நந்தலாலா... உகுநீர் நெஞ்சு சுட..

நான் எட்டாவது படிக்கும் பொழுது, பள்ளி முடிந்து வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக பேருந்து காலியாக இருந்தது. மழை. ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியில் பயணச்சீட்டு வாங்கிய உடன் இங்கும் அங்கும் மாறி அமர்ந்து, ஜன்னல் கம்பியில் முத்துபோல கோர்த்திருந்த மழை நீரை உருவி சிதறடித்துக் கொண்டிருந்தேன். இறங்குமிடத்தில் இறங்கும் பொழுது, பரிசோதகர். முதலில் சாதாரணமாகவும், பின்னர் வேகமாகவும், அதன்பின்னர் பரபரப்பாகவும் பயணச்சீட்டைத் தேடினால், இல்லை. முதலில் அதட்டியவர், காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே ‘டிக்கெட் எடுக்காம வருவியா’ எனக்கேட்டதும் உலகின் ஒட்டுமொத்த அவமானமும் சேர்ந்து கொண்டது போல ஒரு உணர்வு அழுகையாக, ஆனால் அழ முடியாமல் சிக்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு முதியவர், ‘அந்தப் பையன் டிக்கெட் எடுத்தான் சார். நான் பார்த்தேன். வேடிக்கை பார்த்துட்டே விட்டுட்டான் போல, எவ்ளோ ஃபைன்னு சொல்லுங்க நான் வேணாத் தர்றேன்’ என்றார். ‘டிக்கெட்ட பத்தரமா வச்சுக்கணும்டா’ என சொல்லிவிட்டு ஃபைன் எதுவும் போடாமல் போய்விட்டார் பரிசோதகர். அங்கு குழுமி இருந்தவர்களும் நகர்ந்துவிட்டார்கள். அடைத்துவைத்திருந்த அழுகை, அந்த முதியவர் என் தலையைத் தொட்டு, பார்த்துப் போப்பா வீட்டுக்கு என்றவுடன் வெடித்துக் கிளம்பியது. என்னை தேற்றவே முடியவில்லை. ’நீ தான் டிக்கெட் எடுத்தியேப்பா, அதான் அவங்க சரின்னு சொல்லிட்டாங்க இல்ல’ என ஏதேதோ சொன்னார். ஆனாலும் என்னைத் தேற்றவே முடியவில்லை அவரால். நான் தேடிக்கொண்டிருந்த அம்மா அவர் வடிவில் இருந்திருக்கலாம். அது அழுகையாக வடிந்திருக்கலாம்.

இறந்த குழந்தையை பொட்டலம் கட்டிக் கொடுத்துப் போனாள் ஒரு தெலுங்கு நர்ஸ். அந்த நெடிய வராந்தாவில் தனித்து, நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறேன் குனிந்து பார்க்க திராணியற்று. சுழன்ற தரையை நிறுத்தமுடியாமல் விழப் போன நொடியில் என் தோள் பிடித்து அமரச்செய்தாள் பதின்மவயதுச் சிறுமியொருத்தி. தாயை நினைக்கும் தருவாயில் அவள் முகம் வராமல் இருப்பதில்லை இப்போது வரைக்கும்.

நந்தலாலா பார்க்கும் பொழுது, நான் கடந்து வந்த என் அம்மாக்கள் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் வந்து கொண்டே இருந்தார்கள் என்னோடு.

முதல் ஃப்ரேமில் இருந்தே இது சாதாரண படங்களுக்கு அப்பாற்பட்டது என்பது ஊடாடிக்கொண்டே இருந்தது.

திரைமுழுக்க சிறுவனின் முகம், முகத்திற்குப் பின்னால் பெற்றோர்கள் வேகமாகவும் மெதுவாகவும் தத்தம் குழந்தைகளோடு பள்ளியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க, அவனும் சாலையும். அதன்பிறகான பெரும்பான்மைக் காட்சிகளும் ஃப்ரேம்களும் ஆரம்பிப்பதும் முடிவதும் சாலையில்தான். சிறுவன், மிஷ்கின், சாலை, இளையராஜா இந்த நால்வரும் பிணைத்து உருட்டி உருவாக்கியது நம்மை உருக்கத்தான்.

