வேலைக்குப் போகும் பெண்கள் அறையெடுத்துத் தங்கி இருந்ததால், அறையில் கிறிஸ்துமஸ், புதுவருடம் எனக் கொண்டாட்ட களேபரம். ‘ஹே, லாங் வீக் எண்ட் யா’வில் ஆரம்பித்த உற்சாகம் வீட்டை இரு நாட்களாகத் தொற்றிக்கொண்டது. ஷெரின் கேக் செய்ய ஆரம்பித்து அது பன்னாக மாறியதும் கேலி, கேளிக்கையாக மாறி மனம் முழுக்க உற்சாகத்தில் இரவைக் கழித்துக்கொண்டிருந்தார்கள் மூவரும்.
‘காலைல ஊருக்குப் போறேன்ப்பா, ரொம்ப நாள் ஆச்சு,’ சுகன்யா ஆரம்பித்தவுடன் அதை ஆமோதித்து ஷெரினும் ஊருக்குப் போவதைப் பற்றிச் சொல்லிப் படுக்கச் சென்றதும் இசையருவியில் ‘என்னைச் செந்தீயில் தள்ளி’க்கொண்டிருந்தார் ஷாருக்கான். பார்க்கப் பிடிக்காமல் அணைத்து விட்டு ரம்யாவும் தூங்கிப்போனாள்.
காலைப் பத்து மணிக்கு லேசாக வந்த முழிப்பை இன்னும் கொஞ்சம் ஒத்தி வைத்து எழுந்தவளுக்குப் புரிந்தது தனியாக இருப்பது.
நேற்று கொண்டாட்டத்தில் சிதறி இருந்த அறையில் நிசப்தம். அதிகாலையிலேயே ஊருக்குப் போய்விட்டார்கள் போல என நினைத்துக்கொண்டே எல்லாவற்றையும் ஒதுங்க வைத்தவளுக்கு வருத்தமும் ஆயாசமும் ஜீவாவின் நினைவும் சேர்ந்து கொண்டன. காஃபியோடு கட்டிலில் அமர்ந்தாள். ஊருக்குப் போயிருக்கலாம்தான். ஆனால் ஜீவா வருவதாகச் சொன்னதால் டிக்கெட் எடுக்கவில்லை. கடைசி நேரத்தில் ‘ஸாரிடா பிஸி வித் ஒர்க் அண்ட் கோயிங் டு பி வித் ஃப்ரெண்ட்ஸ் ஃபார் நியூ இயர் ஈவ், எம்யூ’ என்ற குறுஞ்செய்தியில் வருத்தம் காதல் எல்லாம் கலந்து அனுப்பிவிட்டான். ஹும் என சூரிய ஒளி தூசியை சிதறடித்து சாய்வாக விழுந்து கொண்டிருந்ததை வெறித்துக்கொண்டிருந்தாள். எப்பொழுதும் ஏதாவது சத்தம் இருக்கும் அறையில் தனியாக இருப்பது ஒரு மாதிரி இருந்தது அவளுக்கு. அரவம் இல்லாததால், ஒரு காக்கை அசால்ட்டாக ஜன்னலில் அமர்ந்து அப்புறம் உள்ளேயும் வந்து நின்று கொண்டிருந்தது.
போனவருடம் இந்த நேரத்தில் ஜீவாவும் அவளும் சேர்ந்து இருந்தபொழுது நேற்று தோழிகளோடு இருந்த கொண்டாட்டத்தை விட பலமடங்கு அதிகமாக மனம் மகிழ்ச்சியில் திளைத்ததையும், இந்த முறை அவனில்லாத இத் தனிமை யாருமற்ற அறையில் காக்கை எட்டிப்பார்த்துப் போகும் சூழலும் மிகுந்த வருத்தத்தைத் தந்தது அவளுக்கு சங்ககாலத் தலைவியின் இந்த வார்த்தைகளைப் போல,
காதலர் பக்கத்தில் இருக்கும் பொழுது, திருவிழா நடக்கும் ஊர் எப்படிக் கொண்டாட்டத்தில் இருக்குமோ அதுபோல மனம் மகிழ்வில் திளைக்கிறது. அவர் பிரிந்து போய்விட்டால் அந்த நொடியே துன்பப்படுகிறேன். அழகிய சிற்றூரை, பொருள்தேடும் நிமித்தம் மக்கள் கைவிட்டுப் போனபின்னர், ஆளரவமின்மையால் அணில் விளையாடிக் கொண்டிருக்கும் முற்றத்தையுடைய தனிமைப்பட்டுப் பொலிவிழந்து போன வீடுகள் போல நானும் பொலிவிழந்து தனிமையால் வருந்துகிறேன்.
