண்டுமொரு மறக்கமுடியாத நாளும் மே மாதம் வந்த ஒரு விகடன் தாங்கிய என் முதல் சிறுகதை. அதன் பின்னர் அவ்வப்பொழுது என் படைப்புகளும் வந்துகொண்டிருந்தாலும் அந்த முதல் கதை வந்த நாள்..வார்த்தைகள் இல்லை என்பதால் விட்டுவிடுகிறேன்..உணர்ச்சிகளோடு.
தயவுசெய்து எழுதறத நிறுத்திடுங்க என்று அய்யப்ப ராஜ் என்ற வாசகர் எழுதிய கடிதம் என்னையும் பதிவுலகையும் ஒரு சுழற்று சுழற்றிய மாதம் ஜூன். மறந்தால் தானே நினைப்பதற்கு?!.
அதன் பிறகு வந்த மாதங்களில் உரையாடல் சிறுகதை போட்டியில் தோற்றதும், சிறுகதை பட்டறை நடந்ததும் நடந்தது. சிறுகதை பட்டறை மூலம் அறிமுகம் கிடைத்து இன்றுவரை அரிதான பொக்கிஷ வார்த்தைகள் மூலம் வழிநடத்தும் பா.ராகவன் ஸாரின் நட்பைப் பெற்றுத்தந்தது இம்மாதம்.
அடுத்த மாதத்தில், சிங்கை நாதன் விசயத்தில் பதிவர்கள் சிங்கங்கள் என்று நிரூபனமானது. வெல்டன் ராஜா & ஜோசப் பால்ராஜ்.
டிசம்பரில் அய்யனார் கம்மா வந்ததும் மகிழ்ந்ததும் மறக்கமுடியாத ஆண்டு என 2009ம் ஆண்டைச் சொல்ல வைக்கிறது.
கார்க்கி,ஆதி நெருக்கமாக இருந்த 2008, அதைப் போல சில பெயர்களை மட்டும் சொல்லி குறுக்கி விடமுடியாத படி நிறைய சகாக்கள் நண்பர்களாக ஆன ஆண்டும் 2009. என் மீது அன்பு வைத்து மடல்,அலைபேசி என தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
2009ன் முத்தாய்ப்பாக, எல்லோரும் போற்றிக் கொண்டாடும் கவிஞர் திரு ராஜசுந்தர்ராஜன் என் ஆள்காட்டி விரல் பிடித்து அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கும் இந்த டிசம்பர் மாதம் என் எழுத்துலக வாழ்வின் ஆரம்பம். அவரின் முதல் பின்னூட்டம் தந்த பிரமிப்பை, பிரமாண்ட பிரமிப்பாக எனக்கு விரித்து விளக்கிய சிவராமனுக்கும் ஜ்யோவுக்கும் என் நன்றிகள். என்னை செதுக்கும் கடமை உங்களின் கைகளில் இருக்கிறது என்பதை நெகிழ்வாக சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
மாறா நண்பர்களையும் மறவா நிகழ்வுகளையும் ஆண்டு தோறும் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது இயற்கை. அல்லது அதுதான் இயற்கை, இதில் செயற்கைகளற்று வாழ்தலே இயற்கைக்கு நான் செய்யும் நன்றி. செய்வேன்.
இரு கை விரித்து இன்னமும் கூடுதல் நம்பிக்கையுடன் 2010 எதிர்நோக்கி...
என்’ணங்கள் 2009
Labels: என்’ணங்கள் , சுயதம்பட்டம்.
தோட்டாவை விழுங்கிய பறவை.
“Are they armed?”
குப்தாவின் அந்தக் கேள்விக்கு ஆம் என்பது போல தலையாட்டினான் அன்க்குஷ் அரோரா. திடகாத்திரமான தோளை அதை விட திடமானத் தன் கைகளால் தரையில் ஊன்றிக் குலுக்கினான்.
“மத...ர் சூத்” என்று கத்த வேண்டும் போல இருந்திருக்க வேண்டும் சமீர் குப்தாவிற்கு. ஆனாலும் சூழல் கருதி ஹஸ்கி வாய்ஸில் சொன்னான்.. “மதர் சோத்..
ஜனக்புரி, டெல்லி. கண்ட்டா கர் என்று அழைக்கப்படும் கூண்டுக் கடிகாரம் இருக்கும் ஏரியா. எங்கிருந்தோ ஊடுருவிய சிலர் அந்த இடத்தில் இருக்கும் இரண்டு கடைகளை ஆக்கிரமித்துக் கொண்டு தாக்கத் துவங்கிய நொடி அது. எதேச்சையாக வேறு காரணமாக அங்கே வந்திருந்த ராணுவ அதிகாரிகள் அன்க்குஷும் சமீரும் நிலையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஜீனிப்பாகு வழிந்தோடும் இளம் மஞ்சள் கலர் ஜிலேபி நிறைந்த தள்ளு வண்டிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு சாம்பஷித்தது தான் மேற்சொன்ன வார்த்தைகள்.
கேரட்டை சீய்த்துத் தள்ளி அதில் முந்திரிகளைக் கொட்டி ”காஜர் ஹல்வா” என கோணல்மானலாக ஹிந்தியில் எழுதப்பட்ட தகரத்துடன் தகதகவென கண்ணாடிகள் பதிக்கப்பட்ட வண்டி கொஞ்சம் மெதுவாக அவர்களை நோக்கி வந்தது. தள்ளு வண்டியைப் பார்த்ததும் சுதாரித்த சமீர் கைத் துப்பாக்கிய எடுத்தவன், கொஞ்சம் நிம்மதி வந்தவனாய் மூச்சை விட்டான். வண்டியை மெதுவாகத் தள்ளிக்கொண்டு வந்தது அருண் முனியாண்டி. கமாண்டர்.
என்ன செய்யலாம் என்பதை அருண் சைகையால் தன் புருவத்தை முடிச்சிட்டுக் கேட்டான். உதடுகளை முழ நீளத்திற்கு பிதுக்கினார்கள் சமீரும் அன்க்குஷும்.
துப்பாக்கிச் சுட்ட சத்தமும் அதனடுத்த நொடியில் ஒரு பஞ்சாபிக் குரலும் ஓங்கிக் கேட்டது.
“ஹோ முன்னா, கீ கல்?..கிஸ் பாத் கேலியே கர்ரேஹே இஸ் சூத்தியாபந்தி காம்?”
அந்தக் குரலும் ஓ என்று குண்டடிப்பட்டுச் சரிந்தது. அவன் கேட்டது நியாயமான கேள்விதானே என்று நினைத்துக் கொண்ட அருண் இருவரையும் நெருங்கினான்.
“என்ன காரணத்திற்காக இப்படி ஒரு தாக்குதல் நடத்துகிறீர்கள் என்று கேட்ட சர்தார்ஜியை கொன்று விட்டார்கள், நினைத்ததை விட மோசமாக தாக்குவார்கள் என்று நினைக்கிறேன். உள்ளே இருப்பது எத்தனை பேர் என்ன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாது, மேலே மெஸேஜ் அனுப்பி இருக்கிறேன்..அதுவரை சமாளிக்க வேண்டும் இன்னும் ஒரு உயிர் போய்விடக் கூடாது”
“பில்கூல் சாப்” என்று தவழ்ந்தவாறே நோட்டம் விட்ட சமீரின் கண்களில் சிக்கியது அந்த கடை. கண்ணாடிக் கடை. ஆளுயரக் கண்ணாடிகள் பெல்ஜியம் என்று பொய்சொல்லி விற்கப்படும் டெல்லித் தெருவோரக் கடைகளுள் ஒன்று.
“உதர் தேக்கோ சாப்.. ” கண்ணாடிக் கடையை காட்டிய சமீரை அர்தத்துடன் பார்த்த அருணும் அன்க்குஷும் அங்கே எப்படிப் போவது என்று யோசித்த விநாடி அது நிகழ்ந்தது.
எதிர் கடையில் இருந்து பாய்ந்த குண்டுகள் கண்ணாடிகளைச் சில்லு சில்லாக சிதறடித்தன.
“ஸோ, தே ஆர் ஈவன் க்ளவர் “
என்ற அருண் ஒரு நொடிக்கும் குறைவான அவகாசத்தில் கேரட் வண்டியை அவர்கள் இருந்த கடையை நோக்கி மிக வேகமாகத் தள்ளிவிட்டான். காதைக் கூராக்கிக்கொண்டே.
நினைத்தது போலவே கேரட் ஹல்வா வண்டி குண்டுகளால் துளைக்கப்பட்டது.
“குறைந்தது நான்கு பேர் சுட்டார்கள். நான்குமே வெவ்வேறு ரக நவீன வகை துப்பாக்கிகள்”
சத்தத்தை வைத்து உத்தேசமாகக் கணிக்க முடிந்ததைச் சொன்ன அருணின் மூளை சுர்ரென்று ஏதோ யோசித்தது. ஏதேதோ.
அந்த இடத்தை பத்து நிமிடங்களில் கலவரம் தொத்திக் கொண்டிருந்தது. ஓடுபவர்கள் பாதுகாப்பாக ஒதுங்கியபின்னர்தான் உடன் வந்தவர்களைப் பற்றியே யோசிக்கத்துவங்கினார்கள்.
வெறிச் சென்று இருந்தாலும் ஆங்காங்கே தள்ளப்பட்ட வண்டிகள், ஓடியவர்கள் விட்டுச் சென்ற ராஜஸ்தான் வகையறா ஒற்றைச் செருப்பு-கள் கூண்டிற்கு கீழே மல்லாந்து கிடந்த சர்தார்ஜியின் உடல் என கலவரத்திற்கு உண்டான சூழலைப் பொருத்திக்கொண்டது ஜனக்புரியின் மையம்.
