என்’ணங்கள் 12/01/11

1958ம் வருடம்.

பாட்டெழுத சான்ஸ் கேட்டு அலைந்து கொண்டிருந்த அந்தக் கவிஞரை ஒரு இசையமைப்பாளரிடம் அழைத்துச் சென்றார் நண்பர். பட்டுக்கோட்டையும், கே.சி.எஸ் அருணாசலமும் ஜெயகாந்தனும் பாட்டு எழுதிட்டாங்களே என்று இசையமைப்பாளர் எம் பி ஸ்ரீனிவாசன் அந்தப் புதியவரை மறுத்துவிட்டாராம். படம் ‘பாதை தெரியுது பார்’. கோபி என்ற அந்த நண்பரின் வார்த்தைகளுக்காக, இசையமைப்பாளர் எம் பி ஸ்ரீனிவாசன், ’ஏதாவது சமூக நோக்கோடு எழுதிய பாடல் இருந்தால் டைட்டில் சாங்கிற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறேன்’ என்றவுடன் கொஞ்ச நேரம் யோசித்து ஒரு பாடலை எழுதி, பாடிக்காண்பித்தாராம் கவிஞர்.

கேட்டுவிட்டு, கண்ணாடியை எடுத்து தன் நீண்ட ஜிப்பாவில் துடைத்துக்கொண்டே, “நல்லா இல்லேன்னு சொல்லமாட்டேன், ஆனா இம்ப்ரஸ் பண்ணல, So Sorry” என்று போய்விட்டாராம்.

”கவலைப்படாதீங்க வேறு இடத்தில் ட்ரை பண்ணுவோம்”நண்பர் கோபி அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

1967ல் அதே பாடல் பட்டி தொட்டி எல்லாம் தேசிய கீதம் போலப் பாடப்பட்டது.

பாடல் :

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -அவன்
யாருக்காகக் கொடுத்தன்...

**
‘ரயில்வே வேலைய விட்டுட்டு இப்பிடி நடிக்க சான்ஸ் கேட்டு வந்திருக்குறது தப்புங்க’ ஒல்லியாக இருந்த அந்த நபரைப் பார்த்து வெகு அக்கறையாகச் சொன்னேன்.

“அந்த ரயிலே ஒரு நாள் எனக்காக நிக்கும்ங்க. என் நடிப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”

ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பின்னாளில் ரயில் அவருக்காக நிற்கும் அளவிற்கு புகழ் பெற்ற அந்த ஒல்லி நடிகர்- நாகேஷ்.”

கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் இப்படியான வெகு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிசுவாரஸ்யமான நடையில்.

வானதி பதிப்பகம். விலை 250.

**

புத்தகக் காட்சி சித்திரைத் திருவிழா போல் உள்ளது. ரங்கராட்டினமும் வைத்துவிட்டால் அதேதான். உள்ளே நுழையும்பொழுதே ஏகப்பட்ட நோட்டிஸ்களை கையில் திணிக்கிறார்கள். வேண்டாம் பாஸ் என்றால் அடித்துவிடுவார்களோ என்பது போல இருக்கிறது திணிப்பு. வாங்கி, பார்க்காமல் சுருட்டி கசக்கி நாலெட்டு வைத்தவுடன் ஒரு வீசு. பெரும்பான்மை இப்படித்தான் செய்வார்கள் போல. காகிதப் பந்துகள் நிறைய.

ஃப்ருட் சாலட், ஐஸ்க்ரீம்,பாப்கார்ன், பஞ்சு மிட்டாய்த் திருவிழா.

உள்ளே இந்த முறை மிகக் கவர்ந்த, முக்கியமான ஒன்று, ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு பெயர். திருவள்ளுவர் பாதை, கம்பர் பாதை என. சென்ற ஆண்டு இந்த ஏற்பாடு இல்லாததால், ‘எங்க இருக்கீங்க பாஸ்? எந்த ரோங்க? இந்தப் பக்கம் இருந்தா அந்தப் பக்கம் இருந்தா, ஹலோ, ஹல்ல் லோ என சிக்னல் கிடைக்காமல் புத்தகம் தேடுவதை விட நண்பர்களை தேடுவதிலேயே அதிகம் போனது. இந்த முறை திருவள்ளுவரும் கம்பரும் பாரதியும் வழிகாட்டுகிறார்கள்.

