மழை ஓய்வதாகத் தெரியவில்லை.
அவசரமாகக் கிளம்ப வேண்டி இருந்ததால் கிடைத்தப் பேருந்தில் ஏறிப் போய்க்கொண்டு இருக்கிறேன். ஜன்னல் விட்டுத் தள்ளி அமர்ந்தாலும் கம்பிகளில் முத்து முத்தாக நின்று வழியும் துளிகளும், அவ்வப்பொழுது அடிக்கும் சாரலும் உடையை ஈரமாக்கி இருந்தது. கசகசப்பாக உணர்ந்தேன். இதே மழையை இதே ஜன்னல் முத்துக்களை கைகளால் உருவிவிட்டு சந்தோஷமாக, சில்லென்று அடிக்கும் எதிர்காற்றை நோக்கி முகம் காட்டி எத்தனை முறை பயணித்திருப்பேன். ஆனால் இன்று மனம் லயிக்கவில்லை.
மாட்டுத்தாவணி வரும் முன்னரே பக்கவாட்டில் யானைமலைத் தெரிந்தது. அவசரமாக எழுந்து படிக்கட்டு பக்கத்தில் நின்று கொண்டேன். இரவுப்பயணமோ, உடைந்து போன இருக்கை அழுத்தமோ எதுவும் செய்துவிடவில்லை..
இறங்கியவனை வழிமறித்த ஆட்டோக்காரரிடம் போகவேண்டிய இடத்தைச் சொல்ல வாய் திறந்தேன். கடவாய்ப்பல் பிரதேசத்தில் சுரீரென்று வலித்தது. வார்த்தைகள் வரவில்லை. லேசாக வாடையடித்த வாயை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே போகவேண்டிய இடத்தை ஒரு வழியாக சொல்லிவிட்டு அமர்ந்தேன். அமரும் முன், ஆட்டோக்காரர் கையை வைத்து சீட்டில் தேங்கி இருந்த மழைத்தண்ணீரை ஒதுக்கி விட்டார்.
மாமாவைப் பிடிக்காமல் போயிருந்தாலும், ஆட்டோ தெருவை அடையும்பொழுதே துக்கம் பொங்கியது. ஆனால் அழுகை வரவில்லை.
“பந்தல் போட்டு இருக்குற வீட்டு முன்னாடி நிறுத்துங்க” என ஆட்டோக்காரரிடம் சன்னமாகச் சொல்லி, இறங்கிக் கொண்டேன்.
மழை நசநசவெனப் பெய்துகொண்டிருந்தது. கொட்டகைக் கூரையில் இருந்து சொட்டும் நீர் வெறுப்பாக இருந்தது. நிறையப் பேர், உட்கார்ந்தும் நின்றும் நடந்தும் என.
நடையில் மாமாவைக் கிடத்தி இருந்தார்கள். சேர்த்துக் கட்டி இருந்த கால்க் கட்டைவிரல்களைப் பார்த்துக்கொண்டே உள்ளே போனேன். மாமா இல்லை. அத்தை ஓய்ந்து அமர்ந்திருந்தாள்.
“மாமாவப் பார்த்தியாடா கிரி” என்று ஏதேதோ குரல்கள்.
வெளியே வந்து, தனியாக, எதிர்வீட்டுப் படியில் அமர்ந்து கொண்டேன். கம்பி கம்பியாக போடப்பட்ட, பூட்டியே இருக்கும் அந்த எதிர்வீட்டுப் படியில்தான் மாமா பேப்பர் படித்துக்கொண்டிருப்பார் எப்பொழுதும்.
இந்தப் படியில் ஏறிக் கம்பியைப் பிடித்து விளையாடும் பொழுது வந்துவிடுவார். ‘டேய் மூக்கொழுகி வா வா’ என எப்பொழுதும் மலர்ந்த முகத்தோடு அணைத்துக்கொள்வார். “இது என்னடா இப்பிடி போட்டு இருக்க” என, தவறாக மாட்டி இருக்கும் சட்டை பட்டனை சரி செய்து, தூக்கித் தோளில் அணைத்தபடி ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு முத்தம்.
எப்பொழுதெல்லாம் அப்பாவிடம் திட்டோ அடியோ வாங்கி அழுதாலும் கதாநாயகியைக் காப்பாற்றும் எம்ஜிஆர் மாதிரி எங்கிருந்துதான் வருவாரோ தெரியாது ஆனால் அதே மலர்ந்த முகத்துடன் வந்துவிடுவார்.
