மதுரம்

திய நேரம். சுரீர் வெய்யிலில் லேசான காய்ச்சலோடு அமர்ந்திருந்தது பிடித்திருந்தது. சோகை பிடிச்சிருக்கும் என வீட்டிற்குள் பேசுவது கேட்டது. இந்தக் கோடியில் இருந்து அந்தக் கடைசி வரை தெருவில் யாரும் நடமாடவில்லை. லேசாக சாய்ந்தவாறு சைக்கிளை உருட்டிக்கொண்டே தங்கைய்யா மட்டும் வந்து கொண்டிருந்தான். ‘ன்’ போட்டு எழுதுவதால் தங்கையா வயதை குறைத்து மதிப்பிட வேண்டாம். எப்படியும் 60க்கு மேலே இருக்கும். ஆனால் தெருவில் எல்லோருக்கும் தங்கையா, வா போ, அவன் இவன், ஏகவசனம்தான்.

‘என்ன தங்கைய்யா? எங்க?”

'என்னத்தச் சொல்ல, நம்ம புளியங்க்காவுக்கு இப்பத்தான் சொன்ன பலசரக்க எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். பச்ச மிளகாய மறந்துட்டாளாம். உடனே வேணும்னதும் போய்ட்டு இருக்கேன். திருப்பி வெய்யில்ல போக கஷ்டமா இருந்தா அவரு சைக்கிள வேணா எடுத்துட்டுப் போன்னு சொல்லுச்சு.. அதான்’

’ஓஹோ.. ஆமா ஓட்டிட்டுப் போகவேண்டியது தான?’

‘எனக்கு எந்தக் காலத்துல சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சுச்சு?’ உருட்டிக்கொண்டே தனக்குத் தானே பேசிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

புளியங்கா என்று சொன்னது ப்ரியங்க்கா என்ற பெயரை. பச்சை மிளகாயை வாங்கிக்கொடுத்துவிட்டு, சைக்கிளை சுவரில் சாய்த்து வைத்து விட்டு வேர்வையைத் தொடைத்தவாறே திண்ணைக்குள் நுழைந்த தங்கைய்யா, ‘வெய்யில்ல உட்காராதடா’ எனத் தலையில் தட்டி, லாவகமாக என்னைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்து போக, நானும் மெதுவாக தொடர்ந்தேன்.

‘இந்தாம்மா, காபித்தூள், சக்கரை எல்லாம் இதுல இருக்கு, லிஸ்ட்டும் என் செலவும் எழுதி இருக்கேன் பாரு’ தூணை ஒட்டித் துண்டை உதறிக்கொண்டே –ஏல்ப்ப்பாண்டி, என ஏதேதோ சொல்லிக்கொண்டே அமர்ந்தான்.

‘என்ன தங்கைய்யா, வெய்யிலா?’- இந்தக் கேள்வியை கேட்டு விட்டு அமர்ந்தால் போதும். நிரல்கள் வந்து விழும்.

‘ஏன் கேட்குற போ. ஆடி வீதிப்பக்கம் பாளம் பாளமாக வெய்யில் சாத்துது. ஸ்ஸ்ஸ் அப்பப்பா, இங்க அவ்ளோ லிஸ்ட்டா, அத முடிச்சிட்டு, கோவாலு வீட்டுக்காரம்மா வாங்கி வரச்சொல்லி ஒரு கடைய சொல்லி இருந்தா, அங்கப் போய்ட்டு, டவுன்ஹால் பக்கம் வந்தாக் கூட்டம்’

எவ்வளவு அடக்கினாலும் சிரிப்பு வந்துவிடும் அந்தக் கேள்வியை கேட்கும் பொழுது. லேசாய் சிரித்துக்கொண்டே ‘டவுன்ஹால் ரோட்டுக்கு ஏன் போன? இப்பிடியே வந்துரலாமே தங்கைய்யா?”