துணிகளைத் துவைத்துக் காயவைத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரப் பெண் சிறுவனிடம் அவன் தாய் பற்றி பேசி பணம் வாங்கிக் கொள்வதில் தொடங்குகிறது தேடல்.

தொலைக்காட்சியில் தாயன்பு குறித்து பேசிக்கொண்டிருப்பதை சிறுவன் லயித்துக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே டமார் என தொலைக்காட்சி நொறுக்கப்படுகிறது வேறோர் இடத்தில். உடைத்துவிட்டு, சுவரை உரசிக்கொண்டே ‘ரேடியோ பெட்டிய யாரோ உடைச்சுட்டாங்க’ என மிஷ்கின் அறிமுகமாகும் பொழுதே அவர் தன் தாய் மீது வைத்திருக்கும் வெறுப்பும் அறிமுகமாகிறது.

கேமராவை நோக்கி வெகு அருகில் வந்துகொண்டே இருக்கும் மிஷ்கினின் முகம் சட்டென ஆஸ்பத்திரிக் கதவின் சிறிய துவாரத்தின் வழியே தெரிவது இந்தப் படத்தின் கேமரா ஆளுமைக்கு சிறு உதாரணம்.

சிறுவன் பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது, அவனுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு சில்லரையை எண்ணிக்கொண்டிருக்கும் மிஷ்கின். இதில் இருந்து கிட்டத்தட்ட முடிவு வரை ஆயுத எழுத்தைப் போல ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிற்பதுவும் வேண்டுமென்றே செதுக்கப்பட்ட ஒன்று.

வேலை எல்லாம் இல்ல, காலைல எந்திருக்கணும், எவ்ளோ குளிருனாலும் குளிக்கணும், மணி அடிச்சா சாப்பாடு, பச்சப்புழுன்னா நல்லா இருக்கும், செவப்பு புழுன்னா கசக்கும்’ என சொல்லும் பொழுது மனநலக் காப்பகத்தின் நிலையும் வலியும் புரிகிறது.

தப்பித்து வந்ததும், எங்கோ அடிக்கும் மணி சத்தம் கேட்டதும் பசியெடுத்து, ஓட்டல் காவலாளி ‘பக்கத்து சந்துல கையேந்தி இருக்கு, அங்க போய் சாப்பிடு’ என்றவுடன் ஆர்வமாய் சந்தைப் பார்க்கும் மிஷ்கின், உள்ளே போகாமல் சென்று விடுவார். சந்து சில நொடிகள் காட்டப்பட்டபின்னரே அடுத்த காட்சி. சந்தின் இருட்டே உள்ளே செல்லாததன் காரணம் என நாமாக யூகித்துக் கொள்ளலாம். யூகம் தவறாகவும் இருக்கலாம்.

லாரி ஓட்டுனரிடம் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு, நீதான எடுக்கச்சொன்ன என்று அழுதவுடன், வெறித்துப் பார்க்கும் ஓட்டுனரின் முகம், பின்னனியில் வயலின் என இளையராஜாவை தவிர்த்து இந்தப் படத்தைப் பார்த்தால், ஓவ்வொரு தாய்ப்பாத்திரங்களும் தாயாகத் தெரிந்திருப்பார்களா என்பது ஐயமே..நன்றி ஐயனே.

ஆங்கிலத்தில் பேசும் சிறுவனை உற்றுப்பார்க்கும் போலிஸ் தனக்கும் ஆங்கிலம் தெரியும் எனக்காட்ட ‘ஸ்டொமக் பெயின்ன்ன்?’ எனக் கேட்பது, மிஷ்கினிடம் என்ன வேல என அதட்டுவது, டேய் இப்பத்தான சொன்னேன் என போலிசையே அதட்டும் மிஷ்கினைப் பார்த்து பேசாமல் இருந்துவிடுவது என ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் தன்மையில் நிற்கிறது.

காலுக்குப் பதில் குச்சியை உபயோக்கிக்கும் மாற்றுத் திறனாளியை ’மெதுவாபோடா __’என அவன் ஊனம் சொல்லி மிஷ்கின் திட்டியதும் கதறி அழும் அந்தப் பாத்திரம் மிஷ்கின் பாத்திரத்திற்கான ஒரு குறியீடு. தன்னைத்தானே நொண்டி என அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அந்த பாத்திரம் வேறு எவரேனும் அப்படிச் சொன்னால் பொங்கியழுவது, அவருக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர் நடந்து போகும் பொழுது நம்பிக்கையாய் மருத்துவரின் காலைப் பார்ப்பதும் என சட்டத்திற்குச் சட்டம் சத்தமே இல்லாமல் கண்களுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது.

