காமக் கடுங்கொலைகள்

மீண்டும் மீண்டும் ஒரே விதமான செய்திகள். கொலை, படுகொலை, நிதானமாக திட்டமிட்டுக் கொலை என நாளிதழ் பக்கங்கள் முழுதும் கொலைகள். பெரும்பான்மைக் காரணம் காமம். காதல் எனப் பெயரிடலாம். காதலில் கள்ளம், பொருந்தா போன்றவைகளில் நம்பிக்கை இல்லை. ரோஜா ரோஜாதான். காதலும்.

கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் இந்தக் கவிதையின் காரணம் என்னவாக இருக்கும்? கவிதையின் தலைப்பே ‘காரணம்’.


உன் சும்மா அழகையே
கண்ணால் தாண்டுதல்
அரிய காரியம்

மணக்கோலத்தில் நீ என்றானால்…

வெயிலும் காய்கிறேன் பேர்வழிஎன்று அன்று
எதிர் மிளிர்ந்து கொண்டிருந்தது
உன் பொலிவைத்தான் போலும்.

என் உள்வெடிச் சிதறல், அச் சூழலில்
ஒவ்வாத காட்சி என்றாகி
விழிச்சுவை அவரோகணிக்கவும் கூடும்.
இன்னொரு ஆள் கையில் உன்கை
என்பதற்காக அல்ல
உன் மணவிழாக் காண
நான் வராமல் தவிர்ந்தது.

காதல்?.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னோடுதான், நீ மட்டும்தான் என்ற வரிகளைத் தாண்டி வந்துவிட்டோமா என்றால் பின்வாசல் வழியாக அந்த வரிகளைத் தாண்டி விட்டோம். இன்னும் ஏட்டில், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ கலாச்சார சிகாமணிகள்தான் நாம்.

எப்பொழுது எப்படி எவர்மீது எதற்காக வருகிறது என்பது மட்டும் தெரிந்து விட்டால் அதன் பிறகு ஒரு திரைப்படம் கூட வெற்றி பெறாது என்றே தோன்றுகிறது, காதல் என்ற வார்த்தையின் மீதான ஈர்ப்பும் குறைந்துவிடும் மேற்ச் சொன்ன மர்மம் அவிழ்ந்துவிட்டால்.

காமத்தின் ஆரம்பமே காதல் என நம்மால் தைரியமாகச் சொல்லமுடியுமா? உண்மையைச் சொல்ல தைரியம் தேவைப்படுகிறது.

காமம்?

காதலின் அடுத்த பரிணாமமோ பரிமாணமோ முடிவது காமத்தில்தானே? இல்லை என்று விவாதங்கள் புரியலாம், யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டு, எப்பொழுதும் போல.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடிப் பொழுதுகளில் குழுக்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். குழுக்கள் என்பது எல்லாவற்றிலும். யார் தன்னைப் புணரலாம் என்பதைப் பெண்ணே தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறார். எவரோடு கூடலாம் என்பதை வேட்டையாடும் திறன் போன்றவற்றை கொண்டு தீர்மானித்திருக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குழுக்களில் இருந்து கூடுக்கு மாறி, குடும்ப அமைப்பிற்கு வந்து ஒருவனுக்கு ஒருத்தியில் முடிந்திருக்கிறோம்.

ஆனாலும் எந்த நாளிதழை எடுத்தாலும் பத்தி பத்தியாக காமம் தொடர்பான கொலைகளைப் பார்க்க நேரிடுகிறது. ’காமம் கைமிகின் தாங்குதல் எளிதோ’ என நற்றிணை கோடு காட்டிப் போயிருக்கிறது. கொலை அளவு போகும் என நற்றிணை நினைத்திருக்க வாய்ப்பில்லை.