சுரீர் என்று கோவம் வந்துவிடும் தங்கையாவுக்கு. ‘மாடர்ன் ரெஸ்ட்டாரண்ட்’ அங்கதானடா இருக்கு, அங்க காஃபி குடுச்சேன்னா” சொல்லிக்கொண்டே நாக்கை காளி போல நீட்டுவான். “நாக்குலயே இருக்கும்டா கசப்பு’ கை விரல்களைத் தேய்த்துக்கொண்டே, கல்லிப்பால்ல போடுவான் போல அப்பிடித் திக்கா இருக்கும். அதான் ஒரு எட்டு அங்கப் போய்ட்டு வந்துடுவேன். அன்னிக்கு நீ கூட்டிப்போனியே பஸ் ஸ்டாண்டுக்கு பக்கமான்னு, எழவு பூன மூத்தரத்துலப் போட்ட மாதிரி இருந்துச்சு காபி”

சாப்பாட்டு நேரமாக இருந்தால் சாப்பாடு, சாயந்திரம் என்றால் காஃபி. இடைப்பட்ட இந்த மதியம் என்றால் எதையும் எதிர்ப்பார்க்காமல் அவன் வார்த்தைகளில் ‘கொஞ்ச நேரம் கட்டய சாய்ச்சுக்குறேன்’ என சிறு தூக்கம்.

காலை ஆறு ஆறரைக்கெல்லாம் பளீரென விபூதிப் பட்டையோடு தெருவில் இறங்கி, பேப்பர லேட்டாப் போடுறதே வழக்கமாப் போச்சு என பேப்பர் வாங்குபவர்களுக்குப் பதிலாக ஆதங்கப்பட்டு, பேப்பரைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு வீடாகக் கிளம்பிவிடுவான் லிஸ்ட் எடுக்க. யார் வீட்டிற்கு என்ன வேண்டும் என்ற லிஸ்ட்டை அவன் கைப்படவே எழுதிக்கொள்வான். இந்த உலகைப் படைத்ததாகச் சொல்லப்படும் எவர் வந்தாலும் அதைப் படித்துவிட முடியாது. ஒரே நேரத்தில் அம்பது அறுவது கோழிகள் கிண்டிவிட்ட மாதிரியான எழுத்து. ஆனால் ஒரு நாள் கூட எந்த ஒரு சாமானையும் மறந்தது கிடையாது, மாற்றி வேறோர் வீட்டிலும் கொடுத்தது கிடையாது.

லிஸ்ட் சொல்லும்பொழுது அந்த வீட்டுக்கு குழந்தைகள் குறுக்கே கத்தினாலோ, ஓடினாலோ அவ்வளவுதான். ‘கொழந்தயப் பெக்கச்சொன்னா குரங்கப் பெத்து நம்ம உயிர எடுக்குறாங்க என முணக ஆரம்பித்து விடுவான். கொஞ்சம் ஏப்ப சாப்ப வீடாக இருந்தால் குழந்தைக்கு பொடனியில் ஒரு அடி இனாம்.

லிஸ்ட்டில் எழுதியதை வாங்கியவுடன் அதை ஒரு கோடு போட்டு அடித்துவிடுவது வாடிக்கை. இதை அவன் சொன்னால்தால் தெரியும். எழுதியதும், அடித்ததும் ஒரே மாதிரி இருக்கும்.

வாங்கியப் பொருட்களை சரிபார்த்துக் கொடுத்ததும், தொண்டையை லேசாக செருமினான் என்றால் செலவுக்கணக்கு ஆரம்பம் என்று அர்த்தம்.

பஸ் டிக்கெட்
டீ
வடை
பஸ் டிக்கெட்

மிகச்சரியான விலையைப் போட்டு மீச்சத்தைக் கொடுத்துவிடுவான்.

“ஏன் தங்கைய்யா, ஒவ்வொருத்தரு லிஸ்ட்டுக்கும் தனித்தனியா பஸ்ல போவியா”, என்று அவன் சூட்சமம் தெரிந்து கேட்டால், கோவமும் இல்லாமல் சிரிப்பும் இல்லாமல் மய்யமாக முகத்தை வைத்துக்கொண்டு, “ஏதோ சரீரப் ப்ரயாச பண்றேன் விட்றா”

நாலணா எட்டணா ஒரு ரூபாய்த் தொடங்கி, அம்பது நூறு என கமிஷன் காசுகளை கையிலும் வேட்டியிலும் முடிந்து வைத்துக்கொள்வான். எவ்வளவு போராடினாலும் ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது அவனிடம் இருந்து. வாரம் முழுக்க ஒரே வேட்டி, அதே சட்டைதான். அவ்வளவு சீக்கிரம் அழுக்காக்கிவிட மாட்டான். ஆனாலும் மாற்றுவது என்னவோ அடுத்த வாரம்தான்.

