சுமி மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். கண்களைச் சுருக்கி இன்னும் கண்ணாடிக்கு அருகில் போய், வலது கண்ணிற்கு கீழே தனது ஆள்காட்டி விரலை வைத்து லேசாக இழுத்துப் பார்த்தாள். பிங்க்கும் சிகப்பும் கலந்த நிறத்தில் இருந்த கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டிருந்தது. துடைத்துக்கொண்டாள். கண்ணாடியில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர்ப் பொட்டை எடுத்து வைத்துக்கொண்டாள்.

ங்க அம்மா பேரு சுமித்ரா. தூக்கு போட்டு செத்துட்டாங்க. இப்போ ஸ்கூலுக்குப் போய்ட்டு இருக்கேன். இந்த ரோட்லதான் எங்கம்மா கூட்டிப் போவாங்க, நான் இப்பல்லாம் சிரிக்கிறதே இல்ல. நேத்துகூட என் பென்சில எடுத்தான்னு அட்சயாவ ரொம்ப அடிச்சிட்டேன். நான் அப்பிடில்லாம் அடிக்கவே மாட்டேன் தெரியுமா. பிளேடு வச்சு கீறலாம்னு கூட நினைச்சேன். மிஸ் கிள்ளினாங்க. அம்மான்னு கத்தும் போது அழுக வரல. இதோ இப்ப லஞ்ச்ல தனியா சாப்பிட்டுட்டு இருக்கும்போது அழுகையா வருது. மிஸ் கிள்ளினதுக்கு இல்ல, அம்மான்னு கத்துனதுக்கு. நான் சொல்லிட்டே இருந்தா நீங்க கேப்பீங்களா..போங்க.”

ரவு பேசிய வார்த்தைகள் அவளைச் சுற்றிக்கொண்டே இருந்தன.

“கஷ்டமா இருக்குங்க. இதெல்லாம் தப்பில்லை, தனிமனித உரிமைன்னு காலேஜ்டேஸ்ல உங்கள விட அதிகமா நானும் சி்ந்திச்சிருக்கேன். பேசி இருக்கேன். பட் நாட் ஏபிள் டு டேக் இட். ஸாரி”

நிதானமாக பேசுவதாக நினைத்தாள். படபடவென விழுந்தன வார்த்தைகள்.

‘எத்தன தடவ சொல்றது சுமி. எனக்கு இதனால பிரச்சனை இருக்குற மாதிரியே தெரியல. லவ் பண்ணும்போது எப்பிடி இருக்கேனோ இப்பவும் அப்படித்தான் புரிஞ்சதா,. ஸாரி, பட் முதல்நாளே சொன்னேனே. பிளீவ் மி திஸ் இஸ் நத்திங்ங்ங். இதே ஊர்ல இன்னும் நிறைய மாறும். அப்போ யு வில் பி மோர் ஃப்ரிலி டேக்கிங் திஸ், ப்ளீஸ் லீவ் திஸ்”

படபடவென பேசினான். வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.

“என் நிலமைல இருந்து பாருங்க. எவ்வளவோ ட்ரை பண்றேன். ஆனா ஒவ்வொரு தடவையும் என்னால நினைக்காம இருக்க முடியல.”

சொல்லும்பொழுதே கண்ணிலிருந்து கோடாக இறங்கியது கன்னத்தில்.

“இப்போ எதுக்கு அழுது உன் கிளாமர குறைக்கிற, கொஞ்ச நாள்ல சரியாகிடும் உனக்கு. பை த வே, இன்னிக்கு மேடம் ஃபெரெஸ்ஸா வாசனையா இருக்குறாப்ல இருக்கு.’ சொல்லிக்கொண்டே பின்னாலிருந்து அணைத்தான். வெடுக்கென கையை உதறிக்கொண்டாள்.

இரவு உதறிக்கொண்டதை இப்பொழுது நினைத்து, இப்பொழுதும் அவள் கைகள் விலக்கியது காற்றை.

கண்ணாடியில்த் தன்னை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

போங்கன்னு சொன்னேன். போய்ட்டீங்க. க்ளாஸ்ல மேத்ஸ் சம் போட்டுட்டு இருக்கும்போது உங்கள போங்கன்னு சொன்னது தப்புன்னு தோணிட்டே இருந்தது. ஐ’ம் ஸாரி. இப்போ ஸ்கூல் விட்டாச்சு. என் கூட நடந்து வரீங்களா வீடு வரைக்கும்? வாங்க.