“யாருடாம்மா அடிச்சா?” எனக் கேட்டுக்கொண்டே உள்ளங்கையைக் கொண்டு கன்னத்தில் அப்பிக் கண்ணீரைத் துடைத்துவிடும் அந்தச் செயலினாலேயே நின்றிருந்த அழுகை மீண்டும் பொங்கிவிடும்.
“விடுடிச் செல்லம் நம்ம அப்பாதானே, நீ ஒழுங்கா ஸ்கூலுக்குப் போவியாம், நல்லாப் படிப்பியாம், அப்பாவுக்கு, அம்மாவுக்கு, மாமாவுக்கு எல்லாருக்கும் நிறைய வாங்கித் தருவியாம்.. சமத்து இல்ல?” எனச் சக்கரையையும் தேனும் கலந்து வரும் வார்த்தைகள். கரகரவென அழுகையும் விசும்பலும் ஏறி, பின் அமைதியாக, பேச்சு வார்த்தைக்கு வரவழைத்துவிடும்.
“பெரீவனானதும் என்ன மாமா வாங்கித்தரணும் எல்லாருக்கும்?”
“என்னடா கண்ணு வாங்கித்தருவ?”
“ஏரோப்ப்ளேனு, ஆனா அப்பாவுக்கு கெடயாது, உனக்கு ரெண்டு வாங்கிக் கொடுப்பேன்” எனும் போதே இறுக அணைத்து, நெற்றியில் முத்தமிடுவார்.
மாமா வீட்டிற்குள் நுழையும்பொழுதே எங்கிருந்தாலும் தெரிந்துவிடும். சரக் சரக் என கால்கள் தரையில் சத்தம் எழுப்பியபடிதான் நடப்பார். ஆனால் ரோட்டில் நடக்கும்பொழுது சாதாரணமாகத்தான் இருக்கும். யார் வீட்டிற்குள்ளாவது நுழையும்பொழுது மட்டும் அப்படித்தான். உள்ளே நுழையும்பொழுதே ஆவணிமூலவீதிக் கோனார் கடைச் சந்தனமும் ஜவ்வாதும் மணக்கும். குட்டிக்குரா பவுடர் மட்டும்தான் உபயோகிப்பார். “மத்தது எல்லாம் கழுத விட்ட” எனக் கேலி செய்வார்.
“கிரி, எட்டாப்பாடா படிக்கிற? மூக்கொழிகிட்டு இருந்த பய” என நுனி மூக்கை ஆள்காட்டிவிரலையும் நடுவிரலையும் மடக்கிப் பிடித்தவாறு ஆட்டுவார். அப்படியே தோளில் கைபோட்டு டவுனுக்குக் கூட்டிப்போய்விடுவார்.
கிளம்பும் முன் வாசலில் இருந்தே பொத்தாம் பொதுவாக ஒரு சவுண்டு விடுவார். “கிரிப்பயல டவுனுக்கு கூட்டிட்டுப் போறேன்” அவ்வளவுதான்.
மெதுவாக நடந்து பஸ் ஸ்டாண்ட் வந்ததும் யாரைப்பார்த்தாலும் வணக்கம் சொல்வார். யார் இவரைப்பார்த்தாலும் வணக்கம் சொல்வார்கள். ஒவ்வொரு வணக்கத்தின்போதும் கிரியைப் பார்த்து லேசாகத் தலையை ஆட்டிக்கொள்வார்.
“பெரியார் பஸ் ஸ்டாண்ட்டிற்குப் போக வேண்டும் என்றால் பத்தா நம்பர் வந்தே தொலையாது” எனப் புலம்பிகொண்டே டீ சாப்டிருயாடா என்பார். வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டும். சின்னப் பையன்கள், கடையில் டீக் குடிக்கக் கூடாது என்பார். அவர் ஒரு டீயைச் சொல்லி, அவன் போடும் முன்னரே பஸ் வந்துவிடும். பாதி குடித்துவிட்டு, “சில்லர வாரப்ப தர்றேனப்பா” என, கையைப் பிடித்து பஸ்ஸில் ஏறி, பின்னால் இருக்கும் பெரிய சீட்டில் படியை ஒட்டி என்னை அமரச் செய்து பக்கத்தில் அமர்ந்து கையை கைப்பிடியில் ஊன்றிக்கொண்டு வேடிக்கப் பார்க்கதுவங்கி விடுவார். பஸ் வேகம் எடுக்க எடுக்க, குட்டிக்குராப் பவுடரும் சந்தனமும் கலந்த மாமா வாசனை காற்றில் மிதக்கும்.