சிறப்பு : இப்பாடலின் காட்சி. அணில் விளையாடும் முற்றம். ஒரு வித அமைதியையும் தனிமையையும் சட்டென கொண்டுவந்து விடுகிறது. அதன் நேர் எதிர்த்தன்மையாக மகிழ்வான பொழுதைத் திருவிழாக் கொண்டாடும் ஊருக்கு ஒப்பாகச் சொன்ன காட்சியும்.
பாடல் :
காதலர் உழைய ராகப் பெரிதுஉவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.
பாலைத் திணைப் பாடல். அணிலாடு முன்றிலார் என உவமையின் சிறப்பினால், பாடலைக் கொண்டே பெயரிடப்பட்ட புலவர்.
அணிலாடும் முற்றமும் அறைக்கு வந்த காகமும்
நன்றி.
புத்தக வெளியீட்டு விழாக்கள்..25, 26 மற்றும் 29 அனைவரும் வருக.
25/12/2010- சனிக்கிழமை மாலை 4:30.
நண்பர் சுரேகாவின் ‘நீங்கதான் சாவி’ புத்தக வெளியீடு மற்றும் கேபிள் & பரிசலின் புத்தகங்கள் குறித்த விமர்சனக் கூட்டம்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ். சென்னை
அனைவரும் வருக.
**
25/12/2010: சனிக்கிழமை மாலை 6 மணி.
கவிஞர் மனுஷ்யபுத்ரனின் 300க்கும் மேற்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பான ‘இதற்கு முன்பும் இதற்கு பிறகும்’ ..
அனைவரும் வருக.
இடம் : LLA Building, தேவனேயப் பாவணர் அரங்கம். சென்னை.
**
26/12/2010 ஞாயிறு மாலை :6 மணி
அகநாழிகை வாசு, நிலாரசிகன், விமலாதித்த மாமல்லன் உட்பட மொத்தம் 12 புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. 

இடம் : LLA Building, தேவனேயப் பாவணர் அரங்கம். சென்னை.
அனைவரும் வருக.
**
29/12/2010 புதன்கிழமை மாலை 5:30 மணி.
அகநாழிகை வெளியீடு. கவிஞர் யாத்ராவின் கவிதைத் தொகுப்பு
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்.
அனைவரும் வருக.
நன்றி.
அதேதான்.
என்னடா டல்ஹெளசிப் பிரபு என்ன சொல்றான் என்ற அதே துள்ளலில் கேட்டுக் கொண்டே நெருங்கிய சுரேஷ், என்னை இப்படியும் அப்படியும் பார்த்து, ‘இளச்சுட்டியேடா’ என்றான். லைட்டா காய்ச்சல்டா போன வாரம் அதான் என நான் இழுக்க, எரித்துவிடுவது போல முறைத்து, ஏண்டா இப்பிடி பெருத்துப் போயிருக்கியேன்னு லந்தாக் கேட்டா, நெஜம்னு நினைச்சு அதுக்கு இடம்சுட்டிப் பொருள் விளக்குற..அப்ப இதுக்கும் மேல இருந்துருக்க போன வாரம் வரைக்கும்? கொஞ்சமா தின்னுங்கடா.
பிளாஸ்டிக் டப்பாவுக்குள் பால்ரஸ் குண்டுகளைப் போட்டு ஆட்டினால் வரும் சத்தம் போலத்தான் அவன். சத்தம் என்றாலும் ஒரு சுகம்.
டல்ஹெளசிப் பிரபு என்று அவன் சொன்னது அந்தக்காலத்தில் ஹிப்பி வைத்திருந்த குமாரைத்தான். அவ்வப்பொழுது ராபர்ட் கிளைவும் வந்து போவார் அவன் வாய்க்குள்.