’மலரினும் மெல்லிது காமம்’ எனக் குறள் படித்த கொஞ்ச நேரத்திலேயே கண்ணில் தட்டுப்படுகிறது ’சிறுகோட்டுப் பெரும்பழம், உயிர்தவச் சிறுது இவள் காமமோ பெரிதே’ என. குறுந்தொகை முழுதும் காமம் விரவித்தான் கிடக்கிறது.

பழங்கால இலக்கியம் எதிலும் தலைவன் தலைவியிடம் நேர்மையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது போன்ற செய்யுள்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கற்புக்கரசியே, கணவன்மீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்டது பொறுக்காமல்தான் முலை திருகி மதுரை எரித்தார்.

முட்டுவேன்கொல் என முணகும் பெண்ணின் வேதனையையும் பதிந்தே இருக்கிறது தமிழ்.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்று இப்
பொழுது இடைதெரியின் பொய்யே காமம்

எனத் தலைவன் காமத்திற்கேது காலம் என்ற வார்த்தைகளில் இருக்கும் காலமயக்கம் புலனாகிறது.

அரிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே, இனியே
வான் பூங்கரும்பின் ஓங்கு மணற் சிறுசிறை
தீப்புனல் நெரிதா வீந்து உக்கா அங்கு
தாங்கும் அளவைத் தாங்கி
காமம் நெரிதரக் கைந் நில்லாதே

என்ற வெள்ளி வீதியாரின் பாடல், நீண்டகாலமாக நாணம் தடுத்து வருத்துவதையும், கரும்பை ஆற்றுநீர் அடித்துச் செல்வது போல அந்த நாணத்தை காமம் அடித்துச் செல்லப் போவதாக தலைவியின் முணகலாகச் செல்கிறது.



காதலைத் தூய்மையாக்கி காமத்தைத் தும்பைப் பூவாக்கி பேசு பொருளாக ஆக்கவிடாமல் கட்டம் கட்டிக் கட்டுப்படித்திவிட்டோம்.

கலாச்சாரம், மதங்கள் என பெயர்களிட்டு பூட்டுப்போட்டதன் விளைவுகள்தான் தினத்தந்தி மூன்றாம் பக்கக் கொலைகள்.

காமத்தின் வெளிப்பாடுகள் குறித்த சட்டங்கள் இறுக இறுக, வெளிப்படும் விதம் வெகு கோரமாகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு மொட்டு எப்பொழுது இதழ் விரிக்க வேண்டும் என கட்டளை இட முடியுமா? இரவு முழுக்க அருகில் அமர்ந்திருந்தாலும் மொட்டு மலரும் தருணம் தெரிவதில்லை. ஒருவர் மீது மற்றவருக்கு தோன்றும் காதலும்(காமமும்) அதுவேதான்.

காமம் பேசு பொருளாகட்டும். பள்ளிகளில் முறைப்படி பாடங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். தவிர, வேறு எதற்கும் பரிந்து பேச முற்படவில்லை.

உயிர்களேதுமற்ற பெருவெளியில் எவருடய கலாச்சாரம் காக்கப் போகிறோம். நிலை நீடித்தால் புணரும் பொழுது ஒரு கையில் கத்தி பிடிக்கும் காலம் வரக்கூடும்.

சரி.. இப்பொழுது என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற கேள்வி எழலாம் இப்பத்தியைப் படிக்கும் பொழுது. குழப்பம்தான். சற்றே இக்குழப்பத்தில் இருந்து தெளிய பள்ளிகளில் இது குறித்தான விழிப்புணர்வும் கல்வியும் அவசியம் என்று தோன்றியது.

பள்ளிகளில் இது குறித்த பாடங்கள் ஒன்றே அடுத்த தலைமுறை மீதான அக்கறை. இதனால் கலாச்சாரம் அழிந்து விடாது. உலகின் முதல் மிகப்பெரிய தொழில் எதுவென்று தெரிந்து வைத்திருக்கும், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாழ்ந்து வரும் குடி ஒன்றும் மூழ்கி விடாது.