மிஷ்கின் தன்னை மெண்ட்டல் என அடிக்கடி கூறிக்கொண்டாலும் வேறு எவரேனும் அப்படிக் கூறினால், மூர்க்கமாகத் தாக்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ காட்சி.. இறுதிக் காட்சியின் பலமே இந்த வார்த்தையும் அது தொடர்ந்து மிஷ்கின் சிறுவனை அடிக்காமல், ஆனாலும் கோவத்தைக் காட்டக் கதறி அழுவதும்… அதுவரை மாற்றி போடப்பட்டிருந்த காலணிகளை, ஒரு கவிதை போல சிறுவன் அழுதுகொண்டே மாற்றுவதும்.அந்த நொடியில் இருவரும் தாயாகிப் போவதும்... என நிறுத்தப்புள்ளி வைக்காமல் எழுதிக்கொண்டே போக முடியும்.

கீழே விழுந்து காயம்பட்ட பெண்ணின் காலை, அவள் அடித்தும் பொருட்படுத்தாமல் ‘எச்சி வய்யி சரியாயிடும்’ எனச் சொன்னவுடன், அவள் முகபாவம் மாறும் இடம்.. மனிதம், ஆனால் இந்தக் காட்சி இங்கேயே முடிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இயேசுவின் மெழுகு, தொலைவில் புள்ளி வெளிச்சமாய் பரவிப் போய்க்கொண்டிருக்க, கடவுள் கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டில் அடங்கும் காட்சி. பின்னர் அதே வெளிச்சம் இன்னொரு லாரிஓட்டுனரை பயம்கொள்ளச்செய்கிறது.

இருவரின் தேடலும் ஒன்று. நோக்கம் வேறுவேறு. நிறைவேறுவது முற்றாய் மாறாக.

சிறுவன் கையில் வைத்திருக்கும் தன் தாயுடைய புகைப்படம் முதலில் தவறி விழும்பொழுது பதறி அழுது வாகனத்தை நிறுத்தி, எடுத்து புகைப்படத்தில் முத்தமிடுவான். புகைப்படத்தை ஓடிச்சென்று எடுத்துவந்த ஸ்னிக்தா ’எனக்கு முத்தம்’ என கேட்கும்பொழுது மறுத்துவிடுவான். அதே இடத்தில் மீண்டும் சிறுவன் அந்தப் படத்தை தவற விட்டு,இம்முறை எடுக்காமல் (ஏன்? படம் பாருங்கள்), ஸ்னிக்தாவிற்கு முத்தம் கொடுக்கும் பொழுது கண்ணீர் வந்துவிடுகிறது.

பயணங்கள் வெவ்வேறு வடிவங்கள். ஏதேனும் நிமித்தங்கள் நிச்சயம் எல்லாப் பயணங்களுக்கும் இருக்கும். அப்படியான இருவருடைய பயணத்தின் ஆரம்பப்புள்ளிக்கும் முற்றுக்கும் இடையில் அன்பின் ஈரத்தைக் கொண்டு வரையப்பட்டிருக்கும் கோடு நந்தலாலா.

கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.

நன்றி இளையராஜா.

நன்றி மிஷ்கின். உங்கள் கைகளில் திணிக்கக் கூழாங்கற்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

37 comments:

தமிழ் அமுதன் November 30, 2010 at 4:28 PM  

படம் பார்க்கும்போது கவனிக்க தவறிய
நுணுக்கமான காட்சிகளை எல்லாம் மிக அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்...!

நான் படம் பார்ப்பதற்கு முன்னர் இந்த விமர்சனம் படித்திருக்க வேண்டும்...!

இல்லை..!இல்லை..! இந்த விமர்சனத்திற்காக இன்னொருமுறை படம் பார்க்க வேண்டும்...!

வானம்பாடிகள் November 30, 2010 at 4:36 PM  

படிக்கையிலேயே உகுநீர் நெஞ்சு சுட்டது நர்சிம். வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

சுரேஷ் கண்ணன் November 30, 2010 at 5:01 PM  

நன்றாக இருக்கிறது நர்சிம்.

