திருமங்கலம்

கூட்டமானக் கூட்டம். செந்தி முடிந்தவரை சமாளித்துக்கொண்டிருந்தார். பொழுது போக அமரும் இடம் என்றாலும் இதுபோன்ற கூட்டமான நேரத்தில் முடிந்தவரை உதவ வேண்டி இருக்கும், உதவிக்கொண்டிருந்தோம். சுந்தரா மெடிக்கல்ஸின் ஆதாரமே இந்தக் 'கவுண்ட்டர் சேல்ஸ்'தான். வேலை விட்டு திரும்புவர்கள், புல்லு வண்டி, லோடு மேன், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் என அனைத்துதரப்பு வேலையாட்களும் வீடு திரும்பும் பொழுது ஒரு எட்டு சுந்தரா மெடிக்கல்ஸ் செந்தியைப் பார்த்து ஏதாவது மாத்திரை வாங்கிப்போவது அனிச்சை.

விதவிதமான வலிகள், நோய்கள். “ஏ செந்தி, மூடைய இறக்கும் போது விசுக்குண்டு இங்கணக்குள்ள பிடிச்சுச்கிடுச்சுப்பா, வாயுவா இருக்கும். அந்த இதக் குடு”.

‘வலிச்சு வலிச்சுப் போகுதுய்யா’

‘பிட்டுப் பிட்டாப் போகுதுய்யா’

“செந்தில், நல்லா இருக்கீங்களா, லேஸா ஹெட் ஏக் மாதிரி இருக்கு. பெயின் கில்லர் குடுங்க, ஆண்ட்டிபயாடிக்கும் குடுங்க செந்தில், தேங்க்ஸ்”

“மேலுக்குச் சொகமில்ல செந்திண்ணே, வீட்ல, வீட்லண்ணே, நமக்கில்ல, கொஞ்சம் கேட்குறமாதிரி கொடு”

“நல்லா கொடுத்தப்பா நேத்து செந்தி. நடுமண்டைல சுத்தியக் கொண்டு எறக்குனமாதிரி கேட்டுச்சு. அதுல நாலக் குடு.”

இப்படி ஏதாவது ஒரு ரோகம். மாத்திரைகள். மாலை ஆறிலிருந்து அறுபது நிமிடங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஏழு ஏழரைக்கு கொஞ்சம் காத்து வாங்க ஆரம்பிக்கும்.

டெண்டுல்க்கர் ஆட வந்தபொழுது பிறந்தே இருக்காதவர்கள் இப்பொழுது அவருடன் ஒன்றாக விளையாடுவது போலத்தான் அங்கே எங்கள் குழுவும். அந்தக் காலத்து செட் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ளும் சங்கரண்ணே, ஒச்சண்ணே, வேல் அண்ணே என அழைக்கப்படுபவர்கள் அமர்ந்து வளர்த்த ஜமா அது. அதில் நான், ராஜா, பாலா என நுழைய துவங்கிய நாட்களில் கடைக்குள் விடமாட்டார்கள். கடைக்கு வெளியில் இருந்தே பேசிவிட்டுச் சொல்வோம். டீ அவர்களாகச் சொல்லிக் குடித்துக்கொள்வார்கள். கொஞ்சம் விபரீதமான ஜோக் அடித்து அவர்களாகவே சிரித்துக்கொள்வார்கள். ‘ஏ அப்புறம் பேசுவமப்பா பயலுக இருக்காங்க’. ஆனாலும் பாலா சுற்றிச் சுற்றி அவர்களுக்கு ஈடாக அந்த மாதிரி விசயங்களைப் பேசுவான். “ஏன் செந்தியண்னே ஒங் கடைல அந்த மாத்திரை இருக்காம்ல”
டேய் போடா அப்பா சாமி..அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உங்க வீட்லச் சொல்லிக் கல்யாணத்தப் பண்ணச் சொல்லுடா”