33 comments:

Mahesh October 13, 2010 at 11:41 AM  

//பள்ளிகளில் இது குறித்த பாடங்கள் ஒன்றே அடுத்த தலைமுறை மீதான அக்கறை. இதனால் கலாச்சாரம் அழிந்து விடாது. //

வழிமொழிகிறேன்....

bogan October 13, 2010 at 12:54 PM  

நெடுங்காலமாய் இந்த விஷயம் பள்ளிக் கூடங்களில் சொல்ல்லித் தரப்படவேண்டும் என்ற விவாதத்தைக் கேட்டுவருகிறேன்.அப்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது பள்ளியில் உடற்கூறியல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம்.ஆனால் காமத்தையும் காதலையும் எப்படி விளக்குவது.அவ்வளவு எளிதில் கைக்குள் அகப்பட்டுவிடும் பறவை அல்ல அது.நம்முடன் ஒப்பிடுகையில் மேற்கத்திய நாடுகளில் பாலியல் கல்வி இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அவர்களும் இதையெல்லாம் கடந்து வந்துவிட்டதாக தெரியவில்லையே
.அங்கும் அடல்டரி இருக்கவே செய்கிறது.

நர்சிம் October 13, 2010 at 12:57 PM  

நன்றி மகேஷ்.

நன்றி Bogan.அந்த விவாதத்திற்காகவே இப்பதிவு.

நர்சிம் October 13, 2010 at 1:02 PM  

//பள்ளியில் உடற்கூறியல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம்.//

இதில்தானே தொடங்குகிறது அது. உடற்கூறுகள் குறித்த பாடங்களே ஓரளவு தெளிவைத் தரும் என்பதாக நம்புகிறேன்.

அன்புடன்-மணிகண்டன் October 13, 2010 at 1:05 PM  

பொறுமையா திரும்பவும் படிக்கணும்...
BTW.. இது அதுவா தல?

காவேரி கணேஷ் October 13, 2010 at 1:11 PM  

இந்த பதிவை கல்வி அமைச்சருக்கு அனுப்பி பார்க்கிறேன்.

ரமேஷ் வைத்யா October 13, 2010 at 1:17 PM  

rescal....

வழிப்போக்கன் - யோகேஷ் October 13, 2010 at 1:35 PM  

//
பள்ளிகளில் இது குறித்த பாடங்கள் ஒன்றே அடுத்த தலைமுறை மீதான அக்கறை. இதனால் கலாச்சாரம் அழிந்து விடாது
//
Correct....

bogan October 13, 2010 at 2:31 PM  

இன்னும் சற்று தெளிவாகக் கூற முயற்சிக்கிறேன்.உடற்கூறியல் பற்றிய அறியாமையினால் இந்தக் கொலைகள் நிகழவில்லை என்றே நினைக்கிறேன்.குறிப்பாக கள்ளக் காதல் என்று சொல்லப்படுவதில் உடல் என்பது மட்டுமே ஒரு விஷயம் அல்ல.இதில் பிரச்சினை முழுக்க முழுக்க நாம் நமது கலாச்சார விழுமியங்களாக எதை முன்வைக்கிறோம் என்பதே.ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக கண்ணகியும் சீதையும் நளாயிநியும்தான் நமது உதாரண பெண்களாக முன்வைக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.இது பொதுப் புத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் சாதாரணமானது அல்ல.பெண்கள் மறைமுகமாக இந்த முன்மாதிரிகளைப் பின்பற்ற அழுத்தம் கொடுக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.இதை மீறுபவர்களை சமூகத்தால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.ஈர்ப்பு இயல்பானது என்று சொல்லிக் கொடுக்கலாம்.அது அறிவியல்.எந்த ஈர்ப்பு சரியானது என்பது கலாச்சாரம்.அதைச் சொல்லிக் கொடுக்கப் புகுந்தால் யாருடைய கலாச்சாரம் என்ற பூதம் கிளம்பும்.அறிவியல் ஓரளவு நிர்ணயமானது.அறவியல் அத்தனை நிர்ணயமானது அல்ல.