ஜீ... November 30, 2010 at 5:01 PM  

நல்லா இருக்கு பாஸ்! :-)
நான் இன்னும் பார்க்கல...ஆனா மிஷ்கினின் முதல் இரு படங்களே போதும்...அடுத்ததை அறிவிக்க!

subra November 30, 2010 at 5:06 PM  

அற்புதமான பர்ர்க்க வேண்டிய படம் .

பார்வையாளன் November 30, 2010 at 5:18 PM  

திருட்டு வி சி டி யை எதிர்க்கும் தார்மீக உரிமையை சினிமாகாரர்கள் இழந்து விட்டனர் என்பது குறித்து பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன்..

இலக்கு மட்டும் அல்ல முக்கியம் அல்ல ... அதை அடையும் வழிமுறையும முக்கியம் என்ற கோணத்தில் உங்கள் பார்வை இருக்கும் என எதிர்பார்த்தேன்...

மற்றபடி படத்தின் சிறப்பும் , உங்கள் அழகிய தமிழும் , எல்லோருக்கும தெரிந்த ஒன்றுதான்..

நான் ரசித்தது ( காப்பி அடிக்காத) உங்கள் பிளாஷ் பேக்.. ஒரு நிமிடம் நான் சந்தித்த நல்லவர்களை நினைவுக்கு கொண்டு வந்தது அது...

அமுதா கிருஷ்ணா November 30, 2010 at 5:23 PM  

பார்க்கணும்..

பாலாஜி சங்கர் November 30, 2010 at 5:24 PM  

கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.


எப்படிங்க இப்படி

தமயந்தி November 30, 2010 at 5:24 PM  

அற்புதமான பதிவு நர்சிம்....

raja November 30, 2010 at 5:40 PM  

நன்றி நர்சிம் நல்ல பதிவு

Arun November 30, 2010 at 5:43 PM  

//கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.// - இவ்வளவு அழகாக விமர்சனம் படிக்கவில்லை. இந்த ஒரு வரியில் எல்லாவற்றையும் அடக்கி விட்டீர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் November 30, 2010 at 6:15 PM  

நன்றாக இருக்கிறது நர்சிம்.

என். உலகநாதன் November 30, 2010 at 6:23 PM  

//இறந்த குழந்தையை பொட்டலம் கட்டிக் கொடுத்துப் போனாள் ஒரு தெலுங்கு நர்ஸ். அந்த நெடிய வராந்தாவில் தனித்து, நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறேன் குனிந்து பார்க்க திராணியற்று//

நர்சிம்,

மேலே உள்ள செய்தியை படிக்கும்போது மனம் பதறுகிறது. உண்மையாய் இருக்கக்கூடாது என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

karthikkumar November 30, 2010 at 6:34 PM  

படத்தை மட்டுமல்ல இந்த பதிவையும் திரும்ப திரும்ப படித்தேன். நன்றி

thamizhan November 30, 2010 at 6:36 PM  

படத்தில் ஆழமான பதிவு.எங்களால யும் முடியும்ல.

rajasundararajan November 30, 2010 at 6:36 PM  

//கீழே விழுந்து காயம்பட்ட பெண்ணின் காலை, அவள் அடித்தும் பொருட்படுத்தாமல் ‘எச்சி வய்யி சரியாயிடும்’ எனச் சொன்னவுடன், அவள் முகபாவம் மாறும் இடம்.. மனிதம், ஆனால் இந்தக் காட்சி இங்கேயே முடிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.//

ட்ராக்டர் கொண்டுவந்ததும் ஓ.கே.தான். உப்புமூட்டை சுமப்பது? அதில் அவள் சாண்ட்விச் ஆகிறாள். சரியாக மறைபொருள் கற்பித்தெடுக்கத் தெரிந்தவர்களுக்கு ஓ.கே.தான். ஆனால் பாக்கியராஜ் நம்மைக் கெடுத்து வைத்திருக்கிறாரே? வரலாறு முக்கியம்.

//இயேசுவின் மெழுகு, தொலைவில் புள்ளி வெளிச்சமாய் பரவிப் போய்க்கொண்டிருக்க, கடவுள் கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டில் அடங்கும் காட்சி.//

நல்ல கவனிப்பு உங்களுடையது. அங்கும் தாய்மை.

