சுஜாதா...ஆளுமையின் முழுமை.

‘கண் தானம் செய்வதற்கு பக்கத்தில் உள்ள கண்படத்தைக் க்ளிக்கி பாரத்தை பூர்த்தி செய்துவிட்டீர்கள் என்றால் இருவரின் இருள் நீங்கும். படிவத்தை பூர்த்தி செய்த பத்தாவது நிமிடம் யாரவது ஸ்கூரு ட்ரைவர் சகிதம் பஜாஜ் எம்80யிலோ டிவிஎஸ் அம்பதிலோ முகவரி தேடி வந்து ‘ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் ராஜ்குமார். உங்க ஐ டோனசன் அப்ளிகேஷன் கிடைச்சது..எடுத்துக்கவா..’ என்று கூறினால் நான் ஜவாப்தாரியல்ல’

மேற்கண்ட பத்தியை நான் எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றி இருக்குமேயானல் அது சுஜாதாவை திரும்பத் திரும்ப படித்ததின் தாக்கம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். பத்தி எழுத்துகளைப் பற்றிய யாதொரு ஆய்வோ,கட்டுரையோ,பேச்சோ...அதில் சுஜாதா என்ற பெயரன்றி அமையாது. ஏனெனில் பத்தி எழுத்துகளில் சுஜாதாவின் பங்கு இன்றியமையாதது.

முதல்முறை எதேச்சையாக இவரின் எழுத்தைப் படிக்கும் எவரும் அதன்பின் அவர்பின் தான். கடைசிப் பக்கத்தின் நீட்சியாக கற்றதும் பெற்றதும். இரண்டிலுமே மிக நுட்பமான, சீரியஸான விசயங்களை போகிற போக்கில் மேலோட்டமாக சொன்னவர். ஆனால் ஆழமாக. மேலோட்டத்தில் எப்படி ஆழம் என்ற கேள்வி சுஜாதாவைப் படித்தவர்களுக்கு எழா.

சங்கப்பாடல்களையும் ஹைக்கூவையும் அருகருகே வைத்து ரசித்தவர், ரசிக்க வைத்தவர்.

‘கவிதை எழுதும் நண்பனைக் கண்டதும் சந்தில் சரேலென்று மறைந்தேன்’ அவ்வளவுதான். இந்த ஒற்றை வரியில் துள்ளும் நகைச்சுவையும் கவிஞர்கள் படுத்தும் பாடும் என அத்தனையும் கொண்டுவந்துவிடும் இதே உத்திதான் எல்லாவற்றிலும்.ஒரு எள்ளல்,ஊடாகத் தகவல்.

கணையாழியின் கடைசிப் பக்கம் தொகுப்பில் முதல் பக்கமே அதிரடியாக, தமிழ்ப் படங்களைப் பற்றியும்(60களில்) பா வரிசை செண்டிமெண்ட் குறித்தும் சிவாஜின் மிகை நடிப்பு குறித்தும், வாலியின் பாடல்கள் சரி இல்லை(காப்பி அடிப்பவரை காப்பி அடிக்கிறார்) என்றும் அதிரடியாக ஆரம்பித்திருக்கிறார்.இளமை வேகமும் எழுத்தின் வசீகரமும் சேர்ந்த அதிரடி பக்கங்களவை.

//'தமிழ்ப் படங்களுக்கு கதி இல்லை என்றேன். ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ சிறந்த படங்களில் ஒன்று என்றால் தமிழ் சினிமாவுக்கு கதியில்லை என்று மறுபடி சொல்வேன்.//

இப்படியாக கவிஞர் வாலி, பஞ்சு அருணாசலம், ஸ்ரீதர், தமிழ் படங்கள் குறித்த தன் பார்வையை மாற்றியும் மாறிக்கொண்டும் வந்து, தானும் தமிழ் திரைப்பட உலகில் ஓரளவு முக்கிய பங்கையும் வகித்துப் போனவர். திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் பெரும்பான்மையான உதவி இயக்குனர்களிடம் இருக்கச் செய்தவர்.

கணேஷ் வசந்த் என்ற இரு மனிதர்கள் நிஜமாகவே இருக்கிறார்களோ என்று எண்ண வைத்தவர்.வசந்த் மூலம் தன் எள்ளல் தீர்த்தவர்.