“இதாண்டா டவுன்ஹால் ரோடு” தோள்மேல் கையைப் போட்டுக்கொண்டு மெதுவாக நடப்பார். ரோட்டை அடைத்துக்கொண்டு இரண்டு பக்கமும் சைக்கிள் கேரியரில் உள்ளாடை வியாபாரம், விளையாட்டுச் சாமான், சோப்புக்குமிழ் என ஜனக்கடலாக இருக்கும். ஊர்ந்து கூட்டிப்போவார்.
“நால் நால்ல்ண்ணாணாணா” எனக் காது கிழியக் கத்துபவனைப் பார்த்து, “இவந்தாண்டா நால்ணா பிச்சக்காரன். லட்ச ரூவா கொடுத்தாலும் வாங்க மாட்டான். நாலணா மட்டும்தான் வாங்குவாரு துரெ” என்றவாரே ஜூஸ்கடை நோக்கி நகர்வார்.
“இது என்னடா ஒரு கருமம்னு இதப்போயிக் குடிக்கிற, அழுகுன பழத்தப் போட்டு மிதிச்சுக் குடுப்பாய்ங்கடா” எனத் திட்டிக்கொண்டே ‘மிக்சர் ஜூஸ்’ வாங்கிக் கொடுப்பார். டவுன்ஹால் ரோட்டின் ஆரம்பத்தில் இரண்டு கடைகள் அடுத்தடுத்து இருக்கும். என்றாலும் இந்தக் கடையில்தான் எல்லோருமே வாங்குவார்கள். அடுத்த கடைக்காரன் பார்த்துக்கொண்டே இருப்பான்.
கிளாஸ் முழுதும் சிகப்புக் கலரில், ஆங்காங்கே கருப்புத் திராட்சை, வாழைப்பழத் துண்டு, மேலாக்க ஐஸ்கிரீம் என வழிய வழியத் தரப்படும் மிக்ஸர் ஜூஸுக்காகத்தான் மாமாவோடு டவுனுக்கு வருவதே. வாயைத் துடைத்துக்கொண்டே அதைக் குடிக்கும் பொழுதே, “மாமா ஒரு நிமிசத்துல வந்துருவேன், இங்கணயே நிக்கணும்டா கண்ணா” என்று சொல்லிக் கடைக்காரரிடம் சைகை செய்துவிட்டு ஒரிரு நிமிடம் மறைந்து, வாயைத் துடைத்துக் கொண்டே வருவார். சந்தனம், அத்தர், குட்டிக்குராவோடு இன்னும் ஒரு வாடையும் சேர்ந்து கிறக்கும்.
நேராகக் கோபுரம் நோக்கி நடை. சைக்கிள், ரிக்ஷா, ரிக்ஷாவில் தலையில் கை வைத்தபடி வெள்ளைக்காரர் (திரும்பத் திரும்ப அதே தெரு!) அவரிடம் “திஸ் ஈஸ்..” என ஏதோ சொல்லிக்கொண்டே போகும் ரிக்ஷாவாலா. கையில் மஞ்சள் பை, ஆதம்ஸ் பாலிதீன் பேக், ‘ஆய்ர ரூவாக்கு மேல வாங்குனோம்ல அதான் கட்டப்பை’ எனப் பேச்சுகளினூடே புகுந்து அழைத்துச் சென்று அவர் நிற்கும் இடம் நாகப்பட்ணம் அல்வாக் கடை.
“வாங்க! வாங்க! மருமகனா?”
“ஆமா இவருக்காகத்தான் ஒத்தப் பொண்ணப் பெத்து வச்சுருக்கேன்” என்பார் கன்னதைக் கிள்ளிக்கொண்டே.
“கிரி கண்ணு, மாமா சாப்புடுறேன், நீ அல்வா மட்டும் சாப்புடு சரியா, காரம் தாங்காது உனக்கு”
அவ்வளவுதான். உதடுகள் தானாக விம்மி, அழுகையும் வராது, பொறுக்கவும் பொறுக்காது. முகம் அஷ்ட கோணலாகிக்கொள்ளும்.