நல்லா ப்ப்ப்ளான்ன்ன் பண்ணித்தாண்டா பண்றாய்ங்க.. மொதோ ஒரு லட்சத்தி எழுவதாயிரம் கோடின்னு போட்டு விடுறது. அப்பிடியே வாயப் பொளக்க விட்டு, கொஞ்சம் கொஞ்சமா அறிக்கை..அப்புறம்.. சாமான்ய குடிமகன் வாயாலயே.. “அதெல்லாம் ஒரு லட்சத்தி எழுவதாயிரம் கோடி எல்லாம் இல்லையாம்ப்பா..அது அரசுக்கு நஷ்டமாம்.. ஆனா ஊழல்னு பார்த்தா வெறும் அறுவதாயிரம் கோடிதானாம், பாவம்’
எப்பிடி, அறுவதாயிரம் கோடிய ‘வெறும்’னு சொல்ல விட்டு அப்பிடியே ஒரு பாவத்தையும் வாங்குறானா..அங்க நிக்கிறாய்ங்க சிங்கம்’னு அசால்ட்டாக்கி விட்டுப் போய்ட்டாங்களேடா..
தம்மை இழுத்து, புகையை விட்டுக்கொண்டே அவன் சொன்னதும் சுர்ரென்று உரைக்கவில்லை. உரைச்சுட்டாலும்.
என்னடா உங்க ஊரு ஹோட்டல் எல்லாம் ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. வேளச்சேரி அடையார் ஆனந்தபவனைப் பார்த்துச் சொன்னான். அப்படித்தான் இருந்தது. ஆஸ்பத்திரி கேண்ட்டீனைப் பெரிய சைஸில் பார்ப்பது போல. ஆமாடா ஒண்ணு இப்பிடி இருக்கும் இல்லேன்னா ரெயின் ஃபாரஸ்ட்னு சலசலன்னு சத்தத்தோட பாறையக் கொடஞ்சு வச்சு இருப்பாங்க.
சலசலன்னு தண்ணிச் சத்தத்துல சாப்பிட்டா வெளங்கும்டா, கருமம் என அடுத்து சொல்ல வந்தவனைத் தடுத்து வேற டாப்பிக்கை மாற்றினேன்.
அங்க என்னடா விசேசம். அ’னா என்ன சொல்றாரு?’
இடைத்தேர்தல்ல கொடுத்துச் சேர்த்த ஓட்டுகள ஸ்பெக்ட்ரம் சிதறடிச்சுடுமோன்னு கவலைதான். அதுசரி, ஸ்பெக்ட்ரம்னா செதறத்தான செய்யும். ஆமா இங்க எப்பிடி?
பீஸ் போய்த்தான் மாப்ள இருக்கு ஊரு. லைட்டா நார்த் இண்டியன் ஃபேஸ்கட்ல யாரப்பாத்தாலும் பம்முறாய்ங்க.
ஆமாடா, ராடியா கூட பேசுனா ரேடியோவுல பேசுற மாதிரி ஊரே கேட்குறாய்ங்களே மாப்ள அந்த பயம்தான்.
சாப்பிட்டு முடித்து வெளியே வரும்பொழுது வாகனத்தை எடுக்க உதவிய செக்யூரிட்டிக்கு ரொம்ப தேங்க்ஸ் பரத் என்றான்.
என்ன படம்டா பார்த்த?
கொஞ்சம் யோசித்தேன். சரி மதுரை வரையா பரவி இருக்கப் போகிறது என்ற தைரியத்தில்.. செம படம் மாப்ள, நந்தலாலா..
அது ஏதோ யுவான் சுவாங் மேட்டராம்லடா?
ரைட்டு விடு.
ஆனாலும் நல்லா எடுத்தப் படத்த இந்த வாங்கு வாங்கி காத்து வாங்க விட்டாய்ங்க மச்சான்
ம்ம். விடு. ஆமா இது என்ன புது மேட்டர் ?
ஆட்டோ ஃபிக்ஷன் மச்சான் சொல்லிக்கொண்டே சூர்யக்கதிர் இதழின் 21ம் பக்கத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன்.