டி.வி சத்தம் கேட்டு எழுந்த தங்கைய்யா பக்கத்தில் காஃபி வைக்கப்பட்டது. எனக்கு இன்னும் காய்ச்சல் என்பதால் கொஞ்சமாக கஞ்சியை வைத்துவிட்டுப்போனாள் அக்கா. ‘பேய் இருக்கா இல்லியா’ என சந்திரமுகி ரஜினியிடம் வடிவேலு கேட்டதும் தங்கைய்யா மடக்கி வைத்திருந்த முழங்காலில் கையை வைத்துக் கொண்டு குலுங்கி சிரித்தான்.

‘வடிவேலுன்னு பிடிக்கும்போலயே தங்கய்யா’ கேட்டதை சட்டை செய்யாமல் கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு, “அது ஆச்சுடா ஒரு நாப்பது வருசம், நீங்க எல்லாம் என்ன சேட்ட பண்றீங்க? எங்க அப்பாகூட ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன். கோவம் தீர்ந்த பாடில்ல. என் தலமுடில நாலஞ்ச கட் பண்ணி ஒரு கவர்ல போட்டு அவர் பேருக்கு போஸ்ட் பண்ணி விட்டேன். From ல பில்லி-சூன்யம் டிப்பார்ட்மெண்ட்னு போட்டு அனுப்பினேன். கைல வாங்கி பிரிச்சுப் பார்த்தவரு ஒரு வாரம் படுத்த படுக்கயா ஆகிப்போய்ட்டாரு. ஹும்ம்ம்” சொல்லி, சிரித்துக்கொண்டே காஃபியை ஆத்தத் துவங்கி இருந்தான்.

சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது. அவனோடு சேர்ந்து நானும் சிரித்துக்கொண்டே, ‘அப்ப உன்ன எல்லாரும் டி ஆர் ஆர்னு தான் கூப்புடுவாங்களாமே நெசமா தங்கையா?” என்றதும் நிமிர்ந்தவன் கண்கள் பிரகாசமாய் மின்னியது.

பரவாயில்லையே.. யார் சொன்னது? டி ஆர் ராமச்சந்திரன் மாதிரியே இருப்பேன். அவர மாதிரியே பேசுவேன்ப்பா என திடீரென ’பேசுவேன்ப்பா’வுக்கு அழுத்தம் கொடுத்து பேசினான். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உள்ளே இருந்து சத்தம் வந்தது. ‘ தங்கைய்யா, நல்லா ரெஸ்ட் எடுத்து ரெடியா இரு, அடுத்த வாரம் மதியோட கல்யாணம், ஞாபகம் இருக்கா இல்லியா?”

“மறக்குமா, அதுக்கு வேற நிறைய்ய சாமன் சட்டுன்னு என் உயிர் போகுமே’வில் குதூகலமானான்.

"ஓக்கே டிஆர்ஆர்" என்றதும் "சும்ம்ம்மா இர்டா நீ ஒரு பக்கம்" என சிரிப்போடு தலையில் அடித்துக்கொண்டே வேட்டியை ஒரு உதறு உதறிக் கட்டிக்கொண்டு கிளம்பினான். அடுத்து யார் வீட்டில் அமர்ந்து பேசுகிறானோ அங்கே இரவு உணவு. அப்புறம் தெருவில் அன்றைய மூடுக்கு ஏற்ப யாரிடமாவது பேசுவான். சீக்கிரம் தூங்கிப்போவான். அவ்வளவு அலைச்சல்.

காலம் ஓடியதில் அவன் சொந்தம் சுயம் எதுவும் எவருக்கும் தெரியாமல் இந்தத் தெருவில் ஒருவனாய் ஆகிவிட்டவன். எல்லோரையும் பிடிக்கும். எல்லோரையும் திட்டுவான். தெருமுனையில் இரவு கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, தூக்கம் வரவில்லை என்று வந்து அமர்ந்தால் அன்றைய இரவு கலகலவென்று போகும்.

பெண்கள் குறித்தப் பேச்சு வந்தால் மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவான்.

‘ஏ தங்கய்யா, சும்மாச் சொல்லுயா, பஸ்சுல உராசுறயாமே, குண்டுமணி நேத்து பார்த்துட்டுச் சொன்னான்யா’

‘முட்டாத்தனமாப் பேசாதீகப்பா, ச்சே,” வெடுக்கென்று பதில் வரும்.

யாரு வீட்ல விசேசம்னாலும் வேட்டி வேட்டியா வாங்குறயே தங்கைய்யா, ஒரு நாளாச்சும் பளிச்சுனு கட்டி வந்துருக்கியா, இப்பிடி அழுக்காவே இருக்கியே’வுக்கும் பதிலே வராது.