அவர்கள் புகுந்து கொண்டிருந்தக் கடையை எட்டிப் பார்த்தான் அருண் முனியாண்டி. அது இரும்புக் கடை. ஸ்வஸ்திக் குறி போட்டு லாபம் என ஹிந்தியில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையில் கொட்டை எழுத்துக்களில் ‘சச்தேவ் ஸ்டீல்ஸ்’ சாயம் போய்க் கொண்டிருந்தது.
அருண் சமீருக்கு சைகையில் சொல்லிவிட்டு, தன் ஷீக்களை கழற்றி தயாரகாக வைத்துக்கொண்டான்.
திட்டப்படி அருண் தன்னுடைய காலணியை மிகச் சரியாக ஸ்டீல் கடையின் வாசல் நோக்கி எறிந்தான். கவனம் சிதறும் பொழுது மற்ற இருவரும் பக்க வாட்டுவழியாக ஜன்னலை அடைந்துவிடுவது ஒன்றே அப்போதயத் தேவை.
எறிந்தான். ஜன்னலை அடைந்தார்கள்.
ம்ஹூம், கடைக்குள் எதுவுமே தெரியவில்லை. ஜன்னல் மூடப்பட்டு இருந்தது. பேச்சுக்குரலும் கேட்கவில்லை. ஒரு ஆள் போய்வரக்கூடிய சந்தில் ஹிந்தி மூத்திர நாத்தமும் பான் வாசனை நாத்தமும்.
இப்பொழுது அருண் தன்னுடை சாக்ஸைக் கழட்டி அதற்குள் ஒரு கல்லைப் போட்டு தன்னுடை அலராம் வாட்சை அதில் கட்டி, சத்தத்தைப் பெரிதாக வைத்து, வெகு சாமர்த்தியமாக ஸ்டீல் கடையின் முகப்பில் மெதுவாக விழுமாறு தூக்கிப் போட்டான்.
நினைத்தது போலவே அது வெடிபொருள் என்று நினைத்து உள்ளிருந்து கொஞ்சம் பதட்டமாக வெளியேறி அதை செயலிழக்க வைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு ஓடவோ எத்தனித்த மூன்று பேரையும் பக்க வாட்டில் இருந்த சமீரும் அன்க்குஷும் நொடிப் பொழுதில் சுட்டார்கள். சுருண்டார்கள்.
கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமித்த ஃபோர்ஸ் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.எதற்காக இப்படிச் செய்தார்கள் என்ன கோரிக்கை எல்லாமே நாளை செய்தித் தாளில் தெரிந்துவிடும்.
இறந்து போன சர்தார்ஜியைப் பரிதாமாகப் பார்த்தான் அருண்.
ஹும்..
தடதடத்தது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ். ரயில் பயணங்களில் எப்பொழுதும் புத்தகங்களில் புதைந்துவிடுவான் அருண். வருடத்திற்கு ஒரு முறை தலைநகரில் இருந்து தமிழக தலைநகரம். இந்த முறை கொஞ்சம் ஸ்பெசலாக உணர்ந்தான். அத்தை மகளை நிச்சயத்தபடி கல்யாணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை ஜெய்சால்மீரில் தொடங்கப்போகிறான். புது வாழ்க்கை கொடுக்கப்போகும் பூரிப்போ ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்த ஜனக்புரி சாகஸமோ ஏதோ ஒரு மகிழ்ச்சி அவனை புத்தகம் படிக்க விடவில்லை. பார்வையை சுழற்றினான்.
மொத்தம் நான்கு பேர்தான் அந்த கம்பார்ட்மெண்ட்டில். ஒரு வயதானவர். வெண் தாடியை நீவி விட்டுக்கொண்டே ஹிந்துவில் ஆழ்ந்திருந்தார். தண்ணீர் பாட்டிலை அவ்வப்பொழுது தொட்டுப் பார்த்துக்கொண்டார். அவருக்கு அருகில் அவர் மகளாக இருக்கக் கூடும். பேரிளம் பெண்ணிற்கும் சற்று குறைந்த பருவம். ஊருக்குப் போகும் சந்தோஷம் கண்களிலும் வளமான பொருளாதார சூழல் உடையிலும் தெரிந்தது. வண்டி கொஞ்சம் அவுட்டருக்குப் போனவுடன் உணவுப் பொட்டலம் பிரிக்க வேண்டும் என்பது போல் அமர்ந்திருந்தாள்.
அவர்களுக்கு எதிரில் ஒரு ஹிந்திக்காரன். பற்கலெல்லாம் பான்பராக் கலர். கன்னம் ஒட்டிப் போய் அழுக்குப் படிந்த தாடியும் அதைவிட அழுக்கான உடையுடனும் தனியாகத் தெரிந்தான்.
அங்கே தன்னை அசிங்கமாகப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தவனாக எழுந்து கதவு பக்கத்தில் போய் நின்று விட்டான்.
சிகரெட் பிடிக்க வேண்டும் போல் இருந்ததால் கதவுக்குப் பக்கத்தில் வந்த அருணை அடுத்த கம்ப்பார்ட்மெண்ட்டில் இருந்து வந்த டிடிஆர் எதேச்சையாக தோளைத் தொட்டு விலக்கிவிட ஒரு நொடியில் தன் கட்டுப்பாடிழந்து படியில் சறுக்கினான்..தட் தட் தட் என ஆற்றுப் பாலத்தில் போய்க்கொண்டிருந்த வண்டியின் சத்தமும் அருணின் சத்தமும் ஒரே தாளத்தில் அலறியது..
அந்த அழுக்குச் சட்டைக்காரன் தன் காப்பேறிய கைகளால் அருணைப் பற்றி தூக்கிவிட்டான். அத்தைமகள், கல்யாணம் எல்லாம் ஒரு நொடியில் அந்த ஆற்றில் விழுந்து மீண்டும் எழுந்தது போல் இருந்தது அருணுக்கு.
வயதான டிடிஆர் பதட்டத்துடன் மன்னிப்பும் கேட்டு கூடவே கேட் பக்கம் நிற்பது தவறு என்றும் தன் அனுபவ வார்த்தைகளை உதிர்த்துவிட்டு இன்னும் பதட்டமாக நடந்து,கடந்து போனார்.
“சுக்ரியா பாய் பகுத் சுக்ரியா”
“ஏ க்யாஹே சாப்..சோடுதோ..த்தோடா சமால்க்கே கர்னாத் தா ஆப்”
ஒரு ராணுவ வீரனை, ‘பார்த்து ஜாக்கிரதையா இருக்க வேணாமா’ என்று அவன் காப்பாற்றிய உடன் சொன்னது அருணின் ஈகோவை கிளறியது.
“சிகரெட் சாஹியே?”
அருண் அவன் தோளைத் தொட்டுக் கேட்டான் வாயில் ஒரு கிங்ஸைப் பற்ற வைத்துக்கொண்டே..
“நா ..நஹி சாப்..”
புகையை வெளியே ஊதிவிட்டு கேட்டான்.
“மதராஸ் ஜாரஹே க்யா? டமிள் மாலும்?”
சிரிக்க நினைத்து லேசாக சிரித்தான்..
“கொஞ்சம் தெர்யும் சாப்”
“என்ன வேலையா போறீங்க?”
“இங்க எனக்கி கல்யாணம் நடக்க இருந்துச்சு சாப். பிஸினஸ் போனதாலே அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கோ..சொந்தக்காரப் பொண்ணு. வேற இடம் பார்த்து கட்டி வெக்க நினைச்சாங்க. செத்து போச்சு சார் பாவம். அதனாலே இங்க இருக்கப் பிடிக்கலே..சித்தப்பா வட்டிக் கடை இருக்கு மதறாஸ்ல..போறேன்”
“என்ன பிசினஸ்? என்ன ஆச்சு?”
என்னா ப்பெரிய பிசினஸ் சாப்.. தள்ளு வண்டில காஜர் கா ஹல்வா..ஜனக்புரிலே”...
உள்ளே அந்தப் பேரிளம் பெண் பூரிக் கிழங்கு பொட்டலத்தைத் திறந்த வாடை குப்பென்று காற்றில் மிதந்தது.
Labels: புனைவு
யாமத்து மாமழை..காமத்திற்கு ?
"Missing you like hell"
குறுஞ்செய்தியா இது?. பெரும் உணர்ச்சிகளை அலையில் அடித்துப் போகும் அலைச்செய்தி.
பதிலுக்கு “me too" என்று ஜஸ்ட் லைக் தட் பதில் அனுப்பினால் அவ்வளவுதான். உடனே கண்டுபிடித்து விடுவார்கள். என்னதான் எழுத்துகளைத் தானே கடத்துகிறோம் என்று நினைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு செய்தியிலும் அடிக்கப்பட்ட மனநிலையும் அன்பும் அல்லது வெறுப்பும் சேர்த்தே படிக்கப்படுகிறது. அதுதான் காதல்.
da, de,mu போன்ற எழுத்துக்கள் அழிந்துபோன செல்போன் கீ பேட்களை நிறைய பார்க்கலாம்.
ஆனாலும் ‘எங்கன சுத்தியும் ரெங்கனச்சேரு’ என்று திருச்சிக்காரர்கள் சொல்வது போல இந்தக் குறுஞ்செய்திகள் எல்லாம் சுற்றிச் சுற்றி கடைசியில் சேருமிடம், “wanna k u"வில் தான். அது எந்த நட்பு உறவாக இருந்தாலும்(?). இதில் சில பிரகஸ்பதிகள் k ன்னா? என்று கேட்டு கிஸ் என்று தெரிந்து சிரித்தோ, கோபித்தோக் கொள்வார்கள்.
“உனக்கு நீச்சல் தெரியுமாப்பா?”
“கிராமத்தான் கிட்ட கேட்குற கேள்வியா இது?”
“பழகித் தருவியா?”
