பாஸ்கர் சக்தியின் புத்தக வெளியீட்டு விழா..

ரமேஷ் வைத்யா... முதன்முதலில் இவரைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பரிசல்.. ரமேஷ் என் விரல் பிடித்து ஜூனியர் விகடனில் எழுத வைத்தார். பின் சட்டையைப் பிடித்து, “அனாவுக்கு அனா, ரனாவுக்கு ராவன்னா போடுறது இல்லடா தமிழ்..மொழிங்கிறது வேற..அதுல எழுத்துங்குறது வேறவேற..என சொல்லிக்கொடுத்து..ஆழமாக அறிய வேண்டும் என்றால் இவரிடம் பேசு என்று அறிமுகப் படுத்தினார் பாஸ்கர் சக்தி ஸாரை..இப்பொழுது ஸார் என்பதை விட நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் தைரியம் இருக்கிறது எனக்கு.

சிறுகதைப் பட்டறை அன்று தன் எழுத்தில் வந்த ‘தக்ளி’ என்ற கதை குறித்து பேசிய பாஸ்கர் சக்தியின் கதைகளைத் தேடிப் படித்து, இப்பொழுது தேடித் தேடி படித்துக் கொண்டு இருக்கிறேன்.

கனக துர்கா..இதுவரையிலான பாஸ்கர் அவர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு. இந்த புத்தகம் பற்றிய என் பார்வையை விரைவில் பதிவேன்.


இன்று கனக துர்கா உட்பட மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடப் படுகின்றன.

தகவல்களுக்கு நண்பர் சிவராமனின்(பைத்தியக்காரனின்) பதிவில் இருந்து..


மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியீட்டுவிழா: இடமாற்றம்

இன்று மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள 'புக் பாயிண்ட்' அரங்கில் நடைபெறுவதாக இருந்த வம்சி பதிப்பகத்தின் 'மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியீட்டுவிழா' சில எதிர்பாராத காரணங்களால் வேறு இடத்தில் நடைபெறுகிறது.


இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை


இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள்.


எந்தெந்த சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகின்றன, யார் யார் பேசுகிறார்கள் என்பதை அறிய,

http://naayakan.blogspot.com/2010/01/blog-post_3086.html

..

அனைவரும் வருக.

வானமற்ற வனம்

கொல்

அவனை அப்படிச்
சொல்லி இருக்கக்கூடாது
அவனும் அப்படிச்
சொல்லி இருக்கக்கூடாது
சொல்லில்
என்ன இருக்கிறது?
பூப்பதும்
காய்ப்பதும்
தாண்டி
இலைகள்
அம்மணமும் மறைத்தனவே
சொல் போல-
சொல்லில் என்ன
இல்லை
சொல்


வானமற்ற வனம்


சோப்புக் குமிழை
ஊதி விளையாடும்
சிறுவன் அப்
பறக்கும் பந்தின்
பின்னால் ஓடுவதும்
தாவித் தொட
முயல்வதுமாய்
இருந்தான்
ஒவ்வொரு தாவலிலும்
சிந்தும் கரைசலை
கவனிக்கவில்லையவன்.
காற்றில் உடைந்தது பந்து
ஊத மிச்சமில்லாமல்
சிந்திப்போன
காலிக் குடுவை
வானம் பார்த்துச்
சிரிக்கிறான்

மதுரையில் குட் டச் பேட் டச்: டாக்டர் ஷாலினி..தொடரும் பயணம்

சென்ற வருடம் மே மாதம் சென்னையில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் ஓரளவிற்கு உபயோகமானதாக இருந்திருக்கக் கூடும். இதன் தொடர்ச்சியாக நண்பர் எஸ்.குமாரின் முனைப்பிலும், மதுரைப் பதிவர்களின் உழைப்பிலும் வரும் ஞாயிறு அன்று மதுரையில் கருத்தரங்கு நடக்க இருக்கிறது.

தினசரி நாளிதழ்கள் இப்பொழுதெல்லாம் பாலியல் குற்றங்களுக்கென தனி பக்கம் ஒதுக்கும் அளவிற்கு நிலை மோசமாக இருக்கிறது. அதில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் சதவீதம் கூடிக்கொண்டே போகிறது.

மென்களிமண்கள் வார்ப்புகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் வயதில் வன்கொடுமை கரங்கள் பிசைந்துருட்டி எறிந்தெரித்து இதயத்தை எப்பொழுதும் இருட்டாகவே வைத்துவிடுகிறார்கள்.

இருள் விரட்டும் பணியில் பதிவர்கள் டாக்டர் ஷாலினியின் துணையோடு சென்ற ஆண்டு துவங்கிய பயணம் மதுரையில் தொடர்கிறது.

இதை மதுரையில் நடத்த ஏற்பாடுகள் செய்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றிகள். நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்.

நாள் : 31.01.2010 ஞாயிறு

காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை

இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )

கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி


பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.சமூகத்துக்கு நம்மாலான ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வடிவம்தான் இந்த சிறு முயற்சி. இதற்கு நண்பர்கள் அனைவரும் உங்களுடைய ஆதரவினைத் தர வேண்டும் என மதுரைப் பதிவர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மதுரையில் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன். THIS IS JUST THE BEGINNING.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்தால் மற்ற ஏற்பாடுகள் (போக்குவரத்து, சிற்றுண்டி) செய்வதற்கு வசதியாகஇருக்கும்.

அலைபேச:

தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138


மின்னஞ்சல் தொடர்புக்கு:

dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com


இது குறித்து நண்பர் கார்த்திகை பாண்டியனின் இடுகை

..

மும்பை போவதற்கு விசா வாங்க வேண்டுமா?

குடியரசு எல்லாம் ஓக்கே..ஆனால் மும்பையின் நிலையைப் பார்த்தால் அப்படித்தான் ஆகப் போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு கலந்து வந்த தாக்கரேக்கள் பத்தாது என்று இப்பொழுது காங்கிரஸ் கட்சியினரும் அற்புதமாக ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

“மகாராஷ்ட்ராவில் கார் ஓட்டிப் பிழைக்க வேண்டுமானால் மகாராஷ்ட்ரியனாகத் தான் இருக்கவேண்டும். மராட்டி மொழியில் எழுத படிக்கத் தெரிந்தால் தான் டாக்ஸி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.”

இதைச் சொன்னது தாக்கரே வகையறாக்கள் இல்லை.. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவின் தேசிய பாரம்பர்ய கட்சியான காங்கிரஸ் ஆட்சியாளர் போட்ட சட்டம் தான் இது.

இந்தியாவில் மும்பை தனி நாடாகப் போகப்போவது வெகு விரைவில் நடக்கக் கூடும். அங்கிருக்கும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளைக் கிளறிக் கிளறி அரசியல் செய்து கொண்டிருக்கும் வாதிகள் மிகத் திறம்பட தனிநாடு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்வில் ஒரு முறையாவது வெளிநாடு போகவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை உடையவர்கள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருப்போம்..மும்பை நாட்டிற்குப்,ஆசை தீர விசா,பாஸ்போர்ட் சகிதம் போய் வரலாம்.. ஸாரி போகலாம்..திரும்ப வரமுடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காட்டுமிராண்டிகள் தேசமல்லவோ.

மும்பை என்றதும் பதிவர் அனுஜன்யா நினைவிற்கு வருகிறார். கூடவே அவர் தொலைபேசியதும்..

“என்னடா ரொம்ப நாளா ஆளையே காணோம்? கொடைக்கானல்ல இருந்து எப்ப வந்த?”

“கொடைக்கானலா? “

“செக்கர் வானம் படிச்சேண்டா..குட்.. குளிரா அங்க”

“அண்ணா அது முழுக்கப் புனைவு..”

“அதானேப் பார்த்தேன்.. மோகன்னு ஒருத்தன் நிம்மதியா இருந்தா நம்ம மக்கள் அப்பிடியே விட்டுருவீங்களே.. திரும்பவும் ஞாபகப் படுத்தி, படுத்த மாட்டீங்களே..ஏன் இப்பிடிப் பண்ணான் படுபாவின்னு யோசிச்சேன்.. நல்ல வேளை புனைவா..குட்”

“அதே தான்.. நல்ல்ல்லா வானத்தக் காட்டுவோம்..பாவம்”

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கட் ஆகிவிட்டது. டவர் கோளாறோ என்று மீண்டும் அழைத்தேன்..

”ஆப் டயல் கியா ஆத்மி பீவிஸே மார் பட்ரஹாஹே..பாத் மே கால் கரோ..”

னு மராட்டில வராம ஹிந்தியில் வந்தது.. வீட்ல இருக்குறத மறந்து பேசிட்டாரு போலன்னு ஸ்விச் ஆஃப் பண்ணிட்டு வீட்டுக்குள்ள போய்ட்டேன்..கோடில ஒருத்தர் அவரு..கேடில ஒருத்தர் நம்மனு விருது கொடுக்க வேண்டியது தான்.

விருதுன்ன உடனே பாலா ஞாபகம்..போனவருசம் சகா கார்க்கி துவைச்சு தொங்கப் போட்ட நான் கடவுள் பட இயக்குனர் பாலாவுக்கு விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் பாலா.. நான் கடவுள் பற்றிய எனது இந்தப் பதிவில் பதிவர் பைத்தியகாரனின் பார்வை தேசியம் வரை பாய்ந்திருக்கிறது. மகிழ்ச்சி.

அப்போ இந்த வருடம் கார்க்கி மோசம் என்று சொன்ன ஆ.ஒ வனுக்கு அடுத்த வருடம் விருது நிச்சயம் என லாஜிக் பார்க்கலாமா? என்னாது ‘லாஜிக்’ ஆ..ஆள விடுங்கடா சாமிகளாவா.. ஓக்கே சகா..