VJR October 13, 2010 at 2:34 PM  

இடுகையில் எதை எடுத்து மேற்க்கோள்காட்ட?

எல்லாமே என் மனம் சொல்பவையே.

நைஜீரியா. ஆப்பிரிக்க நாடு. வந்து ஆண்டு 10 ஆச்சு. இன்னும் ஒரு கற்பழிப்பு செய்தியும் படிக்கவில்லை.கற்பழித்து பின் கொலையும்படிக்கவில்லை.

பூட்டிவைத்த காதல் காமமாகாமல் என்ன செய்யும்?

அருமையான இடுகை.

"உழவன்" "Uzhavan" October 13, 2010 at 3:54 PM  

//பள்ளிகளில் இது குறித்தான விழிப்புணர்வும் கல்வியும் அவசியம் என்று தோன்றியது. //
 
கரெக்ட்தான் பாஸ்..

அன்புடன்-மணிகண்டன் October 13, 2010 at 3:56 PM  

படிச்சாச்சு.. Impressive...
இது அதுவல்ல..
அப்படின்னா.. அது எப்போ? :)

நர்சிம் October 13, 2010 at 4:22 PM  

Bogan, outset, உங்கள் மொழிநடை வசப்படுத்துகிறது.

கருத்திற்கு வருவோம். உடற்கூறியல் அறியாமையால் கொலைகள் நிகழவில்லை என்பதில் உடன்பாடில்லை பாஸ். அதைப்போலாவே கள்ளக் காதல் என்ற வார்தைப் பிரயோகமும்தான்.

ஆனால், உங்களின் இதர கருத்துகளோடு உடன்படுகிறேன்.

ஆனாலும் நிர்ணயமான அறிவியல் பாடங்களைக்கொண்டு நிர்ணயமற்ற அறவியலை வெல்ல முடியாதா என்பதே கேள்வி.

நன்றி விஜேஆர். ஆண்-பெண் சமத்துவத்தில் இந்தியா 112வது இடமாம். ஆய்வின் மொத்த நாடுகள் 134. நார்வே போன்ற நாடுகள் பட்டியலில் முன்னிற்கின்றனவாம். நாம் 114ல் இருந்து 112க்கு முன்னேறி இருக்கிறோம் இரண்டாண்டுகளில். இது கல்வியால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

மணிகண்டன்.. கிட்டத்தட்ட அந்தப் பதிவுதான் இது. ;)

நன்றி காவேரி,

வைத்யாண்ணா..சரியில்லையா..

நன்றி யோகேஷ் & உழவன்.

rajasundararajan October 13, 2010 at 5:17 PM  

ஒரு பிரெஞ்சுப் படம் பார்த்தேன். ஒரு மகள் தன் தாயிடம், தன் dating பருவத்தில் நிகழும் முதற் கலவியை - சற்றுத் தயக்கத்தோடுதான் - சொல்கிறாள். “எப்படி இருந்திச்சு?” இது தாய். “நல்லாத்தான் இருந்திச்சு.” இது மகள். “கருத்தடை எடுத்துக்கிட்டயா?” மகளின் முகத்தில் கலவரம். “இல்ல, அது தானா நிகழ்ந்திறுச்சு.” தாய், சினமோ எரிச்சலோ படவில்லை. மகளை இழுத்துத் தன் மடியில் கிடத்திக்கொள்கிறாள். “நல்லாத்தான் இருக்கும். ஆமா, அது ஒரு அற்புதமான உணர்வு. ஆனா இனி கைவசம் கருத்தடை மாத்திரைகளை வைத்துக்கொள். வாங்கித் தர்றேன்”.