சாரு அரங்கம்
இலக்கியம் சார்ந்த ஒரு நிகழ்வு இவ்வளவுக் கொண்டாட்டமாக,அரங்கதிரும் கர,விசில்(அடிச்சான் குஞ்சுகளே இப்படித்தான்!முகபாவ முறுவலோடு சிலர் அமர்ந்திருந்தார்கள்)சத்தங்களுக்கூடாக நிகழ்ந்ததே மகிழ்ச்சியளிக்கக் கூடியதாய் இருந்தது.
மனுஷ்யபுத்ரன் தன் வரவேற்புரையில், ஒரு கருத்திற்காக கடைசிவரை போராடும் குணம் உள்ள எவரும் போற்றப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக குஷ்புவை அழைத்ததாகச் சொன்னார். அரங்கின் பின் பகுதியில் காணப்பட்ட காலி இருக்கைகள்/வெறுமை இலக்கிய/கலாச்சார வறட்சியின் குறியீடு என்றார்.
தலைமை உரைக் கடமை முடித்தார் செட்டியார்.
அடுத்து உரை ஆத்திய ரவிக்குமார் குறிப்பிடும்படியாக எதுவும் பேசவில்லை. அவர் பேசிய புத்தகம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. சரசம் சல்லாபம் சாமியார்.
‘எந்தப் புத்தகம் படித்தாலும் அது தரும் தாக்கத்தைக் கடிதம் மூலம் அந்த எழுத்தாளருக்கு தெரியப்படுத்தி விடுவேன்,அப்படி ஆரம்பித்த நட்புதான் சாருவோடு’ என ஆ- ரம்ப-த்து எப்படியோ முடித்துப் போனார் தூர்தர்ஷன் நடராஜன்.
பின்னர் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் ‘மேடைப்பேச்சு என்பது பெண்கள் அணியும் மினி ஸ்கர்ட் போல இருக்க வேண்டும். Short Enough to attract, Long enough to cover the subject' என்ற மேலைநாட்டு அறிஞரின் வார்த்தைகளைச் சொல்லி,நீளமாகப் பேசினார். இந்தப் புத்தகத்தில் பின்நவீனத்துவம் குறித்துப் பேச ஒன்றும் இல்லை என்பதாலேயே என்னிடம் இந்தப் புத்தகம் குறித்துப் பேச சொல்லி இருக்கிறார்கள் என்றவரின் பேச்சு பின்நவீனத்துவம், சத்தார் என நவீனத்துவத்திற்குப் பின்னாலயே போனது. கொஞ்சம் ஷார்ட்டாக முடித்திருந்தால் இன்னும் அட்ராக்ட்டிவாக இருந்திருக்கும். மற்றபடி,மழையா பெய்கிறது என்ற புத்தகம் குறித்த அவரின் உரை, எப்பொழுதும் போல,லாகவதமிழ்ச் சரளப் பேச்சு அன்றும் அற்புதமாய்.
கனிமொழி தலைமை ஏற்றுப் பேசினார். அரசியல் ஏதும் கலக்காமல் இலக்கியம் குறித்த விசாரம் நிகழ்த்தினார். எழுத்தாளர்கள் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியத்தை அவர் குறிப்பிட்ட பொழுது அரசியல் நினைப்பு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை.
தேகம் நாவல் குறித்து எஸ்ராவின் உரை விழாவின் மையமாக அமைந்தது. புத்தக வெளியீட்டில் அந்தப் புத்தகம் குறித்த, அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த வார்த்தைகளைப் பகிரவேண்டிய முக்கியப் பங்கைச் செவ்வனேச் செய்தவர் அவர் ஒருவரே. அவருடைய நாவலை மொழிபெயர்க்கும் பொழுது, ஒரு சிறுவனை பள்ளியில் அடித்ததாக எழுதப்பட்ட வரிகளைப் பார்த்து அதிர்ந்து வியந்து மேல்நாட்டு பதிப்பகத்தார் தொலைபேசியில் விசாரித்தது குறித்தும் ஒரு சமூகமே எப்படி இந்த செயலை வெகுசாதாரணமாக அங்கீகரித்திருக்கிறது என்றும் ஆதங்கப்பட்டார். எனக்கும் பால்ய நினைவுகள் வரத்துவங்கிவிடக்கூடிய ஒரு ஆபத்தான நொடியில் விசில் பறக்க உரையை முடித்திருந்தார் எஸ்ரா.
