கூட்டமானக் கூட்டம். செந்தி முடிந்தவரை சமாளித்துக்கொண்டிருந்தார். பொழுது போக அமரும் இடம் என்றாலும் இதுபோன்ற கூட்டமான நேரத்தில் முடிந்தவரை உதவ வேண்டி இருக்கும், உதவிக்கொண்டிருந்தோம். சுந்தரா மெடிக்கல்ஸின் ஆதாரமே இந்தக் 'கவுண்ட்டர் சேல்ஸ்'தான். வேலை விட்டு திரும்புவர்கள், புல்லு வண்டி, லோடு மேன், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் என அனைத்துதரப்பு வேலையாட்களும் வீடு திரும்பும் பொழுது ஒரு எட்டு சுந்தரா மெடிக்கல்ஸ் செந்தியைப் பார்த்து ஏதாவது மாத்திரை வாங்கிப்போவது அனிச்சை.
விதவிதமான வலிகள், நோய்கள். “ஏ செந்தி, மூடைய இறக்கும் போது விசுக்குண்டு இங்கணக்குள்ள பிடிச்சுச்கிடுச்சுப்பா, வாயுவா இருக்கும். அந்த இதக் குடு”.
‘வலிச்சு வலிச்சுப் போகுதுய்யா’
‘பிட்டுப் பிட்டாப் போகுதுய்யா’
“செந்தில், நல்லா இருக்கீங்களா, லேஸா ஹெட் ஏக் மாதிரி இருக்கு. பெயின் கில்லர் குடுங்க, ஆண்ட்டிபயாடிக்கும் குடுங்க செந்தில், தேங்க்ஸ்”
“மேலுக்குச் சொகமில்ல செந்திண்ணே, வீட்ல, வீட்லண்ணே, நமக்கில்ல, கொஞ்சம் கேட்குறமாதிரி கொடு”
“நல்லா கொடுத்தப்பா நேத்து செந்தி. நடுமண்டைல சுத்தியக் கொண்டு எறக்குனமாதிரி கேட்டுச்சு. அதுல நாலக் குடு.”
இப்படி ஏதாவது ஒரு ரோகம். மாத்திரைகள். மாலை ஆறிலிருந்து அறுபது நிமிடங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஏழு ஏழரைக்கு கொஞ்சம் காத்து வாங்க ஆரம்பிக்கும்.
டெண்டுல்க்கர் ஆட வந்தபொழுது பிறந்தே இருக்காதவர்கள் இப்பொழுது அவருடன் ஒன்றாக விளையாடுவது போலத்தான் அங்கே எங்கள் குழுவும். அந்தக் காலத்து செட் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ளும் சங்கரண்ணே, ஒச்சண்ணே, வேல் அண்ணே என அழைக்கப்படுபவர்கள் அமர்ந்து வளர்த்த ஜமா அது. அதில் நான், ராஜா, பாலா என நுழைய துவங்கிய நாட்களில் கடைக்குள் விடமாட்டார்கள். கடைக்கு வெளியில் இருந்தே பேசிவிட்டுச் சொல்வோம். டீ அவர்களாகச் சொல்லிக் குடித்துக்கொள்வார்கள். கொஞ்சம் விபரீதமான ஜோக் அடித்து அவர்களாகவே சிரித்துக்கொள்வார்கள். ‘ஏ அப்புறம் பேசுவமப்பா பயலுக இருக்காங்க’. ஆனாலும் பாலா சுற்றிச் சுற்றி அவர்களுக்கு ஈடாக அந்த மாதிரி விசயங்களைப் பேசுவான். “ஏன் செந்தியண்னே ஒங் கடைல அந்த மாத்திரை இருக்காம்ல”
டேய் போடா அப்பா சாமி..அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உங்க வீட்லச் சொல்லிக் கல்யாணத்தப் பண்ணச் சொல்லுடா”
புரிகிறதோ இல்லியோ சேர்ந்து சிரிப்பது. , டீ சொல்லவா செந்திண்ணே என ஊடுபாவுவது. யாரும் கடைக்குள் இல்லை என்றாலும் வெளியில் கொறப்பாச்சம் போட்டு நிற்பது என ஒரு வழியாக கடைக்குள் அமரும் பிரமோசன் கிடைத்தது. அதன்பிறகு எப்பொழுது ‘எல்லாம்’ சரிசமமாக பேச ஆரம்பித்தோம் என்பது தெரியவில்லை. செந்தி அண்ணனின் உலகமே அந்த பத்தடிக்கு இருபது கடைதான் என்பதால், நண்பர்களை அப்படி மதிப்பார். வாய்யா தியாகராஜா என அவர் யாரையாவது அழைத்தால், தியாகு என்று அழைக்கப்பட்டவர் மாத்திரை வாங்கிப்போனதும் மொத்தமாக எல்லோரும் செந்தியைச் சூழ்ந்து கொள்வார்கள். என்னா செந்தி சொல்ற, தியாகுவா இவரு, எந்த ஏரியாலப்பா வீடு என நச்சரிப்பார்கள். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. நாட்கள் கழித்து, அவர் தியாகராஜன் என யாரையாவது சொன்னார் எனில், அந்த நபரின் வீட்டைப் பற்றி அப்படி இப்படி என பரோட்டாச் செய்திகளாக இருக்கும்.