பழம் நினைவுகளில் தொடங்கும் கட்டுரையின் எடுப்பும் பொருத்தமாக உருக்கமாக இருக்கிறது.

காவேரி கணேஷ் November 30, 2010 at 6:38 PM  

அருமை..நர்சிம்.

நான் பார்த்த நந்தலாலாவை, உன் எழுத்துகளில் ஒற்றி படித்து முடித்தவுடன் என் கண்ணில் கண்ணீர் கொப்புளம்.


சுவரை உரசிக்கொண்டே ‘ரேடியோ பெட்டிய யாரோ உடைச்சுட்டாங்க’ என மிஷ்கின் அறிமுகமாகும் பொழுதே அவர் தன் தாய் மீது வைத்திருக்கும் வெறுப்பும் அறிமுகமாகிறது.

சுவரில் விரலால் ஒரு கீறல் போட்டு கொண்டே போவார் மிஷ்கின், படம் முழுவதும்.
படத்தின் இறுதி பாகத்தில் தன் தாயை தூக்கி செல்லும் பொழுது , தாயின் கால்விரல்க்ளும் சுவற்றில் தொட்டு கொண்டே செல்லும்.

நன்றி நர்சிம்..

taaru November 30, 2010 at 6:55 PM  

அய்யனின் கொஞ்ச கொஞ்ச இசை கேட்டு கலங்கிய கண்கள்...[இன்னும் படம் பாக்கல தல] .... இப்போ உங்க பார்வையில் "நந்தலாலா" வை படிக்கும் போதே ஒரு அம்மாவைக் காட்டிருச்சு... ஹ்ம்ம்ம்....ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்...

பிரதீபா November 30, 2010 at 7:33 PM  

படம் பாக்கணும்ன்னு தெரியுது..ஆனா எங்க பாக்கணும்ன்னு தெரியலையே.. நான் உங்க விமர்சனமும் படிக்கலைங்க நர்சிம்.. படம் பாக்கத் தூண்டி இயலாமை மேலிடும்.

கனாக்காதலன் November 30, 2010 at 7:43 PM  

//கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.//- அருமையான வரி அடக்குகிறது அத்தனை விமர்சனங்களையும்.

ரவிச்சந்திரன் November 30, 2010 at 8:50 PM  

நெகிழ்வு...

ராமலக்ஷ்மி November 30, 2010 at 8:55 PM  

நெகிழ்வான விமர்சனம். மிக அருமை.

prabhuraj November 30, 2010 at 11:30 PM  

Reviw is Poetic.Very much eager to watch this film.I loved that japansese ink. ;-).This is apt.

கலகலப்ரியா November 30, 2010 at 11:43 PM  

ம்ம்... உணர்வுபூர்வமா இருக்கு... இங்க வேற வழியில்ல... ஆன்லைன்லதான் பார்க்கணும்... பார்த்துடலாம்..

சுசி December 1, 2010 at 12:16 AM  

படம் பார்த்த மாதிரி இருக்கு நர்சிம். அருமையான விமர்சனம்.

விட்டுப் போன காட்சிகளுக்காக படம் பார்க்கணும்.

பார்ப்பேனான்னு தெரிலை.. இப்போவே தெரியுது அழுவேன்னு :((

லதாமகன் December 1, 2010 at 12:35 AM  

///கோடு வரைய ஜப்பானிய மை //- வரி அடக்குகிறது அத்தனை விமர்சனங்களையும்.

சிநேகிதன் அக்பர் December 1, 2010 at 12:37 AM  

உணர்வுப்பூர்வமான ஒரு கட்டுரை.

கிருத்திகன் December 1, 2010 at 2:47 AM  

//கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.//
அது ஒரு காலம்... உங்களைத் தொடர வைத்த அதேமாதிரியான வார்த்தைகள் மேலே :))

Balaji saravana December 1, 2010 at 8:05 AM  

தல இந்த விமர்சனம், படம் முதல் முறை பார்க்கப் போகிற எனக்கு அதனுடன் இன்னும் ஒன்றச் செய்துவிடுமென நினைக்கிறேன்

அத்திரி December 1, 2010 at 8:57 AM  

சகா படம் பாக்கனும் போலிருக்கு...........உங்களின் விமர்சனம்

மோகன் குமார் December 1, 2010 at 10:01 AM  

அருமை. இந்த வாரம் உங்கள் வாரமா?