ஸ்ரீரங்கத்து தேவதைகளின் மூலம் ஒரு ஊரை, ஒரு குழுவை, ஒரு தெருவை, ஒரு கடையை என அங்குலம் அங்குலமாக நமக்கே நமக்கானவர்களாகவும் நாம் அமர்ந்திருக்கும் இடம்போலவும் மொழிபெயர்த்தவர். அல்லது அந்த ஊரை புத்தகம் மூலம் உலகெங்கும் இடம்பெயர்த்தவர்.

ஒவ்வொரு கதையிலும் மாந்தர்கள் தோள்மேல் கைபோட்டு அருகில் இருப்பது போலவே ஒரு உணர்வை எப்படிக் கொண்டு வந்தார் என்று இன்று வரை அறிய முயன்று தோற்றுக் கொண்டே இருக்க வைக்குமோர் அற்புதக் கலைக் கை விரல்கள் சுஜாதாவினுடையது.

ஒரு கதையில் ஆறு ஏழு வரிகளுக்கும் மேலாக ஒரு வீட்டையும் அதற்குள் இருக்கும் அறையையும் விஸ்தாரமாக விவரித்து கடைசி வார்த்தையில் ‘சீனு தொங்கிக்கொண்டிருந்தான்’ எனும் போது அதிர்வின் வினை அதிகமாகக் கூடும் எனும் உத்தி அவரின் நேர்த்தி.

தன் வாசகன் தன்னைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாய் இருந்தவர்.அறுபதுகளில் கடைசிப்பக்கங்களில் நல்ல எழுத்துகளையும்,கவிதைகளையும் மேலை,கீழை என தேடித் தேடி அறிமுகப்படுத்தியவர்.எரிக்கா ஜாங்கில் துவங்கி தன்னுடைய தெருவில் இருப்பவரின் கவிதைத் தொகுப்பு வரை அனைத்தையும் படித்து,தனக்குப் பிடித்ததை பதிவதில் பிடிவாதமாய் இருந்தவர்.

ராயப்பேட்டை பாலு வா அவிழ்ப்போம் முடிச்சை’ என்பதில் உள்ள குத்து, உள்குத்து. அப்பொழுதே ஆரம்பித்து வைத்தவர் சுஜாதா. எங்கோ நடந்த விவகாரம். புரிந்தால் இனிக்கும் காரம்.

சுஜாதாவைத் தவிர வேறொன்றுமில்லை என்றிருந்த காலகட்டங்களைத் தாண்டி வந்து பதிவுலக வாயிலாக மாற்று எழுத்துகளும் மிகச் சிறந்த ஆளுமைகளும் இங்கே பரவிக் கிடப்பதை அறிந்து கொண்ட நேரம் அவர் உயிரோடில்லை. ஆம். சுஜாதாவையும் தாண்டிய எழுத்துகள் தமிழ் நல்லுலகம் உரக்கக் கூவிக் கூறிக்கொண்டு தான் இருந்திருக்கிற்து. என்றாலும் சுஜாதா என்ற பெயரின் ஆளுமை முன்வரிசையில் நின்று கொண்டதாகவே தோன்றுகிறது.


சிறுகதைகளில் அவர் வகுத்த ஆரம்பம் நடு முடிவு போன்றவைகளில் உடன்பாடில்லை என்றாலும்,அவரின் சிறுகதைகளில் ஒன்றில் கூட ஒன்றாமல் இருந்ததில்லை.சொல்லும் விதமும்,கதை செல்லும் வேகமும்,வார்த்தைகளின் வசீகரமும் என அவரின் கதைகள் எல்லாமே முடிந்தும் முடியாமல் மனதில் இருப்பவை, அவரைப் போலவே.

அவரின் தொடரும் நினைவுகளைப் போல இக் கட்டுரையும் முற்றுப் பெறாமலே...


**********

37 comments:

ஆதிமூலகிருஷ்ணன் February 25, 2010 10:40 PM  

முடிவே அற்றதுதான் எனினும் கச்சிதமான நினைவு கூறல்.!