‘நல்ல வேள இப்போ பேஷ வந்தேன், இல்லேன்னா ‘மேடையில் அமர்ந்திருக்கும்’னு சொல்ல மிடியாது பாருங்க’.. எனத் தனக்கேயுரித்தான அதிர்வில் தொடங்கினார் மதன். ஆம். பேசிமுடித்ததும் சிலர் கிளம்பி இருந்ததால் மேடை காலியாக இருந்தது. மேடைப் பேச்சு இப்படி இருக்க வேண்டும் எனும்படியான ஒரு கட்டிப்போடல் இருக்கத்தான் செய்தது மதன் பேச்சில். கட்டிப்போட்டார் அல்லது அதுவரை இறுக்கமாய் இருந்த கூட்டத்தின் மனநிலையை தளர்த்தினார். சிறுகற்களைக் கொண்டு அரசன் மீதெறியும் சிறுவனின் எதிர்ப்பைப் போல சாரு தொடர்ந்து, பெரிய பெரிய படைப்பாளிகளையும், பிரம்மாண்ட திரையுலகைம் விமர்சிப்பது மிகுந்த வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என சிலாகித்தார். அப்படியே மிஷ்கினை மிகவும் பாராட்டியது குறித்த தன் வருத்தத்தையும் பதிவு செய்தார். விமர்சனம் ஒரு படைப்பாளியை செம்மையாக்கும் என்றக் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார். வெகுஜன ஊடங்களில் பணிபுரிந்துவிட்டபடியால் தன்விரல்கள் நளினமாகவே விமர்சனத்தை அணுகப் பழகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மிஷ்கின் சற்றே உணர்சிவசப்பட்டுப் பேசினார். ஒரு படைப்பாளியின் படைப்பைத் தாக்கினால் எழும் விளைவாகவே இதைக் கருதுகிறேன். இதுபோன்ற தருணங்களில் வெகு அமைதியாக இருந்து விடுதல் நலம். நாகாக்கவில்லையேல் இழுக்கு. தன் தரப்பு நியாயங்களை முன்வைக்க முனைந்தார். காப்பின்னு சொல்லிட்டீங்களே, அதுல எவ்ளோ நல்ல காட்சிகளை செதுக்கி இருப்பேன்..முதல் ஷாட் ரெண்டு நிமிசம் வச்சேன் அத யாரும் சொல்லலயே என்ற நொடியில் கூட்டத்தினரிடம் தோற்றார்.
அவர் பேச்சில் இருந்து ஒரு உண்மை புரிந்தது. பதிவுலகம் மிகவும் பரவலாக கவனிக்கப்படுகிறது. பதிவுலகின் எதிர்மறை விமர்சனங்களால் ஒரு படைப்பு தோற்கிறது என்பதை மிக முக்கிய இயக்குனர் ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியையும் பொறுப்பையும் அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும் விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு என்று நம்புகிறேன்.
தேகம் குறித்து அவர் ஓரு வரிதான் சொன்னார். சொல்லி முடித்ததும் நிறையப் பேர் உடனே அரங்கிற்கு வெளியேப் போய் தேகம் நாவலை வாங்கி ‘ஒரு க்ளான்ஷ்’ விட்டுக்கொண்டிருந்தார்கள்.
மிஷ்கின் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பேசவேண்டிய மேடை அதுவல்ல.
சாரு ஏற்புரை வழங்கினார். ‘ஆத்திகம் பத்தி ஒருதடவ சுஜாதா சொன்னது ரொம்ப முக்கியமான, அற்புதமான கருத்து, ‘அது மறந்துடுச்சு’, இருந்தாலும் முக்கியக் கருத்து’ போன்ற டமால் டூமில்களை இன்னும் சேர்த்திருக்கலாம். அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
வாரத்தின் முதல் நாளில், ஒரு இலக்கிய விழா, கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம், பேசியவர்களின் தகுந்த கருத்திற்கு உற்சாகம் அளித்து, கொண்டாடாடப்பட்ட இந்த விழா மிக முக்கியமானதொரு நிகழ்வு.
குறிப்பாய், பேசிய அனைவரும் சொல்லிய ஒரு கருத்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ‘இவ்வளவு இளைஞர்கள்/புதிய முகங்கள் இலக்கிய விழாவிற்கு வருவது சாருவினால்தான்’
நன்றி.