இதான் ஜனா அங்க்கிள் கடை. அப்பாவோட ஃப்ரெண்ட். என்னவேணாலும் எடுத்துப்பேன் இங்க. ஒண்ணுமே சொல்லமாட்டாரு. ஆனா பாட்டிக்குத்தான் இவர பிடிக்காது. அம்மா இவராலதான் செத்தாங்கன்னு திட்டுவாங்க. அப்பாகிட்ட கேட்டா அப்பிடில்லாம் இல்லடா கண்ணான்னு கட்டிப்பிடிச்சுப்பாரு என்ன. அப்பா அடிக்கடி சொல்வாரு, அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்கன்னு. வேற யார்க்கிட்டயும் அவ்வளவா பேசக்கூட மாட்டாங்களாம். நிறையப் படிப்பாங்களாம். எனக்கு அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும். வானத்தளவு. நான் திடீர்னு உர்ர்ருனு மொறைக்கிறேன்னு நினைக்காதீங்க. இப்பல்லாம் கொஞ்சம் அப்பிடித்தான் நானா தனியாப் போய் உக்காந்துக்குறேன். அம்மா ஏன் செத்தா? அந்த ஸ்டூல்லதான் நான் இப்பவும் உக்காந்து ஹோம் ஒர்க் பண்ணுவேன். அம்மாவே சொல்லித்தரமாதிரி இருக்கும் தெரியுமா. ப்ச். அந்த ஸ்டூல் மட்டும் கொஞ்சம் ஹைட் கம்மியா இருந்திருந்தா செத்திருக்க மாட்டாளோ. விடுங்க. இப்போ எனக்கு அர்ஜெண்ட்டா ஒன் வருது. நீங்க ஜனா அங்க்கிள்கிட்டபேசிட்டு இருங்க கொஞ்சநேரம்”

ண்ணாடியைப் பார்த்து பெருமூச்சு மூச்சு விட்டாள் சுமித்ரா. ஜனாவின் உருவம் மங்கலாகவும் பிரகாசமாகவும் தெரிந்தது. இவரிடம் எப்படி புரிய வைப்பது என எத்தனையோ விதமாக யோசித்துப்பார்த்தாள்.

தன் கல்லூரிக்காலங்களில் படித்த பேசிய அத்தனை விசயங்களையும் அசைபோட யத்தனித்தாள்.

தனிமனித விருப்பு, சமூகத்தையோ, சார்ந்தவரையோ பாதிக்காதவரை அவரவர் விருப்பப்படியே எதுவும் செய்யலாம் என தான் தன் தோழிகளிடம் பேசியது, காதலிக்கும் பொழுதும் கணவன் என்றானபின்னும் ஒரே மாதிரியாக வெளிப்படையாக இருக்கும் இவனை குற்றமே சொல்லமுடியாது என நினைத்தவளின் தலை தனிச்சையாக ஆடிக்கொண்டது ஆமோதிப்பது போல.

அவனின் விருப்பங்களைப் பற்றியும் உடலியல் குறித்த அவன் கருத்துக்களையும் முன்பே பகிர்ந்ததிலும் தெளிவாகவேத் தான் இருந்திருக்கிறான் என்ற நினைப்பு வரும்பொழுதே தன் மனமும் உடலும் அதை ஏற்காமல் போனதையும், அவன் தொடும்பொழுதெல்லாம் ஜனா, ஜனா, ஜனாவின் நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலாமல் போனதையும், அவனை முதல் சில மாதங்களுக்குப் பிறகு, தொடக்கூட அனுமதிக்காததையும் , தொட முற்படும்பொழுதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தட்டிவிடுவதும் தவறு என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருந்தது.

அவனும் இவளை புரிந்து கொண்டதனாலோ என்னவோ வற்புறுத்துவது இல்லை என்பதை நினைத்ததும் இன்னும் அழுகையும் கூடவே ஜனாவின் சிரித்த முகமும் மிகப் பணிவாக குனிந்து அவன் பேசும் வார்த்தைகளும் இன்னும் அவளை ஏதோ செய்தன. முகத்தைத் துடைத்துக்கொண்டவள் ஸ்டூலை எடுத்து ஃபேனுக்கு நேராகப் போட்டாள்.

னா அங்க்கிள்கிட்ட பேசினீங்களா? அங்க்கிள் நான் கிளம்பறேன். நாளைக்கு லீவு. வரமாட்டேன். இவங்களுக்கு ஏதாவது சாப்பிடக் குடுங்க. அப்..பு..றம்..அங்கிள்..ஒரு ரிக்வெஸ்ட்..இன்னிக்கு நைட் வீட்டுக்கு வராதீங்க ப்ளீஸ்.. அப்பாவோட இன்னிக்கு நான் படுத்துக்குறேனே..ப்ளீஸ்.”