குடியரசு தின வாழ்த்துகள்..ஜெய்ஹிந்த்.

செக்கர் வானம்...

நண்பர்கள் சிலரோடு கொடைக்கானல் சென்ற நிகழ்வு மறக்கவே முடியாத ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர் நண்பர்களில் ஒருவன் ஏதோ மன வருத்தம் காரணமாக குடும்பம் பிரிந்து விரக்தியில் இருந்தான். கல்லூரி நாட்களில் சிரித்துச் சிரித்துக் களித்துக் கழித்த நாட்களை மீண்டும் கொண்டாடும் பொருட்டும் நண்பனுக்கு தற்காலிக ஆறுதல் என்ற பெயரில் எங்களின் வெளிச்சொல்ல இயலா இன்னல்களை மறக்க ஒரு சந்தர்ப்பம் என்பதாலும் கிளம்பிவிட்டோம்.

அதைப் பற்றிப் பேசும்பொழுதே கல்லூரி நாட்களில் இருந்த மனப்பான்மையும், பிரயாணப் பந்து சுழலும் வயிறும் என ஆயத்த வேலைகள். அலுவலக விசயமாக வெளியூர் போன்ற பொய்கள் சொல்ல ஏதுவான வாய்மையிடத்த குறலை குரல்வளையில் வைத்து, சிக்கல் ஏதும் இல்லாமல் ஒரு வார இறுதியில் கிளம்பி விட்டோம்.

மோகன் தான் வீட்டில் சண்டை போட்ட நண்பன். ரவியும் வேலவனும் நானும் என நால்வரும். காலம் எங்களைக் கொஞ்சம் நாகரீகமாக மாற்றி இருந்ததை யோசிக்காவிட்டாலும் நினைத்துக்கொண்டோம். முன்பெல்லாம் பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காகவும், எந்த நண்பன் பக்கம் யார் அமர்வது என்பதற்காகவும், சரக்கை யார் ஹேண்டில் பண்ணுவது என்பதிலும் நிறைய மனஸ்தாபங்கள் வரும், போகும். இப்பொழுது அதையெல்லாம் தாண்டிய ஒரு நிலை என்றாலும் ரத்தத்தில் கலந்து போன வார்த்தைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை என்பதனால் பயணம் முழுக்கவே பஞ்சு போன்ற லேசான மனநிலை.

“மாப்ள, பூம்பாறைல லைட்டா ஒரு கட்டிங்க ஆத்திட்டுப் போவம்டா”

“வேணாம்டா, வண்டி ஓட்ட வேணாம அவென்?”

வண்டி ஓட்டுபவனுக்கு சுர்ரென்று தன்மானம் வந்துவிடும்.. “ஏ அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல..இனி ரோடு ஃபிரீயாத்தான் இருக்கும்”

“வேணாம்டா”க்கள் பெரும்பான்மையில் வென்று ஒரே அழுத்தில் கொடைக்கானல் அறையடைந்து தூங்கிவிட்டோம்.

“ஏய் இங்கப் பாருங்கடா” மோகனின் உலுக்கலில் எழுந்த நாங்கள் மூவரும் அவன் காட்டிய திசைப் பார்த்து ஆச்சர்ய மூர்ச்சையானோம்.

அறைக்கு வெளியே,வெண்புகை மண்டலம் போன்ற பனிமூட்டம்..பச்சைப் பசேல் புள்வெளியெங்கும் செடிகள்..செடிகளில் எங்கும் மலர்கள்..மலர்களெங்கும் பனித்துளிகள் என அவ்வளவு ரம்மியமாய் இருந்தது. புதிய விடியல் என்ற வார்த்தையை ஃப்ரெஷாகப் பார்த்தோம்.

அந்த உற்சாகத்தோடே, குளிக்கச் சென்று,சத்தமாக நீரைக் கீழே கொட்டிவிட்டு,உஷ்ஷப்பா என குளிரில் குளித்தது போலவே நடித்து கிளம்பிக் கொண்டிருந்தோம்.

மோகன் கிளம்புவதும் சிறு சுவாரஸ்யம் தான். சட்டையை பேண்ட்டிற்குள் நுழைத்து, கைகள் இரண்டையும் மேலேத் தூக்குவான். நிகழ்வின் நீட்சியாக(?!) சட்டை கொஞ்சமாக பிதுங்கும். அதை மெல்லிசாக நீவி விட்டு பெல்ட்டை மறைத்து, அதை கண்ணாடியில் உறுதியும் படுத்திக் கொள்வான். அடுத்து, கொஞ்சம் பவுடரை கையில் கொட்டி, சீப்பின் பின்பக்கத்தைக் கொண்டு அச்சு எடுத்து நெற்றியில் ஒரு கீறல். கிளம்பிவிட்டேன் நான் என்று அர்த்தப் படி கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே லேசாக ஒரு கை தட்டல்.

அதைப் பார்த்து லேசாகச் சிரித்துக்கொண்டு கிளம்புவோம். அன்றும் சிரித்துக் கிளம்பினோம்.

சூசைட் பாயிண்ட், பில்லர் ராக், லேக் வியூ என அந்தக் குளிரும் வெயிலும் கலந்த தினம் கும்மென்று உற்சாகத்தோடு போனது..பானம் வேறு உற்சாகத்தை உள்ளேயிருந்து அதிகப்படுத்தியது.

மோகனின் உற்சாகம் மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. போன நோக்கமும் அதுதான். பச்சை வெயில், மஞ்சள் வெயில் என மாறிக்கொண்டிருந்தது நாள். மனதும் வண்ணமயம்.இன்னும் இரண்டு நாட்கள் இங்கிருந்தால் பழைய மோகனாகிவிடுவான். தன் ஈகோ மறந்து மனைவியின் சண்டையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்துவிடுவான் என நினைத்துக் கொண்டேன்.

“டேய் மாப்ள, இந்தப் பக்கம் பாருடா” மோகனின் குரலைக் கேட்டுத் திரும்பினோம்.

சூரியன் அடிவானின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு உட்புகும் முயற்சியால் தெரித்த செக்கச் சிவப்பு சிதறல்கள் அப்படியொரு அழகாய் இருந்தது. லேசான தூறளினூடே,வெள்ளையிதழ் மலர்கள் செவ்வெண் நிறத்தில் தகித்தன.

தேனிலவு தம்பதிகள் விரல்கோர்த்து அடிவானம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.. பல நிலவுகளைப் பார்த்தவர்கள் பிள்ளைகளின் பிஞ்சுவிரல் பிடித்தவாரே நடந்து கொண்டிருந்த காட்சியும் செவ்வானமும்...

ஒரு நிமிடம், “குடும்பத்தோடு வந்திருக்க வேண்டும் இங்கே” என்று எண்ண வைத்தது அன்றின் முதல் முறையாக..நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே..

“ஊருக்குப் போலாம்..வாங்கடா, அடுத்த வாரம் என் வொய்ஃபோட இங்க வரணும் போல இருக்கு”

பதிலுக்குக் காத்திருக்காமல் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான் மோகன்.

இன்று அவன் மகளைப் பார்த்தாலும் “உங்கப்பன் செக்கர் வானம் இருக்கானா?” என்று தான் கேட்பது வழக்கம். சில நிறங்கள் மனங்களைப் பேசுகிறது..ஈகோவாலோ அல்லது பொருள் தேடும் நிமித்தம் வெளியூரில் வேலை என பிரிவின் போது இது போன்ற சில காட்சிகளும் இயற்கையும் துணையின் மீதான நினைப்பையும் கூடவே,பரிவையும் அன்பையும் இழுத்து வந்துவிடுகிறது...தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றாக இந்தப் பாடல் போல...

விளக்கம்

மேகங்கள் விளையாடும் மலைகள் சூழ்ந்த சிறிய ஊரில் பால் கொடுக்கும் பசுவானது தன் கன்று இருக்கும் திசை நோக்கிச் செல்லும் முல்லை நிலத்தில் பச்சை இலைச் செடிகளில் புதிதாய் பூத்த தூய வெண்மலர்கள் அந்தி நேர வானத்தின் செந்நிறத்தால் மிளிர்கின்றன. இப்படி மழைக்காலமும் மாலைநேரக் காட்சியும் சேர்த்து என்னை வாட்டுவதால் இனி நான் உயிர்வாழமாட்டேன் என்று தோன்றுகிறது தோழி!

சிறப்பு :

வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று’

அற்புதமான வார்த்தையாடல்...மேலும், காட்சிகள் கண்முன் விரியும் வண்ணம் எழுதப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. பருவம் கண்டு அழிந்ததை தலைவி குறிப்பால் உணர்த்துவதும்.

பாடல்:

மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படரப் புறவில்
பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல் தோழி! யானே


முல்லைத் திணையில் புலவர் வயிலான் தேவன் பாடியது.

..

என்’ணங்கள்

நன்றி..என்கிற வார்த்தையை போட்டாலும் போட்டேன் கிட்டத்தட்ட எண்ட் கார்டு டைட்டில் மாதிரி ஆகிவிட்டது என் வலை. எவ்வளவு வேலை இருந்தாலும் ஏதாவது எழுதுவது வழக்கம் ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக சுத்தமாக தொடவே முடியாத அளவிற்கு வேலை. ‘நிறைய பேர் கேட்பார்களே என்ன செய்வது?’ என்று யோசிக்க வேண்டியதில்லை அடுத்த முறை எனும் படியாக யாரும் கேட்காமல் இருந்தது உணர்த்தியது. ஒரு வழியாக வலைப்பக்க வழக்கமான வலத்தை இனி தொடரலாம்..பதிவுகள் வளமாக இருக்கவேண்டும் என்ற முனைப்போடும்.(ல,ழ,ள..வந்தாச்சாப்பா..ரைட்ட்டு)

**********

இன்று காலையில் தான் கடந்த வாரத்தின் பதிவுகளை படிக்க முடிந்தது. அதிர்ச்சியான விசயம் வேலன் அண்ணாச்சி கார்க்கிக்கு இட்ட பின்னூட்டமும் அதனடுத்த அவரது பதிவுகளும். “உனக்கு ஏன் அதிர்ச்சி?” ( பராசக்தி பட வழக்கறிஞர் “உனக்கேன் அக்கறை” மாதிரி) என்றால்...

