என்’ணங்கள் 05/01/11

புத்தகக் கண்காட்சி. சென்ற வருடம் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போலத்தான் கழிந்தது. பதிவர் சந்திப்புகள் அதிகம் நிகழ்ந்தன. இந்த ஆண்டும் அப்படியே நடக்கும் என்று நினைக்கிறேன். பதிவர்களையும் நண்பர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பார்ப்போம்.

**

சென்ற வாரம் முழுக்கவே விழாக்கள். எஸ்.ராவின் புத்தக வெளியீட்டு விழா கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது என்றே சொல்லலாம். ’நாவலைப் பற்றியக் கலந்துரையாடல்’ மருத்துவர் ருத்ரன், எஸ்ரா,யுவன் சந்திரசேகர், முருகேச பாண்டியன் மற்றும் மனுஷ்யபுத்ரன் ஆகியோர் கலந்து உரையாடினார்கள்.

மிக நன்றாக இருந்த அதில் எனக்குப் பிடித்த இரண்டு வரிகள்.

யுவன் : உண்மையச் சொல்ல வேண்டும் என்றால், நாவலை இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. நான்கு நாட்களுக்கு முன்புதான் புத்தகம் கையில் கிடைத்தது. இவ்வளவு உழைப்பைச் சிந்தி எழுதப்பட்ட இந்த நாவலை முழுதும் உணர்ந்து படிக்க நான்கு நாட்கள் போதாது.எனக்கு நிறைய டைம் எடுத்துப் படிக்க வேண்டும். பாதி தான் படித்திருக்கிறேன். படித்த வரை பகிர்வேன்.

அடுத்து மைக்கை வாங்கிய முருகேசபாண்டியன் : நாவல் கைல கிடைச்சதும் தடதடன்னு 12 மணிநேரத்துல படிச்சு முடிச்சுட்டேன். நடுவுல சில வேலைகள். இல்லேன்னா 6 மணிநேரத்துல படிச்சிருப்பேன்.

அருகருகில்..விதவிதம். அதில்தான் சுவாரஸ்யம் போல.

**

கேபிள் சங்கரின் புத்தகவெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. நடிகர் மோகன் பாலு செமையாகப் பேசினார். கிட்டத்தட்ட கேபிள் கதைகளில் வரும் கேரக்டர்களாக மாறி உணர்வு எழுச்சியானார். ஆதி அப்துல்லா லக்கி நாகரீகம். பேராசிரியை பர்வீன் வழக்கம் போல்(வழமை என்ற வார்த்தை பிடிக்காது)அற்புதமான மொழியில் பேசினார். சுரேகா அற்புதமாய் தொகுத்து வழங்கினார். வாழ்த்துகள் கேபிள். மீண்டும்.

**

கொஞ்ச நாட்களாக எதுவும் சரியாக எழுதுவதில்லை என்பதை விட எழுதத் தோன்றுவதில்லை/முடிவதில்லை என்பதே சரி/உண்மை.

**

‘நான் உன்னயே இருவத்தி நாலுமணிநேரமும் நெனச்சுட்டு இருக்கேன். நீ அப்பிடி ஒரு நாளாவது நெனச்சு இருக்கியா?’

காதலி உபயோகித்த வார்த்தைகளில் அதிகம் இந்த வரிகளாக இருக்கக் கூடும்(வாங்குப்பெத்தவர்கள் சொல்லவும். )

இதைத்தான் அற்புதமாய் அப்பொழுதே இப்படி..

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

என் நெஞ்சில் காதலர் எப்பொழுதும் இருப்பது போல அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா? என்பதாகப் பொருள். இதில் வரும் ஓஒ வார்த்தை ஏதோ செய்கிறது ஆனாலும் வார்த்தைப் ப்ரயோகத்திற்கான சரியான காரணம் எவரேனும் சொன்னால் மகிழ்ச்சியாய் இருக்கும். தமிழில் இப்படியான இன்பங்கள் இருப்பதால் அமுதென்று பெயர்.

**

ஈசன் படம். புதியபாதைக்குப் பிறகு பார்த்திபன் தொலைந்து போனதுபோல சசியும் ஆகிவிடுவாரோ என்ற லேசான ஒரு பயம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் படம் பிடித்தே இருந்தது. சுப்ரமணியபுரத்திற்கு நேர் எதிராக சென்னை இளைஞர்கள் குறித்தும் இரவு வாழ்க்கை குறித்தும் காட்சிப்படுத்தியது நன்றாகவே இருந்தன. நகரத்து மக்களோடு கிராமத்து மக்கள் எதிர்கொள்ளும் ஆரம்பகால அக்கப்போர்களை காட்சிப்படுத்தியதும் பிடித்திருந்தது.

குறிப்பாக, முதல் பகுதியில் வரும் அரசியல். அமைச்சர்(லேசா முரசொலி மாறன் ஜாடை?!)& சன்(மகன்) செய்யும் அட்டூழியங்கள் அன்றாடத்தில் எப்படிப் பாடாய்படுத்துகிறது என்பதை ஜஸ்ட் லைக் தட்டாக ஆனால் அழுத்தமாகச் தட்டிச் சொன்னது அற்புதம். தைரியமும்.

இயக்குனராக சசி ஏமாற்றியதும் உண்மை. முதல்படத்தின் தரம் அப்படி.

சமுத்திரக்கனி கவர்ந்தார். சில விசயங்கள் பிடிப்பது போல இருக்கும். யோசித்துப் பார்த்தால் அதில் என்ன இருக்கிறது,பிடிக்க, நல்லா இல்லையோ என்ற எண்ணம் வரும். ஈசன் பிடித்திருந்தது. எண்ணமும் வந்தது.