துவரை இல்லாத மழையான மழையோடு விடிந்தது அன்று. தெருவெல்லாம் சாக்கடையை அடித்துக்கொண்டு மழைத்தண்ணீர். பேப்பர் போடும் பையன் பேப்பரைக் கொடுத்துக்கொண்டே, ‘ தங்கைய்யா மண்டையப் போட்டுருச்சுயா. சரசு வீட்டுத் திண்ணைல- விடியக்காலைலதான் பார்த்தாங்களாம்’ சொல்லிவிட்டு சைக்கிளை ஏறிமிதித்துப் போய்விட்டான்.

இருப்பேக் கொள்ளவில்லை. அனிச்சையாக சட்டையை மாட்டிக்கொண்டு சரசு வீட்டுக்குப் போவதற்குள் மழையிலும் தெருக்காரர்களில் சிலர் கூடி இருந்தார்கள். ‘அய்யய்ய, நோ நோ இப்போ யாரும் கிடையாதுங்க, எனக்கு நல்லாத் தெரியும், அதெல்லாம் யாருக்கும் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை’ என ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி, தங்கைய்யாவைத் தூக்கிப் போட்டு எரித்துவிட்டு வந்தோம்.

அவன் முடங்கி இருந்த திண்ணையில் அவனுக்கான ஒரே சொத்து என இருந்த ட்ரங்க் பெட்டி. ஒரு நாளைக்கு எப்படியும் நாற்பது முறையாவது அதைத் திறந்து மூடுவான். உடைத்துப் பார்த்ததில், ரெக்கு மாறாத புதிய வேஷ்டிகள் இருபதுக்கும் மேல் இருந்தன. எடுத்து உதறினால் மடிப்பு எல்லாம் கிழிந்து விடும் போல பழசாக, ஆனால் புதிய வேஷ்டிகள். எழுபதுகளில் தொடங்கி இந்த ஆண்டுவரை டயரிகள். புத்தம் புதிதாக. வேஷ்டிகளுக்கும் டயரிகளுக்கும் நடுவில் பழைய பெரிய நூறுரூபாய் நோட்டில் இருந்து இன்றைய சிகப்பு இரண்டு ரூபாய் நோட்டுகள் வரை பணம் எப்படிப் போனாலும் லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும். குற்றாலத் துண்டு பரப்பி இருந்தது. அதற்கு அடியில், மிக இளமையான தங்கைய்யா புகைப்படம். அதற்கும் அடியில் மிக அழகான ஒரு இளம்பெண் படம். அந்தப் படத்திற்குப் பின்னால் அழகான குண்டு குண்டு எழுத்தில் ’அடுத்த ஜென்மத்தில் இந்தப்பாழாய்ப்போன பணத்தோடு சந்திப்பேன் கண்ணம்மா-இப்படிக்கு உன் தங்கம்’


..

19 comments:

மோகன் குமார் February 8, 2011 11:17 AM  

மதுரம். கனவு கன்னி T.R மதுரம்..??

சாரி படிக்க இப்போ நேரமில்லை. (நிச்சயம் படிச்சுட்டு) நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்.

எல் கே February 8, 2011 11:24 AM  

இந்த மாதிரி மனிதர்கள் ஒவ்வொருவர் பின்னிலும் இப்படி ஒரு கதை இருக்குமோ ??

பிரதீபா February 8, 2011 5:08 PM  

உயிரோட்டமான கதை.

காவேரி கணேஷ் February 8, 2011 6:11 PM  

இச்.இச்.இச்

உங்களின் கிளாசிக் கதைகளில் இதுவும் இடம்பெறும்.

மதுரை பகுதிகளை ஆடி வீதிப்பக்கம், டவுன் ஹால் என்று எழுதினாலும் எல்லா ஊரிலும் பொதுவாய் அழைக்கப்படும் பகுதிகளை கவனமாக கையாண்ட விதம்.

ஊர் , கிராம பகுதிகளில் தங்கைய்யா மாதிரி ஒருத்தர் இருப்பார், திருமணமாகமால். அதை கேரக்டரைசேசன் செய்த விதம்.

பாலமா வெய்யில் ,கல்லிப்பால்ல போடுவான் போல அப்பிடித் திக்கா இருக்கும்,
பூன மூத்தரத்துலப் போட்ட மாதிரி இருந்துச்சு காபி”, உவமைகள்.