புரிகிறதோ இல்லியோ சேர்ந்து சிரிப்பது. , டீ சொல்லவா செந்திண்ணே என ஊடுபாவுவது. யாரும் கடைக்குள் இல்லை என்றாலும் வெளியில் கொறப்பாச்சம் போட்டு நிற்பது என ஒரு வழியாக கடைக்குள் அமரும் பிரமோசன் கிடைத்தது. அதன்பிறகு எப்பொழுது ‘எல்லாம்’ சரிசமமாக பேச ஆரம்பித்தோம் என்பது தெரியவில்லை. செந்தி அண்ணனின் உலகமே அந்த பத்தடிக்கு இருபது கடைதான் என்பதால், நண்பர்களை அப்படி மதிப்பார். வாய்யா தியாகராஜா என அவர் யாரையாவது அழைத்தால், தியாகு என்று அழைக்கப்பட்டவர் மாத்திரை வாங்கிப்போனதும் மொத்தமாக எல்லோரும் செந்தியைச் சூழ்ந்து கொள்வார்கள். என்னா செந்தி சொல்ற, தியாகுவா இவரு, எந்த ஏரியாலப்பா வீடு என நச்சரிப்பார்கள். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. நாட்கள் கழித்து, அவர் தியாகராஜன் என யாரையாவது சொன்னார் எனில், அந்த நபரின் வீட்டைப் பற்றி அப்படி இப்படி என பரோட்டாச் செய்திகளாக இருக்கும்.

அவ்வளவாக எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம். பொழுது போவது என்பதை விட பொழுது போதாது என்பதே சரி. அதிலும் ஊரில் நடக்கும் சமாச்சாரங்களைப் பற்றி அலர் தூற்றல் தூக்கலாகவே இருக்கும். கல்யாணம் ஆன அன்று, முதலிரவுக்கு பயந்து ஓடி ஒளிந்து விட்டு ஒருவாரம் கழித்து திரும்பி வந்திருந்த ராசகோவாலைப் பற்றி அந்த ஒருவாரமும் கடையில், எது அவனைப் பயம் கொள்ளச் செய்தது என்ற கற்பனை காட்சிகள் வயிற்றில் வலியும் கண்களில் நீருமாய் சிரித்துத் சிரித்து பேசப்பட்டன. ராசகோவால் அதன்பிறகு தன் குழந்தைக்கு ஃபேரக்ஸ் வாங்க வந்தால்கூட செந்தி லேசாக ஆரம்பிப்பார் சிரித்துக்கொண்டே, ‘ஏய்யா எதப் பார்த்..ஏய் ஏய் ராசா விடப்பா கோவிக்காத’.

அங்கே எல்லாமே கேலிதான். எனக்குத் தெரிந்து அங்கே எந்தப் பிரச்சனையையும் வெகு சீரியஸாக ஒருநாளும் பேசிக்கொண்டதே கிடையாது. அவரின் வார்த்தைக் கோர்வைகள் அப்படி இருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

‘அதோ வர்றாரு பாருய்யா, அவர்கிட்ட நீ போயி, சார், எனக்கு இந்த பிரச்சனைய முடிச்சுக்கொடுங்க, ரூவா எவ்வளவு வேணாலும் வாங்கிக்கீங்க’ன்னு சொல்லிப்பாரு. உன்னய அதே இடத்துல பளார்னு அறைஞ்சுடுவாரு. லஞ்சம் அப்பிடின்ற வார்த்தைதான் உலகத்துலயே அவருக்குப் பிடிக்காத வார்த்தை’ சிரிக்காமல் வெகு சீரியஸாகச் சொல்லுவார். முதல்முறை செந்திலிடம் இதைக் கேட்பவர்கள் சாட்சாத் மகாத்மாவே நடந்து போகிறார் போல என்று நினைத்துக் கொள்வார்கள். எங்களுக்குத்தான் தெரியும், லஞ்சம் லஞ்சம் என்று அலைபவரைப் பற்றித்தான் செந்தி இப்படி மாற்றிச் சொல்கிறார் என்று.

ரு வெய்யில் நேரம். கசகசவென வேர்வை. எதற்கெடுத்தாலும் கோவத்தை வரவழைத்துவிடுகிற கத்திரி வெய்யில். கடையில் நானும் செந்தி அண்ணனும் மட்டும்தான் இருந்தோம்.

‘ஸ்ஸ்ஸ், என்னய்யா இன்னிக்கு இப்பிடி இருக்கு வெய்யி’ என நாளிதழை விசிறியாக வீசிக்கொண்டே சொன்னார். ‘கரெண்ட்ட வேற கட் பண்ணிட்டாய்ங்க’ பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பரபரப்பாக வந்தார் வேலு. எந்தச் செய்தியாக இருந்தாலும் முந்தித்தருவது தந்திக்கு முன்னரே வேலுதான்.

