நெடுஞ்சாலை…
‘எனுமா எழுதி இருக்காரு கண்மணி குணசேகர அண்ண’ !
என்று என் மொழியும் அந்த வட்டாரத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
நெடுஞ்சாலை எனும் கண்மணி குணசேகரனின் நாவல் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு நீங்க இன்னும் நெடுநாட்கள் ஆகும்.
வட்டார மொழி நாவல்களில், இந்த அளவிற்கு நுட்பமாக மொழியை வடித்திட முடியுமா எனும் வியப்பு இன்னும் அகலவில்லை.
சிறுவயதில் பாஸ் எடுக்க மாதாமாதம் மதுரை எல்லிஸ் நகர் டிப்போவுக்கு போகும் பொழுது, பெரிய டயர்களை உருட்டிக்கொண்டும், காலி பஸ்களை ரிவர்ஸ் எடுத்துக்கொண்டும் இருப்பார்கள் போக்குவரத்துத் துறை ஊழியர்கள். அவர்களுக்குப் பின்னால் இப்படி ஒரு முடிச்சு இருக்கும் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் உயிர்பெற்று நகமும் சதையுமாக நம்மோடு நடமாடுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தியதே இவ்வளவு பெரிய நாவலின் ஆகப்பெரிய வெற்றி.
தமிழரசன், அய்யனார், ஏழைமுத்து என்ற மூன்று தற்காலிக தொழிலார்களின் மூலம் பேருந்தின் இண்டு இடுக்கெல்லாம் நம்மை கூட்டிச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.
காதல்,காமம்,பாசம், நட்பு, என எல்லா உணர்வுகளும் குழைத்த, மண்ணைப் பிசைந்து கதை செய்யப்பட்ட நாவல்.
தமிழரசன் முதன்முதலில் ஒரு பெண்ணைப் பேருந்தில், வெகு அருகே பார்த்ததும் நிகழும் மாற்றங்களும் அதன்பின்னர் கணக்கை முடிக்க முடியாமல் படும் பாட்டையும்.. என நாவல் குறித்து நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.
தமிழினி வெளியீடு.
விலை : 230.
**
சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை அற்புதமாய் இருக்கிறது. மழையும் மஞ்சள் வெயிலும் இரவின் மஞ்சள் வெளிச்சமும் என ஏகாந்தம். பகலிரவு கிரிக்கெட் மைதானம் போல டோல்கேட்டுகள். வசூலித்தாலும் நன்றாக பராமரிக்கிறார்கள்.
தீபாவளியை துரத்திக்கொண்டே ஊருக்குப் போனது இதமென்றால், நம்மைத் துரத்தி, சைடு வாங்கி, டீக்கடையில் நின்று ஸ்னேகமாய் சிரித்த சகவாகனர்களும் மழை-இஞ்சி டீயும் இன்னும் இதம்.
தீபாவளிக்கு முந்தைய இரவு டவுன்ஹால் ரோடு, கீழவாசல் எல்லாம் அப்படியே இருக்கிறது. ஜனத்திரள், ஜவுளிக்கடல் என மதுரை, மதுரைதான்.
**
டிக்கு, ஸ்கூட்டு, மஸ்ட்டு, ஃபுல்லுக்குத் தாங்காது… இந்த வார்த்தைகளோடு மட்டுமே தீபாவளி கழிந்தது. டிவி நிகழ்ச்சிகளில் கழிந்திருக்க வேண்டிய தீபாவளி நல்ல வேளையாக ரம்மியில் போனது. ரம்மியாட்டத்தின் ரம்மியம் இன்னும் குறையவில்லை. முன்பெல்லாம் அடிதடியாகும். இப்பொழுது வார்த்தைகளோடு முடித்துக் கொண்டோம். தோப்பு ஆயிரம் ஓவா.
**
கோவை என்கவுண்ட்டர் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள், சரியா தவறா, தவறுக்கு இதுதான் சரியா என.. இது மக்களின் மனநிலையை பார்த்து அரசு எடுத்த முடிவாகப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திராவில் மூன்று மாணவர்கள் ஒரு மாணவி மீது ஆசிட் ஊற்றிய வழக்கில், மக்களின் கொந்தளிப்பைக் கணக்கில் கொண்டு, இதே போல் அதிகாலை ஆசிட் ஊற்றிய இடத்தைக் காட்டச் சொல்லி கூட்டுப் போய் சுட்டார்கள்.
நன்றி.
**
மழையில், மதுரை போய்வந்ததாலோ என்னவோ..
கற்கண்டின் மீது பெய்த மழை.