லேசான கோவத்துடன், “சர்ராப்பா, சாப்பிடு, இவனுக்கு 100 கொடுங்க”
தாமரை இலையில் சுடச்சுட உருளைக்கிழங்கு மசாலா. வாயில் வைத்ததும் சுர்ர்ரென்று வயிற்றில் இறங்கி கண் வழியாக நீர் வெளியேறிவிடும். வாயை பெரிதாகப் பிளந்து காற்றை உள் இழுத்து, நாக்கை நீட்டி, ஸ்ஸ் என என்ன செய்தாலும் காரம் குறையாது.
“சொன்னாக் கேட்கணும், என்னடா கிரி, ஹும்!” என, தான் சாப்பிடுவதைப் பாதியில் நிறுத்திவிட்டு, தண்ணீர் கொடுத்துத் தலையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் - சரிசெய்துவிடுவார். அவர் வேட்டியின் நுனியைக் கொஞ்சமாக எடுத்து நாக்கில் துடைத்துக் கொண்டால் காரம் தேவலாம் போல இருக்கும்.
“இதுக்கே இப்பிடி இன்னும் கோபியங்கார் கடக் காரச் சட்னியச் சாப்ட்டா அவ்வளவுதாண்டா நீ” பேசிக்கொண்டே மீண்டும் அதே வழியில் நடை. “கோயிலுக்குப் போவலயா மாமா?” என்றால், “அதல்லாம் தீர்த்தமே குடிச்சாச்சே?” எனச் சொல்லிச் சிரிப்பார். புரியாமல் அவர் கூடவே நடந்து, கையப் பிடித்து கிராஸ் செய்யும் பொழுது அவ்வளவு கெட்டியாகப் பிடிப்பார்.
“கிரி”
“சொல்லு மாமா”
“நல்லாப் படிக்கணும்டா, பெரிய ஆபிஸராகணும்டா, மாமா பேரக் காப்பாத்தணும்”
பதில் சொல்ல விடமாட்டார். தலையில் கை வைத்துக் கோதிக்கொண்டே நடப்பார்.
பஸ் விட்டு இறங்கியதும் “மாமா டீக்கு காசு குடுக்கணுமே” என்று சொல்லி, நல்ல பேர் வாங்க வேண்டும் என மனம் துடியாய்த் துடிக்கும். ஆனால் அதற்கு இடம் தராமல், இறங்கும் முன்னரே கையில் சில்லரையை உருட்டிக்கொண்டே டீக்குத் தரணும்டா” என்பார்.
வீடு வரை வந்து, வாசலியே நின்றுகொண்டு உள்ளே போகச் சொல்லிவிட்டு எட்டிப் பார்ப்பார். ஹாலுக்குப் போய் திருப்பிப் பார்த்ததும் கையை அசைத்து மலர்ந்து சிரித்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுவார்.
பத்தாவதோ பதினொன்னாவது படிக்கும்பொழுது என்று நினைவு. டவுனுக்குப் போய்விட்டு, எப்பொழுதும் போல் உருளைக்கிழங்கி சாப்பிட்டுவிட்டு, எப்பொழுதும் போலத் திரும்பி வராமல், வடக்குமாசி வீதிச் சந்தில் கூட்டிப் போனார். பட்டியக்கல் போட்ட குறுகலான சந்தின் மூலையில் இருந்த வீட்டிற்குள் சத்தமே இல்லாமல் நுழைந்தார். தயங்கிய என்னை, “வாடா நம்ம வீடுதாண்டா” என இழுத்துப்போய் அமரவைத்தார்.
மடக்கு சோஃபாவின் முனையில் அமர்ந்து மாமாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சோஃபாவின் ஓரங்களில் எல்லாம் எண்ணெய் பிசுக்கு அப்பி அழுக்காக இருந்தது. நேராகச் சமையல்கட்டுப் போல இருந்த இடத்திற்குப் போய் ஏதோ சொன்னார். அங்கே இருந்து ஒரு பெண் பேச்சுக்குரல் கேட்டது. கொஞ்ச நேரத்தில் அவரே காபி எடுத்து வந்தார். டி.வி.யைப் போட்டார். உள்ளேப் போய் ஏதோ சொல்லிவிட்டு வந்தார். ஹாலில் பழைய கறுப்பு வெள்ளைப் படத்தில் ஒரு பெண் ஒற்றை ஜடையை முன்னால் விட்டு நின்றிருந்தார். அம்புலிமாமா கதை ஓவியங்களில் வரும் உருண்டை முகம். முகத்துக்குச் சற்றே பெரிய மூக்கு. ஜூபிடர் ஸ்டுடியோ ஸ்டிக்கர். மாமாவின் வீட்டில் இருக்கும் எல்லாப் போட்டோக்களிலுமே ஜூபிடர் ஸ்டுடியோ ஸ்டிக்கர்தான் இருக்கும்.