முப்பது ஆண்டுகளுக்கு முந்திப் பார்த்த படத்தின் ஒரு காட்சி இது. இப்படிப் பேசக்கூடிய மாற்றம் இன்னும் நமக்கு வாய்க்கவில்லை. அது வாய்க்குமா என்பதும் ஐயம்தான். நாமும் - குறிப்பாக நம் பெண்கள் - கிடைக்கும் சுதந்திரத்தை எப்படிப் பயன்கொள்வது என்று தெரியாமல் இருக்கிறோம். சக்கர வியூகத்தில் நுழைந்துவிட்டு வெளியேறத் தெரியாத அபிமன்யு போலச் சிக்கிக்கொள்கிறோம். இந்த Abhimanyu Syndrome காரணமாக, பெண்விடுதலை ஆண்விடுதலை இன்னதென்றும் அறியாமல் அது அவசியமா என்றும் தெரியாமற் குழம்புகிறோம். காலாகாலத்துக்கும் மூடிமறைத்துப் புழங்கவேண்டிய கட்டாயம் நமக்கு. அதனால்தான் நம் மொழியில் ‘கள்ளக் காதல்’ என்றொரு சொல்வழக்கு இருக்கிறது.

மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது என்பதால் காதல்தான் முதல்தேவை. ஆனால் பாதுகாப்புதான் இன்றியமையாதது என்பதை காதல்மயக்கம் மறைத்துவிடும். பள்ளியில் கற்றுத்தரப்பட வேண்டியது இதுதான். இதைப் பெற்றோர்கள் கற்பித்தால் பிள்ளைகளுக்கு ஏறாது.

rajasundararajan October 13, 2010 at 5:19 PM  

காதல், காமம் என்னும் இரு சொற்களும் சங்கப் பாக்களில் ஒருபொருட் சொற்கள் போல வழங்கப்பட்டாலும் காதல், அன்பு சார்ந்தது; காமம், விருப்பம் சார்ந்தது. காதல் மகன் என்கலாம். காமர் மகன் என்கலாமா? இக் காலத்தில் காமம் என்பது lust என்னும் பொருளிலும் வழங்குகிறது. குற்றமில்லை.

ராஜசுந்தரராஜனின் கவிதையை எதை உணர்த்த இங்கு சேர்த்தீர்களோ! விருப்பப்பட்டது ஒன்று விலக நேர்கையில், இழப்புணர்வும் பிணக்குவீம்பும் இயல்புதாம். ஆனால் விருப்பப்பட்ட அந்த ஒன்றுக்கு ஒரு குறைவும் வந்துவிடக் கூடாதே என்கிற தவிப்பு விருப்பத்தின்பாற் பட்டதன்று; காதல்.

தூத்துக்குடி எனது மனையடி நிலத்தை விற்க நேர்ந்தபோது அதை வாங்கியவரிடம், “இது என் மகள். இது வழி உங்களுக்கு நன்மையே உண்டாகட்டும். இதைக் கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தாது இருப்பீர்களாக!” என்று சொல்லிப் பத்திரம் கைமாற்றினேன். (வாங்கியவர் ஒரு businessman).

விளைவு நலப்பட வேண்டும். அதற்கான காரணம் நேராக இருந்தால்தான் அது கூடிவரும். அந்த நேர் என்பது காதல்.

rajasundararajan October 13, 2010 at 5:24 PM  

இந்தக் கவிதையின் நாயகிக்கு, பிறகு, தாலிதாண்டிய காதல்களும் வந்து கூடின. தன் மகள் பருவம் எய்தும்வரை அவள் அழகும் தொலையவில்லை. அதற்கப்புறம் உண்டு ஓய்ந்தாளோ என்னவோ, குண்டாகிவிட்டாள் (ஒரு தகவலுக்காக).

நாய்க்குட்டி மனசு October 13, 2010 at 6:06 PM  

எங்கே செல்லும் இந்த பாதை ;யாரோ யாரோ அறிவாரோ?