வடகரை வேலன் அண்ணாச்சி எந்த விசயமாக இருந்தாலும் சற்று கூட இல்லை நிறையவே நிதானமாக இருப்பார். இடியே விழுந்தாலும் நிஜமாகவே விழுந்ததா இல்லை வெறும் சத்தமா இல்லை இடி மாதிரியான ஏதாவது ஒன்றா போன்ற கேள்விகளைத் தனக்குள்ளும் எழுப்பி அதையே பொதுவிலும் கேட்டு பின் தான் ஒரு முடிவுக்கு வருவார். பெரும்பாலும் அவரின் முடிவுகள் சரியாகத் தான் இருக்கும்( இவ்வளவு ஆராய்ச்சி பண்ணா சரி இல்லாமலா இருக்கும்!).

ஆனால் கார்க்கி விசயத்தில் எடுத்த எடுப்பில் ஒளிவட்டம், மேதை என டமால் டுமீல் வார்த்தைகள் கொஞ்சம் என்னைக் காயப்படுத்தியது. கார்க்கி அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டிருக்கலாம் ஆனால் எனக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஏனெனில் சில வார்த்தைகள் யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிறைய முக்கியத்துவம் வாய்ந்ததாகி விடுகிறது. முக்கியமற்றவர்கள் சொல்லும் சில நல்ல வார்த்தைகளும் காற்றில் போய்விடுவது போல.

கருத்தா எதிர் கருத்தா என வரும்பொழுது கருத்து தானே?

கார்க்கியா செல்வராகவனா என வரும்பொழுது கார்க்கி தானே?..அண்ணாச்சி?

அந்த செல்வாவுக்கு உங்களின் கடிதப் பதிவு சங்கடப் படுத்தியது அண்ணாச்சி. ஏனெனில் அது செல்வாவிற்கு எழுதப்படவில்லை என்பதால்.

********

ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன்(ஹுக்கும்..இன்னும் நீ வேறயாடா என கேட்பவர்கள் மன்னிக்க..)

கற்பனைக் கதையில்,ரசிகர்களை, சோழர்களின் வாழ்வுமுறையை வேறு விதமாக கற்பனை செய்ய தூண்டும்படி அமைத்தது கொஞ்சம் வக்கிரமான கற்பனை.

எடுக்க நினைத்த கதைக்களமும் தமிழ்படம் விட்டு கொஞ்சம் விலகி யோசிக்க துவங்கி இருப்பதும் நன்றாக இருந்தது செல்வா. இன்னமும் கொஞ்சம் விலகுங்கள் ஆங்கிலப் படங்களையும் விட்டு..

**********

விஜய் டிவியில் நீயா நானா.. நீண்ட நாட்களுக்குப்பிறகு கொஞ்சம் நல்ல தலைப்பு. பேச்சாளர்கள் அப்டேட்டட் ஆக இருக்கிறார்களா? பொறுப்புணர்ந்து பேசுகிறார்களா? என்ற ரீதியில்... நன்றாகவே பேசினார்கள்.

எழுத்தாளர்கள் பக்கம் க.சீ.சிவக்குமார்,எதிரில் பேசிக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரைப் பார்த்து “பரிதாபப் படுகிறேன் உங்கள் மாணவர்களைப் பார்த்து” என நன்றாக ஒரு நக்கலை வெளிப்படுத்தினார். வெகு நேரம் ஆனது சிரிப்பை அடக்க..ஆனாலும் நாகரீகம் கருதி தன் கருத்தை லேசாக மாற்றி கொதித்துப் போன அந்த ஆசிரிய பேச்சாளரை மூச்சு விட விட்டார். கலக்கல் க.சீ.சிவக்குமார்.

மிக மிக தாமதமாக நான் வாசித்த புத்தகம் க.சீ.சிவக்குமாரின் ஆதிமங்கலத்து விசேசங்கள். இந்த புத்தகத்தை படிக்காதவர்கள் தயவுசெய்து படித்துவிடுங்கள். என்னா அலப்பறை.. கிராமங்களில் கண்டுபிடிப்புகள் நுழையத் துவங்கியதும் ஏற்படும் நிகழ்வுகளை விலா நோக சிரிக்கும் படி எழுதி இருக்கிறார். மிக ரசித்த புத்தகம்.

***************

ஒரு சிறுவனுக்கும் அவன் பாட்டிக்கும் இடையில் நடக்கும் அல்லது நடக்காத அல்லது அவர்கள் நடந்து கொண்டே இருக்கும் சில காட்சிகளை மட்டுமே கொண்டு அவ்வப்பொழுது கண்களின் ஓரத்தில் லேசாக நீர் வரச் செய்யும் அளவிற்கு ஒரு படம் எடுக்க முடியுமா என்றால் முடிந்தது.. The Way Home...இந்த மேக்கிங் அது இது என்றெல்லாம் சொல்கிறோமே அது எது என்றால் இந்தப் படம் தான். லீவிற்கு தன் பாட்டி வீட்டிற்கு வரும் ஒரு சிறுவனுக்கும் அந்தப் பாட்டிக்கும் இடையில் வார்த்தைகளே இல்லாமல் நடக்கும் ஒரு வித நெகிழ்வான காட்சிகள். சிறுவன் நடித்தானா அல்லது அவனுக்குத் தெரியாமல் கேமாராவை வைத்து எடுத்தார்களா எனும்படியான நேர்த்தி..ஒரு இடத்தில் கூட தப்பித் தவறி அவன் கேமராவையோ, அல்லது கோணல் சிரிப்போ எதுவுமே இல்லை.. நன்றி உரையாடல் அமைப்பு.

************

பதிவர் அய்யனாரின் உரையாடலினி புத்தகம்..மிக நேர்த்தியாக இருந்தது..அச்சிலும் அச்சில் இருந்த வார்த்தைகளிலும். அருமை. பல இடங்களில் மினிமம் மூன்று முறை படிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது அல்லது அய்யனாரின் புத்தகத்தைப் படிக்கிறோம் என்று மூளையின் சப்டெக்ஸ்ட்டில் ஓடிக்கொண்டிருப்பதாலும் இருக்கலாம்.

ஆனால்..படித்து முடித்தவுடன் ஓரிரு நாட்கள் எல்லாக் கதாபாத்திரங்களும் நினைவிலிருந்து அகல மறுக்கும்படியான எழுத்து.. நன்றி அய்யனார். அற்புதமாய் வாசகரை உள்ளிழுக்கும் எழுத்தைத் தொடருங்கள்.

************

கோபம்எனும் மதயானை கொண்ட மதத்தைத்
கூர்கொள்யுத்தி அங்குசத்தால் கொன்றழித்தோம்காண்
தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளைச்
சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே!

பாம்பாட்டிச் சித்தர்.

..

நன்றிகள்...

பதிவுலகிற்கு வந்த ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை என் மீது மிகுந்த நம்பிக்கையும், தொடர்ந்து உற்சாகமும் அளித்துவரும் பதிவர்,மருத்துவர் புருனோவிற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். தமிழ்மண விருதுக்கு என் இந்த இடுகையை தேர்ந்தெடுத்து இணைக்கக்ச் செய்தவரும் அவரே. நன்றி புருனோ.

பரிந்துரைத்து வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றிகள்.இந்தத் தகவலை அலைபேசியில் முந்தித் தந்தவர்களுக்கும் நன்றிகள்.

தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தமிழ்மணத்திற்கு நன்றிகள்.

தோழர் மாதவராஜ்...மிக்க நன்றிகள் தோழர். வலைப்பூக்களில் இருந்து தேர்ந்தெடுத்த கதைகளில் என் கதையையும் இணைத்ததற்கு. வெகு நேர்த்தியான அச்சில் மிக நல்ல புத்தகமாக வெளியிட்ட வம்சி பதிப்பகத்திற்கும் தோழர் மாதவராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

அகநாழிகை வாசுவிற்கு..சில முதன்முதல்கள் மறக்கமுடியாதவை. அதில் முக்கிய முதல்,அகநாழிகையின் முதலுக்கும் மோசமில்லாதவாறு அமைந்த அய்யனார்கம்மா.. இரண்டாம் பதிப்பு பற்றி நேற்றுப் பேசி பால் வார்த்த வாசுவிற்கு நன்றிகள்.

அதிஷா... பாஸ் நானும் பதிவர் சந்திப்பிற்கு வரலாமா? என்று இவரிடம் முதன்முதலில் ஒரு பின்னூட்டம் மூலம் கேட்டு, இவரைப் பார்த்து, பேசி..என ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை அதே அன்போடும் தூய நட்போடும் இருக்கும் அதிஷாவிற்கும் நன்றிகள். அதிஷா அன்று என்னிடம் சகஜமாகப் பேசி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தபின்னர் தான் என்னை அனைவருக்கும் தெரிந்தது என்பதால் அதிஷாவிற்கு நன்றிகள்.

அன்புடன் மணிகண்டன்...பெயருக்கு முன்னால் சும்மா பெயருக்காக போட்டுக்கொள்ளாமல் உண்மையிலேயே அன்புடன் இருக்கும் நண்பர். புத்தகவெளியீடன்று இவர் எனக்குப் பரிசளித்த ஓலைச்சுவடு வடிவிலான என் அனைத்து பதிவுகளின் பெயர்கள் தாங்கிய அந்த வாழ்த்துமடல் மறக்கமுடியாத மறக்கக் கூடாத ஒன்று. நன்றி நண்பா.