இரா.சிவக்குமரன் December 1, 2010 at 10:16 AM  

நர்சிம்!!!!

செ.சரவணக்குமார் December 1, 2010 at 11:21 AM  

//இறந்த குழந்தையை பொட்டலம் கட்டிக் கொடுத்துப் போனாள் ஒரு தெலுங்கு நர்ஸ். அந்த நெடிய வராந்தாவில் தனித்து, நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறேன் குனிந்து பார்க்க திராணியற்று. சுழன்ற தரையை நிறுத்தமுடியாமல் விழப் போன நொடியில் என் தோள் பிடித்து அமரச்செய்தாள் பதின்மவயதுச் சிறுமியொருத்தி. தாயை நினைக்கும் தருவாயில் அவள் முகம் வராமல் இருப்பதில்லை இப்போது வரைக்கும்.
//

இதற்கு மேல் வாசிக்க முடியவில்லை நர்சிம். நெகிழ்ந்து கரைந்தேன் அந்தச் சிறுமியின் அன்பில்..
நாம் கடந்து வந்த தாய்களை நினைவுபடுத்தும் ஒரு சினிமாவில்..

பார்வையாளன் December 1, 2010 at 11:50 AM  

"கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும் "

அனுமதி இல்லாமல் அந்த மையை எடுத்து விட்டார்களே என்று எனக்கும் கண்ணீர் வருகிறது..

வழிப்போக்கன் - யோகேஷ் December 2, 2010 at 8:58 AM  

//கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.//

நான் வேறென்ன சொல்ல????

நர்சிம் December 6, 2010 at 1:54 PM  

நண்பர் பார்வையாளன் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த விளக்கம்..

அவரின் பதிவிலும் காணலாம்.

அன்பு நண்பருக்கு,

முதலில் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நான் தொலைபேயில் சொன்னது போல், வேலை அதிகம்.

1. ஆதாரக் கருத்தில் எந்த மாற்றமும் முரணும் இல்லை. இந்தப் படத்தின் இன்ஸ்ப்ரேஷன் இது வென மிஷ்கின் டைட்டிலில் போட்டிருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால்,

மிஷ்கின் போன்ற ஒரு கலைஞனை நாம் போற்றித்தான் ஆக வேண்டும்.

இதுவரை வெளிவந்த மிஷ்கினின் மூன்று படங்களுமே அற்புதமானவை. காட்சிகளில் குறியீடுகள் அதிகம் கவனம் செலுத்துபவை.

சித்திரம் பேசுதடி ஒரு சாதாரண காதல் படம் என்று கடந்து விட முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும் படியான காட்சியமைப்புகள் இருக்கும். சாலைகள், கால்கள், அப்பா, நேரெதிர் குணங்கள். வில்லன் கதாபாத்திரத்திற்குள்ளும் இருக்கும் நெகிழ்வும் நேர்மையும்.

இறுதிக் காட்சியில் வில்லன் தண்டபானி கத்திகுத்துப் பட்ட நரேனைப் பார்த்து ‘டேய் இவ உன் காதலின்னு முதல்லயே சொல்லி இருக்கக்கூடாதா’ எனும்பொழுது நமக்குள் சட்டென ஒரு நெகிழ்வு ஏற்படும்.

அஞ்சாதே.. இந்தப் படம் தமிழ் படங்களில் மிக முக்கிய ஒன்று. பரந்து விரிந்த வானத்தைக் கோணலாக காட்டி, கட் ஷாட் ஏதுமில்லாமல் இறக்கியது தமிழுக்குப் புதுசு.

நாயகனை அறிமுகம் செய்யும்பொழுது காலைக் காட்டுவது எல்லா கமர்சியல் படங்களிலும் இடம்பெறும். ஆனால் இப்படத்தில் வெற்றுக்காலுடன் ஆட்டோவில் தலைகீழாய் என , ஒற்றை ஷாட்டில் அவனுடைய கேரக்டரை உணத்திப் போகும் பாங்கு மிஷ்கினிடம் நிறையவே இருக்கும். படம் நெடுக குறியீடுகள் மட்டுமே. மிருகம் போன்ற பார்வை, முடி, நடை, நடுவிரலை விலக்கி வைத்தே நீரோ,பீரோ அருந்தும் பிரசன்னா..