ரோகிணிசிவா October 13, 2010 at 6:08 PM  

ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்து , பகிர்தலுக்கு நன்றி

V.Radhakrishnan October 13, 2010 at 7:24 PM  

வெளிநாட்டில் வாழும் நமது நாட்டு கலாச்சாரம், நமது குடும்ப சூழலில் வாழும் பல மாணவிகள் 'பாலியல் கல்வி' நடத்தப்படும்போது முகம் சுளிக்கிறார்கள். வேதனை படுகிறார்கள். மாணவர்கள் இதை விளையாட்டாக பார்க்கிறார்கள்.

பெற்றோர்களுக்கு வீட்டில் இதைப் பற்றி சொல்லிக்கொடுக்கும் தைரியம் வரட்டும் முதலில்!

ராஜ சுந்தரராஜன் அவர்கள் எழுதி இருப்பதை போல ஒரு தெளிவு நமது மனதில், மக்களிடம் தோன்றட்டும்.

எனது மகனிடம் எனது மனைவி பல விசயங்கள் சொல்லும்போது 'வயது வரட்டும், தானாக தெரிந்து கொள்வான்' எனும் எண்ணம் மட்டுமே என்னிடம் மிஞ்சுகிறது.

ப்ரியமுடன் வசந்த் October 13, 2010 at 8:07 PM  

உண்மையான கள்ளக்காதல் :)) (சிரிக்கப்படாது)பரிதாபத்துக்குரியது..
தவி(கி)த்து கொண்டிருக்கும் இதயத்தின் தூண்டில் எனவும் சொல்லலாம்..பெரிசா கள்ளத்தனம் நோக்கமா இருக்காது வளர்ச்சி குன்றிய வாழ்க்கையின் நீட்சியாக சொல்லாம் பட் கையில் கிடைத்தவர்கள் எல்லாரையும் அனுபவிப்பவர்கள் விபச்சாரிகளாக கணக்கில் கொள்ளப்படுவார்கள் அது கள்ளக்காதல் அல்ல...எனக்கு கல்யாணம் ஆவறதுக்கு முன்னாடியே உன்னைய பார்த்திருக்க கூடாதா என்று சொல்லாத கள்ளக்காதல்கள் இருக்காது...!

இதுக்கு தீர்வு இருக்கோ?

சிறுவயதில் செக்ஸ் கல்வி அவசியம்

அமுதா கிருஷ்ணா October 13, 2010 at 8:39 PM  

சிறுவயதில் எந்த விதத்திலோ பாலியில் பாதிப்பு அடைபவர்கள் தான் இந்த மாதிரி கள்ளக்காதலில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று எங்கோ படித்ததாய் நினைவு.மன நல மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும்.

வானம்பாடிகள் October 13, 2010 at 9:14 PM  

ரொம்ப அழகா வந்திருக்கு நர்சிம்.

நாய்க்குட்டி மனசு October 14, 2010 at 8:06 AM  

வளர்ச்சி குன்றிய வாழ்க்கையின் நீட்சியாக சொல்லாம்//
piramiththu vitten vasanth

நர்சிம் October 14, 2010 at 1:38 PM  

//மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது என்பதால் காதல்தான் முதல்தேவை. ஆனால் பாதுகாப்புதான் இன்றியமையாதது என்பதை காதல்மயக்கம் மறைத்துவிடும். பள்ளியில் கற்றுத்தரப்பட வேண்டியது இதுதான். இதைப் பெற்றோர்கள் கற்பித்தால் பிள்ளைகளுக்கு ஏறாது.//

சொல்ல முனைந்தது இதுதான் சார்.

அனைவருக்கும் நன்றி.

தஞ்சாவூரான் October 14, 2010 at 2:33 PM  

சினிமா, ஊடகங்கள் மூலம் தெரியக் கிடைக்கும் அதிர்ச்சிகளைத் தாங்கும் மனப்பக்குவம் நம்மவர்களுக்கு இன்னும் வரவில்லை. அந்த மனப் பக்குவத்திற்கு அவசர அவசியம், பாலியல் கல்வி.