சக்தி..பாசகி என்ற பெயரில் எழுதும் சக்தி..இந்த வருடம் நான் கொடுக்கும் இந்த டைரியைத்தான் உபயோகிக்க வேண்டும்..இது என் அன்பையும் பக்கத்திற்குப் பக்கம் சுமந்த டைரி என்று அன்புக்கட்டளை இட்ட சக்திக்கும் நன்றிகள்.

இன்னுமின்னும் நன்றிகள் சொல்லவேண்டிய பெயர்ப் பட்டியல் மின்னும் பொன் மீதான ஆசையைப் போல நீண்டுகொண்டே...போகிறது.

எங்கோ பிறந்து, யார் எவரென தெரியா, இணையம் இணைத்த இதயங்கள். யார் எவர் எத்தேசம் ஏதுமறியாது..ஏன் நண்பர்களானார்கள் என்பது எப்படி கேள்விக்குறியோ அப்படியே தான் ஏன் எதிர்த்தும் நிற்கிறார்கள் என்பதுவும். நண்பர்களை பெற்றது என் செயல்கள் தான் என்றால் எதிர் கருத்து கொண்டவர்களைப் பெற்றதற்கும் என் செயல்கள் தான் காரணம்.பிறர்தர வாரா அவை நம் பின்னூட்ட செயற்காரணங்கள்.

பிரச்சனையின் போதான வேதனைகளும் அதனடுத்த ஆறுதல்களும் அப்படியே..பிறர் தர வாரா..

வாழ்வும் சாவும் புதியதொன்றும் இல்லை..போலவே இங்கும் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் புதியதொன்றுமில்லை என்று கண்டதனால்,

பெரிதும் மதிக்கும் சீனியர் பதிவர்கள், பெரிதாய் வியக்க வைக்கும் புதிய பதிவர்கள் என சூழும் இவ்வுலகில் தொடர்ந்து பயணிப்பது சுகமாய் இருக்கிறது இப் பா போன்றே...

யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே


கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல். இந்தப் பாடல் உணர்த்துவது நிறைய..அதனால் தான் யாவரும் கேளிர் என்ற பெயர்.

என்னை வாசிப்பதால் நேசிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

ஏ..பொங்க வையப்ப்பா...

அனேகமாக ராக்கி பாய்ஸ்,அபிநயா போன்ற ஏதேனும் ஒரு நடன நாட்டிய நிகழ்ச்சி, எங்காவது ஒரு கோயிலின் முன் தெருவை அடைத்து விழாக் கமிட்டிகள் ‘கெத்’தாக வண்டிகளை திருப்பி விடும் வைபவத்தில் தான் பொங்கலின் முந்தைய இரவும் கொண்டாட்டமும் துவங்கும்.

“தவுட்டுச் சந்தைல ரெண்டு லேடி ஆர்ட்டிஸ்ட்டு மாப்புள, ஆட்டமா தேரோட்டமா பாட்டுக்குத் தூக்கி சுத்துவான் பாரு..அங்க போவம்டா”

“போடா கொங்காப் பயலே..அது ஆம்பளடா,”

ஒரு வழியாக எந்த ஏரியாவுக்குப் போவது என்று எவனாவது முடிவு பண்ணிவிடுவான்.

“போன வருசம் வரண்ட இழுத்துப் பஞ்சாயத்துப் பண்ண பய மூணாவது வரிசைல இருக்கான் மாப்ள, இழுப்பமா” இது போன்ற பேச்சுக்கள் வரத்துவங்கியதுமே பம்மி உடனடி அலர்ட்டாக “ஏய் நல்ல நாளு அதுவுமா ஏனப்பா அதெல்லாம்” என்று கெஞ்சிக் கூத்தாடி(நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்..ஹுக்கும்) அவர்களை அடக்கி, மடக்குச் சேரைப் போட்டு அமர்ந்தால்...

டி.எம்.எஸ் மாதிரிப் பாடுபவர் டி.எம்.எஸ் மாதிரியே பவுடர் போட்டு,பிறைநிலா சந்தனப் பொட்டு சகிதம் அம்சமாக ஏதாவது ஒரு சாமிப் பாட்டை ஆரம்பிப்பார்...

விசில் பறக்க அடுத்து சந்தைக்கி வந்த கிளி பாட்டுக்கு டான்ஸ்..அவ்வப்பொழுது அந்தப் பெண் தன் முக்காப் பாவடையை சர்ர்ரென்று சுத்துவது ரொம்பப் பேமஸ். ரஜினியே தான் தான் என்பது போல பக்கத்தில் ஸ்டைல் பின்னப்படும்..நெற்றிக்கு மேலே இருபுறமும் ரஜினி போல மழித்து விட்டிருப்பதை மறைக்க அடிக்கப்பட்ட பவுடர் தூள் பறக்கும்.

“நடுவுல நான் ஒரு சின்ன சோக்கு சொல்லிக்கிறேன்” என மிகிக்கிரி ஆர்ட்டிஸ்டுகளாக தங்களைப் பாவித்துக்கொண்டு ரம்ம்ம்பமாகப் போட்டுத் தாக்குவார்கள். பெரும்பாலும் ரஜினி வாய்சும் ரகுவரன் குரலையும் நடுங்க விடுவார்கள். அதில் அவ்வப் பொழுது டபுள் மீனிங் சோக்குகள் வேறு.

திடீரென்று எங்காவது ஏதாவது சலம்பல் ஏற்பட்டு அமைதி காக்கச் சொல்லி விழாவை நடாத்திக் கொடுக்கும் கமிட்டியாளர்கள் அரட்டி,கெஞ்சி அடக்குவார்கள்.

முடிந்ததும் சைக்கிளில் பின்னால் அமர்ந்துகொண்டு, (சைக்கிளை கொஞ்ச தூரம் தள்ளி இரண்டு கால்களையும் அலாக்காகத் தூக்கி நேரே சீட்டில் உட்காரும் நண்பன் படு குஷியாக இருக்கிறான் என்று அர்த்தம்)அந்த அர்த்தராத்திரியில் அர்த்தமற்ற பேச்சுகள்.. தெரு நெருங்கியதும் துணியை தலை,காது என கவர் செய்து கொண்டு பெண்கள் ‘ஹேப்பி பொங்கல்’ போட்டு இரண்டு கரும்பை குறுக்கும் நெடுக்குமாக வரையும் கோலாகள காட்சிகளை ரசித்துக் கொண்டே வீடடைந்தால், அக்காக்கள்அரை வட்ட வடிவில் அமர்ந்து புள்ளிகளை வைத்து, அழித்து உச்சுக் கொட்டிக்கொண்டே கோல நோட்டை எடுத்து சரி பார்த்து...அந்தப் பின்னிரவு பனிபொய்த பூசணிப் பூவும் அது சொருகப்படும் சாணமும் பொங்கலை வாவென்று அழைக்கும்.

ண்ட வெல்லமா அச்சு வெல்லமா’

’எல்லாம் ஒண்ணுதான்,எதையாவது வாங்கிட்டு வந்துத் தொலடா’ என அதிகாலை தொடங்கும்,சில்லறை வேலைகள் தொடரும். கடையில் தேங்காய்ச்சில் வாங்கும் போது போன ஜென்மங்களில் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் கடைக்காரர் புதுத் தேங்காயை எடுத்து ஒரே அடியில் உடைத்து கொட்டாங்குச்சியில் அந்தத் தண்ணீரைத் தருவார். தேவாம்ருதம்.

மந்தையில் நட்டு வைத்து விற்கப்படும் கட்டுக் கரும்புகளை காண்பதே இனிக்கும்.

“கனு பக்கம் பக்கமா இருக்கேப்பா,” அவனவனுக்கு தெரிந்த வரையில் ஏதாவது பேசவேண்டுமே என்று பேசுவார்கள் வியாபாரியிடம்.

“கடிச்சிப்பாருங்க எட்டூருக்கு இனிக்கும்”

அவரவர் பொருளாராதார அடிப்படையில் அல்லது பிள்ளைகளின் பின்மண்டைச் சுழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டோ நான்கோ ஒரு கட்டோ என வீடேறும்.

இதில்,சொந்தகாரப் பெண்கள் பொங்கலுக்கு வீட்டிற்கு வந்தால் அவ்வளவுதான். பசங்க எவனும் வெளியே வந்தே தொலையமாட்டார்கள்.

“சுரேஷ் இருக்கானா”

“இல்லியே”..என்று கத்திவிட்டு மெதுவாக,அப்டின்னு சொல்லச் சொல்லுச்சுண்ணே..உள்ளதான் இருக்கு..”

உள்ளே போனால் தூணில் இரண்டு கைகளை வைத்து லேசாக, தூணுக்கும் பாதகமில்லாமல் கைக்கும் வலிக்காமல் ஊண்டி எழுந்துகொண்டிருப்பான்.. எக்ஸர்ஸைஸ் பண்ணுகிறாராம் அந்தப் பெண் முன்..நம்மைப் பார்த்ததும்,

“இல்ல மாப்ள, பெரிசு ஒரு வேல இருக்குன்னு சொல்லுச்சு அதான்”..என்று வாசல் பக்கத்தைப் பார்த்தோ மோட்டுவளையைப் பார்த்தோ பதில் வரும். கண்டிப்பாக நம்மை பார்க்காது கண்கள்.