அவ்வளவாக எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம். பொழுது போவது என்பதை விட பொழுது போதாது என்பதே சரி. அதிலும் ஊரில் நடக்கும் சமாச்சாரங்களைப் பற்றி அலர் தூற்றல் தூக்கலாகவே இருக்கும். கல்யாணம் ஆன அன்று, முதலிரவுக்கு பயந்து ஓடி ஒளிந்து விட்டு ஒருவாரம் கழித்து திரும்பி வந்திருந்த ராசகோவாலைப் பற்றி அந்த ஒருவாரமும் கடையில், எது அவனைப் பயம் கொள்ளச் செய்தது என்ற கற்பனை காட்சிகள் வயிற்றில் வலியும் கண்களில் நீருமாய் சிரித்துத் சிரித்து பேசப்பட்டன. ராசகோவால் அதன்பிறகு தன் குழந்தைக்கு ஃபேரக்ஸ் வாங்க வந்தால்கூட செந்தி லேசாக ஆரம்பிப்பார் சிரித்துக்கொண்டே, ‘ஏய்யா எதப் பார்த்..ஏய் ஏய் ராசா விடப்பா கோவிக்காத’.
அங்கே எல்லாமே கேலிதான். எனக்குத் தெரிந்து அங்கே எந்தப் பிரச்சனையையும் வெகு சீரியஸாக ஒருநாளும் பேசிக்கொண்டதே கிடையாது. அவரின் வார்த்தைக் கோர்வைகள் அப்படி இருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
‘அதோ வர்றாரு பாருய்யா, அவர்கிட்ட நீ போயி, சார், எனக்கு இந்த பிரச்சனைய முடிச்சுக்கொடுங்க, ரூவா எவ்வளவு வேணாலும் வாங்கிக்கீங்க’ன்னு சொல்லிப்பாரு. உன்னய அதே இடத்துல பளார்னு அறைஞ்சுடுவாரு. லஞ்சம் அப்பிடின்ற வார்த்தைதான் உலகத்துலயே அவருக்குப் பிடிக்காத வார்த்தை’ சிரிக்காமல் வெகு சீரியஸாகச் சொல்லுவார். முதல்முறை செந்திலிடம் இதைக் கேட்பவர்கள் சாட்சாத் மகாத்மாவே நடந்து போகிறார் போல என்று நினைத்துக் கொள்வார்கள். எங்களுக்குத்தான் தெரியும், லஞ்சம் லஞ்சம் என்று அலைபவரைப் பற்றித்தான் செந்தி இப்படி மாற்றிச் சொல்கிறார் என்று.
ஒரு வெய்யில் நேரம். கசகசவென வேர்வை. எதற்கெடுத்தாலும் கோவத்தை வரவழைத்துவிடுகிற கத்திரி வெய்யில். கடையில் நானும் செந்தி அண்ணனும் மட்டும்தான் இருந்தோம்.