ஒரு வாரப் பத்திரிக்கையில் படித்தது:

ஒரு வாசகி தான் எடுத்த புகைப்படத்தில் தன் தோழியின்/சகோதரியின் கால் முட்டி தெரிகிறதென்று அதற்கு மையிட்டு மறைத்து விட்டு அதைப் பத்திரிகைக்கு அனுப்பி இருக்கிறார். அதே பத்திரிக்கையின் பெரும்பாலான பக்கங்களில் அரை நிர்வாண பெண்களின் புகைப்படங்கள்.

நுகர்வோர், வழங்குவோர் மனநிலையில் மலை, மடு போன்ற வித்தியாசம் இருக்கும் வரை, காமக்கடுங்கொலைகள் தொடரத்தான் செய்யும் :(

கலகலப்ரியா October 14, 2010 at 6:59 PM  

இன்னும் படிக்கல... படிச்சுட்டு சொல்றேன்... அவ்வ்...

என்.ஆர்.சிபி October 14, 2010 at 10:15 PM  

:))

ILA(@)இளா October 15, 2010 at 12:50 AM  

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!

ரோஸ்விக் October 15, 2010 at 9:19 AM  

இடுகையிலும் நிறைய எடுத்து சொல்லி இருக்கீங்க... அருமை.
பின்னூட்டத்தில் bogan, rajasundararajan & தஞ்சாவூரான் மூவரும் அசத்தியிருக்கிறார்கள்.

இந்த காமம் நம்மிடமிருந்து வெளிப்படும்போது ஒருவிதமாகவும், பிறரிடமிருந்து (உடன் பிறப்பாகவோ, உடன் வாழ்வோராக இருப்பினும்) வெளிப்படும்போது ஒருவிதமாகவும் எதிர்வினை புரியும் மனநிலையை அவ்வளவு எளிமையாக மாற்றிவிடமுடியா? என்ற கேள்வியும் பலருள்ளும் எழுமென நினைக்கிறேன்.
சரியா??

பார்வையாளன் October 15, 2010 at 9:17 PM  

உங்கள் அக்கறையை புரிந்து கொள்கிறேன்.. பாராட்டுகிறேன்.. ஆனால் உங்கள் புரிதலில் தவறு இருக்கிறது...
பேசுவதலோ , கற்பிப்பதாலோ காமத்தை கடந்து செல்ல முடியாது.. காம்ம் சார்ந்த குற்றங்கள் வெளி நாடுகளிலும் உண்டு..
பாலியல் அறிவு வேண்டும் என்பது.. கற்பிக்கப்பட வேண்டும் என சொல்வது ஆதரிக்கப்பட வேண்டும்..ஆனால் அதன் நோக்கம் வேறு..
நீங்கள் சொல்லும் விஷ்யத்திற்கு அது தீர்வு அல்ல

கலகலப்ரியா October 15, 2010 at 11:34 PM  

:)

Bharathi October 17, 2010 at 11:11 PM  

//உன் சும்மா அழகையே
கண்ணால் தாண்டுதல்
அரிய காரியம்

மணக்கோலத்தில் நீ என்றானால்…

வெயிலும் காய்கிறேன் பேர்வழிஎன்று அன்று
எதிர் மிளிர்ந்து கொண்டிருந்தது
உன் பொலிவைத்தான் போலும்.

என் உள்வெடிச் சிதறல், அச் சூழலில்
ஒவ்வாத காட்சி என்றாகி
விழிச்சுவை அவரோகணிக்கவும் கூடும்.
இன்னொரு ஆள் கையில் உன்கை
என்பதற்காக அல்ல
உன் மணவிழாக் காண
நான் வராமல் தவிர்ந்தது//

:(

முரளிகண்ணன் October 18, 2010 at 10:19 AM  

Very thought provoking post.

Nice one.