திடீரெனப் பெருங்குரல் எடுத்து அழும் சத்தம் கேட்டுக் கலைந்து, எட்டிப் பார்த்தேன். மாமாவைத் தூக்கி நாற்காலியில் அமர்த்திக்கொண்டு இருந்தார்கள். வரிசைக் கிரமப் படி குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டினார்கள்.
குளித்ததுபோல் ஆகிவிட்டது, அந்த வீட்டைவிட்டு வெளிப்பட்ட போது வேர்வை. “யார் மாமா அந்த அக்கா? யார் வீடு மாமா?”
தலையைப் பிடித்துச் செல்லமாக ஒரு ஆட்டு ஆட்டி, லேசாகச் சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் விட்டுவிட்டார். ஏதோ ஒன்று புரிந்தும் புரியாமலும் இருந்தது. அதற்கப்புறம் அவர் டவுனுக்கு அழைத்தபொழுதெல்லாம் படிப்பு, டியூசன் எனக் காரணம் சொல்லித் தவிர்த்துவிடுவதை வழக்கமாகக் கொண்டேன்.
அதன் பிறகு மாமாவோடு பேசுவதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டேன். பண்ணிரண்டாவது பாஸ் செய்து கல்லூரியில் சேர்ந்ததும் அவராகவே தேடி வந்துவிட்டார். சில்க் சட்டை, அத்தரையும் மீறி ஒரு எண்ணெய் பிசுபிசுப்பும்.
“பிஸிக்ஸ் கஷ்டமே மாப்ள, அதப்போய் ஏன் எடுத்த? லிட்ரேச்சர் ஹிட்ரேச்சர் எடுக்க வேண்டியதுதானே?”
அந்தக் காலத்துப் பி. யு. சி. என்ற பழங்கதை எல்லாம் பேச மாட்டார். அப்டுடேட்டாக இருப்பார். “சும்மா இயக்க ஆற்றல் முடுக்கு ஆற்றல்னு திரியாம, நிறைய படிக்கணும் மாப்ள. புயலிலே ஒரு தோணின்னு ஒரு புக்கு இருக்கு, அத்த கிட்ட சொல்லி என் செல்ஃப்ல இருந்து எடுத்துக்க. படிக்கணும்டா அதெல்லாம்.”
சரி என்கிறேனா இல்லையா எதுவும் பார்க்கமாட்டார். “காலேஜ் போனமா வந்தமான்னு இருக்கணும்டா கிரி, சகவாசம்தான் முக்கியம். ஸ்ட்ரைக் அது இதுன்னு எவனாது சொன்னா, சல்லுனு வீட்டுக்கு வந்துரணும், சரியா?”
எல்லாவற்றிற்கும் ‘ம்’ கொட்டிவிட்டு, டவுனுக்குப் போகவேண்டி இருப்பதாகச் சொல்லிக் கிளம்ப முயன்றேன்.
“வரும்போது கோனார்கடைல வாசனைப் பொடியும் அத்தரும் வாங்கியாடா. தீர்ந்துபோச்சு. அடுத்தவாரம்தான் டவுனுக்கு போகணும்”
அழுகுரல் கேட்டுக் கலைந்தேன். மீண்டும் அதே இடத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். புதிய வெள்ளைக் காடாத்துணியால் கட்டப்பட்டிருந்தார்.
வெளியே மூங்கில்களைச் சீய்த்து ஏணிப்படி போல மும்முரமாகக் கட்டிக்கொண்டு இருந்தான் ஒருவன்.
மழையின் நசநசப்பில் மண் எல்லாம் சகதியாக மாறிக்கொண்டிருந்தது. வாடைக்காற்று சாக்கடை வாடையைக் கிளப்பிக்கொண்டு வந்தது. எனக்கு வயிறு வலிப்பது போல இருந்தது.