தர்ஷன் February 25, 2010 10:53 PM  

சந்திப்புக்கு வாழ்த்துக்கள்
சொன்னவரை ஞாபகம் இல்லை எப்போதோ படித்தது புதிதாக வாசிக்க துவங்குபவனுக்கு ஒரு சில எழுத்தாளர்களை வாசிக்க சொல்லி மீண்டும் மீண்டும் பல தடவை வலியுறுத்த வேண்டுமாம். சுஜாதாவின் புத்தகமொன்றை கொடுத்தால் அதன் பின் அவனே தொடர்வான் என
என்னைக் கேட்டால் அவர் ஒரு Mobile Encyclopedia

sriram February 25, 2010 11:20 PM  

//கவிதை எழுதும் நண்பனைக் கண்டதும் சந்தில் சரேலென்று மறைந்தேன்’ //

நம்ம கேபிள் சுஜாதாகிட்ட கூட தன்னோட உரை நடையை (கவிதைன்னு நான் என்னிக்குமே ஒத்துக்க மாட்டேன்) சொல்லி இருப்பார் போலிருக்கே, ஆனாலும் நீங்க இதை பொதுவில் சொல்லி இருக்க வேண்டாம் :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நர்சிம் February 25, 2010 11:33 PM  

பின்னூட்டம் இட்ட gulf-tamilan,முகிலன்,மோகன்குமார், காவேரி கணேஷ்..நன்றி,,இது முழுக்க முழுக்க பதிவர் சந்திப்பு குறித்தான பதிவு என்பது போல ஒரு தொனியை இறுதி அறிவிப்பு ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். அதனால் அதை எடுத்து விட்டேன். தனியாக சனிக்கிழமை அன்று பதிவிடுகிறேன். அவரின் நினைவு கூறலாக எழுதிய பதிவில் சந்திப்புக்கு வாழ்த்துகள் சங்கடமாக இருக்கிறது என்பதால் பின்னூட்டங்களையும் நிகழ்வு குறித்த அறிவிப்பும் நீக்கிவிட்டேன் சனிக்கிழமை பதிவிடப்படும். பின்னூட்டங்களோடு.

நன்றி

பிரபாகர் February 25, 2010 11:58 PM  

என் ஆதர்ஷ நாயகர், எனக்குள் நிறைய விஷயங்களை புகுத்தியவர், எழுத்துக்களால் என்னை கட்டிப்போட்டவர், எந்த ஒரு மனநிலையிலிருந்தாலும் ஒரு சமச்சீரான நிலைக்கு வருவதற்கு இன்னமும் உதவுபவர்.... என சொல்லிக்கொண்டே போகலாம் சுஜாதவைப் பற்றி. என்னுள், எழுத்துக்களை நேசிக்கும் எல்லோருள்ளும் உறைந்திருக்கும், நிறைந்திருக்கும் சுஜாதாவைப்பற்றிய உங்களின் இடுகை .... என்ன சொல்ல? ஒரே வார்த்தையில் நன்றி நரசிம்.

பிரபாகர்.

சுசி February 26, 2010 12:13 AM  

//முதல்முறை எதேச்சையாக இவரின் எழுத்தைப் படிக்கும் எவரும் அதன்பின் அவர்பின் தான்.//

அப்படியே வழி மொழிகிறேன்..

இராகவன் நைஜிரியா February 26, 2010 2:12 AM  

மிக அருமையா நினைவு கூறல்.

சின்ன அம்மிணி February 26, 2010 3:16 AM  

இவர் பாதிப்பில்லாமல் எழுதுபவர்கள் குறைவுதான்.

Sundar சுந்தர் February 26, 2010 4:27 AM  
This comment has been removed by the author.
Sundar சுந்தர் February 26, 2010 4:28 AM  

அவர் இறந்ததை அறிந்த போது, வருத்தம் வார்த்தையில் வரவில்லை. இன்று உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது வரும் வார்த்தைகளுக்கு அளவில்லை - உடன் என்னால் எழுத முடிந்ததை என் பக்கம் வந்தால் நீங்களும் பார்க்கலாம். http://ennaalaigalil.blogspot.com/2010/02/blog-post.html

கார்க்கி February 26, 2010 8:33 AM  

சு ஜாதாவுக்கு
ஜா ல்ரா
தா ளம்

போடுவதில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை.எழுத்து என்னும் மாளிகையினுள்ளே பல ஆடம்பர அறைகளும், இன்னபிறவும் இருந்தாலும் என்னைப் போன்ற பலரை அத்னுள்ளே இழுத்த சாதாரண வாயிற்படி அவர். அவருக்கு இருந்த தொலை நோக்கு பார்வையும், காலத்தோடு ஒன்றும் இயல்பும் இல்லாமல் போனதாலே இன்றைய தலைமுறையோடு நம் எழுத்தாளர்கள் ஒன்ற முடியாமல் போகிறார்கள்.