**


காளியின்
ஆங்காரம் தணிக்க
வெண்ணெய் எறியச் சொன்னார்கள்
ஒவ்வொரு முறையும்
குறிதப்பியதில்
என் மேல் எனக்குச்சினம்

**

கருவறைக் கடவுளுக்கு
தட்டுத்தீ வெளிச்சம்
இங்கிருந்து பார்த்தால்
ஆராதனையில் சிலையும்
சுற்றி இருக்கும் இருளும்
சேர்ந்தே தெரிகிறது

**

21 comments:

அமுதா கிருஷ்ணா January 5, 2011 2:51 PM  

நல்லெண்ணங்கள்..

சுரேகா.. January 5, 2011 3:09 PM  

நன்றி நர்சிம் ஜி!

மறத்தமிழன் January 5, 2011 3:28 PM  

நர்சிம்,

நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி.

பேராசிரியையின் பேச்சு அர்த்தமுள்ளதாக இருந்தது.

சுரேகா தொகுதளித்தவிதம் அருமை.

தமிழ்.... அமுதுதான்.

புத்தக கண்காட்சியில் சந்திப்போம்.

"தீக்கடல்" புத்தக அன்பளிப்பிற்கு நன்றி:)

மென்மேலும் கவிதை/நம்ம பக்கத்து கதை எழுதுங்கள்...வாசிக்க காத்திருக்கிறோம்..

பா.ராஜாராம் January 5, 2011 4:22 PM  

கவிதைகள் நல்லாருக்கு கவிஞரே!

கேபிள்ஜி, வாழ்த்துகள்!

Bharathi January 5, 2011 4:22 PM  

//யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்//
?

"உழவன்" "Uzhavan" January 5, 2011 4:34 PM  

கவிதைகள் அருமை

காவேரி கணேஷ் January 5, 2011 4:55 PM  

ஆராதனையில் சிலையும்
சுற்றி இருக்கும் இருளும்
சேர்ந்தே தெரிகிறது.

ரசித்தேன்.

D.R.Ashok January 5, 2011 5:05 PM  

கடைசி வரி

’’இருளும் சிலையும் அசைவது
போலவும் தெரிகிறது’’

:)

வானம்பாடிகள் January 5, 2011 8:50 PM  

கவிஞரே:))

சுசி January 6, 2011 1:40 AM  

//தமிழில் இப்படியான இன்பங்கள் இருப்பதால் அமுதென்று பெயர்.//

அதை கவிஞர் இப்படி அழகாக எழுதும்போது பேரமுது பேரின்பம் ஆகிறது :)

T.V.ராதாகிருஷ்ணன் January 6, 2011 2:24 AM  

//சும்மாவே என்ணங்கள்ல கவிதையப் போடுவோம். இதுல இப்ப கவிஞர் வேற.. வேற வழி?...//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் January 6, 2011 2:52 AM  

நர்சிம் நீங்கள் சொல்லியுள்ள குறள்

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்

எந்நெஞ்சத்தோ அவர் உளர்...என்பதாக அரத்தம்..தோஒ ..என நீட்டிச் சொன்னதால்..என் நெஞ்சிலேயோ அவரே உளர் (ஒ..காரம்மிகுதியைக் காட்டுகிறது)

அதே போன்றுதான் இக்குறளும்..
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது

என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போல வாடி வருந்துகின்றன.இது எனக்கு ஓஒ இனிது, மிகவும் மகிழ்ச்சி..ஓஒ மிகுதிப்படுத்துவதே இங்கும்.

Balaji saravana January 6, 2011 7:29 AM  

..ஈசன் // இன்னும் வாங்குப் பெறல.. வாங்கிருவேன் சீக்கிரம்!
கவிதைகள் வழக்கம் போல ;) சூப்பர் தல!

மோகன் குமார் January 6, 2011 7:34 AM  

உங்கள் கவிதை புத்தகம் வாசித்து கொண்டிருக்கிறேன். அதென்ன கவிதைகளில் பறவைகள் மீண்டும் மீண்டும் பறக்கின்றன? மற்றவை பிறகு..

sriram January 6, 2011 7:54 AM  

//இதுல இப்ப கவிஞர் வேற//
எத்தினி பேரு கெளம்பி இருக்கீங்க இப்பிடி?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வழிப்போக்கன் - யோகேஷ் January 6, 2011 8:40 AM  

கவிஞரய்யா வணக்கம்.........

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com January 6, 2011 10:02 AM  

முத‌ல் கவிதை அருமை நர்சிம்

ஜெனோவா January 6, 2011 12:39 PM  

எண்ணங்கள் நன்று தல !

இங்கயா ? அங்கேயே தானா ?

கனாக்காதலன் January 6, 2011 7:09 PM  

//கருவறைக் கடவுளுக்கு
தட்டுத்தீ வெளிச்சம்
இங்கிருந்து பார்த்தால்
ஆராதனையில் சிலையும்
சுற்றி இருக்கும் இருளும்
சேர்ந்தே தெரிகிறது//
அருமையாக இருக்கிறது கவிஞரே !
உங்களின் "தீக்கடல்" இணையத்தை எரிக்கும் நாளைச் சொல்லுங்கள். ஆர்டர் பண்ணனும் பாஸ் :)

கயல் January 8, 2011 9:50 PM  

கவிஞரே!

ராமலக்ஷ்மி January 9, 2011 7:35 AM  

//ஒவ்வொரு முறையும்
குறிதப்பியதில்
என் மேல் எனக்குச்சினம்//

//சுற்றி இருக்கும் இருளும்
சேர்ந்தே தெரிகிறது//

அர்த்தமும் அழகும் சேர்ந்த வரிகள் நன்று.