“வாடா மூக்கொழுகி மாப்ள, மெட்ராஸ் எப்பிடிடா இருக்கு? வா வா.. உக்காரு.”
“நீங்க உட்காருங்க மாமா, மெட்ராஸுக்கென்ன சூப்பரா இருக்கு. நீங்க என்ன இப்பிடி எளச்சுப் போய்ட்டீங்க?” அவரிடம் இருந்து வந்த வேர்வை நெடி நாசியைத் துளைத்தது. குட்டிகுரா டப்பாக்களை கயிற்றில் கட்டித் தரதரவென இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான் முத்து.
”வயசாகிப் போச்சா இல்லியா? நீ எப்ட்றா இருக்க?
“நல்லா இருக்கேன் மாமா, ஊர்ல வேற என்ன விசேசம்?”
“போகுது மாப்ள. நீதான் பெரியாம்பள ஆகிட்ட.” சொல்லிக்கொண்டே தொடையில் ஒரு அடி. “இன்னும் லோக்கலாவே இருக்காத மாப்ள, எலீ வீஸல்லாம் படிக்கிறயா?” கேட்டவரிடம் அப்பப்ப படிக்கிறேன் மாமா என சாமாளிக்க வேண்டியதாகிவிட்டது.
“நிறுத்தாத”
“சரி கிளம்புறேன், பயலுகளோட டவுனுக்குப் போறேன்”
உள்ளங்கையை குழியாக வைத்து ஐந்துவிரலையும் லேசாக விரித்து சைகைக் காட்டி,. “வரும்போது..”
இடைமறித்தேன். “நாகப்பட்ணம் உருளக்கிழங்கு தான? வாங்கிட்டு வர்ரேன் மாமா.”
“ஆமாடா, அப்பிடியே இந்த ரூவாய...” என, சத்தம் கம்மிய குரலில், “வடக்குமாசி வீதில அந்த இடத்துல போயி...” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, காதில் விழாதது போல, விருட்டென்று கிளம்பிவிட்டேன். அதுதான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. உருளைக்கிழங்கும் வாங்கித் தரவில்லை.
“கிரி வாடா.. அரிசியப் போடு..”
எழுந்து அருகில் போனேன். தொண்டை கிழிய அத்தை கத்தியதைக் கேட்டு உலுக்கிப் போட்டது. வீம்புக்கு எனக்குள் ஒளிந்துகொண்டிருந்த அழுகை வெடித்தது. என்னைத் தாங்கிப் பிடித்த கைகளுக்கு உரிய முகத்தைக் கண்ணீர் மங்கலாகப் பார்த்தேன். அப்பா.
அம்புலிமாமா கதை ஓவியங்களில் வரும் உருண்டை முகம். முகத்துக்குச் சற்றே பெரிய மூக்கு.
மாமாவிடம் இருந்து வந்த அத்தர் வாசனை என் நாசிக்குள் ஏறிக்கொண்டிருந்தது.
காரியம் முடிந்ததும் வடக்குமாசி வீதிக்குப் போய் நிலைமை அறிய வேண்டுமோ? மழை ஓய்வதாகத் தெரியவில்லை.
**
அகறல்!?
Posted by
நர்சிம்
Friday, September 17, 2010
Labels: சிறுகதை
35 comments:
//தாமரை இலையில் சுடச்சுட உருளைக்கிழங்கு மசாலா. வாயில் வைத்ததும் சுர்ர்ரென்று வயிற்றில் இறங்கி கண் வழியாக நீர் வெளியேறிவிடும். வாயை பெரிதாகப் பிளந்து காற்றை உள் இழுத்து, நாக்கை நீட்டி, ஸ்ஸ் என என்ன செய்தாலும் காரம் குறையாது. //
அனுபவிச்சு எழுதினீங்களா
மதுரை வீதிகளைப் பற்றிய விவரணைகள் எல்லாம் அருமை. கதை மிகவும் நன்றாக இருந்தது!
கோபி ஐயங்கார் கடை இன்னமும் இருக்கிறது! ஆனால், அந்தப் பக்கம் வாயில் பட்டதும் காரம் சுள்ளென்று இந்தப் பக்கம் அடைத்துக் கொள்ளும் காரச் சட்னி தான் இப்போது இல்லை!
முடிவு கொஞ்சம் உலுக்குகிறது....
super-))
உயரத்தான் பறக்கிறது.:)
கொஞ்சம் சுஜாதாவின் "எல் டொராடோ" சிறுகதையின் சாயல் தெரிந்தாலும் நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள் !!!