என்’ணங்கள் 13/12/2010
இன்று (13/12/2010) மாலை எழுத்தாளர் சாருநிவேதிதாவின் 7 புத்தகங்கள் வெளியீட்டு விழா. பதிவர்கள் சந்திப்பும் நடக்கும் என்று நம்புகிறேன். மாலை சந்திக்கலாம்.
சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு
நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி
இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை
வெளியிடப்படும் நூல்கள் :
1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்
ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.
விழாவில் கலந்து கொள்பவர்கள் :
கனிமொழி எம்.பி.
மிஷ்கின்
எஸ். ராமகிருஷ்ணன்
நல்லி குப்புசாமி செட்டியார்
ஏ. நடராஜன்
ரவிக்குமார் எம்.எல்.ஏ.
குஷ்பு
மனுஷ்யபுத்திரன்
தமிழச்சி தங்கபாண்டியன்
மதன் (கார்டூனிஸ்ட்)
**
நேற்று கவிஞர் வாலியின் 1000 பாடல்கள் வெளியீட்டு விழா- கலைஞர் தொலைக்காட்சியில். அனைவருமே ஒரு நெகிழ்வு நிலையில் பேசினார்கள். ‘நானும் வைரமுத்துவும் மோதுரோம் மோதுரோம்னு சொல்றாங்க.. இல்லைன்னு காட்ட மோதிரம் போட்டு இருக்காரு’- வாலியின் பேச்சே எப்பொழுதும் விழாதான்.
நுண்ணரசியலும் நிறைய. சூர்யாவைத் தாங்கிப் பிடித்து தளபதியை வெட்டிவிடுகிறார்கள். எப்பொழுதும் ரஜினி கடைசியாக பேச அழைக்கப்படுவார். இம்முறை கமல். மன்..மத..ன் அம்பிற்காகவா?
வாழ்க வாலி.
**
பொழுது போகவில்லை என்றால் பாவப்படுவது டிவி ரிமோட்தான். அப்படியான மதியத்தில், சடசடவென மாற்றி, அடப்போங்கடா என நின்றதில், சமையல் குறிப்பு. குறிப்பு கொடுப்பவர்கள் செய்முறை முடிந்தவுடன் செய்த சட்டியை ‘அம்புட்டு நவ்வாப்பழத்தையும் தின்னுப்புட்டான்’ ரேஞ்சுக்கு அவர்களே காலி பண்ணிவிடுவார்கள் போல. எல்லோருமே பீமபுஷ்டி.
மக்கள் தொலைக்காட்சியில், பொம்மை செய்வது எப்படி என்று காட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படித்தான் அவர்கள் செய்யும்பொழுது மட்டும் அவ்வளவு க்ளியராக வருகிறதோ.. அதைப்பார்த்து செய்து கொடுத்து அசத்தலாம் என பிளேடு,கத்திரி, பசை சகிதம் அமர்ந்து, கையெல்லாம் பசை,விரலோரங்களில் கீறல். ‘பசை, பேண்ட்டேஜ் எல்லாம் சேர்த்து இவ்வளவா.. அந்த பொம்மையே பத்து ரூவாதான்’ எனும் போது கைப்புள்ளதான் காப்பாற்றுகிறார் ஒவ்வொரு முறையும்.
”ரூவ்வ்வாயா பெருசு..எதையும் செஞ்சு பாக்கணும் இல்ல”
“ஹுக்க்கும்”
**
ஸ்பெக்ட்ரம். எவ்வளவு நடந்திருக்கிறது. இன்னும் தோண்டத் தோண்ட முழி பிதுங்குகிறது. வடக்கு மீடியாக்கள் போதாதென்று இப்போது பன்னாடுகளும். மீடியா முழுதும் ராடியாதான். ராசா மீதான நடவடிக்கைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ”சமூக சேவகர்” கேட்டகிரியில் வீடு ஒதுக்கப்பட்ட விவகாரம் இளிக்கத் துவங்கி இருக்கிறது. கத்தி போய்விடுமா, அடுத்து வந்தது வாலா இல்லை கழுத்தைச் சுற்றும் பாம்பா.. எனப் பொறுப்போம்.பார்ப்போம்.
**
அழகு.