‘ஏ செந்தி, வெவரம் தெரியுமா, நம்ம முருகனோட மாப்ள மருந்தக் குடிச்சுப்புட்டானாம்ய்யா’

நான் பதறிப்போய் என்ன ஏதென்று கேட்டால் ஏதோ லவ் ஃபெயிலியரோ மார்க் குறைச்சலோ சரியாகத் தெரியவில்லை என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த செந்தி சாவகாசமகாச் சொன்னார். ‘ இப்பிடி மருந்தக் குடிக்கிறவங்க கிட்ட என்ன சொல்லணும் தெரியுமா, அடடா, அர பாட்டில்தான் குடிச்சியாடா, சரி, சரி, பந்தல் எப்பிடிப் போட்டா பிடிக்கும்டா உனக்கு? வாடிப்பட்டி கரகாட்டம் சொல்லணுமா? சாகுறதுக்குள்ள சொல்லுப்பா, ஏற்பாடு பண்ணணுமா இல்லியா’ன்னு கேட்கணும்ய்யா..அதக் கேட்டே சாகணும் அவென் அது என்னா அப்பிடி ஒரு வீம்பு? என்றதும் அவர் சொன்ன காட்சியை நினைத்து என்னை மறந்து சிரித்துவிட்டேன்.

‘சும்மா இரப்பா செந்தி, பாவத்த’- என்று வேலண்ணே சொன்னதும் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அவர் போனதும் நானும் செந்தியும் அவர் சொன்ன ஐடியாவை விஸ்தாரமாகப் பேசி சிரித்துக்கொண்டோம். கண்களை இடுக்கிச் சிரித்துக்கொண்டே செந்தி, ‘என்னா யோசிச்சுப்பாரு எப்பிடி இருக்கும் ம்ம், சாகக் கிடக்குறவனப் பார்த்து, டேலேய் சொல்லுடா போஸ்ட்டர்ல உம்பேர எப்பிடிடாப் போடணும் செத்ததும்..” வாக்கியத்தை முடிக்க முடியாமல் சிரிப்பு மிகும்.

னதே சரியில்லாத ஒரு நாள் சரி மெடிக்கல்ஸில் அமர்வோம் எனப் போய் அமர்ந்தவுடன் செந்தி கேட்டார். என்னய்யா டல்லா இருக்க, சரி சரி, பெரியசாமி வந்துட்டு இருக்காப்ல. சிரிக்காமக் கேளுய்யா அவர்கிட்ட நான் பேசுறத.” என செந்தி சொல்லும்பொழுதே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘வாங்க பெரியசாமி. இப்ப எப்பிடி இருக்கு? “

“அத ஏன் கேட்குற செந்தி’ சொல்லிக்கொண்டே கட்டை விரலை மற்ற விரல்களில் இருந்து விலக்கி ‘ப’ வடிவில் வைத்து லேசாகக் குனிந்து தன் முட்டிக்காலில் பிடித்துக் காட்டியவாரே “வலின்னா வலி, அம்புட்டு வலி, உசுறு போகுதுய்யா, ஒரு இடத்துல இருந்து எந்திரிக்க முடியல, நடக்க முடியல’ ஏன் ஏப்பா சிரிக்கிற?” என சிரித்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து பெரியசாமி கேட்டுக்கொண்டே தன் வலது கால் முட்டியில் மீண்டும் விரல்களை வைத்து, இதுல சுர்ர்ருனு ரத்தம் கட்டின மாதிரியே இருக்கப்பா எப்பவும், எந்திரிச்சு நடக்கவே முடியுறதில்லை, உக்காந்தா உக்காந்த இடம், நின்னா நிண்ட இடம், முடியல”

நான் சிரிப்பை அடக்குவதில் தோற்று, கடைக்குள் சென்று வேறு மாத்திரை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தேன்.

செந்தி, “அப்பிடியா பெரியசாமிண்ணே, இது கிட்டத்தட்ட பத்து வருசமா இருக்கு போலயே.. நானும் ஏதேதோ மருந்து கொடுக்குறேன். சரியாக மாட்டேங்குது.” சிரிக்காமல்.

அவரும் ‘என்னத்தச் சொல்ல? நான் வாங்கி வந்த வரமப்பா. ரெண்டு மாத்திரையக் கொடு’ என வாங்கிக்கொண்டு ‘அம்மம்மா, யப்பப்பா” என காலை மெதுவாக எடுத்து வைத்து தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தார்.

“பாவம்ய்யா, எதுக்குய்யா இப்பிடிச் சிரிக்கிறீங்க” என கேட்டுக்கொண்டே வந்த பழனிச்சாமியைப் பார்த்து செந்தி காரணத்தைச் சொன்னார்.