“உனக்குச் சொல்லித் தரும்போதே நான் மூழ்கிருவேனே..உன்னில்”
இப்படி தமிங்கிலிஷ் காவியங்களை நோக்கியா பதிப்பகம் நிறைய கண்டிருக்கிறது நண்பர்காள்.
“அழணும் போல இருக்கு”
“என் தோள்கள் உனக்காக.. காத்திருக்கின்றன..காமத்திற்கு மட்டும் இல்லை..உன் கண்ணீருக்கும் சேர்த்தே”
இப்படியான வார்த்தையூடான அன்பும் அது தொடர்ந்த காதலும் பின் சேரும் இடம் காமமும் என குறுஞ்செய்திக் காவியங்கள் நிறைய..
“உன்ன இப்பவே பார்க்கணும் போல இருக்குடா”
“பார்த்தா என்ன பண்ணுவ?”
“ச்சே..எப்பவும் இதே தானா.. டோண்ட் யூ பி சீரியஸ்? ஒன்லி ஃபிரண்ட்சிப் மட்டும் வச்சுட்டா பார்க்க வரமாட்டியா? கோ டு ஹெல்”
இங்கே தொடங்கும் வாக்குவாதம் பெரும்பாலும் சிக்கலை நோக்கியோ அல்லது க்ரீன் சிக்னலை நோக்கியோ நகரத் தொடங்குகிறது.
உருகும் மிஸ்ஸிங் யூக்கள் ஒரு பொழுதும் பொய்ப்பதில்லை என்றாலும் அதனெதிர் பதில்கள் நட்பின் நீட்டிப்பைத் தீர்மானிக்கின்றன.
நட்பிற்கும் காதலுக்குமான இடைவெளியை முடிவுசெய்வது காமம் மட்டுமே என்பது இன்று நேற்றல்ல இந்த சங்ககாலத் தோழியின் குறுந்தொகைப் பாட்டில் இருந்தே இருந்து வருகிறது என்று தெரிகிறது.
அன்றும் இன்றும் காதலியின் தோழிகள் மட்டும் ஒரே மாதிரி இருக்கிறார்கள், முட்டுக்கட்டை போடுவதில்.!
இதைப் போலவே தான், நட்பிற்கும் காதலுக்கும் அதைத் தாண்டிய காமத்திற்கும் அல்லது திருமணத்திற்கு முன்னர் காமம் என்ற விசயத்தில் இருக்கும் குழப்பம் சங்கம் தொட்டே இருந்திருக்கிறது. காமம் இல்லாவிட்டால் நட்பு இல்லையா என்ற கேள்வியை அப்பொழுதே கேட்டிருக்கிறாள் குறுந்தொகை தோழியொருத்தி
விளக்கம் :
நள்ளிரவில் பெரும் இடியுடனும் மின்னலுடனும் கூடிய பெரிய மழை பொழிந்து, அதனால் அருவியின் மலைமுகட்டில் நீர் கொட்டும் சத்தம் தொடர்ந்து கேட்கும் மலை நாட்டுத் தலைவனே...உன்னோடு கூடி மகிழும் காமம் கிடைக்காமல் போனாலும் நம் நட்பு குறைந்தா போய்விடும்? (இல்லவே இல்லை..நட்புத் தொடரும் என்ற அர்த்தம் எதிர்பார்த்து சொல்லப்பட்ட வரிகள்?)
சிறப்பு :
மாமழை என்ற வார்த்தைப் பிரயோகம் ஒரு அற்புதம்.
தோழி எவ்வளவு சாதுர்யமாகப் பேசுகிறாள் (உள்குத்து வைத்து) என்பதும் பாடலின் சிறப்பு. அதாவது காமம் இப்பொழுது இல்லையென்றாலும் நட்பைத் தொடர்க..எம் தலைவியை விரைவில் மணம் முடிக்க வேண்டுகிறேன் என்ற குறிப்புகளைக் கொண்ட நளினமான வார்த்தைகளால் காமத்தை மறுத்துப் பேசியது சிறப்பு.
தோழி கூற்றாக குறிஞ்சித் திணையில் கபிலரின் அற்புதப் பாடல்.
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயி னானே.
..
Labels: குறுந்தொகை
வேட்டைக்காரன் - மிகச்சிறந்த மாற்றுப் படம்
ரேனிகுண்டா, கண்டேன் காதலை போன்ற எதார்த்த முயற்சிப் படங்கள் வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு மிகச் சிறந்த மாற்றுப் படமாக விஜய் அவர்கள் நடித்த வேட்டைக்காரன் வந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
ஒரு ஆகச் சிறந்த படைப்பு என்பது அதைப் பார்ப்பவர்களையோ படிப்பவர்களையோ கொஞ்சம் யோசிக்க வைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் மிக அதிக கேள்விகளை முன் வைக்கிறது ரசிகப் பெருவெளியில் என்பதனால் இது மிக முக்கிய மாற்றுச் சிந்தனைகள் கொண்ட படமாகவே தோன்றுகிறது.
முதல் கேள்வியே மிக ஆணித்தரமானது.
இதை(கவனிக்க ‘இ’ தான் ‘க’ அல்ல) எப்படி அந்த இயக்குனர் விஜயிடம் சொல்லி இருக்கக் கூடும்? அதுவும் மூன்று மணி நேரம்? என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்ச உண்மைகளை ஆராய்ந்தவர்களிடமும் பதில் கிடைக்குமா என்பது ஐயக்கூறுகளில் மிக முக்கிய கூறு.
ஒரு வேளை ‘திரைக்கதையில் கலக்கிருவோம் ஜி’, என்று சொல்லி ஸ்பாட்டுக்கு கூட்டி வந்து, ‘திரைக்கதைய விடுங்க ஜி, கதைல ஒரு ட்விஸ்டு இருக்கு ஜி’ என்று படிப்படியாக விஜயை வேட்டையாடி இருப்பார் என்றே தோன்றுகிறது. ‘ட்விஸ்ட் இல்லாமல் இருப்பதே மிகப் பெரிய ட்விஸ்ட் ஜி’ என்ற ஆகப்பெரிய லாஜிக் ஒன்றிருப்பதை இங்கே நினைவு கூர்க.
கதாநாயகி ஏன் விஜயை காதலிக்கிறார் என்ற கேள்வியை பின் நவீனத்துவ பாணியில் நம் ஊகத்து விட்டிருப்பதும் இயக்குனர் தொடப்போகும் உயரத்திற்கான முன்னோட்டமாகவேப் படுகிறது.
அப்புறம் ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பின் மேல் இருக்க வேண்டிய நம்பிக்கையும் இங்கே குறிப்பிட வேண்டும். முக்கியமாய், மிக பரபரப்பான ஒரு அதிகாரி நகரின் மையத்தில் வைத்து அழிக்கப்படுவது தெரியாமலே அக்கம் பக்கத்தில் இருப்பர்வகள் வாழ்கிறார்கள் என்பதை தான் நம்புவது போலவே தன் ரசிகப்பரப்பும் நம்பும் என்ற நம்பிக்கைகள் ஒரு படைப்பாளி தன் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்ற சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது.
போலவே, ஊர் முழுக்க புலி உருமுவதை விட பயங்ங்ங்கரமாக உருமி உலாவரும் நாயகனை தேடித் தேடி கலைத்துப் போகும் நாயகி எவ்வாறு ஒரு மிகப் பெரிய பிரிவுத் துயருக்கும், சோகத்திற்கு ஆட்படுகிறார் என்று சங்க இலக்கியத்திற்கு நிகரான ஒப்பீடுகளுடனான காட்சியமைப்புகளிலும் இயக்குனரின் நம்பிக்கையும் அதன்பால் கொண்ட முனைப்பும் அன்னப்பறவை அருந்திய பால் போன்றதொரு பிரமிப்பு.
ஒரே ஒரு வசனம் “வேற வேற வேற வேட்டைக்காரன் தாண்டா லாயக்கு” என்பதைச் சொல்லிச் சொல்லியே சூட்டிங் நாட்கள் முழுக்க விஜயை உசுப்பேத்தி இருந்திருப்பாரோ என்று தன்னைப் பற்றிய ஒரு ஐயத்தையும் முன் வைக்கிறார் இயக்குனர்.
பாடல் காட்சிகளின் போது இன்னுமொரு வரலாற்று ஐயத்தையும் ஏற்படுத்தி, விழிகள் பிதுங்க தியோட்டரை விட்டு வெளியே வந்து மதுரை நண்பனுக்கு போன் போட்டு, உடனே போய் நாயக்கர் மகால் தூண்களில் ஏதேனும் குறைகிறதா என்று கேட்க வைத்து, அடுத்த பாட்டு வருவதற்குள் அவனும் எல்லாத் தூண்களும் அப்படியே இருக்கிறது என்ற புண்ணிய வார்த்தைகளைச் சொன்னதும் தான் அப்பாடா என்றிருந்தது. விஜய் ஆடிக்கொண்டிருந்தது தூணிற்கு அருகில் இல்லை அனுஷ்காவிற்குப் பக்கத்தில் தான் என்பது தெளிவானபோது, மதுரைக்காரனுகேயுண்டான ஒரு பரவசம் எனையாட்கொண்டது என்று சொன்னால் மிகையாகா.
இன்னும் நிறைய ஐயங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றது என்றாலும் எவ்வளவு ஐயங்கள் என்பதே மிகப் பெரிய ஐயமாகப் போய்விடக் கூடிய அபாயம் இருப்பதால்
நன்றி.
Labels: மொக்கை அல்லது வேட்டைக்காரன்
காற்று வெளியில் ஒரு கை ஆட்டல்.