‘ஸ்ஸ்ஸ், என்னய்யா இன்னிக்கு இப்பிடி இருக்கு வெய்யி’ என நாளிதழை விசிறியாக வீசிக்கொண்டே சொன்னார். ‘கரெண்ட்ட வேற கட் பண்ணிட்டாய்ங்க’ பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பரபரப்பாக வந்தார் வேலு. எந்தச் செய்தியாக இருந்தாலும் முந்தித்தருவது தந்திக்கு முன்னரே வேலுதான்.
‘ஏ செந்தி, வெவரம் தெரியுமா, நம்ம முருகனோட மாப்ள மருந்தக் குடிச்சுப்புட்டானாம்ய்யா’
நான் பதறிப்போய் என்ன ஏதென்று கேட்டால் ஏதோ லவ் ஃபெயிலியரோ மார்க் குறைச்சலோ சரியாகத் தெரியவில்லை என்றார்.
கேட்டுக்கொண்டிருந்த செந்தி சாவகாசமகாச் சொன்னார். ‘ இப்பிடி மருந்தக் குடிக்கிறவங்க கிட்ட என்ன சொல்லணும் தெரியுமா, அடடா, அர பாட்டில்தான் குடிச்சியாடா, சரி, சரி, பந்தல் எப்பிடிப் போட்டா பிடிக்கும்டா உனக்கு? வாடிப்பட்டி கரகாட்டம் சொல்லணுமா? சாகுறதுக்குள்ள சொல்லுப்பா, ஏற்பாடு பண்ணணுமா இல்லியா’ன்னு கேட்கணும்ய்யா..அதக் கேட்டே சாகணும் அவென் அது என்னா அப்பிடி ஒரு வீம்பு? என்றதும் அவர் சொன்ன காட்சியை நினைத்து என்னை மறந்து சிரித்துவிட்டேன்.
‘சும்மா இரப்பா செந்தி, பாவத்த’- என்று வேலண்ணே சொன்னதும் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அவர் போனதும் நானும் செந்தியும் அவர் சொன்ன ஐடியாவை விஸ்தாரமாகப் பேசி சிரித்துக்கொண்டோம். கண்களை இடுக்கிச் சிரித்துக்கொண்டே செந்தி, ‘என்னா யோசிச்சுப்பாரு எப்பிடி இருக்கும் ம்ம், சாகக் கிடக்குறவனப் பார்த்து, டேலேய் சொல்லுடா போஸ்ட்டர்ல உம்பேர எப்பிடிடாப் போடணும் செத்ததும்..” வாக்கியத்தை முடிக்க முடியாமல் சிரிப்பு மிகும்.
மனதே சரியில்லாத ஒரு நாள் சரி மெடிக்கல்ஸில் அமர்வோம் எனப் போய் அமர்ந்தவுடன் செந்தி கேட்டார். என்னய்யா டல்லா இருக்க, சரி சரி, பெரியசாமி வந்துட்டு இருக்காப்ல. சிரிக்காமக் கேளுய்யா அவர்கிட்ட நான் பேசுறத.” என செந்தி சொல்லும்பொழுதே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
‘வாங்க பெரியசாமி. இப்ப எப்பிடி இருக்கு? “
“அத ஏன் கேட்குற செந்தி’ சொல்லிக்கொண்டே கட்டை விரலை மற்ற விரல்களில் இருந்து விலக்கி ‘ப’ வடிவில் வைத்து லேசாகக் குனிந்து தன் முட்டிக்காலில் பிடித்துக் காட்டியவாரே “வலின்னா வலி, அம்புட்டு வலி, உசுறு போகுதுய்யா, ஒரு இடத்துல இருந்து எந்திரிக்க முடியல, நடக்க முடியல’ ஏன் ஏப்பா சிரிக்கிற?” என சிரித்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து பெரியசாமி கேட்டுக்கொண்டே தன் வலது கால் முட்டியில் மீண்டும் விரல்களை வைத்து, இதுல சுர்ர்ருனு ரத்தம் கட்டின மாதிரியே இருக்கப்பா எப்பவும், எந்திரிச்சு நடக்கவே முடியுறதில்லை, உக்காந்தா உக்காந்த இடம், நின்னா நிண்ட இடம், முடியல”
நான் சிரிப்பை அடக்குவதில் தோற்று, கடைக்குள் சென்று வேறு மாத்திரை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தேன்.