21 comments:

தர்ஷன் January 13, 2011 2:52 PM  

mm Ok
ஏதோ ஒன்றை நினைக்க வைத்து இறுதியில் வேறு முடிவு . ம்ம் ஆனால் ஏதோ குறைவதாய் தோன்றுகிறது. ஹோமோ பற்றி எழுத வேண்டுமென்பதற்காகவோ அல்லது அதிர்ச்சி முடிவுக்காக அதை சேர்த்துக் கொண்டதாகவோ தோன்றுகிறது. நீங்க பெரிய ஆளு உங்க எழுத்துக்கள் பிடிக்குமென்பதால் அடியேனின் சிறு கருத்து அவ்வளவே

srividya January 13, 2011 3:51 PM  

enna kadhai idhu?puriala

கிறுக்கன் January 13, 2011 4:40 PM  

sathyama onnum puriyala....inum oru murai padiththu paarkireen

Anonymous January 13, 2011 5:52 PM  

ம்க்கும்...

நீர்ப்புலி January 13, 2011 6:17 PM  

wow!!

கனாக்காதலன் January 13, 2011 8:00 PM  

377 ஆ? ம்.. நடை அருமை. அதிலும் குழந்தை பேசுவது அப்படியே இருந்தது. நைஸ்..

வானம்பாடிகள் January 13, 2011 9:24 PM  

ரொம்ப மென்மையா ரொம்ப ஆழமா வந்திருக்கு. சபாஷ் நர்சிம்.

முகிலன் January 13, 2011 10:07 PM  

wow

சுசி January 13, 2011 10:52 PM  

ரொம்ப வித்தியாசமான முடிவு.. இல்லை அது வரை நினைச்சுப் பாக்கலை இந்த முடிவை.. நினைக்க விடலை உங்க எழுத்து.. அருமை.. வாழ்த்துகள்.

தலைப்பு செம :)

sudha January 14, 2011 10:27 AM  

குழந்தை பேசுவது அற்புதம்..ஆனால் இன்னும் தெளிவாக கூறியிருந்தால் எளிதில் புரிந்திருக்கும்..

காவேரி கணேஷ் January 14, 2011 11:55 AM  

வேற களத்தில் பயணிக்கும் ஆர்வம் தெரிகிறது.

Anonymous January 14, 2011 1:26 PM  

good one...so subtle..

நாய்க்குட்டி மனசு January 14, 2011 7:24 PM  

//நிதானமாக பேசுவதாக நினைத்தாள், பட படவென விழுந்தன வார்த்தைகள்.
படபடவென பேசினான். வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.//
நர்சிம் டச்.
//இப்போ எனக்கு அர்ஜெண்ட்டா ஒன் வருது//
பேசுவது குழந்தை என்பதை சொல்வதன் மூலம் தாயின் வயதை நிர்ணயிக்கும் வார்த்தைகள்.
அநேகமாக அதிகம் யோசிக்காதவர்கள் அதிக குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள்.
குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் எதிர் காலத்தை பற்றி அதிகம் யோசிப்பதில்லை.
மொத்ததில யோசனை என்பதே இல்லாமல் செயலில் இறங்குபவர்கள் சந்தோஷமாக இருப்பதாக தெரிகிறது
அருமையான கதை

Anonymous January 15, 2011 12:08 AM  

கணக்கில் ஃ என்ற குறியீடு therefore என்பதற்குப் பயன்படுமாம்.

rajasundararajan January 15, 2011 9:27 PM  

//அங்கிள்..ஒரு ரிக்வெஸ்ட்..இன்னிக்கு நைட் வீட்டுக்கு வராதீங்க ப்ளீஸ்.. அப்பாவோட இன்னிக்கு நான் படுத்துக்குறேனே..ப்ளீஸ்.//

இந்த வார்த்தைகளில் புரிகிறது உங்கள் கதை, ஆனால்

1) சிறிதளவு research செய்துவிட்டு எழுதி இருக்க வேண்டுமோ? அப்படி research என்று ஒரு bisexual கணவனுக்கு மனைவியாக அமைய நேர்ந்தவளை நீங்கள் சந்தித்து இருந்தால், அதுவரை தற்கொலை எண்ணம் இல்லாதிருந்தவள் அப்புறம் செய்திருப்பாளோ?

2) தம்மைப்பற்றி உண்மைக்கு மிகையாகப் படிமம் வளர்த்துக் கொள்பவர்களே (தாம் ஒதுக்கப்படுதல் நேர்கையில்) தற்கொலை செய்துகொள்கிறார்கள் என, தற்கொலை விளிம்பொன்றில் தெளிந்து இன்று உயிரோடிருப்பவன் நான். சுமிக்கு தன்னைப் பற்றி அப்படியொரு நினைப்பு உள்ளதாகக் காட்டப்படவில்லை என்பது, என் பார்வையில், குறை.