குன்றத்தூர் என்ற ஒரு குன்று சென்னையில் இருப்பதைக் கேள்விப் பட்டதும் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. லாங் ஷாட்டில் ரஜினி படிகளில் இறங்கி வருவதை,ஒரு மண்டபம் நான்கு தூண்கள் சகிதம் நிறைய படங்களில் காட்டப்பட்டது அந்த குன்றும் அது சார்ந்த கோயிலும் தான் என்பது ஆச்சர்யத்தை அதிகப் படுத்தியது. சென்னை என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் அதிகம்,அதிகத்தில் என்ன கொஞ்சம்? அதிக அதிகம் பரபரப்பான ஒரு ஊர். என்னைப் போல் பட்டிக்காட்டு மிட்டாய் பார்ட்டிகளுக்கு முதல் நாள் சென்னை எக்மோர் ஒரு விபரீத உலகமாகத் தான் தெரிந்திருக்கும். நடிகர் சந்திரசேகர்,கருமாத்தூர்காரர்,ஒரு முறை பேட்டியில் “சென்னையில் முதல்நாள் காலடி வைத்தபொழுது எவ்வளவு பரபரப்பாக இருந்ததோ அதே பரப்பரப்பும் அது ஏற்படுத்தும் பயமும் இன்னமும் குறையவில்லை” என்ற அந்த வார்த்தைகள் கொஞ்சமும் மிகையல்ல.
இப்படியான ஒரு அவசர ஊரின் ஓரத்தில் இவ்வளவு அமைதியான ஒரு குன்றும் அதில் முருகனும், பேச ஆள் இல்லாமல் இருப்பதும் ஆச்சர்யம் தான். அதனால் தான் ஒன்றுக்கு இரண்டாக இடவலத்தில் இருத்தி இருக்கிறார் முருகன். இந்த இடவல விசயம் இன்னமும் சுவாரஸ்யம் இந்த குன்றில்.
நீங்கள், குனிந்து நிமிர்ந்து தள்ளி வளைந்து என எப்படிப் பார்த்தாலும் உள்ளே முருகனை ஒரு ஜோடியுடன் தான் பார்க்க முடியும். கர்ப்பக் க்ரஹத்தின் வெளி வாசலை அப்படி ஒரு நுட்பத்தோடு கட்டி இருக்கிறார்கள் என்கிறது அங்குள்ள ஒரு குறிப்பு. நானும் எப்படி எல்லோமோ பார்த்துப் பார்த்தேன். ஒரு ஜோடிதான். அதாவது நீங்கள் வலது புறம் நின்று பார்த்தீர்கள் என்றால் வள்ளியோடு நிற்கிறார், இடது புறம் நின்று பார்த்தால் தெய்வானை. இது தான் குறிப்பால் உணர்த்துவதா?
குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு நிகழ்வு ஈரோட்டில் நடந்தேறி இருக்கிறது. கதிர் அத்தனை முறை அழைக்கும் போதே தெரியும் என்னால்போக முடியாது என்று. நினைத்தது போலவே மதுரைக்கு அவசரமாக போய்வரவேண்டிய சூழல். போனேன். வந்தேன். காய்ச்சலும் வந்தது இன்னும் போகவில்லை.
ஈரோட்டுப் பதிவுகளைப் பார்க்கும்பொழுது,கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற மனநிலை இருக்கத்தான் செய்கிறது. அடுத்த முறை நிச்சயம் ஐக்கியமாகவேண்டும், ஸாரி கதிர். ஆவோம். மிஸ் செய்து விட்டேன்.
எதையோ மிஸ் செய்யும் மனநிலை கொஞ்ச நாட்களாகவே இருக்கிறது. ஏதேனும் ஒரு குறுஞ்செய்தியில் பழைய நட்பைப் புதுப்பிக்கும் உயிர்ப்போ,அந்த நண்பனை உடனே பார்த்தாக வேண்டும் என்றோ,ஆனாலும் கடைசியாக அவன் ஏற்படுத்திய மெளனத்தை உடைக்க முடியா அவஸ்தையோ, காதலியாக இருந்து நட்பாகிப் போனவளின் ஷேமலாப விசாரிப்பகளோ, என சில தகவல் தொழில்நுட்ப வஸ்துக்களால் மிஸ்ஸிங் மனநிலைகள் அவ்வப்பொழுது சோர்ந்து போகச் செய்கின்றன, என்றாலும் அரை டவுசர் நாளில் இறந்து போன நண்பனின் பெயர் தாங்கி இருக்கும் எவரிடமோ இருந்து வந்த புதிய நட்பு மடல் ஒன்று அரைடவுசர் நாட்களை நினைவுப்படுத்திச் செல்கிறது. படுத்தியும்.
டவுசர் போட்டுத் திரிந்த 8வது 9வது வகுப்புப் பருவங்களில், பருவ மாற்றம் என்ற ஏதேனும் ஒரு வார்த்தையின் வெளிப்பாடாக, திடீரென்று வீட்டில் இருக்கும் கைலியை உள் வாகாக கொஞ்சம் மடித்துவிட்டு, கைலி கட்டி, வயிற்றில் முடிந்து கொண்டு தெருவில் இறங்கி நடக்கையில் அதே பக்கத்து வீட்டுக்காரர் அதே அதட்டும் தொனியில் “அண்ணாமலை கடைல போய் ஒரு ரூவாய்க்கு பச்சமொளகா வாங்கிட்டு வாடா”என்று வேலை சொல்லும் பொழுது மனதுக்குள் ‘கைலி கட்டுனாலும் வேலை சொல்றாய்ங்களே’ என்று நினைத்துக்கொண்டதும், பிரிதொரு நாளில் டூரிங் டாக்கீஸ் டிக்கெட் கவுண்ட்டரில் ஆண்கள் பக்கம் கூட்டம் அதிகம் என்றவுடன் புதிதாக கட்டத் துவங்கிய கைலியை யாரும் பார்க்காத ஒரு இடத்தில் போய் கழட்டி, நீவி மடித்து சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு, டவுசரோடு பெண்கள் பக்கம் போய் டிக்கெட் எடுத்ததும் நினைவுக்கு வருகிறது. அய்யனார் கம்மா என்ற புத்தகம் வாயிலாக என் எழுத்தாளர் வேசமும் அந்தக் கைலியைப் போன்றதே தான். வேலைக்காகவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது டவுசர். டவுசரோ கைலியோ இடுப்பில் எப்பொழுதும் ஏதேனும் ஒன்று இருக்கும். இன்று கைலிகளே பெர்முடாஸ்களாகிக் கொண்டுதானே இருக்கின்றன.
சின்ன பெர்முடாஸ் போன்றதும் அல்லாத பேண்ட்டும் அல்லாத ஒரு வெள்ளை அங்கியும், அதற்கு மேலே ஒரு துண்டும் என புதிதாக ஏதோ ஒரு உடையை போட்டுவரச் சொல்லி இருக்கிறார்கள் ப்ளே ஸ்கூலில். அவனின் தாத்தா கொடுத்திருந்த சின்ன உத்திராட்சக் கொட்டையும் அம்மா அடித்து விட்டப் பட்டையுமாக சென்று வந்த குழந்தையின் கையில் ஸ்கூலில் கொண்டாடப்பட்ட புகைப்படம். பட்டையும் உத்திராட்சமுமாக சிரித்துக்கொண்டிருக்கிறான் வெள்ளை அங்கியில். தலைக்கு மேலே 'Merry X'mas'
..
சில வார்த்தைகள்.
தற்கொலை
வேகமாய் வரும் வாகனம்
சாலை தேங்கிய
மழை நீரை
சட்டையில் இறைக்கக்கூடுமென
அவசரப்பட்டு ஒதுங்குகையில்
பின்னிருக்கும் சகதியில்
கால் பதிந்து சேறானது
காலணிகள்.-
வந்த வாகனம்
நொடிப்பொழுதில்
இடப்புறமாக திரும்பிப்
போய்விட்டது
அருகில் வராமலே
நன்றி : விகடன்.
*********
அஃறினை
நாய்கள் குரைப்பதில்தான்
எத்தனை வகை
பசிக்கிறது
நல்ல தீனி
பூனை மாட்டப் போகிறது
தெரியாதவன் கடக்கிறான்
தெரிந்தவன் நடக்கிறான்
தெரு மாறிய இனம்
கண்ட பாய்ச்சல்
புணரப் போகும்
உற்சாகம்
நடுநிசியின் எமன்
அதிகாலை பூச்சாண்டி
என
வகைபிரித்து கத்தினாலும்
நாய் போலக் கத்தாதே
என்கிறது மனிதன்
****************
அகநக
எப்பொழுது ஊருக்குப் போனாலும்
‘ஆளே மாறிட்ட’க்களைத் தவிர்த்து
தேடிப் போய் பார்க்கப்படும்
நண்பர்களிடம்
தேடுவது
கிடைப்பதேயில்லை
ஒருவேளை
தேடுவது என்னவென்று
தெரியாததாலும்
இருக்கலாம்
***************
மாறும் நிறங்கள்
எதிர்பக்கம் வரும்
வாகனத்தை போகச்சொல்லி
என்னை நிறுத்தும்
போக்குவரத்துக் காவலரைப்
பார்த்து ஸ்நேகமாய்
புன்னகைத்தேன்
காலை அவசரத்தில்
என்னை நிறுத்திய
அவரை
சபித்தது தெரியாமல்
பதிலுக்கு
சிரிக்கிறார்.
Labels: கவிதை
புளிக்காரக்கா.
அது பேயாகத் தான் இருக்க வேண்டும்.
அந்த இடத்தைப் பற்றி தெரிந்திருந்தும் அங்கே தனியாகப் போனது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை உணர்ந்தான் கேசவன்.