செந்தி, “அப்பிடியா பெரியசாமிண்ணே, இது கிட்டத்தட்ட பத்து வருசமா இருக்கு போலயே.. நானும் ஏதேதோ மருந்து கொடுக்குறேன். சரியாக மாட்டேங்குது.” சிரிக்காமல்.
அவரும் ‘என்னத்தச் சொல்ல? நான் வாங்கி வந்த வரமப்பா. ரெண்டு மாத்திரையக் கொடு’ என வாங்கிக்கொண்டு ‘அம்மம்மா, யப்பப்பா” என காலை மெதுவாக எடுத்து வைத்து தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தார்.
“பாவம்ய்யா, எதுக்குய்யா இப்பிடிச் சிரிக்கிறீங்க” என கேட்டுக்கொண்டே வந்த பழனிச்சாமியைப் பார்த்து செந்தி காரணத்தைச் சொன்னார்.
“பத்து வருசமா இப்பிடித்தான், உட்கார்ந்தா எந்திரிக்கவே முடியாம இருக்காரு பழனி. ஆனா அன்னிக்கு ராஜீவ்காந்தி செத்தக் கலவரத்துல மன்றம்,மந்தைன்னு எரிச்சாய்ங்க பாரு, உக்காந்திருந்த கூட்டத்துல இருந்து மொத ஆளா, சொடக்குப் போடுறதுக்குள்ள சல்லுனு எந்திருச்சு வீட்டுக்கு ஓடி தடதடன்னு மொட்டை மாடிக்குப் போய் அங்க இருந்து வேடிக்க பார்த்த ஆளுய்யா இவரு, அன்னிக்கு மறந்துட்டாரு போல கால்வலிய”. கண்களை இடுக்கிக் கொண்டு செந்தி சொல்லச் சொல்ல பழனியும் சிரிக்கத் துவங்கி இருந்தான்.
அந்த வருடமும் குற்றாலம் செந்தி தலமையில் கிளம்பிவிட்டோம். அந்த முறையும் எவ்வளவு அழைத்தும் பாலா மட்டும் வரமறுத்துவிட்டான். ஏண்டா நம்ம போறப்ப மட்டும் வர்ற, என்றதற்கு லேசாக சிரித்துக்கொண்டே “வேல இருக்குடா போய்ட்டு வாங்க, என்சாய் மாப்ள” என்றவனை பார்த்து “பொல்லாத வேல, போடாப்பா”வென கிளம்பிவிட்டோம்.
வழி நெடுக செந்தி அண்ணனும் பழனியும் ஊர்ப்பேச்சு, ஆட்டம் என ரகளையைப் போட நானும் ஒச்சும் பாட்டுக்கேட்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்தோம். ஆடிக்கொண்டிருந்த பழனி கால் இடறி செந்தியண்ணன் மேல் விழ, சீட்டிற்கு அடியில் இருந்த தகரம் குத்திக் கிழித்துவிட்டது அவரின் கால் ஆடுசதையை. ‘திருமங்கலம்தான வந்திருக்கு, ஒண்ணு பண்ணுங்க, நீங்க போங்க, நான் நாளைக்கு வர்றேன், ரொம்ப ரத்தம் போகுது, வலிக்குது, டேய் பழனி ஆட்றா ஆட்றா” என சிரித்துக்கொண்டே எதிர் வந்த அம்பாசிடரை மடக்கி ஏறிப்போனார். ஏறும்பொழுது “டேய் என் சரக்க தீர்த்துராதீங்கடா, நாளைக்கு மதியம் வந்துடுவேன்”. டீயைக் குடித்துவிட்டு திருமங்கலத்தில் இருந்து கிளம்பும் பொழுது இருட்டத் துவங்கி இருந்தது.
மெயின் ஃபால்ஸில் குளித்துவிட்டு, சுடச்சுட வடையையும் ஆவிபறக்கும் இட்லியையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பழனிச்சாமியின் மொபைல் அடித்தது. ஈரத்தில் நைந்துபோயிருந்த விரல்நுனிகளைக்கொண்டு மொபைலில் ஈரம் பட்டுவிடாதவாறு அழுத்திப் பேசினான்.