“அப்ப கபடிக்கு வரலையா?” என்று கேட்டதும் அந்த டவுன் சொந்தக்காரப் பெண்.. “ஹேய் கபடி எனக்கும் பிடிக்கும் யா”(நதியாவாம்) என்பதை சட்டை செய்யாதவாறு நடித்துக்கொண்டே, “வா மாப்ள போலாம்” என்று அவன் முதலுக்கு மோசம் வராமல் நம்மை அங்கே இருந்து இழுத்துக்கொண்டு கிளம்பிவிடுவான்.

பொங்கல் காலை கபடி என்பது ஐநா சபையை விட பயங்ங்கரமான கட்டுப்பாடுகள் கொண்ட ஒன்று. வேடிக்கைப் பார்க்கப் போகும் நமக்கு விளையாட வேண்டும் போல் வெறியேற்றும் விளையாட்டு. ஆனால் அந்த வேண்டும் போல் என்ற வார்த்தையை மதித்து வெறுமாக பார்க்க மட்டுமே வேண்டும். மீறி ஆடினால் அடுத்தப் பொங்கல் வரை ஒரு கையையோ காலையோ இழுத்துக்கொண்டேதான் நடக்க வேண்டி வரும்.

“பெல்..கபோட்ஸ்ஸ்ஸ்” என தரையைத் தொட்டு கும்பிட்டு ஆரம்பிக்கும் அனல், வால்ட்டு, ரிவர்ஸ் கிக், ஜூட்டு என கடைசி வின்னிங் பாயிண்ட்டு வரைத் தெறிக்கும். இதில் ரெஃப்ரி பாடு தான் படு திண்டாட்டம். கொஞ்ச நேரம் மரியாதையாக் கேட்பார்கள். அப்புறம் அவர் மரியாதையையே கேட்டுத்தான் வாங்க வேண்டும். கேட்பார்.வாங்க மாட்டார்.

மீண்டும் வீட்டிற்கு வந்து பம்புசெட்டப்பக்கம் குளியலைப் போட்டு...இங்கே ஒரு செய்தி.. சாதாரண நாட்களில் நாம் எங்கே இருந்தாலும் ஆள்,அம்பு, சேனை அனுப்பி “சாப்பிடக் கூப்புட்டாங்கண்ணே உங்க வீட்ல” என வருந்தி அழைத்தாலும் பசித்தே தொலையாது. வீட்டில் போய் “பசிச்சா வரமாட்டேனா”க்களை சொல்லி சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடும் வயிறு இது போன்ற பண்டிகை நாட்களில் மட்டும், வீட்டில் தாமதமாகும் என்று தெரிந்தோ என்னவோ குளித்தவுடன் கபகப என்று அல்லையைப் பிடிக்கும். ம்ஹூம், வேண்டுமென்றே சமையலை ரொம்ப நேரம் செய்வார்கள். கரும்பும் சாமிக்கு வைத்தபின்னர் தான் என்ற கண்டிசன்கள் வேறு.

பொங்கப் பானையை அலங்காரம் செய்து மஞ்சகிழங்குச் செடியை கட்டி, செங்கலை அடுக்கி அதன்மேல் மானே தேனே பொன் மானோ போல அங்கங்கே குங்குமம்,மஞ்சள் என பொறுமையை சோதித்து ஒரு வழியாக பொங்கல் பொங்கும் போது அக்கிருட்டாக..‘பொங்கலோ பொங்கல்’ என அத்தை மகள் இருந்தால் இங்கிதமாகவும் அக்காக்கள் மட்டும் இருந்தால் சத்தமாகவும் கத்துவதே இனிக்கும்.

இனித்தது ஒரு காலம்.

பொங்கலோ பொங்கல்.

(முடிந்தவுடன் ஜல்லிக்கட்டு..அதை எழுதியாகிவிட்டது.)

என்’ணங்கள் 11/01/2010

நேற்றைய பதிவைப் படித்து மின்னஞ்சல்கள் அனுப்பிய,அனுப்பிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இந் நிகழ்வு குறித்த அடுத்தக் கட்ட தகவல்கள் தெரிந்தால் தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

***

ராஜிவ் கொலை சம்பந்த புத்தகம் குறித்த என் ஆதங்கம் நம் ஊர் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து. அந்தப் பதிவின் ஈரம் காயும் முன்னர் திருநெல்வேலியில் நடந்த நிகழ்வு என் பதிவை உறுதிப் படுத்தியது. ஆம் இவர்களை நம்பி இவர்களே வாழமுடியாமல் இருக்கும்பொழுது நம் போன்ற சாதாரண பிரஜைகள் எம்மாத்திரம்?

எவ்வளவு சகிப்புத் தன்மையை வளர்த்துக்கொண்டுள்ளோம்? அதுவும் ஒருவர் உயிருக்குப் போரடிக்கொண்டிருக்கும் சமயத்தில் கூட சகிப்புத் தன்மையோடு அதைப் பார்க்கும் அளவிற்குப் பக்கும் வந்துவிட்டது என்பதை நினைக்கும் பொழுது 2020க்கு முன்னதாகவே வல்லரசாகிவிடுவோம் என்று தோன்றுகிறது.

அந்த மாவட்ட ஆட்சியர் கொடுத்த பேட்டியில் “இறுதி வரை போராடினோம்.உடனே தகவல் கொடுத்தோம்,ஆனால் முடியவில்லை” என்கிறார். சர்ராப்பா.

தென்மாவட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் சகஜம் என வடநாட்டு டிவிக்களில் திருவாய் மலர்ந்த அரசியல்வாதிகளுக்கும் நன்றி.

*****

புத்தகக் கண்காட்சி.. இந்த வருடம் கொஞ்சம் ஸ்பெஷல். எங்கெங்கு காணினும் ஆக்கப்பூர்வமான பதிவர்கள். புருவ உயர்த்தல்கள். புன்னகைகள். அய்யனார் கம்மா விற்ற ஸ்டால்காரர் என்னைப் பார்த்துப் பெரிதாக சிரித்ததன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அவரிடம் தனியாகக் கேட்கவேண்டும். பார்ப்போம்..கேட்போம்.

தமிழினியில் சிவராமன் பரிந்துரைத்த புத்தகங்கள் அத்தனையும் அருமை. பதிவர் அதியமானிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னார்.. இவ்வளவு புக்ஸ் வாங்கிட்டு வீட்டுக்குள்ள கொண்டு போறது கஷ்டம்..திட்டுவாங்க அதனால நான் டெக்னிக்கா முதல்ல பில்ல கிழிச்சுட்டு, ஒவ்வொண்ணா கொண்டு போவேன்”

நான் சொன்ன பதில் : “ஹுக்கும்..பில்லோட போனாலாவது அதுல டிஸ்கவுண்ட் இருக்குறத ஃப்ரூஃப் பண்னலாம்..அதையும் கிழிச்சா கிழியவேண்டியதுதான்”

புத்தகம் வாங்கினோமோ இல்லியோ ஒவ்வொரு மாலையும் ஏதாவது சில பதிவர்களைச் சந்தித்து ஏதாவது பேசியது ஏகாந்தமாகத் தான் இருந்தது. குறிப்பாக மருத்துவர்,பதிவர் புருனோ கலக்கல்.

நன்றி பபாஸி.

****
சென்ற வார இறுதியில் என் நெருங்கிய நண்பன் அருவியில் குளித்து வெளியேறும்பொழுது கால் தவறி சுழலில் சிக்கி ஒரு நிமிடத்தில் இறந்தும் போனான். 24மணிநேரத் தேடலுக்குப் பிறகு அப்படியே கிடைத்தான்..ஸாரி கிடைத்தது அவன் உடல். இது போன்ற நிகழ்வுகள் வாழ்வைப் பற்றிய பற்றுதலை அறுக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் நானும் அவனும் நீச்சலில் அவ்வளவு சிறந்தவர்கள். எவ்வளவோ தூரத்தை போட்டிப் போட்டுக் கடப்போம். வாழ்க்கைச் சுழலில் கரையேறி வந்து குடும்பம் காத்தவன் நீர்ச்சுழியில் மாட்டிப் போய்விட்டான். அவன் பெயரையும் எண்ணையும் தாங்கிய செல்ஃபோனுக்குத் தெரியுமா இனி அந்தப் பெயர் டிஸ்ப்ளே ஆகாதென்று?

கறந்தபால் முலைப்புகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே..


என்ற சிவவாக்கிய சித்தர் தான் துணை.

****

11/01/2010(நாளை-திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்?????



இன்றைய ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்!

முள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.01.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை

http://www.un.or.id/contacts

என்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்!

படிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள்

http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html

http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367

இந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்!

மேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால் பெற முடியவில்லை

எனவே நான் un-indonesia@un.or.id என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன்.

Dear Sirs,

I understand that there are 255 defenseless, war stricken, terrified Tamil refugees pleading for asylum to the Government of Australia. They were caught by the Indonesian government at Jakarta and the Srilanka officials are now in Jakarata involved in interrogation of those poor Tamils. Also I learnt from the news agencies that the Sri Lankan Government plans to take them back to Sri Lanka on Monday in order to execute them.

Kindly stop the deportation of refugees fleeing from a government trying to kill them. This is like handing the Jewish people over to the Nazis, PLEASE HELP STOP THIS!
They survived a brutal genocide and lost everything before their eyes. These are innocent families, and right now, the genocidal Sri Lankan Government, the same one that destroyed everything in front of their eyes, disregarding the fact that they were civilians, that they were humans sent its Navy into Indonesian waters in order to bring them back to Sri Lanka on Monday,,January 11th . There are little children and babies on this boat, and every single one of these refugees will be killed if something isn't done to save them! They don't have UNHCR or any other ID cards, they will die, every single one of them. Please help save them!
--
K.Thangamani Prabu
Chennai, India
(நானும் மடல் அனுப்பியுள்ளேன்..இதைப் படிப்பவர்களும் அனுப்ப வேண்டும்)

மிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது http://www.un.or.id/contacts என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்!

வளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம்! என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம்! அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்!!

255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள்! ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம்.



(செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்)


*********

தங்கமணி பிரபுவின் இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியை கொஞ்சம் தள்ளி வைத்து நானும் மடல் அனுப்பி இருக்கிறேன்.. இதைப் படிப்பவர்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவு.

ராஜசுந்தர்ராஜனின் முகவீதி : தவறவிடுவது தவறு

சில வாரங்களுக்கு முன்னர் பதிவர் சிவராமன்(பைத்தியக்காரன்) அலைபேசியில் அழைத்து, “அய்யா ராசா ராஜசுந்தர்ராஜன்னு ஒருத்தர் உனக்கு பின்னூட்டம் போட்டு இருக்காரு, இவரு அவரா இருந்தா உனக்கு முத்தங்கள்.” என்றார். நான் எப்பொழுதும் போல மய்யமாக தலையாட்டிவிட்டு மேஜை மீது வைத்த செல்பேசியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ராஜசுந்தராஜன் என்பவரைப் பற்றி ஜ்யோவ்ரம்சுந்தரும் இன்னும் பலரும் பேசப் பேச, ஒரு வித மரியாதை கலந்த பயம் எழுந்தது.

சரி.. இவ்வளவு மரியாதையும் பயமும் கலந்து பேசுகிறார்களே அவரின் படைப்பை ராவிப்(தேடி) படித்துப் பார்ப்போம்..என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, பழைய டிடி நாடகம் போல ‘அடடே டாக்டரே வந்துட்டாரே டங்ங்’.போல,புத்தகம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் ’அடடே புத்தகக் கண்காட்சியே வந்துவிட்டதே’ என்று வாங்கினேன்..ராஜசுந்தர்ராஜனின் முகவீதி. மரியாதையும் பயமும் இருமடங்காகிப் போனது.

இதுவரை தான் சிரிப்பு. ஆம். புத்தகம் பிரித்தவுடன் இதழ்கள் பிரிவது ஒன்று உணர்வுமயத்தில் அல்லது ’அட ஆமாம்’க்கு தன்னிச்சையாக..

ஒவ்வொரு முழுநீளப் பக்கத்திலும் கீழே ஓரத்தில் சில வரிகள் தான். ஆனால் ஒவ்வொரு பக்கமும் முகத்தில் அறைகிறது, மனதைப் பிசைகிறது, வெறியைக் கிளப்புகிறது, ஆமாம் என்று உதடுகள் தன்னிச்சையாகப் பேசிக்கொள்கின்றன.

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வித உணர்வை விட்டுச் செல்கின்றன அல்லது தட்டிச் செல்கின்றன.

மேகத்தில் இருந்து
மழை மட்டும் அல்ல
மின்னலும் பிறக்கும்.


தலைப்பைக் கேட்டு மீண்டும் இந்த மூன்று வரிகளை படியுங்கள், தலைப்பு: புரட்சி.சுர்ரென்று ஏறுகிறதா?

மிகை...என்ற தலைப்பில் இருக்கும்

கேட்பதற்கு துளைகள் போதும்
என்றாலும் செவிமடல்கள்
(அறுத்துவிடலாமா?)

மானத்துக்கு ஆடை
அதில் ஆயிரத்தெட்டு வேலைப்பாடு

கருக்கொண்ட பின்பும்
புணர்ச்சி

உண்டமட்டில் உயிர் தங்காதோ
வீணையும் இசைக்கிறது


இந்தக் கவிதை எத்தனை வித உணர்வுகளைச் சொல்கிறது?

கிறுக்குப் பிடித்த பெண்ணைக்
கர்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி!
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி?


ஒரு ஆச்சர்யக்குறி அதனடுத்த கேள்விக்குறி இடைப்பட்ட வார்த்தைகளில் ஒரு மாபெரும் நம்பிக்கையை பார்த்து எறிந்த கேள்வி என ‘விபரீதம்’ என்ற தலைப்பில் மேற்சொன்ன கவிதை.

இன்று நாடே கருணைக் கொலை பற்றி ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது..

இதோ.. கொலை நியாயத்தில்

குற்றுயிரும் குலையுருமாய்க் கிடந்த
ஒரு சிகரெட்டை
முற்றாகக் கொன்றவன் நான்
அதில் எனக்குக்
குற்றபேதம் இல்லை


முகத்தில் அறைகிறதா? இன்னும் இருக்கிறது..

திறவு கோல்

தேடிக் கண்டுபிடித்துத்
திறந்தேனா,
திரு இருந்தது.
தெள்?

தேடுகிறேன்


மினிமம் நூறு அர்த்தங்கள்..அந்தரங்க அர்த்தங்களும்.

1980களில் கவிஞர் பிரமிளோடு நட்பு கொண்டிருந்த ராஜசுந்தர்ராஜன் அதற்கும்முன்னராக கவிஞர் மீரா,சுரா(சுந்தர ராமசாமி)தேவதேவன் என முன்னுரையும் என்னுரையும் விரிகிறது, நம் கண்களை அகல விரிக்கிறது.

விட்டால் என் விரல்கள் மொத்தக் கவிதைகளையும் இங்கே கொட்டித் தீர்த்துவிடும் என்றாலும் மனதிலேறிய அக்கவிதைகள் வெளியே கொட்டித் தீர்க்க முடியாவண்னம் கட்டித் தட்டிப் போய்விட்டன. அவ்வளவு அடர்த்தி.

முத்தாய்ப்பாக...

பரலோக ராஜ்யம்

வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி
இல்லை என்று கைவிரித்து நிற்கிறது
சிலுவை.



புத்தகம் : முகவீதி
ஆசிரியர் : ராஜசுந்தர்ராஜன்
பதிப்பகம் : தமிழினி
விலை : சில துளி கண்ணீர்,கொஞ்சம் மிதப்பு,பலமுறை கைசொடுக்கல் 70 ரூபாயில்.



தேர்ந்த கைவினைஞன் ஒவ்வொரு குன்றிமணிப் பொன்னாய் நிறுத்துப் பார்த்து நிறைவு கொண்டபிறகு சுட்டுச் செய்த நெளிவுகள் மிகுந்த நேர்த்தியான ஆபரணங்களை ஒத்தவை ராஜசுந்தர்ராஜனின் கவிதைகள் - க.மோகனரங்கன்.(முன்னுரையில்)

எச்சரிக்கை :கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள் இந்த நூலை வாங்கினால் ஒன்று நல்ல கவிதை எழுத நேரலாம் அல்லது கவிதை எழுதுவதை நிறுத்திவிடும் எண்ணம் எழலாம். (நான் இரண்டாவது.)

கிழக்குப் பதிப்பகம் இப்படி அநியாயம் செய்திருக்கக் கூடாது.

ஆம்.

புத்தகக் கண்காட்சி என்ற திருவிழாவைப்பற்றி பேசத் தொடங்கியதில் இருந்தே பேசப்பட்ட புத்தகம் ராஜிவ் கொலை. திருவிழாவின் முதல் நாள் சும்மா ஒரு நடை நடந்து விட்டு வரலாம் என்று போனேன். நடந்தேன். ஆனால் சும்மா வரவில்லை. அந்த எழவை வாங்கித் தொலைத்து விட்டேன். அந்தப் புத்தகமும் என்னை சும்மா விடவில்லை. நாட்டின் மிகப் பெரிய எழவுச் செய்தி தாங்கிய புத்தகம் என்பதாலும் அதை சமன் செய்ய ஒரு இனமே சவங்களானதும் சமீபத்திய பேச்சுகள்.

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய படுகொலைகளாக மூன்றைச் சொல்கிறார்கள்.

1.மோகன் தாஸ்
2.இந்திரா
3.ராஜிவ்

மூன்றிலுமே காந்தி என்ற பெயர் இணைந்திருப்பது ஒரு தற்செயல்.

இதில் காந்தியைக் கொன்றவன் கையில் பொய்ப்பச்சைக் குத்திய விசயம் எல்லாம் ஒரு மணிநேரத்தில் புலப்பட்டு பொல பொலப் புட்டாகிப் போனது. போலவே இந்திராவின் படுகொலைக்கான காரணமும் செய்தவனையும் நாடறியும்.

ஆனால் ராஜிவ் கொலை இன்று வரை மர்மம் தான். என்னதான் புலிகளைக் குறிவைத்துச் சொன்னாலும் ‘துன்பியல்’என்பதோடு நின்று போனது,அதாவது அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

இந்தப் புத்தகம் மிக விரிவாகவே மர்மங்களைப் பற்றி பேசி இருக்கிறது.

சிவராசனும் சுபாவும் தணுவும் நம்மிடமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தண்ணீரோ,முகவரியோ அல்லது தியேட்டரில் பக்கத்துச் சீட்டில் அமர்ந்து படமோ பார்த்திருக்கக் கூடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

சின்ன சாந்தன் பிரபாகரனுக்கு எழுதப்பட்டதாக ஆதாரத்துடன் இருக்கும் அந்தக் கடிதம் மிக முக்கியமாக படிக்க வேண்டிய ஒன்று.

இந்தியா என்ற மிகப் பெரிய நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் அலட்சியங்களைப் படிக்கும் பொழுது, நம் போன்ற கடைநிலை பிரஜைகள் எந்த வித லட்சியமும் அற்ற, அரசு இயந்திரத்திடம் எதையுமே எதிர்பார்க்காத ஒரு வாழ்கையை வாழ்வதே சிறந்தது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அல்லது கஞ்சா கருப்பு சுப்ரமணியபுரத்தில் சொல்வது போல் ‘இவெங்களுக்கு மத்தில வாழ்வதே பெரிய விசயம்’ என்பதை ஊர்ஜிதப் படுத்துகிறது இப் புத்தகம்.