கால் ஊனமான வில்லனின் குடும்பம்.. அவன் சாவு ஏற்படுத்தும் தாக்கம்.. போலிஸ் ஸ்டேஷனை அப்படியே காட்டிய காட்சிகள் என அஞ்சாதே குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படியான ஒரு திறமையான ஒரு இயக்குனர்தான் மிஷ்கின். நேற்று முளைத்து, இன்று டிவிடி திருடி நந்தலாலாவை வெளியிட்டுவிடவில்லை.

நர்சிம் December 6, 2010 at 1:55 PM  

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என பாரதியார் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும் பாணி.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா!

ஈறு கெடாத எதிர்மறைப் பெயரச்சம் இது. அகண்ட விசயத்தை இறக்கி வைக்க பாரதியார் தேர்ந்தெடுத்த வார்த்தை நந்தலாலா..

சுவரை உரசும் கரங்கள், அதே சுவரை உரசும் தாய்மைக் கால்கள்.

லாங் ஷாட்டிலும் க்ளோஷப்பிலும் முதலில் தெரிவது கால்கள், பூச்சியோ, மரமோ, மனிதனோ,.. தெரிவது கால்களே.. கால்கள் கொள்ளும் பயணமே வாழ்க்கை.. என குறியீடுகளை நம்பும் மிஷ்கினின் நந்தலாலா என்ற வார்த்தைப் பிரயோகமும் இது தத்தெடுத்த பிள்ளை எனவே நந்தலாலா எனும் குறியீடாயும் இருக்கலாம்.

ஒற்றை வார்த்தையில் நன்றி என ஜப்பானியத் திரைப்படம் குறித்துப் போட்டிருந்தால் உங்களின் அதிருப்தி திருப்தியாக மாறி இருக்குமா எனில் ஐயமே.

தோள்கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன்.. கிளிகள் என்ன என்பது கண்ணதாசருக்குத் தெரியும்.. கம்பர் சொன்ன தோள்கண்டார் தோளே கண்டார் வேறு.. ஆனாலும் அதன் தாக்கம் இது. அதற்காக கம்பருக்கு நன்றி சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. தாக்கத்தில் எழும் படைப்புகளே படைப்புகள்.

அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.. என கண்ணதாசன் எழுதியதைப் போல இலக்கியச் சுவை வேறெங்கு கிடைக்கப்போகிறது. இங்கே எது காய் எது திக்கு என பிரித்துப்பார்த்தால் பாடல்.. தேன்.

எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் சாப்பிட்டுத் தூங்கி, எழுந்ததும் பேனாவைத் திறந்து, மூடியைப் பின்னால் சொருகி எழுதப்படுவதில்லை எந்தவொரு படைப்பும்.

நீங்கள் நான் உட்பட எழுதும் அனைவரும் ஏதேனும் ஒரு தாக்கம் தந்த பாதிப்பிலேயே எழுதுகிறோம். என் கிராமத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களின் பாதிப்புகளே என் கதைகள். எழுதும் விதத்தில் வித்தியாசப்பட்டு நிற்கிறோம்.

டைட்டில் கார்டில் அவர் ’நன்றி ‘ போட்டிருந்தாலும், குறை என நிறையச் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் இங்கே, தழுவல், திருட்டு, காப்பி எனும் குரல்களில் அத்தனையும், நாங்கள் உலகமொழிப்படம் பார்க்கும் அறிவுஜீவிகள் எங்களை ஏய்க்க முடியாது எனும் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறதேயொழிய, இரு படங்களுக்குமான ஆதார வேற்றுமைகளையும் மிஷ்கின் கையாண்ட நேர்த்தியையும் நோக்கும் நோக்கம் இருப்பதாகப் படவில்லை.

எல்லாப் பேட்டிகளிலும் ஜப்பான் படம் குறித்து அவர் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்.

ஒரு படைப்பாளியாக நீங்கள் கேட்ட அதே மனநிலையில் இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில், ஆம் கிகுஜிரோவின் பாதிப்பு என்று டைட்டிலில் அவர் போட்டு இருக்க வேண்டும்.

என்னளவில், கிகுஜிரோவை பலமடங்கு தாண்டியது நந்தலாலாவின் உயரமும் குறியீடுகளால் நிறைந்த காட்சிகளும்.

நன்றி.

அன்புடன்
நர்சிம்