இந்திய வரைபடத்திற்கொப்பாய்
இரு கைகளையும் விரித்து
என்னை நோக்கி நிற்கின்றாய்
உன்னை முழுக்க நனைத்த மழை
இப்பொழுது முற்றாக நின்று,
மஞ்சள் வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது
நெற்றியில் சுருண்டிருக்கும்
ஒற்றை முடியின் முனையில்
எக்கணமும் உருளப்போகும் திவலை
இமை முடிகளின் ஈரம்
காதுநுனிகளில் இருந்து
வழிந்து கொண்டிருக்கும் மழைநீர்
புத்தர் சாயலில் சிரிக்கிறாய்
மிகச்சரியாய் நான்கு அடிகளில்
உன்னை அடைந்திடலாம்தான்
ஆனபொழுதும்
அருகில் வரப்போவதில்லை இப்போது
எப்பொழுதுதாவது இப்படி
கண்ணிற்கும் ஈயப்படுகிறது
சுகித்துக் களிக்கிறேன்
சகித்துக்கொள்
சகி.
**
என்’ணங்கள் 11/11/2010
Posted by
நர்சிம்
Thursday, November 11, 2010
Labels: என்’ணங்கள்
22 comments:
தோப்பு ஆயிரம் ஓவா வும்
சகி சுகியும்
ருசி :)
கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை -- இன்றிரவு பயணிக்கிறேன்.
கண்மணி குணசேகரனின் ”வெள்ளெருக்கு” படித்துக் கொண்டிருக்கிறேன்
மொழி அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது.
வட்டார மொழியை வடிப்பதில் பெருமாள் முருகனும் குறிப்பிடத்தகுந்த ஒரு ஆளுமை
nalla irunthathu Ennangal!!!
தங்கள் கவிதைகளில் நல்ல முன்னேற்றம். நர்சிம் தொடர்ந்து எழுதுங்கள். இல்ல சண்டை போட்டுருவேன்.பதிவுலகம் கொஞ்சம் டல் அடிக்குது
madurai town hall road, wow nice.
ஆசிரியர் மற்றும் நூல் அறிமுகம் அறிந்தேன். நன்றி
//நெற்றியில் சுருண்டிருக்கும்
ஒற்றை முடியின் முனையில்
எக்கணமும் உருளப்போகும் திவலை//
:))
ம்...
கவிதை அழகு. நன்றி சொன்னதும் கூட
சுகித்துக் களிக்கிறேன்
சகித்துக்கொள்
சகி.
ஹா!
முந்திக் காலத்துல, தமிழ்ச் சமுதாயத்துல, பலசாதிக் காரங்களும் படிச்சவங்களா இருந்திருக்காங்க. சங்கப் பாக்களை எழுதுன புலவர்களோட குலங்களை ஆராய்ந்தால் இது விளங்கும். ஆனா சமயச் சடங்குகள் ஓங்குன இடைக்காலத்துல கல்வி பார்ப்பனர்கள் வெள்ளாளர்களுக்கு மட்டுமே என்றாகிப் போயிற்று. ஆங்கிலேயர் வருகையால் அது மாறி, இன்னைக்குப் படிப்பறிவு பெற்றிருக்கிற பலசாதி ஆட்களும், தமிழைப் பொறுத்தமட்டில், பார்ப்பன-வெள்ளாளத் தமிழைப் படித்துத்தான் வளர்ந்து இருக்கிறோம். அதனால இன்னிக்குக் கதை எழுதுற அத்தனை பேருகிட்டயும் கல்கி, ஆனந்தவிகடன்ல வாசிக்கக் கிட்டுற அந்தத் தமிழோட சாயல் இல்லாம இருக்காது. அது தப்புன்னு சொல்ல வரலை. ஆனா தொழிலாளர்கள் அல்லது அடித்தட்டு மக்களைப் பத்திப் பேசுற எழுத்துகள்ல அந்த மொழிநடை ஒட்டாம வெளிறிப்போயி நிற்குமா இல்லையா?.
அது என்னங்க பார்ப்பன-வெள்ளாளத் தமிழ்?
‘அச்சமா அல்லது நடுக்கமா இருக்குது’ங்கிறதெச் சொல்றதுக்கு, ‘வயித்துல புளியக் கரைக்கிது’ம்பாங்க. புளியெக் கரைச்சுப் புளிக்குழம்போ ரசமோ வெச்சுச் சாபிட்ட பழக்கமுங்க. ஆனா, கருவாட்டெச் சுட்டு அல்லது உப்பு மொளகாயெத் தொட்டுக்கிட்டுக் கூழோ கம்பங்கஞ்சியோ குடிக்கிறவங்களோட பொழப்பப் பத்தி எழுதுறப்போ அது ஒட்டுமாங்க? மொத மொதல்ல புளியெக் கரைச்சாரே அவரெக் குத்தஞ் சொல்றதுக்கு இல்லீங்க. ஆனா கரைச்சுக் கரைச்சு நாராகிப் போனதெ இன்னிக்கும் விடாமக் கரைக்குறாங்க பாருங்க அதுதாங்க கொடுமை!