சுற்றிலும் வயல். அறுவடை முடிந்து கால் இன்ச் அடிக்கதிர்கள் காலைக் குத்தும் வயல்வெளி. வரப்புகளுக்கு நடுவில் ஓடும் வாய்க்கால்த் தண்ணீர். களத்து மேடு. புளிய மரம். ஆள் அரவமே இல்லாத இடம். ஒரே ஒரு வயல் மட்டும் கதிர் அறுக்கப் படாமல் இருந்ததால், தனியாக,காற்றின் திசையில் கதிர்கள் மடிந்து எழுந்த பொழுது வந்த சத்தம் புளியமரக் கிளையிலும் தொட்டுச் சென்றது புளியைக் கரைத்தது கேசவனுக்கு. ஒரு நிமிடம் கண்ணை மூடி நினைத்துப் பார்த்தான்.
புளிய மரத்தின் கிளையில் இருந்து கேசவனின் உச்சியில் சொட்டு சொட்டாக இறங்கியது. தடவிப்பார்த்தால் பிசுபிசுப்பாக ரத்தம். பரபரவென்று ஏதோ உடல்முழுவதும் பரவுவது போல உணரும்பொழுதே சர்ர்ரென்று அந்தக் கிளை கீழ் நோக்கி வந்து சட்டென்று அவன் கழுத்தில் சுற்றி நெருக்கத் தொடங்கியது. நாக்கு வெளியேறத் துவங்கியதுமே கால்கள் தரையில் இல்லை என்பதை உணர்ந்தான். பக்க வாட்டில் இருந்து வந்த இன்னொரு கிளை இடுப்பில் இறங்கியது. கத்த முடியாமல் திணறிக் கொண்டு இருந்தான். கால்கள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன. சட்டென்று இரண்டு கிளைகளும் அவனை சுழற்றி எதிரில் இருந்த அரைப் பாலச் சுவற்றில் அடித்தது. பின் மண்டையில் இருந்து ரத்தம் பீறிட்டது.
நினைத்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டான் கேசவன். அனிச்சையாகத் தலையைத் தடவிப் பார்த்தான். நின்று கொண்டிருந்தான். பேயாகத் தான் இருக்கும். கொஞ்சமும் கற்பனை செய்ய முடியாத ஒரு உருவம். தோன்றி சட்டென்று மறைந்து போனது.
அனேகமாக அது ஊருக்குள் பலவருடங்களாகப் பேசப்படும் பிரபாப் பேயாகத் தான் இருக்கும் என்று நினைக்கும் பொழுதே அவனுக்குக் கைகால் எல்லாம் உதறத் துவங்கியது.
பிரபா.
எப்பொழுதும் சின்னப் பசங்களுடன் படம் பெயர் சொல்லியோ, சொக்கட்டான் புளியைச் செய்து கொண்டோ இருப்பாள். அவளோடு விளையாடும் பசங்களுக்கு பத்து வயது தான் இருக்கும். இவளுக்கு பத்தொன்பது இருவது இருக்கும். உடம்பு வயதைவிடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் பார்த்தால் பார்க்கலாம் போன்ற வாகு.
“புளி உருண்டை வாங்கி வந்திங்களாடா?”
“இந்தாக்கா”
என்று நீட்டிய முத்துவிடம் வாங்கிய புளி உருண்டையைப் பார்க்கும் பொழுதே எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். புளியை நெல்லிக்காய் சைஸுக்கு, உப்பு கொஞ்சம் மிளகு என இன்னும் சில இத்தியாதிகளை போட்டு உருட்டி பள்ளிக் கூட வாசலில் அதை விற்கும் பாண்டியம்மாவை ‘புளிக்காரக்கா’ என்றுதான் அழைப்பார்கள் பொடிசுகள். அந்த புளிக்காரக்காவின் மகள் தான் பிரபா. வீட்டில் புளியுருண்டையைத் தொட விடமாட்டாள் பாண்டியம்மா. அதனாலயே பசங்களை விட்டு வாங்கிவரச் சொல்லுவாள் தினமும்.
புளியங் கொட்டைகளை ஒரு பக்கமாகத் தேய்த்து வெள்ளைப் பல்லாக செய்து விளையாடுவது என, புளியும் புளி சார்ந்த விளையாட்டுக்களுமே சிறுவயது முதல் பிரபாவிற்கு வாய்த்தது புளிக்காரக்காவினால்.
அதே புளிய ரூபத்தில் தான் பிரபாவிற்குப் பிரச்சனையும் வந்தது.
புளியம் பழத்தை சேகரிப்பது என்பது செடியில் இருந்து பூ பறிப்பது போல அத்தனை எளிதான வேலை அல்ல. கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆம்பிளையாக இருக்க வேண்டும். எந்தக் கிளையில் இருந்து தொடங்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். வலது காலை முட்டுக் கொடுத்து உடம்பின் பாரம் முழுதும் அதில் பொதித்து ஒரு உலுக்கு உலுக்க வேண்டும். பழங்கள் பொலபொலவென உதிரத் தொடங்கும். அடுத்தது மறு கிளை. இப்படி உலுக்குவதற்கு நேக்குகள் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி உலுக்கித் தருவதில் கில்லாடி தான் பூவலிங்கம். புளிக்காரக்காவின் புளியமரம் அவன் உலுக்கலுக்குக் கட்டுப்படும். பிரபாவின் வயதையும் உலுக்கி விட்டான் ஒரு மதியப் பொழுதில்.
“என்ன பிரிபா, புளிக்காரக்கா இல்லியா?”
“பிரிபான்னு கூப்புடாத பூவு, பிரபாண்டு சொல்லு, அம்மா பள்ளியோடம் போயிருக்கு, வரும்”
“உலுக்கணும்டுச்சு, போயிருச்சா,? எப்ப வாரது நான் எப்ப போறது?”
“நாங்க இருந்தா உலுக்க மாட்டீகளோ மைனரு, உலுக்கப் போற, விழுகுறத பொறக்கிப் போடணும், நொட்டச் சொல்லு சொல்லாம ஏறு”
“ஏறவா?”
“ஏ, இந்த சாடப் பேச்செல்லாம் வேணாம், அம்புட்டுதான்,”
வாய் சொன்னாலும் அவனின் குறும்பை ரசித்தவாறே கூடைகளை அடுக்கி வைத்துத் தயாரானாள்.
“சென்மம் பூரா உலுக்கிட்டுத் தான கெடக்கேன். செத்த பொறுத்தா என்ன, கூடயத் தூக்குறவ.”
இப்படியான பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவளையும் அவனையும் நெருக்கியது. மனதால். பேசிக்கொண்டே இருந்தான். கேட்டுக் கொண்டே இருந்தாள். பொழுது போனது தெரியவில்லை. புளிக்காரக்கா வரும் நேரம் நெருங்கியதும் கிளம்பி விட்டான். மறுநாள் கிளம்பி வந்து விட்டான்.
கொஞ்சம் காதலையும் நிறைய காமத்தையும் கலந்து தான் பேசுவான் பூவலிங்கம். புளி உலுக்குபவனுக்கு பூ உலுக்கச் சொல்லியாத் தரவேண்டும்?. மெதுவாக உலுக்கினான். வேகமாக உதிர்ந்தாள்.
பசங்களோடு பேசுவது நின்று போனது. பம்புச் செட்டுக் குளியல், வீடு, அம்மா போனதும் பூவலிங்கத்தின் வரவிற்கு காத்திருப்பது என அன்றாடம் மாறிப் போனது. அவனுடன் கூடுவது கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை முடிந்ததும் அவன் விநோதமாய் குதித்துக் குதித்து நடந்து போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.
“பிரபா, நாளைக்கு விடியக் காலம் கொஞ்சம் வெள்ளன எந்திருச்சு வேலயப் பாத்து, பள்ளியோடத்துல போய் வித்துட்டு வாம்மா, பிள்ளைங்க முகம் வாடிப் போகும் புளியுருண்ட இல்லேன்னா, எனக்கு கொஞ்சம் வேல இருக்கு”
பாண்டியம்மா மாதத்தில் நான்கைந்து நாள் இப்படிச் சொல்லிவிட்டு பிரபாவை அனுப்புவது வழக்கம்.
“அக்கா ஏங்க்கா இப்பல்லாம் வெளயாட வரமாட்டேங்குற” முத்துக் கேட்டதும் சிரித்தாள்.
“அக்காவுக்கு வயசாகிடுச்சுடா முத்து. இந்த ரெண்டு புளியுருண்ட, சாப்புடு, மூக்கொழுகி எங்கடா?”
“அவனுக்கு மேலுக்குச் சொகமில்லக்கா இன்னிக்கு லீவு விட்டான்”
வயிறு சுர் சுர் என்று இழுத்து வலிப்பது போல் இருந்தது.அனிச்சையாக விரல் கொண்டு எண்ணினாள். இல்லையே என்று நினைத்துக் கொண்டவள் அதற்கு மேல் அமரமுடியாது என்று தீர்மானித்தவாறே முத்துவை அழைத்தாள்.
“டேலே முத்து, அக்கா வீடு வரைக்கும் போயிட்டு ஓடியாந்துர்றேன். செத்தவடம் பார்த்துக்கடா புளியுருண்டக் கூடய”
“எனக்கு நாலு உருண்ட தரணும்”
“செரிடா” என்றவள் கொஞ்சம் அசெளகர்யமாய் நடந்து வீட்டை அடைந்தவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை.
பின்பக்க வழியாக பூவலிங்கம் குதித்துக் குதித்து நடந்து போய்க் கொண்டிருந்தான். எதேச்சையாக வெளியே வந்த புளிக்காரக்கா இவளைப் பார்த்ததும் அதிர்ந்து தயங்கி சகஜமாகி ஏதேதோ பேசினாள். அன்று இரவு ஊருக்கு வெளியே இருந்த புளியமரத்தில் பிரபா தொங்கிவிட்டாள்.