சில சமயம், ரொம்ப நெருங்கிய பெரிய மனிதருடன் சில நெருடல் தென்படும்போது மனம் துடித்து விலகும் இள வயதில்.....அந்த செயலை நாம் செய்யும்வரை :)
கதையாக இல்லாமல் விவரணையாக நல்லா இருக்குண்ணா..
:)
அண்ணே அருமையா இருக்கு..
//மாட்டுத்தாவணி
பெரியார்
நாகப்பட்டினம் கடை
டவுன் ஹால் ரோடு
வடக்கு மாசி வீதி
ஆவணி மூல வீதி//
நம்ம மதுரையோட ஒவ்வொரு இடத்துக்கும் கை பிடிச்சி கூட்டிட்டுப் போறீங்க அண்ணே..
சூப்பர்!
நல்லாருக்கு...
கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது நர்சிம்.
உங்களுடைய கதைகளில் குறையாக (எனக்கு) தெரிந்த சில சொல்லாடல்கள், விவரணைகள் இந்த கதையில் இல்லாததும் கதையோடு ஒன்றிப் போக வைத்தது.
BTW, தலைப்புக்கு என்ன அர்த்தம் பாஸ்?
//மாமா வீட்டிற்குள் நுழையும்பொழுதே எங்கிருந்தாலும் தெரிந்துவிடும். சரக் சரக் என கால்கள் தரையில் சத்தம் எழுப்பியபடிதான் நடப்பார். ஆனால் ரோட்டில் நடக்கும்பொழுது சாதாரணமாகத்தான் இருக்கும். யார் வீட்டிற்குள்ளாவது நுழையும்பொழுது மட்டும் அப்படி//
//பட்டியக்கல் போட்ட குறுகலான சந்தின் மூலையில் இருந்த வீட்டிற்குள் சத்தமே இல்லாமல் நுழைந்தார். தயங்கிய என்னை, “வாடா நம்ம வீடுதாண்டா” என இழுத்துப்போய் அமரவைத்தார்//
‘மாமா’ குணவார்ப்பில் என்னைக் கவர்ந்த நுணுக்கம் இது. உள்ளிருப்பவர்கள் ஏடாகூடமாக இருக்கக் கூடும் என்று பிறர்வீட்டில் சரக் சரக் அறிக்கையோடு நுழைதல் பகலிலும் ஏடாகூடமாக இருந்து பழக்கப்பட்டவர்களுக்கே உரியது.
//அங்கே இருந்து ஒரு பெண் பேச்சுக்குரல் கேட்டது.// //ஹாலில் பழைய கறுப்பு வெள்ளைப் படத்தில் ஒரு பெண் ஒற்றை ஜடையை முன்னால் விட்டு நின்றிருந்தார்.// //“யார் மாமா அந்த அக்கா? யார் வீடு மாமா?”//
அந்தப் பெண்ணோ முகம் காட்டவில்லை. அவளுடைய குரலும் கறுப்பு வெள்ளைப் படமும்தான் கதைக்குள் வருகிறது. அப்பாவின் முகவெட்டு ஒப்பீடு வருகிறது. அவ்வளவுதான். அது அக்காவா? அத்தையா? ஏடாகூடம் பண்ணியது அப்பாவா? அப்பாவுக்கு அப்பாவா? இந்த மருமத்தை மிகமிக ரசித்தேன்.
//”காரம் தாங்காது உனக்கு”// x //“அதல்லாம் தீர்த்தமே குடிச்சாச்சே?”// இப்படிப் பல முரண்களால் கதைசொல்லி x அவனுடைய மாமா இவர்களின் குணவார்ப்புகள் கட்டப்பட்டு இருப்பதையும் வாசித்து வியந்தேன். பாராட்டுகிறேன்.
//பாலா அறம்வளர்த்தான் said...
BTW, தலைப்புக்கு என்ன அர்த்தம் பாஸ்?//
என் கையில் உள்ள அகரமுதலியில் இவ்வாறு உள்ளது:
அகறல் - நீங்குதல், பிரிதல்
ஒரு ஓட்டு தான் போட்டேன். இப்ப என்ன ஆச்சு பார்த்தீங்களா ?
சகா அருமை படிக்கும் பொழுதே புல்லரிக்கிறது!!
Good one.