**

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

-நகுலன்

**

தீக்கடல் குறித்த தன் பார்வைகளைப் பதிந்த பதிவர் மோகன்குமாருக்கும் பதிவர் லதாமகனுக்கும் நன்றிகள்.

http://veeduthirumbal.blogspot.com/2011/01/blog-post_10.html

http://silarojakkal.wordpress.com/2011/01/01/narsim-theekkadal/

***


பள்ளியில் படிக்கும்பொழுது, வீட்டின் சார்பாக ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டிய சூழல்.

முதல் முறை வீட்டை ரெப்ரஷண்ட் செய்கிறோம் என்ற மிதப்பும், அப்பா கொடுத்த மொய்ப் பணக் கவரும்,முதல் முறை வெளியூருக்குத் தனியாகப் பயணம் என ஒரு கித்தாய்ப்பும், கூடவே அங்கே யாராவது தெரிந்தவர்கள் இருக்க வேண்டுமே என்ற லேசான பதைப்பும்.

உள்ளே நுழைந்தவுடனேயே ஒரு பென்சில் மீசை மாமா கழுத்தில் சுற்றி இருந்த கர்ச்சீப்பை உருவிக்கொண்டே என்னை அலேக்காகத் தூக்காத குறை, டேய், எத்தன வருசமாச்சு உங்கள எல்லாம் பார்த்து, வா, வா என கையைப் பிடித்து கல்யாண வீட்டு நெரிசல் ஒதுக்கி, பெண் வீட்டார் அறைக்கு இட்டுச் சென்றார். வழியில் தென்படுபவர்களிடம் எல்லாம் ‘யார் தெரியுதா, யார் தெரியுதா’ என கேட்டுக்கொண்டே. நான் கிட்டத்தட்ட மிதந்து போய்க்கொண்டு இருந்த நினைவு.

அங்கே வட்டமாக அமர்ந்து பேன் பார்த்தும், நெக்லஸைக் கழுத்துப்பக்கத்தில் வைத்துக்கொண்டும், மேட்சிங் பிளஸ் தேடல் எனக் கல்யாண ரகளை. நடுவில் என்னை நிறுத்தி, யாருன்னு தெரியுதா என்றவுடன் ஆளாளுக்கு ஒரு பெயர், பென்சிலோ, சிரிப்பும் சந்தோசமுமாய், சரியாச் சொல்லுங்க, கண்ணப்பார்த்துமா தெரியல, எப்பிடி வளர்ந்துட்டான் பாரு.. என கர்சீப்பை இரண்டு கைகளாலும் ஒரு சுண்டு சுண்டி கழுத்துக்குக் கொடுத்துக் கொண்டே என்னை ஒரு செல்ல இடி, லேசாக கண் வேறு அடித்தார்.

ஒரு வழியாக எல்லோரும் என்னைக் கண்டுபிடிப்பதில் தோற்றவுடன், இவர் திருவாய் மலர்ந்தார்.,.

யாருன்னு தெரியலயா.. நம்ம....... என்று ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு பெயரைச் சொல்லி, எப்பிடி வளர்ந்துட்டான் பாரு என்றார். அதன்பிறகு அந்தக் கல்யாணத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. தர்ம சங்கடம் என்றால் என்னவென்று புரியக்கூடிய வயதும் இல்லை அது.

**

தர்ம சங்கடம் என்றதும் இன்னுமொரு அதிமுக்கிய நிகழ்வும் நினைவிற்கு வருகிறது. இதை ஏற்கனவே எழுதிய நினைவும் இருக்கிறது.

பத்தாவதோ பதினொன்றோ படிக்கும்பொழுது ஊரில் இருந்து அத்தை, தன் பெண் சகிதம் வந்திருந்தார். கூடத்தில் மதிய நேரம் டியூப் லைட் எரிந்தால் இப்படி யாராவது சொந்தக்காரர்கள் வந்திருப்பார்கள் என அறிக. எங்கோ சுற்றிவிட்டு உள்ளே நுழைந்த என்னை வாஞ்ச்சையாக அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டு பேச ஆரம்பித்தார் அத்தை.

“இவனுக்கு மூணு வயசு இருக்கும் போது நாந்தான் இவனுக்கு ட்ரெஸ் பண்ணி விடுவேன். வேற யார்கிட்டயும் போகமாட்டான். எப்பிடி இருப்பான் தெரியுமா, மூக்கும் முழியும் சட சடயா முடியும் அப்பிடியே மயில்ரேக மாதிரி இருப்பான்” கண்கள் அனிச்சையாக அத்தை மகளைச் சுற்றியும் சுற்றி இருப்பவர்கள் மீதும் போகும்..கித்தாய்ப்புதான். பேசிக்கொண்டே போகும் அத்தை இப்படி முடிப்பார்..