நாட்டின் மிக முக்கிய ரா அமைப்பின் முக்கியமான பதவியில் இருந்த குப்தாஜி சொல்கிறார்.. ‘எனக்கு விடுதலைப் புலிகளிலேயே உளவாளி இருக்கிறார். அவர் சொல்லி விட்டார் ராஜிவ் கொலைக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று..ஆகவே நீங்கள் வேறு கோணத்தில் கேஸை நடத்துங்கள் என்று’.

அனைவருக்கும் ஆச்சர்யம் ப்ளஸ் குப்தாவின் திறமையை எண்ணி எண்ணி வியந்தும் போனார்களாம்.. அங்கேயே ஆள் வைத்திருப்பது என்றால் சும்மாவா.. அந்த வியப்பு ஒரு நொடிதான்.

கூட்டத்தில் தன் கட்டுச் சோத்தை அவிழ்த்திருக்கிறார் குப்தா..அது

“ஆம். கிட்டுதான் என் உளவாளி” . அனைவரும் எழுந்து நின்று திரும்பி சிரித்திருக்கக் கூடும். நாகரீகம் கருதி அதை நூலாசிரியர் சிரித்தார்கள் என்று சொல்லி விட்டு விட்டார்.

ரா’அமைப்பின் லட்சணத்திற்கு கொஞ்சமும் சோடை போகவில்லை நம்ம ராஜேந்திரன் போன்ற இன்ஸ்பெக்டர்கள். மாலை போட வேண்டிய ஆட்கள் லிஸ்ட்டை பிட்டுப் பேப்பரில் எழுதி வைத்து அதை முடிந்தவரை கசக்கி வேறு வைத்திருந்திருக்கிறார். ஒரு மிகமுக்கிய மனிதரின் வாழ்வில் நிறையபேரின் அலட்சியங்கள் விளையாடி இருப்பது அந்த நிகழ்வைப் படிக்கும் பொழுது தெரிகிறது.

இன்னுமொரு திரும்பிச் சிரிக்க வேண்டிய செய்தி. ராஜிவ் விசாகப் பட்டணத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் 4:30. ஆனால் அது ஏதோ கோளாறு காரணமாக 6 மணிக்கு புறப்பட்டு இருக்கிறது. இது எதுவுமே தெரியாமல் விரைப்பாக தேவுடு காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் 5:30ல் இருந்து கிட்டத் தட்ட அனைத்து அதிகாரிகளும் சென்னையில்.

ஆனால் மிஸ்டர் சிவராசன் கூலாக தன் பாக்கெட் டயரியில் 4:30 என்று இருந்த நேரத்தை அடித்து 6 என்று எழுதி விட்டு, நேரத்தை விரயமாக்காமல் இருந்திருக்கிறார். தகவல் தொழில் அவர்களுக்கு நுட்பமாக இருந்திருக்கிறது. நம் அதிகாரிகள் அதை தொழிலுக்குக்கான தகவலுக்குக் கூடப் பயன்படுத்தவில்லை. வேதனை.

காதல். ஆக்கவும் அழிக்கவும் செய்யும். எதை வேண்டுமானாலும் செய்யும். ஆம். முருகன் என்ற நபரின் காதல் வார்த்தைகள் மட்டுமே நளினி என்றப் பெண்ணை அடிமையாக்கி, அவர் சொன்ன எல்லாவிதத்திலும் துணை புரிந்து இந்தப் படுகொலைக்கான மிக முக்கிய காரணியாக செயல்படுத்தி இருக்கிறது. நடுவில் முருகன் இல்லை என்றானவுடன், எதையும் செய்யமுடியாது என்று நளினி மறுத்தவுடன் மீண்டும் காதலையும் முருகனையும் இயக்கி, திட்டம் செயல்படுத்தப் பட்டது மிகக் குறிப்பிடத் தக்கது. இயக்குனர் மணிரத்தினம் பாணியிலான இயக்கம் அது. காதல் மூலம் வன்முறை.

இப்படி நிறைய நிகழ்வுகள் போய்க்கொண்டே இருக்கிறது.

ஹரிபாபுவின் கேமரா ஆங்கிளில் தான் கேஸே துவங்குகிறது. துலக்கப்படுகிறது. (ஹரிபாபுவின் அம்மா கையில் இருந்து டீக்கடைக்கு அனுப்பட்ட நூறு ரூபாய் நோட்டை நோட்டம் விட்ட சிபிஐக்கு ஒரு சபாஷ்.)

இடம் பெற்றிருக்கும் கடிதங்களையும், சொல்லப்பட்ட சம்பங்களையும், பங்கு கொண்ட மனிதர்களையும் படித்ததில் இருந்து...

இந்தப் பத்தியின் தலைப்புதான்..ஆம் அநியாயம் செய்துவிட்டது கிழக்குப் பதிப்பகம். யாரைப் பார்த்தாலும் ஒருவித பதட்டமும் சந்தேகமும் வருகிறது இந்த மூன்று நாட்களாக. சக மனிதர்கள் ஏதாவது சகஜமாகப் பேசினாலும் பயமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தப் படுகொலை அவ்வளவு சகஜமாக நிகழ்த்தப் பட்டிருக்கிறது. அதனால்தான் சகமனித மீதான நம்பிக்கையைக் குறைத்துவிட்டு அநியாயம் செய்துவிட்டது கிழக்கு பதிப்பகம்.

இன்னும் நிறைய விசயங்கள் எழுதிக் கொண்டே போகலாம் இந்த புத்தகத்தின் பாதிப்பில் இருந்து...

ஒரே ஒரு முக்கிய பாதிப்பு... இந்தியா என்ற தேசம் அலட்சியத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்ட நாடு. இங்கே ரி ஆக்‌ஷன்கள் மட்டுமே நிகழ்த்தப் படுகின்றன. ப்ரோ ஆக்‌ஷன்களுக்கு இடமில்லை.

முடிந்தால் படியுங்கள் என்றெல்லாம் சொல்லாமல் நிச்சயமாகப் படியுங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அக்டோபரில் பேசி, ஜனவரியில் நாள் குறித்து மே மாதத்தில் முடித்த திட்டம் போலவே மிக வேகமாக நகர்கிறது புத்தகப் பக்கங்களும்.

ராஜிவ்..இந்தியாவை பதினைந்து வருடங்கள் பின்னோக்கி இழுக்கப்பட்ட மரணம் என்றே தோன்றுகிறது. அவர்தான் கம்ப்யூட்டர் புரட்சியைக் கொண்டுவந்தவர். அவர் இறந்த அன்று உபயோகித்த மடிக்கணினி இந்தியச் சந்தைக்கு வந்த ஆண்டு 2003. பத்து வருடம் முன்னோக்கி வாழ்ந்த ஒரு தலைவரின் இழப்பு நாட்டின் முன்னேற்ற இழப்பு என்பது என் தனிப்பட்டக் கருத்து.

புத்தகத்தில் சிலருக்கு முரண்பாடான விமர்சனங்கள் இருந்தாலும் என்ன நடந்தது என்பதைப் படிக்கும் பொழுது கொஞ்சம் ஆத்திரமும் நிறைய ஆதங்கமும் ஏற்படுவது நிச்சயம்..

“என்னுடைய சென்னைப் பயணத்தில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்க்கவில்லையே நீங்கள்..சேர்த்துவிடுங்கள் நான் அவசியம் அங்கு போக வேண்டும்”

சிரித்துக்கொண்டே ராஜிவ் தன் செக்கரட்டரிக்கு எழுதிய கடைசிக் குறிப்பாம் அது.

பாவமாக இருக்கிறதா? ஹும்.

புத்தகம் : ராஜிவ் கொலைவழக்கு, மர்மம் விலகும் நேரம்
பதிப்பகம் : கிழக்கு
ஆசிரியர் : ராகவ.. ஸாரி, ரகோத்தமன்
விலை : அதிகாரிகளின் அலட்சியமும் ராஜிவின் உயிரும்


ஆம்.. இந்தப் புத்தகத்தில் இருந்து இன்னுமொரு அலட்சியம்.

இந்திரா காந்திக்கு உளவுத்துறை ஒரு செய்தி அனுப்பியதாம். ‘சீக்கியர்களால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறது. உங்கள் காவலர்களை மாற்றி விடுங்கள்’ உடனே மாற்றவும் செய்தாராம். கடுப்பான ஒரு ஒரு சீக்கிய அதிகாரி, “எங்களை அவமானப் படுத்தி விட்டீர்கள் மிஸ்டர் எஸ்.பி.சவான்”என்றதும் ஏதோ மாமியார் மருமகள் சண்டை போல் அதை பாவித்து மிஸ்டர் எஸ்.பி.சவான் உடனே ‘மீண்டும் சீக்கிய காவலர்களையே நியமியுங்கள்’ என்று உத்தரவிட்டாராம். அதன் பிறகு நடந்தது வரலாறு.

ஜெய்ய்ய் ஆஞ்ச்சனேயா...

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடிக்கும் முன்னரே வாலொடு வாழ்ந்த நம் டார்வின் சமாச்சார குடி என்பதாலோ, ஊர்ப்பக்கம் எஜமான விசுவாசமுள்ள வண்டி மாடுகள், மாலை, வேலை முடிந்தவுடன் நேரே தானாகவே வீட்டிற்குப் போவது போல, என் வண்டியும் சனிக்கிழமை காலை 9 மணியானால் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் நோக்கிப் போய்விடுகிறது என்பதாலோ,என காரணம் எதுவாயினும் வாரா வாரம் வானர பகவான்.


செருப்பைக் கழட்டி விடும் இடத்தில் இருந்தே துவங்கி விடும்...