“என்ன வேலு சொல்ற? என்னய்யா சொல்ற? எதுக்காம்யா..அய்யோ என்னய்யா இது?”
அதிர்ந்து பார்த்தோம். “செந்தி மருந்துக் கடைல தொங்கிட்டாப்லயாம்ய்யா”.
--
திருமங்கலம்
மதுரம்
மதிய நேரம். சுரீர் வெய்யிலில் லேசான காய்ச்சலோடு அமர்ந்திருந்தது பிடித்திருந்தது. சோகை பிடிச்சிருக்கும் என வீட்டிற்குள் பேசுவது கேட்டது. இந்தக் கோடியில் இருந்து அந்தக் கடைசி வரை தெருவில் யாரும் நடமாடவில்லை. லேசாக சாய்ந்தவாறு சைக்கிளை உருட்டிக்கொண்டே தங்கைய்யா மட்டும் வந்து கொண்டிருந்தான். ‘ன்’ போட்டு எழுதுவதால் தங்கையா வயதை குறைத்து மதிப்பிட வேண்டாம். எப்படியும் 60க்கு மேலே இருக்கும். ஆனால் தெருவில் எல்லோருக்கும் தங்கையா, வா போ, அவன் இவன், ஏகவசனம்தான்.
‘என்ன தங்கைய்யா? எங்க?”
'என்னத்தச் சொல்ல, நம்ம புளியங்க்காவுக்கு இப்பத்தான் சொன்ன பலசரக்க எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். பச்ச மிளகாய மறந்துட்டாளாம். உடனே வேணும்னதும் போய்ட்டு இருக்கேன். திருப்பி வெய்யில்ல போக கஷ்டமா இருந்தா அவரு சைக்கிள வேணா எடுத்துட்டுப் போன்னு சொல்லுச்சு.. அதான்’
’ஓஹோ.. ஆமா ஓட்டிட்டுப் போகவேண்டியது தான?’
‘எனக்கு எந்தக் காலத்துல சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சுச்சு?’ உருட்டிக்கொண்டே தனக்குத் தானே பேசிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.
புளியங்கா என்று சொன்னது ப்ரியங்க்கா என்ற பெயரை. பச்சை மிளகாயை வாங்கிக்கொடுத்துவிட்டு, சைக்கிளை சுவரில் சாய்த்து வைத்து விட்டு வேர்வையைத் தொடைத்தவாறே திண்ணைக்குள் நுழைந்த தங்கைய்யா, ‘வெய்யில்ல உட்காராதடா’ எனத் தலையில் தட்டி, லாவகமாக என்னைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்து போக, நானும் மெதுவாக தொடர்ந்தேன்.
‘இந்தாம்மா, காபித்தூள், சக்கரை எல்லாம் இதுல இருக்கு, லிஸ்ட்டும் என் செலவும் எழுதி இருக்கேன் பாரு’ தூணை ஒட்டித் துண்டை உதறிக்கொண்டே –ஏல்ப்ப்பாண்டி, என ஏதேதோ சொல்லிக்கொண்டே அமர்ந்தான்.
‘என்ன தங்கைய்யா, வெய்யிலா?’- இந்தக் கேள்வியை கேட்டு விட்டு அமர்ந்தால் போதும். நிரல்கள் வந்து விழும்.
‘ஏன் கேட்குற போ. ஆடி வீதிப்பக்கம் பாளம் பாளமாக வெய்யில் சாத்துது. ஸ்ஸ்ஸ் அப்பப்பா, இங்க அவ்ளோ லிஸ்ட்டா, அத முடிச்சிட்டு, கோவாலு வீட்டுக்காரம்மா வாங்கி வரச்சொல்லி ஒரு கடைய சொல்லி இருந்தா, அங்கப் போய்ட்டு, டவுன்ஹால் பக்கம் வந்தாக் கூட்டம்’
எவ்வளவு அடக்கினாலும் சிரிப்பு வந்துவிடும் அந்தக் கேள்வியை கேட்கும் பொழுது. லேசாய் சிரித்துக்கொண்டே ‘டவுன்ஹால் ரோட்டுக்கு ஏன் போன? இப்பிடியே வந்துரலாமே தங்கைய்யா?”