மைக்கெல் ஜேக்சனுக்கு பிறகு எனக்குதான் அதிக ரசிகர்கள் என்று பிதற்றும் ஆசாமிகள் எல்லாம் நான் அடுத்த சுஜாதா என்று சொல்லிக் கொள்வது அவரின் காதுகளுக்கு விழாமல் இருக்க ஸ்ரீரங்கப் பெருமாளை சேவித்துக் கொள்கிறேன்.

செல்வேந்திரன் February 26, 2010 9:55 AM  

தீர்க்கதரிசனம் என்கிற வார்த்தை பகுத்தறிவிற்கு முரணானதுதான் என்றபோதும் சுஜாதாவின் கட்டுரைகளை அவர் எழுதிய காலம் தாண்டி வாசிக்கையில், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா குறித்த அவரது அவதானிப்புகள் அனைத்தும் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருவதைப் பார்க்கையில் அவர் எதிர்காலத்தைக் கூறும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரோ என்ற எண்ணம் வருகிறது.

எழுதத் துவங்கும் அல்லது எழுதப் பழகும் எவருக்கும் தன் அபிமான எழுத்தாளன் தனது எழுத்தை ரசிப்பானா என்கிற வினா ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே வந்துவிழுந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் எனது எழுத்தாசானாகவும், ஆதர்சமாகவும் விளங்கிய சுஜாதாவை அசத்திவிடும் சிறந்த படைப்போடு வெளிவரவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அவரால் அடையாளம் காட்டப்பட்ட எழுத்தாளனில் ஒருவனாக அறியப்படவேண்டும் என்கிற எனது தீராதவேட்கை அவரது மரணத்தின் மூலம் ஒருபோதும் நிகழாத ஒன்றாகி விட்டது.
சுஜாதா எழுத்தாளர்களை உருவாக்குபவராக இருந்தார். அவரது எழுத்தில் இருந்த எளிமை எவரையும் எழுதத் துண்டுவதாக இருந்தது. கணையாழியின் கடைசி பக்கங்களில் துவங்கி கற்றதும் பெற்றதும்வரை அவர் தனது அன்றாடங்களையும் அனுபவங்களையும் பத்திகளாக்கியது பெரும் வாசகப் பரப்பை ஈர்த்தது. இதுமாதிரியான அனுபவக் கட்டுரைகளை, டைரி குறிப்பு போன்ற பதிவுகளை எழுதும் ஆயிரமாயிரம் பதிவர்களை உருவாக்கியது. அவரது பாதிப்பு இல்லாத பதிவர்களே இல்லை என்பது எனது அபிப்ராயம்.

- காலம் கடந்த கேவல் எனும் என் இரங்கல் கட்டுரையிலிருந்து...

ரிஷி February 26, 2010 10:10 AM  

இன்றைய பலருக்கு வாசிப்பு பழக்கம் எழ முக்கிய எழுத்தாளர்

நன்றி நரசிம்

ர‌கு February 26, 2010 10:29 AM  

இன்று என‌க்கும் புத்த‌க‌ம் வாசிக்கும் ப‌ழ‌க்க‌ம் இருக்கிற‌தென்றால், க‌ண்டிப்பாக‌ இந்த‌ அற்புத‌ ம‌னித‌ர்தான் கார‌ண‌ம்:)

// சின்ன அம்மிணி said...
இவர் பாதிப்பில்லாமல் எழுதுபவர்கள் குறைவுதான்.//

அப்ப‌டியே ரிப்பீட்டிக்கொள்கிறேன்:)

ர‌கு February 26, 2010 10:31 AM  

//அவரின் நினைவு கூறலாக எழுதிய பதிவில் சந்திப்புக்கு வாழ்த்துகள் சங்கடமாக இருக்கிறது //

ந‌ர்சிம், You're a perfect gentleman!

andal February 26, 2010 11:06 AM  

சுஜாதா கற்றதும் பெற்றதுமில் சொல்லியிருந்தார் எல்லாரும் போட்ட வெலை போட்டபடி போய் ஜாவா படியுங்கள் என்று உண்மையாகவே அப்படி செய்து இன்று குறிப்பிட்ட நிறுவனத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் குடும்பம் எங்களுடையது(ஆட்டொமொபைல் துறையில் டிப்ளமொ முடித்து அந்த துறையில் வேலைகிடைத்து அது உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல் என்ன செய்வது என யொசித்துக் கொண்டிருக்கும் போது மேற்சொன்ன கட்டுரையை படித்ததாக என் கணவர் அடிக்கடி குறிப்பிடுவார்)முடிந்தால் சுஜாதாவிடம் நேரில் நன்றி சொல்ல வேண்டும் என நினைத்ததுண்டு :( அவர் தீர்க்கதரிசியேதான்