“பத்து வருசமா இப்பிடித்தான், உட்கார்ந்தா எந்திரிக்கவே முடியாம இருக்காரு பழனி. ஆனா அன்னிக்கு ராஜீவ்காந்தி செத்தக் கலவரத்துல மன்றம்,மந்தைன்னு எரிச்சாய்ங்க பாரு, உக்காந்திருந்த கூட்டத்துல இருந்து மொத ஆளா, சொடக்குப் போடுறதுக்குள்ள சல்லுனு எந்திருச்சு வீட்டுக்கு ஓடி தடதடன்னு மொட்டை மாடிக்குப் போய் அங்க இருந்து வேடிக்க பார்த்த ஆளுய்யா இவரு, அன்னிக்கு மறந்துட்டாரு போல கால்வலிய”. கண்களை இடுக்கிக் கொண்டு செந்தி சொல்லச் சொல்ல பழனியும் சிரிக்கத் துவங்கி இருந்தான்.

ந்த வருடமும் குற்றாலம் செந்தி தலமையில் கிளம்பிவிட்டோம். அந்த முறையும் எவ்வளவு அழைத்தும் பாலா மட்டும் வரமறுத்துவிட்டான். ஏண்டா நம்ம போறப்ப மட்டும் வர்ற, என்றதற்கு லேசாக சிரித்துக்கொண்டே “வேல இருக்குடா போய்ட்டு வாங்க, என்சாய் மாப்ள” என்றவனை பார்த்து “பொல்லாத வேல, போடாப்பா”வென கிளம்பிவிட்டோம்.

வழி நெடுக செந்தி அண்ணனும் பழனியும் ஊர்ப்பேச்சு, ஆட்டம் என ரகளையைப் போட நானும் ஒச்சும் பாட்டுக்கேட்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்தோம். ஆடிக்கொண்டிருந்த பழனி கால் இடறி செந்தியண்ணன் மேல் விழ, சீட்டிற்கு அடியில் இருந்த தகரம் குத்திக் கிழித்துவிட்டது அவரின் கால் ஆடுசதையை. ‘திருமங்கலம்தான வந்திருக்கு, ஒண்ணு பண்ணுங்க, நீங்க போங்க, நான் நாளைக்கு வர்றேன், ரொம்ப ரத்தம் போகுது, வலிக்குது, டேய் பழனி ஆட்றா ஆட்றா” என சிரித்துக்கொண்டே எதிர் வந்த அம்பாசிடரை மடக்கி ஏறிப்போனார். ஏறும்பொழுது “டேய் என் சரக்க தீர்த்துராதீங்கடா, நாளைக்கு மதியம் வந்துடுவேன்”. டீயைக் குடித்துவிட்டு திருமங்கலத்தில் இருந்து கிளம்பும் பொழுது இருட்டத் துவங்கி இருந்தது.

மெயின் ஃபால்ஸில் குளித்துவிட்டு, சுடச்சுட வடையையும் ஆவிபறக்கும் இட்லியையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பழனிச்சாமியின் மொபைல் அடித்தது. ஈரத்தில் நைந்துபோயிருந்த விரல்நுனிகளைக்கொண்டு மொபைலில் ஈரம் பட்டுவிடாதவாறு அழுத்திப் பேசினான்.

“என்ன வேலு சொல்ற? என்னய்யா சொல்ற? எதுக்காம்யா..அய்யோ என்னய்யா இது?”

அதிர்ந்து பார்த்தோம். “செந்தி மருந்துக் கடைல தொங்கிட்டாப்லயாம்ய்யா”.


--

15 comments:

பொன்.பாரதிராஜா February 17, 2011 11:46 AM  

என்னங்க!!!! இப்படி முடிச்சுட்டிங்க?

கனாக்காதலன் February 17, 2011 12:36 PM  

அது என்னங்க பாலா படம் மாதிரியே கதையே முடிகுறீங்க.. மத்தபடி கதை அருமை யண்ணே !

Balaji S February 17, 2011 1:31 PM  

Thiru Narsim Avarkalukku,
Yen thodarnthu irandu pathivukalum ore thonyil?

//மாலை ஆறிலிருந்து அறுபது நிமிடங்களுக்கு அப்படித்தான் இருக்கும்

வானம்பாடிகள் February 17, 2011 3:24 PM  

சிரிக்கச் சிரிக்கக் கொண்டு போய் திடீர்னு நடு நெஞ்சில் ஏதோ மோதி மூச்சடைச்சமாதிரி இருக்கு. உலோகத்துல குண்டு பாய்ஞ்சா எப்படி இருக்கும்னு ஜெ.மோ. விவரணை மாதிரி உணர்ந்தேன். அபாரம்.