மரங்களுக்கழகு
மலர் கனிகளுடன்
பறவைகளும்.
கவி.ராஜமார்த்தாண்டன்.
**
நன்றி
நன்றி பதிவுலகம்
என் மீதும் என் எழுத்தின் மீதும் ப்ரியம் கொண்ட இந்த வலையுலக நண்பர்கள் மட்டும் இல்லை என்றால் இந்த நிகழ்வு சாத்தியமாகி இருக்காது.
நன்றி பதிவுலகம்.
ஆம். உயிர்மை பதிப்பகம் மூலம் என் கவிதைகள் ‘தீக்கடல்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவருகிறது.
சட்டென, சற்றும் நினைத்துப் பார்க்க முடியா நிகழ்வொன்று புரட்டிப் போனது மீச்சிறு பொழுதில். செய்த தவறை முற்றாய் உணர்ந்து, மீண்டேன்.
இடைப்பட்ட இரு மாதத்தில், மிக நெருக்கமாய் இருந்தவர்கள் கொஞ்சம் விலகி இருந்ததாக/இருப்பதாக எண்ணிக்கொண்டேன்.
வெகு தொலைவில் இருந்தவர்கள் மனதிற்கு மிக நெருக்கமாய் ஆனார்கள் மடல்கள் மூலம்.
இப்படி ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றுக்கொண்டு, வெறுமை என்னைத் தின்றுவிடும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியேற, எதனுள்ளாவது நுழைத்துக்கொள்ள வேண்டிய நிலை. நான் தெரிந்தெடுத்த கூடு, கவிதை.
நுழையக்கூட இயலவில்லை. அது கூடில்லை. அல்லது கை கூடவில்லை. கூட்டிற்குள்ளே கடல்.
தடிமரம் தொற்றி ஏறுதல்தானே
கடினம். அது கழிந்தால்
முடிமரம் உலுக்கக்
கிளைகள் படி அமைக்கும்.
என்ற முகவீதி தொகுப்பின் கவிதைக்குள் பொதிந்தவை கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடத் துவங்கியது.
…
…
ஆக,
களவு போன என் மகிழ்ச்சிப் பாதையை
கண்டடைவது இனி சாத்தியமில்லை
என்று போகும் சி.மோகனின் தண்ணீர் சிற்பக் கவிதைகளும் இன்னும் இன்னும் நிறையப் புரியவைத்தன, வாழ்வை.
இந்தத் தேடல் மூலம் நிறையப் புத்தகங்களை படிக்கத் துவங்கினேன்.
‘..கவிதைக்கு எல்லைகள் இல்லை. தலைநகரங்கள் இல்லை. பிராந்தியங்கள் இல்லை. மொழிகள் இல்லை. மொழிகள் பலவானாலும் கவிதை என்பது ஒன்றுதான்.’- ஆந்ரி வோஸ்நஸென்ஸ்கி.
என்ற குறிப்போடு துவங்கும் பிரம்மராஜனின் ‘சமகால உலகக் கவிதை’ தொகுப்பு மூர்ச்சையாக்கியது.
..
..
கூரலகால்
கழுகொன்று அதன் குஞ்சுப் பாப்பாவைக்
கவ்விச் சென்றிருந்தால்…
கூட்டைச் சுற்றிச் சுற்றிக்
கதறித் திரியும்.
காற்றின் அமைதியில்
சிறுதொண்டை நோக
உடைந்த குரலில்
இழப்பை பாடும்.
அதற்கு மீண்டும் வாய்க்கும்
புதிய காதல்
புதிய கர்ப்பம்.
என்ற கவி.மகுடேசுவரனின் வார்த்தைகளைப் போல, புதிய காதல் வாய்த்தது கவிதைகளின்பால். கர்ப்பமும் தரித்து சிசுவாக வெளியேறுகிறது உயிர் மை கொண்டு.
நான் முன்பு கூறியது போல ஏதேனும் ஒரு வார்த்தை தன்னைக் கவிதையாக்கு என எப்பொழுதெல்லாம் கோரியதோ அப்பொழுதெல்லாம் அவ்வந்த வார்த்தைகளில் பயணித்தேன். பயணம் இட்டுச்சென்ற இடம் சென்னை..,சுப்ரமணியம்தெரு, அபிராமபுரம், உயிர்மை.