தங்கைய்யா தன் காதலி பிரிந்ததிலிருந்து அவனுக்கு பணத்தின் மேல் இருந்த வைராக்கியம்.

மிக ரசித்து படித்த கதை.

rajasundararajan February 8, 2011 6:28 PM  

//‘ன்’ போட்டு எழுதுவதால் தங்கையா வயதை குறைத்து மதிப்பிட வேண்டாம். எப்படியும் 60க்கு மேலே இருக்கும்.//

//திண்ணைக்குள் நுழைந்த தங்கைய்யா, ‘வெய்யில்ல உட்காராதடா’ எனத் தலையில் தட்டி, லாவகமாக என்னைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்து போக,//

இங்கேயே தெரிந்துவிடுகிறது தங்கையா உலக வழக்கு ஆளொன்றும் இல்லை என்று ('லூசு' என்று சொல்லக் கூசுகிறேன்).

சொன்னார்கள் என்பதற்காகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு இடர்ப்படுவது, டவுன்ஹால் ரோடுக்குப் போய் வருவது, //"முட்டாத்தனமாப் பேசாதீகப்பா, ச்சே!"// என, தங்கையாவைக் கதை நெடுக நுணுக்கங்கள் சேர்த்து வார்த்து இருக்கிறீர்கள்.

இது ஒரு character study-தானே என்றோர் எண்ணமும் கூட வர, வாசித்து வழிபற்றினேன். ட்ரங்க் பெட்டித் திருப்பத்தில் கதையாகி இலக்குக் காட்டிவிட்டது.

பெட்டகமாக, இக் கதைக்கு ஏற்ற வகையில், 'ட்ரங்க் பெட்டி'யைத் தேர்ந்த நுணுக்கத்தையும் பாராட்டுகிறேன்.

சுசி February 8, 2011 8:34 PM  

எளிமையான நடை நர்சிம்..

தங்கையா எங்க ஊர்ல வாழ்ந்த ஒருத்தரோன்னு நினைக்கும் அளவுக்கு இலகுவாகக் கதையோட ஒன்ற வச்சிட்டிங்க..

மதுரம்.. அதிமதுரம்.

வானம்பாடிகள் February 8, 2011 8:58 PM  

எழுத்து வசப்பட்டுப் போச்சு:).சபாஷ்

sudha February 9, 2011 10:08 AM  

//தெரு முனையில் இரவு carromboard விளையாடி கொண்டிருக்கும்
பொழுது//.....இந்தவரி என்னுடைய ஊரை நினைவு
படுத்துகிறது....good .

"உழவன்" "Uzhavan" February 9, 2011 12:24 PM  

சூப்பர்

மோகன் குமார் February 9, 2011 2:16 PM  

படிச்சுட்டேன். அருமை . ஊரில் இது போல் கவனித்த பிற காரக்டர்களும் அடுத்து வருமா? வரணும்.

ராமலக்ஷ்மி February 9, 2011 2:44 PM  

கதை நன்று.

சே.குமார் February 9, 2011 3:20 PM  

எளிமையான நடை. உயிரோட்டமான கதை.

நாடோடி இலக்கியன் February 9, 2011 3:37 PM  

ந‌ல்லாயிருக்குங்க‌ ம‌துர‌ம்.


உங்க‌ ட‌ச் கொஞ்ச‌ம் க‌ம்மியா இருக்கிற‌ மாதிரியும் ஒரு ஃபீல்.

கனாக்காதலன் February 9, 2011 7:30 PM  

கதை மிகவும் நன்று.

கனாக்காதலன் February 9, 2011 7:30 PM  

கதை மிகவும் நன்று.

Raja February 10, 2011 11:03 AM  

Gud one Narsim...enjoyed it...

ஈரோடு கதிர் February 10, 2011 3:27 PM  

ரொம்ப நல்லாயிருக்கு நர்சிம்!

ரமேஷ் வைத்யா February 11, 2011 5:00 PM  

சவாசு.. சிறுகதைத் தொகுப்பு பார்சேல்...

தராசு February 11, 2011 10:24 PM  

ஹலோ, யாருங்க அது, இங்க நர்சிம்னு ஒருத்தர் கதை கவிதைன்னு எழுதிகிட்டு இருப்பாருங்களே, அவரப் பார்த்தா கொஞ்சம் விசாரிச்சேன்னு சொல்லுங்க.