நடுங்கிய வாறே கொஞ்சம் வேகமாக நடக்கத் துவங்கி, பின்னால் ஏதோ வருவது போன்ற பிரமையால் முதுகைக் குறுக்கி இன்னமும் வேகமாக ஓடத்துவங்கினான் கேசவன். ஒரு அலுமினியத் தூக்குவாளி காற்றில் நகர்ந்து கல்லில் பட்ட சத்தம் அவன் ஓட்டத்தை அதிகப் படுத்தியது.
திரும்பிப் பார்க்காமல் ஓடியவன் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்ச டீக்கடையை அடைந்ததும் கொஞ்சம் மூச்சை விட்டு, இழுத்து, மெதுவாக விட்டுக் கொண்டே சகஜமானான்.
“அது யார்ரா கேசவனா?”
கடைக்குள் குனிந்து பார்த்த கேசவன்
“ஆமாத்தா, என்ன வேணும்?”
“உங்க அப்பன் பூவலிங்கத்த வீட்டப் பக்கம் வரச் சொல்லுடா, நாளைக்கி”
“சரி புளிக்காரக் கெழவி”
..
Labels: புனைவு
என்’ணங்கள்... 14/12/09
தமிழில் ‘சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது’ என்பார்கள். ஆங்கிலத்தில் ‘கேப்பிடலைஸிங் த சிச்சுவேசன்’ என்பார்கள். தெலுங்கில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
ராஜசேகர ரெட்டியின் மரணம் பின்னான குழப்ப சூழலைப் பயன்படுத்தி, தெலுங்கானா விவகாரத்தைக் கையில் எடுத்தார்கள். எதிர்த்தார்கள். இப்பொழுது எரிக்கிறார்கள் ஆந்திராவை.
மத்திய அரசின் முடிவெடுக்கும் திறனுக்கு இது உதாரணம் என்றோ,அல்லது ஒரு பிடிக்காத விசயத்தை மொத்தமாக முடித்துக் க(கா)ட்டுவது என்பதை எப்படிச் செய்வது என சோனியா மறுபடியும் அசால்ட்டாக செய்து காட்டி இருக்கிறார் என்றோ உங்களுக்கும் தோன்றினால் நான் பொறுப்பல்ல.
அடுத்து தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே இது போன்ற பேச்சுகள் வரத் தொடங்கி இருப்பதாக நாளிதழ்கள் நவிலுகின்றன. நம் தலைவர்களுக்கு ‘திங்க் பிங்(Think Big) தெரியாதது துரதிருஷ்டமோ அதிர்ஷடமோ தான். ஏன் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிறார்கள்? கொஞ்சம் பெரிதாக சிந்திக்கலாமே என்பதுதான் என் கருத்து. ஒரு எட்டாகவோ பத்தாகவோ பிரிக்கலாம். அதற்கான இடவசதி தமிழ் நாட்டில் இல்லை என்கிறார்களா எம் தலைவர்கள்.. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலைமை ஏற்க ஆள் இல்லை என்று நினைக்கிறார்களா? இப்படி தமிழ் நாட்டை, இரண்டாகப் பிரித்து சிறுமை படுத்தாமல் எட்டாவோ, பத்தாவோ பிரிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து அல்லது மிகத் தாழ்மையான கருத்து.
************
“மக்களுக்கு தொண்டு செய்வதற்கு எனக்குப் பதவி தேவை இல்லை”- போன வாரம் நம் முதல்வர் சொல்லிவிட்டார். மிக மகிழ்வாக இருக்கிறது. இந்த கருத்து அவர் மனதில் கடந்த 20 ஆண்டு காலமாகவோ அல்லது 10 ஆண்டுகளாகவோ இருந்திருக்கும். தமிழில் அந்த அளவு அவருக்கு புலமை இல்லாததாலோ என்னவோ, எப்படி இதை வாக்கியமாகச் சொல்வது என்று யோசித்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன். இப்பொழுது சொல்லிவிட்டார். Better late than never.
*************
கவிஞர் D.R.அசோக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அய்யனார் கம்மா புத்தக வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது.
11/12/09 அன்று நடந்த அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் திரு ஞாநி, திரு பாஸ்கர் சக்தி, திரு அஜயன் பாலா கலந்து கொண்டு பதிவுலகம் குறித்தும் எழுத்து குறித்தும் தங்களது கருத்தைத் தெரிவித்துப் பேசினார்கள். சாருவும் வந்திருந்தார். பேசினார்.
விழா முழுவதும் D.R.அசோக் உற்சாகமாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த அகநாழிகை வாசுவிற்கும் புத்தகம் குறித்தான தனது பார்வையைப் பதிந்த திரு பாஸ்கர் சக்தி அவர்களுக்கும் மிக்க நன்றி.
************
ஃபிலிம் சேம்பர் சனிக்கிழமை மாலை சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட்டம் அம்மியது. போலவே ஞாயிறும் எஸ் ராவின் வெளியீட்டு விழாவும் ஸ்டேண்டிங்கில் போனது மகிழ்ச்சியான விசயம். நூல் வெளியீட்டு விழாக்களுக்கு இவ்வளவு கூட்டம் வருவது ஆரோக்கியமான ஒன்றாகவேப் படுகிறது. ஆனால் அரசியல் நிமித்தம் அழைக்கப்படும் விருந்திர்னர்களின் மைக் மேட்டர்கள் தான் நெளிய வைக்கிறது. மதன் பாப் ஒரு உதாரணம் என்றால் ரகுபதி ஐ ஏ எஸ் மறு உதாரணம். ஒன்று மறுத்து விட வேண்டும். அல்லது அதற்கான முனைப்பைக் காட்டி கொஞ்சமாவது நூல் குறித்தோ இலக்கியம் குறித்தோ பேச வேண்டும்.. மாறாக மதன் பாப் மைக் முன் வந்து சிரித்தது, சிரிப்பாக சிரிக்க வைத்தது.
****************
விகடனில் எப்பொழுதோ படித்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு, மனதை விட்டு அகல மறுக்கிறது.
மனைவி: “என்னங்க உங்க அம்மா கிட்ட சொல்லி வைங்க, என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்க”ன்னு சொல்றாங்க”
கணவன் : “சொல்றேன் சொல்றேன்..ஆனா நீ ஏன் இஞ்சியத் தின்ன?”
**************
Labels: என்’ணங்கள்
இன்று(11-12-09) புத்தக வெளியீட்டு விழா-அனைவரும் வருக.
![]()
இடம் :
Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
நேரம் : மாலை 5:30 மணி
அனைவரும் வருக. விழாவை சிறப்பிக்க.
புத்தகங்களை சலுகை விலையில் பெற அகநாழிகை பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
அகநாழிகைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
சந்திப்போம்.
..
அழகு...
விருந்தாளியாக வரும் அத்தையிடமோ மாமாவிடமோ கூட்டத்திற்கு நடுவே மாட்டிக்கொண்டால்,
“சின்ன வயசுல இவன் கொழு கொழுன்னு அமுல் பேபி மாதிரி, அவ்ளோ அழகா இருப்பான்”
என்று பெருமையாக பேசிக்கொண்டே போவார்கள். நாம், அருகில் இருக்கும் அத்தைப் பெண்ணைப் பார்த்து லேசாக, மாடு அசைபோடும்பொழுது தட்டுப்படும் இரண்டு பற்களைப் போல,அதைக் காட்டியும் காட்டாமல் பெருமையாய் பைக்குள் கையை விட்டு மேலே பார்த்தவாறு நிற்கும் பொழுதே,
“இப்பத்தான் குரங்கு மாதிரி ஆகிட்டான், பாவம்”
அவ்வளவுதான், இடத்தைக் காலி பண்ணிவிட வேண்டும்.
அழகு...
அழகெனப்படுவது அவரவர் பார்வையில் ஏதேனும் ஒன்றில் தொக்கி நிற்கிறது. மதிய நேரத்தின் வெயிலில் நீர்த் திட்டுக்கள் ஆங்காங்கே காய்ந்தும் காயாமல் காணப்படும் கொல்லைப்புறத்தில் இரண்டு குருவிகள் தலையைச் சாய்த்துப் பார்ப்பது அழகாகத் தெரிகிறது. நாம் சாப்பிட்ட பின் நிழலில் அமர்ந்து பார்க்கும்பட்சத்தில்.
அழகு.
இருக்குமிடமும் ரசிக்கும் நிமிடமும் அதற்கானச் சூழலும் முடிவு செய்கிறது அழகை. சட்டென்று நிமிரச் செய்வது அழகு என்றால் நிதானமாய் நினைவில் நிறுத்திக் கொள்ளச் செய்வதும் அழகுதான்.
“என்னடா தாடியும் கீடியுமா..கன்னமெல்லாம் ஒட்டிப் போச்சு”
“அவளேப் போய்ட்டா இனி நான் எப்பிடி இருந்தா என்னா மச்சான், அவ போன அன்னிக்கே எல்லாம் போச்சுடா”
கிட்டத்தட்ட இந்த வாக்கியங்கள், எல்லாக் கல்லூரிகளிலுமே ஏதாவது ஒரு கேண்ட்டின் குழாயையோ, பியூரெட்டையோ,பிப்பெட்டையோ, அட்டெண்டரையோ, கடந்து போயிருக்கக் கூடும்.
“அவரே போனதுக்கு அப்புறம் எனக்கு இந்த அலங்காரம் ஒரு கேடா, நகை ஒரு கேடா”
தமிழ் சினிமா துவைத்துத் தொங்கப்போட்ட இந்தக் க்ளிஷே இன்னமும் எத்தனையோ வீடுகளில் கிழியாமல்த் தான் இருக்கிறது.
அழகும்,அழகை கூட்டும் முயற்சியும் எவர்க்காகவோ தானா? மனதிற்குப் பிடித்தவர் பிரிய நேர்ந்தால் பிரிந்த இடத்திலேயே அழகைத் தொலைத்து விடுகிறோமா அல்லது அழகு தொலைந்து விடுகிறதா...மனதளவில்? மேற்சொன்ன “அவளே போனதுக்கப்புறம், அவரே போனதுக்கப்புறம்”..ங்கள் எதனால் தோன்றுகிறது?