“வெயில்ல சுத்தி சுத்தி இப்பத்தான் இப்பிடி குரங்கு மாதிரி ஆகிட்டான்”

அதற்குப் பிறகும் அங்கு இருக்க முடியும்??

**

வீட்டிற்கு சொந்தம் வருவது என்றவுடன் இதுவும் நினைவிற்கு வருகிறது. அப்பொழுதெல்லாம் யாராவது வீட்டிற்கு வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி

“எப்போ ஊருக்குப் போவீங்க?” டேய்ய் அப்பிடில்லாம் கேட்கக் கூடாது என்று சவுண்டு வரும்.

அன்பு நிறைந்த கேள்வி அது. அதாவது கொஞ்ச நாளாவது இருப்பீர்கள்தானே என்பதை எப்படி கேட்க வேண்டும் என்று தெரியாமல் அப்படி விழும் கேள்வியது. மழலை எவ்வளவு அற்புதங்கள் நிறைந்தவை என்ற எண்ணம் இப்பொழுது வருமானால், காரணம் வேறொன்றும் இல்லை..அன்றாடங்களில் அவ்வ்வ்வளவு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

அவ்வளவே.

**

15 comments:

அன்புடன்-மணிகண்டன் January 12, 2011 11:45 AM  

தல தல தான்.. அவ்வளவே.. ;)

sudha January 12, 2011 12:05 PM  

nice thoughts.

அஹமது இர்ஷாத் January 12, 2011 12:27 PM  

அற்புத‌மான‌ ப‌கிர்வு :)

Balaji saravana January 12, 2011 12:32 PM  

நான் போட வேண்டிய கமெண்ட மணிகண்டன் போட்டுட்டாரு தல! :)
கடைசில சொன்ன பாயிண்ட் செம!

யாசவி January 12, 2011 12:40 PM  

நர்சிம்,

“எப்ப ஊருக்கு போவிங்க” இன்னும் நிறைய குழந்தைகள் கேட்கிறார்கள்.

தர்ம சங்கடம் இரண்டும் - நயமான நகை

Mohan January 12, 2011 1:01 PM  

பதிவு மிகவும் அருமையாக இருந்தது!

தர்ஷன் January 12, 2011 1:12 PM  

அருமை நரசிம் அந்த தர்மசங்கடமான சூழலை நீங்கள் விவரித்திருக்கும் பாங்கு அழகாய் உள்ளது

விக்னேஷ்வரி January 12, 2011 2:17 PM  

போகிற போக்கில் நீங்கள் ஏதாவது எழுதிப் போனால் கூட நல்லா தாங்க இருக்கு.

வானம்பாடிகள் January 12, 2011 2:37 PM  

:) nice

காவேரி கணேஷ் January 12, 2011 4:42 PM  

உழைப்பின் மைந்தன் நாகேஷ் சார்..

யாருன்னு தெரியலயா.. நம்ம....... என்று ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு பெயரைச் சொல்லி, எப்பிடி வளர்ந்துட்டான் பாரு என்றார்.


வெயில்ல சுத்தி சுத்தி இப்பத்தான் இப்பிடி குரங்கு மாதிரி ஆகிட்டான்”

அதற்குப் பிறகும் அங்கு இருக்க முடியும்??


ரசித்த வரிகள்.

நாய்க்குட்டி மனசு January 12, 2011 7:25 PM  

நல்லா சூப்பெரா ஒரு கதை எழுதுங்க நர்சிம், எவ்வளவு நாளாச்சு ?

கனாக்காதலன் January 12, 2011 7:45 PM  

அருமை நர்சிம். எண்ணங்களில் வண்ணங்களுக்குக் குறைவில்லை.

வெட்டிப்பயல் January 12, 2011 8:43 PM  

Good one Narsim.

சுசி January 13, 2011 3:36 AM  

//மழலை எவ்வளவு அற்புதங்கள் நிறைந்தவை என்ற எண்ணம் இப்பொழுது வருமானால்,//

எனக்கு எப்பொழுதும் வருமே இது :)

ஆதிமூலகிருஷ்ணன் January 21, 2011 2:30 PM  

எல்லாமே அழகு. அதிலும் தர்மசங்கடங்கள் இன்னும் அழகு.!