சில சமயம், ரொம்ப நெருங்கிய பெரிய மனிதருடன் சில நெருடல் தென்படும்போது மனம் துடித்து விலகும் இள வயதில்.....அந்த செயலை நாம் செய்யும்வரை :) //
அட்டகாசமான கதைக்கு அதைவிட அட்டகாசமான பின்னூட்டம் mixed fruit juice என்னுடைய favourite உங்களுக்குமா?
A Gem of a Story Narsim..
நெடுநாளைக்கு இந்தப் பதிவு நினைவில் இருக்கும்.
//ஜூபிடர் ஸ்டுடியோ ஸ்டிக்கர். மாமாவின் வீட்டில் இருக்கும் எல்லாப் போட்டோக்களிலுமே ஜூபிடர் ஸ்டுடியோ ஸ்டிக்கர்தான் இருக்கும். //
எப்பா, எப்படித்தான் இதை எல்லாம் கவனிச்சு, சரியான இடத்துல போடுறீங்களோ? ஆச்சர்யப்பட்டு போனேன்
வழக்கம்போல அருமை..
நர்சிம்..
ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருக்கு..
எழுத்துக்களை திரையில கொண்டு வந்திடிச்சு உங்க எழுத்து நடை.
அதுவும் கடைசில..
மாமா மூக்கை பிடிக்கிறது மாதிரி என் அம்மா செய்வாங்க :))
அருமையான புனைவு., மதுரை நகரின் சின்னஞ்சிறு விஷய-
ங்களை நுணுக்கமாக அனுபவித்து வெளிப்படுத்தியுள்ளீர்க-
ள்.. மாமா வின் சித்திரம் வெகுநாள் நினைவில் நிற்கும்,
திரைப்படம் பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி-
விட்டீர்கள்,, வாழ்த்துக்கள்,,
நண்பேண்டா...
மதுரைக்காரர்களால் மட்டுமே கதையோடு
ஒன்ற் முடியும்.அருமை.
நன்றி.நர்சிம்
Excellent
super!
ரெண்டு நாளைக்கு முன்பே படிச்சுட்டேன் நர்சிம்.. திரும்பவும் படிச்சேன் இப்போ.. Good One!
//Balaji saravana said...
ஒவ்வொரு இடத்துக்கும் கை பிடிச்சி கூட்டிட்டுப் போறீங்க அண்ணே//
ரிப்பீட்டிக்கறேன்!!! :)
அருமையான கதை நண்பரே...
கிரேட்.
ஆனா அகறல்னா என்ன?
நர்சிம்,
கதையின் மூலம் மதுரை நகரின் வீதிகளையும் மாமாவையும் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.
குறிப்பா நேதாஜி ரோட்ல இருக்கிற இரண்டு ஜூஸ் கடை...அதில் எப்போதும்
ஒரு கடையில் மட்டும் கூட்டம்...
மொத்தத்தில் அகறல் எங்களை விட்டு அகறா....
ஏற்கனவே படித்துவிட்டேன். பின்னூட்டமிட தாமதமாகிவிட்டது.
சற்றே பெரிய சிறுகதைதான். துவங்கியதும் அளவைக் கருத்தில் கொள்ளவிடாமல் சட்டென உள்ளே இழுத்துச்சென்றுவிட்டீர்கள்.
நடப்புக்கும், பிளாஷ்பேக்குக்கும் ட்ரான்ஸிஷன் அவ்வளவு அழகாய் இடைஞ்சலில்லாமல் பொருத்தமான இடங்களில் செய்திருக்கிறீர்கள்.
தேவையான இடங்களில் உங்கள் பலமான வர்ணனை பொருந்தியிருக்கிறது. இறுதியில் பெருமூச்சொன்றை விடத் தயாரானால் அங்கும் ஒரு ட்விஸ்டை வைத்து சுவாரசியப் படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் சமீபத்திய கதைகளில் இதைச் சிறப்பானதாகச் சொல்வேன்.
(சென்ற கதை போல அனேக மறைபொருட்கள் இல்லாதிருந்தது ஒரு பெரும் ஆறுதல். இன்னும் கொஞ்சம் எடிட் செய்து பார்க்கலாம்.)
சொல்ல மறந்துட்டேன். அகறல் தலைப்பு அழகு. எனக்கு இது புதிய சொல்.
nallaayirukku....!
vazhthukal nursim sir!
Post a Comment