குறுந்தொகையில், தலைவனைப் பிரிந்த தலைவி தன் அழகின் நிலை குறித்து இப்படிச் சொல்கிறாள்.
“நான் இங்கே தனிமையில் உள்ளேன். என்னுடைய அழகு, வயல் காவலனின் கவட்டைக் கல்(கவண்கல்) சத்தம் கேட்டு அஞ்சிய காட்டு யானை, தான் வளைத்த பசும் மூங்கிலைக் கைவிட, தும்பிக்கையினின்று விடுபட்ட அந்த மூங்கில், மீன் தூண்டில் எப்படி மேல் நோக்கி எகிறித் தூக்கப்படுமோ அதுபோல உயரமாக நிமிரும் நாட்டுக்குச் சொந்தமான தலைவனுடன் நான் பழகி,பிரிந்த அந்த இடத்திலேயே ஒழிந்து போனது.”
சிறப்பு:
“மீன் எறித் தூண்டிலின் நிவக்கும்” என்ற உவமை சுவாரஸ்யம்.
யானை வளைத்த மூங்கிலைக் கைவிடல் ஒரு அற்புதக் குறிப்பு, கூடிப் பிரிவதற்கு. குறிப்பாக நிமிரும் வேகத்தை மீன் அகப்பட்ட தூண்டிலைச் சுண்டும் வேகத்திற்கு ஒப்பிட்டது இன்னமும் சிறப்பு.
காட்சிகள் கண்முன் விரியும் உவமைகள்.
பாடல்:
யானே ஈண்டை யேனே; என்நலனே
ஏனல் காவலர் கவண்ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன்எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டுஒழிந் தன்றே.
குறிஞ்சித்தினையில் தலைவி கூற்றாக புலவர் ‘மீனெறி தூண்டிலார்’(இந்தப் பாடலில் வரும் உவமை!)எழுதிய அழகான பாடல்.
Labels: குறுந்தொகை , சங்க இலக்கியம்
டிசம்பர் 7- கறுப்பு தினம்.
இரண்டு கைகளைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?
அரசியலில் இருந்து ஆரம்பிப்பதாக இருந்தால் டிசம்பர் 6 என்பதே உதாரணம். இரண்டு கைகளால் கடப்பாறை பி(இ)டிக்கலாம்.
அன்றாடங்களில் இருந்து ஆரம்பித்தால்...
எழுந்தவுடன் இருகைகளையும் பரபரவெனத் தேய்த்து முகம் பார்க்கும் கண்ணாடியாய் ஆக்கி அதிர்ஷ்டம் தேடலாம்.
சுடுதண்ணீர் குளியராக இருந்தால் இரு கைகளாலும் பாத்திரம் தூக்கிச் செல்லலாம்.
ஒரு கையால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றது புத்தகம் பி(ப)டிக்கலாம்.
சட்டை பட்டன்களை எளிதாகப் போடலாம்.
ஷூ லேஸ் கட்டலாம்.
இப்படித் தட்டச்சிக் கொண்டிருக்கலாம்.
கைகளைக் கட்டி பணிவைக் காட்டலாம்.
தொலைபேசிக் கொண்டிருக்கும் பொழுதே மறுகையால் எண்களையோ, முகவரியையோ,தாமரைப் பூவையோ எழுதலாம்.
நாற்காலியின் கைப்பிடிகளை இருகரங்களாலும் பின் தள்ளி முன் எழலாம்.
நட்ட ரோஜாச் செடியின் காம்புப் பகுதியில் மணல் குவித்துப் பிடிக்கலாம்.
காமத்தின் கதவுகளைத் திறக்கலாம்.
என்று...
இரு கைகளும் ஒரே பொழுதில் செய்ய வேண்டிய,செய்யக் கூடிய எத்தனையோ வேலைகள் இருந்தாலும்,
இறந்த குழந்தையை புதைக்கவும் இரு கைகள் வேண்டுமென்பது தெரிந்த தினம்.
..
என்’ணங்கள் 04/12/09
L.K.G. அப்ளிகேஷன் வாங்கி, அதை பூர்த்தி செய்து திருப்பி கொடுத்தால், வாங்கும் முன்னர் கொஞ்சம் எட்டிப் பார்த்து, பேண்ட்டில் ஜிப் சரியாக போட்டிருக்கிறோமா,(குழந்தைக்கு அல்ல) தலை சரியாக சீவி இருக்கிறோமா என்று ஆரம்பித்து, பர்த் சர்ட்டிஃபிகேட்டில் பெயருக்குப் பின்னால் புள்ளி இருக்கிறது நீங்கள் அதை இங்கே வைக்கவில்லையே என்று சடவுச் சொற்களைச் சொல்லிக்கொண்டே, “கார்டு வந்தா வந்து பாருங்க” என்று இல்லாத பில்டப்புகள் கொடுக்கும் பள்ளி நிர்வாகங்களே...
உங்கள் கட்டிடத்தின் அஸ்திவாரம் சரியாக இருக்கிறதா, வேன் ட்ரைவருக்கு வண்டி ஓட்டத்தெரியுமா, வேனில் டயர் இருக்கிறதா, இருந்தால் அதில் பட்டன்கள் இருக்கிறதா என்றெல்லாம் பாருங்கள்.
நேற்று வேதாரண்யம் அருகே வேன் ட்ரைவர்(?? இவனுக்கு லைசென்ஸ் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன,) குளத்தில் வேனை விட்டு, 9 குழந்தைகளும் ஒரு ஆசிரியரும் நீரில் மூழ்கி இறந்த சம்பம் கேள்விப்பட்டதில் இருந்து கோவம் குறையவே இல்லை. இன்னமும் சில குழந்தைகளை தேடிக்கொண்டிருக்கிறார்களாம் நீருக்குள்.
போக்குவரத்துத் துறையை கை காட்டுகிறதாம் கல்வித்துறை. லைசென்ஸ் இல்லாத ஒருவரை, டயர்கள் சரி இல்லாத ஒரு வேனை ஆய்வு செய்யாத, வாரம் ஒரு முறை சரிபார்க்க வேண்டும் என்ற அக்கறையோ அறிவோ இல்லாத நிர்வாகம் என்ன பதில் சொல்லும்?
இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வருத்தங்களும் குழந்தைகளுக்கு அஞ்சலிகளும்.
லைசென்ஸ் இருக்குன்னு பொய் சொல்லி இருப்பான், அதுக்கு அந்த பள்ளி நிர்வாகி என்ன செய்வாரு பாவம் என்று சிலர் கூறக்கூடும், Then for what the f--k he is sitting there?.
*******
சிறுகதை தொகுப்பு குறித்து,பதிவிலும், மடலிலும், அலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மிக நெகிழ்வாக உணர்ந்தேன். ஆம். வருகின்ற 11ம் தேதி புக் பேலஸில் அகநாழிகை தன் புத்தங்களை வெளியிடுகிறது. அய்யனார் கம்மாவும் சேர்த்து 7 புத்தங்கள் வெளிவருகிறது.
வெளியீட்டு விழா குறித்த தகவல்களை அறிய அகநாழிகையின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.
அனைவரும் வருக. வாழ்த்துக.
**********
சேவாக். "If the ball cutting away he will hit, if it cuts in, still he hits"
என்ற கவாஸ்கரின் வார்த்தைகளை நேற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டினார். சரவெடி அடிகள். அதுவும் முரளீதரன் பவுலிங் போட நடந்து வரும்போதே முடிவு கட்டி விட்டிருப்பார் போல சேவாக். 700 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முரளி என்ற எந்த மரியாதையும் கொடுக்கவில்லை சேவாக். ஸ்பின்னரை இறங்கி அடிப்பது என்பது சாதாரணம் என்றாலும் முரளியை ரிவர்ஸ் ஸ்வீப்பில் வெளுத்தது அசாதாரணத்திற்கு உதாரணம்.
வெல்டன் சேவாக்.
முரளி விஜய் அணியில் மிக நல்ல இடத்தைப் பிடிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவரின் பேட்டிங் ஸ்டைல் அப்படி. கவர் ட்ரைவின் போது பந்து எல்லையைத் தொடும்வரை அதே பொஷிசனில் நிற்கும் அளவிற்கு ஸ்டைல். அதைவிட முக்கியமாய் ஸ்கொயர் கட்டுகளில் போது மட்டை ஒரு முழு சுற்று வருவது(ஷாட்டை க்ளோஸ் செய்வது என்பார்கள்) கூடுதல் விசேஷம். லாராவிடம் இதைக் காணலாம்.
வெரிவெல்டன் முரளிவிஜய். ஸ்ரீகாந்த்தை காப்பாற்றியதற்கு.
********
பதிவர் பின்னோக்கியின் மகன் உறங்கும் கவிதை என்னை வெகுவாக பாதித்ததை சுட்டி கொடுத்து சொல்லி இருந்தேன். அதே பாதிப்பில் கொஞ்சம் வேறு மாதிரியாக ஒரு கவிதை எழுதி விகடனுக்கு அனுப்பினேன். நேற்றைய விகடனில் பிரசுரமாகி இருந்தது.
அண்ணாச்சி வடகரை வேலனின் ‘தக்கை’ கவிதையும் வெளியாகி இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அம்மாக்களின் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகமும் வரவேற்பறைப் பகுதியில் வெளியாகி இருக்கிறது. வாழ்த்துக்கள். சிறப்பாக பதிவுகளைப் பகிர்ந்து விகடன் கவனம் வரை செல்ல உதவிய பதிவர்களின் பங்களிப்பிற்கு வாழ்த்துகள்.