சுரீர் என்று கோவம் வந்துவிடும் தங்கையாவுக்கு. ‘மாடர்ன் ரெஸ்ட்டாரண்ட்’ அங்கதானடா இருக்கு, அங்க காஃபி குடுச்சேன்னா” சொல்லிக்கொண்டே நாக்கை காளி போல நீட்டுவான். “நாக்குலயே இருக்கும்டா கசப்பு’ கை விரல்களைத் தேய்த்துக்கொண்டே, கல்லிப்பால்ல போடுவான் போல அப்பிடித் திக்கா இருக்கும். அதான் ஒரு எட்டு அங்கப் போய்ட்டு வந்துடுவேன். அன்னிக்கு நீ கூட்டிப்போனியே பஸ் ஸ்டாண்டுக்கு பக்கமான்னு, எழவு பூன மூத்தரத்துலப் போட்ட மாதிரி இருந்துச்சு காபி”
சாப்பாட்டு நேரமாக இருந்தால் சாப்பாடு, சாயந்திரம் என்றால் காஃபி. இடைப்பட்ட இந்த மதியம் என்றால் எதையும் எதிர்ப்பார்க்காமல் அவன் வார்த்தைகளில் ‘கொஞ்ச நேரம் கட்டய சாய்ச்சுக்குறேன்’ என சிறு தூக்கம்.
காலை ஆறு ஆறரைக்கெல்லாம் பளீரென விபூதிப் பட்டையோடு தெருவில் இறங்கி, பேப்பர லேட்டாப் போடுறதே வழக்கமாப் போச்சு என பேப்பர் வாங்குபவர்களுக்குப் பதிலாக ஆதங்கப்பட்டு, பேப்பரைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு வீடாகக் கிளம்பிவிடுவான் லிஸ்ட் எடுக்க. யார் வீட்டிற்கு என்ன வேண்டும் என்ற லிஸ்ட்டை அவன் கைப்படவே எழுதிக்கொள்வான். இந்த உலகைப் படைத்ததாகச் சொல்லப்படும் எவர் வந்தாலும் அதைப் படித்துவிட முடியாது. ஒரே நேரத்தில் அம்பது அறுவது கோழிகள் கிண்டிவிட்ட மாதிரியான எழுத்து. ஆனால் ஒரு நாள் கூட எந்த ஒரு சாமானையும் மறந்தது கிடையாது, மாற்றி வேறோர் வீட்டிலும் கொடுத்தது கிடையாது.
லிஸ்ட் சொல்லும்பொழுது அந்த வீட்டுக்கு குழந்தைகள் குறுக்கே கத்தினாலோ, ஓடினாலோ அவ்வளவுதான். ‘கொழந்தயப் பெக்கச்சொன்னா குரங்கப் பெத்து நம்ம உயிர எடுக்குறாங்க என முணக ஆரம்பித்து விடுவான். கொஞ்சம் ஏப்ப சாப்ப வீடாக இருந்தால் குழந்தைக்கு பொடனியில் ஒரு அடி இனாம்.
லிஸ்ட்டில் எழுதியதை வாங்கியவுடன் அதை ஒரு கோடு போட்டு அடித்துவிடுவது வாடிக்கை. இதை அவன் சொன்னால்தால் தெரியும். எழுதியதும், அடித்ததும் ஒரே மாதிரி இருக்கும்.
வாங்கியப் பொருட்களை சரிபார்த்துக் கொடுத்ததும், தொண்டையை லேசாக செருமினான் என்றால் செலவுக்கணக்கு ஆரம்பம் என்று அர்த்தம்.
பஸ் டிக்கெட்
டீ
வடை
பஸ் டிக்கெட்
மிகச்சரியான விலையைப் போட்டு மீச்சத்தைக் கொடுத்துவிடுவான்.