கம்பிக்கு இந்தப்பக்கம் சிம்ப்பிளாக விட்டு, மறுபடியும் வந்து மாட்டிப் போகலாம்தான். ஆனால்.. ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவர் அல்லது பலர் புத்திசாலித்தனமாக(?) கம்பிக்கு இந்தப் பக்கம் இருந்து காலை வெளியே நீட்டி அதே அளவுக்கு நாக்கையும் நீட்டி அந்தப் பக்கமாக செருப்பை உதறி விடுவார்கள். போகும் போது அப்படியே போட்டுப் போய்விடலாமாம். பத்து அடிகள் எக்ஸ்ட்ரா நடக்க வேண்டியதை தவிர்க்கிறோமே என்ற புத்திசாலித்தனம் தான் அந்தப் பத்தடி நீள நாக்கு,செருப்புத் தள்ளல்.

உள்ளே நடந்து போய்கொண்டிருக்கும் போதே முன்னே போகும் ஒருவர் சடாரென்று குனிந்து படியைத் தொட்டு கும்பிடுவார். பின்னால் ஒருவன் வருகிறானே..ம்ஹூம் எதைப் பற்றியும் கவலை இல்லை..பக்தி.நாம் கிட்டத் தட்ட காவியம்,மணிக்காவியம் என அவரைத் தாண்ட வேண்டி இருக்கும். அதுவும் அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் பெரும்பாலும் ரெட்டைநாடி சரீரங்கள் தான் இப்படிக் குனிகிறார்கள். எப்படித்தான் முடிகிறதோ?

அப்படியே உள்ளே போனால்,‘தயவு செய்து தொடாதீர்கள்’ போர்டைத் தொட்டுத் தொட்டு அந்த எழுத்துகளில் பாதியை அழித்துவிட்டுப் போனவர்களைப் பின்பற்றிப் போய் பகவானைப் பார்த்ததும் இரு கண்களையும், கன்ன தசைகளில் எல்லாம் கோடு விழுமாறு இருக்க மூடிக் கொண்டு..அதற்கு அடுத்துதான் அந்த நிகழ்வு, கன்னத்தில் போட்டுக் கொள்வது.

அதாவது கன்னத்தில் போட்டுக் கொள்வது என்பது அவரவர் அன்றைய பிரச்சனைகளுக்கேற்ப நிகழ்கிறது என்றே தோன்றுகிறது. அதில் தான் எத்தனை விதங்கள்.

திகுடுதிம்பாக பளார்பளார் என்று அறைந்துகொண்டு பரவசம் அடையும் சிலரில் தொடங்கி, இரண்டு பக்கமும் நவ்வாலு தட்டல் என சிலர், லேசாக ஒரு தட்டல் என சிலர் அப்புறம் ஸ்டைலாக கன்னத்தைத் தொட்டும் தொடாமல் ஆனால் முடிவில் விரலுக்கு ஒரு முத்தம் ‘ச்’ என்ற சத்தம் ரொம்ப முக்கியமாக வெளிப்படுகிறது.

சிலர் ராசி பார்ப்பது போல எல்லாத் தூணையும் தொட்டு விடுகிறார்கள். நடுவில் யார் இருந்தாலும் தூண் போல பாவித்துத் தொட்டுத் தாண்டி மீண்டும் தொடுகை. இன்னும் சிலர் சுவரில் கையை வைத்து பகவானுடன் நேரடி அலைவரிசையில் கை கோர்த்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். நடுவில் யார் வந்தாலும் ப்ரகார சுவரில் இருந்து கை உரசலை எடுப்பதில்லை. அனுமாரோடான டச்சிங் போய்விடுமாம், அதனால் சூப்பர் டான்ஸர் போல கையை சுவரில் இருந்து எடுக்காமல் வளைந்து நெளிந்து வழி விடுகிறார்களேயொழிய டச்சிங்கை விடுவதில்லை.

பகவானுக்கு நேர்பின்னர் இருக்கும் சுவரில் மிகப்பெரிய போர்டு ஒன்று.. “இங்கே தலையை வைத்து யாரும் பகவானை வணங்க வேண்டாம்” அந்த இடம் எண்ணெய்பட்டு வட்ட வடிவமாக மாறி இருக்கும். அதில் 27 தடவை தலையை வைத்து லேசாக வலிக்காத வாறு(தங்களுக்கு,பகவானுக்கு அல்ல) முட்டி முட்டித் தன் வருகையை தெரிவிக்கும் முயற்சியைக் கிட்டத்தட்ட அனைவருமே செயல்படுத்துகிறார்கள்.

சுற்றும் போதே ஏற்கனவே பார்த்த கற்பூர ஹாரத்தி சவுண்டு மீண்டும் கேட்டால், உடனே அக்கம் பக்கம் இருப்பவர்களை தள்ளி வீட்டு மீண்டும் புயல் வேகத்தில் போய் கன்னத்தில் பளார் பரவசம்.

இதனூடே, அடிமேல் அடி வைத்து நடக்கும் கன்னிப்பெண்களும், பையன்களும் பேலன்ஸ் செய்து நடப்பதில் குறியாக இருப்பார்கள். அடிப் பிரதர்ஷணம் அல்லது அடிக்கு அடி.

சுற்றி வந்து சைடில் புகுந்தால்..ஆம்.. பிரசாதம். அதைக் கொடுப்பவர் எப்பொழுதும் கொஞ்சம் சிடுசிடுவென முகத்தை வைத்திருப்பார். சமயங்களில் ஷாட்சாத் அனுமாரே இறங்கி வந்து இங்கே இருப்பது போலவே தோன்றும் படி வாயை வைத்திருப்பார். கடுகடுப்பு கடுகளவும் அல்லது மிளகளவும் குறையாது.

ஆனாலும் அவர் கொடுக்கும் அந்தப் பொங்கல்...ஹும். அதை எடுத்து வாயில் போட்டுக்கொள்வதிலும் எத்தனை உளவியல் ஒவ்வொருவருக்கும்.

அதிலும் சிலர், வெண்பொங்கலா சக்கரையா, புளியா என நேரம் பார்த்து அடிப்பதில் ஆய்வறிக்கைத் தாக்கல் செய்யுமளவிற்கு எக்ஸ்பர்ட்டகளாக இருப்பார்கள் போலத் தெரிகிறது.

சில ஆர்வக் கோளாறுகள் பிரசாதம் வாங்கிய உடனே அதை வாயில் போட்டு சூடுப் பட்டு உஷ்ஷிக் கொண்டே வெளியேறுவார்கள்.

ஆனால், எக்ஸ்பீரியன்ஸ்டு ஹேண்ட்ஸ் அப்படிச் செய்யவே மாட்டார்கள்.

கூட்ட நெரிசலை விட்டு நகர்ந்து மெதுவாக வெளியே வந்து, நல்ல யெளவனமான,நிழலான இடமாகப் பார்த்து செளகரியமாக நின்று கொண்டு,பொங்கலை வில்லை வில்லையாக எடுத்து விரலுக்கும் நாக்கிற்கும் இடையே பொங்கல் மட்டும் இருக்கும் படியான ஒரு பொஸிஷனில் அதைப் போட்டு, ஆம், விரலும் நாக்கும் ஒரு பொழுதும் தொட்டுக்கொள்வதில்லை. அந்த நெய் நேரடியாக உள்ளே இழுத்துச் செல்வதைக் கண்களை மூடி,சூட்டை ஒரு ஊது ஊதி வெளியேற்றி வாழ்வின் பிறவிப் பயனே அந்த நொடிதான் என்பது போல ஒரு தலையாட்டலுடன் முடிப்பார்கள்.

சிலர் சிரத்தையாக தொன்னையை அதற்குண்டான இடத்திலும் குறிப்பாக காதலியுடன் வரும் இளைஞர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையாக அடுத்தவர் வீசிவிட்டுப் போனதையும் கொஞ்சம் சமூகக் கோவத்துடன் எடுத்துப் போட்டு, நிமிர்ந்த நடையுடன் செருப்பைப் போட்டுக் கொண்டு வண்டியை ஈஸியார் நோக்கி விர்ர்ரி விடுகிறார்கள்..


பிரம்மச்சர்ய ஸ்வாமியான அனுமாரை கல்யாணமான ஆண்களும் வணங்குவது என்ன உளவியல் என்று யோசித்து பார்த்தால், அடி வாங்குவதற்கு பலம் வேண்டுமே..பலத்திற்கு அனுமார்தானே..என்ற ஏகப்பட்ட சிந்தனைகள் ஓடும்..ஒவ்வொரு வாரமும்..

ஜெய் ஹனுமான்.

புத்தக கண்காட்சியில் அய்யனார் கம்மா & அகநாழிகை பதிப்பக புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அய்யனார் கம்மா மற்றும் சக பதிவர்களின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றி மடலிலும் அலைபேசியிலும் கேட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

இது குறித்த பப்ளிஷர் அகநாழிகையின் பதிவு..

**********
புத்தக கண்காட்சியில் சிறப்புச் சலுகை விலையில் அகநாழிகை வெளியிட்டுள்ள நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

அகநாழிகை இதழின் ஆண்டுச் சந்தா கண்காட்சியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.150 மட்டும்.

அகநாழிகையின் வாசகர்களோடும், இணைய எழுத்தாள நண்பர்களோடும் சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் புத்தக கண்காட்சி அளிப்பது மகிழ்வுக்குரியது.

கண்காட்சி நாட்களில் நண்பர்கள் என்னை இந்தத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். 999 454 1010

அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் கீழ்க்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.


பரிசல் புத்தக நிலையம் அரங்கு எண்.386


இருவாட்சி பதிப்பகம் அரங்கு எண்.182


*******

கண்காட்சியில் சந்திப்போம்.

நன்றி

புத்தாண்டு வாழ்த்துக்கள்.