3) தோற்றுப் போகிறவர்களைப் பற்றி எழுதக் கூடாது என்பது அல்ல, ஆனால் பிரச்சனையை எப்படி நேர்கொள்வது என்று ஓர் அனுபவக் கீற்று அல்லது ஒரு மூளைச் சொடுக்கல் வாசிக்கிறவனை உலுக்க வேண்டாமா?

பிரதீபா January 15, 2011 10:24 PM  

//விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்:
.சச்சின்… சச்சின்.. சச்சின். - நர்சிம்--இரண்டாம் பரிசு//

வாழ்த்துக்கள் நர்சிம் !

shortfilmindia.com January 16, 2011 9:48 AM  

மிகவும் வலிந்து வித்யாசமாய் எழுத முனைந்து வீழ்ந்துவிட்டிருக்கிறது கதை. நல்ல முயற்சி.

கேபிள் சங்கர்

நாய்க்குட்டி மனசு January 16, 2011 4:14 PM  

//தம்மைப்பற்றி உண்மைக்கு மிகையாகப் படிமம் வளர்த்துக் கொள்பவர்களே (தாம் ஒதுக்கப்படுதல் நேர்கையில்) தற்கொலை செய்துகொள்கிறார்கள் //
இதில் எனக்கு உடன்பாடில்லை. எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு கூலித் தொழிலாளி, வயது 35 ; தனது அக்கா 30 வயதில் விதவை ஆனதாலே, அவள் கஷ்டங்கள் உணர்ந்து அவள் மகளை திருமணம் செய்தவன் ஒரே அறைக்குள் அனைவரும் படுத்திருக்கும் போதே,நைலான் கயிற்றில் தூக்கு போட்டு, அக்காள் மகளை அதே வயதில் விதவை ஆக்கி விட்டான், அவனுக்கு தன்னை பற்றிய எந்த படிமமும் கிடையாது.
ஆனால் ஒரு விஷயம் நர்சிம், கூடிய வரை எதிர் மறை விஷயங்களை உங்கள் கவிதைகளிலும், கதைகளும் சொல்லாதீர்கள். வேண்டுகோள் தான் .

rajasundararajan January 17, 2011 9:06 PM  

Blogger நாய்க்குட்டி மனசு said...

/தனது அக்கா 30 வயதில் விதவை ஆனதாலே, அவள் கஷ்டங்கள் உணர்ந்து அவள் மகளை திருமணம் செய்தவன்/

நாய்க்குட்டி மனசு ஓர் எழுத்தாளர். மாற்றார் கருத்துக்கு அவர் உடன்பட்டு ஆகவேண்டும் என்று நானும் சொல்லமாட்டேன். ஆனால் அவர் தான் கூறவந்த கருத்துக்கு ஒவ்வாத மாதிரி ஒரு வாக்கியம் அமைத்தால் எனக்கு வருத்தம் வரும். மேலே உள்ள வாக்கியத்தில் அந்தக் கூலித் தொழிலாளி ஒரு தியாகச் செம்மல் என்னும் படிமத்துக்கு உயர்த்தப் படுகிறார். இது எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.

நாய்க்குட்டி மனசு January 18, 2011 9:56 PM  

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி !
//நாய்க்குட்டி மனசு ஓர் எழுத்தாளர்.// நன்றி, நன்றி மிக்க நன்றி.
நான் ஏதோ எனக்கு தெரிந்ததை எழுத்து என்று எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
//அந்தக் கூலித் தொழிலாளி ஒரு தியாகச் செம்மல் என்னும் படிமத்துக்கு உயர்த்தப் படுகிறார்.//
நான் சொல்ல வந்தது தனது அக்காவின் வேதனையை உணர்ந்தும் கூட அந்த முடிவு எடுக்க தயங்காது விட்டானே என்று தான், அதை தெளிவாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
//தற்கொலை விளிம்பொன்றில் தெளிந்து இன்று உயிரோடிருப்பவன் நான்.//
இதையும் அன்றே கவனித்து விட்டேன். வருந்தினேன்.

ஆதிமூலகிருஷ்ணன் January 21, 2011 1:06 PM  

ரசித்த கதைகளை மறு வாசிப்பு செய்து மகிழலாம். ஆனால் புரியாத கதையை மறுபடி மறுபடி படித்து புரிந்துகொள்ள இப்போது யாருக்கும் நேரமில்லை என்று நினைக்கிறேன். எனக்கும்தான்.

கதையின் முக்கால்வாசியளவைக் கடந்த பின்னும் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரியாமல் எரிச்சலே மேலிடுகிறது. கதையோடு பயணிக்கவே முடியாத நிலையில் மீதத்தையும் எப்படி படித்து முடிக்கமுடியும்.? அப்படியும் படிக்கத்தான் செய்தேன்.. (மீண்டும் பின்னூட்டத்தின் முதல் வரியைப் படிக்கவும்)