“ஏன் தங்கைய்யா, ஒவ்வொருத்தரு லிஸ்ட்டுக்கும் தனித்தனியா பஸ்ல போவியா”, என்று அவன் சூட்சமம் தெரிந்து கேட்டால், கோவமும் இல்லாமல் சிரிப்பும் இல்லாமல் மய்யமாக முகத்தை வைத்துக்கொண்டு, “ஏதோ சரீரப் ப்ரயாச பண்றேன் விட்றா”
நாலணா எட்டணா ஒரு ரூபாய்த் தொடங்கி, அம்பது நூறு என கமிஷன் காசுகளை கையிலும் வேட்டியிலும் முடிந்து வைத்துக்கொள்வான். எவ்வளவு போராடினாலும் ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது அவனிடம் இருந்து. வாரம் முழுக்க ஒரே வேட்டி, அதே சட்டைதான். அவ்வளவு சீக்கிரம் அழுக்காக்கிவிட மாட்டான். ஆனாலும் மாற்றுவது என்னவோ அடுத்த வாரம்தான்.
டி.வி சத்தம் கேட்டு எழுந்த தங்கைய்யா பக்கத்தில் காஃபி வைக்கப்பட்டது. எனக்கு இன்னும் காய்ச்சல் என்பதால் கொஞ்சமாக கஞ்சியை வைத்துவிட்டுப்போனாள் அக்கா. ‘பேய் இருக்கா இல்லியா’ என சந்திரமுகி ரஜினியிடம் வடிவேலு கேட்டதும் தங்கைய்யா மடக்கி வைத்திருந்த முழங்காலில் கையை வைத்துக் கொண்டு குலுங்கி சிரித்தான்.
‘வடிவேலுன்னு பிடிக்கும்போலயே தங்கய்யா’ கேட்டதை சட்டை செய்யாமல் கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு, “அது ஆச்சுடா ஒரு நாப்பது வருசம், நீங்க எல்லாம் என்ன சேட்ட பண்றீங்க? எங்க அப்பாகூட ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன். கோவம் தீர்ந்த பாடில்ல. என் தலமுடில நாலஞ்ச கட் பண்ணி ஒரு கவர்ல போட்டு அவர் பேருக்கு போஸ்ட் பண்ணி விட்டேன். From ல பில்லி-சூன்யம் டிப்பார்ட்மெண்ட்னு போட்டு அனுப்பினேன். கைல வாங்கி பிரிச்சுப் பார்த்தவரு ஒரு வாரம் படுத்த படுக்கயா ஆகிப்போய்ட்டாரு. ஹும்ம்ம்” சொல்லி, சிரித்துக்கொண்டே காஃபியை ஆத்தத் துவங்கி இருந்தான்.
சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது. அவனோடு சேர்ந்து நானும் சிரித்துக்கொண்டே, ‘அப்ப உன்ன எல்லாரும் டி ஆர் ஆர்னு தான் கூப்புடுவாங்களாமே நெசமா தங்கையா?” என்றதும் நிமிர்ந்தவன் கண்கள் பிரகாசமாய் மின்னியது.
பரவாயில்லையே.. யார் சொன்னது? டி ஆர் ராமச்சந்திரன் மாதிரியே இருப்பேன். அவர மாதிரியே பேசுவேன்ப்பா என திடீரென ’பேசுவேன்ப்பா’வுக்கு அழுத்தம் கொடுத்து பேசினான். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உள்ளே இருந்து சத்தம் வந்தது. ‘ தங்கைய்யா, நல்லா ரெஸ்ட் எடுத்து ரெடியா இரு, அடுத்த வாரம் மதியோட கல்யாணம், ஞாபகம் இருக்கா இல்லியா?”
“மறக்குமா, அதுக்கு வேற நிறைய்ய சாமன் சட்டுன்னு என் உயிர் போகுமே’வில் குதூகலமானான்.
"ஓக்கே டிஆர்ஆர்" என்றதும் "சும்ம்ம்மா இர்டா நீ ஒரு பக்கம்" என சிரிப்போடு தலையில் அடித்துக்கொண்டே வேட்டியை ஒரு உதறு உதறிக் கட்டிக்கொண்டு கிளம்பினான். அடுத்து யார் வீட்டில் அமர்ந்து பேசுகிறானோ அங்கே இரவு உணவு. அப்புறம் தெருவில் அன்றைய மூடுக்கு ஏற்ப யாரிடமாவது பேசுவான். சீக்கிரம் தூங்கிப்போவான். அவ்வளவு அலைச்சல்.