*********
உரையாடல் அமைப்பின் உலகப் படம் திரையிடல் குறித்த பதிவு போட்டவுடனேயே மழை வந்துவிட்டது. முன்பெல்லாம் என்று நடக்குமோ அன்றுதான் மழை வந்துகொண்டிருந்தது. இப்பொழுது அறிவிப்பன்றே அடி பின்னுகிறது. ஏதோ ஈரம் பாக்கி இருக்கிறது பதிவுலகிற்கும் மழைக்கும்.
வரும் ஞாயிறு உலகப் படம். விபரங்களுக்கு இங்கே செல்லவும். அப்புறம் அங்கே வரவும்.
***********
எறும்பு என்ற பதிவரின் இந்தப் பதிவு பிடித்திருந்தது. நன்றாக எழுதுகிறார். சிறுகுறைகளை படிப்பவர்கள் சொல்வார்கள். முனைந்து தொடர்ந்து நிறைய எழுதுங்கள் எறும்பு. ஊரிப் பறங்கள். வாழ்த்துக்கள்.
வெண்ணிற இரவுகள் என்ற பெயரிலேயே கவனம் ஈர்க்கும் இவரின் சில பதிவுகளும் பிடித்திருக்கிறது. நிறைய எழுதுங்கள் பாஸ்.
வாழ்த்துக்கள்.
********
விகடனில் வந்த கவிதை.
நிசப்தம்.
வீட்டிற்குள்
நுழையும்பொழுதே
வெறுப்பேற்றும்
குழந்தையின் அழுகைக்
குரல்
அவசர மின்னஞ்சலோ
ஆசைப்பட்ட பாடலோ
அலுவலக அலைபேசியோ
எதுவும் செய்ய
அனுமதிப்பதில்லை
பிள்ளை என்ற
தொல்லை-
என்றாலும்
இந்த மழையின்
நீட்சியில்
மாலையிலேயே
உறங்கிப் போய்
அவன்
எழுப்பும்
நிசப்தம்
அதிரவைக்கிறது
மனதை.
நன்றி விகடன்..
Labels: என்’ணங்கள்
ஆம்...
ஆம்.
சில நிகழ்வுகள் நடந்தேறிவிடுகிறது. அதன் தாக்கத்தில் இருந்து வெளியேறிவிடுவதே நல்லது என்று நான் உணர்ந்த நிகழ்வுகள் இதுவரையிலான என் வாழ்வில் ஏராளம்...ஒரு பெரும் இழப்பு உட்பட.
சில தருணங்கள் நின்று போய்விடுகிறது கண்களிலும் மனதிலும். முதன்முதலாய் பார்த்தது தேதி நிமிடம் நொடி என நினைவில் இருக்கிறது மணநாளை விடவும் முதன்முதலாய் பார்த்த நாளும் தருணமும் மட்டுமே இன்னமும் என் நெஞ்சில் இருக்கிறது.
ஒரு சில நிகழ்வுகளும் அது முகிழ்க்கும் தருணங்களும் சட்டென்று அவிழ்கப்படும் பசிநேர உணவுப் பொட்டலம் போலத்தான், பெரும் திருப்தியாய்...
குருதி தோய்ந்து,அக்கி படிந்து, வெந்செந் நிறங்கள் கலந்த பிஞ்சுப்பஞ்சை கைகளில் வாங்கி, புருவ உயர்த்தலில் அந்த மருத்துவருக்கு நன்றி சொன்ன அதே தருணம் போலவே தான் நேற்றும் உணர்ந்தேன் அச்சு மையின் வாசம் பார்த்தவுடன்.
புத்தகத்தில் சொன்னபடியே... அய்யனார் கம்மா என்ற இந்த என் முதல் தொகுப்பை/புத்தகத்தை பதிவுலகினருக்கு அர்ப்பணிக்கிறேன்..ஒவ்வொரு பதிவருக்கும்...ஏனெனில் பதிவர்களின் விமர்சனங்களும் ஊக்குவிப்பும் மட்டுமே இந் நிகழ்வின் சாத்திய சத்தியம்.
வாழ்த்துங்கள்..
புத்தக வெளியீட்டு விழாவை அகநாழிகை பதிப்பகம் டிசம்பர் 11 அன்று நடத்த இருக்கிறது. அறிவிப்பு குறித்தான பதிவு விரைவில்.
நன்றி அகநாழிகை.
பெண் இயம்- சுயம்..கலம் செய் கோவே!
நண்பனின் வீட்டிற்குப் போகப் பிடிக்கவே இல்லை. ஆம். அவனின் தந்தை இறந்த பின்பு அவரின் இறப்பை விட அவன் அம்மாவைப் பார்ப்பது தான் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது எனக்கு.
எப்பொழுதும் சிரித்த முகம். காலை, மாலை வேளைகளில் என்றால் காஃபி, மதியம் என்றால் சாப்பாடு அல்லது மோராவது என அந்தந்த டயத்திற்கு ஏற்ப உபசரிப்பு இருக்கும். கலகலவென ஏதாவது பேசுவார். எல்லா பேச்சிலும் ஏதாவது ஒரு மார்க்கத்தில் அவரின் கணவரை நுழைத்தே முடிப்பார்.
“நேத்து திடீர்னு டிவி சரியாவேத் தெரியலடா..நல்லவேள அவர் இருந்ததால டக்குனு ஏதோ பண்ணி சரி ஆகிடுச்சு,”
இப்படியான ‘நல்லவேளை இவர்‘ என்ற வார்த்தையினூடேயே பெரும்பான்மையான வாழ்க்கையைக் கழித்தவர். இதோ இன்று ‘இவர்’ போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. நண்பனைப் பார்க்காமலும் இருக்க முடியாததால் பார்க்கப் போயிருந்தேன். நான் நினைத்தவாரே வார்த்தைகள் தொலைத்து மூலையில் அமர்ந்திருந்தார் அம்மா.
“அம்மா, அப்பா பேங்க் டீட்டெய்ல் ஏதாவது சொன்னாரா எங்க வச்சு இருக்காரு?”
“அப்பா இன்சூரன்ஸ் பத்தி ஏதாவது சொன்னாரா?”
“எனக்கென்னடா தெரியும்.. என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டாரு, நானும் கேட்டதில்லடா, இப்பிடிப் போவாருன்னு தெரியாதே“
பணம், கடன் வாங்கியது, கொடுத்தது, சொத்து, என எல்லாக் கேள்விகளுக்கும் மேற்சொன்ன பதில்தான் அவனின் அம்மாவிடம் இருந்து.
“அவர்கூடவே நானும் போயிருக்கணும்டா, எனக்கு முன்னால போவாருன்னு தோணலையே”
இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபப்பட்ட நண்பனின் சகோதரி மிகப் பொறுமையாக பேசினார்.
“விடும்மா, உன் தப்பும்மா, இப்போ எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருசம் தான் ஆகுது, ஆனா, ஓரளவு எல்லா டீட்டெய்லும் எனக்குத் தெரியும், அது போக எனக்குன்னு தனி அக்கவுண்ட், ஏடிஎம்னு ஃப்ரீயா இருக்கேன்.”
பேசிக்கொண்டே போன நண்பனின் சகோதரிக்குத் தன் கணவனின் அத்தனை விபரங்களும், எங்கே என்ன இருக்கிறது எனபது வரை தெரிந்து வைத்திருப்பதாக சொல்லி தன் தாயை பாசமும் வருத்தமும் கலந்து திட்டும் பொழுதுதான் தலைமுறை இடைவெளி தாண்டிய எதார்த்தம் தெரிந்தது.
எத்தனை ஆண்டுகள்? எங்கிருந்து எதுவரை? இன்னமும் எத்தனை தூரம் கடக்க வேண்டி இருக்கிறது?
புறப்பாட்டில் பெண்ணொருத்தி தன் கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறவேண்டிய நேரத்தில் இப்படிச் சொல்கிறாள்.
“அய்யா, என் கணவனை புதைக்க பானை(முதுமக்கள் தாழி) செய்பவனே, அதை கொஞ்சம் பெரிதாகச் செய், நல்ல மலர்களைத் தூவு, வண்டிச் சக்கரத்தின் கட்டையில் ஏறிய பல்லியானது அந்த வண்டியின் கூடவே நெடுந்தொலைவு பயணம் செய்வது போலவே என் வாழ்க்கைப் பயணமும் இவரோடு கழிந்தது. இனி இறக்க வேண்டும். கொஞ்சம் பெரிய,அகலமான பானையாகச் செய்.”
முகத்தில் அறைந்தது போல இருக்கிறதா? மேலோட்டமாகப் பார்த்தால் பல்லி எப்படி கூடவே போகிறது அது போலத்தான் என்பது போல பொருள் இருந்தாலும், வண்டி எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், பல்லியின் பயணம் அந்த சக்கர அச்சிற்குள்ளே முடிந்து போகிறது, அந்தத் தன் நிலையை நொந்து, “இறக்கும் போதாவது கொஞ்சம் கம்ஃபர்ட்டபிளாக, பெரிய இடத்தில் நல்ல பூக்களோடு சேர்ந்து புதைந்து போகிறேனே” எனும்படியாகத்தான் பாடியிருப்பார் என்று எனக்குப் படுகிறது.
அந்தப் பாடல்.
கலம் செய் கோவே கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ-
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
இந்தப் பாடலின் சூழலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நெடுந்தூரம் கடந்து வந்து விட்டோம், அம்மாக்கள் கண்கண்ட தெய்வங்களைச் சுற்றியே புரியாமல் வாழ்ந்திருந்தாலும், சகோதரிகள் தங்கள் வாழ்வை எதார்த்தமாக,சுயமாக எதிர்கொள்வது தெரிந்தால் கலஞ்செய் கோவே பாடிய புலவர் மகிழக்கூடும் அந்தப் பெரிய பானையில் இருந்தவாறே.
..
Labels: சங்க இலக்கியம்