Rangan Kandaswamy February 26, 2010 11:07 AM  

என் பெயரும் அவருடைய முதல முழு பெயரும் ஒன்றை தவிர, செக்ஸ் இன்னோடேசன் வைத்து எழுதும் பாணி எனக்கு பிடிக்கவில்லை. மற்றபடி அவர் ஜனரஞ்சக எழுத்தாளர். பெண்களை கவரவில்லை என தோன்றுது!

அப்படி செக்ஸை பிரதானமாக முன் வைத்து - பின் நவீனத்துவ இலக்கியம் எழுதுபவர்களை ஆராதனை செய்து, குடி கூத்து என்று கஷ்டப்பட்டு சம்பாரிததை செலவு செய்தவர்களை நான் என்னென்று சொல்ல! அவர்கள் காலில் விழ வேண்டும். இதற்கும் அதே எழுத்தாளர்கள் எனக்கு பிடித்த பிரெஞ்சு ஒயின் கிடைக்கவில்லை, பிராந்தியில் ஒப்பேறியது என்று சொல்லி நக்கலடிப்பதை தாங்குபவர்களை கண்டால் பரிதாபம் தான் மிச்சம் நிற்கிறது. இதற்கும் அந்த எழுத்தாளர் அவர் செலவு செய்ததை ஒரு வரி கூட சந்தோசித்து நன்றி பூர்வமாக எழுதவில்லை.

அவர்கள் எழுதிய புத்தகம் வாங்கினோம, படித்தோம, இரண்டு முறை ப்ளாக் போஸ்ட் போட்டோமா... டிவிட்டரில் கும்மி அடித்தோம என்று இல்லாமல்... சரி சரி..

வித்யா February 26, 2010 11:53 AM  

அவரின் எழுத்துகளுள் அகப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.

விக்னேஷ்வரி February 26, 2010 11:54 AM  

அற்புதமான நினைவு கூறல் நர்சிம். அவரைப் பார்க்க முடியாமல் போன என் துரதிர்ஷ்டம் அவரின் எழுத்துக்களின் மூலம் தீர்ந்து கொண்டிருக்கிறது.

நிச்சயமாக ஒவ்வொரு எழுத்தாளனின் எழுத்துக்களிலும் அவரின் சாயல் மறைந்து கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.

யாஹூராம்ஜி February 26, 2010 11:55 AM  

நன்றிகள் நரசிம், அவர் மறைந்த மாதத்தில் அவர் குறித்து பதிவு எழுதியமைக்கு.

செல்வேந்திரன், ரிஷி கூறியுள்ளது போல அவர் பாதிப்பு இல்லாமல் இங்கு வாசிப்பவரோ எழுதுபவரோ கிடையாது.

அவர் தீர்க்க தரிஷி தான். என் வருத்தம் அவர் twitter, facebook, wikipedia kaalngalil இல்லை என்பதே.

இன்று கூகிள் மைக்ரோசாப்டை ஜெயித்து காட்டி இருப்பதை கண்டு இருந்தால் அவர் மிகவும் சந்தோச பட்டிருப்பார்.

5 years back itself sujatha has said that proprietary solutions (microsoft, hotmail) will loose, and open source (google, wkipedia, will rule the market.

முகிலன் February 26, 2010 12:03 PM  

இன்றைய ப்ளாகுகளின் பத்தி எழுத்துகளுக்கு முன்னோடி...

எழுத்தாளர்கள் என்றால் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்திருக்க வேண்டும் என்பது போன்ற மாயையை உடைத்தவர்..

அவரது துள்ளல் நடை, வார்த்தைப் பிரயோகங்கள் அந்த அந்தக் கால இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் (ஒன் பாத்ரூம் போவதை பிரித்துவிட்டு வருகிறேன் என்று அவர் எதோ ஒரு கதையில் உபயோகித்ததாகவும் அப்போது கல்லூரி இளைஞர்கள் இதை பெருவாரியாக உபயோகப் படுத்தியதாகவும் என் மாமா சொல்லிக் கேட்டிருக்கிறேன்).

“15 நிமிட புகழ்” என்று அவர் ஒரு முறை கற்றதும் பெற்றதுமில் அறிமுகப் படுத்திவிட்டு அதை அடிக்கடி உபயோகிக்கவும் செய்தார்.