கவிஞர் மனுஷ்யபுத்ரனோடு கவிதைகள் குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கவிதை குறித்த அவரின் பார்வைகளும்,சொற்களும் இன்னும் சில ஆண்டுகள் மனதில் நிற்கும்.
நான் இருளில் மடிந்த நேரத்தில் தொலைபேசிய,அப்பொழுது யார் எவரெனத் தெரிந்திராத, பதிவரல்லாத, திரு சுவாமியின் வார்த்தைகள் மிக முக்கியமான ஒன்று. பதிவு செய்வது கடமை. நன்றி சுவாமி(தற்பொழுது ஜெர்மன்-மதுரை). அதன்பிறகு நிறைய மடல்களும் தொலைபேசிகளும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும், முதன்முதலில் சுவாமி பேசிய அந்த அரைமணி நேர உரையாடல் நான் தொடர்ந்து இயங்க வைத்தது.
தொலைவிற்கு சென்றுவிட்ட பொழுதில் என் விரல் பிடித்து இழுத்து வந்த கோவி.கண்ணனை மறப்பதற்கில்லை.
அனுஜன்யா. கவிதைகளில் தனக்கென ஒரு பாணியையும், தன் கவிதைகளால் நிறைய நிறைவாய் பேசியும் வந்த அனுஜன்யா. என் கவிதைகள் குறித்தும் மாறிய மொழியைக் குறித்தும் நிறைய பேசி என்னை ஊக்கமளித்த அனுஜன்யாவை இங்கு நினைத்துக்கொள்கிறேன்.
இறுதியாக அல்லது முதன்மையாக, தந்தைக்கு நிகராக நான் மதிக்கும், கவிதைகள் என்ற பெயரிலான என் வார்த்தைகளைப் பிரித்துப் பிடித்து அளந்து சொல்லும் ஆசனுமான கவிஞர் ராஜசுந்தர்ராஜனுக்கு நன்றியையும் தீக்கடலையும் அர்ப்பணிக்கிறேன்.
சிகரம்.
பின்தங்கிப் போன என்னை
உன் இகழ்ச்சி-நகும்-பார்வையின்
கீழ் நிறுத்திக் காணவா
உச்சியை ஓடி எட்டினாய்?
நடந்தது இதுதான்;
இடைவழியில், சிறுதொலைவு,
வண்ணத்துப் பூச்சிகளின் பின்னோடி,
போட்டி போட மறந்துவிட்டேன்.
-கவிஞர் ராஜசுந்தர் ராஜன் – முகவீதி தொகுப்பில்.
நாள் : 26/12/2010, ஞாயிறு.
இடம் : தேவநேயப்பாவணர் அரங்கம், LLA Building, அண்ணா சாலை. சென்னை.
நேரம் : மாலை 5:45 மணி.
என் சரிகளைக் கொண்டாடியும் தவறைத் திருத்தியும்,சகமாய் வாழும் பதிவுலகிற்கு நன்றி என்ற வார்த்தையையும் தாண்டிய வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
வருவீர்களா ? என்ற ஏக்கம் இருக்கிறது நெஞ்சு நிறைய.
வெளியிட்டு பேசுபவர் குறித்தும் இன்னும் சிலவற்றையும் விரைவில் பகிர்வேன்.
..
இதுபோதுமெனக்கு.
இன்றோடு இம்மழை
நின்றும் போகலாம்
இனியெப்போதும் இப்பாதை
இல்லாமல் அடைபடலாம்
பறவைகள் ஏதுமற்று
வெற்றாய் வானம்
உதித்து உதித்து அஸ்தமிக்கலாம்
முற்றாய் காய்ந்து
வெறும் சருகுகளாய்
தருக்கள் கருகலாம்
அழுகுரல் கேட்ட நொடியில்
அணைத்தெடுத்து மடியில்கிடத்தி
மீண்டும் துயிலச் செய்து கொண்டிருக்கும்
இந்த இரவை
இப்பொழுது
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
**
டைட்டில் கார்டு :‘வானம் கருக்கொண்டு மீண்டும் மழை வரலாம்’ என்ற வார்த்தைகளின் தாக்கத்தில் எழுந்த கவிதை இது.
நன்றி.
Labels: கவிதை