காலம் ஓடியதில் அவன் சொந்தம் சுயம் எதுவும் எவருக்கும் தெரியாமல் இந்தத் தெருவில் ஒருவனாய் ஆகிவிட்டவன். எல்லோரையும் பிடிக்கும். எல்லோரையும் திட்டுவான். தெருமுனையில் இரவு கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, தூக்கம் வரவில்லை என்று வந்து அமர்ந்தால் அன்றைய இரவு கலகலவென்று போகும்.
பெண்கள் குறித்தப் பேச்சு வந்தால் மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவான்.
‘ஏ தங்கய்யா, சும்மாச் சொல்லுயா, பஸ்சுல உராசுறயாமே, குண்டுமணி நேத்து பார்த்துட்டுச் சொன்னான்யா’
‘முட்டாத்தனமாப் பேசாதீகப்பா, ச்சே,” வெடுக்கென்று பதில் வரும்.
யாரு வீட்ல விசேசம்னாலும் வேட்டி வேட்டியா வாங்குறயே தங்கைய்யா, ஒரு நாளாச்சும் பளிச்சுனு கட்டி வந்துருக்கியா, இப்பிடி அழுக்காவே இருக்கியே’வுக்கும் பதிலே வராது.
இதுவரை இல்லாத மழையான மழையோடு விடிந்தது அன்று. தெருவெல்லாம் சாக்கடையை அடித்துக்கொண்டு மழைத்தண்ணீர். பேப்பர் போடும் பையன் பேப்பரைக் கொடுத்துக்கொண்டே, ‘ தங்கைய்யா மண்டையப் போட்டுருச்சுயா. சரசு வீட்டுத் திண்ணைல- விடியக்காலைலதான் பார்த்தாங்களாம்’ சொல்லிவிட்டு சைக்கிளை ஏறிமிதித்துப் போய்விட்டான்.
இருப்பேக் கொள்ளவில்லை. அனிச்சையாக சட்டையை மாட்டிக்கொண்டு சரசு வீட்டுக்குப் போவதற்குள் மழையிலும் தெருக்காரர்களில் சிலர் கூடி இருந்தார்கள். ‘அய்யய்ய, நோ நோ இப்போ யாரும் கிடையாதுங்க, எனக்கு நல்லாத் தெரியும், அதெல்லாம் யாருக்கும் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை’ என ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி, தங்கைய்யாவைத் தூக்கிப் போட்டு எரித்துவிட்டு வந்தோம்.
அவன் முடங்கி இருந்த திண்ணையில் அவனுக்கான ஒரே சொத்து என இருந்த ட்ரங்க் பெட்டி. ஒரு நாளைக்கு எப்படியும் நாற்பது முறையாவது அதைத் திறந்து மூடுவான். உடைத்துப் பார்த்ததில், ரெக்கு மாறாத புதிய வேஷ்டிகள் இருபதுக்கும் மேல் இருந்தன. எடுத்து உதறினால் மடிப்பு எல்லாம் கிழிந்து விடும் போல பழசாக, ஆனால் புதிய வேஷ்டிகள். எழுபதுகளில் தொடங்கி இந்த ஆண்டுவரை டயரிகள். புத்தம் புதிதாக. வேஷ்டிகளுக்கும் டயரிகளுக்கும் நடுவில் பழைய பெரிய நூறுரூபாய் நோட்டில் இருந்து இன்றைய சிகப்பு இரண்டு ரூபாய் நோட்டுகள் வரை பணம் எப்படிப் போனாலும் லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும். குற்றாலத் துண்டு பரப்பி இருந்தது. அதற்கு அடியில், மிக இளமையான தங்கைய்யா புகைப்படம். அதற்கும் அடியில் மிக அழகான ஒரு இளம்பெண் படம். அந்தப் படத்திற்குப் பின்னால் அழகான குண்டு குண்டு எழுத்தில் ’அடுத்த ஜென்மத்தில் இந்தப்பாழாய்ப்போன பணத்தோடு சந்திப்பேன் கண்ணம்மா-இப்படிக்கு உன் தங்கம்’
..
Labels: சிறுகதை