மற்றவர்கள் எப்படியோ, சுஜாதாவின் புகழ் 15 நிமிடம் மட்டுமல்ல..

லேகா February 26, 2010 12:03 PM  

மறுக்க முடியாத ஆளுமை சுஜாதாவினுடையது!!
அவர் குறித்த நினைவுகளை முழுமையாய் மீட்டெடுக்க உதவியது உங்கள் பதிவு.

நன்றி நர்சிம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) February 26, 2010 2:16 PM  

நம்ம வாத்தியாரின் தாக்கம் இல்லாமல் இப்போது யாரும் எழுதுவதில்லை.

முன்னுரை, இடைவேளை, முடிவுரை அனைத்துமே வாத்தியாரின் பாடம்தான்..!

"உழவன்" "Uzhavan" February 26, 2010 3:19 PM  

சுஜாதா பற்றிய நினைவுப் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஜி

Vidhoosh February 26, 2010 4:09 PM  

சுஜாதா!

பேநா மூடி February 26, 2010 6:18 PM  

நல்ல நினைவு கூறல்

தேவன் மாயம் February 26, 2010 7:03 PM  

அவருடைய”ஹாஸ்டல் தினங்கள்” அருமையான நாவல்!!!

மாதேவி February 26, 2010 7:33 PM  

அறிவியல் கட்டுரைகளையும் மிக இலகுவான நடையில் தரக்கூடியவர்.

அக்பர் February 26, 2010 7:35 PM  

good post.

அறிவன்#11802717200764379909 February 26, 2010 9:37 PM  

நர்சிம்,
அசத்தலான நினைவு கூறல்...ஒவியம் அற்புதம்..எங்கு கிடைத்தது?

இரண்டை இரண்டு பின்ச்:

-உதவி இயக்குனர்கள் வைத்திருப்பது திரைக்கதை எழுதுவது எப்படி? தானே..சிறுகதை எழுதுவது எப்படின்னு புத்தகம் எழுதி இருக்கிறாரா என்ன?

அப்புறம் அவரது சிறுகதைகள் பற்றிய உங்கள் கருத்து..
அவரது படைப்புகளின் உச்சம் சிறுகதைகளும்,பத்திகளும்தான் என்பது பலரது (சரியான)கருத்து !

நர்சிம் February 27, 2010 10:27 AM  

நினைவைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி

@அறிவன்..ஆம் பாஸ் அது திரைக்கதை எழுதுவது எப்படி தான்..மாற்றிவிட்டேன். சுட்டியதற்கு நன்றி.

அனைவருக்கும் நன்றி..இன்று(27/02/10) மாலை 5:30க்கு பதிவர்கள் ஐகராஸ் பிரகாஷ் & உருப்படாதது நாராயணன் அமைப்பில் நடத்தும் நினைவு கூறல் நிகழ்வு மெரீனா கடற்கரை, காந்தி சிலை அருகில் நடைபெறுகிறது.

உட்லண்ட்ஸிலும் 6 மணிக்கு நிகழ்ச்சி இருக்கிறது.

Tech Shankar February 27, 2010 9:43 PM  

பகிர்வுக்கு நன்றி.

உங்கள் இந்த பதிவை
இங்கேஇணைத்துள்ளேன்.

நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்

Starjan ( ஸ்டார்ஜன் ) February 27, 2010 10:28 PM  

தொடர்பதிவு அழைத்ததுக்கு மிக்க நன்றி நர்சிம் சார்.

நீங்கள் அழைத்தது எனக்கு தெரியாது. இன்றுதான் அக்பர் சொல்லி அறிந்து கொண்டேன்.

எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடரை தொடர்கிறேன்.

ஸ்ரீராம். February 28, 2010 6:27 AM  

NICE POST.

அவருடைய வீச்சு அளவிட முடியாதது. மாறிவரும் தன் எண்ணங்களையும் தைரியமாக பதிவு செய்தவர்.

சுரேகா.. February 28, 2010 7:52 AM  

//முடிவே அற்றதுதான் எனினும் கச்சிதமான நினைவு கூறல்.!//

நினைத்ததை ஆதி கூறியிருப்பதால்....

முரளிகண்ணன் June 30, 2010 2:50 PM  

கிளாஸ்

nellai அண்ணாச்சி October 11, 2010 1:28 AM  

நல்ல மனுஷன்