கண்மணியின் தமிழ்:
படிச்சதுனால வந்து சேர்ற அந்தப் பார்ப்பன-வெள்ளாளத் தமிழ் இல்லாம, கண்மணி குணசேகரனோட எழுத்துல பாட்டாளி மக்களோட வழக்குமொழி வந்திருக்குங்க:
இளம்பருவத்தோட தொடக்கத்துல சந்திரா எப்படி இருந்தாள்ன்னு சொல்றப்போ, “எருமுட்டில் முளைத்த செடியாய்த் தளதளப் பருவம்”ங்கிறாரு. வேலையெ விட்டு விலக்குனதுல நொந்துபோயி வந்திருக்கிற அய்யனாருக்கு, சந்திராவோட பேச்சு, “புண்ணுவாயில் படர்கிற தேங்காய் எண்ணெய்யாய் ஒரு குளிர்வு!” அய்யனாரு கரணையில கலவையை எடுத்து வீசுறப்போ அது, “ஒரு ஆட்டின் சுவரொட்டியாய் ஒட்டிக்கொள்கிறது”. மத்த கொத்தனாருங்க வாரி அடிக்கவும் வழித்துக்கொண்டு விழுவதுமாய், “கூழில் விழுந்த ஈயாய் சுக்கிரத்துக்கொண்டு கிடக்கிறார்கள்.”
எடுத்துகொண்ட கதைக்களத்துக்குப் பொருத்தமான தமிழுங்கிறது இதுதானுங்க.
//காதல்,காமம்,பாசம், நட்பு, என எல்லா உணர்வுகளும் குழைத்த, மண்ணைப் பிசைந்து கதை செய்யப்பட்ட நாவல்.//
:))
// நம்மைத் துரத்தி, சைடு வாங்கி, டீக்கடையில் நின்று ஸ்னேகமாய் சிரித்த சகவாகனர்களும் //
:))
//நன்றி.//
:))
நாலடி தூரத்துல நின்னுட்டு.. என்ன நர்சிம் இது.. சிபுத..
//டிக்கு, ஸ்கூட்டு, மஸ்ட்டு, ஃபுல்லுக்குத் தாங்காது…//
:))
//மழையில், மதுரை போய்வந்ததாலோ என்னவோ..//
எப்பவுமே தான தல! ;)
\\டிக்கு, ஸ்கூட்டு, மஸ்ட்டு, ஃபுல்லுக்குத் தாங்காது…\\
வேடிக்கைப் பார்ப்பதோடு சரி:)
கழுதையாட்டத்தில் பத்து பேரிற்கு மேல் ஆடும்போது ஸ்பேட் ஆஸ் கிடைச்சவனை அழுகவிடும் ஆனந்தம். ம்ம்ம்:)))
//
தீபாவளியை துரத்திக்கொண்டே ஊருக்குப் போனது இதமென்றால், நம்மைத் துரத்தி, சைடு வாங்கி, டீக்கடையில் நின்று ஸ்னேகமாய் சிரித்த சகவாகனர்களும் மழை-இஞ்சி டீயும் இன்னும் இதம்.
//
எவ்ளோ விசயங்கள் இதற்குள்ளே............
1000 ரூவா அப்பீட்டே..........
...என நாவல் குறித்து நிறைய எழுதிக்கொண்டே போகலாம். //
அப்போ தனியா ஒரு பதிவா எழுதுங்களேன்.
மிஸ்ஸிங் மதுரை :(
சுகித்துக் களிக்கிறேன்
சகித்துக்கொள்
சகி. //
லவ்லி.
கற்கண்டின் மீது பெய்த மழை.// இது இன்னும் அழகு.
நாலடி தூரத்துல நின்னுட்டு.. என்ன நர்சிம் இது.. சிபுத.. //
சுசி ரசிச்சேன். :)
கவிதை அழகு !!!
cards....veettil yellaarumaa vilaiyaadum pothu yeththanai santhosham.yeththanai yethirpaaraatha comments.
sarkkarai nimidangal....!!
//
தீபாவளியை துரத்திக்கொண்டே ஊருக்குப் போனது இதமென்றால், நம்மைத் துரத்தி, சைடு வாங்கி, டீக்கடையில் நின்று ஸ்னேகமாய் சிரித்த சகவாகனர்களும் மழை-இஞ்சி டீயும் இன்னும் இதம்.
//
//
சுகித்துக் களிக்கிறேன்
சகித்துக்கொள்
சகி.
//
simply superb......!
vaazhthukal nursim sir:)
கவிதை அருமை..அதிலும் அந்த கடைசி பாரா ..ரியலி டச்சிங்..!!
நல்ல பகிர்வுகள். நல்ல நடை.
Post a Comment