சுசி February 17, 2011 3:43 PM  

எளிமையான நடை.. அருமையா எழுதி இருக்கீங்க நர்சிம்.

கலகலன்னு கொண்டு போய் கடைசில.. எதிர்பார்க்காத முடிவு.

rajasundararajan February 17, 2011 6:08 PM  

ஊரு நாட்ல நடக்குறதெப் பேசுறீங்க, ஆனா இதுக்குச் சாவுதானா தீர்வு?

மருந்துக்கடைச் செந்தி பண்ணுற உள்க்குத்து நக்கல் பிட்டுகளால, இளந்தாரிகள் தங்களோட அறியாப் பருவத்துத் தெரியாத்தனங்களெ நிரப்பி நிறைவு காண்கிற செட்-அப் நல்லாவே வந்திருக்கு.

தனக்கு வந்தாத்தான் தெரியும்கிற நீதி சரிதான், ஆனா பறிக்கப் படுவோமா அல்லது பிஞ்சாகிக் காயாகிப் பலன் தருவோமான்னு தெரியாமத்தானே பூவெல்லாம் பூக்குது?

ஒரு பூப்போல வெள்ளந்தியா செந்தி இல்லைங்கிறதெத்தான் கதையோட முடிவு காட்டுது. அப்படியானா, அவனோடது வெறும் கிண்டல் கேலி அல்ல, 'மட்டந் தட்டுதல்'. மட்டந்தட்டுறவன் தன்னெப் பத்தி உசத்தியா நெனச்சுக்குவான். அதுதான் அவனெத் தற்கொலைல கொண்டு விடுது.

தற்கொலை, தாமஸம்; கொலை, ராஜஸம்; சமாதானம், ஸாத்விகம்.

நீங்க தாமஸத்துல முடிச்சிருக்கீங்க. பின்னே, 'தியாகராஜா'ங்கிற பேரு தனக்கே திரும்பி வந்தா அவன் தாங்குவானா என்ன?

Rathnavel February 17, 2011 10:44 PM  

மனது விட்டு சிரித்துக்கொண்டே படித்தேன். முடிவு அதிர்ச்சியாக இருந்தது.
பதிவா நிஜமா.

nellai அண்ணாச்சி February 18, 2011 12:40 AM  

எதுக்கு அண்ணே இப்படி பண்ணிட்டாரு

பிரதீபா February 18, 2011 4:19 AM  

நல்லாத் தானே போய்கிட்டு இருந்துது? ஏன்?

பார்வையாளன் February 18, 2011 6:33 AM  

அருமை

பார்வையாளன் February 18, 2011 6:33 AM  

அருமை

vanila February 18, 2011 10:04 AM  

@@ இப்படி ஏதாவது ஒரு ரோகம். மாத்திரைகள். மாலை ஆறிலிருந்து அறுபது நிமிடங்களுக்கு அப்படித்தான் இருக்கும்@@
@@டீ சொல்லவா செந்திண்ணே என ஊடுபாவுவது.@@
@@எந்தச் செய்தியாக இருந்தாலும் முந்தித்தருவது தந்திக்கு முன்னரே வேலுதான்@@
Beautiful.. Keep Going..
@@அதிர்ந்து பார்த்தோம். “செந்தி மருந்துக் கடைல தொங்கிட்டாப்லயாம்ய்யா”.@@

ஏன்.. ?.

vanila February 18, 2011 10:05 AM  

@@ இப்படி ஏதாவது ஒரு ரோகம். மாத்திரைகள். மாலை ஆறிலிருந்து அறுபது நிமிடங்களுக்கு அப்படித்தான் இருக்கும்@@
@@டீ சொல்லவா செந்திண்ணே என ஊடுபாவுவது.@@
@@எந்தச் செய்தியாக இருந்தாலும் முந்தித்தருவது தந்திக்கு முன்னரே வேலுதான்@@
Beautiful.. Keep Going..
@@அதிர்ந்து பார்த்தோம். “செந்தி மருந்துக் கடைல தொங்கிட்டாப்லயாம்ய்யா”.@@

ஏன்.. ?.

Ramani February 18, 2011 11:36 PM  

மிக அருமை.
இயல்பாக கதை சொல்லிப் போவதும்
புரிந்து கொள்ளும்படி சில விஷயங்களை
கோடிட்டுக் காட்டி மட்டும் செல்வதும் மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் February 19, 2011 4:47 PM  

குறிப்பிட்டு சொல்ல‌முடியாம‌ல் நிறைய‌ இட‌ங்க‌ளில் ர‌ச‌னையான‌ விவ‌ர‌வணைக‌ள்.